1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 37

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 3, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    நளந்தன் ஆந்திரா சென்ற தினமே தாத்தா மிதுனாவை அழைத்து திருவிழா விவரம் சொன்னார். நளந்தன் ஏற்கெனவே கோடி காட்டியிருந்ததால் அவள் எதிர்பார்த்திருந்த பேச்சு தான்.
    "நம் ஊர் திருவிழா வருகிற வாரம் வருகிறதம்மா. வருடாவருடம், பத்து நாள் ஊரே கோலாகலமாக இருக்கும்." என்றார்.
    "இந்த மாதத்தில் என்ன திருவிழா தாத்தா.. பண்டிகை போலவும் தெரியவில்லையே"
    "நம் சொந்த ஊர் தெரியுமாம்மா? சடையக் கவுண்டன் பாளையம். அங்கே எங்கள் குலதெய்வம் செல்லியம்மனுக்கு தேர் திருவிழா. ஊரில் நம்முடையது தான் பெரிய குடும்பம். நாம் தான் முன்னின்று எல்லாம் செய்ய வேண்டும். நாளை மறுநாள் எல்லாரும் கிளம்ப வேண்டும். நம்மோடு இன்னும் சில நம் நகரத்து சொந்த பந்தம் எல்லாம் சேர்ந்து நம் டிராவல்ஸ் பஸ் ஒன்றிலேயே ஒன்றாக போய்விடலாம்." என்றார் உற்சாகமாக.
    வரவில்லை என்று சொல்லவும் வழியில்லை.. தனியே அவளை எங்கு விட்டு செல்வார்? விதியே என்று சுபலாவையும் சகித்து போய் தான் வரவேண்டும்..எப்படியும் நளந்தனை கண்ணால் காணும் வாய்ப்பு கூட தன் தாத்தா ஊர் திரும்பும் வரை தானே.. இந்த திருவிழா காலத்தில் தொழில், பயணம் என்று எங்கும் செல்லாமல் பத்து நாளும் கூட இருப்பானே. மற்றது மறந்து அவன் சிரிப்பு ஒன்றை மட்டும் மனதுள் சேகரித்து வைத்தாள் என்றால் தன் தனிகாலத்தில் வைப்பு நிதி போல அவளை வாழ வைக்குமே. அசட்டுத்தனம் தான்.. ஆனால் இப்படி ஏதாவது சமாதானம் சொல்லி தானே தன்னை சமன் செய்ய முடிகிறது!

    சுபலா செவ்வாய் இரவே அழையா விருந்தாளியாக வீட்டிற்கு பெட்டி படுக்கையோடு வந்து விட்டாள்.கூட வந்தவனை வேளை மெனக்கெட்டு மிதுனவிடம் கூட்டி வந்து, "இது என் அண்ணன் பத்ரி" என்று அறிமுகப்படுத்தினாள். அவனது வீர தீர பிரதாபங்களும், சொத்து அறிக்கையும் வாசித்தாள். தேவையற்றதை விலாவரியாக பேசினால் தானே அவள் சுபலா என்று மனம் கருவியது.

    பத்ரி! நளந்தன் சந்திக்க செல்வதாக சொல்லி அடிக்கடி சொல்வானே.. ஓ தாத்தா கூட சொன்னாரே, இவள் அண்ணனோடு ஏதோ கூட்டு தொழில் என்று.. தாத்தா பிடிக்காவிட்டாலும் சுபலாவை சகித்து, 'இந்த பக்கம் தலை வைத்து படுக்காதே' என்று சொல்லாதிருப்பது ஏன் என்று ஓரளவிற்கு புரிந்தது.. இவளை பகைத்தால், நளந்தனின் தொழிலில் விவகாரமாகும்.. அதை பேரன் விரும்பமாட்டான் என்றே அடக்கி வாசிக்கிறார் போலும்.. ஆதாயத்திற்காக யாரிடமும் நளந்தன் சலாம் போட மாட்டான் என்பது அவளுக்கு நிச்சயம்.. ஆனால், அவன் நன்மதிப்பை பெற்ற சுபலாவையும், பத்ரியையும் அவன் எதற்கு நிராகரிக்கப்போகிறான்? அதிலும், அவன் விஷயத்தில் யாரும் தலையிட்டால் அவனுக்கு பிடிக்காது என்றும் ஒரு தரம் சொன்னாரே..

    தாத்தாவின் முன்னிலையில் பதவிசாக நிற்கும் பத்ரி மிதுனாவை தனிமையில் கண்டால் மதுவுண்ட மந்தியானான்! அவன் கண்கள் கண்ணியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டது. அப்படியொரு பார்வை! அது மேயும் விதமும், பாயும் இடமும்.. அருவருப்பாக இருந்தது. கூடுமானவரை அவனை தவிர்த்தாள் மிதுனா. அவனுக்கு சுபலாவே பரவாயில்லை என்றிருந்தது. சுபலாவிடம் காதை மட்டும் மூடிக் கொண்டால் போதும். நல்லவேளையாக சுபலாவும் நல்லபடியாகவே பேசினாள்! தன் வழமையான குத்தல் பேச்சை குத்தகைக்கு விட்டுவிட்டாள் போலும்! ரொம்பவும் சுமுகமாக பழகினாள். இது புலியின் பதுங்கலா? இவள பாம்பா, பழுதா?!

    சுபலா சுமுகமாக பேசுவதும் சமயத்தில் இடைஞ்சலாகத் தான் இருந்தது. பின்னே.. பேச்சு முழுவதும் நளந்தனை சுற்றியே இருந்தால்? மிதுனா நளந்தனின் பேச்செடுத்தாலே முகம் சுருங்க சுருங்க, சுபலாவின் குறுகுறுப்பு அதிகரித்தது போலும்.. மிதுனாவின் வாயைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தாள்.

    காதை சுற்றி மூக்கை தொட்டு ஒன்றும் ஆகவில்லை, ஒரு விஷயமும் பெயரவில்லை என்றானதும், ஒரு முறை நேரிடையாக கேட்டாள்.

    "விஜி காதல் கடலில் தொபுகடீர் என்று விழுந்து விட்டார், தெரியுமா?" என்று ஆழம் பார்த்தாள். அரைத்த மாவை அரைப்பது போல.. சுற்றி சுற்றி இதையே தானே ஒவ்வொரு முறையும் சொல்கிறாள். சலிப்பாக மிதுனா பார்க்க, "உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா? நீ ஒரு நல்ல சினேகிதி என்று சொல்வாரே" என்று பேச்சினூடே சுபலா, நீ அவனுக்கு சினேகிதி மட்டும் தான் என்று பொடி வைத்தாள்.

    "எனக்கு வேறு வேலை இருக்கிறது" என்று பட்டு கத்தரித்தார் போல சொல்லி நகர்ந்தாள் மிதுனா.

    ஒரு வழியாக எல்லா உறவினர்களும் வீட்டில் வந்து குவிய, கிராமத்து பெரிய வீட்டிற்கு திட்டமிட்டபடி புதனன்று சென்றடைந்தனர். கிராம வீடும் மாளிகை போல தான் இருந்தது. பூர்விக பங்களா போலும். வெளிப் பார்வைக்கு ஒன்று போல் தெரியும் பங்களா உட்புறம் ஒரே அமைப்பை கொண்ட இரு பகுதிகளாக பிரிந்து சென்றது. சுந்தரம் தாத்தாவுக்கும் அவர் தம்பி ராமசாமி தாத்தாவிற்கும் ஆளுக்கொரு பகுதி. தாத்தாவின் தம்பி பரம்பரை கிராமத்திலேயே தங்கி விட, சுந்தரம் மட்டும் தொழில் நிமித்தம் நகரம் வந்துவிட்டாராம். தம்பியினது கூட்டு குடும்பம். பண்டிகை காலங்களில் சுந்தரமும் வந்து சேர்ந்து கொள்ள வீடே களை கட்டுமாம்.

    தாத்தாவின் பகுதி அறைகளை விசேஷ தினங்களில் இடம் நிறைய தேவைப்படும் போது உபயோகிப்பார்களாம். மற்ற நேரங்களில் பெரும்பாலும் பூட்டி கிடைக்குமாம். வீட்டு பராமரிப்பு எல்லாம் தம்பி குடும்பம் தான். விகல்பமின்றி வித்தியாசமின்றி அனைவரும் பழகினர்.

    தாத்தாவிற்கு ஊரில் பெரிய மரியாதை இருந்தது. குடியானவர்கள் அவரை கண்டதும் கக்கத்தில் துண்டை திணித்து "வணக்கமுங்க, கவுண்டரே" என்றனர்.

    தாத்தா முற்றத்திற்கு வந்தவுடன் ஒரு வெள்ளை சேலை பாட்டி, "ஏங்கண்ணு சாரதா, அங்கவென்ன பண்றே? பெரிய கவுண்டருக்கு அந்த ஊசல கொண்டாந்து மாட்ட சொல்லு தாயி." என்றார் வாஞ்சையாக.

    வீட்டுப் பெண்கள் எல்லாரும் மாவிளக்கு போடுவதும், பூஜை சாமான்களை விலக்கி துடைப்பதுமாக இருந்தனர். பின் கொசுவம் வைத்து பட்டு சேலை சரசரக்க, கழுத்து நிறைய ஆரம், காசு மாலை தக தகக்க, எட்டணா பொட்டோடு, பரபரப்பாக அந்த பெண்கள் திருவிழாவிற்கு ஆவன செய்து கொண்டிருந்தனர். மாலையில் கோவிலில் ஒரு பூஜை அதன் பிறகு அதிகாலையில் திருவிழா ஆரம்பம்.

    "என்னப்பா, விசியன் வரலயாக்கும்?" என்றார் ஒரு பெரியவர்.

    "அவன் ராத்திரி வருவானப்பா." என்றார் தாத்தா.

    பரஸ்பர அறிமுகத்திற்கு பின் தாத்தா மிதுனாவை அவர்கள் பகுதிக்கு அழைத்து சென்றார். நடுவில் ஒரு பெரிய முற்றம் இருக்க இரு மருங்கிலும் விசாலமாக நான்கு அறைகள் என மொத்தம் எட்டு அறைகள் இருந்தன. அவை தவிர்த்து பெரிய சமையல் அறை, வெளி ஹால் , கொள்ளை என பரந்து விரிந்தது வீடு. முற்றத்தை சுற்றி பனை மரம் போல் கல் தூண்கள் சீரான இடைவெளியில் மேல் கூரையை தாங்கி கம்பீரமாய் நின்றன.

    முற்றத்தின் வலப் பக்கம் கூட்டிச் சென்ற தாத்தா தன் கையில் இருந்த கொத்து சாவியை நீட்டினார். அவர்களை பின்னோடு தொடர்ந்து வந்த சுபலா சட்டென்று அவரிடமிருந்து அதை பறித்தாள்.
    "போன தடவை போலவே இந்த முறையும் எல்லாம் சரியாக சுத்தமாக இருக்கிறதா என்று நானே சரி பார்த்து ஒழித்து வைக்கிறேன், தாத்தா. நீங்கள் கவலையின்றி சின்ன தாத்தாவோடு பேசிக் கொண்டிருங்கள் " என்றாள் அவசரமாக.

    "இல்லம்மா.. உனக்கு ஏன் வீண் சிரமம் " என்று தட்டிக் கழிக்க பார்த்தவரை தடுத்து, "அதெல்லாம் ஒன்றும் சிரமமில்லை தாத்தா. போன திருவிழாவின் போது நான் தானே எல்லாம் செய்தேன். உங்கள் அறை இடப்புறம். விஜித்தான் வலப்புறம். சரிதானா, தாத்தா?" என்று உரிமையை நிலைநாட்டினாள்.

    "சரிதானம்மா" என்று வேறு வழியின்றி தாத்தா திரும்ப, "மிதுனா, ஒரு ஐந்து ஆறு ஓலை விசிறி மட்டும் 'என்' சின்ன பாட்டியிடம் சொல்லி வாங்கி வருகிறாயா? அறைக்கு ஒன்றாக வைத்து விட்டால் 'கரண்ட்' போனால் உபயோகமாக இருக்கும். போன தடவை பேப்பரில் விசிறிக் கொண்டு இருட்டில் அல்லாடினோமே.. நினைவிருக்கிறதா தாத்தா?" என்று வினயமாக கேட்டாள்.

    நான் உரிமைக்காரி. என் பாட்டியிடம் வாங்கி வா.. நான் ஒவ்வொரு திருவிழாவிற்கும் வருவேன்.. நீ விருந்தாடி என்று வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் வைத்து தைத்தாள் சுபலா.

    ஆனால் "ஆமாம்மா, மிதுனா. சுபலா சொல்வதும் சரி தான். என்னோடு வா. நானே எடுத்து தர சொல்கிறேன். அப்படியே என் தம்பி வீட்டாரோடு நீயும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்" என்று தாத்தா மிதுனாவை அழைத்துச் செல்ல சுபலாவின் முகத்தில் ஈயாடவில்லை. தன் உரிமையை நிலை நாட்ட எடுத்துக் கட்டி செய்வது போல பாவ்லா செய்தால்.. தன்னை வேலைக்காரி ஆக்கிவிட்டு வீட்டு மனிதர்களோடு கொஞ்சி குலவ அவளை அழைத்துச் செல்கிறதே இந்த கிழம்! இருக்கட்டும். எத்தனை நாள் என்று நானும் பார்க்கத் தானே போகிறேன்.. கறுவினாள் சுபலா.

    இந்த மிதுனாவை இத்தனை நாள் விட்டு வைத்தது அவள் தவறு. இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்த பத்ரி எங்கு போனான் சமயம் பார்த்து.. சுபலா பொறுமையிழக்க, பத்ரியின் நல்ல காலம், அவள் மேலும் கொதிக்குமுன் அங்கு வந்து சேர்ந்தான்.

    வந்தவனிடம் சாவிக் கொத்தை கொடுத்தவள், "சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா பத்ரி? இரண்டாவது அறை. ஞாபகம் வைத்து கொள். சும்மா அவளைப் பார்த்து சப்பு கொட்டிக் கொண்டிருந்தால் பத்தாது.. சொன்னபடி செய். இந்த முறை கோட்டை விட்டாயானால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. ஜாக்கிரதை. நான் வாயில் பக்கம் யாரும் வருகிறார்களா என்று கண்காணிக்கிறேன். நீ பூட்டு சாவியை வெளியே தொங்கவிட்டு விடு. நான் வந்து பூட்டிக் கொள்கிறேன்." என்று ஒரு வாரமாக திட்டமிட்டதை இன்னும் ஒரு முறையாக அவனோடு ஒத்திகை பார்த்தாள். பின்னே, இந்த மக்கு பத்ரியை வைத்துக் கொண்டு நேரிடையாகவா காரியத்தில் இறங்க முடியும்? இது தவறினால் இன்னொன்று என்பதற்கும் அவகாசம் இல்லையே.. விஜி இன்றிரவு வருவதற்குள்ளாக காரியத்தை கச்சிதமாக முடிக்க வேண்டுமே!


    தாத்தாவைப் போலவே மிதுனாவை அவரது சொந்த பந்தங்களும் பாந்தமாகவே நடத்தினர். விருந்துபசாரத்திற்கு இவர்கள் இனம் பெயர் போனதாயிற்றே. விழுந்து விழுந்து அவளை கவனித்தனர். "அட சாப்பிடு கண்ணு. வளர்ற பொண்ணு. இன்னும் விரல் கடை உடம்ப வச்சுக்கிட்டு! நல்லா சாப்பிட்டு தென்பா திடகாத்திரமா இருந்தாத்தானே நாள பின்ன, நாலு புள்ள பெத்து போட முடியும்?!" ஒரு ரவிக்கையணியாத பாட்டி வெற்றிலையை கதக்கியபடி சொல்ல, காலை நீட்டி போட்டு மத்தில் லாவகமாக தயிர் சிலுப்பிக் கொண்டிருந்த அவரது மருமகள் கொல்லென்று சிரித்து,
    "அத்தே, அவுக டவுன்காரவுக. நம்பளாட்டமா? கொமரியானதும் கட்டி கொடுத்து, கட்டி கொடுத்ததும் புள்ள பெத்து, அது காது குத்துல மருக்கா வயித்த தள்ளிகிட்டு மனையில உக்கார? மெதுவா தான் கட்டிக்குவாக, அளவாத்தான் பெத்துக்குவாக" என்றாள்.


    "அடி, வகைக்கு ஒண்ணாவது பெத்துக்க தென்பு வேணாமா? ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணு. என்ன கண்ணு நான் சொல்றது? நம்ப விசியனாட்டம் ஒண்ணோடு நின்னு போவாம. " பாட்டி வாதிட்டார்.


    "ஆமா..விசிக்கே புள்ள பொறக்கிற வயசாகிடுச்சு.. இப்ப போயி அது ஒண்டியா போயிட்டத பேசிக்கிட்டு.. ஏன் தாத்தா விசியண்ணன் எப்போ கண்ணாலங் கட்டிக்கிட போறாராம்? நம்ப சனத்துல ஒண்ணு பாக்கலாமில்ல?"


    "எதுக்கு பாத்துகிட்டு.. அதான் நம்ப சுவலா இருக்கறாவில்ல?"


    "தலைவலி, தாத்தா.. நான் போகட்டுமா?" என்று மெதுவாக சொன்னாள் மிதுனா.


    "இரும்மா" என்றவர், "எலே தங்கவேலு.. ஒரு அஞ்சாறு ஓலை விசிறியை இந்த புள்ளகிட்ட குடுடா ராஜா" என்று விசிறிக்கு ஏற்பாடு செய்தார்.


    "நீ போ தாயி. நானும் சின்னவனும் பருத்தி காடு வரை போகிறோம். வர ஒரு மணி நேரம் ஆகும். இந்தா என் கைப்பை. இதை என் அறையில் வைத்து விடு,.வரட்டுமா?" என்று அவளோடு அவரும் எழுந்து கொண்டார்.


    அவர் சென்ற ஓரிரு நிமிடங்களில் விசிறிகளும் வந்து விட, தாத்தாவின் கைப்பையையும் எடுத்து கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் பகுதியின் முற்றத்திற்கு வந்து சேர்ந்தாள் மிதுனா. சுபலா நளந்தனின் முறை பெண் என்னும் நிலை சொந்தத்தின் அடிப்படையில் மட்டும் நில்லாது சொந்தமாக்கிக் கொள்ளும் முறையிலும் முன்னேறுவது கலக்கமாக இருந்தது.


    சிந்தித்தபடி மிதுனா வலப்பக்க அறை நோக்கி நகர, தாத்தாவின் கைப்பையில் கிடந்து அலறியது அவரின் செல். அடடா..செல்லை பையிலேயே மறந்து விட்டு விட்டாரே.. இந்நேரம் காட்டிற்கு போயிருப்பார்.. நாமே பேசி விஷயத்தை அவருக்கு சொல்லிவிடலாம் என்று நினைத்து செல்லை முடுக்கி, "ஹலோ" என்றாள் மிதுனா.


    அடுத்து அவள் தலையில் மின்னாமல் முழங்காமல் பேரிடி ஒன்று இறங்கியது!
     
    2 people like this.
    Loading...

  2. Bagiya

    Bagiya New IL'ite

    Messages:
    98
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Mstrue,

    Very nice story, this is my first non historical story.

    I am totally into it. Its really breath taking :)

    Keep your good work going :thumbsup

    waiting for the next episode.
     
  3. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi,

    Very interesting.

    I am waiting for the next episode.

    Please post.
     
  4. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi MStrue,

    Very nice. Read all. Witing for next episode.
     
  5. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    :eek:mg: Bhagya, Kala & Priya!
    You read all 10 parts in one sitting. I just uploaded few hrs back!
    "Yaanai pasikku sola pori maathiri - yaa?!" :biglaugh

    Sure shall update more parts ASAP. Thanks for your interest. :)
     
  6. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    ஏனுங்கோவ் இது உங்களுக்கே அநியாயமா தெரியலீங்களா? மின்னலுங்கறீங்க இடிங்கறீங்க ஆனா என்னனு சொல்லாமே...ரொம்ப கஷ்டமா இருக்குதுங்கோவ்.

    Sat, sun எல்லாம் next parts க்கு தேடி தேடி இன்று எல்லா parts ம் படிச்சிட்டு ஆவலுடன் waiting.

    -DDC
     
  7. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Thats funny you wrote in Gounder dialect.. :rotfl
    Unga ellarukkaagavum, itho aduththa part.
     
  8. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi,

    This is really solappori.

    Your story and style make us finish all the ten episodes in one sitting.

    Thool kilappureenga.


    :thumbsup
     
  9. Bagiya

    Bagiya New IL'ite

    Messages:
    98
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Mstrue

    Just one :roll: :-(, waiting for more
     

Share This Page