1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 20

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, Apr 29, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    [​IMG]

    நளந்தன் ஆமாம் என்றாலும், இல்லை என்றாலும் இதே வேதனை தான் என்பது பிறகொரு நாள் இரவின் தனிமையில் மிதுனா யோசித்துத் தெளிந்த உண்மை.
    ஆனால் அந்த ஞானோதயத்திற்கு முன், தோட்டத்தில் அவனது ரெண்டுங்கெட்டான் பதிலில் வாயடைத்து நின்றவள், சுதாரித்து அல்லது சுதாரித்துக் கொண்டாள் என மடத்தனமாக நினைத்து, "தெரியாமலா அன்று நகைக் கடைக்கு அவளோடு அப்படி கை கோர்த்து சென்றீர்கள்?!" என்று நா காக்காமல் பட்டென்று கேட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
    "என்ன? என்ன சொன்னாய்?" என்று புரியாமல் வியந்து கேட்டான் நளந்தன்.
    விஷயம் புரிபட்டபோதோ, முன்னிலும் பெரிய ஜோக் அடித்தது போல சிரித்து, "சரியாய் போச்சு போ! இப்படி என்னோடு கை கோர்த்து சென்றவளை எல்லாம் கட்டிக் கொள்வதென்றால்.. இந்த வீடு தாங்காது தெரியுமா?" என்று சாதாரணமாக சொன்னான்!

    கட்டிக் கொள்ள முடியாதவளோடா அப்படி இழைவார்கள்? அருவருப்பாய் இருந்தது மிதுனாவுக்கு.

    "அவளைக் கட்டி அணைத்துவிட்டு... இப்படி சொல்கிறீர்களே?!" நளந்தனா இப்படி என்று பொருமியது உள்ளம்.

    "ஹே! ஈசி, ஈசி! எந்த யுகத்தில் இருக்கிறாய் நீ? அவள் சகஜமாக பழகுவாள். நானும் அப்படித்தான். உன் பேச்சை யாராவது கேட்டால், அவளை ஆசை காட்டி மோசம் செய்த நாலாந்தர வில்லன் நான் என்று முடிவே கட்டிவிடுவார்கள். கல்யாணம் என்று அவளிடம் பேசிப் பார்..காத தூரம் ஒடிவிடுவாள்" என்றான் சர்வ சாதாரணமாக.

    "ஆனால்..இப்படி பழகுவது தவறில்லையா?" அடக்க மாட்டாமல் கேட்டாள் மிதுனா.

    "எது தவறு? See, நீ 'அது' போல எளிதாக பழகுபவள் அல்ல. அதற்கு மதிப்பு கொடுத்து நான் எட்டி நிற்கவில்லையா? உன் வட்டத்துக்குள் நீ. என்னுடையது கொஞ்சம் பெரிய வட்டம். செரீனாவுடையதும் அப்படியே. யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. இதில் தவறென்ன?"

    அவன் வட்டம் எவ்வளவு பெரியது என்பது மிதுனாவுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் அதை அவன் வாயால் கேட்கத்தான் கஷ்டமாக இருந்தது.
    அதை அவன் நியாயப்படுத்தி பேசுவதோ முற்றிலும் ஜீரணிக்க முடியாததாகிப் போனது.
    "சாரி.. ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லி வளர்க்கப்பட்டவள் நான்.. எனக்கு உங்கள் கோணல் கொள்கை எல்லாம் புரியாது" என்று வெறுப்பாக உரைத்து நகர முனைந்தாள்.
    "ஒருவனுக்கு ஒருத்தியா?!" அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

    "அப்படி சொல்லி உன்னை வளர்த்த உன் அதே தாத்தா தானே உன் தந்தையையும் வளர்த்தார்?!" என்று பதிலடி கொடுத்தான்.

    அடிபட்டது போல அவள் பார்க்க, தணிந்து "அதெல்லாம் ஏட்டு சுரைக்காய். ஏன் என் தந்தையும் மறுமணம் செய்தவர் தான்." என்று தன்னையும் சேர்த்து சொன்னான்.

    "ஆனால்.. அவர்கள் மனம் போன போக்கில் எவளோடும் செல்லவில்லையே.. திருமணம் தானே செய்துகொண்டார்கள்.. அதுவும் முதல் தாரத்தை இழந்த பின் தானே" அவள் ஒரு வேகத்தோடு வாதிட, கண்களை அழுந்த மூடித் திறந்த நளந்தன், "பார் மிதுனா, இது நாள் வரை கல்யாணம் பற்றி நான் நினைத்து பார்த்தது கூட கிடையாது. கல்யாணம் என்பது ஒரு பெரிய கமிட்மென்ட். இவளோடு தான் வாழ்க்கை என்று தீர்மானிக்க ஒரு பெரிய உந்துதல் வேண்டும்."

    இடையிட்டாள் மிதுனா, "அதன் பெயர் தான் காதல்."

    "காதல்! இதுவரை உண்மைக் காதலை சந்தித்ததில்லை. சந்தித்தவரகளையும் பார்த்ததில்லை " என்றான் ஏளனமாக.
    இவன் உண்மை காதலை சந்திகாததற்கு, ஒட்டுமொத்தமாக காதலை குறை சொல்வதில் என்ன நியாயம்?
    அதை அவனுக்கு உணர்த்திவிடும் வேகத்தில், "அதெப்படி அப்படி சொல்வீர்கள்?.. நீங்கள் கூட சற்றுமுன் யாரையோ காதலிக்கிறேன் என்றீர்க.." அவள் முடிக்குமுன் குறுக்கிட்டு, "இருக்கலாம், தெரியவில்லை என்றேன் " என ரொம்ப முக்கியம் போல அவளை சரி செய்து முறுவலித்தான்.


    அவன் முறுவல் அவளை என்னவோ செய்தது. இப்படி மோகனமாக புன்னகைத்தால் எப்படி அவன் கண்ணைப் பார்த்து தர்க்கம் செய்வதாம்?!
    "சமீபத்தில் என்னுள் ஒரு பொறி.. அது காதலா என்று தெரியாது" என்று தெளிவாகக் குழப்பினான்.
    "அதெப்படி தெரியாமல் போகும்? ஒரு பெண் மீது ஒரு தனிப்பட்ட நாட்டம் என்றால் அதற்கு வேறு என்ன அர்த்தம்" என்றாள் மிதுனா.
    ஏதோ அறியாச் சிறுமியைப் பார்ப்பது போல பார்த்தான் நளந்தன்.
    "ஏன்.. அது காதலாகத் தான் இருக்க வேண்டுமா? கவர்ச்சி, காமம்.. இப்படியும் இருக்கலாமே?" என்றான்.
    "சீ!" என்று வாய் விட்டு சொல்லிவிட்டாள் மிதுனா அருவருப்பாக.
    அவளை ஆழ்ந்து நோக்கிய நளந்தன் "கவர்ச்சி, காமம் - இவை எல்லாம் தப்பில்லை மிதுனா" என்றான்.
    "காதல் தான் உன்னதம், மற்றவை உன்மத்தம் என்று நீ நினைப்பது சரியல்ல, மிதுனா.. காதல் என்றாலே, கவர்ச்சி காமம் எல்லாம் 'Part Of the Package' தான்" என்று அவளை ஊடுருவும் பார்வையோடு பொறுமையாக சொன்னான்.




    நல்ல வியாக்கியானம்!


    "ஏன், நீ சொல்லும் காதலையே எடுத்துக் கொள்ளேன், ஏதோ ஒரு விஷயத்தால் கவரப்பட்டு வருவது தானே காதல்? காதலுக்கு சுவை கூட்டுவது காமம். இதை நீ ஏன் தவறாக பார்க்கிறாய்? ஆண் என்றும் பெண் என்றும் இருந்தால் அங்கே கவர்ச்சி காமம் எல்லாம் தான் இருக்கும்."


    "அதற்காக?! இதற்கெல்லாம், ஆண் ஒன்று பெண் ஒன்று போதுமா? ஒரு இடம் பொருள் ஏவல் வேண்டாமா?! யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும்.. என்றால் அருவருப்பாக இல்லை?! " உள்ளம் கொதித்தாள் மிதுனா.


    அவளது கொதிப்பை சில கணம் வேடிக்கை பார்த்தவன், "என் வாழ்க்கை, என் விருப்பம் என்று வாழ்பவன் நான். என் வழி சரி என்று தோன்றும்வரை தொடரப் போகிறேன். தவறு என்று தோன்றினால் மாற்றிக் கொள்ளப் போகிறேன். அவ்வளவு தானே." என்றான்


    தான் நினைத்தே சரி என்று அவன் வாதிடாமல் இருந்ததே அவள் கோபத்தை கொஞ்சம் தணித்தது. தன் வழி தவறு என்று அவனை உணர வைக்க முடிந்தால்.. முயன்றாள் மிதுனா.
    "சரி, 'நீங்கள் காதலிக்கிறீர்களா இல்லையா என்றே தெரியாத' அவள், அவளுக்கும் இப்படி பெரீய்ய வட்டம் இருந்தால் பரவாயில்லையா?"

    காலகாலமாக இந்திய அதிலும் தென்னிந்திய ஆண்களுக்கே உரிய உரிமை உணர்வை நம்பிக் கேட்டாள். அவன் காதலியும் இப்படி பலரோடு கை கோர்த்துத் திரிவதை ஆதரிப்பானா, என்ன?!

    அவள் தடுக்கில் பாய்ந்தால் அவன் கோலத்தில் பாய்ந்தான்.

    "அதாவது, ஆணுக்கொரு நியாயம், பெண்ணுக்கொரு நியாயமா என்கிறாய். உன் பெண்டாட்டியும் இப்படித் திரிந்தால் ஒப்புக்கொள்ள முடியுமா என்கிறாய். அதானே?" என்றான் பொறுமையிழந்த குரலில்.

    உட்கருத்து என்று பார்த்தால் அதே தான். ஆனால் அவனது வாய்மொழியில் கேட்கையில் அவள் அநியாய உரிமை எடுத்து சாடுவது போல இருந்தது. அவள் ஒன்றும் பேசவில்லை.

    "அதுதான் சொன்னனே, இது நாள் வரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கிருந்ததில்லை. என் தந்தையிடம் கற்ற பாடம். அதனால் நீ சொல்வது போல தராசில் நிறுத்தி தீர்ப்பு தேடும் அவசியம் வரவில்லை " என்று தோளைக் குலுக்கினான்.

    என்ன சொல்கிறான் இவன்? திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லையாம்.. ஆனால் எவளோ ஒருத்தியிடம் காதலாக இருக்கலாம் என்றும் நினைக்கிறானாம்..
    ஒரு பிடிவாதத்துடன், "நேரிடையாகவே கேட்கிறேன் நளந்தன், நீங்கள் காதலிக்கும் பட்சத்தில்,
    அந்த பெண் உங்களை போல் அல்லாது.. வந்து.. அவளுக்கு ஒருவேளை உங்கள் கொள்கைகள் பிடிக்காது போனால், நாளை விஷயம் தெரியும் போது உங்களை வெறு.. உங்கள் காதலை மறுக்கவும் கூடும் இல்லையா?"

    ஒரு மூச்சை உள்ளிழுத்து, "இன்றைய உங்கள் வாழ்க்கை முறை உங்கள் வருங்கால மனைவிக்கு செய்யும் துரோகம் ஆகாதா?" ஒரு ஆதங்கத்துடன் கேட்டாள்.


    ஏனோ அந்த பேச்சில் அவன் முகம் அப்படி கருத்தது. "அது அவளைக் கேட்க வேண்டிய கேள்வி" முகத்தில் அறைந்தாற்போல சொன்னவன் தொடர்ந்தான்.
    "இருந்தாலும் சொல்கிறேன். என்னை பற்றிய எதையும் நான் ஒளித்து மறைத்ததில்லை. அதனால் 'நாளை' விஷயம் தெரிந்தால்.. என்று பயப்படவேண்டிய அவசியமும் எனக்கில்லை. என்னை ஒருத்தி நேசிக்கிறாள் என்றால் என் குறை நிறைகளையும் நேசிக்கிறாள் என்று தானே அர்த்தம்? என்னை நேசிக்காதவளை நான் மணந்துகொள்ளப் போவதும் இல்லை. அதனால் இந்த கேள்வி அனாவசியம்" என்றான்.
    "முதலில், இது காதல் தானா என்றே தெரியவில்லை. அதற்குள் நீ திருமணம் வரை போய்விட்டாய் " என்று மேலும் எரிச்சல் காட்டினான்.
    அவன் பதிலில் வெகுண்ட மிதுனா, "புரிகிறது. திருமணம் பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்து இல்லை..அதானே?சரி, அந்த ஒருத்தியிடம் நீங்கள் கொண்டது காதல் தான் என்றானால் என்ன செய்வீர்கள்? லிவிங் டுகெதர் முறையில் வேண்டுமட்டும் வாழ்ந்து வேகம் தணிந்த பின் வேறு தேடுவீர்களா?!" சூடாக கேட்டாள் மிதுனா.
    அவளுள் ஏன் இந்த கோபம் என்று அவளுக்கே புரியவில்லை.


    அவன் கொள்கை அது என்று ஏனோ விட முடியவில்லை. தாத்தாவிற்காக பரிந்து பேசி அவர் கருத்தை அவனிடம் கொண்டு செல்வதாக எண்ணி தான் இந்த பேச்சை அவள் எடுத்தது. ஆனால் அது தன்னை இவ்வளவு பாதிக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை!

    "ஹே, ஈஸி.. இப்போது என்ன ஆகிவிட்டது? " என்று நளந்தன் அவளை அமைதிபடுத்த வேண்டியதாயிற்று!


    அவனை நேராக பார்ப்பதைத் தவிர்த்து, தரையை வெறித்தாள் அவள். அவளது கனன்ற முகத்தை சில கணம் கூர்ந்தவன், "மிதுனா, என்னை பார்" என்று அவள் கவனத்தை தன்னிடம் திருப்பினான்.


    "இப்போது உன் பிரச்சினை தான் என்ன?" அவன் நேரிடையாக கேட்க அவளிடம் பதிலில்லை. அவளுக்குள்ளும் அதே கேள்வி தானே!


    "மிதுனா.. இது நாள் வரை மனம் போன போக்கில் வாழ்பவன் தான் நான். ஒத்துக் கொள்கிறேன். என் விருப்பம், என் வாழ்க்கை என்று இருந்து தான் எனக்கு பழக்கம். முன்பே சொன்னது போல என் வட்டம் பெரியது. ஒரு வேளை நான் சொன்னேனே அந்த பொறி காதலானால், என் வட்டம் சுருங்கி அவள் மட்டுமே அடங்கும் ஒரு புள்ளியாகும். இப்போது திருப்தியா?"


    அவளதுத் தெளியாத முகத்தைக் கண்ட நளந்தன், "ம்ஹூம்.. இந்த பேச்சு போதும்..சும்மாவே நீ சந்தானம் சார் பற்றிய கவலையில் இருந்தாய்..நான் வேறு.. எனக்கும் பார்ட்டிக்கு டயம் ஆகிவிட்டது" என்று அப்போதும் தன் கோணல் கொள்கையை நிலைநாட்டினான்.


    தாத்தாவைப் பற்றிய கவலை ஒரு புறம். நளந்தனின் வறட்டு வாதம் ஒரு புறம். மனம் சுற்றியலைந்து புரிந்த கருத்தை புத்தியில் ஏற்றி புரியாதவற்றை பொத்தி வைத்து, படாத பாடுபட்டது.

    இரவெல்லாம் ஒரே யோசனை. அவன் பேசியதில், ஒருத்தியிடம் நேசம் என்றானால் ஏக பத்தினி விரதன் ஆவேன் என்று அவன் சொன்னது மட்டுமே ஆறுதல்!

    மற்றபடி அவன் பேச்சு அவள் அமைதியை குலைத்தது.
    அவனுள் ஒரு பொறியாக ஒளிரும் அந்த பெண் யார்? அந்த நகைக்கடை பெண் அல்ல என்பது புரிகிறது..அது ஒரு நிம்மதி! அந்த மர்ம பெண்ணின் வட்டம் பெரியதா சிறியதா? அதை சொல்லாமல் விடுத்தானே! நல்ல ஜாலக்காரன்!
    மிதுனா நிம்மதி இழந்து தவித்தாள்.
    ஏனோ அவன் குறிப்பிட்ட அந்த பெண், நளந்தனின் அருமை உணர்ந்து அவனைப் பேணும் ஒருத்தியாக இருக்க வேண்டுமே என்று அவள் உள்ளம் துடித்தது.
    ஒரு புள்ளியாகவே ஆகிவிடுவார்களாமே! யாரவள்? அந்த பெண் இவன் போல அசட்டு கொள்கைகள் இல்லாதவளாக இருக்க வேண்டுமே என்று பதைப்பாக இருந்தது..
    அவனுக்கே தன் வருங்கால மனைவியின் 'வட்டம்' பற்றி அக்கறை இல்லாத போது தனகென்ன என்று தள்ளிவிட முயன்றும் முடியவில்லை. ஏதோ ஒரு கலக்கம்..ஒரு ஏக்கம்..ஏன்? எப்போதும் போல புரியவில்லை அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லை.
    அவ்வளவு சொன்னவன் மறுபடியும் ஏதோ பார்ட்டிக்கு தானே சென்றான்.. அந்த பொறி காதலாக மாறினால் தான் இவன் மாறுவான் போலும்.
    அவன் மட்டும் மாறினால்.. தாத்தாவிற்கு எவ்வளவு நிம்மதி என்று நினைக்கும் போதே,
    அது தன்னுள் ஒரு ஏக்கத்தையும் தோற்றுவிக்க குழம்பினாள்.
    அவன் மாறுவது அவன் நலம் நாடும் தனக்கு நிம்மதியை மட்டும் தானே தரவேண்டும்? ஏனிந்த ஏக்கம்? எதையோ இழந்தது போல.. ஓ.. அவன் மாறவேண்டும் என்றால் அவன் ஒருத்தியைக் காதலிக்க வேண்டும். அந்த நிலையில், மிதுனாவோடு இன்று போல சிநேகமாக பழகுவதை அவன் காதலி விரும்பவில்லை என்றால்.. அவன் நட்பை இழக்க நேருமே என்று வந்த ஏக்கம்..
    தன் மேல் ஒரு சினேகிதனாக உண்மை அன்பு பாராட்டுபவன். அவன் நட்பு தொடர வேண்டும் என்று அவள் ஆசைப் படுவது இயல்புதானே - வழக்கம் போல ஒரு நொண்டி சாக்கை கைப்பற்றிக் கொண்டு புரியாத வேதனையோடு உறங்கிப் போனாள் மிதுனா.
     
    2 people like this.
    Loading...

Share This Page