1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 24

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, Apr 30, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    [​IMG]

    நளந்தனிடமிருந்து விலகி நிற்க முடிவெடுத்த மிதுனாவால் அடுத்து வந்த தினங்களில், அதை நிறைவேற்றத்தான் முடியாது போயிற்று. அவள் மட்டும் நினைத்தால் போதுமா? ஒரு கை ஓசை எழுப்புமா? அவளைத் தேடித் தேடி வந்து பேச நளந்தன் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றால், அவள் தீர்மானம் தண்ணீரில் எழுத்தாகாமல் வேறு என்ன செய்யும்?!

    அவனை வேண்டுமென்றே மிதுனா தவிர்ப்பதை நளந்தன் கண்டுகொண்டானோ அல்லது நிஜமாகவே சேதி சொல்லத்தான் வந்தானோ..அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் அறை தேடி வந்து சுகுணாவும் அவரது இரண்டாவது மகன் சுகிர்தனும் நாளை மறுநாள் வீட்டிற்கு வரப் போவதாக தெரிவித்தான்.

    சுகிர்தன் ஒரு ரேடியாலஜிஸ்ட், இங்கும் ஒரு lab நிறுவ இடம், equipments என்று வாங்க, பார்க்க வருவதாகவும், அப்படியே தாத்தாவைப் பார்த்துப் போக அவன் தாயார் சுகுணாவும் சேர்ந்து வருவதாகவும் தெரிவித்தான். ஒரு பத்து நாளேனும் தங்குவார்களாம். யார் வந்தால் அவளுக்கு என்ன? அவன் வீடு, அவன் மக்கள். தலையை வெறுமனே ஆட்டி வைத்தாள் மிதுனா. என்னவோ அவனிடம் நின்று பேசுவது முள் மேல் நிற்பது போல தவிப்பாக இருந்தது. ஏன் என்றும் புரியவில்லை. ஒருவேளை அன்று போல கன்னத்தை, கின்னத்தை தட்டிவிடுவானோ என்ற பயமா என்றும் தெரியவில்லை.

    அவளது சஞ்சலத்தை, வருபவர்கள் அவளை எப்படி நடத்துவார்களோ என்று நினைத்ததால் வந்த கலக்கமென்றுத் தவறாகக் கற்பித்துக்கொண்ட நளந்தனோ,
    "சுகுணா அத்தை ரொம்ப நல்லவர்கள். நீ கலங்கத் தேவையில்லை" என்றான்.

    அதுவும் ஒரு கலக்கம் தான்.

    பதில் பேசாதிருந்த அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு, "உன்னைக் கூட அத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறார்களாமே?! எலிவால் சடை போட்டுக் கொண்டு இருந்த மீனாவா என்று ஆச்சர்யப்பட்டார்கள் ." என்று சீண்டினான்.

    இதென்ன புது கதை?! அவளை எப்படி அப்படி அவர்கள் பார்த்தார்களாம்?! எலிவாலாமே! எல்லாம் இவன் கேலி.

    இல்லை என்றான் நளந்தன்.

    அவள் தாத்தா சந்தானம், சுகுணாம்மாவின் தந்தை சுகவனம், நளந்தனின் தாத்தா சுந்தரம் மூவரும் இணை பிரியா நண்பர்களாம். இருபது முடிவதற்குள்ளாகவே மூவருக்கும் திருமணம், அதை அடுத்து குழந்தை குட்டிகள் ஆகினவாம். அவரவர் பிள்ளைகளும் கூட, மாமா, பெரியப்பா, சித்தப்பா என்று தான் அவர்களை அழைப்பார்களாம். அந்த அளவிற்கு அன்னியோன்யம்.

    மூவரும் வாழ்வில் ஒரு நிலைக்கு வர சேர்ந்து செய்த தொழில் படுத்துப் போக, தத்தம் வழியில் தனித் தனி சுய தொழில் செய்வது என்று தீர்மானித்து, சுகம் பார்மசி, சுபம் டிராவல்ஸ், ஜெயம் பைனான்ஸ் என்று அவரவர் குழந்தைகள் பெயரில் அவரவர் குடும்ப, செல்வ பின்னனிக்கேற்ப தொழில் ஆரம்பித்து, நண்பர்களாகவேப் பிரிந்தனராம்.

    பின்னர் சுகம் லேப்ஸ், சுகம் மருத்துவமனை என்று சுகந்தனின் தலைமுறையில் சுகவனம் குடும்பம் நன்றாகத் தழைத்ததாம். சுந்தரம் தாத்தாவின் டிராவல்ஸ் அவன் தந்தை காலத்தில் நஷ்டத்தில் சென்று தற்போது இவன் தலையெடுப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறதாம். இவள் தாத்தாவோடு மட்டும் மற்ற இரு பெரியவர்களுக்கும் ரொம்ப காலமாகத் தொடர்பு விட்டுப் போய் தற்போது அதை சரிக்கட்டவே அவளை இங்கு கொண்டு வந்திருக்கிறார்களாம்!
    அவன் சொன்னதில், ஜெயம் பைனான்ஸ் பற்றி மட்டும் தான் அவளுக்கு தெரியும். அவள் தந்தை பெயர் ஜெயன். பைனான்ஸ் கம்பனி நொடித்ததில் உண்டான நஷ்டத்தில் இருந்து அவள் தாத்தா இன்றுவரை மீளவில்லையே!

    மூன்று குடும்பத்து பேரக் குழந்தைகளிலும் அவள்தான் இளையவள் என்பதால் அவளுக்கு எதுவும் நினைவில்லை போலும். ஆனால் சுந்தரம் தாத்தாவிடம் ஒரு ஒட்டுதல் முதல் நாளே தோன்றியதே..இவனிடமும் கூட.. இந்த வீட்டில் காலடி வைத்த கணமே மனதுள் ஒரு நிம்மதி பரவுவதாக நினைத்தாளே..

    அவள் எண்ண ஓட்டத்தை நளந்தன் குரல் கலைத்தது.

    அதுவரை கூட்டுக் குடித்தனம் போல வாழ்ந்த காலத்தில் தான் மிதுனா எலிவாலோடு சுற்றினாளாம்!

    அவன் சொன்ன பாவனையில் சிரிப்பு வந்தது. கேட்க வியப்பாகவும் உவப்பாகவும் இருந்தது. அப்படியானால், மூன்று குடும்பமும் கூட்டுக் குடும்பம் போல வாழ்ந்தார்கள் என்றால், நளந்தனும் கூட இருந்திருப்பான் தானே?! அவனும் அவளும் கள்ளமற்ற குழந்தைப் பருவத்தை ஒன்றாகக் கழித்தார்களா?! அவனோடு மண்ணில் விளையாடி, மழையில் கூத்தாடி.. கண் முன் குட்டி நளந்தனும் குட்டி மிதுனாவும் குதி போட்டார்கள்.

    குட்டி நளந்தன்! நளந்தனின் சாயலில் ஒரு சின்ன குழந்தை.. நளந்தனுக்கு ஒரு திருமணம் நடந்திருந்தால் இந்நேரம் இங்கு கூட ஒரு குட்டி நளந்தன் நடை போட்டிருப்பான். அந்த குட்டி கண்ணன், மிதுனாவின் மடியில் தவழ்ந்திருப்பான்..எண்ணம் ஏக்கமாக மாற திடுக்கிட்டாள் மிதுனா! எங்கிருந்து எங்கேத் தாவுகிறாள்?! அவன் குழந்தை இவள் மடியிலாம்!

    இவன் அருகில் இருந்தால் இப்படித்தான் எண்ணம் தறிகெட்டு ஓடும்! தன்னையறியாமல் வேகமாக எழுந்துவிட்டவள், அவன் பாதிப் பேச்சில் இருக்கையில் அநாகரீகமாக எழுந்தது உறைத்து கொஞ்சம் தடுமாறி, "சாரி.. வந்து ஒரு வேலை இப்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தது..." என்றாள்.

    அவன் நம்பாமல் புருவம் உயர்த்த, "நிஜம் தான்..வந்து நான் லைப்ரரி செல்ல வேண்டும். சில புத்தகங்கள் இன்று திருப்பித் தரவேண்டியிருக்கிறது" என்று தணிவாகவே சொன்னாள்.

    "சரி வா, நான் கூட்டிச் செல்கிறேன்" என்றான் அவன் சளைக்காமல்.

    'இல்லையில்லை நானே போய்க் கொள்வேன்."

    உற்றுப் பார்த்தவன் தோளைக் குலுக்கி, "ஆல்ரைட்" என்று சொல்லி நகர்ந்த பின் தான் மூச்சு சரியாக வந்தது அவளுக்கு.

    கையில் கிடைத்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு பின் பக்கத் தோட்டம் வழியாக ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்றாள்.

    வீட்டில் ஒன்றுக்கு இரண்டு கார்கள் இருந்தாலும், லைப்ரரி சென்றாள் வர எவ்வளவு நேரம் ஆகுமோ.. அதுவரை காரை அங்கே நிறுத்தி வைக்க அவளுக்கு இஷ்டமில்லை. அதனால், தன் சொந்த விஷயமாக வெளியே செல்லும் போது ஆட்டோவில் தான் போவது. பெரியவர் காதுக்கு எப்படியும் விஷயம் போகாது. நளந்தன் இதுவரை அறியவில்லை. அவனுக்குத் தெரியவும் வாய்ப்பில்லை. அப்படித்தான் அவள் நினைத்தாள்!

    முடிந்தவரை அந்த வீட்டில் எந்த வசதியையும் தவிர்க்கவே முயற்சி செய்தாள். இன்று இந்த வசதிக்கு பழகி விட்டால் நாளை பின்னே வம்பாகிவிடக் கூடாதே.

    லைப்ரரியில் புத்தகங்களை சேர்த்துவிட்டு , அங்கேயே அமர்ந்து தன் Reference-சிற்கு சில புத்தகங்களைப் படித்துவிட்டு ஒருவாறு திரும்பிச செல்ல எத்தனிக்கையில், அழுத்தமான காலடிகளுடன் அவள் அருகே வந்து நின்றான் நளந்தன்!

    இவன் எங்கே இங்கே?! அவள் கண்கள் வாசலைப் பார்க்க, மேலும் திகைத்தாள் மிதுனா. வானம் இருட்டி..கடவுளே..எவ்வளவு நேரம் இங்கிருந்தாள்?! சுற்றிலும் பார்வையை ஓட்டினால், ஓரிரண்டு பேர்கள் தவிர அங்கே யாருமில்லை. லைப்ரரியும் மூடப் போகும் நேரம்!

    சினம் துளிர்க்க, "போகலாமா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி அழுத்தமான குரலில் எரிந்து விழுந்தான் நளந்தன்.

    ஏன் இத்தனைக் கோபம்?! கொஞ்சம் தாமதமாகிவிட்டது தான். அதற்காக இப்படியா?

    "நான்..நானே வந்திருப்பேனே! நீங்கள் எதற்காக வீணாய்.."
    அவள் பதில் அவனை இன்னும் எரிச்சல் படுத்தியது போலும்.

    "ஏன்? என்னோடு வர மாட்டாயா? நான் உன்னை என்ன செய்து விடுவேன்? சில நாட்களாக என்னை அப்படித் தவிர்க்கிறாய்?" அவன் குரலில் அடக்க மாட்டாத கோபம் தெறித்தது.

    அந்த நேரடிக் கேள்வியில் அவள் திக்குமுக்காடிப் போனாள்.
    உடனேயே கோபம் தணிந்தவன், "மணி என்ன என்று பார்த்தாயா?" என்று ஏதோ பெரிய தவறிழைத்தது போலக் கேட்டான்.

    ஏழு மணி தானே..அதற்கு ஏன் இப்படி குதிக்கிறான்? "ஏழு தானே..ஆட்டோவில் ஏறினால் இருபது நிமிடம்.." என்றாள் சாதாரணமாக.

    "கிழித்தாய்! செய்தித்தாள் எல்லாம் படிக்கும் வழக்கமில்லையா? இன்று ஆறு மணிக்கு மேல் ஆட்டோ பந்த் தெரியாதா?"

    ஓ! அவன் கோபத்தின் காரணம் புரிந்தது..பாவம் வீட்டில் அவள் இல்லை என்று தெரிந்து, இங்கிருப்பாள் என்று கணித்து வந்திருக்கிறான்..கோபம் வரத்தான் செய்யும்..

    "சாரி..நான் பார்க்கவில்லை" என்றாள் சின்ன குரலில்.

    "காரில் வர வேண்டியதுதானே?" என்று அடுத்த கணைக்குப் பாய்ந்தான்.

    "வர நேரமாகும்..அதுவரை டிரைவர் காத்திருக்கவேண்டுமே என்று.."

    "அது தான் அவன் வேலை" குத்தலாக மொழிந்தான் நளந்தன்.

    கூடவே தொடர்ந்து, "அத்தனை நேரம் அறைக்குள் அடைந்து இன்டர்நெட்டில் கண்டதும் படித்துக் கொண்டிருக்கிறாயே, ஏதாவது செய்தித்தளம் போல உருப்படியாக சிலதும் 'பிரவுஸ்' பண்ணியிருந்தால் இன்று பந்த் என்று தெரிந்திருக்கும்" என மறு குத்து விட்டான்.

    அவன் பேச்சு அதிகப்படியாக தோன்றியது மிதுனாவுக்கு. இவன் பேசுவதற்கெல்லாம் வாயை மூடிக் கொண்டிருந்தால் என்னவேண்டுமானாலும் பேசிவிடுவதா?!

    "நான் ஒன்றும் கண்டதும் படிக்கவில்லை."

    "பின்னே? இந்தியப் பொருளாதாரம் படித்தாயா?"

    வேகமாக அவனை உறுத்து நோக்கிய மிதுனா, "பொருளாதாரம் அல்ல கணிதம். நான் ஆன்லைன் டியூடரிங் செய்கிறேன். காலை மாலை இரண்டிரண்டு மணி நேரங்கள்" என்று நிறுத்தி நிதானமாக சொன்னாள். அப்போதாவது அந்த மரமண்டையில் உறைக்கட்டுமே!

    அவளை வியந்து நோக்கியவன், "ஐ சீ.. உருப்படியாக நேரம் கழிந்தால்..அது நல்ல விஷயம் தான்..ஆனால் ஏன்?" என்றான்.

    "என்ன ஏன்?!" அவள் திருப்பிக் கேட்க, தலையசைத்து, "இப்போது நீ வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? அதைக் கேட்டேன்?" என்றான்.

    என்னவென்று சொல்வாள்?! மனம் அலை பாய்வதை தடுக்க என்றா?! பதில் சொல்லும் கஷ்டத்தை அவளுக்கு அவன் கொடுக்கவில்லை. அவனாகவே சொன்னான்.

    "உன் தகுதிக்கேற்ற வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தான் நான் முன்பே சொன்னேனே ..ஓ..அது பற்றி எதுவும் முயற்சி எடுக்கவில்லை என்று..அதுதான் என் மேல் கோபமா?"

    இல்லையென்று தலையசைத்தாள் மிதுனா. பிற பெண்களோடு சகவாசம் என்று கேள்விப்பட்டும் கூட அவன் மீது வருத்தம் தானே ஒழிய கோபப்பட முடியவில்லையே! அவன் அவ்வளவு நயந்து பேசியது மனதிற்கு இதமாகவும் இருந்தது. தன்னைக் காணவில்லை என்று தெரிந்து, தன்னைத் தேடி ஓடி வந்திருக்கிறானே.. "உங்களுக்கு வீண் சிரமம் என்னால்.." என்றாள்.

    அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன், "காரில் ஏறு" என்று மட்டும் சொன்னான்.

    நேரே வீட்டிற்கு போகாமல் கார் வேறு திசையில் செல்லவும் அவள் அவன் புறம் திரும்ப, சாலையில் இருந்து பார்வையை எடுக்காமலே, "அத்தைக்கு ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும். வருகிற புதன் அவர்கள் பிறந்தநாள் " என்றான் பதிலாக.

    பரம்பராவிற்கு போகலாம் தானே என்று கேட்டு ஒரு கேலிப் பார்வை வேறு.

    அலசி ஆராய்ந்து ஒரு டிஜிட்டல் போட்டோ பிரேமை வாங்கியபின், உனக்கும் ஏதாவது வாங்கிக் கொள்ளேன் என்று அவன் வற்புறுத்தியும் வேண்டாம் என்று
    மறுத்துக் கூறி அவர்கள் வெளியே வந்த போதோ வானம் மேலும் இருட்டிக்கொண்டு வந்தது.

    கார் பார்க்கிங் இடத்திற்கு செல்லும் வழியில் மறுபடியும் தன் கருத்தை வலியுறுத்தினான் நளந்தன்.

    "இனி எங்கு சென்றாலும் காரிலேயே செல்.நான் வரவில்லை என்றால் முட்டாள்தனமாக லைப்ரரியில் மாட்டிக் கொண்டிருப்பாய்."

    "என்ன பெரிய விஷயம்..ஒரு போன் கால், டிரைவர் வந்து கூட்டி செல்லப் போகிறார்" என்று அவள் மறுப்புக் கூற,
    "நல்லதற்கு சொன்னால் எடுத்துக் கொள்ள மாட்டாயா?" என்று ஒரு மாதிரி கேட்டான் அவன்.

    அவனை மேலும் சீண்ட வேண்டாமே என , "அப்படி படபடத்தீர்களே..என் தாத்தாவிற்கு என்ன பதில் சொல்வது என்று பயமா?" என கேலி பேசி அவன் மனநிலையை மாற்ற முயன்றாள்.

    அவன் சிரிக்கவில்லை. மாறாக அவளை பொருள்விளங்காப் பார்வை ஒன்று பார்த்தான். ஒரு நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, கனிவாக கார் இருக்கும் திசையைக் காட்டினான்.

    ஏன் அப்படிப் பார்த்தான்?
    சில சமயங்களில் ரொம்பவும் கரிசனமாக பார்க்கிறானே?! தன் மேல் ஏன் இந்த அக்கறை? கேட்டுவிடலாமா?
    "உங்களை ஒன்று கேட்க வேண்டும்."

    "கேளேன்"

    அவள் கேட்குமுன், "விஜ்ஜி!" என்று கூவியபடி ஒரு அழகி அவர்கள் பின்னோடு வந்து அவன் தோள் தொட்டாள்!
     
    2 people like this.
    Loading...

Share This Page