1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் கவிதை முயற்சிகள்

Discussion in 'Regional Poetry' started by saidevo, Aug 11, 2012.

  1. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    மீட்டிடப் போதுமான: மடக்கணி
    (நேரிசை வெண்பா)

    மீட்டிட வந்தனள் வீணையை! என்னைநீ
    மீட்டிட வந்தாயோ வேலவா! - மீட்டிடப்
    போதுமான காசில்லாப் பொன்னணி போலவென்
    போதுமான தேமூழ்கிப் போய்!

    விளக்கம்
    மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
    இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.

    போதுமான என்ற சொல்லின் பொருள் முறையே:
    தேவையான அளவு; பொழுதும் ஆனதே!

    குறிப்பு:
    போதுமான என்ற சீர் விளாங்காய்ச் சீராகி ஓசை குறைப்பினும்,
    மடக்குப் பொருளாக வருவதால் அதை அங்ஙனம் அமைத்தேன்.

    --ரமணி, 29/01/2016

    *****
     
    jskls and PavithraS like this.
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    miga arumai
     
    1 person likes this.
  3. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    மடக்கணி வெண்பா: ஆமையா?!
    (இன்னிசை வெண்பா)

    ஆமையா? என்றாரென் ஆசான் கடற்கரையில்
    ஆமையா! என்றேன் அவர்சட்டைப் பைநோக்கி
    ஆ?மையா? என்றார் அவரதனைக் கைப்பற்றி
    ஆமையா உச்சியும் மை!

    ஆமையாவின் பொருள் முறையே:
    ஆமை-யா, ஆம்-ஐயா, ஆ-மையா, ஆம்-ஐயா

    --ரமணி, 03/02/2016

    *****
     
  4. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    மடக்கணி வெண்பா: முடங்கல்
    (இன்னிசை வெண்பா)

    முடங்கல் பிணியில் முனகிடும் மன்னன்
    முடங்கல் குழலில் முதியவர் வாழ்த்து
    முடங்கல் சுருள்தனைத் தூதுவன் தந்தான்
    முடங்கல் கொளும்மன் முகம்.

    (முடங்கல் பொருள் முறையே:
    முடக்குவாதம், மூங்கில், சுருளோலைக் கடிதம், மடங்குகை;
    மன் = அரசன்)

    --ரமணி, 04/02/2016

    *****
    சொற்பின்வரு நிலையணி வெண்பா: அலங்கல்
    (பஃறொடை வெண்பா)

    அலங்கல் அகம்மோத அல்லலுற் றேனுன்
    அலங்கல் தலைமேல் அகற்றியது வாழ்வில்
    அலங்கல்; கழுத்தினில் ஆடும் அலங்கல்
    அகத்தினில் பக்தி அலங்கல் எழுப்பும்
    இகத்தில் அலங்கல் அமைதியை ஈசா
    உகந்தேன் அருள்வாய் உவந்து.

    [அலங்கல் பொருள் முறையே:
    அலம்+கல் (மடக்கு) = துன்பமாகிய கல்; மனக்கலக்கம்;
    தலையில் அணியும் மாலை; கழுத்தில் அணியும் மாலை;
    துளிர்; ஒழுங்குமுறை, ஒளி]

    --ரமணி, 04/02/2016

    *****
     
    PavithraS likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    'முடங்கல்,' சொல் குறிக்கும் வெவ்வேறு பொருள் இன்று உணர்ந்தேன்.

    'அலங்கல் ' என்ற சொல்லுக்கு இத்தனை பொருளா ?! இலவசமாய் அற்புதத் தமிழ்ப் பயிற்சி ! மிக்க நன்றி !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    saidevo likes this.
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    அங்கணனின் மங்கை யெங்கே?
    (முற்று முடுகு நேரிசை வெண்பா: தந்ததன)

    இங்குமுள வங்குமுள வெங்குமுள வங்கணனி
    னங்கமதி லெங்குமுள வங்கதம டங்கிவர
    மங்கையிட மிங்குசிவ மங்கலமி லங்குமவ
    ளிங்குமன வங்குவினி லெங்கு?

    பதம் பிரித்து:
    இங்குமுள அங்குமுள எங்குமுள அங்கணனின்
    அங்கமதில் எங்குமுள அங்கதம் அடங்கிவர
    மங்கையிடம் இங்குசிவ மங்கலம் இலங்குமவள்
    இங்குமன வங்குவினில் எங்கு?

    [குறிப்பு: வெண்பாவின் முடுகியலில் ஙகர ஒற்று மட்டும் பயில்வது காண்க.]

    --ரமணி, 05/02/2016

    *****
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆஹா ! அருமை ! அருமை !
     
    saidevo likes this.
  8. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    பிரதோஷத் துதி: தாண்டவன் தாண்டகம் தங்கவே...
    (இன்னிசை வெண்பா)

    பாற்கடல் தோன்றிப் பரவிய நஞ்சினை
    ஏற்றருள் செய்தார் இமையவர் மானிடர்
    போற்றியே வாழ்ந்திடப் பொன்னம் பலத்தவர்!
    கூற்றினை வென்றிடக் கூடு. ... 1

    உருவும் நிழலும் ஒருமித் ததுபோல்
    இரவும் பகலும் இணையும் பொழுது
    விரிசடை வேதன் விடைமேல் நடனம்!
    தெரிசனம் உள்வரத் தேடு. ... 2

    கோவிற் கருவறை கொள்ளும் பொழிவினில்
    மேவும் திரவியம் மேனி வழிந்திட
    நாவைந் தெழுத்தினில் நர்த்தன மாடிடும்!
    பாவம் தொலையவே பாடு. ... 3

    வேதமும் பண்ணொடு மேற்படு மோசையில்
    நாத சுரத்தின் நலம்செவி யாடவே
    அம்மையும் அப்பனும் ஆலயச் சுற்றினில்!
    இம்மையில் வேறென வீடு? ... 4

    தாண்டவன் தாண்முளை தாண்டினைத் தாண்டிடத்
    தாண்டவன் தாண்முதல் தாண்டகம் தங்கவே
    தாண்டா வுமையவள் தன்னிடம் கொண்டாடும்
    தாண்டவன் தண்ணெறி தாங்கு. ... 5

    பொருள்
    தாண்டவனாம் நடராசனின் மக்களாகிய (தாண்முளை) நாம்
    . அகங்கரிப்பைத் (தாண்டினைத்) தாண்டிச் செல்லத்
    தாண்டவனின் பாதமூலமே (தாண்முதல்) நம் செருக்குடைய
    . அகத்தில் (தாண்டகம்) தங்கவே
    தலைப்பின்னலில் மலர்மாலை (தாண்டா) அணிந்த உமையாளைத்
    . தன் இடப்பக்கம் கொண்டு ஆடும்
    தாண்டவனின் குளிர்நெறியைத் தாங்கு.

    --ரமணி, 02/06/2016, கலி.20/02/5117

    *****
     
    PavithraS likes this.
  9. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    #ரமணி_பிரதோஷம்
    பிரதோஷத் துதி: தாண்டவனே ஆண்டருளே!
    (எழுசீர் விருத்தம்: கூவிளங்காய் மா காய் மா காய் மா காய்)

    ஆலெழுந்த வாரி அச்சமுற்ற தேவர்
    . அன்றுன்னை நாட அருள்செய்யச்
    சேலெழுந்த கண்ணாள் நஞ்சிறங்கும் கண்டம்
    . திகிலெழுந்து பற்றக் கொண்டாயே
    காலெழுந்து வீட்டும் கருமேக வெள்ளம்
    . காலத்தை நிறுத்தும் நாள்வரையில்
    காலெழுந்த நடனம் நிற்காதே ஆடும்
    . கண்ணுதலே நல்லோர் காத்தருள்வாய். ... 1

    ஆவிழிந்த ஐந்தும் ஆலயத்தில் ஆடி
    . அடியார்க்கு நன்மை அருள்வோனே
    நாவிழிந்த பாட்டாய் நாலுவகைப் பண்ணின்
    . நாதமுனைச் சூழும் காட்சியுடன்
    காவிழிந்த மலர்கள் காட்டுமலங் காரம்
    . கண்ணிழியச் சுற்றில் வரும்போது
    நோவிழிந்த வாழ்வின் நுண்மையைநா டாதே
    . நுகர்வோரைத் திருத்தும் அருளாளா. ... 2

    [ஆவிழிந்த ஐந்து = பஞ்சகவ்யம்;
    நாலுவகைப் பண் = வேத, தேவார, நாதஸ்வர, மேளப் பாட்டு;
    இவற்றில் மேளம் விரல்களால் எழுந்தாலும் தாளம் முதலில் மனத்தின்
    நாவிலேயே எழுகிறது;
    காவிழிந்த = சோலையில் இருந்து இறங்கிய]

    தேனறியாக் காட்டு மலரானேன் ஆன்மத்
    . தினவறியா வெற்று மனம்கொண்டேன்
    வானறியாப் பயிராய் வலுவிழ்ந்தே இன்று
    . வாடுகிறேன் ஒன்றும் அறிந்திலனாய்
    நானறிந்த உலகில் துன்பமிலா இன்பம்
    . நாடுகிறேன் இன்னும் தேடுகிறேன்
    தானெரிந்த காட்டில் கூளியுடன் ஆடும்
    . தாண்டவனே என்னை ஆண்டருளே. ... 3

    [தானெரிந்த = தான் என்னும் உடல் நிமித்த அகந்தை]

    --ரமணி, 02/07/2016, கலி.18/03/5117

    *****
     
    PavithraS likes this.
  10. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே!
    (முச்சீர்க் குறள் வெண்செந்துறை)

    பெண்
    கண்ணே என்றால் கண்ணாடிக்
    கண்ணென் றுன்றன் எள்ளுரையோ?
    கண்ணில் ஆடும் தோற்றமெலாம்
    கண்ணா டிசெயும் மாயமன்றோ?
    கண்ணுக் கின்றைய கற்பனையாய்
    பெண்ணைச் சொல்லப் பொருளுண்டோ?

    ஆண்
    கணினிக் கேமரா கண்போல்
    அணியாய்க் காண்பதால் கண்ணென்றேன்
    கண்ணே நீயும் கண்ணாடி
    கண்ணே நானும் கண்ணாடி
    இருவிழிப் பொருத்தம் இப்படியாய்
    வருவது நாலாய் வளமன்றோ?

    பெண்
    மணியே என்றார் மங்கையெனை
    மணியே என்சம் பாத்தியமாய்
    மணியில் லாமல் உழைமாடாய்
    மணிநீ என்னைக் காண்பாயோ?

    ஆண்
    மணிபோல் வெட்டித் துண்டாக்கி
    அணியாய்ப் பேசும் அருமங்கை
    மணியே உன்சம் பாத்தியமேல்
    மணியாய்க் காய்கறி அரிந்தேதான்
    மணியில் உணவும் சமைப்பாயே
    பணியில் நானும் உதவிடவே!
    மணிநான் மணிமே கலைநீயே
    பிணிப்பேர் பொருத்தம் பெருமையன்றோ?

    பெண்
    கட்டிக் கரும்பே நானென்றே
    சுட்டித் தனமாய்ச் சொல்வாயோ?
    கரும்பாய் என்னைப் பிழிவாயோ?
    வருமுன் காப்பேன் வனமங்கை!

    ஆண்
    கரும்புச் சாறு இருவரும்நாம்
    அரும்பும் மாலைச் சாலையிலே
    விரும்பிப் பருகுவோம் பலநாட்கள்
    கரும்பின் மறுபெயர் அறிவாயே
    கன்னற் சாறாய் உன்னுள்ளம்
    கன்னம் இழைத்துநான் கண்டேனே
    கன்னல் என்றே இனிநானும்
    என்றும் உன்னை அழைப்பேனே!

    பெண்
    கனியே தேனே என்றாரே
    வனிதை எங்களைப் புலவருமே
    உவமை சுட்டும் உடலாக
    உவந்தே நீயும் காண்பாயோ?

    ஆண்
    நவநா கரிகப் பெண்மணிநீ
    உவமைப் பொருளே வேறன்பேன்
    கணினித் தகவற் கனியேநீ ... [கனி=சுரங்கம்]
    அணிமலர்த் தேனாய் உன்பேச்சு
    கனியும் உள்ளம் தேனாக
    வனிதை உன்னைக் காண்பேன்நான்
    காலம் காலமாய்ச் சொன்னதெலாம்
    ஆலம் விழுதாய் நிற்பதன்றோ?
    சொல்லின் பொருள்தான் வேறாகிக்
    கல்வியில் கருத்தில் சமமாவோம்.

    இருவரும்
    (இருசீர்க் குறள் வெண்செந்துறை)

    மணிநீமணி மேகலைநான்
    கணினித்துறை கம்பெனியின்
    பணியேநமைச் சேர்த்ததுவே
    மணிநாம்மிகச் சேமித்தே
    அணியாயிரு வாரிசுகள்
    துணிவோம்நம் வாழ்வினிலே!

    --ரமணி, 01/07/2016

    *****
     

Share This Page