1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கர்ணன் என் காதலன் : 38

Discussion in 'Stories in Regional Languages' started by veni_mohan75, Mar 10, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கர்ணன் என் காதலன் : 38

    பகுதி முப்பத்தி எட்டு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி:



    கர்ணன் யுத்த களத்தில் காலனைப் போலே போர் புரிந்தான். பாண்டவர்களின் சேனையில் பெரும் அழிவுக்கு காரணமாய் இருந்தான். எனவே, அவனை எதிர்க்க, பாண்டவர் தரப்பில் இருந்து, திஷ்டத்துய்மன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள், பீமன் மற்றும் சிகண்டி என அனைவரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர்

    அவர்களில் முதலாய் கர்ணனை நோக்கி வந்த பீமனின் வில்லை கர்ணனின் மகன் சுசேனன் முறிக்க, விரைந்து வேறு வில்லை எடுத்த பீமன், பத்து அம்புகளால் சுசேனனின் கதையை முடித்தான். கர்ணன் மீதும் அம்பு மழை பொழிந்தான். கர்ணனின் இன்னொரு மகனான பானுசேனனையும், கூரிய கத்தி போன்ற அம்பினால் கொன்றான். தன் மக்கள் இருவரையும் தன் கண் முன்னே கொன்ற பீமனின் மீது கர்ணன் கடும் கோபம் கொண்டான். தொடர்ந்த பீமன், கர்ணனுக்கு துணையாய் வந்த சேனையை அழிக்கத் தொடங்கினான்.

    பீமன் கடுமையாய் தாக்கப்பட்டான் கர்ணனால். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. கர்ணன் பீமனால் தாக்குண்டு மயங்கி தேரில் விழுந்தான். அன்றைக்கு பீமன், போர்க்களத்தில் யமனைப் போலக் காட்சி தந்தான்.

    சல்லியன், கர்ணனை போர்க்களத்தில் இருந்து வெளியேற்றிச் சென்றான்.

    களம், பீமனின் கைக்குள் வந்தது. எங்கு நோக்கினும், ரத்த வெள்ளம். அன்று அவன் சபதமான துச்சாதணனை கொல்வேன் என்ற சபதம் நிறைவேறியது.

    துச்சாதணனின் ரத்தம் பருகிய பீமன், காணவே பயங்கரமாய், இருந்தானாம். ஒரு பக்கம் அவனுக்கு பயந்த சேனைகள் ஓட, ஒரு பக்கம் அவன் கொன்று குவித்த சடலங்கள் இருக்க, அவன் செல்லும் வழியெல்லாம், புயலுக்குள் சிக்கிய பூவனமாய் சின்னாபின்னமாகின.

    ஓரளவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கர்ணன் விரைந்து வந்தான் களத்துக்கு. வெற்றியின் மதர்ப்பில் இருந்தான் பீமன். தோல்வியின் தாக்கத்தில் இருந்தவன் கர்ணன். வீறு கொண்ட வேங்கையாய் கர்ணன் பாய, செருக்கு கொண்ட சிறுத்தையாய் பீமன் இருக்க, விரைவில் பீமன் களைத்துப் போனான்.

    ஆயுதங்கள், ரதம் என தன் உடமைகள் அனைத்தையும் இழந்து, அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்ல, அவனைத் தொடர்ந்த கர்ணன், யாராலும் வெல்ல இயலாதவன் எனும் செருக்கு இருப்பின், வெற்றி உனக்கு நிரந்தரம் அல்ல எனக் கூறினான்.

    இதன் இடையே, தருமர், கர்ணனிடம் தன் தோல்வியை எண்ணி எண்ணி உள்ளத்தில் மறுகிக் கொண்டு இருந்தார். அவரது தோல்வியை கேள்வியுற்ற அர்ஜுனனும், கிருஷ்ணரும் அவரைக் காண பாசறைக்கு செல்ல, தருமாரோ, கர்ணன் வீழ்ந்தானா??? என வினவுகிறார்.

    இல்லை. கர்ணனை நான் இன்னும் களத்தில் சந்திக்கவே இல்லை. தங்கள் நிலையை அறியவேண்டி இங்கு வந்தேன் எனக் கூறினான் அர்ஜுனன்.

    அதிலே அதிருப்தியுற்ற தருமர், கோபத்துடன் அர்ஜுனனை சாடுகிறார். உன் போன்ற கோழைக்கு காண்டீபம் எதற்கு?? இதோ நிற்கிறாரே ஆபத்பாந்தவன், அவரிடம் கொடுத்துவிடு. அவர் போரில் கர்ணனை வெல்வார் என்கிறார்.

    அர்ஜுனனும் கோபம் கொண்டு, தருமரை தகாத வார்த்தைகள் சொல்கிறான். இத்துணைக்கும் முழு முதல் காரணம் நீர்தான். உம்மால்தான் இந்த நிலை வந்தது. சூதாட ஒத்துக் கொண்டதும் நீங்கள். ஆடி தோற்றதும் நீங்கள்.

    என்னை காண்டீபத்தைக் கைவிடச் சொல்பவன் எவனாயினும் அவனை கொல்வதாய் நான் ரகசிய பிரதிக்ஞ்னை செய்துள்ளேன். இப்போதே உன் கதையை முடிப்பேன் என அர்ஜுனன் கூவுகிறான்.

    இதை கண்ணுற்ற கண்ணன், இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார்.

    தான் செய்த தவறுக்கு தருமர் வருந்த, அர்ஜுனனோ, தான் இதுவரை எதிர்த்தும் பேசாத தருமரை, தன் மனம் போனபடி பேசி அவரை உள்ளத்தால் இறந்து போகச் செய்கிறான் கண்ணனின் ஆலோசனையின் பேரில்.

    பின்னர், கர்ணனின் உயிரை எடுத்துவிட்டுதான் இனி மறுவேலை என, களம் புகுந்தான் அர்ஜுனன்.

    அங்கே சென்று பீமனுக்கு தன் அண்ணனின் நிலையை அறிவித்து, கர்ணனை நாடிச் சென்றான்.


    கர்ணனின் தீரம் :


    அங்கே கர்ணனோ ஒரு திறம் வாய்ந்த அதிரதனாய் கண் கூசும்படி ஜொலித்துக் கொண்டு இருந்தான்.

    ஒருவர் பின் ஒருவராக தன்னை எதிர்க்க வந்த பாண்டவ அதிரதர்களை கொன்று குவித்துக் கொண்டு இருந்தான். செல்லும் வழியெல்லாம் தன் முத்திரையைப் பதித்தான். ஆயிரக் கணக்கான வீரர்கள் இருந்த இடம் தெரியாது போயினர்.

    பாண்டவப் படையினர் கர்ணனின் தீரம் எனும் கடலுக்கும் மூழ்கிக் கொண்டு இருந்தனர். அவர்களைக் காக்கும் படகாய் அர்ஜுனன் அங்கே வந்து சேர்ந்தான்.

    இதன் இடையே, துச்சாதணனை பீமன் கொன்ற முறைக்காக, கர்ணனின் சகோதரன் சித்ரசேனன் பீமனை கடிந்து பேசிக் கொண்டு இருக்க, யுத்தமான்யு சித்திரசேனனுக்கு போரிட சவால் விடுத்து, போரிலே அவன் தலையைக் கொய்து கொன்றான்.

    தன் கண் முன்னே உயிரிழந்த இருவரின் இறப்பிலும், துக்கமும், ஆவேசமும் கொண்ட கர்ணனை நோக்கித்தான் அர்ஜுனன் வந்து கொண்டு இருந்தான்.

    சல்லியன், கர்ணனிடம், கர்ணா, இதோ அர்ஜுனனின் ரதம் உன்னை நோக்கி வருகிறது.

    உன் பலமனைத்தும் ஒருங்கிணைத்து, தயாராய் இரு. போர்க்களத்தின், உன் பக்கத்து வெற்றி உன் தோள்களில் மட்டும் உள்ளது இப்போது. துணிந்து நில் என சொல்லிக் கொண்டு இருந்தார்.

    இது இவ்வாறு இருக்க, துச்சாதனன் மற்றும் சித்திரசேனனின் மறைவில் கோபம் கொண்ட கர்ணனின் மகன், வ்ரிஷசேணன், நகுலனை நோக்கி அம்பென விரைந்தான். யாராலும் அவனைத் தடுக்க இயலவில்லை. (கர்ணனின் மகன் அல்லவா???)

    சுற்றி இருந்தவர் அனைவரையும் தோற்கடித்து, நகுலனை அடைந்து நகுலின் ரதக் குதிரைகளை எல்லாம் கொன்றான். நகுலன், வேறொரு ரதத்தில் ஏறிக் கொள்ள, அதையும் உடைத்தான். கோபம் கொண்ட நகுலன், தன் வாளையும், கேடயத்தையும், எடுத்துக் கொண்டு கீழே குதித்தான். அவனோடு சரிக்குச் சரியாய் போரிட்டான் இளையவன்.

    நகுலன் சோர்ந்து போகும் நேரம், கண்ணன், நகுலின் நிலையை அர்ஜுனனுக்கு கூறினான்.

    உடனே அங்கே விரைந்தான் அர்ஜுனன். அர்ஜுனனைக் கண்டதும், நகுலன் அவனிடம், தயவு செய்து இவன் கதையை முடித்து விடு எனக் கூறி பீமனின் ரதத்தில் ஏறிக் கொண்டான்.

    விரைந்த அவனைத் தொடர்ந்த வ்ரிஷசேணனை பின்னிருந்து அம்பெய்து கொன்றான் அர்ஜுனன்.

    தன் மகன் பிரமாதமாய் சண்டை போடுகிறான் எனக் கேள்வியுற்ற கர்ணன் அதைக் காண ஆவலாய் வந்தான். அவன் கண் முன்னே அர்ஜுனன், வ்ரிஷசேணனை தலையைக் கொய்து கொன்றான்.

    இதுதான் முறையா?? நீயெல்லாம் ஒரு ஷத்ரியனா?? இதுதானா உன் யுத்த லட்சணம்??? என கர்ணன் வினவுகிறான்.

    தனி ஒருவனாய் சிக்கிக் கொண்ட என் மகனது வில்லை பின்னிருந்த அறுத்த வீரன் பேசும் மொழிகளா இவை என அர்ஜுனனும் திரும்ப வினவுகிறான்.

    துரோணரின் செயலை பின்தொடர்ந்து தான் செய்த செயலுக்கு வெட்கினான் கர்ணன்.

    மகனின் மரணமும், அது தந்த ரணமுமாய் அர்ஜுனனை போருக்கு அழைத்தான் கர்ணன்.

    அப்போது கண்ணன் :

    தெளிந்து நில் அர்ஜுனா, துணிந்து நில். மாவீரன் கர்ணன் உன்னை நோக்கி வருகிறான். அவனது வில்லின் ஒலி போர்க்களம் எங்கும் ஒலிக்கிறது கேள். அவனது அம்புகளுக்கு முன்னர் உன் ஒருவனால் மட்டுமே நிற்க இயலும்.

    சிவபெருமானின் அன்பும், ஆசிகளும் உன்னுடன் இருக்க வெற்றி உனக்கே இருக்கட்டும் என, தைரியமும், ஆசிகளும் கூறினார்.

    அர்ஜுனன் : மூவுலகுக்கும் கடவுளான நீங்க என்னுடனே இருக்கையில் வெற்றி எனக்கு நிச்சயம் தான். கர்ணனைக் கொல்லாது நான் யுத்த களத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. ரதத்தை கர்ணனின் இடம் நோக்கி செலுத்துங்கள்

    ஒன்று நான் இருக்க வேண்டும், இல்லையெனில் கர்ணன் இருக்க வேண்டும். இருவரில் ஒருவர்தான் தான் இந்தப் போரின் முடிவில்.

    ஆனால், இருப்பவர், இல்லாதவர் இருவரின் புகழும் இந்த பூவுலகம் இருக்கும் வரை இறவாது இருக்கும்.

    கண்ணன் : உண்மைதான் அர்ஜுனா...

    (அங்கே கர்ணனின் நிலையோ... சொல்லி அடங்காத சோகத்திலும் அது தந்த வேகத்திலும் இருந்தது..)

    ரத்தச் சிவப்பில் இருந்தன விழிகள் தன் மகனை நினைத்து.

    பேரிகைகள் முழங்க, கோஷங்கள் எழும்ப, சங்குகள் முழங்க, இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நிலையைக் காண, தாங்கள் போட்டுக் கொண்டிருந்த சண்டைகளைக் கூட விட்டு விட்டு வந்தனர்.

    சொர்க்கத்தில் கூட (சொர்க்கம் இருக்கான்னு கேக்காதீங்க பா. கதை சொன்னா சரின்னு கேட்டுக்கணும்) அனைத்து தேவர்களும், அசுரர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், ராட்ஷசர்களும், நாகர்களும், அப்சரஸ்களும், வித்யாதரர்களும் குவிந்து இருந்தனர்.

    புகழ் பெற்ற இரு வீரர்களும் தன் திறனை முழு வீச்சில் வெளிப்படுத்தப் போகும் வித்தைகளைக் காண விழி இமைக்காது காத்திருந்தனர்.

    சூரியனோ, தன் மகனுக்கு ஆசி கூறுவது போலே பிரகாசமான தன் கதிர்களை ஒளிர்த்துக் கொண்டு இருந்தான். இந்திரனும், தன் மகனின் வெற்றிக்காய் ப்ராத்தித்துக் கொண்டு ஆசிகளை வழங்கினான்.

    மூவுலகத்தின் கடவுள், அர்ஜுனனின் ரத்தத்தை நடத்த, மத்ர தேச அரசன் கர்ணனின் ரதத்தை நடத்த, இருவரும் சந்திக்கும் வேளை நெருங்கியது.

    காத்திருந்த அனைவரும், அர்ஜுனன் அல்லது கர்ணன் இருவரில் ஒருவர் பக்கம் சேர்ந்து கொண்டு, கோஷமிட்டுக் கொண்டனர்.

    கர்ணனின் பக்கம், துரியோதனன், கிருதவர்மன், கிருபர், சகுனி மற்றும் அஷ்வத்தாமா அனைவரும் இருந்தனர். அவர்கள் பின்னே ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

    அர்ஜுனனின் பக்கம், தருமரைத் தவிர்த்து சகோதரர்கள் மூவரும், சிகண்டி, சாத்யகி என அனைவரும் இருக்க, அவர்கள் பின்னும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

    இருப்பினும், அனைவரும் இவர்கள் இருவரின் மோதலைக் காணும் ஆவலில் இருந்தனர்.

    தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அர்ஜுனன் மற்றும் கண்ணனின் புகழ் பாடி, இனிய தென்றலை வீசச் செய்தனர்.

    (மீதம் அடுத்த பகுதில்...)

    (அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் எனை தொடரை தொடர விடாது தேக்கி வைத்தது. தேக்கத்திலிருந்து மீண்டு வந்தேன். இனி வருவேன் மீண்டும் மீண்டும் :))
     
    Last edited: Mar 10, 2011
    Loading...

  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    இன்றைய யுத்த களத்தில் வேங்கைகளின் வேட்கையினை கண்டேன்.
    அர்ஜுன/தருமரின் கோவம் புதிதாய் அறிந்தேன்.
    ஓயாத வேலைகளிலும், சிறப்பாய் பகுதியினை தந்ததற்கு நன்றி வேணி அக்கா :thumbsup:thumbsup

    நாளைய பகுதியில் வில் வேந்தர்களின் யுத்தம்.
    காத்திருக்கிறேன் பகுதிக்காக...
     
    Last edited: Mar 10, 2011
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யுத்த களத்தில்
    கர்ணனின் ஆளுமை சொல்லப் பட்ட விதம் நேரில் இருந்து காண்பது போல் ஒரு பிரமிப்பு.
    மக்களின் இறப்பிலும் சறுக்காது நின்ற அவன் வீரம்.
    அர்ஜுனன்---கர்ணன் போர் காட்சி .
    மூவுலகோடு மெய் சிலிர்ப்போடு நாங்களும் காத்திருக்கிறோம்.


    அங்கே கர்ணன் களத்தில் தன் முத்திரையை பதிக்க
    இங்கே தோழி கதை வரிகளில் உன் முத்திரை.
    நீண்ட நாட்களுக்குப் பின் வந்தாலும் மீண்டு வந்ததற்காய் மிக்க மகிழ்ச்சி.
     
    Last edited: Mar 10, 2011
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இன்று நடக்கும் போர்களை சிஎன்என், பிபிசி நேரடி ஒலிபரப்பு,
    செய்வது போலே வேணி நீங்கள் மிக மிக அழகாக, கர்ணனின்,
    வீர தீர சாகசங்களை கவர் பண்ணி எங்களையும் கவர்ந்து விட்டீர்கள்.

    நாளை கர்ணனின் உச்சகட்ட உத்வேகத்தையும் அதேசமயம் அதுவே,
    கடைசி நாள் என்று நினைக்கையிலே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    நீங்கள் கொஞ்சம் பாரத்தத்தை மாற்றி நவீன பாரதம் படைத்து, கர்ணனை வாழ வைக்க முடியுமா?

    அவன் இறந்தாலும் நம் மனதினில் என்றென்றும் வாழ்வான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
     

Share This Page