1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறள் அமுதம்

Discussion in 'Regional Poetry' started by rajiram, Jan 6, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 358

    பிரிவு கொடிது!

    துன்பம் தரும், தம் இனத்தவர் இல்லாத ஊரில் வாழ்வது;
    துன்பம் இன்னும் அதிகம் தரும், இனியவரைப் பிரிவது!

    'இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
    இன்னாது இனியார்ப் பிரிவு', என்பது குறட்பா.

    காமத்தை, தீயோடு ஒப்பிட்டுக் கூறுவது உண்டு; ஆனால்,
    காமம், சுடும் தீயில் இருந்து வேறுபாடு கொண்டுள்ளதே!

    தொட்டால்தான் நெருப்பு சுடும்; ஆனாலும் காதலர் விலகி
    விட்டால் சுடும் நோயைப் போல, தீ விலகினால் சுடுமோ?

    'தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ', என்பது கேள்வி!

    பிரிந்து காதலன் சென்றபின், பிரிவின் துயரையும் தாங்கி,
    பிரிவைப் பொறுத்து வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால்,

    தன்னால் அவ்வாறு இருக்க முடியாது என மறைமுகமாக,
    தன்னிலை விளக்கத்தை அளிக்கின்றாள், அந்தத் தலைவி.

    'அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்', என்பதே குறள்.

    இனியவரைப் பிரிந்து வாழ முடியாது; பிரிந்து சென்றுவிட்ட
    இனியவர் மேலுள்ள காதல் சுடுவதால், வாழ்வது அரிதாகும்!

    :drowning
     
  2. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 359

    மறைக்க முடியவில்லை!

    காதல் வயப்பட்ட தலைவி, தலைவனை எண்ணி உருகி,
    காதலை மறைக்கவும் முடியாது புலம்பி இருக்கின்றாள்!

    இறைக்க இறைக்கப் பெருகிடும் ஊற்று நீரைப் போலவே,
    மறைக்க மறைக்க, காதலும் அதிகமாகிப் போகின்றதாம்!

    'மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
    ஊற்றுநீர் போல மிகும்', என்பது அவளது ஆய்வு ஆகும்!

    காதல் மிகுதியாகி அது தலைவிக்கு நோய் போல ஆகி,
    காதலை மறைக்கக் கடினமாகச் செய்கின்றது. மேலும்,

    அந் நோய் தந்தவனிடமே காதலைக் கூறலாம் என்றால்,
    தன் நாணம் அதிகமாகித் தடுப்பதாகவும் நினைக்கிறாள்!

    'கரத்தலும் ஆற்றேன் இந்நோய்நோய் செய்தார்க்கு
    உரைத்தலும் நாணம் தரும்', என்று கூறுகின்றாள்.

    மெல்ல முடியாது, விழுங்க முடியாது இருப்பது போலவே,
    சொல்ல முடியாது, மறைக்க முடியாது அவள் தவிக்கிறாள்.
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 360

    கடல்போலக் காதல்...

    மனித வாழ்க்கையைக் கடலாகப் பலரும் சொல்லுவர்;
    இனிய காதலையே கடலாகச் சொல்லுகிறாள் தலைவி.

    கடலைப் போலக் காதல் சூழ்ந்து உள்ளது; ஆனால், இக்
    கடலைத் தாண்டும் தோணிதான் கிடைப்பதே இல்லை!

    'காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்', என்பது குறள்.

    நட்புடன் பழகும் நிலையிலேயே, தன் காதலன், தன்னை
    விட்டுப் பிரிந்து சென்று துயரம் தருகின்றானாம். அவன்

    பகைவனாக இருந்துவிட்டால், இன்னும் எத்தனை வகை
    வகையாகத் துன்பங்கள் தருவானோ, எனக் கேட்கிறாள்.

    'துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்', என்பதே கேள்வி!

    காதல் தரும் இன்பம் கடல் போலப் பெரிதாகும்; ஆனால்,
    காதலர் பிரிவு தரும் துன்பம், அதை விடவே பெரிதாகும்!

    'இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது', என்பது குறட்பா.

    உடன் இருந்து, இனிய தோழமை தந்தவன் விலகிப் போக,
    உடல் வருந்தி, காதல் நோயால் துன்புறுகின்றாள் தலைவி!


    :spin
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 361

    பிரிவின் கொடுமை...

    தலைவனைப் பிரிந்த தலைவி, நித்திரையே இன்றி,
    அலைபாயும் மனத்துடன், இரவுகளில் தவிக்கிறாள்.

    உலக மக்கள் அனைவரையும் நிம்மதியாகப் படுத்து
    உறங்க வைக்கும் இரவு நேரத்திற்கு, தான் ஒருத்தி

    துணையாக விழித்து இருப்பதாகவும், மற்ற யாரும்
    துணையாக இருக்கவில்லை என்றும் கூறுகிறாள்.

    'மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்லது இல்லை துணை', என்கிறாள்.

    தன் தலைவன் பிரிந்த கொடுமையைவிட அதிகமாக,
    நீண்ட நெடும் இரவு கொடுமை தருகிறது, என்கிறாள்.

    'கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா', என்பது அவளின் கலக்கம்.

    அவள் நெஞ்சம் தலைவனிடத்திலேயே இருக்கிறது;
    அவளும் அதேபோல அவனிடம் இருக்க முடிந்தால்,

    கருமையான அவளின் கண்கள், அவனைக் காண
    கண்ணீர் வெள்ளத்திலே நீந்த வேண்டி இருக்காது!

    'உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோஎன் கண்', என்று அவள் கூறுகிறாள்.

    கொடிய நெஞ்சம் கொண்டு, தன் தலைவன் பிரிய,
    நெடிய இரவுகளில் தவிக்கிறாள் அந்தத் தலைவி.
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    திரையிசைப் பாடல்கள்...

    தலைவியின் நினைவுகள் தலைவனிடமே செல்லும் என்று கூற,

    பல திரையிசைப் பாடல்கள் உண்டு. இதோ ஒன்று:

    'நீ எங்கே என் நினைவுகள் அங்கே;
    நீ ஒருநாள் வரும் வரையில்
    நான் இருப்பேன் நதிக்கரையில்'.
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கண்களே, கண்களே!

    தன் காதல் நோய்க்கு, தன் கண்களே காரணம் என்று

    தன் கண்களைக் கடிந்துகொள்ளுகின்றாள் தலைவி!
     
  7. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 362

    கண்களே காரணம்!

    தன் துயருக்குக் காரணம் தன் கண்களே என்பதாகத்
    தன் கண்களிடம் கோபம் கொள்ளுகிறாள் தலைவி.

    தலைவனைக் கண்டு, காதல் கொள்ளச் செய்ததால்,
    தலைவனைப் பிரிந்த நேரம், நோயாகித் தாக்குகிறது!

    தானே குற்றம் செய்துவிட்டு, அவன் பிரிந்து போனதும்,
    தானே அழுவது ஏன் எனக் கண்களைக் கேட்கின்றாள்.

    'கண்டாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
    தாம்காட்ட யாம்கண் டது'. இது அவளது கேள்வி.

    காதல் கொண்டால் வரும் விளைவுகளை அறியாமல்,
    காதல் கொள்ள வைத்த, மை உண்ட தனது விழிகளே,

    பிரிந்து தன் காதலன் சென்றபின், அவனைக் காணாது,
    வருந்துவது ஏனெனத் தன் சந்தேகத்தைக் கேட்கிறாள்!

    'தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்பது எவன்', என்பது அந்தக் கேள்வி.

    கண்களால் கண்டு, காதல் வயப்பட்டு, பிரிவால் வருந்தி,
    கண்களைக் கேட்கின்றாள் வித விதமான வினாக்கள்!
     
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 363

    கண்களின் துயரம்!

    தான் காதலிக்கக் காரணமான தன்னுடைய இரு கண்கள்,
    தாமே அழுவதைக் கண்டு, வியப்படைகின்றாள் தலைவி.

    தாமே பாய்ந்து சென்று, தலைவனைக் கண்டு, காதலித்து,
    தாமே இப்போது அழுவது, நகைக்கத் தக்கதே என்கிறாள்!

    'கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து'. இது குறட்பா.

    தப்பிப் பிழைக்க முடியாத காதல் நோயைத் தந்த, மையுண்ட
    தன் கண்கள், அழ முடியாமல் வற்றிப் போயின, என்கிறாள்.

    'பெயலாற்றா நீருலர்ந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து', என்பது குறள்.

    தலைவன் பிரிவால் தலைவி மனம் வருந்தி, அவள் மனம்
    நிலை கொள்ளாமல் தவிக்கிறது; உறக்கமும் போகின்றது.

    கடல் போலக் காதலைத் தரக் காரணமான தனது கண்கள்,
    கடும் துன்பம் அடைகின்றன உறக்கம் இல்லாது, என்கிறாள்.

    'படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
    காமநோய் செய்தவென் கண்'. இது குறள்.

    கண்களால் பார்த்து, காதல் வயப்பட்டு, தலைவன் பிரிந்ததும்
    கண்களே வற்றும் அளவு அழுது துயரப் படுகிறாள் தலைவி!

    :roll:
     
  9. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 364

    கண்களே துன்பம் அடையுங்கள்!

    தலைவனைப் பிரிந்து துயரம் வந்ததால், கண்களில்
    தலைவிக்குக் கண்ணீர் பெருகி வந்து வருத்துகிறது!

    தான் காதல் வயப்படக் கண்களே காரணம் ஆனதால்,
    தன் கண்களின் துன்பத்தால் மகிழ்வு அடைகின்றாள்!

    தான் பெற்ற துன்பம் போலக் கண்களும் பெறுவதால்,
    தான் மகிழ்வதாகத் தலைவி கண்களிடம் கூறுகிறாள்.

    'ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது', என அவள் குரல்!

    'விரும்பி இழைந்து அவரைப் பார்த்த கண்களே! நீவீர்
    வருந்தி, அவரை நினைத்து, உறங்காது, ஒரு துளியும்

    கண்ணீரே இல்லாது வற்றித் துன்பப்படுங்கள்!' என்று
    கண்களிடம் தலைவி கூறுவதாக அடுத்த ஒரு குறட்பா.

    'உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்', என்பதே அது!

    கண்களே தனக்குக் காதல் நோய் தந்ததாக எண்ணி,
    கண்களிடம் தன் கோபத்தைக் காட்டுகிறாள் தலைவி!

    :rant
     
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    வள்ளுவரைப் போற்றுவோம் ..... 365

    கண்களின் தன்மை.

    அன்பு மனத்தால் காட்டாது, சொல்லினால் மட்டுமே
    அன்பு காட்டியவனைக் காணாத தனது கண்களுக்கு,

    அமைதியே இல்லாமல் போனதாகக் கருதுகின்றாள்;
    அமைதியான உறக்கமே இன்றித் துயரப்படுகின்றாள்.

    'பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
    காணாது அமைவில கண்', என்பது குறட்பா.

    அவன் வராவிட்டால் உறங்காது, வந்தால் உறங்காது
    இவற்றினிடையே துன்பப்படுகின்றன அவள் கண்கள்!

    'வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்', என்று வருந்துகிறாள்.

    பறை சாற்றி, காதலைக் கண்கள் அறிவித்தால், அவள்
    மறைப்பதை ஊரார் அறிவதும், அரிய செயல் இல்லை!

    'மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து', எனத் தீர்மானம்!

    தலைவன் பிரிந்து சென்றதால், கண்களுக்குத் துன்பம்;
    தலைவியின் பேசும் விழிகளால், ஊரார் அதை அறிவர்.

    :hide:
     

Share This Page