1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குரு சிஷ்யன் உறவு( மகாபாரதத்தில் தெரியாத செய்தி)...

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Sep 5, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    குரு சிஷ்யன் உறவு( மகாபாரதத்தில் தெரியாத செய்தி)


    அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன்
    தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

    ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’
    என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்.

    ‘‘கேளுங்கள் மன்னா!’’

    ‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல்,
    வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின்
    இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார்.

    ‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர்.

    ‘‘தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும்
    என்பதே எனது விருப்பம்!’’

    ‘‘மன்னா… என்ன கூறுகிறீர்கள்?’’ _ திடுக்கிட்டார்
    துரோணர்.

    ‘‘துரோணரே… பாண்டவர்களையும் எனதருமைப்
    பிள்ளைகளையும் சரிசமமாக
    பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்!’’

    ‘பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட
    துரியோதனாதிகள், தன்னைப் பற்றி கோள்
    சொல்லி இருப்பார்கள்’
    என்று உணர்ந்து கொண்டார் துரோணர்.

    பிறகு அவர்,
    ‘‘மன்னிக்க வேண்டும் மன்னா!
    நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை.

    ஆர்வம், முயற்சி, உத்வேகம், தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும்
    ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர வேண்டும்’’ என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார்.

    அதோடு ‘கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட
    வேண்டும்!’ என்று துரோணருக்குத்
    தோன்றியது.

    மறு நாள்.
    காலை நேரத்தில் பாண்டவர்களும்
    கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக
    வந்து சேர்ந்தனர்.
    துரோணரை வணங்கினர்.

    அவர்களிடம் துரோணர்,

    ‘‘சீடர்களே…
    இன்று நான்ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப்போகிறேன்.
    அதற்காக நாம் காட்டுக்குச்செல்லலாம்’’ என்றார்.
    உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.

    ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர்.
    சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர்,

    ஆற்று மணலில் தன் விரலால்
    ஒரு ஸ்லோகத்தை எழுதினார்.

    ‘‘சீடர்களே…
    இன்று உங்களுக்குக் கற்பிக்கப்
    போகும் வித்தை மூலம்
    ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம்.

    நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன்
    என்று கூர்ந்து கவனியுங்கள்!’’ என்றவர்
    அர்ஜுனனிடம்,

    ‘‘அர்ஜுனா…
    கமண்டலத்தை எடுத்து வர மறந்து விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில்
    இருந்து அதை எடுத்து வா!’’ என்றார்.

    ‘குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ?’ என்ற
    கவலையுடன் குருநாதரின்
    குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன்.

    கமண்டலத்துடன் திரும்பியவன்,
    அவர்கள்ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப்பார்த்தான்.

    உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம்
    சென்றான்.
    கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான்.

    ‘‘குருவே! என்னை மன்னியுங்கள்.
    சற்றுத் தாமதமாகி விட்டது!” என்றான்
    அர்ஜுனன்.

    அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக்
    கொண்ட துரோணர்,

    மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார்:

    ‘‘நல்லது சீடர்களே… இன்று கற்பித்த வித்தையில்
    எவருக்காவது சந்தேகம் இருந்தால், என்னிடம்
    கேளுங்கள்!’’

    ......
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ‘‘குருவே… நான் வருவதற்குள் பாடம்
    முடிந்துவிட்டதா?’’ என்று ஏமாற்றமாகக்
    கேட்டான் அர்ஜுனன்.

    ‘‘ஆம்!’’ என்று அவனுக்கு பதிலளித்த துரோணர்

    மற்றவர்களை நோக்கி,
    ‘‘சரி… ஒவ்வொருவராக
    வந்து ஸ்லோகம் சொல்லி,
    அம்பைப்பிரயோகித்து அந்தக் காட்டுப்
    பகுதியை எரியுங்கள், பார்க்கலாம்’’ என்றார்.

    கௌரவர்கள் நூறு பேர், பாண்டவர்கள் நால்வர்
    (அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக
    வந்து ஸ்லோகத்தை உச்சரித்து, அஸ்திரம்
    பிரயோகித்தனர். ஆனால், பலன் இல்லை!

    ‘‘என் உழைப்பு மொத்தமும் வீண்!’’
    என்று கோபத்தில் கத்தினார் துரோணர்.

    ‘‘குருவே… தாங்கள் ஆணையிட்டால், அந்தக்
    காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன்!’’
    என்று அர்ஜுனன் முன்வந்தான்.

    உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும்
    கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. ‘‘சரிதான்…
    பாடம் நடத்தும்போது இவன் ஆளே இல்லை.
    பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும்
    செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டப்
    போகிறானாம். நல்ல வேடிக்கை!’’
    என்று இகழ்ந்தனர்.

    ‘‘வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப்
    போகிறான்!’’ என்றான் கௌரவர்களில் ஒருவன்.

    துரோணர், அர்ஜுனனிடம் ‘‘எங்கே, எரித்துக்
    காட்டு. பார்க்கலாம்!’’ என்றார்.
    வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன்,
    கண்களை மூடி,
    ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப்
    பிரயோகித்தான்.
    உடனே காடு ‘திகுதிகு’வென
    தீப்பிடித்து எரிந்தது! கௌரவர்கள் உட்பட
    அனைவருக்கும் பிரமிப்பு.

    ‘‘அர்ஜுனா… மந்திர உபதேசம் செய்யும்போது நீ
    இங்கு இல்லை. பிறகு எப்படி உன்னால் இதைச்
    சாதிக்க முடிந்தது?’’ என்று துரோணர் கேட்டார்.

    ‘‘குருவே… கமண்டலத்துடன்
    ஆற்றங்கரைக்கு வந்தபோது, அங்கு நீங்கள்
    மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன்.
    படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன்.

    அவ்வளவுதான்.’’

    துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
    ‘‘ஒரு சீடனிடம் ஆர்வம் இருந்தால், குருவின்
    போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம்
    என்பதற்கு அர்ஜுனனே சாட்சி!’’ என்ற துரோணர் பொருட்செறிவுடன் கௌரவர்களைப் பார்த்தார்.

    அதன் வீரியத்தைத் தாங்க முடியாமல் வெட்கித் தலைகுனிந்தனர் கௌரவர்கள்!!!

    இந்தக் கதையை நேற்று கோவிலில் பெரியவர் சொன்னார்.
    புதிதாக இருந்தது எனக்கு.
    பல பேருக்கு தெரிந்திருக்கலாம்.

    இருந்தாலும் குரு சீடன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லாமல் சொல்லி புரிய வைத்திருக்கிறார்.
     

Share This Page