1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 29

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 3, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    அன்று முதல் ஒரு கவனத்தோடு நடந்துகொண்டாள் மிதுனா. சுகிர்தனிடம் பேசும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொண்டாள். நளந்தனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ..அதற்காக என்றில்லை..அவளுக்கேப் பிடிக்கவில்லை. சுகிர்தன் நல்லவன் தான். பண்பானவனும் கூட. ஆனால் அவனிடம் மனம் ஒட்டாத போது, அவன் மனதில் வீண் ஆசைகளை கிளப்பிவிடுவது ..அதிலும் தெரிந்தே கிளப்பிவிடுவது மகா பாவமில்லையா?!

    சுகிர்தனை தவிர்ப்பது அப்படியொன்றும் முடியாத காரியமாகவும் இல்லை. அவன் வீட்டில் இருந்தால் தானே அந்த கஷ்டம்?! என்னவோ நளந்தன் அவனைக் கூட்டிக் கொண்டு அப்படி வெளியே சுற்றினான்! உணவு கூட காலை சிற்றுண்டி தவிர பிற வேளைகளில் வெளியிலேயே முடித்துக் கொண்டனர். காலை உணவை மிதுனா தாமதமாக எழுந்துவிட்டது போல..அல்லது பசியில்லை என்று தவிர்த்துவிடுவாள். இளைஞர்கள் இருவரும் அதிகாலையில் கிளம்பிவிடுவதால், சுகுனம்மாவும் சில தினங்களுக்கு பிறகு மிதுனா எழும் வேளையிலேயே எழுந்து அவளோடு உணவுண்டார்.

    மாலை அவர்கள் சீக்கிரம் வந்துவிட்டாலோ இவள் கோவிலுக்கு கிளம்பிவிடுவாள். சுகுனம்மாவுக்கு கோயில் குளம் என்று அவ்வளவு நாட்டம் இல்லையாதலால் அவர் வர மாட்டார். கோவிலின் தனிமை அவளுக்கும் இதமாக இருக்கும். அப்படியும் ஒருதரம் சுகிர்தன் தானே அவளை கோவிலில் கொண்டுவிடுவதாக முன்வந்தான். அவள் முடிவாக மறுத்து, பிடிவாதமாகத் தனியே கிளம்பிவிட்டாள். அருகிருந்த நளந்தன் வெறுமனே இவர்கள் வாதத்தை யாருக்கு வைத்த விருந்தோ என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்! அதன் பிறகு சுகிர்தன் அவளை வற்புறுத்தவில்லை.

    நளந்தன் கூட முன்பு போல முறுவலித்தான். காரணமின்றி வந்த கோபம் காரணமின்றி போய்விட்டது போலும் என்று மனதுள் சிரித்துக் கொண்டாள் மிதுனா. ஆனாலும் ஒருவன் காரணமின்றி அப்படிக் கோபித்துக் கொள்வானா?! என்னவோ! பிறகொரு நாள் சந்தர்ப்பம் வாய்த்தால் அவனையே காரணம் கேட்கவேண்டும்.

    இடையில் அவள் தாத்தாவிடமிருந்து முன்பு போலவே நளந்தன் வாயிலாக ஒரு கடிதம் வந்தது. அதே பயணக் கட்டுரை தான். திரும்பி வரும் நாள் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. ஒரு பெருமூச்சுடன் அதை மடித்து வைத்தாள்.

    சுகுனம்மா வந்து அன்றோடு இரு வாரங்கள் ஆகிவிட்டன. அதிசயமாக அன்று நளந்தனும், சுகிர்தனும் வெளியே கிளம்பாமல் சுகுனம்மாவோடு சேர்ந்து சிற்றுண்டி சாப்பிட வந்தனர். வேறு வழியின்றி மிதுனாவும் அவர்களோடு வந்தமர்ந்தாள்.

    சுகுனம்மா சுகிர்தனின் 'Lab' பற்றி பேச்செடுத்தார்.
    "என்னடா பசங்களா?! தினமும் அப்படி ஓடி ஓடிப் போகிறீர்கள்.. நிலம் முடிவானதா இல்லையா? ஒன்றும் மூச்சுகூட விடாமல்..ம்ம்?! நாங்கள் எல்லாம் எப்போது இடத்தைப் பார்ப்பது?!"

    அவர்கள் இருவரும் ஒரு சங்கேத சிரிப்பு சிரித்தனர்.

    சுகிர்தன் நளந்தனைப் பார்த்து, "சொல்லிடலாமா, விஜய்?" என்றான்.

    "சொல்லடா, அவனை என்ன கேள்வி?"

    மறுபடியும் சிரித்த சுகிர்தன், "இன்று ரிஜிஸ்டிரேஷன்மா.இருங்கள்..இருங்கள்.. என்ன சொல்லப் போகிறீர்கள் என்று தெரியும் .நல்ல நேரம் எல்லாம் பார்த்தாயிற்று. இன்று பதினோரு மணிக்கு ரிஜிஸ்டிரேஷன். ஒரு சர்ப்ப்ரைசாக இருக்கட்டும் என்று இருந்தோம்..
    அதற்குள் இப்படிக் காதைத் திருகி கேட்கவும் போட்டு உடைத்துவிட்டோம்" என்றான்.

    "உடைத்துவிட்டேன் என்று சொல். அவசரக்குடுக்கை" என்று குட்டு வைத்தான் நளந்தன்.

    "விஜியிடம் ஒன்று சொன்னால் அந்த விஷயம் முடிந்த மாதிரி"
    சிலாகித்தார் சுகுனாம்மா.

    "கை காட்டியது மட்டும் தான் அவன். ஓடி ஓடி இடத்தையும் ஆளையும் பார்த்தது நான். பாராட்டு அவனுக்கா? " என்று பொய்யாக வருத்தம் காட்டிய சுகிர்தன்,
    "கிளம்புங்கம்மா. இப்பவே நேரம் ஆகிவிட்டது. விஜய்க்கு வேற கமிட்மென்ட்." என்று அவனைப் பார்த்து கண் சிமிட்டி, "அதனால் நாம் மூவர் மட்டும் தான் பத்திரப் பதிவிற்கு செல்கிறோம்." என்றவன்,
    "முதலில் ரிஜிஸ்டிரேஷன், அப்புறம் ஹோட்டல்-இல் சாப்பாடு, அப்புறம் இடம் பார்க்க போகிறோம் அதற்கு பிறகு இதைக் கொண்டாட சினிமா" என்று திட்டம் போட்டான்.
    மூவரா?! ஹோட்டல், சினிமா.. இதை எப்படி தவிர்ப்பது என்று வேகமாக யோசித்தாள் மிதுனா.

    "ஆமாம்மா. நீ சீக்கிரம் கிளம்பு. நான் இதோ மாமாவிடம் சொல்லிவிட்டு வருகிறேன் " என்று அவள் வருவதாகவே முடிவு செய்து சுகுனம்மா சுந்தரம் அறை நோக்கி சென்றார்.

    மிதுனாவின் விருப்பமின்மை அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது. ஆனால் அவள் முகம் பார்க்க தான் சுகுனம்மாவுக்கும் சுகிர்தனுக்கும் தோன்றவில்லை. அவள் மறுப்பாள் என்ற எண்ணம் இருந்தால் தானே முகத்தைக் கூர்ந்து பார்க்க தோன்றும்?! அவ்வளவு நிச்சயம். நிலப் பதிவு சந்தோஷமான விஷயம் தான். ஆனால் அதை ஒட்டி வெளியே செல்வது..சினிமா இதெல்லாம் தான் அவளுக்கு தயக்கம்.

    சுகிர்தன் தன் செல்லில் ஏதோ தட்டிக் கொண்டிருக்க மிதுனா எப்படியும் மறுத்துவிடுவது என்று முடிவு செய்து, "நான் எதற்கு.? நான் வரவில்லை" என்றாள்.

    "நீ இல்லாமலா?! ம்ஹூம்...நீ கண்டிப்பாக வரவேண்டும். கிளம்பு , ஜல்தி. அப்புறம் என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டீர்களா என்று என்னிடம் குறை கூறக் கூடாது " என்றான் ஏக உரிமையாக!

    அவள் முகம் பெரிதும் மாறிப் போனது. அவள் ஏன் அவனிடம் அப்படி குறை கூறப் போகிறாள்?!
    அவளையும் அவனையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்த நளந்தன், "வருவாள். வருவாள். ஆனால் ரிஜிஸ்டிரேஷன் முடிய நேரமானாலும் ஆகும். இங்கு தாத்தாவிற்கும் துணை வேண்டும். இடம் பார்க்க போகும் போது அவள் அங்கிருக்க ஏற்பாடு செய்கிறேன். நடராஜுக்கு எடுத்துப் போக பத்திரம் சரி பார்க்க வேண்டும் என்றாயே, பார்க்கலாமா?" என்று இடையிட்டான்.

    அவள் எப்படியும் வரப் போகிறாள் என்றதும் திருப்தியான சுகிர்தன், கவனம் முழுவதும் பத்திர விஷயத்தில் பதிய, நளந்தனோடு அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

    அப்போதைக்கு பிரச்சினை முடிந்தது. ஆனால் மாலையில் மற்ற எல்லா இடத்திற்கும் சுகிர்தன் சொன்னது போல செல்ல வேண்டுமே! வருவாள் என்று நளந்தன் அவளை மதியாது உத்தரவாதம் அளித்ததும் எரிச்சலாக இருந்தது.

    அத்தையம்மாளை எப்படி சமாளித்தானோ நளந்தன், சுகுனம்மா விடைபெறுகையில், "வரேம்மா" என்றுமட்டும் புன்னகை வாடாமல் சொல்லிச் சென்றார்.

    வர ஏற்பாடு செய்வதாக சொன்ன நளந்தன் அது என்ன மகா ஏற்பாடு என்று அவளிடம் ஏதும் சொல்லிச் செல்லவில்லை. அவனுக்கும் வேறு ஏதோ 'கமிட்மென்ட்' என்று சுகிர்தன் சொன்னானே.. அதனால் அவன் வந்து அழைத்துச் செல்வான் என்றும் நினைப்பதற்கில்லை. ஒரு வேலை கண் துடைப்பிற்காக வருவாள் ஏற்பாடு செய்கிறேன்..என்று சொல்லியிருக்கவேண்டும். ஆனால்..நளந்தன் அப்படி பெயருக்கு பேசுபவன் அல்லவே..

    சரி, அப்படியே யாரையாவது அனுப்பி அவர்களோடு வா என்று சொன்னாலும், தலை வலிக்கிறது என்று ஏதேனும் சாக்கு சொல்லி தவிர்த்துவிட வேண்டும் என்று திண்ணமாக முடிவு செய்தாள் மிதுனா.

    மாலை நெருங்க நெருங்க..சுகிர்தன் கண் சிமிட்டி சொன்ன 'கமிட்மென்ட்' அவளைக் குத்திக் குடைந்தது. அப்படி என்ன 'கமிட்மென்ட்'? மாலை வேளையில்? அந்த செரீனா போல ஒருத்தியோடா? அல்லது..சுபலா.. தன்னையறியாமல் கையில் கிடைத்த காகிதத்தை எண்ணப் போக்கில் கசக்கிக் கொண்டு தன் அறை நிலைப் படியில் நோக்கின்றி நின்றிருந்தவள், திடுமென நளந்தன் எதிரே வரக் கண்டு திகைத்தாள்! எப்போது வந்தான்? அதைக் கூட உணராமல்..

    இனிய முறுவல் பூத்த நளந்தன்,
    "போனால் போகிறது , விடு" என்று சாவதானமாக கூறி அவளைத் தொட்டு நகர்த்தி தன் வலுவான கைகளை பான்ட் பாக்கட்டில் திணித்துக் கொண்டு அறையில் கிடந்த மேஜை மேல் இலகுவாக சாய்ந்து நின்றான.

    அவன் தொடுகையில் சிலிர்த்து அவனைத் தொடர்ந்து உள்ளே வந்தவள் அவன் சொன்னது புரியாமல் விழித்தாள்.

    "என்ன?..எதை விட வேண்டும்?.." அவள் திணறலை எப்போதும் போல ரசித்தவன், அவள் கையில் கிடந்த காகிதத்தைக் காட்டி,
    "அது தான், யார் மேலோ ரொம்ப கோபமாக இந்த காகிதத்தை அப்படிக் கசக்கிக் கொண்டு நின்றாயே..அதுதான் போகட்டும் விடு என்றேன்"
    உதட்டோரம் துடிக்க, கண்கள் சிரிக்க உரைத்தான்.

    வெகு நாட்களுக்குப் பின் இப்படி சிரிக்கிறான்! எப்படியெல்லாம் அவளிடம் காய்ந்தான்!நேற்று வரை என்ன தவறு செய்தாள் அவள்? இன்று மட்டும் எப்படி எதை நேர் செய்தாளாம்?! பதிலற்ற கேள்வி! எனினும் மனம் துள்ளாட்டம் போட்டது. அவள் நந்தன் சிரிக்கிறானே!

    "ச்சு..போங்கள்! உங்களுக்கு எப்போதும் கிண்டல் தான்" என்றபடி காகிதத்தை குப்பைத் தொட்டியில் போட்டாள்.

    "ம்ம்.. போகத் தானே வந்தேன்"

    மீண்டும் புரியாது அவள் விழிக்க, "உன்னை கூட்டிப் போகத் தானே வந்தேன் என்றேன். இந்த உடையே நன்றாகத் தான் இருக்கிறது. கிளம்பு போகலாம்" என்றான் அவளை விழுங்கி விடுவான் போல பார்த்து.

    காது மடல் சிவக்க, மிதுனா மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
    இவனோடு போவது நன்றாகத் தானிருக்கும்.. ஆனால், அங்கே சுகிர்தனும் இருப்பானே. கூடவே அவனது தாயார். மென்மேலும் அவர்களுக்கு வீண் கற்பனையை உண்டு பண்ண அவள் மனம் கேட்கவில்லை. எல்லாருக்கும் துன்பம் தானே அது..

    "உங்களுக்கு வேறு வேலை இருப்பதாக சொன்னீர்களே.." என்று தட்டிக் கழிக்கப் பார்த்தாள்.

    இலகுவாக தன் பாணியிலேயே, "இல்லையே..சொல்லவில்லையே.." என்றான் நளந்தன்.

    "சுகிர்தன் சொன்னாரே..உங்களுக்கு வேறு 'கமிட்மென்ட்' இருப்பதாக.." அவள் ஒரு வேகத்துடன் வாதிட , "நான் அப்படி சொல்லவில்லையே" என்று மறுபடியும் சிரித்தான் அவன்.

    அவன் சிரிப்பில் லயித்த மிதுனா தானும் மனம் விட்டு கலகலவென்று தெற்றுப் பல் அழகாக தெரிய சிரித்தாள். அவள் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தவன் விடாக்கண்டனாக, "போகலாமா? " என்றான்.
     
    2 people like this.
    Loading...

Share This Page