1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 50

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 5, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    விழிப்பு தட்டிய போது எப்போது கண்ணயர்ந்தாள் என்பது கூட மிதுனாவுக்கு நினைவில்லை. 'அப்படியே ஒருக்களித்து படுத்துவிட்டேன் போல' என்று எண்ணியவள், குளிருக்கு இதமாக தன் மேல் கிடந்த கம்பளியை ஆச்சர்யமாக விலக்கினாள். போர்வை போர்த்தி கொள்ள ஸ்மரணை இருந்தால் அவள் ஏன் அப்படி குறுக்கி கொண்டு ஒருக்களித்து கிடக்க வேண்டும்? அவள் அமர்ந்தபடியே உறங்கிவிட்டதை கவனித்து நளந்தன் போர்த்தி விட்டானா? கேள்வியோடு பக்கத்து கட்டிலை பார்த்தால் அங்கே நளந்தன் இல்லை. குளியலறையும் திறந்து கிடந்தது.

    பல் துலக்கி முகம் அலம்பி மிதுனா வெளியே வர, நளந்தனும் ஒரு கையில் சாப்பாடு பொட்டலமும், மறு கையில் ஒரு 'Big Shopper' பையோடு உள்ளே வந்தான். அவள் முறுவலிக்க, அவன் அதை கண்டு கொள்ளாது உணவு பொட்டலத்தை நீட்டினான். பதில் முறுவல் எதிர்பார்த்திருந்த மிதுனா ஏமாற்றத்தை மறைத்து கொண்டு, பார்சலை வாங்கி கொண்டாள்.

    "சீக்கிரம் சாப்பிட்டு விடு."

    அவள் "நீங்கள்" என்று கேட்க வாய் திறக்க அவன் அவளை முந்தி கொண்டு, "நான் கீழேயே சாப்பிட்டு விட்டேன்." என்றான்.

    கையை ஆட்டி பேசும் போது மீண்டும் அவன் கை காயம் கண்ணில் பட தன்னால் தானே இந்த கஷ்டம் என்றிருந்தது அவளுக்கு. அவள் வசதியாக படுக்க இடம் கொடுத்து அவன் முன்னால் போய் உட்கார்ந்ததால் தானே..

    மனம் உறுத்த, "என்னால் தானே இவ்வளவு துன்பம்" என்று மிதுனா வாய் விட்டு வருந்தினாள்.

    "உன்னாலா?! விபத்தை குறிப்பிடுகிறாய் என்றால்.. அது உன் தவறல்ல. உன்னால் அல்ல." என்றான் அசட்டையாக.

    அதாவது, துன்பம் உன்னால் தான். ஆனால் விபத்தினால் ஏற்பட்ட துன்பம் உன்னால் அல்ல என்கிறான்! அவன் குத்தல் பேச்சு மனதை வருத்தினாலும் அந்த வாட்டத்தை சாமர்த்தியமாக மறைந்தது கொண்ட மிதுனா, "எனக்கு வசதியாக இடம் தர வேண்டி தானே நீங்கள் முன்னால் சென்றமர்ந்தது.." என்று மெய்யாக வருந்தினாள்.

    ஏளனமாக புருவம் உயர்த்தியவன், "இதென்ன புது கதை?! உனக்காக முன்னால் சென்றேனா?! வேடிக்கை தான். உறக்கம் பிடிக்கவில்லை. பின்னால் பேச 'ஆளின்றி' போரடித்தது. முன்னே உட்கார்ந்து டிரைவரோடு பேசிக்கொண்டு வரலாமே என்று முன்னால் போனால்.. அதற்கு இப்படி ஒரு அர்த்தமா?! நல்ல கற்பனா சக்தி உனக்கு. அடேயப்பா! " என்று கேவலமாக உதட்டை பிதுக்கினான்.

    மிக அவமானமாக உணர்ந்தாள் மிதுனா. எல்லாம் அவள் கற்பனையாமே! பின்னால் அடுத்த சீட்டில் அவள் இருந்தும் பேச 'ஆளின்றி' போரடித்ததாம். அவன் கை காயத்திலே கண் பதித்து பேசாதிருந்தாள் அவள். அதையும் கண்ணுற்றவன், அலட்சியமாக தோளை குலுக்கி, "உடலில் பட்ட காயம் தானே, எளிதில் ஆறி விடும்" என்றான்.

    மனதில் பட்ட காயம் பற்றி சூசகம் செய்கிறானாம்! அவனது ஒவ்வொரு சொல் அம்பும் குறி தவறாது அவளை தைத்தது. ராமர் கை தண்டத்தாலேயே குத்துப்பட்டு வாய் திறவாது கிடந்த தவளை போல அவளும் மௌனமாகவே துன்பம் சகித்து கொண்டாள்.

    'Bib Shopper' பையில் இருந்து ஒரு துணி கவரை எடுத்து கொண்டு குளியலறை சென்ற நளந்தன் வெளியே வந்த போது புது சட்டையும், பான்ட்டும் அணிந்திருந்தான். கையில் காலையில் அணிந்திருந்த கசங்கிய ஆடைகள்.

    'Big Shopper' பையை காட்டி, "நீயும் உடை மாற்றி கொள். இதில் உனக்கும் ஒரு புது சேலை உள்ளது. இதற்கும் வேறு காரணம் கற்பித்து விடாதேம்மா! துணி அலுங்கி நலுங்கி கிடந்தால் எனக்கு பார்க்கவும் பிடிக்காது. ஆள் பாதி ஆடை பாதி. நேற்றைய விபத்தில் என் துணியெல்லாம் ரத்த கரை. அதனால் புதிது வாங்கினேன். நீயும் கூட வருவதால் உனக்கும்..டிரைவருக்கும் சேர்த்து வாங்கினேன்." என்றான் சிறிதும் பிசிரற்ற குரலில்.

    நீயும் டிரைவரும் எனக்கு ஒன்று தான் என்று சொல்லாமல் சொன்ன அவன் சேதி அவளை தவறாது சென்றடைந்தது. பணியாளுக்கு பொங்கலுக்கு துணி எடுத்து கொடுப்பது போல பாவித்து அவன் சொன்னது அவன் ஆசைப்படியே அவளை பாதித்தது. மிதுனா மேற்கொண்டு பேச பிடிக்காமல்.. முடியாமல்.. அவனை பாராது சேலையை மட்டும் எடுத்து கொண்டு குளியலறை சென்றாள்.

    அவன் சொன்னதில் ஒன்று மட்டும் அவள் ஒத்து கொள்ள வேண்டிய விஷயம். நளந்தன் ஆடை விஷயத்தில் ரொம்பவும் பார்ப்பவன் தான். அவனை மிதுனா அலுங்கி நலுங்கிய ஆடைகளோடு பார்த்ததே இல்லை எனலாம்.. உடையில் அப்படி ஒரு நேர்த்தி அவனிடம். எந்நேரமும்! தூங்கும் போது அணியும் இரவு உடையில் இருந்து, உடற்பயிற்சியின் போது அணியும் ஆடை ஆகட்டும், இலகுவாக வீட்டில் உலவும் போது அணியும் டீ ஷர்ட், பிசினஸ் பார்ட்டியின் போது அணியும் சூட், சிநேகிதர்களோடு சுற்றும் போது அணியும் ஜீன்ஸ்.. என்று எல்லாமே ஒரு தனி கவனத்தோடு தான் அணிவான்.. பொருத்தமாக.. அவன் உடல் கட்டிற்கு பாந்தமாக .. டக் செய்யப்பட்ட சட்டையும்.. மடிப்பு கலையாத பான்ட்டும்.. கண்ணை உறுத்தாத தடிமனில் லெதர் பெல்ட்டும்.. என்று எல்லாமே கண கச்சிதமாய்.. வீட்டினுள் கூட எப்போதும் சாக்ஸ் அல்லது ரப்பர் செருப்பில் புதைந்திருக்கும் சுத்தமான கால்கள், சீராக நறுக்கப்பட்ட நகங்கள் என்று பார்க்க பளிச்சென்று இருப்பான். சில சமயம் கொஞ்சம் மடித்து விட்ட கையும், தளர்த்தப்பட்ட டையும் அவன் கம்பீரத்தை கூட்டவே செய்யும்.

    அந்த வகையில் இவ்வளவு நேரம் ரத்த கரை படிந்த சட்டையை அவன் அணிந்திருந்ததே பெரிய விஷயம் தான். அவன் காலையில் ஓடி போய் புது துணி வாங்கியது ஒத்து கொள்ள கூடிய விஷயமே. ஆனால் நீயும் டிரைவரும் எனக்கு ஒன்று என்பது போல அவன் நடந்து கொண்டதை அவளால் ஒத்து கொள்ள முடியவில்லை.

    கையில் கிடந்த புது சேலை அதற்கு ஒத்து ஊதியது. அவள் ஜாக்கட்டிற்கு பொருந்தும் நிறத்தில் அந்த சேலை இருப்பது...அது கூட தானாக அமைந்ததுதானாமா?! ஒரு குளியலிட்டு புது சேலையை கட்டி கொண்டு வந்தாள்.

    ஏதும் பேச்சின்றி அறையை காலி செய்து கீழே சென்றனர். டிரைவரும் காரை எடுத்து வந்தான். அவன் பழைய ஆடையோடு வந்தது அவள் கண்ணுக்கு தப்பவில்லை. அவள் கண்டு கொண்டாள் என்பதை கண்டு கொண்ட நளந்தனின் கருத்த முகம் மேலும் கன்றி கருத்தது. அவள் பார்வையை கவனியாதவன் போல வெளிப்புறம் தலையை திருப்பி கொண்டு பின் சீட்டிலேயே அமர்ந்தான்.

    பேச்சு துணைக்காக முன்புறம் அமர்ந்தானாம்! இப்போது பேச்சு துணை தேவை இல்லையாக்கும்?! அப்படியே பேச்சு துணைக்காக தான் நேற்று முன்புறம் சென்றான் என்றே வைத்து கொண்டாலும், அவளை தேற்ற 'மதூ' என்று அழைத்தானே.. அது?! அதற்கென்ன சித்தாந்தம் சொல்ல போகிறான்? அவளை அணைத்து ஆறுதல் படுத்தி.. அவன் ஸ்வட்டரை அவளுக்கு போர்த்தி.. அவனுக்கும் அதே குளிர் தானே? பின்னும் இரவில் அவளுக்கு கம்பளி போர்த்தி.. இதெல்லாம் ?

    ச்சு.. அவளுக்காக ஒன்று செய்தான் என்று அவள் எண்ணிவிட கூடாது என்பதில் குறியாக இருக்கிறான்.. ஏனிந்த கண்ணாமூச்சி ஆட்டம்? மிதுனாவின் கேள்வி கேள்வியாகவே இருந்தது.
     
    2 people like this.
    Loading...

Share This Page