1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 45

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 5, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    கஞ்சி போட்டது போல கண்கள் விறைக்க கல்லோ சிலையோவென சில கணம் சமைந்து நின்றாள் மிதுனா. நளந்தன் கழுத்திலிருந்து நேரே வந்து விழுந்த அந்த சங்கிலியில் விரவிகிடந்த அவன் உடல் சூடு அவளின் குருக்கத்தி போன்ற கழுத்தில் பரவி வெம்மையின் தன்மைக்கு முற்றிலும் விரோதமாக மேனியெங்கும் ஒரு குளிர் பரப்பியது. எவ்வளவோ தடுத்தும் முடியாது உயிர் வரை மெய் சிலிர்த்தது. அதை நளந்தனும் கண்ணுற்றான்!

    "அப்பனே முருகா!" என்று கந்தனை அந்த காந்தர்வ மணத்திற்கு சாட்சிக்கழைத்த பெரியவர் களைத்து கண்ணயர்ந்தார்.

    இனி அழ கண்ணீர் இல்லை என்று கைவிரித்த கண்கள் காய்ந்து கிடக்க உயிர் மரத்தது போல அசைவின்றி நின்ற மிதுனா நளந்தன் பேச்சின்றி அவளருகே இழுத்துவிட்ட நாற்காலியில் கேள்வியின்றி தொய்ந்தாள். முகமெங்கும் முத்து முத்தாக வேர்த்து கிடந்தது. ஒரு வார்த்தையும் சொல்லாது நளந்தன் மின்விசிறியை மட்டும் முழு வேகத்தில் சுழல விட்டுவிட்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்து கொண்டு வெளியே சென்றான்.

    நளந்தனின் அகன்ற தோளில் சன்னமாக அவன் கழுத்தை ஒட்டினாற் போல சட்டை காலருக்குள் இருந்து அவ்வப்போது எட்டி பார்த்து சிரிக்கும் அந்த தங்க சங்கிலி அவளின் சின்ன கழுத்தில் திட்டமாக உருண்டு கழுத்துக்கு கீழே வரை நீண்டு அவள் நெஞ்சை தொட்டு மின்னியது.

    சற்று முன் பிடிவாதமாய் பின்னோக்கி படம் ஓட்டிய மனம் கூட தற்போது நடந்தவற்றை அசை போட்டு இது ஒரு வாய் வார்த்தைக்காக போட்ட சங்கிலியா அல்லது வாழும் காலத்திற்கும் போட்ட சங்கிலியா என்று ஆராய மறுத்தது. ஆராய்ந்து அர்த்தம் கண்டுபிடித்து ஆக போவதுதான் என்ன?!

    தன் இலக்கான புறாவின் கழுத்து ஒன்றே அர்ச்சுனனின் பார்வையில் பட்டதாமே அது போல மிதுனாவின் இலக்கு அவள் தாத்தாவை காலத்தில் சென்றடைவது ஒன்றே என்கையில் எதையும் தான் எதற்கு ஆராய்வது?

    அடுத்து என்ன? என்பதொன்றே கேள்வியாய் சிந்தித்தாள் மிதுனா. கிளம்ப வேண்டும். இனியும் தள்ளி போட அவகாசமில்லை. உடனே கிளம்ப வேண்டும். மருத்துவமனை விவரம் கேட்டுக் கொண்டு.. விவரம் கூட தேவையில்லை.. மருத்துவமனை சென்றால் போதும், மேல் விவரம் அறிவது ஒன்றும் கடினமில்லை.. அதற்குள் தாத்தா கண்விழித்தால் அவரிடம் சொல்லிவிட்டு.. ம்ஹூம்.. அது சரிவராது.. அவர் உணர்ச்சிவசப்பட்டால்.. அவர் விழிப்பதற்குள் என்று கவலையோடு சுவர் கடிகாரத்தை பார்த்தவளுக்கு அப்போது தான் தாத்தாவின் அடுத்த டோஸ் மருந்து நேரமே வந்துவிட்டது உரைத்தது.

    ஒரு கடமை உணர்வோடு எழுந்தவள் பரபரவென்று உடல், உள்ள சோர்வை வலிக்க வலிக்க மனதுள் வைத்து பூட்டி 'Nebuliser' மெஷினை முன்பு போல இயங்கவிட்டாள்.
    இந்த மருந்தை கொடுத்து முடித்தவுடன் எவரிடமும் சொல்லி கொள்ளாமல் சென்றுவிட வேண்டும்.. பணம்.. ஆபத்துக்கு பாவமில்லை..தாத்தாவின் கைப்பையில் இருந்து அவசரத்திற்கு எடுத்து கொண்டு பிறகு திருப்பி அனுப்பிவிடலாம். போவதற்கு முன் இதோ இவன் போட்ட இந்த செயினையும் அவனிடமே திருப்பி விட வேண்டும். போதும் இவன் சங்காத்தம்!

    கை தன் வேலையை கவனிக்க, மனம் அதன் போக்கில் திட்டமிட்டது.



    அவன் சென்ற சில நிமிடங்களில அரைகுறை மயக்கத்தில் கிடந்த தாத்தா கண் விழித்தார். அவர் ஏதோ சொல்ல யத்தனிப்பது கண்டு, மெஷினை தற்காலிகமாக நிறுத்தினாள் மிதுனா.


    நளந்தனை தேடி சுற்றி சுழன்ற அவரது விழிகள் ஏமாற்றத்தில் சுருங்கின. "விஜி.. விஜிகண்ணா.." என்று தீன குரலில் அவர் அழைக்க மேற்கொண்டு பேச விடாது தொடர் இருமல் தடுத்தது.



    குரல் கேட்டு கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை அணைத்து குப்பை தொட்டியில் வீசி விட்டு ஓடி வந்த நளந்தன், அவர் இருமல் நிற்காதது கண்டு "கொஞ்சம் வெந்நீர்.." என்று வேலையாளை ஏவ திரும்பினான்.



    சட்டேன்று, "நான் எடுத்து வருகிறேன்" என்று வெளியேறினாள் மிதுனா. அவனிருக்கும் அறையில் ஒன்றாக நிற்க கூட பிடிக்காது தொண்டை குழி வரை வெறுப்பு முட்டியது அவளுக்கு.



    அவள் வென்னீரோடு வந்த போது தாத்தாவின் இருமல் மட்டுப்பட்டு ஏதோ ஈனஸ்வரத்தில் பேரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

    தாத்தா மன்றாடும் கண்களோடு அவளை பார்க்க, நளந்தன் ஏதும் பேசாமல் தன் செல்லை காதுக்கு கொடுத்தவாறு மீண்டும் வெளியே சென்றான்.

    தாத்தா அவள் கொடுத்த வெந்நீரை வாங்கி கொண்டு மெல்லிய குரலில், "விஜியிடம் சொல்லிஇருக்கிறேன் அம்மா.. நீ உடனே பெங்களூரு செல். உன்னிடம் மறைத்தது தவறு தான் என்று இப்போது தோன்றுகிறது.. ச்சு.. சந்தானத்தை ஓரளவிற்காவது சேதமின்றி காப்பாற்றிவிட முடியும் என்று நினைத்தோம்.. உனக்கு அந்த வேதனை தெரியாமலே இருக்கட்டும் என்று அவன் வலியுறுத்தினான்.. மன்னித்து விடம்மா.. நான் ஓரிரு நாளில் அங்கே வருகிறேன்.." என்று மூச்சிரைத்தார்.

    அவர் கைகளை சமாதானமாக அழுத்திய மிதுனா மீதம் உள்ள மருந்தை தருவதற்காக மெஷினை ஓடவிட்டாள்.


    இன்னமும் மெலிதான மூச்சிரைப்போடு தூங்கிகொண்டிருந்த தாத்தாவின் மூக்கருகே மருந்து பைப்பை ஒரு கையால் பிடித்து கொண்டு, கட்டிலில் முழங்கையை முட்டு கொடுத்த மறு கையால் வெடித்துவிடும் போல வலியால் தெறித்த தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்த அவள் தோற்றம் போன் பேசிவிட்டு தலையை கோதியபடி உள் நுழைந்த நளந்தனை என்ன செய்ததோ.. ஒரு கணம் தயங்கியவன் மெல்ல தொண்டையை கனைத்து, "நான் தரட்டுமா?" என்றான். கவனமாக உணர்ச்சி துடைத்த வெற்று குரலில் தான்.


    முகம் பாராது அவள் 'வேண்டாமென' தலையசைக்க மேலும் தயங்கியவன் மீண்டும் தொண்டையை செருமி, "பெங்களூரு போக டாக்சிக்கு சொல்லிவிட்டேன். ரயிலில் என்றால் மதியம் வரை காத்திருக்க வேண்டும்.. அதனால் தான். டாக்சி இப்பவே ரெடி. நீ தயாரானதும் சொல். ஒரு கால் போட்டால் ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு டாக்சி வந்துவிடும்" என்று நீளமாக ஒரே மூச்சில் உரைத்தான்.

    மரத்த மூளை கூட சுறுசுறுப்பானது. "நான் இப்போதே ரெடி தான். டாக்சியை வர சொல்லுங்கள். இந்த மருந்து முடிவதற்கும், டாக்சி வருவதற்கும் சரியாக இருக்கும்" என்றாள் அவசரமாக.

    அவளது பரபரப்பிற்கு நேர்மாறாக அசையாமல் நின்று அவளை விநோதமாக பார்த்தான் நளந்தன். முன் நெற்றியை மேல்நோக்கி தேய்த்து அப்படியே முடியை பின்னோக்கி கோதி விட்டவன் 'சரி' என்று மட்டும் சொல்லி வெளியே சென்றான்.

    போக ஏற்பாடும் செய்துவிட்டு , உடனே தயார் என்றதும் எதற்கு அப்படி பார்த்தான்?! ம்ஸ்..அவன் பார்வைக்கும் செய்கைக்கும் ஏன் வார்த்தைக்கும் தான் அவள் என்றைக்கு சரியான அர்த்தம் கண்டாள்?! சலித்து கொண்டாள் மிதுனா.

    ஐந்து நிமிடத்தில் டாக்சி வந்துவிடும் என்றவனிடம் இருந்து மருந்து முடிந்தும் ஒரு பத்து நிமிடத்திற்கு ஒரு தகவலும் இல்லை. முள்மேல் நிற்பவள் போல கால் மாற்றி கால் மாற்றி வாயிலிலேயே நின்று கொண்டிருந்த மிதுனா நளந்தன் வருவதை கண்டதும் ஆவலுடன் "டாக்சி வந்துவிட்டதா? நான் போகலாமா?" என்று கேட்டாள்.

    "ம்" என்று மட்டும் சொன்னவன் அவளை யோசனையாக பார்த்தான். மறுபடியும் அதே வினோத பாவம்! மளமளவென்று யோசித்து ஒரு காரணம் கண்டுபிடித்த மிதுனா விளக்கம் சொல்ல பிடிக்காவிட்டாலும் சொன்னாள்.

    "தாத்தாவிடம் சொல்லிக் கொள்ளாமல் மரியாதையின்றி கிளம்புவதாக நினைக்கிறீர்கள் போலிருக்கிறது.. மீண்டும் அவரை உணர்ச்சிவசப் படுத்த வேண்டாமே என்று தான்.." என்றாள் மரத்த குரலில்.

    "ச்சு.. அதெல்லாம் ஒன்றுமில்லை. சரி வா" என்றான் அவனும் தணிவாகவே. அப்போதும் அவன் முகபாவம் மாறவில்லை.

    அவனை தாண்டிக் கொண்டு அவள் அறையை விட்டு ஈரடி முன்செல்ல, "உன் கைப்பை கூட வேண்டாமா?" என்று தடுத்தது அவன் குரல்.

    சட்டென்று நின்ற மிதுனா அவன் அதற்குள் எடுத்து நீட்டிய அவள் கைப்பையை குழப்பத்தோடு வாங்கிக் கொண்டாள். இதை கூடவா ஒருத்தி மறப்பாள்? வெளியூர் செல்கையில் கையில் கொஞ்சமேனும் காசு வேண்டாமா? டாக்சி பெங்களூரு வரை கொண்டு செல்லும். அதன் பிறகு, மருத்துவமனை, மருந்து.. ஏன் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்க கூட காசு வேண்டுமே? இப்படியா ஒருத்தி தாத்தாவை சென்று அடைய வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து கொண்டு, அடிப்படை விஷயமான ஒன்றை மறப்பாள்?!

    அவன் முன் போல ஏளனமோ, ஆத்திரமோ காட்டாது பேசியதும், பெங்களூரு செல்ல உடனடி ஏற்பாடு செய்ததிலுமே அவள் கொஞ்சம் தணிந்திருந்தாள். உள்ளே நீறு பூத்த நெருப்பு தான். வெளி பார்வைக்கு இருவரும் கொதிநிலையை கடந்து விட்டிருந்தனர்.

    "தாத்தாவிற்கு..ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலையே மனதை அரித்துக் கொண்டிருந்ததால்.. வேறெதுவும் ஞாபகம் வரவில்லை.. தாங்க்ஸ்.." என்று சின்ன குரலில் நன்றி கூறினாள்.

    என்ன ஒரு மடத்தனம்! அர்ச்சுனன் போல மற்றது மறப்பதில் மும்முரமாக இருந்தவள் இன்னது தேவை என்பதையும் மறந்து போவது மடத்தனம் அன்றி வேறென்ன?!

    நளந்தன் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் அவன் வினோத பாவம் மறைந்து தீவிர யோசனை மட்டும் தொக்கி நின்றது. இருவரும் டாக்சியை நோக்கி விரைந்து சென்றனர். காரின் பின்கதவை நளந்தனே திறந்துவிட உள்ளே கதவோரம் அமர்ந்த மிதுனா இந்த முறை அவன் கண்ணை பார்த்து நன்றி உரைத்தாள்.


    மற்ற வகையில் மனதை ஒடித்தாலும் தாத்தாவை பார்க்க ஒரு வழி செய்தானே. அதற்கொரு நன்றி. அதன் பின் அவன் யாரோ, அவள் யாரோ!

    ஆனால் நளந்தனுக்கு ஒரு நன்றி போதுமானதாக இல்லை போலும். மேலும் ஏதோ எதிர்பார்ப்பவன் போல பார்க்கவும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..

    புரியாத பார்வையோடு அவள் "Bye.." என்று வேறு சொல்ல அவன் கழுத்து நரம்பு விடைத்தது. பதிலொன்றும் சொல்லாமல் கதவை சாத்தினான்.

    ஓர் ஐந்து பத்து நிமிடங்களுக்குள், கோபம், ஏளனம், வியப்பு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தீவிர யோசனை என ஒரு உணர்ச்சிக் கலவையாக மிதுனாவை குழப்பிய நளந்தன் காரை பின்பக்கமாக சுற்றிக் கொண்டு வந்து மறுபுறத்து பின்கதவை நிதானமாக திறந்து அவளருகே அமர்ந்து மேலும் குழப்பினான்!

    அவள் முகம் பாராமலே அவளது திகைப்பை உணர்ந்தவன் போல, "எனக்கும் பெங்களூரில் ஒரு வேலை இருக்கிறது" என்று யாரிடமோ சொல்வது போல பொதுப்படையாக விளக்கம் சொன்னான்.

    முகத்தை பார்த்து பேசவும் விருப்பம் இல்லை போலும். அவனை நெஞ்சு வரை வெறுப்பதாக சொல்லிக் கொண்ட மனதிற்கு கூட கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.

    தன் சொந்த வேலைக்காக பெங்களூரு செல்ல ஏற்பாடு செய்த வண்டியில் போனால் போகிறது என்று இவளை ஏற்றினால், தான் உட்கார நகர்ந்து இடம் கொடாமல், 'Bye' என்று மெத்தனமாக உளருகிறாளே என்று தான் அத்தனை யோசனை போலும்.. அவமானத்தில் சுருண்ட அதே மனது, பத்து நாள் திருவிழா கொண்டாட வந்தவனுக்கு ராவோடு ராவாக பெங்களூரில் சொந்த வேலை வந்துவிட்டதாமா? அல்லது தனக்கொரு துணையாக வருகிறானோ.. என்றும் சந்தேகப்பட, தன்னையே கடிந்து கொண்டாள் மிதுனா.

    நளந்தன் என்ன காரணத்திற்காக எங்கு சென்றால் அவளுக்கென்ன? அவன் அவளுக்காகவே வந்தாலும் அத்தனை அவதூறு பேச்சிற்குபின் அவளுக்கு அது ஒன்றுமேயில்லை தான்!

    வேண்டாத எண்ணங்களை ஒதுக்கி தன் தாத்தாவை மட்டுமே நினைவில் நிறுத்தி ஜன்னல் வழியே வெளுத்துக் கொண்டிருந்த வானை, அதற்கு போட்டி போல வெளிறிய முகத்தோடு வெறித்தாள் மிதுனா.
     
    3 people like this.
    Loading...

Share This Page