1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 67

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 5, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    மரம் செடி கொடிகள் என காட்சி விரிந்து ஆற்றங்கரை தெரிந்தது. ஆளரவமின்றி, ஆர்ப்பாட்டமின்றி, மஞ்சள் வெயிலில் ஜொலித்த அந்த ஆற்றை மிதுனா பார்வையால் அளக்க, அங்கே ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருந்தவன்.. நளந்தன்!

    அந்நியனோ அல்லவோ.. ஆனால் ஆடவன் ஒருவன் நீந்துகையில் அங்கிருக்க அவளுக்கு சங்கோஜம். பாராதது போல அப்படியே திரும்பி போய் விடத் தான் நினைத்தாள். ஆனால் நேருக்கு நேர் பார்வைகள் ஒன்றையொன்று கவ்விய பின் பாராதது போல எங்கே போவது?! அப்படியே போனாலும் நளந்தன் அவளை போக விட்டிருப்பானா என்பது சந்தேகமே.

    மதுரமாய் முறுவலித்து, "நீந்த வருகிறாயா? நீர் அதிக குளிர்ச்சியின்றி கதகதப்பாக தான் இருக்கிறது. " என்றான் எடுத்த எடுப்பிலேயே.

    "இல்லை இல்லை.. நீங்கள் நீந்துங்கள். நான் போகிறேன்" என்று சாதாரணமாகவே மறுத்து நகர போனாள் மிதுனா.

    "நீச்சல் தெரியாதா? பரவாயில்லை, நான் கற்று தருகிறேன், வா" என்றான் இலகுவாக.

    இவனுக்கு எல்லாமே இலகு தான்! அவனோடு அவள் நீந்துவதாம்.. அதில் அவன் கற்று வேறு தருவானாம்!

    பதறியடித்து, "அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை, நானே நன்றாக நீந்துவேன்" என்று நுணல் போல வாயை கொடுத்து மாட்டிக் கொண்டாள்.

    "பிறகென்ன? ஆழம் அதிகம் என்று பயமா?" என்றான். சரியான விடாக் கண்டன் என்று மனதுள் அவனை வைதாள் மிதுனா.

    "ஒரு பயமும் இல்லை" என்று அவள் ரோஷம் காட்ட,

    "பின்னே, ஆழம் பயமில்லை என்றால்.. ஆளிடம் தான் பயமா?"

    "ஏன் நீங்கள் என்ன புலியா, சிங்கமா? உங்களை பார்த்து நான் ஏன் பயப் பட வேண்டும்? " அலட்சியமாக அவள் தலை சிலுப்ப, அதே அலட்சியத்தோடு தோள் குலுக்கி,
    "அதை நீ தான் சொல்ல வேண்டும்!" என்றான் அவளை கேலியாக பார்த்தபடி.

    அவள் பதில் தேடி திணற, அவன் தன் பிடியை இறுக்கினான்.
    "பயமில்லாத வீராங்கனை களமிறங்க வேண்டியது தானே?!"

    அவன் குரல் அவளை மீண்டும் உசுப்ப, அவசர அவசரமாக ஒரு காரணத்தை தேடி பிடித்தாள் மிதுனா.

    "தண்ணீரில் துணியெல்லாம் நனைந்து விடாதா? வா வா என்றால் எப்படி வருவதாம்?" என்றாள் சமாளிப்பாக.

    "அடடா.. தண்ணீரில் துணி நனையும் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே!" அவன் மீண்டும் கிண்டலடிக்க,
    "ச்சு.. வேறு துணி எடுத்து வரவில்லை என்றேன். " என்று சலித்தவள் போல சொல்லி அவனது துண்டு, சட்டை இருந்த இடத்தை குறிப்பால் காட்டினாள். அவன் தகுந்த முன்னேற்பாடோடு வந்து நீந்தி கொண்டு வழியோடு போகிறவளை நிறுத்தி வம்பு செய்வது என்ன நியாயம்?

    ஆனால் அவள் நினைத்தது போல அவன் அந்த காரணத்தை ஏற்று அவளோடு சேர்ந்து ஒத்து பாடவில்லை. மாறாக, "அவ்வளவு தானா விஷயம்" என்றவன் பார்வையை சுற்று முற்றும் ஓட்டினான்.

    அவன் நேரம், ஒரு குடியான பெண் பொடி நடையாக அந்த பக்கமாக வந்து கொண்டிருந்தாள். அவள் அருகில் வரும் வரை காத்திருந்தவன் கையசைத்து அவளை கூப்பிட்டான்.

    "என்னங்க ஐயா?" என்று பவ்யமாக வந்து நின்றாள் அந்த பெண்.

    ஏதோ நினைவுபடுத்தி பார்ப்பவன் போல புருவம் சுருக்கி நெற்றி தேய்த்த நளந்தன், "உன்னை எங்கோ பார்த்திருக்கிறேனே.. நீ.. அய்யாவு கவுண்டரோடு.. சாரப்பாறையில்.. " என்று அவன் இழுக்க, அந்த பெண், "ஐயா.. அது வந்து நான்" என்று ஏதோ சொல்ல வந்தாள். அவள் பேச்சை அசுவாரசியம் போல ஒதுக்கி, "சரி அதை விடு. ஒரு உபகாரம் செய்ய முடியுமா?" என்றான் நளந்தன்.

    வேர்த்த முகத்தை துடைத்து கொண்டு, முன்னிலும் பதவிசாய், "சொல்லுங்க ஐயா, எது வேணுமின்னாலும் செய்யறேன்" என்று ஒரு துடிப்போடு கேட்டாள்.

    "ம்.. அய்யாவு கவுண்டருடைய தாத்தா முத்துசாமியின் குடில் தெரியுமா?"

    "தெரியுமுங்க..அவுக வீட்டுக்கு எங்க அப்பாரு தான் வெறகு சப்ளை"

    "நல்லது.நாங்கள் முத்துசாமி கவுண்டரின் விருந்தாளிகள்..அங்கே, குடிலில் தான் தங்கியிருக்கிறோம். " என்றவன் மிதுனாவை கை காட்டி, "இந்த அம்மாவுடைய ஒன்றிரண்டு சேலைகள் அங்கே கொடியில் இருக்கும். அதில் ஒரு மாற்று சேலை எடுத்து வந்து அதோ அந்த பாறை மேல் வைத்து விடுகிறாயா?" என்றான் கொஞ்சம் அதிகாரம் காட்டி.

    "சரிங்க ஐயா.. " என்று சொல்லி சிட்டென பறந்தாள் அவள். மறுப்பின்றி அந்த பெண் அவன் ஏவியதை தலை மேல் வைத்து செய்ய முற்பட்டது மிதுனாவுக்கு பலத்த ஆச்சர்யம்.

    "அதெப்படி?! " என்று மிதுனா வாய்விட்டு வியக்க, "எதெப்படி?! " என்று அவளை போலவே கேட்டு மோகனமாய் சிரித்தான் நளந்தன்.

    "ம்ம்.. நளமகாராஜாவின் உத்தரவுக்கு சங்ககிரியின் எல்லைக்குட்பட்ட ஒரு சின்ன கிராமம் கூட அடி பணிகிறதே... அதெப்படி?!"

    அவள் கேலியையும் அந்த 'நளமகாராஜா'-வையும் ரசித்தவன், "கிராமம் பணிகிறதோ என்னவோ தெரியாது ஆனால் இந்த பெண் பணிவாள் என்பது மட்டும் நிச்சயம்" என்று பூடகமாக சொன்னான்.

    அவள் விழி விரித்து பார்க்க, "மெல்ல மெல்ல.. உன் கற்பனை குதிரையை எக்கு தப்பாய் தட்டி விட்டு விடாதே, வழக்கம் போல" என்று விளக்கம் சொல்ல முற்பட்டான்.

    அதென்ன 'வழக்கம் போல' என்று ஒரு குட்டு? என கேட்க நா துடித்தது. அதற்குள் அவன் பேச ஆரம்பித்திருந்தான்.

    "அய்யாவு.. சாரப்பாறை என்று எடுத்ததும் ஒரு கொக்கி போட்டேனே.. கவனிக்கவில்லையா?" என்றவன், " பெரியவரின் கடைசி பேரன் இந்த அய்யாவு. கொஞ்சம் குணம் கேட்டவன் என்றும் கேள்வி. சதா குடி.. மது மாது எல்லாம் அத்துபடி. அவனது பொழுது போக்கு வகையறாவில் இப்போது போனாளே அந்த பெண்ணும் சேர்த்தி. நேற்று ஊருக்கு ஒதுக்குபுறமான சாரப்பாறையில் அவர்களிருவரையும் பார்த்தேன். நான் ஏதும் குழப்பம் விளைவிப்பேனோ என்ற பயம் இந்த பெண்ணுக்கு. அதுதான் அத்தனை பணிவு. மற்றபடி மகாராஜா இன்னமும் ஆள்வதற்கு ஒரு ராஜ்யத்தை தேடி கொண்டு தான் இருக்கிறார்" என்று போலி பெருமூச்சு விட்டான்.

    சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி, "பிளாக்மெயில்! " என்று மனதில் உறுத்தியதை அப்படியே சொல்லிவிட்டாள் மிதுனா.

    "போச்சுடா! " என்று தலையில் கை வைத்து அங்கலாய்த்த நளந்தன், "பிளாக்மெயில் என்று சொல்வானேன்?! எங்கு தட்டினால் எங்கு விழும் என்று சிந்தித்து செயல்படும் ராஜதந்திரம் என்றும் சொல்லலாமே " என்றான் சீரியசாகவே.

    இப்படி தன்னிடமும் நளந்தன் ராஜதந்திரம் பயில்வானோ இதற்குமுன் பயின்றானோ..
    சேச்சே! எத்தனை நல்லவன். அவனைப் போய் சந்தேகப்படுவதா? அவனையே பார்த்து கொன்டிருந்த அவள் கண்களில் மதிப்பு கூட, அவளையறியாது மையலும் ஏற,அதை கண்ணுற்ற நளந்தன் குரலில் பெருமிதம் தொனிக்க, "பார்த்தம்மா.. கண்ணாலேயே கபளீகரம் செய்து விடுவாய் போலிருக்கிறதே!" என்றான்.

    மேலும் எந்த நொண்டி சாக்கையும் அவள் தேடி பிடிக்க விடாமல், சற்றும் எதிர்பாராவண்ணம் ஒரே இழுப்பில் மிதுனாவை தண்ணீருக்குள் இழுத்தும் விட்டான.
     
    2 people like this.
    Loading...

Share This Page