1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 58

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 5, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    நளந்தன் சொன்னது போன்றே அலுவலகத்தில் அவனுக்கு வேலை குவிந்து தான் கிடந்தது. வாகனங்கள் மேற்பார்வை, விடுதி மேற்பார்வை, டிக்கட் புக்கிங், கான்சலேஷன், ரீபுக்கிங் , வேலையாட்கள், புதிதாக சேர்க்கப்பட்ட ரிசார்ட்ஸ் தொடர்பான வேலைகள், அதற்கான ஆவணங்கள் தயாரிப்பு, அப்ரூவல், லைசன்ஸ் என பல்வேறு பிரச்சினைகள்.

    அவற்றை எல்லாம் நளந்தன் வெகு சாமர்த்தியமாக கையாள்வதை மிதுனா ஒரு பெருமிதத்தோடு கவனித்தாள். அவளால் ஆனது அவன் தந்த சில ஆவணங்களை ஸ்கேன் செய்து கணினியில் பதிப்பதும், சில கடிதங்கள் டைப் செய்வதும் தான். இதையெல்லாம் அவள் வருவதற்கு முன் யார் செய்தார்கள் என்று அவளுள்ளே ஒரு கேள்வி எழுந்தபோது, "Confidential" என்று சொன்னானே, அதற்காக தன்னிடம் தருகிறான் போலும் என்று சமாதானம் சொல்லி கொண்டாள். ஆனால் அதே விளக்கத்தை இன்னொருத்தியிடம் அவள் சொன்ன போதோ 'அடி அசடே' என்று அந்த ஒருத்தி பார்த்த பார்வையில் மிதுனாவின் நிம்மதி குலைந்தது.

    அந்த ஒருத்தி சுபலா! மிதுனாவின் நிம்மதிக்கு பங்கம் என்றால் அது சுபலாவின் கைங்கரியம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?!

    நளந்தனின் அலுவல் அறையிலேயே ஒரு பக்கத்தில் மிதுனாவுக்கும் நாற்காலி மேஜை போட்டு கொடுத்திருந்தான் நளந்தன். அன்று மிதுனா மட்டும் தான் அவன் அறையில் இருந்தாள். நளந்தன் புக்கிங் சூப்பர்வைசரை சந்திக்க அவர் அறைக்கு சென்றிருந்தான்.
    அப்போது தான் சுபலா வந்தாள்!

    கதவை லேசாக ஒரு முறை தட்டி விட்டு உள்ளே நுழைந்த சுபலா நளந்தனின் அறையுள் மிதுனாவை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மிதுனாவும் தான் சுபலாவை எதிர்பார்க்கவில்லை. கிராமத்தில் பொய் பழி சுமத்தியதற்கு பின் சுபலாவை அவள் தாத்தாவின் காரியத்தின் போது கூட மிதுனா சந்திக்கவில்லை. அவளை என்றேனும் சந்திப்பாள் என்று கூட நினைத்ததில்லை. அதிலும் நடந்ததெல்லாம் ஒரு சதி தான் என்று நளந்தன் நம்புகையில், அவன் சுபலாவை கத்தரித்திருப்பான் என்று தான் நினைத்தாள்.. அதனால் சதியின் சூத்திரதாரி சுபலா சுவாதீனமாக நளந்தனின் அறைக்கு வர கண்டது அவளுக்கு பெரும் அதிர்ச்சியே.

    சுபலாவை பொறுத்தவரை இது பெரும் அதிர்ச்சி என்று சொல்ல முடியாது. உறவினர் மூலமும், ஏற்பாடு செய்திருந்த ஒற்று மூலமும், மிதுனா முன்பு போல சுந்தரம் தாத்தா வீட்டோடு தான் இருக்கிறாள் என்பது அவள் அறிந்த விஷயமே. ஆனால் மிதுனாவுக்கும், விஜிக்கும் இன்னமும் மனக்கசப்பு என்று தானே பேச்சு.. இங்கானால் இந்த மிதுனா விஜியின் அறைக்குள்ளே அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறாளே.. அது தான் சுபலாவின் குழப்பம்.

    முதலில் சுதாரித்து கொண்டவள் சுபலா தான்.

    "நீயா?! இங்கேயும் வந்து விட்டாயா?" என்று முகத்தை ஒடித்து திருப்பியவள், "விஜி எங்கே?" என்று மிக உரிமையாக கேட்டாள்.

    ஆனால் அவள் கேள்விக்கு பதிலளிக்காத மிதுனா, "அன்று ஏன் அப்படி பொய் சொன்னாய் சுபலா?" என்று நேரிடையாக கேட்க சுபலா கொஞ்சம் ஆடித்தான் போனாள்.

    எனினும் பேச்சில் வல்லவளான சுபலா நொடியில் சுதாரித்து கொண்டாள்.

    "நான் ஒன்றும் முழுக்க பொய் உரைக்கவில்லையே! என்னோடு சேர்ந்து திட்டமிட்டாய் என்றது மட்டும் தானே பொய். மற்றபடி அது தானே உன் திட்டம். எனக்கு தெரியாதா?! இல்லாவிட்டால், அந்த நேரத்தில் அப்படி 'என்' விஜியை கட்டி பிடித்து கொண்டு அத்தனை பேர் எதிரில் நீ நிற்பாயா?!

    புத்தி கெட்ட தாத்தா அவசரப்பட்டு சொன்னதை ஏற்று அப்பாவி அத்தானும் உன்னை கை பிடித்தால் அப்புறம் நான் என்ன இலவு காத்த கிளியா?! அதற்காக தான் ஆபத்துக்கு பாவமில்லை என்று 'கொஞ்சம்' உண்மையை திரித்து அத்தானுக்கு உறைக்கும் விதம் சொன்னேன்." என்று வெகு சாதுரியமாக தன் குற்றத்தை மட்டு படுத்தி காட்டினாள்.

    அவள் பேச்சு சாமர்த்தியம் மிதுனாவை வாயடைக்க வைத்தது! எப்படி இன்னமும் முழு பூசணிக்காயை அனாயசியமாக சோற்றில் மறைக்கிறாள்?!

    அவள் மலைத்து நின்ற நிமிடங்களை தனக்கு இன்னமும் சாதகமாக பயன்படுத்தி கொண்டாள் சுபலா.

    "ஹ்ம்.. என்ன செய்து என்ன புண்ணியம்?! அத்தான் அத்தனை தூரம் உன்னை விரட்டி அடித்தும் இன்னமும் மான ஈனமின்றி அவரை ஒட்டி கொண்டு தானே இருக்கிறாய்! இந்த லட்சணத்தில் ஆபீஸ் வேறு வர தொடங்கி விட்டாய். அது தான் அவரே உன்னை கல்யாணம் செய்து கொள்வதாக முடிவாகி விட்டதே. இன்னும் என்ன சொக்கு பொடி போட அவர் வாலை பிடித்து கொண்டு இங்கு வந்தாய்?" என்றாள்.

    கோபத்தில் மிதுனா அவளையும் அறியாமல் சுபலாவிற்கு தேவையான சேதி சொன்னாள்!

    "சீ! வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாதே! நான் ஒன்றும் எவருக்கும் அப்படி ஏங்கி கிடக்கவில்லை. கல்யாணம் வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு தான் இருக்கிறேன்" என்று வெகுண்டு சொன்னாள்.

    ஆக, இன்னமும் விஜிக்கும், இவளுக்கும் இடையில் எதுவும் சரியாக வில்லை என்று தெரிகிறதே! சுபலா மனம் துள்ளியது.

    "அப்புறம் எதற்கம்மா இங்கும் வந்து அவர் நிம்மதியை கெடுக்கிறாய்?"

    "அவர் அழைத்ததால் தான் வந்தேன். அலுவலில் உதவியாக.." என்று சொன்னவள், இவளுக்கு எதற்கு தான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் தோன்றவே, "அதை கேட்க நீ யார்? மேலும் நான் வருவதால் அவர் நிம்மதி ஒன்றும் கெடாது." என்று சொல்லி நகர்ந்தாள்.

    அவளது பேச்சின் பிற்பாதியை ஒதுக்கி, "என்னது, உதவியாகவா?! ஏன், இத்தனை நாள் நீயா உதவினாய்? அவருக்கு ஸ்டெனோ, செக்ரட்டரி என்று யாரும் இல்லையா?" என்று கிண்டலாக சுபலா கேட்க,

    மிதுனா நளந்தன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டுமாவது சுபலாவுக்கு தெரியப் படுத்தி அவள் வாயை அடைக்க ஆசைப்பட்டு, "சில 'Confidential' விஷயங்கள் டைப் செய்ய என் உதவியை நாடினார். போதுமா?" என்றாள் ஒரு வித வேகத்துடன்.

    சுபலாவா அசருகிறவள்?! 'அடி அசடே' என்பது போல மிதுனாவை ஒரு பார்வை பார்த்து, "அப்படி அத்தான் சொன்னாராக்கும்? எங்கே உன்னை தனியே வீட்டில் விட்டால் தற்கொலை ஏதும் செய்து இன்னமும் மானத்தை கப்பலேற்றி விடுவாயோ என்று பயந்து கையோடு கூட்டி வந்திருப்பார்! என்ன பெரிய 'Confidential Matter'? எல்லாம் அந்த டைம் ஷேர் பிசினஸ் விஷயம் தானே. ஏன் என்னிடம் சொன்னால் நான் செய்ய மாட்டேனா? முன்பு நான் செய்தது தானே!" என்றாள் அலட்சியமாக.

    சும்மா இருட்டில் கல்லெறிந்து பார்த்தாள் சுபலா. தற்போது விஜயன் மும்முரமாக இருப்பது அந்த புது பிசினஸ் தான். அதை வைத்து குருட்டடி அடித்தாள். மிதுனாவின் வெளுத்த முகம் அவளது யூகம் குறைந்த பட்சம் மிதுனாவை சலனப் படுத்தும் அளவிற்கு ஏற்புடையது தான் போலிருந்தது.

    "பாவம் அவர். காதலையும், கடமையையும் போட்டு குழப்பி கொள்கிறார். என்னையும் மறக்க முடியாது, தாத்தாவுக்கு கொடுத்த வாக்கால் உன்னையும் விட முடியாது தவிக்கிறார். நீயானால் இரத்தம் உறிஞ்சும் அட்டையை போல அவரை ஒட்டி கொண்டு.. சீச்சீ.. எப்படி தான் உன்னால் முடிகிறதோ!" என்று தளுக்காக தோளை குலுக்கியவள் தன் கைபையில் இருந்து ஒரு சின்ன நகை பெட்டியை திறந்து உள்ளிருந்த ஒரு அழகிய மோதிரத்தை திருப்பி திருப்பி பார்த்து விட்டு, எவர் தூண்டுதலும் இன்றி சுயபுராணம் படித்தாள்.

    "அத்தான் 'Zodiac' ஜெமினி என்பதால் அவருடைய birthstone, சந்திர காந்த கல் பதித்த மோதிரம, அவர் அளவுக்கு ஆசையாக சொல்லி செய்தது.. பார்த்து கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்தால்.. என் மூடே கெட்டு விட்டது. ச்சே! " என்று சொல்லி கிளம்பி விட்டாள்.

    திருவிழா சமயம் அவள் ஆரம்பித்து வைத்த கூத்தை நின்று முழுமையாக கண்டு களிக்க அன்று சுபலாவுக்கு நெஞ்சில் உரமில்லை. விஜயனுக்கு எங்கே விஷயம் தெரிந்துவிடுமோ, அசட்டு அண்ணன் பத்ரி என்ன உளறி எப்படி காரியத்தை கேடுப்பானோ என்ற அச்சம் அவளை உந்த, அழுது கொண்டே பத்ரியை தேடுபவள் போல கூட்டத்தில் இருந்து நழுவி ஒருவழியாய் பத்ரி ஓடி ஒளிந்து கொண்ட அந்த லோக்கல் மருத்துவமனைக்கு அவளும் சென்றுவிட்டாள்.

    பின்னர் உறவினர் மூலம் வீட்டு நடப்பை கேட்டு உளவறிந்தாள். இன்று வரை விஜயன் அவளை தொடர்பு கொள்ளாதது ஏன் என்று யோசித்தவள் பல சாத்தியகூறுகளை ஆராய்ந்தாள். அவன் அவள் மேல் கடுங்கோபம் கொண்டு அவளை தேடி வராத காரணத்தால் தன் சதி இன்னமும் அம்பலமாக வில்லை என்றே அவளுக்கு தோன்றியது. அதனால் விஜயனிடம் தனக்கு இன்னமும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவே சுபலா நம்பினாள். விஜயன் போல ஒரு புளியங்கொம்பை அவள் எப்படி அத்தனை சீக்கிரம் நழுவ விடுவாள்?!

    அந்த ஆவல் உந்தித்தள்ள பத்ரியும் அவனும் சேர்ந்து செய்யும் பிசினஸ் விஷயம் ஒன்றை சாக்கிட்டு விஜயனை பார்க்க பல நாள் கழித்து அவன் அலுவல் அறை வந்தாள். வந்த இடத்தில் எதிர்பாராது மிதுனாவை சந்தித்தது எரிச்சல் தான் என்றாலும், திருமணத்துக்கு மறுப்பு சொன்னதை பற்றி தன்னையறியாமல் வாய் விட்டாளே மிதுனா..அந்த சேதி இனித்ததே.

    தான் வந்து போனதன் எதிரொலி விஜயனிடம் எப்படி இருக்கிறது என்று ஆழம் பார்த்து கொண்டு அடுத்த அடி வைக்க தீர்மானித்தாள் சுபலா. அதற்கு விஜயன் வருவதற்குள் கிளம்ப வேண்டுமே.. அதன் பின் ஒரு நாள் வந்து இதே முட்டாள் மிதுனாவின் வாயை கிளறினால் விஜயன் என்ன சொன்னான் என்று தெரிந்துவிட்டு போகிறது!

    சுபலா உடனே அங்கிருந்து வந்த சுவடே தெரியாமல் கிளம்பிவிட்டாள்.

    மிதுனா சுபலாவின் வரவால் சஞ்சலப்பட்டு போனாள். நளந்தன் சுபலாவை வெட்டி விடாதது என்னவோ தன் மேல் சுமத்தப் பட்ட பழி இன்னமும் துடைக்கபடாதது போல அவளுக்கு உறுத்தியது. அதோடு ஆங்காங்கே சுபலாவிற்கே உரிய முறையில் அவள் நிரவி விட்டு சென்றிருந்த விஷம பேச்சுக்கள்.. என்னவோ நளந்தன் முதுகில் கட்டிய கல்லாக மிதுனா இருப்பது போன்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

    பிடிவாதமாக தன்னை ஆபிசுக்கு அழைத்து வந்த நளந்தன் மேல் கோபம் கூட எழுந்தது. அவள் பாட்டுக்கு வீட்டில் இருந்திருந்தால் இந்த விஷம பேச்சை கேட்டு இப்படி நோகவேண்டியதில்லையே!

    இதே யோசனையில் முகம் கடுக்க அமர்ந்திருந்தவள் நளந்தன் அறையுள் வந்ததை கவனிக்கவேயில்லை.
     
    2 people like this.
    Loading...

Share This Page