1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை -திருப்பாவை, ஓர் அறிமுகம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Oct 15, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    குறிப்பு : இது இலக்கிய வடிவில் படைக்கப் பெற்ற சமய சார்புடைய கருத்துப் பதிவு என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பதிவை எழுதுவதன் நோக்கம், யாரையும் புண்படுத்துவதல்ல.ஒரு குறிப்பிட்ட சமயத்தினைச் சார்ந்த பக்தி இலக்கியத்தின் தழுவல் முயற்சி மட்டுமே. இதில் யாருக்கேனும் மனம் வருந்தும்படியான செய்திகள் ஏதும் இருந்தால், அவை தெரியாமல் நேர்ந்த பிழைகளே , உள்நோக்கம் உடையவை அன்று. இது எந்தவொரு சமயத்தையும் பரப்புகின்ற உள்நோக்கோடு பதிக்கப் படவில்லை. ஆர்வ மேலீட்டிலான இலக்கிய முயற்சியினைப் பகிர்ந்து கொள்ளும் பதிவே இது.

    இங்கொன்று அங்கொன்று தவிர்த்துப், பெரும்பான்மையும், இவ்விடம் நான் பதியப் போவது, எனது சுய கருத்துக்களோ, விளக்கங்களோ இல்லை. எனது வார்த்தைகளை மட்டுமே .வைணவ இறைநெறியாளர்களும், தமிழறிஞர்களுமான பல பெரியோர் கூறியிருக்கும் விளக்கங்களை , இணையத்தில் படிக்கவும்/கேட்கவும் கிடைக்கும் பதிவுகளின் மூலம் படித்தும்/கேட்டும், ஓர் ஆர்வத்தில் நான் தொடங்கிய முயற்சியே இது. ஆர்வமுள்ள வாசகர்கள், மேலான விளக்கங்களைத் தாமும் முயன்று தேடி, ஊக்கத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.இவற்றையெல்லாம் ஒரு நல்ல ஆசிரியரிடம், குருவிடம் தகுந்த முறையில் உபதேசமாகவே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வாசகர்கள் உணர்ந்தே இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். புரிதலுக்கு நன்றி ! மேலும் ,இப்பதிவைக் குறித்த வாசகர்களின் மேலான கருத்துப் பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.

    அன்புடையீர், வணக்கம் !

    ஸநாதன தர்மமாகிய இந்து மதக் கோட்பாடுகளில், நாராயணனாகிய விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கருதும் நெறிக்கு வைணவம் என்று பெயர். தமிழகத்திலும் இந்நெறியாளர்கள் உண்டு. வைணவ இறைக்கோட்பாட்டில், பரமாத்மாவாகிய இறைவன் மட்டுமே ஆண்மகனென்றும், மற்றுமுள்ள எல்லா ஜீவாத்மாக்களும் அந்தப் பரமாத்மாவையே நாடுகின்ற பெண் பாலர்களென்றே (நாயிகா பாவம்)கொள்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த வைணவ நெறியாளர்களான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் என்றும், பூமி தேவியின் அம்சம் என்றும் கருதப்படும் ஆண்டாள் பெண்ணாகவே பிறந்தபடியால், இந்தக் கோட்பாட்டை, வேறு யாரும் கைக்கொள்ளாத பாவை நோன்பு வழிமுறைகள் மூலம், இறைவனையேக் கணவனாக அடைய விரும்பும் வகையில் எடுத்துச் சொல்லி அவள் சார்ந்த வைணவ நம்பிக்கையை நிறுவுகிறாள். ஆண்டாளின் வரலாறே அதிசயம் தான் ! சூலறியாது வந்துதித்தவள், சென்றத் தடமறியாது அரங்கனுடன் கலந்தவள் ! வாழும் போதும் அந்தக் கண்ணனின் காதலியாகவே வாழ்ந்தவள் ! பரந்துபட்ட மறைஞான விளக்கங்களையெல்லாம் தன் 30 திருப்பாவைப் பாசுரங்களிலும், 143 நாச்சியார் திருமொழிப் பாடல்களிலும் அடக்கித் தந்தவள் ! அவள் தெய்வப்பிறவியாகத் தானே இருக்க வேண்டும் ?

    வைணவ ஆழ்வார்களில் ஒருவரான, திருவில்லிப்புத்தூரில் பெருமாள் கோயில் நந்தவனத் தொண்டில் ஈடுபட்டிருந்த, பெரியாழ்வாரின்(பல்லாண்டு பாடியவர்) வளர்ப்பு மகள் ,ஆண்டாள். துளஸிச் செடியின் அடியில் கிடைத்தப் பெண் குழந்தையைத் தன் குழந்தையாகவே பாவித்து, அன்பும் சோறும் ஊட்டியதோடு, தமிழும், வைணவமும் சொல்லிக் கொடுத்தே வளர்த்தார், பெரியாழ்வார். தந்தையின் மூலம் பெற்ற திருமால் தரிசனம், சிறுபெண்ணாகியக் கோதைக்கு நாளடைவில் கண்ணன் மீதான காதலாகவே மாறிவிட்டது. பூமாலையைக் கட்டிச் சூடிக் கொடுத்ததோடு, இறைவனுக்குத் தமிழில் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்றப் பாமாலைகளும் தொடுத்திருக்கிறாள். தன் மணாளனாய்த் திருவரங்கத்தானைத் தேர்ந்தெடுத்து அவன் திருவடிகளில் அனைவரும் காணுமாறு கலந்து மறைந்தாள்.

    தமிழில் வழங்கும் பக்தி இலக்கியங்களுள், வைணவ நெறியைப் பற்றி எழுதப் பெற்றப் பாடல்கள் 'பாடல்களின் தொகுப்பு'என்ற பொருள்படும் பிரபந்த வகையில் அமைந்துள்ளன. இது ஒரு சிற்றிலக்கிய வடிவாகும். பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள்,நன்கு கட்டப்பட்ட இலக்கிய வடிவம் என்பதாக அமைகிறது (எண்ணிக்கையில் நாலாயிரம் கொண்டதாலும், உயர்வான உட்பொருளுடையதாலும், சிறப்பு சேர்க்கும் அடைமொழியாக 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்று அழைக்கப் படுகின்றன.) மேலும், இவை வடமொழியிலுள்ள வேதத்துக்கு ஒப்பானவை என்று ஏற்றம் தரப்பட்டு உபய வேதாந்தம் என்றும் குறிக்கப்படுகின்றன. இந்த வகையில் வருமாறு ஆண்டாள் இயற்றிய பக்தி இலக்கியமே திருப்பாவை ஆகும். பாவை என்றால் பொம்மை என்று பொருள். (பாவை என்றால் பெண் என்றும் பொருள், நோன்பு என்றும் பொருள்.) ஆற்று மணலில் பிடித்துச் செய்த பொம்மையை கார்த்தியாயினி தேவியாக வரித்து, அவளை வேண்டி, உத்தமனான நாராயணனை அடைய வேண்டும் என்ற நோக்கில் விரதம் இருப்பதை ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'எம் பாவாய்' என்று வருமாறு இயற்றிய 30 பாசுரங்களில் சொல்லியிருக்கிறாள் ஆண்டாள் .

    உயர்ந்த இறையைப் பற்றிய பாடல்கள் என்பதாலும் , பூமி தேவியின் அம்சமாகப் பிறந்த உயர்ந்த பெண்பாலான ஆண்டாள் பாடியது என்பதாலும் , திரு என்று அடைமொழியும் சேர்ந்து இந்நூல் 'திருப்பாவை' என்று வழங்கலாயிற்று. இறைவனையே தன் மணாளனாக அடைய விரும்பி, அதற்காகப் பாவை நோன்பு என்னும் விரதம் மேற்கொள்ளுகின்ற ஆண்டாள், தன்னை ஒரு இடையர்குலப் பெண்ணாகப் பாவித்துக் கொண்டு, , தன்னோடு ஆயர்பாடியிலிருக்கும் மற்றப் பெண்களையும் சேர்த்துக்கொண்டு, சரணாகதமென்னும் பாவை நோன்பின் பெருமையை எடுத்துச் சொல்லி ,அந்நோன்பின் வழிமுறைகள், யார் நோற்கலாம், எதற்காக, யாரை வேண்டி, இந்நோன்பின் பயன் என்ன, அப்பயனைத் தருபவர் யார், என்றெல்லாம் விளக்கி அவர்களையும் அவ்விரதமிருந்து பரமனின் அருளை பெறச் செய்யும் வகையில் திருப்பாவைப் பாசுரங்களை இயற்றியிருக்கிறாள்.அவள் சொன்னவை வேதங்களுக்கே வித்தான உண்மைகள்.


    (பதிவின் தொடர்ச்சியைக் கீழே காணலாம் )
     
    knbg, jskls, ksuji and 4 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    (மேற்பகுதியின் தொடர்ச்சி)

    அழகு தமிழில் திருப்பாவை 30 பாடல்கள் மூலம் மொழித் தொண்டும், இறைத் தொண்டும் இணைந்து செய்த பெண்கவி ஆண்டாள்.மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும், அழகான தமிழில் இனிக்கின்ற இப்பாசுரங்கள் நம் உள்ளம் கவரும். தமிழிலும், வைணவத்திலும் தேர்ந்த பெருமறிஞர்கள் ஓராயிரப்படி தொடங்கி வெவ்வேறு வடிவில் இத்திருப்பாவை பாசுரங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். அவற்றில் பெரியவாச்சான் பிள்ளை அருளிய மூவாயிரப்படி, அழகிய மணவாளர் அருளிய ஆறாயிரப்படி , இவ்விரண்டு விளக்கங்களும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ( 'படி' என்றால் 32 எழுத்துக்கள் கொண்டது. 3000 x 32 = 96000 எழுத்துக்கள் ; 6000 x32=192000 எழுத்துக்கள் ;விளக்கங்களின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையில் வகுக்கப்பெற்றுக் காரணப்பெயர்களாயின) .

    வைணவ இறை நம்பிக்கையாளர்கள் அதன் மேலும் ஒவ்வொரு பாசுரத்தில் உள்ளிடு கருத்தை ஆழமாக விளக்கிக் கூறுகிறார்கள். 'ஸ்வாபதேசம்' என்று அதைச் சொல்கிறார்கள். அவற்றுள் முக்கியமானதாகக் கருதப் படுபவை ' சுத்தஸத்வம் தொட்டாச்சாரியார் மற்றும் வானமாமலை இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் இயற்றியவை . இவை பற்றியெல்லாம் இங்கேக் குறிப்பிடக் காரணம், ஆர்வமுள்ள வாசகர்கள் அந்த மூலங்களை நாடி விரும்பிப் படித்து , மெய்யான விளக்கங்கள் பெற்றுப் பயனுற வேண்டும் என்ற ஆசையே.

    Thiruppavai Meaning by Sri.V.Satakopan என்கின்ற இந்த இணையதள முகவரியில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கும் அருமையான வைணவ இறை நெறி சார்ந்தப் பதிவின் அடிப்படையில் கீழ் காணும் செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்.

    திருப்பாவையின் 30 பாசுரங்களையும் ஆச்சார்யப் பெருமக்கள் ஐயைந்தும் ஐந்தும் (5 * 5 + 5) என்று பகுதிக்கு ஐந்து வீதம் ஆறு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

    முதல் பகுதி( 1-5)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் மூலம் நோன்பு நடத்துவதற்கான வழிமுறைகள் சொல்லப் படுகின்றன.

    இரண்டாம் பகுதி(6-10)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் புதிதாக இறைநெறியில் இணைந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன.

    மூன்றாம் பகுதி (11-15)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள், முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஈடுபட்ட வழி வந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன .

    நான்காம் பகுதி (16-20)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் இறைவன் உறையுமிடம் சென்று அவனைச் சார்ந்தோரையும், அவனையும் எழுப்பும் படி அமைந்துள்ளன,

    ஐந்தாம் பகுதி( 21-25)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் இறை அடியவர் விரும்புவதைக் கேட்கும் நிலைக்குக் கண்ணணைத் தயார் செய்யும் படியாக அமைந்துள்ளன.

    ஆறாம் பகுதி (26-30) - இதில் வரும் ஐந்து பாசுரங்கள் மூலம், இறுதியாகவும் , உறுதியாகவும் , இறை அடியார்கள் நாடி வந்தது என்னவென்று கண்ணனிடம் சொல்லி, நித்ய கைங்கர்யம் என்பதான வீடுபேற்றை அருளும்படி வேண்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.

    பஞ்சகம் என்று குறிப்பிட்டு இன்னும் மேலான ஆறு பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் அறிஞர்கள்/ அடியார்கள்.பஞ்சகம் என்றால் ஐந்து எனப் பொருள். ஒரு பாசுரத்திலேயே பல பஞ்சக அமைப்புகள் வரும். ஒவ்வொரு பாசுரத்திலும் எந்தெந்தப் பஞ்சகங்கள் குறிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற நுணுக்கமான செய்திகளை எனது பதிவில் முற்றும் முழுதாகக் கொண்டு வருவது என்னால் இயலாத செயல். இயன்ற வரை குறிப்பிட முயல்கிறேன்.

    1) லக்ஷ பஞ்சகம்,
    பாவை நோன்பில் ஈடுபட்ட ஆயர்பாடியின் 5 லக்ஷம் கோபிகைகளின் புகழைச் சொல்லும் பாசுரங்கள் .

    2) அவதார பஞ்சகம், ஐந்து வெவ்வேறான நிலைகளில் இருந்து இறைவன் அருள்வதை உரைக்கும் பாசுரங்கள்.
    1) பரம் ------பரமாத்ம நிலை ,

    2) வ்யூஹம்,-----அவரது நான்கு தொழில் நிலைப் பிரிவுகள்- வாசுதேவ- ஞானம் அருளல் , - , ப்ரத்யும்ன- காத்தல், ஸங்கர்ஷண- அழித்தல், அநிருத்த-ஆக்கல்

    3) விபவம் -----,அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட ஒரு உருவம் தாங்கியிறங்கி மண்ணில் வரும் அவதார நிலை

    4) அந்தர்யாமி, --- அனைவரின் இதய கமலத்திலும் உறையும் நிலை

    5) அர்ச்சாவதாரம் ---- உருவச் சிலை நிலை --- ஸ்வயம்புவாகத் தோன்றிய உருவங்கள், தேவர்கள் வடித்த உருவங்கள், முனிவர்கள் வடித்த உருவங்கள், மனிதர்கள் வடித்த உருவங்கள், கல்லில் செதுக்காத, விருப்பத்திற்கேற்ற பொருட்களில் ஆவிர்பவிக்கும் உருவங்கள்

    3) அர்த்த பஞ்சகம்,
    1) சரணாகதி அடைய வேண்டிய பரமாத்மா 2) சரணாகதி அடைய முயலும் ஜீவாத்மா 3) சரணாகத வழிமுறைகள்,(உபாயம்) 4) சரணாகதி செய்வதன் பலன்கள் ,(உபேயம்) 5) சரணாகதி செய்து வீடுபேறு அடைவதில் உண்டாகும் தடைகள் ,(விரோதி) இவை பற்றி விளக்கும் பாசுரங்கள்.

    4) யோக பஞ்சகம்,
    1) கர்மயோகம் 2) ஞான யோகம், 3) பக்தி யோகம் , 4) ஸ்வநிஷ்டை எனும் பிரபத்தி யோகம் , 5) ஆச்சார்ய நிஷ்டை எனும் பிரபத்தி யோகம் ---- இவற்றை விளக்கும் பாசுரங்கள்.

    5) கால பஞ்சகம்,

    வைணவ நெறியில் இருக்கின்ற அடியார்களின் ஒரு நாள் பொழுதிற்கு ஐந்து பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிலும் செய்ய வேண்டிய இறைத் தொண்டுகளும் விரிவாக வகுக்கப்பட்டிருக்கின்றன ! Oppiliappan List Archive: [Oppiliappan] Swamy Desika SahasranAmams : ( Thiruvaheendhrapuram MahA MaNtapa Kaimkaryam in fornt of Lord HayagrIvan's sannidhi): 545-554 / Part VII இந்த இணையதள முகவரியில் உள்ள விளக்கத்தின் அடிப்படையில் இதைப் பதிகிறேன்.

    1) அதிகமணம் (ப்ராதஹ காலம்) - காலை 6 மணி முதல் - 8.24 வரை - செய்ய வேண்டிய இறைத்த தொண்டுகள்- ஜபம், தியானம், அர்ச்சனை

    2) உபாதானம் (சங்கவ காலம்) - காலை 8.25 முதல் 10.48 வரை- செய்ய வேண்டிய இறைத்தொண்டுகள் - பூக்கள், பழங்கள் மற்றும் இறையடியார் உண்ணும் உணவு ஆகியவற்றைச் சேகரித்தல்.

    3) இஜ்யா (மாத்யாந்நிக காலம்) - காலை 10.49 முதல் பிற்பகல் 1.12 வரை- செய்ய வேண்டிய இறைத் தொண்டு 'அதிகமணம் காலத்தைப் போன்றே.

    4)ஸ்வாத்யாயம் (அப்ராஹ்னம்) பிற்பகல் 1.13 க்கு மேல் இரவாகும் வரை -- செய்ய வேண்டிய இறைத்தொண்டுகள்- இறைவனைப் பற்றி எண்ணியபடி, சாஸ்திரங்கள், புராணங்கள், சூக்தங்கள் இவற்றைப் படித்தல்.

    5)யோகம்- இரவுப் பொழுது- செய்ய வேண்டிய இறைத்தொண்டு- இறைவன் திருவடிகளில் மனமொன்றி அர்ப்பணிப்பது.

    6)பாகவத ஸ்வரூப பஞ்சகம்,

    இறைவன் மீது செலுத்தும் பக்தியின் வகையை அடிப்படையாகக் கொண்டு ஐந்து வகையாக இறைவன் அடியவர்களை பிரித்து, ஒவ்வொருவரின் இறைக்கோட்பாட்டைக் கூறுவது
    1)1) ஸத்கார யோக்யப் ப்ரதானர் 2) சல்லாப யோக்யப் ப்ரதானர் 3) ஸஹவாஸ யோக்யப் ப்ரதானர் 4) பீதி யோக்யப் ப்ரதானர் 5) ப்ரீதி யோக்யப் ப்ரதானர்
    எப்படியெல்லாம் சூக்ஷுமமாக மிகப் பெரிய வேதாந்த இரகசியங்களையும், தத்துவங்களையும் தனது முப்பதே பாசுரங்களுக்குள், (அதுவும் , ஒவ்வொன்றும் எட்டே வரிகள் அளவு தாம் !) ஆண்டாள் அடக்கித் தந்திருக்கிறாள் ? கோதை ஆண்டாள் தமிழை மட்டுமல்ல, அந்தப் பரந்தாமனையும் சேர்த்தே ஆண்டாள் ! ஆழமான தத்துவங்களை எளிமையான பாடல்களில் அருளிச் செய்த ஆண்டாளின் கருணையே கருணை !

    (பதிவின் தொடர்ச்சியைக் கீழே காணலாம் )
     
    knbg, jskls, ksuji and 3 others like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    (மேற்பகுதியின் தொடர்ச்சி)

    இவ்விடம் நான் ஒரு முக்கிய தகவலை வாசகர்களோடு அழுத்தமாகப் பதியவும்/பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன். இங்கே நான் இதுவரைப் பதிவிட்டது, இனிமேலும் பதிவிடப் போவது, சமயப்பெரியோர்களும், தமிழ் அறிஞர்களும் தங்கள் பார்வையில் திருப்பாவைக்கு அளித்துள்ள சொற்பொருள் மற்றும் உட்பொருளுக்கான எனது கவிதை வடிவ முயற்சியின் விளைவாக எழுதியவற்றையே. இது போன்று மிகவும் உயர்வான சமயக் கருத்துகளைப் பற்றி எழுதும் போது, மனம் போன போக்கில் விளக்கங்களைச் சொல்வது தவறானது. எனவே வார்த்தைகள், வர்ணனைகள் எனதாக இருப்பினும், அதன் பொருளும் விளக்கமும் பெரியோர்கள் சொல்லியிருப்பதே தவிர என் சொந்தக் கருத்துகளாகா.எந்தவொரு பக்தியிலக்கியத்திற்கும் மேலோட்டமாக ஒரு பொருளும், உட்பொருளாய் பல ஆழமான தத்துவங்களும் விளக்கங்களும் உண்டு. இவற்றையெல்லாம் ஒரு நல்ல ஆசிரியரிடம், குருவிடம் தகுந்த முறையில் உபதேசமாகவே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வாசகர்கள் உணர்ந்தே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    நானும் ஒரு பெண் என்ற முறையில் ஆண்டாளின் தமிழால், காதலால், ஈர்க்கப்பட்டு, இப்பாசுரங்களை முயன்று படித்துள்ளேன். இந்நிலையில், ஏதோவொரு எண்ணம் மனதில் புகுந்து, மேலான இப்பாசுரங்களின் பொருளை எடுத்துக் கொண்டு என் சிற்றறிவிற்குத் தோன்றுகின்ற வகையில் (ஆர்வ மேலீட்டிலான ஒரு முயற்சியாக மட்டுமே), கவிதை வடிவில் ஏதேனும் எழுத வேண்டும் என்ற ஆசை (பேராசை!) எனைத் தூண்டியது. நான் மிகவும் சிறியவள், அறிவும், அனுபவமும் இல்லாதவள். அவ்வறிஞர் பெருமக்கள் அளித்துள்ள மெய்ஞான விளக்கங்கள் பற்றி ஒன்றும் அறியாத பேதையும் ஆவேன்.திருப்பாவையைப் பற்றிப் பேசவும் எனக்குத் தகுதியில்லை என்று வைணவ நெறியின் உயர்ந்த விளக்கான உடையவர் இராமானுசர் தெரிவிக்கிறார் எனில், நாமெல்லாம் என்ன ?

    ஆயினும் என் மனதில் புகுந்த எண்ணத்தின் தூண்டுதலால், இறைக்கருணையை வேண்டி,என்னுடைய இந்த முயற்சியைத் தொடங்கினேன். எனது இந்த முயற்சியில் நிச்சயமாகப் பெருங்குறைகள் இருக்கும் என்று உணர்ந்திருக்கிறேன். பாற்கடலை சிறுபூனை எப்படி முழுதும் குடிக்க முடியாதோ, அப்பேற்பட்ட செயலே இது. ஆயினும், இந்தப் பூனைக்குக் கொஞ்சமேனும் பாலைக் குடிக்க வேண்டும் என்ற ஆசை மிகவும் தீவிரமானபடியால், இணையத்திலும் புத்தகங்களிலும் அனுபவிக்கக் கிடைக்கும் பற்பல அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் திருப்பாவை விளக்கங்கள் கேட்டும், படித்தும் அறிந்து கொண்டவைகளின் அடிப்படையில் முயற்சித்துப் பார்ப்போம் என்று செயலில் இறங்கி விட்டேன். (மிகவும் குறிப்பிடப்படவேண்டிய இணையப் பதிவு இது. Thiruppavai commentry by Sri V.Satakopan Pasuram index , ஒப்பிலியப்பன் கோயில் வரதாச்சாரி சடகோபன் அவர்கள் தொகுத்து அளித்துள்ள வைணவ நெறியாளர்கள், காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்,பெருக்காரணை சக்கரவர்த்தி ஆச்சார்ய ஸ்வாமிகள்,V.N.S இராகவன் போன்றோரின் திருப்பாவை விளக்கங்கள் மற்றும் ஸ்வாபதேஸங்களின் இணையப் பதிவு )


    எனது இந்த முயற்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் விழைகிறேன். தமிழிலும், இறைநெறியிலும் வல்ல அறிஞர் பெருமக்கள், வாசகர்கள், சிறியவளான என் குற்றங்களை மன்னிக்க வேண்டுகிறேன்.
    வாசகர்கள் தாங்களும் இறைநெறி சார்ந்த மேலான விளக்கங்களை எல்லோரும் பயனுறும்படி இவ்விடம் பகிர்ந்து கொண்டும், இப்படைப்பின் மீதான தங்களது கருத்துகளைப் பதிந்தும் ஆதரவளிக்க வேணுமாய்க் கோருகிறேன். விருப்பமுள்ள எவரும் இம்முயற்சியில் ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். தங்களின் நேரத்திற்கும் கவனத்திற்கும் மனமார்ந்த நன்றி !


    பேதைப் பருவத்தேக் கோதைப் படைத்திட்ட
    கீதையதன் பெருமை யாரே உரைப்பார்கள் ? (கோதை-ஆண்டாள், அவள் அருளிய கீதை- திருப்பாவை)
    வேதம் அனைத்திற்கும் வித்தாய் இறைப்
    பாதை வகுத்தளித்த ஆசான் ஆண்டாளின்
    வாதை தீர்க்கின்றப் பாவைப் பாசுரங்கள்
    ஓதியோம்பிடவே ஏது நமக்கு இடர் ?

    (வாதை--நோய் , பிணி; இவ்விடம் குறிப்பது பிறவியென்னும் பிணி)

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    Last edited: Oct 15, 2016
    knbg, jskls, ksuji and 4 others like this.
  4. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு மகள் பவித்ரா @PavithraS ,

    வைணவக் குடும்பத்தின் ஒவொரு பெண் குழந்தையையும் ஆண்டாளாகவே மாற்றும் திறன் பெற்றது திருப்பாவை! ஒரு பெண் குழந்தை அறிவு கூ ர்மையும் ஆன்மீக ஆற்றலும் பெரறும்பொழுது அவள் ஒரு அழ்கிய சமுதாயத்தையே உருவாக்குகிறாள். திருப்பாவையால் சீர் பெற்ற சமுதாயங்களை தமிழகத்தின் குக்கிராம அக்ரஹாரங்களில் கண்டு வியக்குகிறோம்!

    கோதையின் கீதை நல்ல சொல் அழகும் கருத்தாழமும் கொண்ட தலைப்பும் பொருளும். இனிய ஆரம்பம் ! கோதாய், வளர்க உம் பணி !
     
    rai, ksuji, PavithraS and 1 other person like this.
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    மிகக் கடுமையான அதிருப்தி இந்த பதிவின் மீது எனக்கு இருக்கு பவித்ரா.

















    நல்ல பதிவினைத் தர அவ்ளோ பெரிய டிஸ்க்ளெய்மர் தேவையான்னு??? :)

    நம்பிக்கை இல்லை எனினும் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு, ஆனால் இவ்ளோ பெரிய தொடர் பதிவுகளை சத்தியமா படிக்கிற பொறுமை இல்லை என்பதையும் சொல்லிடறேன்.

    தொடர்ந்து பதிவிடுங்கள் படிப்பவர்கள் பலர் இங்குண்டு. வாழ்த்துகள் பவித்ரா.
     
    jskls and PavithraS like this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா வாழ்த்துக்கள் .நல்லதொரு முயற்சி .கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊரில் நானும் மூன்று வருடங்கள் இருந்தேன் .ஆடிப்பூரம் உற்சவம் ,மார்கழி மாத நோன்பு காலம் ஆகியவற்றை நேரில் கண்டு களித்திருக்கிறேன் .தொடரட்டும் உங்கள் பணி .
     
    ksuji and PavithraS like this.
  7. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Dear Pavithra,
    Aandaal and Thiruppaavai will always have a very special place in my life. Your writing shows your indepth knowledge of Her and the Thiruppaavai.
    Thanks a lot for sharing.
    Vaidehi
     
    Last edited: Oct 15, 2016
    ksuji and PavithraS like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @suryakala @rai @periamma @GoogleGlass @vaidehi71 -
    விருப்பம் தெரிவித்தும், பின்னூட்டம் வழங்கியும் ஆதரவளித்தமைக்கு மிக்க நன்றி !
    நிரம்ப ஆர்வத்துடனும், கடின உழைப்புடனும், அவையச்சத்துடனும் தான் இப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன். வாசகர்களின் கருத்துப் பரிமாற்றம் எனக்குத் துணிவும், ஊக்கமும் அளிக்கும் என்று நம்புகிறேன்.

    அம்மையீர்,
    தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஆம் ! ஒரு பெண் அறிவாற்றலோடு இருந்தால், சமுதாயமே பயனுறும் என்பதற்கு ஆண்டாள் சிறந்த உதாரணம் தான்.. வைணவ குடும்பத்திற்கு மட்டும் உரியவளாக ஆண்டாளை நான் எண்ணவில்லை. என் போன்ற பிற நெறிச் சார்ந்தோருக்கும், அவளது தமிழில் ஈர்ப்புண்டு. ஆண்டாளைப் போல காமத்தையும், விரகத்தையும் சற்றும் விரசம் தோன்றாதபடி (நாச்சியார் திருமொழி-அதை விமர்சிப்பவர்களும் உண்டு ), காதல் வெளிப்பாடாகவே இலக்கியத்தில் ஒரு பெண் தயக்கமில்லாமல் துணிச்சலோடு எழுத முடியுமா ? என்னால் இயன்றவரை இந்தப் பதிவைத் தர முயற்சிக்கிறேன். தங்கள் மேலான பங்கெடுப்பை எதிர் நோக்குகிறேன்.

    நண்பரே !
    எனது பதிவு நல்ல பதிவு என்று வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ! உங்களது ரசனையின் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. ஆம் ! இது ஒரு நீண்ட தொடர் பதிவாகத்தான் இருக்கும். ஆயினும் கவிதைப் பதிவு தான். ஆண்டாளின் பாவைப் பாடலுக்கு மேலோட்டமான பொருளையும், உள்ளீடு செய்யப்பட்டுள்ள தத்வார்த்ததையும், எனது வார்த்தைகளில் கவிதை போன்ற வடிவில் வடிக்க முயன்றுள்ளேன். எனது படைப்பு கவிதை நடையாயிருப்பினும், வாசகருக்கு எளிமையாகப் புரிவதற்காக, உரைநடை விளக்கங்களையும் சேர்த்தே பதியவிருக்கிறேன்.உங்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவது என் நோக்கமல்ல. ஒரு செய்தி மட்டுமே !


    அன்புள்ள பெரியம்மா ,
    உங்களது அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நான் இதுவரையில் திருவில்லிப்புத்தூருக்குச் சென்றதில்லை. பால்கோவா சுவைத்திருக்கிறேன் ! ('பாவையையும்' தான் ). என்னால் இயன்றவரையில் செய்திருக்கும் இப்பதிவிற்கு உங்களின் ஆசியையம்/பங்களிப்பையும் எதிர்நோக்குகிறேன்.

    Very glad to know that Thiruppaavai is special for you, Vaidehi ! But I have to disagree with you in mentioning me as someone with indepth knowledge. NO . I am certainly NOT. This is just a result of my ongoing quest and curiosity. Thank you for the welcoming feedback !

    அனைவருக்கும் நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    ksuji and vaidehi71 like this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா பாவை அவள் நாயகனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்க உங்கள் பணி மிக சிறப்பாக அமையும்
     
    PavithraS likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா எங்கள் ஊரில் கண்ணன் சேவை சங்கம் என்ற அமைப்பு உள்ளது .அனைவரும் சின்னம் தரித்து இருக்கிறார்கள் அதாவது சங்கு சக்ர சின்னம் இரு தோள்களிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள் .இல்லங்களுக்கு அவர்களை அழைப்போம் .அவர்கள் வந்து நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடுவார்கள் .பல்வேறு விசேஷங்களுக்கு அந்த அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு பாராயணம் செய்வார்கள் .எங்கள் வீட்டில் மூன்று வருடங்கள் செய்தோம் .இன்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று பஜனை மடத்தில் பாராயணம் செய்வார்கள் .அந்த சேவை செய்யும் பாக்கியம் எங்கள் குடும்பத்துக்கு கிடைத்தது .அதனால் உங்கள் பதிவை நான் மிகுந்த ஆவலோடு எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.நானும் பிற நெறி சார்ந்தவளே
     
    jskls and PavithraS like this.

Share This Page