1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 40

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 4, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    சுபலா எண்ணி வந்ததென்ன?! இங்கே நடந்து முடிந்ததென்ன?!
    ச்சே! இந்த பத்ரியை நம்பி ஒரு காரியத்தில் இறங்கினால் அவ்வளவு தான்! சரியான மண்குதிரை! தனியே சிக்கிய ஒரு பெண்ணிடம் தன் வலிமையைக் காட்டத் துப்பில்லையே! மிதுனா மிதுனா என்று வாயைத் திறந்து கொண்டிருந்தால் போதுமா?!

    இவனுக்காக எத்தனை திட்டம் தீட்டி மிதுனாவை தனியறைக்கு அனுப்பினாள்.. தாத்தாவிடம் சாவியை பிடுங்கி, மிதுனாவை சாமர்த்தியமாக விசிறி வாங்க வெளியனுப்பி.. எல்லா அறையையும் திறந்து பார்த்து ரெண்டாவது அறையை தேர்ந்தெடுத்து, துப்புகெட்ட பத்ரியை அதற்குள் ஒளிந்து கொள்ள சொல்லி.. வாயிலை கண்காணித்து.. மிதுனா வருவதை கண்டதும் வேகவேகமாக அனைத்து அறைகளையும் முன்பு போல பூட்டி, மிதுனாவை வற்புறுத்தி அறைக்குள் சிக்க வைத்து.. ம்ஹூம்.. எங்கும் ஒரு தவறும் இல்லையே.. எல்லாம் கச்சிதமாய் தானே செய்தாள்?! உரித்த வாழைப்பழம் போல எல்லாம் செய்து கொடுத்தும் இப்படி கோட்டை விட்டுவிட்டானே!

    பத்ரிக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து தாத்தாவின் அறைக்கு ஓடி, வராத கண்ணீரை வலுக்கட்டாயமாக வரவழைத்து, கம்மிய குரலில், "பாருங்கள் தாத்தா இந்த மிதுனா செய்யும் அசிங்கத்தை.. " என்று கோள் வைத்து, அவரோடு உரையாடிக் கொண்டிருந்த சிலரின் ஆவலையும் தூண்டி அழைத்து வந்து அந்த இரண்டாவது அறையைத் தட்டினால்.. அங்கே மிதுனாவைக் கட்டியணைத்தபடி பத்ரி தானே நிற்க வேண்டும்?! விஜயன் எங்கிருந்து வந்தான்?!

    பாவம் சுபலா.. தன் மட்டி அண்ணனுக்கு இத்தனை திட்டம் போட்டு அத்தனை ஒத்திகை பார்த்தவள், இரண்டாவது அறை என்று மட்டும் சொல்லாமல், இருக்கும் நான்கு அறைகளில் வலப்புறம் இருந்து இரண்டாவதா, இடப்புறம் இருந்து இரண்டாவதா என்ற சின்ன விஷயத்தையும் விவரமாக எடுத்து சொல்லியிருந்து இருப்பாளேயானால், மூன்றாவது அறையில் பதுங்காமல் சுபலாவின் கணக்குப்படி இரண்டாவது அறையில் மிதுனாவைக் கட்டியணைத்தபடி பத்ரி தானே நின்றிருப்பான்!

    இப்போதைக்கு அவள் குழப்பம் புரிபடவும் வழியில்லை. பத்ரி தான் பின்கட்டு வழியாக ஓடி எங்கோ ஒளிந்துகொண்டானே! அவன் வந்து சொன்னால் தானே அவளுக்கு விளங்கும்!

    விடை தேடி பார்வையால் அறையைத் துழாவினாள் சுபலா. உள்ளே பத்ரி இருப்பதற்கான எந்த சாத்தியக் கூறும் காணோம். பத்ரி இந்நேரம் மிதுனாவிடம் கைமீறியிருப்பான்.. கும்பலோடு கதவைத் தட்டி, மிதுனாவும் அவனும் இருக்கும் கோலத்தைக் காட்டி, பத்ரிக்கும் மிதுனாவுக்கும் ஒரு இது.. என்று இட்டு கட்டிவிட்டால்.. மிதுனா மறுத்தாலும் அவளுக்கும் சம்மதம் தான் ஆனால் பொய் சொல்கிறாள் என்று பத்ரியும் ஒத்து ஊதினால்.. உண்மையோ பொய்யோ.. மானக்கேடு வெட்கக்கேடு என்று மிதுனாவை விரட்டியடிப்பார் தாத்தா என்று நினைத்தாளே.. இங்கானால், முதலுக்கே மோசம் போல விஜ்ஜியும் அந்த கழுதையும் தழுவிக் கொண்டு நிற்பதென்ன.. இந்த கிழம் அதுகளுக்கு கல்யாணம் பேசுவதென்ன! சுபலாவிற்கு பெரும் அதிர்ச்சி நேராமல் வேறு என்ன செய்யும்?!

    நிலைமை எல்லை மீறிப் போய்விட்டதை சுபலா உணர்ந்தாள். மிதுனாவை பேசவிட்டால் பத்ரியின் வண்டவாளம், அதனோடு சுபலாவின் சதி என அனைத்தும் தண்டவாளம் ஏறிவிடுமே.. பத்ரியை நாலு தட்டு தட்டினால் போதும்..உளறிவிடுவான்.. சிக்கி சுழன்ற கண்களில் ஒன்று தட்டுபட்டது. தாத்தா திருமணம் என்றதும் விஜயனின் முகம் போன போக்கு..மிதுனாவை அப்படி ஆறத் தழுவி நின்ற விஜிக்கு அவளுடன் திருமணம் என்பது மட்டும் எட்டிக்காயாக கசப்பதேன்? எரிச்சலும் புகைச்சலுமாக வெறிக்கிறானே.. அந்த எரிச்சலை ஊதிவிட்டால்..? ஊதிவிட்டாள்!

    நளந்தனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு கண்களை துடைத்தபடி மிதுனாவிடம் திரும்பி,
    "இப்போது திருப்தியா, மிதுனா? வந்ததிலிருந்து அப்படி அழுதாயே! நீ சொன்னது போல சரியான சமயத்தில் வந்து கதவை தட்டி கலாட்டா செய்தேன் பார்த்தாயா?! எக்காரணம் கொண்டும் உன் வாழ்வில் நான் குறுக்கிட மாட்டேன், விஜ்ஜியின் நல்வாழ்வு தான் என் குறிக்கோள் என்று இப்போதாவது நம்புகிறாயா?" என்று உருக்கமாக கூறி கண்களை மீண்டும் துடைத்துக் கொண்டாள்.

    அவள் சொல்வது எதுவும் மிதுனாவுக்கு புரியவில்லை! வந்ததிலிருந்து அழுது கொண்டுதானிருந்தாள்.. தாத்தாவின் செய்தி தெரிந்ததில் இருந்து.. ஆனால் அது பற்றி அவள் சுபலாவிடம் எதுவும் சொல்லவில்லையே! தான் சொன்னது போல வந்து இவள் கலாட்டா செய்தாளாமா?! ஏதோ சதி வலை பின்னுகிறாள் என்று மட்டும் புரிந்தது. உஷாராகி "என்ன சொல்கிறாய்?" என்று குரலை உயர்த்திக் கேட்டாள்.

    நளந்தனும் அதையே தான் கேட்டான். "என்ன உளறுகிறாய்?"

    அவன் குரலில் முதலில் மிரண்ட சுபலா முயன்று முகத்தை முன்னை விட அதிக உருக்கமாக வைத்துக் கொண்டு, "உண்மை அன்பு உளறலாகத் தான் இருக்கும்! விஜ்ஜி..நான் உங்களை எப்படி நேசித்தேன், தெரியுமா?! நீங்களும் என்னிடத்தில் அப்படித்தான் என்று நினைத்திருந்தேனே.. மிதுனா சொன்னபோது எப்படி உடைந்து போனேன் தெரியுமா? " என்று மீண்டும் புதிர் போட்டாள்.

    அதிர்ந்து போய் ஏதோ சொல்ல வாயெடுத்த மிதுனாவை ஒரு பார்வையால் அடக்கியவன், "என்ன சொன்னாள்?" என்று நம்பாத குரலில் கேட்டான்.

    "எல்லாவற்றையும் சொன்னாள். என் நெஞ்சம் உடைய உடைய சொன்னாள்" என்று இல்லாத கண்ணீரை சுண்டி விட்ட சுபலா தடையின்றி பொய்யுரைத்தாள்.

    "நீங்களும் மிதுனாவும் ஒருவரையொருவர் மனதார காதலிப்பதையும்.. தாத்தா ஒத்து கொள்வாரோ மாட்டாரோ என்று அவள் கலங்குவதையும் மறையாது சொன்னாள். உங்கள் வாழ்வில் இருந்து நான் விலக வேண்டும் என்று கூட.. அத்தோடு உங்கள் இருவர் காதலும் நிறைவேற நான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். " சொல்வது சத்தியம் என்பது போல சுபலா மிதுனாவை பார்க்க, மிதுனா "பொய்" என்று அலறினாள்.

    அவள் இடையிட்டதை சிறிதும் லட்சியம் செய்யாமல் சுபலா தொடர்ந்தாள்.
    "இப்படி நாலு பேர் பார்க்க உங்களோடு ஒட்டிக் கொண்டு தனியறையில் நின்றால் தாத்தா வேறு வழியின்றி ஒத்துக் கொள்வார் என்றும் அதற்கு நான் உதவ வேண்டும் என்று சொன்னாள்.. உங்கள் மேல் உள்ள அன்பால் என் காதலை தியாகம் செய்து சமயத்தில் கதவைத் தட்டி உங்கள் காதல் நிறைவேற உதவி செய்தால்.. மிதுனா.. என் விஜ்ஜியின் மனதில் என்னை பற்றி ஒரு நல்ல எண்ணம் நிலைப்பது கூட உனக்கு பொறுக்கவில்லையா? என் காதலையே உனக்கு பலியிட்டு உன் ஆசையாய் நிறைவேற்றிய எனக்கு நீ தரும் பரிசா இந்த பொய்க்காரி பட்டம்?!"

    மிதுனா தன் தரப்பை சொல்ல தொடங்குமுன் ஒரு பொய் கேவலுடன் அறையை விட்டு ஓடிவிட்டாள் சுபலா.

    அதிர்ச்சியில் உறைந்து நின்ற மிதுனா தன்னுணர்வு பெற்று "ஐயோ! சுத்த பொய்! இவள் பொய் சொல்கிறாள் நளந்தன்... நம்பாதீர்கள்!" என்று வீறிட்டாள்.

    "எது பொய்?!" என்றான் நளந்தன் ஒரு மாதிரி குரலில்.

    அவன் சொல்ல வருவதன் அர்த்தம் புரிந்து அதிர்ந்து நின்றாள் மிதுனா.
     
    2 people like this.
    Loading...

Share This Page