1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 51

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 5, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    வீட்டை அடைந்த போது இருட்டி விட்டது. வழி நெடுக நளந்தன் ஏதோ பலத்த யோசனையில் இருந்தான். மீண்டும் எதுவும் கொட்டி விடுவானோ என்ற அச்சத்தில் மிதுனா வாயே திறக்கவில்லை.

    வீட்டில் வெளிவாயில் காவலாளி தவிர எவரையும் காணவில்லை. நளந்தனை பார்த்தவுடன் அவன் கூட திடுக்கிட்டு தான் போனான். இன்று நளந்தன் வருவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும். காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு வீட்டு சாவியை அவளிடம் கொடுத்து அனுப்பிய நளந்தன் காவலாளியிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.

    கதவு திறந்து இருவரும் மாடி ஏறினர். தன் அறைக்குள் நுழைகையில் மட்டும் அவள் பின்னோடு வந்த நளந்தன், தன் பின்னங்கழுத்தை தடவிய படி, "நேற்று போல இன்றிரவும் என்னோடு.." என்று நிறுத்தி, "ச்சு..ஒன்றுமில்லை..நீ போய் படுத்து கொள்" என்று முடித்தான். அவள் ஓரடி வைக்க என்ன நினைத்தானோ, அவனும் கூடவே வந்து, அவளது அறையின் பக்கவாட்டில் இருந்த 'அவள் அறையையும், அவன் அறையையும் இணைக்கும்' இணைப்பு கதவின் தாளை திறந்தான். அவன் பக்கம் தாளிட்டிருந்ததால் கதவு திறக்கவில்லை.

    "உனக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே? உன்னை தனியே இரவில் விட வேண்டாம் என்று நினைக்கி..றார் தாத்தா" கவனமாக உணர்ச்சி துடைத்த குரலில் சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று இணைப்பு கதவின் அவன் பக்கத்து தாள் நீக்கி கதவை திறந்து கொண்டு அவள் அறைக்கு வந்தான்.

    "முத்து வந்தவுடன் சொல்லி ஒரு திரைசீலைக்கு ஏற்பாடு செய்கிறேன். உனக்கு.. நமக்குள் ப்ரைவசியும் இருக்கும். எல்லாம் தாத்தா வரும் வரை தான். மற்றபடி தனியே இருக்க பயமில்லை..அல்லது இது பிடிக்கவில்லை.. என்றால் கதவடைத்து விடுவது உன் இஷ்டம் "

    பதிலுக்கு காத்திராது அதே கதவு வழியாகவே தன் அறைக்கும் சென்று விட்டான். பட்டும் படாமல் பேசினாலும் எதிலும் அவள் இதம் காணும் அவன்.. வேண்டாம் வேண்டாம் என்றாலும் அவள் மனதில் பட்டாக உரசினான்.. அவன் சொன்ன வார்த்தையும் போட்ட பழியும் அப்படியே இருக்க, அவனிடம் மனம் கனிவதும் பிடிக்கவில்லை. அவன் மனம் நோக பேசவும் முடியவில்லை. தீயையும் பனியையும் அவன் மாறி மாறி பொழிய, காதலிலும் கோபத்திலும் அவள் இளகியும் இறுகியும் மருக.. இந்த உணர்ச்சி அலை என்றேனும் ஓயுமா?! உள்ள உளைச்சலில் இரவின் நிசப்தம் கூட இரைச்சலானது.

    மறுநாள் எழுந்த போது தான் வீட்டில் வேலையாள் எவரும் இல்லை என்பது நினைவிற்கு வந்தது. ஓ..தாத்தா திருவிழா செல்லவிருப்பதால் மொத்தமாக எல்லாருக்கும் விடுப்பு கொடுத்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்த சம்பவங்களால் விடுப்பை அனைவருக்கும் நீட்டி விட்டார் போலும்.. எப்போது வர சொல்லி இருக்கிறாரோ தெரியவில்லை..

    குளித்து முடித்து அவளே நளந்தனுக்கும் காபி தயாரித்து எடுத்து கொண்டு வீடு முழுக்க அவனை தேடினால்.. பால்கனியில் புகை மண்டலத்துக்கு நடுவே விரலிடுக்கில் கிடந்த சிகரட்டை வெறித்தபடி வளையம் வளையமாக புகை விட்டு கொண்டிருந்தான் அவன்!

    நளந்தனின் இந்த பழக்கம் பற்றி தாத்தா வருத்தப்பட்டு கேட்டிருக்கிறாள். கண்கூடாக பார்ப்பது இதுதான் இரண்டாவது முறை. அங்கே கிராமத்தில் ஒரு தரம். இன்று மறு தரம்.. அவள் விஷயம் அவனை எத்தனை தூரம் பாதித்திருக்கிறது என்பதற்கு கட்டியம் கூறின அவன் காலடியில் கிடந்த நான்கைந்து நசுக்கப்பட்ட சிகரட் துண்டுகள். தூங்கி எழுந்தவுடன் இத்தனை சிகரட்டுகளா?! அல்லது தூங்கவேயில்லையா? சிவந்த கண்கள் ஆமாம் என்றன. தன்னால் தான் இந்த துன்பம் என்று மீண்டும் உறுத்தியது அவளுக்கு.

    வருத்தம் தெரிவித்தாலும் அதற்கும் வறுத்தெடுப்பான்! தன் மேல் கனிவும் காட்ட முடியாது, கடுமையும் காட்ட முடியாது அவன் தவிப்பது அவளுக்குப் புரியாமலில்லை. அது ஏன் என்பது தான் புரியவில்லை.. ஒரு வேளை கனிவு காட்டினால் உடும்பாக பற்றி கொள்வாளோ என்று பயப்படுகிறானா? சீசீ.. அவள் அவனை விலக தானே நினைக்கிறாள்.. ஒருவேளை அதையேனும் இவனுக்கு தெளிவு படுத்தி விட்டால்.. பின்னர் இயல்பாக இருப்பானா..

    ஏதோ பச்சாதாபத்தில் அவளுக்கு ஒவ்வொருமுறையும் ஏதாவது இதமாக செய்வதும், பின் அதை மறைக்க இல்லாத கடுமை காட்டுவதும்.. பின் அதை எண்ணி வருந்துவதுமாய்.. அவன் ஏன் அல்லாட வேண்டும்? தன் முடிவை இன்று சொல்லி விடுவது என்று அவனை நோக்கி நடந்தாள் மிதுனா.

    அவள் காலடியோசையில் தன் யோசனையில் இருந்து விடுபட்ட நளந்தன், "என்ன?" என்றான் வேண்டா வெறுப்பாக.

    "காபி"

    "தாங்க்ஸ்" என்று சம்பிரதாயமாக சொன்னவன் சிகரட்டை கீழே போட்டு ரப்பர் செருப்பணிந்த கால்களால் அதை நசுக்கி அணைத்துவிட்டு காபியை வாங்கி கொண்டான்.

    அவள் கையிலும் காபி இருப்பதை பார்த்து விட்டு, "புகை கெடுதல். உள்ளே போய் குடி" என்று மகா அக்கறையாக சொன்னான். ஊருக்கு உபதேசம்!

    அவள் நகராதிருக்கவும் பொறுமையிழந்து, "இன்னும் என்ன?" என்று எரிந்து விழ,
    ஒரு நீள மூச்செடுத்து தன்னை அமைதிபடுத்திகொண்ட மிதுனா சொல்ல வந்ததை முடிந்தவரை கோர்வையாக அழாமல் சொல்லி முடித்தாள்.




    "தாத்தா என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை. அவருக்காக அவர் சொல்வதற்கு உடனடி மறுப்பு ஏதும் சொல்ல வேண்டாமே என்று தான்.. உங்களை போல.. நானும் தலையாட்டினேன்... 'நாளையே திருமணம்' என்று ஒன்றும் அவர் சொல்லிவிடவில்லையே. அழும் குழந்தைக்கு ஒரு பலூன் போல அப்போதைக்கு உங்கள்.. நம் சம்மதம் அவருக்கு. அவ்வளவு தான்.. இதை பெரிது படுத்தாதீர்கள்.. எனக்கு உங்களை மணக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. " ஒரு மூச்செடுத்தவள், 'அடுத்த நாடகமா?' என்று அவன் இந்நேரத்திற்கு சினந்து சீறி அவளை குதறாது விடுத்ததை நம்பவும் முடியாமல் எப்போது பாய்வானோ என்ற ஒரு கலக்கத்தோடு தொடர்ந்தாள்.




    "நான் இதைக் காரணம் காட்டி உங்களிடம் உரிமை, பணம், மற்றும் நீங்கள் சொன்ன வெ.. கீழான எண்ணம்.." உதட்டை கடித்து விம்மலை விழுங்கியவள் தொடர்பு விடாது மேலே பேசினாள், ".. என்று எதற்கும் தேடி வர மாட்டேன்."




    அவன் கண்கள் கூர்மை பெற. அவன் இடையிட்டு என்ன கூறி காயப் படுத்த போகிறானோ என்று பதறிய மிதுனா, "எழுதி வேண்டுமானாலும் தருகிறேன் நளந்தன். ப்ளீஸ்" என்றாள்.




    அவனது மௌனத்தையே மேலும் பேசுவதற்கான தளமாக கொண்டு, "என் தாத்தா கை பிடித்து கொடுத்தது கூட.. அதை பெரிதாக எண்ண வேண்டாம். அவர் திருப்திக்கு சும்மா ஒரு வாய் வார்த்தைக்காக சரி என்று சொன்னதாகதான் நான் எடுத்து கொள்கிறேன்.." என்றவள் அவன் முகம் இறுக கண்டு தயங்கி மீண்டும் தொடர்ந்தாள்.




    "எத்தனையோ திருமணங்கள் மணவறை வரை வந்து நின்று போவதில்லையா? இது வெறும் பேச்சு தானே?! நாம் இருவரும் அவரவர் வழியில் போய்விடலாம். எதற்கு நீங்கள் உங்களை இப்படி போட்டு வருத்தி கொள்கிறீர்கள்? உங்கள் உலகில் எதுவும் மாறிவிட வில்லை. நீங்கள் உங்கள் விருப்பம் போல வாழ்வை அமைத்து கொள்ளுங்கள். நான் குறுக்கே என்றும் நிற்க மாட்டேன்." என்று முடித்து கலங்கிய கண்களோடு அவன் முகம் நோக்கினாள்.



    கழுத்தோர நரம்பு துடிக்க ஜன்னல் புறம் திரும்பியவன் அவளை பாராது, "வாக்குறுதி அளிப்பது, நம்பிக்கை அழிப்பது எல்லாம் எவ்வளவு இளப்பமாக, எளிதாக தெரிகிறது உனக்கு!" என்று அவள் பயந்தது போலவே அவளை வார்த்தைகளால் பந்தாடினான்.


    "உனக்கே அது பற்றி ஒன்றும் இல்லை எனும் போது.." என்று தோளைக் குலுக்கினான்.




    மிதுனா ரத்தம் கசிய பற்களை கடித்துக் கொண்டு நிற்பதை பார்த்தவன் என்ன நினைத்தானோ, "உன் ஆலோசனை வேண்டும் போது திவ்வியமாக உன்னிடம் வந்து கேட்கிறேன். இப்போது காபியை வைத்து விட்டு போ" என்றான் மெதுவாக.
     
    3 people like this.
    Loading...

Share This Page