1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 62

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 5, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    நளந்தன் ஏக உற்சாகத்தில் இருந்தான். சிரிக்க சிரிக்க பேசினான். மிதுனாவுக்கு தான் மனம் எதிலும் ஒட்டவில்லை. சுபலாவை பார்த்தானா? அவள் பரிசு கொடுத்தாளா? அதனால் தான் இந்த உற்சாகமா? என்று அதே சிந்தனை தான்.

    அவள் கவனம் சிதறுவது கண்ட நளந்தன் மென் குரலில் காரணம் கேட்க, அவள் பதில் அதே 'ஒன்றுமில்லை' தான்.

    ஒரு விரலால் அவள் அதரங்களை அளந்து, "மொட்டு விரிந்தது போல அழகான உதடுகள்" என்று சிலாகித்து, "ஆனால் அது மெய்யும் உரைத்தால் நன்றாக இருக்கும்" என்றவன், அதே விரலால் அவள் தலையை தொட்டு காட்டி, "இங்கே நினைப்பதையே பேச வேண்டியது தானே? ஆனால் பாவம்.. எட்டப்பன் போல உன் கண்கள். காட்டி கொடுத்துவிடுகிறதே!" என்று சின்ன சிரிப்பு சிரித்தான்.

    அவன் விரல் பட்ட அனலில் உலர்ந்த உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டி கொள்ள மிதுனா மௌனம் காத்தாள்.

    அவள் அருகில் அமர்ந்த நளந்தன் ஆழ் குரலில், "மிதுனா.. உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டுமே" என்றான்.

    அவன் குரலில் விலுக்கென நிமிர்ந்த மிதுனா "நானும்" என்றாள்.

    அவன் பேசுவதை கேட்க அவளுக்கு துணிவில்லை. எங்கே அவன் சுபலா, மோதிரம், பரிசு, காதலர் தினம் என்று ஏதாவது சொல்லி விடுவானோ என்றிருந்தது.

    அவள் அவசரம் கண்டு அதிசயித்தவன் தலையை பின்னுக்கு சாய்த்து லேசாக சிரித்து, "ஆல்ரைட், ஆல்ரைட்.. லேடீஸ் ஃபர்ஸ்ட் . நீயே சொல்" என்று அவளுக்கு முன்னுரிமை கொடுத்தான்.

    அவன் சிரிப்பும் அவள் மனதை என்னவோ செய்ய, அவன் முகம் பாராது, "எனக்கு ஒரு வேலை பார்த்து தருவதாக சொன்னீர்களே.. தாத்தா வருவதற்குள் அதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்தால் அவரிடம் சொல்லி விலகி செல்ல வசதியாக இருக்குமே.. வெளியூர் என்றால் நன்றாக இருக்கும்.."

    நளந்தன் முகம் கோபத்தில் ஜொலித்தது. சட்டென எழுந்து கொண்டவன், "எந்நேரமும் போவது, விலகுவது என்று இதே பேச்சு, இதே நினைப்பு தானா?! கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடாமல் இதென்ன தொனதொனப்பு? ச்சே! " என்று மிக எரிச்சலாக பேசினான். குரல் தாழ்ந்து கிடந்தாலும் கடுமைக்கு கொஞ்சமும் குறைவில்லை.

    இருவரும் எரிமலையாய் உள்ளே குமுறிக்கொண்டே காரில் ஏறி வீட்டை அடைந்தனர்.

    வீடு வரும் வரை வாயை இறுக மூடிக் கொண்டு வந்த நளந்தன் , "விலக முடியாதபடி கட்டி போட்டுவிட்டு.. போகிறாளாம்! பேச்சை பார்!" என்று முனகியபடியே அவன் அறைக்கு செல்லவும் மிதுனாவுக்கும் பொத்து கொண்டு வந்தது.

    'சுபலாவை விட முடியாது.. மறக்க முடியாது' தவிப்பவன் அல்லவா.. அது தான் அப்படி பேசுகிறான் என்று கொதித்தாள்.

    உள்ளே செல்லவிருந்தவனின் கையை கோபமாக பற்றி தடுத்து,
    "யார் உங்களை கட்டி போட்டது? நான் தான் எந்த கட்டும் இல்லை. எந்த கட்டாயமும் இல்லை என்றேனே! தாத்தாவிற்கு கொடுத்த வாக்கு, அது இது என்று எதற்கு பிடிக்காமல் இப்படி வதை படவேண்டும்? சுகுணா அத்தையும் கூட இதை தானே சொன்னார்? இன்னும் எதற்கு பூசி மெழுகுகிறீர்கள்? பெரிய தியாக பிரம்மம்!" என்று பொரிந்தாள்.

    "சை! உன்னிடம் பேசி பயனில்லை!" என்று மிதமிஞ்சிய கோபத்தில் அவள் கைகளை உதறி விட்டு தன்னறைக்கு போய் கதவடைத்தான் நளந்தன்.


    ஆனால் சிறிது நேரத்திலேயே வெளியே வந்தவன் அங்கே இன்னமும் திகைத்து நின்ற மிதுனாவின் வெளிறிய முகம் கண்டதும், சற்று முன் பேசியது அவன் தானா என்று சந்தேகம் கொள்ளுமளவு தணிந்து விட்டான். "ஏதோ வேலை டென்ஷன். சாரி" என்று அவன் தணிந்து போக, மிதுனாவுக்கும் 'பாவம் அவனும் எத்தனை விஷயத்தை ஒரே ஆளாக இருந்து கவனிப்பான்? இதில் அவள் வேறு' என்று கஷ்டமாக போய்விட்டது.

    அவளும் சமாதானமாக, "நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்களே" என்று மனநிலையை சீர்படுத்த முயல, அவன் கண்ணை எட்டாத முறுவலுடன், "அது.. என் சொந்த அலுவல் முடிந்து விட்டதால் இனி உன் நில குத்தகை விஷயம் பார்க்கலாம். அது பற்றி முடிவெடுக்க சங்ககிரி செல்ல வேண்டும் என்று சொல்ல வந்தேன். வருகிற வாரம் கிளம்ப தயாராக இரு" என்று முடித்தான்.
     
    3 people like this.
    Loading...

Share This Page