1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 55

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 5, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    அன்று வக்கீல் அவர்கள் வீட்டிற்கு வந்து உயில் பிரித்து படிப்பதாக இருந்தது. சொத்து என்று எதுவும் இருப்பதாக தாத்தா அவளிடம் ஏதும் சொன்னதில்லை. இப்போது உயில் என்றால் விநோதமாக இருந்தது அவளுக்கு. நளந்தனை கேட்கவும் பிரியமில்லை. கேட்டால் இது கூட தெரியாதா என்று அதற்கும் ஏதாவது கேலியாக பேசுவான். என்னவோ அவள் உலக மகா அசடு மாதிரி. சரக்கு மலிந்தால் சந்தைக்கு தானே வர வேண்டும் என்று பேசாதிருந்தாள் அவள். ஆனால் அவள் தான் சரக்கை தேடி ஓடும்படி ஆனது.

    வக்கீலுக்கு ஏதோ வர முடியாத சூழ்நிலையாம். அதனால் இருவருக்கும் பொதுவாக ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கு வந்துவிடும் படி நளந்தனிடம் சொல்லிவிட்டாராம்.

    காரில் செல்லும் வழியில், நளந்தனின் செல் சிணுங்க, 'Handsfree Mode'-ல் பேசினான். சுகுணா அத்தை தான் லண்டனில் இருந்து அழைத்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்னர், ஒரு வழியாக விஷயத்திற்கு தாவினார். இரு தாத்தாக்களின் முடிவும் படு தவறானது என்றார். காரியம் வரை ஏதும் பேச வேண்டாம் என்று பல்லை கடித்து கொண்டு இருந்தாராம். வாழ வேண்டிய சிறுசுகள் வாழ்க்கையில் வாழ்ந்து முடித்த பெருசுகள் தலையிடுவது அநியாயமாம். ஒரு இக்கட்டுக்காக அவன் திருமணத்திற்கு சம்மதிக்க கூடாதாம். மனம் பொருந்தி வந்தால் தான் மணக்க வேண்டுமாம். பெரியவர் மனம் கோணக் கூடாதே என்றெல்லாம் மணம் புரிய கூடாதாம். அது இறந்த பெரியவருக்கு கொடுத்த வாக்கு என்றாலும் சரிதானாம். அதற்கெல்லாம் அவன் மனம் கலங்கி இந்த திருமண ஏற்பாட்டிற்கு தலையசைத்தால் அது அவனுக்கு அவனே செய்து கொள்ளும் அநியாயமாம். சுகிர்தன் கூட இதையே தான் சொன்னானாம். அவரே நேரில் வந்து அவன் தாத்தாவிடம் பேசி இதற்கு ஒரு முடிவு கட்ட போகிறாராம். இப்படி ஏதேதோ பேசினார். அவர் பேச்சு முழுதும் இந்த கல்யாணத்தில் நளந்தனுக்கும் மிதுனாவுக்கும் அறவே விருப்பம் இல்லை என்ற தொனியே ஓங்கி ஒலித்தது. அப்படி தானே அவர்கள் இருவரும் சொல்லி கொள்கிறார்கள்! பாவம் கடல் கடந்து கிடக்கும் அந்த அம்மா மட்டும் வேறு என்ன நினைப்பார்?!

    நளந்தன் அவர் சொன்ன எல்லாவற்றிற்கும் பொதுவாக பட்டும் படாமல் 'உம்' கொட்டினான். அருகில் மிதுனாவும் இருக்கிறாள் என்று அறிந்ததும் அத்தை அவளிடம் பேச விழைந்தார். அவனை போன்றே 'Speaker phone'-ல் பேச யத்தனித்த அவளை தடுத்த நளந்தன் 'Speaker'-ஐ 'Off' செய்து விட்டு செல்லை அவளிடம் நீட்டி, "பேசு" என்றான் பாதையில் பதித்த கண்ணை எடுக்காமல்.

    அவளுக்குமே 'Speaker'-ல் பேச சங்கடம் தான். அவன் முன் அத்தை பட்டவர்த்தனமாக என்ன பேசிவிடுவாரோ, அவன் காது பட எப்படி பதிலுறுப்பது என்றெல்லாம் சங்கோஜம். அவளது உணர்வு மதித்து ஒரு 'Privacy' ஏற்படுத்தி தந்த அவன் பண்பு பற்றி சமய சந்தர்ப்பமின்றி அவள் மனம் குறிப்பெடுத்தது.

    ஆனால் நளந்தன் அவள் ப்ரைவசிக்காக அவ்வளவு யோசித்தது எல்லாம் வீண்.. அத்தையம்மாள் அத்தனை உரக்க பேசினாள். ஸ்பீக்கர் போன் தேவையே இல்லாமல் அவளது பேச்சு முழுமையும் அவன் காதில் மோதியது.

    அவனிடம் சொன்னதை தான் பால் மாற்றி அவளிடம் பேசினார். கூடவே, " உன் மனம் யாரை விரும்புகிறதோ அவனை தான் நீ மணக்க வேண்டும். அது தான் உண்மையான திருமணம். இப்போது ஒரு கட்டாயத்திற்காக விஜியை கட்டி கொண்டு பின்னர் மனம் ஒத்து வாழ முடியவில்லை என்றால், அவன் வாழ்க்கையும் உன் வாழ்க்கையும் கேள்வி குறியாகிவிடும். நான் அங்கு இருந்திருந்தேன் என்றால் இப்படி எல்லாம் நடக்கவே விட்டிருக்க மாட்டேன். இங்கே எனக்கும் சுகிர்தனுக்கும் எப்போதடா இந்தியா வருவோம் என்று இருக்கிறது. சுகியும் அவனது 'தீசிஸ்' எல்லாம் சீக்கிரம் முடித்து கொண்டு சில மாதங்களிலேயே இந்தியாவிற்கு ஒரு 'ஷார்ட் ட்ரிப்' அடிக்கலாமென்று தான் முனைப்பாக இருக்கிறான். நீ எதற்கும் கவலை படாதே. உனக்கு நாங்கள் அத்தனை பெரும் ஆதரவு. விஜியும் உன் விருப்பத்தை மீறி எதுவும் செய்ய மாட்டான். சும்மா பெரியப்பா.. அதான் அவன் தாத்தா சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டாதே. மனையில் வைத்து தாலியே கட்டினாலும் கட்டாய கல்யாணம் கல்யாணமே அல்ல. என் பிள்ளைகள் விஜி ஆகட்டும், சுகிர்தன் ஆகட்டும், நானாகட்டும் - நாங்கள் முற்போக்கு வாதிகள். நீ எதற்கும் பயப்படாதே. நான் விரைவில் வந்துவிடுகிறேன்" என்று மடை திறந்த வெள்ளம் போல கொட்டி தீர்த்தார். ஒரு பெரிய மழை அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

    மிதுனாவும் நளந்தன் போலவே பெரும்பாலும் 'சரி, அத்தை ', 'உம்' என்று மட்டுமே தன் உரையாடலை கொண்டு சென்றாள். ஆனால் அவளின் ஒவ்வொரு 'சரி அத்தை'க்கும் அவன் உடல் அப்படி விறைத்தது. ஸ்டியரிங் வீலை பற்றியிருந்த வலிய கரங்களில் நரம்பு புடைத்து கொண்டிருக்க அவன் அழுந்த பற்றி இருந்த இறுக்கத்தில் கை முட்டிகள் வெளுத்து கிடந்தன.

    பேசி முடித்ததும் ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு தொண்டையை செருமி , "என்ன சொல்கிறார் அத்தை?" என்றான்.

    பேச்சு முழுதும் அவன் காதில் விழுந்திருக்கும் என்பதில் மிதுனாவுக்கு சந்தேகமே இல்லை. அவன் உடல் விறைப்பும் இறுகிய குரலும் போதுமே அதை அறிய.

    பேச்சை கேட்டிருந்தும் அவன் அவளிடமே கேளாதது போல வினவியது அவளுக்கு பிடிக்கவில்லை. அவனை காயப் படுத்தும் நோக்கோடு வராத முறுவலை படாத பாடு பட்டு வரவழைத்து, "அடுத்த 'கிளை' பற்றிய விவரங்களாக இருக்கலாம்!" என்று அலட்சியமாக சொன்னாள்.

    தாடை தசை ஒரு தரம் துடிக்க அவளை வெறித்து பார்த்தவன், "அன்றைய பேச்சை விடவே மாட்டாயா? செத்த பாம்பை எத்தனை தரம் அடிப்பாய்? " என்றான்.

    செத்த பாம்பை உவமையாக அவன் சொன்னது ஏனோ அவளை வருத்தியது. மனம் மரத்துவிட்டது என்று சொல்லாமல் சொல்கிறானா? அல்லது மரத்து போகும் அளவிற்கு அடித்து விட்டாய் என்கிறானா? அவனை காயப்படுத்த சொன்னது தான். இருந்தாலும் அவன் காயம்பட்டது அவளுக்கு தாங்கவில்லை. அவனை வறுத்த ஒன்று சொல்லி, அவனை வருத்தி தானும் வருந்தி.. இந்த வீண் வேலையை விட்டொழித்தால் என்ன என்று குத்தல் பேச்சை எல்லாம் விரட்டி விடத்தான் நினைத்தாள்.

    ஆனால் நளந்தன், "வீம்புக்கு எதையும் செய்யாமல், உன் விருப்பம் எது அடுத்தவர் விருப்பம் எது என்று புரிந்து.. " என்று பழைய மாதிரி ஏதோ புத்திமதி சொல்ல தொடங்கவும், செய்த தீர்மானம் காற்றில் பறந்தது.


    "தெரியுமே.. அப்படி புரிந்து கொள்ளாவிடில் பெண்டுலம் போல ஊசலாட வேண்டியிருக்கும். அதானே?" என்று உதட்டை குவித்து அப்பாவி போல கேட்டாள்.
    அவளை ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு பாதையில் கண் பதித்தான் நளந்தன்.

    வேறு பேச்சின்றி வக்கீலை பார்த்து அவர் தந்த விவரம் பெற்று வீடு திரும்பினர். அவளுக்கும் தாத்தாவின் சொத்து என்று ஒரு வீடும், ஒரு விளை நிலமும், இன்னும் ஒரு காலி மனையும் சொந்த ஊரிலும் சுற்றுவட்டத்திலும் இருந்தது வக்கீல் சொல்லி தான் அவளுக்கே தெரிந்தது. அவர்கள் தங்கியிருந்த சின்ன வீடு மட்டும் தான் என்று தான் அன்றுவரை தன் சொத்தாக அவள் நினைத்திருந்தாள். ஆனால் தாத்தா மற்ற சொத்துக்கள் பற்றி சொல்லாததற்கும் ஒரு காரணம் இருந்தது. அவற்றில் ஏதோ வில்லங்கமாம். அது முடியும் மட்டில் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று இருந்துவிட்டார் போலும். நளந்தன் என்ன வில்லங்கம் என்று எல்லா விவரமும் கண அக்கறையாக கேட்டுக் கொண்டான். அவன் சொன்னது போல ஒரு மாதம் இந்த சொத்து சிக்கல் பிரிக்கவே ஆகிவிடும் போலே என்றே மிதுனா நினைத்தாள்.

    இன்னும் இரு வாரங்களில் சங்ககிரி செல்ல வேண்டும் என்றான் நளந்தன். அங்கு தாத்தாவின் குத்தகை நிலம் இருக்கிறதாம். அதில் அத்தனை வருவாய் இல்லாததால் தரிசாக கிடக்கும் அந்த நிலத்தை ஒரு பார்வையிட்டு வரலாம் என்றான். அங்கே ஊர் பெரிய தனக் காரரே அந்த நிலத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். குத்தகைக்கு விடுவதோ, விற்பதோ என்று அவள் முடிவு செய்து விட்டால், அதன் படி பத்திரம் தயாரித்து ரிஜிஸ்தர் செய்ய அவள் வருவது அவசியம் என்றான்.

    சொத்து பத்து என்று எதுவும் ரசிக்கவில்லை அவளுக்கு. ஆனாலும் தாத்தாவின் மருத்துவசெலவு எத்தனை லட்சம் தாண்டியதோ.. இந்த சொத்தை விற்று வரும் வரும்படியில் அணில் போல தன்னால் இயன்ற தொகையை சுகம் மருத்துவமனைக்கு ஒரு 'டொனேஷன்' போல அனுப்பலாமே என்று தோன்றியது. பணமாக இவனிடமோ, மற்ற இரு தாத்தாக்களிடமோ கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அத்தோடு மனம் வருத்தபடுவார்கள். எனவே நினைத்ததை முழுதாக சொல்லாமல்,
    "விற்பதற்கே ஏற்பாடு செய்து விடலாமே.. நான் பார்த்து என்ன செய்ய போகிறேன்?. இங்கிருந்தபடியே நீங்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்து போடுகிறேன்." என்றாள்.

    மறுத்த நளந்தன்,"அங்கிருக்கும் ரெஜிஸ்டரர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய போகிறோம். நீ நேரில் தான் வர வேண்டும். அதோடு, சுயமாக முடிவெடுக்காமல் இதென்ன பழக்கம்? இடத்தை பார்த்து முடிவு செய்." என்றான்.

    அதற்குமேல் அவளும் மறுக்கவில்லை.

    அன்றைய பொழுது மௌனத்தில் கழிந்தது. அடுத்து வந்த சில தினங்களும் பனிப்போர் தான். ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஒரு நாள் மதியம் நளந்தன் பரபரப்போடு வீடு வந்தான். கொஞ்சம் கோபம், ஏக்கம், ஆற்றாமை என்று ஒரு உணர்ச்சி குவியலாய் அவன் வந்த போது அவள் சமைத்து கொண்டிருந்தாள். வேலையாட்களை தான் தாத்தா அனுப்பி விட்டிருந்தாரே. அதன் பிறகும் ஏனோ நளந்தனும் எவரையும் வேலைக்கு அமர்த்தவில்லை. பழைய ஆட்கள் ஒருவரும் சொல்லி வைத்தார் போல தலை காட்டவில்லை. அது பற்றி கேட்கவும் மிதுனாவுக்கு வாய் எழவில்லை. வேலை செய்ய சுனங்குகிறாள் என்று சொல்வானோ என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், அவனுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்வதில் ஒரு ரகசிய சுகம் கண்டாள் அவள்.

    அதை மனம் விட்டு அவளுக்குள்ளே ஒத்து கொள்ள கூட அவளால் முடியவில்லை என்பது வேறு விஷயம். காதலும் சுயகௌரவமும் ஜென்ம விரோதிகளாமே! அவை இரண்டும் ஒன்றையொன்று விட்டேனா பார் என்று துரத்தி அடித்து கொண்டிருக்க தன் செய்கைகளின் காரண காரியங்களை ஆராய பாவம் மிதுனாவுக்கு ஏது நேரம்?!
     
    3 people like this.
    Loading...

Share This Page