1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 26

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, Apr 30, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    [​IMG]


    வீட்டை அடைந்ததும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் அறைக்கு ஓடத்தான் மிதுனாவுக்கு விருப்பம். ஆனாலும் ஒரு மரியாதைக்காக அந்த பெண்ணும் இறங்கி வர தாமதித்தாள். மூவருமாக உள்ளே செல்ல, நளந்தன் தாத்தாவின் அறை நோக்கி நடந்தான். அவனை ஒட்டிக் கொண்டு அந்த பெண்.

    ஓரடி விட்டு மிதுனாவும் பின்தொடர்ந்தாள். உள்ளே சென்ற நளந்தன், "மிதுனா, இவள் சுபலா, என்.." என்று அறிமுகம் செய்ய முற்பட, அந்த சுபலா அவனை மேற்கொண்டு பேச விடவில்லை. என்னவோ அவனது அறிமுகவுரையைத் தடுப்பது போல, அவசர அவசரமாக இடையிட்டு, "ஹலோ, நான் சுபலா, நீங்கள் மிதுனா. இது விஜய், அது என் தாத்தா. சரி தானா விஜ்ஜி?" என்று பெரிய ஜோக் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.

    மிதுனாவிடம் சம்பிரதாயமாக அவன் பேசுவது கூட இந்த சுபலாவிற்கு பொறுக்கவில்லையா? ஏன் அப்படி குறுக்கிடவேண்டும்? 'இவள் சுபலா, என்..' என்று ஏதோ சொல்ல வந்தானே..அவளை என்னவென்று அறிமுகம் செய்திருப்பான்? என் காதலி என்றா? பெரும்பாடுபட்டு அவளும் உதட்டை இழுத்துப் பிடித்து சிரித்து வைத்தாள்.

    சுபலா வழக்கம் போல சலசலக்க, கைக் கடிகாரத்தை நாசுக்காக பார்த்த நளந்தன், "நான் போக வேண்டும் சுபலா, ஒரு பார்ட்டி. நீ பேசிக் கொண்டிருந்துவிட்டு செல்" என உத்தரவு போல சொல்லி நகர முற்பட்டான்.

    "இன்று கூட பார்ட்டியா விஜ்ஜி?" என்று சினுங்கியவள், "நானும் " என்று குழைய,
    "ம்ஹூம்.. இது பிசினஸ் பார்ட்டி" என்று முடிவான குரலில் கூறி எல்லாரிடமும் பொதுவாக "வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்றான்.

    சட்டென எழுந்த சுபலா, "இதோ வருகிறேன் தாத்தா" என்று சொல்லி நளந்தனைத் துரத்திக் கொண்டு சென்றாள். தாத்தா தன் முகவாட்டத்தை கவனிக்குமுன் அங்கிருந்து அகல வாய்ப்பு தேடிய மிதுனா, "அவர்களுக்கும், உங்களுக்கும் ஏதாவது குடிக்க எடுத்து வருகிறேன், தாத்தா" என்று சொல்லி சமையலறையில் தஞ்சம் புகுந்தாள்.

    வெளியே வானம் இருட்டி மழை வரும்போல இருந்தது. இந்த நேரத்தில் இவனுக்கு பார்ட்டி ரொம்ப அவசியமா? அவளிடம் அது பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?! ம்ம்..அந்த சுபலாவிடமே சொல்லவில்லை. தன்னிடம் தானா சொல்லப் போகிறான்?

    மழைக்கு இதமாக சுடச்சுட காபியும், கொஞ்சமுன் இட்ட மிளகாய் பஜ்ஜிகள் சிலதையும் ஒரு தட்டில் போட்டு சமையல்காரர் தந்தார். கையில் டிரேயுடன் அவள் செல்கையில் சுபலா ஒரு வெற்றிச் சிரிப்போடு அவளை வழியில் எதிர்கொண்டாள்.

    "விஜ்ஜிக்கு என் மேல் ஒரு செல்ல கோபம். அது... அவர் கேட்டு நான் ஒன்று தரவில்லையா.. அதனால்.. ஒரு சின்ன ஊடல் போல.. இப்போது ஒரு ஸ்பெஷல் 'Bye' - ல் எல்லாம் சரியாகிவிட்டது." உடலையும் உதட்டையும் நெளித்து அவள் சொல்லிய விதம் அருவருப்பாக இருந்தது.

    காதில் விழாதது போல மிதுனா நடக்க, சுபலா ஒரு வெட்டும் பார்வையுடன் அவளைத் தொடர்ந்தாள்.

    "என்ன தாத்தா, நான் போன மாதம் பார்த்ததற்கு ரொம்பவும் மெலிந்துவிட்டீர்களே" என்று ரொம்பவுமே அக்கறைபோல விசாரித்தாள் சுபலா.

    "இல்லையேம்மா, மீனா பொண்ணு கவனிப்பில் உடம்பு தேறியிருக்கிறேன் என்றல்லவா விஜி சொல்கிறான்" தாத்தாவின் பார்வை கரிசனமாக மிதுனாவிடம் பாய்ந்தது.

    "போங்க தாத்தா. அவர் உங்களை தினமும் பார்ப்பதால் வித்தியாசம் தெரியவில்லை போலும். எங்கே நான் தினமும் விஜியிடம் இங்கு அழைத்துவருமாறு சொல்கிறேன், அவர் இதோ அதோ என்று சாக்கு சொல்கிறார்."

    தினமும் சொல்கிறாளா? மிதுனா திகைத்தாள். 'ஒரு மாதமாக உங்களைப் பிடிக்கவே முடியவில்லையே என்று நளந்தனிடம் அப்படி சிலாகித்தாளே?! ஒருவேளை நேரில் சந்திக்க முடியாமல் தினமும் போனில் பேசுவாளோ?

    "நான் சொல்லி சொல்லி, இப்போ கொஞ்சம் பார்ட்டி எல்லாம் குறைத்துவிட்டார் தாத்தா.கவனித்தீர்களா?" என்று மேலும் உரிமை எடுத்து அவள் பேச, மிதுனா தாத்தாவின் முகத்தை ஆராய்ந்தாள்.

    சுபலாவின் பேச்சு தாத்தாவிற்கும் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
    "அதிருக்கட்டும்மா, உன் அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? அதை சொல்லு முதலில்" என்று பேச்சை திசை திருப்பினார் அவர்.

    "அம்மா, அப்பா, கூடவே சித்தி எல்லாரும் நலம், தாத்தா" என்று அந்த சித்தியில் ஒரு அழுத்தம் கொடுத்து மிதுனாவை நோக்கினாள் சுபலா.

    இவள் சித்தி எப்படி இருந்தால் எனக்கென்ன, என்னை எதற்கு பார்க்கிறாள்? என்று நினைத்த மிதுனா, "பேசிக் கொண்டிருங்கள்" என்று சொல்லி ஹாலுக்கு சென்று விட்டாள். அந்த பார்வையின் காரணத்தை பிறகு தாத்தா சொன்னார்.

    வளவளத்து, சலசலத்த சுபலா தானே சலித்து "வருகிறேன், தாத்தா" என்றதும் அப்பாடி என்றிருந்தது அவளுக்கு.

    வெளியே வந்தவள் சும்மா போகவில்லை. "உன் அறை வசதி எல்லாம் நன்றாக இருக்கிறதா?" என்று ஒரு சம்பத்தமில்லாத கேள்வி வேறு! மிதுனாவின் அறை பற்றி அவளுக்கென்ன? மனம் நினைத்தாலும், கண் மாடியில் தன் அறை நோக்கிப் பாய்ந்து, 'அது தான் என் அறை" என்று காட்டிக் கொடுத்தது. அதைத் தெரிந்துகொள்ளத்தான் சுபலாவும் கேட்டாளோ என்னவோ?! சரியாக பார்வையைப் படித்து, "கீழே அறை என்றால், தாத்தாவை கவனித்துக் கொள்ள வசதியாக இருக்குமே?" என்று இலவச ஆலோசனை வழங்கினாள்

    பரவாயில்லை..இந்த ஒன்றில் நளந்தனுக்கு இவள் ஏற்ற ஜோடிதான்! அவனும் முதலில் அவளுக்கு கீழே தானே அறை ஒதுக்க சொன்னான்?! சுபலா சொல்ல வருவதென்ன? நீ தாத்தாவை கவனிக்க வந்தவள், அதோடு நில் என்கிறாளா? தான் ஹாலில் இருந்த போது தாத்தா தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார்? கண்டிப்பாக, நல்லவிதமாகத்தான் இருக்கும். இருந்தும் தன்னை ஏன் ஒரு பணியாள் போல சுபலா பாவித்துப் பேசவேண்டும்?

    ஆட்டோ பந்த் என்பதால், டிரைவரை அழைத்து அவளை அவள் சொல்லும் இடத்தில் இறக்கிவிட சொல்லி சுபலாவை வழியனுப்பிய மிதுனா, தாத்தாவின் அறைக்கு சென்றாள்.

    அவளுக்காக காத்திருப்பவர் போன்று, "எங்கே நீ வரமாட்டியோன்னு நினைத்தேனம்மா " என்றார்.

    "ஏன் தாத்தா? ஏதாவது வேண்டுமா?"

    "தலைவலி மாத்திரைதான் வேறென்ன?" வெறுப்பாக சொன்னார் தாத்தா.

    அவளுக்குமே ஒன்று வேண்டும் தான். சுபலாவைப் பார்த்ததில் இருந்து நெற்றி விண் விண்ணென்று தெறித்தது!

    அவள் "இதோ" என்று மாத்திரை எடுக்க அலமாரி நோக்கி செல்ல, "நீயும் சேர்ந்து எங்களோடு பேசிக் கொண்டிருந்திருக்கலாமே ..அதாவது, என்னோடு சுபலா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கலாமே?!" என்று சொல்லி சிரித்தார்.

    சுபலா எங்கே அடுத்தவரைப் பேசவிட்டாள்? தாத்தாவும் அதை உணர்ந்தாரா?! அவளுக்கு சிரிப்பு வந்தது. தலைவலி கூட குறைந்தார் போல தோன்றிற்று.

    அவரே தொடர்ந்தார்.

    "அவள் சித்தி என்று சொன்னாளே, கவனித்தாயாம்மா? அது விஜயனின் ஒன்றுவிட்ட அத்தை..."

    ஓ! அது தான் அப்படி பார்த்தாளா?! சுபலாவின் சிற்றன்னை நளந்தனின் அத்தை என்றால், நளந்தன் மாமா பையன் ஆகிறானே! சுபலாவின் உரிமைப் பேச்சு புரிந்தது. இருக்கட்டுமே, அதனால் அவளுக்கென்ன?

    "சுபலா முறைப பெண்" என்று அவள் வாய்விட்டு சொன்னாள்.

    "முறைப் பெண்ணும் அல்ல ஒன்றுமில்லைம்மா, விஜயனின் தந்தை மறைவிற்குப்பின் அந்த குடும்பத்தோடு ஒரு தொடர்பும் இல்லை. சுபலா இவன் அத்தைக்கு தூரத்து சொந்தம்.எப்படியோ விஜியிடம் ஒட்டிக் கொண்டாள். இந்த பையனும் இவள் குணம் புரியாமல் இவளை விட்டுவைத்திருக்கிறான்"

    "சுபலா..அவளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது..ஆனால் ஏன் தாத்தா?"

    "அது உனக்கு புரியாதம்மா. இவள் கையில் விஜயன், குரங்கு கையில் பூமாலை தான்! இந்த பெண்.. அவள் பேச்சு, நடை உடை பாவனை எதுவும் குடும்பத்துக்கு ஏற்றது அல்ல. இவள் சகவாசம் வேண்டாம் என்று சொன்னதற்கு தான் அன்று வேறு பேசுங்கள் என்று சலித்துக் கொண்டான். இவள் அண்ணனோடு சேர்ந்து ஏதோ புது பிசினஸ் செய்கிறானாம். அதை சாக்கு வைத்து இந்த பெண் அவனோடு சுற்றுகிறாள். விஜயன் மனதில் என்ன என்று தெரியவில்லை..இவளிடம் விழுந்து விடுவானோ என்று தான் கவலையாக இருக்கிறது" தாத்தாவின் வருத்தம் மனதை என்னவோ செய்தது.
     
    2 people like this.
    Loading...

Share This Page