1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு " திகில் கதை "...[ டி வி கே ]

Discussion in 'Stories in Regional Languages' started by krishna46, Jul 21, 2022.

  1. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    .........“ ஒரு “ திகில் “ கதை .......

    சில ராத்திரிகள்ல்ல... கொஞ்சம் பிரச்சனைதான்... ராத்திரியில... எப்போ தூங்கணுமோ அப்போ தூக்கம் வராது... வரக்கூடாத நேரத்தில வந்து நிக்கும்... சில சமயம் எப்போ வேணும்னாலும் முழிப்பு வந்து ... ராத்திரிப் பிசாசா உக்கார வைக்கும் .

    இப்போ அப்பிடித்தான் ஆகிப் போச்சு ... பெட் ரூம் லைட் வெளிச்சத்திலே ராத்திரி மணி ஒண்ணுன்னு.. சுவர் கடிகாரம் .. மங்கலா காமிக்குது.. [கண்ணாடி இல்லாம பாத்தா பின்ன எப்பிடி இருக்கும்..] கண்ணு மட்டும் மூடி மூடித் தொறக்குது....
    இருக்கற மாடி ரூம்லேந்து கீழே இறங்கிப் போய் டி.வி பாக்கலாமான்னு கொஞ்சம் யோசனை... கீழே ‘ ஒய்ப்’ கிட்ட வாங்கப் போற திட்ட நினைச்சு ‘கப்சிப்’... மெதுவா எழுந்து... ரூம் பால்கனியில சேரப் போட்டு.. தூக்கம் வருதான்னு ‘ட்ரை’..

    வீட்டுக்கு அடுத்தபடி ஒரு காலி மனை ..ஒரு முப்பது அடி அகலம் இருக்கும்.. சொந்தக்காரர்.. யாருன்னு தெரியலே.. ரொம்ப நாளா கண்ட கண்ட செடி மரமெல்லாம் ... வளர்ந்து .. சின்னக் காடு மாதிரி இருக்கு..... ஏதோ காலி மனைக்கி எல்லாபக்கமும் காம்பவுண்டு சுவராவது கட்டி வெட்சிருக்காங்களே....
    இந்த காலி மனைக்கின்னு ஒரு ரோடு ...சரியா இந்த மனைக்கி வந்து முட்டிக்கிட்டு நிக்குது.... Dead End ன்னு சொல்லுவாங்களே.. அப்பிடி.. அந்த ரோடு ஒரு இருபது அடி அகலம் இருக்கும் .. ரோட்டுல நின்னு பாத்தா எதுத்தாப்பில இந்த காலி மனையும் ..வலது பக்கத்தில ரெண்டு மாடிக் குடியிருப்புகளும் .. இடது பக்கத்தில ஒரு பழங்கால வீடும் ...

    பால்கனியிலேந்து பாக்கும்போது இந்த பழங்கால வீட்டோட மூடின ஜன்னலெல்லாம் தெரியுது.. ஏன்னா காலி மனை காம்பவுண்ட ஒட்டியே எதுத்தாப்பில அந்த வீடு .... எங்க வீட்லேந்து ஒரு “லெப்ட் டேண்” ...மறுபடியும் பெருமாள் கடையைத் தாண்டி இன்னொரு “லெப்ட் டேண்”போட்டுத்தான் அந்த Dead End ரோடுக்குப் போகமுடியும் .. குறுக்கே காலி மனை இருக்கறதால..

    ஆகாசத்தில முழுசா நிலா ... ஓ...இன்னிக்கி பௌர்ணமி ..இப்பத்தான் ஞாபகம் வருது... லேசா ஜிலு ஜிலுன்னு பால்கனி வழியா காத்து.. பச்சை பசேல்ன்னு பக்கத்து காலி மனை செடி கொடிகள் காத்தில அசைஞ்சு அசைஞ்சு ஆடுது.. நிசப்தமான பௌர்ணமி ராத்திரி... அந்தப் பழைய வீட்டு வாசல் பக்கத்திலயே கார்பரேஷன் புதுசா போட்ட LED லைட் இரவை பகல் மாதிரி காமிக்குது..

    கவிதை எழுதணும்ன்னு மனசில தோணுது..

    எங்கிருந்தோ ஒரு ஆட்டோ மெதுவா சத்தமில்லாம .அந்த பழைய வீட்டு வாசலுக்கு வந்து நிக்குது.. ...என்னது இது இந்த நேரத்தில.. ஆட்டோவிலேந்து ரெண்டு பேர் இறங்கி... அந்த வீட்டுக்குள்ள போறாங்க..

    சட்டுன்னு கண்ணாடிய எடுத்து மாட்டியாச்சு..... எல்லாம் ஒரு க்யுரியாசிடிதான்..

    உள்ளே போன ரெண்டு பேரும் ..ஒரு பொண்ண கையை பிடிச்சு இழுத்துகிட்டு வராங்க.. .. ஆட்டோவில ஏத்தறதுக்கு ...அந்தப் பெண் அழுதுகிட்டே அவங்களோட திமிறி திமிறி முரண்டு பிடிக்குது... அந்தப் பெண்ணுக்கு இருபத்தி அஞ்சு முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும் போல இருக்கு.. ஒரு நீலக் கலர் புடவை உடுத்தி இருக்கறது வாசல் LED லைட் வெளிச்சதில பளிச்சுன்னு தெரியுது......

    யாரோ ரெண்டு பேர் ஒரு பொண்ண கடத்திக்கிட்டு போறாங்க ...போலிசுக்கு போன் பண்ணலாமா ... அட நமக்கு எதுக்கு வம்பு .. பேசாம வேடிக்கை பாக்கலாம்... மனசில நினைப்பு..

    விட்டாப்பிடியா .அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமா.. ஆட்டோவிலே ஏத்தி ... ஆட்டோ கிளம்பிப் போயாச்சு..

    ஒண்ணும் புரியலே... என்னது இது எதிர் வரிசை வீடுகளிலேந்து யாருமே எட்டிப் பாக்கலே.. என்ன மாதிரியே நமக்கெதுக்கு வம்புன்னு இருந்துட்டான்களோ.. தூக்கம் கண்ணை சுத்துது ... காலம்பர யோசிக்கலாம் ..

    காலம்பர எழுந்திருக்கும்போதே ராத்திரி பாத்தது ..மனச உறுத்துது.. சரி அந்தப் பக்கம் போய் என்னான்னு கொஞ்சம் விசாரிக்கலாம்.. நமக்கும் ஏதாவது அக்கப்போர் வேணுமே..

    பதினோறு மணிக்கி சாப்பாட்ட முடிச்சு.. மெதுவா பெருமாள் கடையைத் தாண்டி அந்த Dead End ரோடுக்கு வந்து அந்த பழைய வீட்டு வாசலுக்கு.. [ மனசில சுஜாதா கதை கணேஷ்ன்னு நினைப்பு ]…

    வீட்ட சுத்தி காம்பவுண்ட் சுவர் இருக்கு.. வீட்டுக்கு முன்னால நின்னு வாசல் கதவை பார்த்தபோது ..கதவு பூட்டி இருக்கு.. ரோட்டில் ஒரு ஈ காக்கா இல்லே.. மெதுவா காம்பவுண்டு சுவர் இரும்பு கேட்டு மேலே கையை வெச்சு... கிரீச் சத்தத்தோட லேசா திறந்தது.. எண்ணை போட்டு பல காலம் ஆகியிருக்கும் ...

    பக்கத்தில வாசல் கதவை பார்த்த போது ..ஒரு பெரிய இரும்பு பூட்டு... அது மேலேயும் கதவு மேலேயும் நிறைய புழுதி.. அது மட்டும் இல்லாம வாசல் கதவு நிலைப்படி ரெண்டையும் சேர்த்து குறுக்கும் நெடுக்குமா மரச் சட்டம் அடிச்சிருக்கு .... சுலபமா திறக்க முடியாம...

    ஒண்ணும் புரியலே.. இந்த வீட்டு வாசல் வழியாத்தானே நேத்து ராத்திரி ஒரு பொண்ண வலுக்கட்டாயமா ரெண்டு பேர் ஆட்டோல இழுத்துகிட்டு போனாங்க.. ஆனா இவ்வளவு பலமா ...பாதுகாப்பா இந்த வீடு பூட்டியிருக்கே...

    மெதுவா வீட்ட சுத்தி .... புதர் மாதிரி காட்டுச் செடி ..பாம்பு ஏதாவது இருக்குமோ பயம் வேற.. என் வீட்டு பால்கனியிலேந்து தெரியும் ஜன்னல்கள். .....எல்லா ஜன்னலுக்கும் வாசல் கதவு மாதிரியே குறுக்கும் நெடுக்குமா மரச் சட்டங்கள்... வீட்டு பின்புறம் பார்த்த போது அங்க இருந்த கதவுக்கும் திறக்கமுடியாதபடி ...நிலைபடிக்கும் கதவுக்கும் மரச் சட்டங்கள் ....

    எப்படி இது.. அப்போ பௌர்ணமி வெளிச்சத்தில நான் பார்த்தது ... ??..
    ..............
    யார் சார் ..யாரப் பாக்றிங்க... குரல் கேட்டு சட்டுன்னு அந்த பழைய வீட்டு வாசல்லேந்து திரும்பினால்... எதிர் வரிசையால் .. ரெண்டு அடுக்கு மாடி கட்டிடம் தாண்டி ..மூணாவது கட்டிடம் வாசலில் .. வாட்ச்மன்.. கையை காமிச்சுக் ...கூப்பிட்டார்..நான் வரும்போது அவர் அங்க இல்லே...

    இல்லே ...வீடு ஏதாவது வாடகைக்கி கிடைக்குமான்னு பாக்கறேன்.. இங்க வந்து பாக்கும்போது.. இந்த பழைய வீடு பெருசாவும் எனக்கு வேண்டியதாவும் இருக்கு... ஆனா வீடு பூட்டி இருக்கே... என்னோட பதில்...

    அந்த வீட்டு சொந்தக்காரர் இங்க இல்லே சார்... பம்பாயில இருக்கார்... வேணும்னா நீங்க பெருமாள் கடையில.. பெருமாளப் பாத்து விசாரிங்க.. அவர்கிட்ட வீட்டு சொந்தக்காரர் அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் குடுத்திருக்கறதா கேள்வி...வாட்ச்மன் பதில்...

    ரொம்ப தேங்க்ஸ்... நான் வரும்போது உங்களைப் பார்க்கலே .. இருந்திருந்தா உங்க கிட்டேயே கேட்டுத் தெரிஞ்சிண்றுப்பேன்..

    ஆமா சார்.. நான் டீ சாப்பிடப் போயிருந்தேன்..நீங்க பெருமாள்கிட்ட கேளுங்க..

    நான் ஏன் பெருமாள்கிட்ட கேக்கப் போறேன்.. இருந்தாலும் ... புழுதி படிஞ்சு.... பூட்டியிருக்கற வீட்லேந்து .. எப்பிடி அந்த நீலக் கலர் புடவைப் பெண்ணை இழுத்துண்டு போயிருக்க முடியும்... கேள்வி திரும்ப திரும்ப மனசில...

    ... ஒரு மாசம் ஓடிப் போச்சு.. இந்த ஒரு மாசத்தில சில சமயம் ராத்திரி முழிப்பு வந்து பால்கனி வழியே அந்த பழைய வீட்டையே கொஞ்ச நேரம் பார்த்தது உண்டு.. ஒண்ணும் நடக்கலே..

    இன்னிக்கிக் காலம்பர ஒய்பும் வேலைக்காரியும் எதைப் பத்தியோ சீரியஸா டிஸ்கஷன்.. நடு நடுவில.. ஏதோ இன்னிக்கிப் பௌர்ணமின்னு காதில விழுந்தது.. .. எனக்கொண்ணும் இந்தமாதிரி வெட்டிப் பேச்சில இன்ட்ரஸ்ட் கிடையாது. அதுவும் தவிர என் ஆபீஸ்ல எனக்கு ஜூனியரா இருந்த ஒருத்தர்க்கு ரிடையர்மெண்ட் பார்டி ....எப்போ வெச்சுக்கலாம்னு மத்தவங்ககூட பேசவேண்டியிருந்தது.. நேரம் ஓடிப் போச்சு..
    சாயந்திரம் “மலரும் நினைவுகள்.” போஸ்டுக்கு ரெடி பண்ற வேலை.. அப்பிடி இப்பிடின்னு படுக்கும்போது ராத்திரி பத்தரை மணி.. என்னவோ தெரியலே ..நல்ல தூக்கத்தில இருந்த எனக்கு திடிர்ன்னு முழிப்பு வந்தது.. மணி பார்த்தேன் சரியா ஒரு மணி..

    காலம்பர ஒய்பும் வேலைக்காரியும் இன்னிக்கி பௌர்ணமின்னு பேசிக்கிட்டு இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.. ஏன்னு தெரியலே.. அந்த பழைய வீட்டப் பாக்கணும்னு தோணித்து.. பால்கனியில சேரப் போட்டு...... அந்த பழைய வீட்டை வேடிக்கை.....

    ஒரு ரெண்டு நிமிஷம்தான் ஆகியிருக்கும் ...ரெண்டு மூணு ஆட்டோ அந்த வீட்டு வாசலுக்கு வந்து நின்னு ..அதுலேந்து அஞ்சாறு பேர் இறங்கி தட தடன்னு அந்த வீட்டுக்குள்ள நுழையறது தெரிஞ்சது.. எப்பிடி பூட்டி இருக்கற வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க..மனசில குழப்பம்தான்..

    அஞ்சாறு நிமிஷத்தில எல்லா ஆட்டோவும் திரும்பிப் போறதைப் பார்த்தேன்.. கீழே இறங்கி அந்த வீட்டுக்குப் போய்ப் பாக்கலாமான்னு நினைச்சேன்.. ஆனா தெரு நாய் எல்லாம் துரத்தும் குறைச்சுகிட்டே.. பேசாம காலம்பர பாக்கலாம்ன்னு முடிவு.

    மறுநாள் .. பிசி.. காலம்பர ஆபீசுக்கு.. ஜூனியர் ரிடையர்மண்ட் பார்ட்டி.. திரும்பி வரும்போது மத்தியானம் மூணு மணி.. பால்கனி வழியா.. அந்த பழைய வீடு மட்டும் கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கு..

    ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னால பல்ல பிரஷ் பண்றது வழக்கம்.. துரதிர்ஷ்டம் பேஸ்ட் டியூபில கொஞ்சம்தான் இருக்கு .. டியூப பிதிக்கி பிதிக்கி பேஸ்ட வெளியில எடுத்து ......ஒரு வழியா பல்ல தேச்சுட்டு.. கவலை ...காலம்பர பல் தேக்க பேஸ்ட் வேணுமே.. மணி பார்த்தேன் ஒன்பதரைக்கி மேலே கொஞ்சம்.. பெருமாள் கடை பத்து மணி வரைக்கும் உண்டு.. அவசர அவசரமா வீடுக்காரிகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு.... பெருமாள் கடைக்கி வரும்போது கிட்டத்தட்ட பத்து மணி...

    கடையை மூடற நேரம்.. வெளியில வெச்சிருந்த கடை சாமான்களை எல்லாம் ஒவ்வொண்ணா .உள்ளே தூக்கி வெச்சிண்றுந்தாங்க.. என்ன சார் இந்நேரத்திலே பெருமாள் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு ..டூத் பேஸ்ட் வாங்கி பணம் குடுத்துட்டு கடையை விட்டு வெளியில வரும்போது மணி ராத்திரி பத்தேகாலுக்கு மேலே..

    மனசில திடிர்ன்னு ஒரு நினைப்பு .. காலம்பர பாக்க முடியலே .. இப்போ போய் அந்த பழைய வீட்டப் பார்த்தா என்னன்னு .. சரி இவ்வளுவு தூரம் வந்தாச்சு போய் பார்த்துட வேண்டியதுதான்னு நடந்து அந்த வீட்டு வாசலுக்கு வந்த போது... ..

    ஆச்சரியம் .. வாசல் கதவுக்கு குறுக்கும் நெடுக்குமா அடிச்சிருந்த மரச்சட்டங்கள் ஒண்ணக்கூட காணோம் ..

    சரி வீட்டுக்கு யாரோ குடி வந்துட்டாங்க போல இருக்குன்னு நினைக்கும்போது ...பக்கத்தில ஒரு ஆட்டோ சத்தம் இல்லாமல் வந்து நின்னது.. வீட்டுக்கு பக்கத்தில வந்தாச்சுன்னு என்ஜினை ஆப் பண்ணிட்டாங்க போல இருக்கு..

    அதுலேந்து ஒரு இளைஞனும்.. பொண்ணும் இறங்கி.. யார் சார் என்ன பாக்கறிங்க..... அந்த இளைஞனின்...கேள்வி....

    இல்லே .. வந்து ...வீடு ஏதாவது வாடைகைக்கி கிடைக்குமான்னு தேடிகிட்டு இருக்கேன். ..பெருமாள் கடையில டூத் பேஸ்ட் வாங்க வந்தேன் .. எதுத்தாப்பில வாச்மன் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன்.. அப்பிடியே அவரையும் பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன் ..அவரைக் காணோம் .. இந்த வீடு கூட பூட்டி இருந்ததே.. கொஞ்ச நாளைக்கி முன்னால பார்த்தேனே..

    ஆமாம் சார்.. நேத்திக்கி பௌர்ணமி ஆச்சே எனக்கும் இவளுக்கும் பௌர்ணமி ரொம்ப பொருத்தமான நாள்.. அதான் நேத்திக்கி குடி வந்துட்டோம்..

    பேசிக்கிட்டே அந்த இளைஞன் காம்பவுண்டு கேட்ட தள்ளி .... வாசக் கதவ திறந்து உள்ளே போனான்.. அவன் பின்னாலயே அவன் கூட வந்த பொண்ணும் .. உள்ளே போனதும் வாசல் கதவு சாத்தப்பட்டது..

    அப்பத்தான் சடார்ன்னு உறைச்சது.. அந்தப் பெண் கட்டியிருந்தது ...

    “நீலக் கலர் புடவை..”
    ................
    மனசில சில சந்தேகங்கள் வட்டம்போட ஆரம்பித்தன...வீட்டுக்கு வந்ததும்......
    போனமாசம் அதாவது February மாசம் பௌர்ணமி அன்னிக்கி அந்த வீட்லேந்து ஒரு பெண்ணை வலுக்கட்டாயமா ஆட்டோவில ஏத்திக்கிட்டு போனதைப் பார்த்தேன்.. பூட்டியிருந்த வீட்டிலேந்து எப்பிடி ஆட்டோவில வந்த ரெண்டு பேரும் அந்த பெண்ணை இழுத்துக்கிட்டு போனாங்க.. ஆனா இப்போ இந்த March மாசம் பௌர்ணமி அன்னிக்கி ..நேத்திக்கி ..குடி வந்ததா அந்த இளைஞன் சொல்றான்..கூட ஒரு பெண்ணும் ...

    ரெண்டு நேரத்திலையும் பெண் கட்டி இருந்தது நீலக் கலர் புடவைதான்.. ..அப்போ பார்த்ததும் இப்போ பார்த்ததும் ஒரே பெண்ணா இருந்தால் ....?? அது எப்பிடி முடியும்.. யோசிக்க யோசிக்க குழப்பம்தான் மிஞ்சித்து.. ............தூங்கிப் போனேன்..

    மறு நாள் காலம்பர வீட்டுக்காரி ஒரு சின்ன சாமான் லிஸ்ட குடுத்து ..வாங்கிக் குடுங்கன்னு ஆர்டர் போட்டாச்சு....கொஞ்சம்தான் பெருமாள் கடையிலயே வாங்கிடலாம் .. இதுக்காக வெங்கடேஸ்வரா சூப்பர் மார்க்கெட் வரைக்கும் போக வேண்டாம்னு ....பெருமாள் கடையில குடுத்து ..வீட்டில டெலிவரி பண்ணச் சொல்லி ..பணமும் குடுத்துட்டு ..கடைக்கி வெளியே வரும்போது...

    என்ன சார்... வீடு ஏதாவது வாடகைக்கி கிடைச்சதா.. கடை வாசலில் அந்த எதிர் வரிசை மூணாவது கட்டிட வாட்ச்மன் .. நின்னு ..விசாரிப்பு...

    அடேடே ..நீங்களா .. இன்னும் கிடைக்கலிங்க ..தேடிக்கிட்டு இருக்கேன் .. நேத்து ராத்திரி கூட உங்களை பாக்கலாம்னு வந்தேன் ...நீங்க இல்லே.. ..என் பதில்

    நான் இப்போ பகல் டூட்டி சார்... ஆமா நீங்க எந்தமாதிரி வீடு பாக்கிறிங்க...வாட்ச்மன் ..கேட்டதுக்கு ..அதுவா.. அது தனி வீடா கிடைச்சா பரவாயில்லே ...
    அதாங்க ... உங்க அப்பார்ட்மெண்டுக்கு எதிர் வரிசையில் இருக்கே அந்த பழைய வீடு ..அந்த மாதிரி இருந்தா ரொம்ப வசதியா இருக்கும் .. அது கூட வாடகைக்கி போயிடுச்சு போல இருக்கே .. நான் பார்த்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சே அந்த வீட்ட.. ....என்னோட பதில்.....

    வாடகைக்கி போயிடுச்சா ..யார் சார் சொன்னது.. அப்பிடி ஒண்ணும் கிடையாது .. சார்.. அந்த வீட்டுக்கு யார் சார் வரப் போறாங்க..

    என்ன நீங்க இப்பிடி சொல்றிங்க.. நேத்திக்கி நான் பார்த்தேனே .. உங்களைப் பாக்க ராத்திரி பத்து மணிக்கி மேல வந்தப்ப... ஒரு பயைனும் பொண்ணும் குடுத்தனம் வந்திருக்காக.. அந்த பையன் கூட என்கிட்ட பேசினானே .. எதுக்கு வந்திங்கன்னு கேட்டானே..

    சார் நீங்க சொல்றது எதுவும் எனக்குப் புரியலே.. அந்த வீட்டுக்கு யாரும் குடுத்தனம் வரலே.. வரவும் மாட்டங்க.. உங்களுக்கு சந்தேகம்னா இப்பவே வாங்க .. வந்து பாருங்க ...வாட்ச்மன் பதிலில்... எனக்குக் குழப்பம்தான்..

    சரி பார்ப்போம்னு அவர் கூடப் ..போய் அந்த வீட்ட பாக்கும்போது.. அதிர்ச்சியில் தலை சுத்தி கீழே விழாதது ஆச்சரியம்தான்.. ஒரு மாசத்துக்கு முன்னால....அந்த வீடு எப்பிடி இருந்ததோ ..அப்பிடியே இருக்கு.. அதே புழுதி படிஞ்ச பெரிய பூட்டும் ..வாசல் கதவும்.. வாசல் கதவுக்கு குறுக்கும் நெடுக்குமா அதே மரச் சட்டங்கள்..

    என்ன சார் பாத்திங்களா.. யாரும் குடுத்தனம் வரலே.. நீங்க எப்பிடி யாரையோ பார்தேன்னு சொல்றிங்க..

    இல்லேங்க.. நேத்திக்கி பெருமாள் கடைக்கி வந்துட்டு இங்க வந்தேன்... அப்போ ஆட்டோவில ஒரு பையனும் பொண்ணும் இங்க வந்து இறங்கினாங்க.. அந்த பையன் .. நான் யார் எதுக்கு வந்த்ரிக்கிங்கன்னு..கேட்டதுக்கு ..பதில் சொன்னேன்..
    அதுக்கு அந்த பையன் .. நேத்திக்கி பௌர்ணமி ...எங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமான நாள் ..அதான் குடுத்தனம் வந்துட்டோம்னு சொன்னான்.. அப்போ வாசல் கதவு மேல அடிச்சிருந்த மரச்சட்டங்கள் எதுவுமே இல்லை..
    வாசக் கதவ திறந்து ரெண்டு பெரும் உள்ள போய் கதவைச் சாத்திட்டங்க.. கூட வந்த பொண்ணும் கொஞ்சம் அழகா இருந்தா... நீல கலர் புடவை கட்டியிருந்தா..

    என்னது... அந்த பெண் நீலக் கலர் புடவை கட்டியிருந்தாளா...நீங்க சரியா பாத்திங்களா ....வாட்ச்மன் முகத்தில் ஏன்னு தெரியலே கவலையா .. இல்லே கலவரமான்னு தெரியலே..

    ஆமாங்க ..வாசல்ல LED லைட் வெளிச்சதில நல்லா தெரிஞ்சது...

    ஹ்ம்ம்ம்....வாட்ச்மன் எதுவும் பேசாமல்.. என்னையே ஒரு கணம் பார்த்தார்..
    சார்.. இந்த வீட்ட இனிமே இங்க வந்து பாக்காதிங்க.. உங்களுக்கு வேணாம்.. நீங்க நேத்திக்கி பத்திரமா.. வீடு போய் சேர்ந்ததே உங்க அதிர்ஷ்டம்னுதான் சொல்லுவேன்..

    என்னது எதுக்கு இப்பிடி சொல்றிங்க.. என் கேள்வி..

    சொல்றேன் சார் வாங்க... எதிர் வரிசையில் மூணு வீடு தள்ளி இருந்த அவர் பில்டிங்க்குக்கு.. வாசலில் காம்பவுண்டு சுவர் ஒட்டி போட்ருந்த சிமிண்ட் பெஞ்சில் ரெண்டு பேரும் .....

    சார் .. நான் 2017 ம் வருஷம் இங்க வேலைக்கி வந்தேன்.. இப்போ எனக்கு அம்பது வயசு ஆகப் போறது.. இப்போ நான் சொல்லப் போறத.. நம்பணும் நம்ப வேண்டாம் ரெண்டும் உங்க இஷ்டம்..

    சரி சொல்லுங்க ..கேக்கறேன் ..என் பதில்..

    அந்த வீட்டில் இதுக்கு முன்னால ரெண்டு மூணு பேமலி இருந்து காலி பண்ணிட்டு போய்ட்டாங்க.. ...2020 ம் வருஷம் ..January மாசம் பொங்கலுக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு ஒரு பையனும் பொண்ணும் குடி வந்தாங்க.. ஒரு பத்து நாள்லியே எங்க எல்லார் கூடவும் ரெண்டு பேரும் நல்லா பழகினாங்க..

    அப்போ ..அந்த வீட்டுக்கு எதிரே கட்டிடம் கிடையாது.. காலி மனையாத்தான் இருந்தது.. அந்த பெண்.. இங்கே இருக்கற லேடிஸ் கூட நல்லா பேசுவாங்க ..வருவாங்க.. நாங்க அப்போ தெரிஞ்சகிட்டது .. ரெண்டு பேருக்கும் சின்ன வயசுதான்.. அந்தப் பையன் ஓரு மெடிகல் கம்பனியில வேலை பார்த்ததும் அடிக்கடி டூர் போவான்னும் தெரிஞ்சது..
    அது மட்டும் இல்லே ..ரெண்டு பேரும் கலப்புத் திருமணம்தான்.. ஜாதி விட்டு ஜாதி ...ரெண்டு பேர் வீட்லியும் பலத்த எதிர்ப்பு ...கோயில்ல வெச்சு தாலி கட்டிண்டு ..ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அவங்க கல்யாணம் பொங்கலுக்கு நாலு நாளைக்கி அப்புறம் நடந்திருந்தது..

    அடுத்த மாசம் .. 2020 February ..மாசம் ...நான் இங்கே அன்னிக்கி நைட் டியூட்டி பார்த்துகிட்டு இருந்தேன் ..பொர்ணமி ..பளிச்சுன்னு நிலா வெளிச்சம் இருந்தது.. அப்போ இந்த LED லைட் எல்லாம் இங்க கிடையாது.. டியுப் லைட்தான்.. இதோ இந்த பெஞ்சில்தான் உக்காந்திருந்தேன்.. அப்போ ராத்திரி ஒரு மணி இருக்கும் .. ஒரு ஆட்டோவில ரெண்டு பேர் வந்து அந்த பெண்ணை வீட்டிலேந்து கையைப் பிடிச்சு இழுத்து பலவந்தமா ஆட்டோவில ஏத்திகிட்டு போனாங்க..

    எனக்கு ஒண்ணும் புரியலே ...சத்தம் போட்டுப் பார்த்தேன் ஒண்ணும் நடக்கலே .. ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுத்து.. அந்தப் பையன் அப்போ டூர் போயிருந்தான் போல இருக்கு .. அவனைப் பார்க்கலே..

    எங்க கீழ் வீடுக்கறர எழுப்பி நடந்ததை சொன்னதுக்கு ..அவர் அதை ஒண்ணும் பெருசா எடுதுக்கலே... நீ தூங்கி இருப்பே .. தூக்கத்தில கனவு கண்டுருப்பேன்னு சொல்லி அனுப்பிட்டாரு.. ஆனா மணி நாலு இருக்கும் ஒரு போலிஸ் வண்டி வந்து நின்னது ..அதுலேந்து அந்த பெண் இறங்கி வந்தாள் கூடவே ரெண்டு போலீஸ்காரங்களும் வந்து அந்தப் பெண்ணை வீட்டில கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க..

    மறுநாளைக்கி அந்த பையன் டூர்லேந்து ஓடி வந்துட்டான்.. அதுக்கப்புறம்தான் எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சது..

    ............
    அந்தப் பெண்ணைக் கடத்திகிட்டு போனவங்க ... மெயின் ரோடு போனவுடனேயே அங்கே நைட் பீட்ல இருந்த போலிஸ் வண்டிகிட்ட மாட்டிகிட்டாங்களாம்.. போலிஸ் சந்தேகப் பட்டு அந்த ஆட்டோவ நிறுத்தி விசாரிச்சப்ப.. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே தன்னை இவங்க கடத்திகிட்டு வராங்கன்னு சொல்லிச்சாம்.. போலிஸ் எல்லாரையும் ஸ்டேஷனுக்கு தள்ளிக்கிட்டு போய் ..அந்த பொண்ணுகிட்ட கம்ப்ளைண்ட் எழுதி வாங்கிகிட்டு.. அந்த ஆட்டோ டிரைவர் ..மத்த ரெண்டு பேர் எல்லாரையும் ஜெயில்ல தூக்கிப் போட்டு.. இந்தப் பெண்ணை காலையில நாலு மணிக்கி கொண்டுவந்து வீட்ல விட்டுடாங்களாம்..

    இதைக்கேட்டதும் .. இந்த அப்பார்ட்மெண்ட் இருக்கறவங்க எல்லாருமே ரொம்ப வருத்தப்பட்டாங்க.. கீழ் வீட்டுக்காரர் கூட என்ன பாராட்டினாரு.....அந்த பையனும் அடுத்த ஒரு வாரத்தில வேற கம்பனிக்கி மாத்திக்கிட்டான். டூர் எங்கேயும் போகலே..
    இதுலே வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னான்னா அந்த பொண்ணை கடத்திகிட்டு வர ஏற்பாடு பண்ணினதே அந்த பொண்ணோட அப்பன்தான்.. ரெண்டு அடி ஆள்களை அனுப்பிச்சு அந்த பொண்ணை தூக்கிகிட்டு வந்து அவங்க வீட்ல விடறதுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தான்.. அவனையும் போலிஸ் பிடிச்சு .. கேஸ் போட்டு .. அதுக்கப்புறம் அவன் ஜாமீன் வாங்கிட்டதா தினத்தந்தி பேப்பர்ல நியுஸ் வந்தது..

    ஆனா பாருங்க அவங்களை விதி விட்டு வைக்கலே.. ஒரு மாசம்தான்.. அடுத்த March மாசம் .. அன்னிக்கி பௌர்ணமி .. நான் நைட் டூட்டி ... இதோ இந்த இடத்தில ....ராத்திரி ஒரு மணிக்கி ... மூணு ஆட்டோ வந்து அந்த வீட்டுக்கு முன்னால நின்னது.. அதுலேந்து அஞ்சாறு பேர் இறங்கி திபு திபுன்னு அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க....வாசல் கதவ எப்பிடித் திறந்தாங்கன்னு இங்கிருந்து சரியாத் தெரியலே..
    அவங்க உள்ளே போனதும் .. ஐயோ.. ஐயோன்னு அந்த பையனும் பொண்ணும் கத்தினது .. நல்லா கேட்டது.. வெட்டுங்கடா ..வெட்டுங்கடான்னு... எவனோ கத்தினதும் கேட்டது.. அந்தசத்தம் இங்கே அபார்ட்மெண்ட்ல இருக்கற கீழ் வீட்டுக்காரர்.. மேல் வீட்டுக்காரர் எல்லாருக்கும் கேட்டு லைட்ட போட்டு வெளியில வந்தாங்க..

    அதுக்குள்ள.. அந்த ஆட்டோவில வந்தவங்க.. அதுல ஏறி கிளம்பி ஓடிட்டாங்க.. நாங்க அஞ்சாறு பேரு .. அந்த வீட்டுக்குப் போனோம் ..வாசல் கதவு திறந்து கிடந்தது.. உள்ளே போனபோது ஹால் தரையெல்லாம் ரத்தம்.. .. பெட் ரூமில்ல பாத்தப்போ ..அந்த பையனும் பொண்ணும் ரத்த வெள்ளத்தில கிடந்தாங்க..
    போலிசுக்கு போன் பண்ணி ..அவங்க வந்து ...ஆம்புலன்ஸ் கொண்டுவந்து அந்த பையனையும் பொண்ணையும் ஆஸ்பத்திரிக்கி கொண்டு போனாங்க.. ஆனா பலன் இல்லே.. அவங்க செத்துப் போய் ...அதுவும் இந்த வீட்டிலியே .. ரொம்ப நேரம் ஆச்சுன்னு போலீஸ்ல சொன்னங்க..

    என்னையும் விசாரிச்சாங்க .. நடந்ததைச் சொன்னேன்.. கேஸ் கோர்ட்ல வரும்போது சாட்சியா வரணும்ன்னு சொன்னங்க.. சரின்னு சொல்லிட்டேன்.. மேற்கொண்டு போலிஸ் விசாரணையில் தெரிஞ்சது .. அந்தப் பொண்ணோட தாய் மாமன்தான் அந்த மாதிரி வெளி ஆள்களை வெச்சு ..அந்த பையன் பொண்ணு ரெண்டு பேரையும் தீத்துக் கட்டிட்டான்னு தெரிஞ்சது.. அவனையும் அவன் ஆட்களையும் பிடிச்சு .. ஜெயில்ல போட்டாங்க.. ஏற்க்கனவே அந்தப் பொண்ணோட அப்பன் ஜாமின்ல இருந்தான்.. இப்போ தாய்மாமன் அவங்களை போட்டு தள்ளிட்டான்..

    இதுல கொடுமை என்னன்னா... போலீஸ்ல சொல்லியும் .. அந்த பையன் பொண்ணு ரெண்டு பக்கத்து உறவுக்காரங்க யாரும் வந்து அவங்களுக்கு கடைசிக் காரியம் எதுவும் செய்யாம ..போலிஸ் அவங்களை அநாதை பிணங்களா எரிச்சாங்களாம் .. தினத்தந்தி பேப்பர்ல எல்லாத்தையும் எழுதி இருந்தாங்க..

    அதுக்கப்புறம் தகவல் தெரிஞ்சு வீட்டு சொந்தக்காரர் பம்பாயிலேந்து வந்தார்.. இங்க எங்க கூடஎல்லாம் பேசினார்.. இனிமே கொலை நடந்த அந்த வீட்டுக்கு யாரும் குடுத்தனம் வரமாட்டங்கன்னு வாசல் கதவு பின் கதவு எல்லாத்துக்கும் பூட்டி மரச் சட்டம் அடிச்சுட்டுப் போயிட்டார்.. கூடியசீக்கிரம் அந்த வீட்ட வித்துடணும் இல்லே இடிச்சுடணும்னு சொன்னார்.. ஆனா இது வரைக்கும் ஒண்ணும் நடக்கலே..

    அப்போ நீங்க சொல்றபடி பார்த்தா ..அந்த வீட்டில ரெண்டு கொலை நடந்திருக்கு இல்லையா.. என் கேள்வி..

    ஆமாம் சார்.. ஆனா இனிமே நான் சொல்றதை நீங்க நம்பணும்..

    சரி சொல்லுங்க ..கேக்கறேன்..

    அந்தக் கொலை நடந்தது 2020 ம் வருஷம் March மாசம் பௌர்ணமி அன்னிக்கி.. அதுக்கப்புறம் ..சரியா ஒரு வருஷத்துக்கு அப்புறம் ரெண்டு விஷயம் நடந்தது.. நான் எக்ஸ் சர்விஸ்மன் சார்.. ஆர்மி.. பயம்னா என்னான்னே தெரியாது.. இருந்தாலும் நான் பார்த்த ரெண்டு விஷயத்திலேயும் என் உடம்பு கொஞ்சம் ஆடித்து..

    2021 ம் வருஷம் அதே February மாசம் ... பௌர்ணமி .....அன்னிக்கி நான் இங்கதான் நைட் டுட்டி.... ராத்திரி ஒரு மணிக்கி ஒரு ஆட்டோவில ரெண்டு பேர் இறங்கி அந்த வீட்டிலேந்து ஒரு பொண்ண வலுக்கட்டாயமா இழுத்துகிட்டு போறதப் பார்த்தேன்..

    எனக்கு ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் ஆச்சரியம்.. எப்பிடி பூட்டின வீட்லேந்து அந்தப் பெண்ணை இழுத்துட்டுப் போனாங்கன்னு.. பக்கத்தில காலம்பர போய்ப் பார்த்தேன்.. பூட்டின வீடு பூட்டின படியே இருந்தது..

    மறுபடியும் ..அடுத்த மாசம் March மாசம் இதே நைட் டுட்டி...பௌர்ணமி அன்னிக்கி ...மூணு ஆட்டோ வந்தது அந்த வீட்டுக்கு ராத்திரி ஒரு மணிக்கி ...அதுலேந்து இறங்கினவங்க அந்த வீட்க்குள்ள போறதப் பார்த்தேன்.. வீடுக்குளேந்து ஒரு பொண்ணு பையன் அலறல் சத்தம் கேட்டது.. அதுவும் பூட்டி இருக்கற வீட்டிலேந்து..
    உண்மையிலயே நான் பயந்து போனேன்.. அந்த ஆட்டோவெல்லாம் கிளம்பிப் போனபிறகு.. இங்கே குடியிருக்கரவங்கள...எழுப்பலாமான்னு நினைச்சேன்.. ஆனா அந்த அலறல் சத்தம் அவங்களுக்கு கேட்ருக்காது..இப்போ போய்ச் சொன்னா என்ன பைத்திக்காரன்னு நினைச்சிட்டா என்ன பண்றதுன்னு பேசாம இருந்துட்டேன்..

    ரொம்ப யோசிச்சேன்.. கிரிக்கட் மேட்சில ஒருத்தர் அவுட் ஆனதும் மறுபடியும் அதையே டி வி ல காமிப்பான்களே அதுக்கு பேரு என்ன..

    ஆக்க்ஷன் ரி.ப்ளேன்னு சொல்லுவாங்க...என் பதில்..

    ஆங்....அது மாதிரி அந்தப் பொண்ணைக் கடத்தினது.. அந்த பையன் பொண்ணு ரெண்டு பேரையும் கொலை செஞ்சது எல்லாத்தையும் .. ஒரு வருஷத்துக்கு அப்புறம் அதே நாள்ல ஆக்க்ஷன் ரி.ப்ளேயா தெரிஞ்சது..

    இந்த வருஷம் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது ..ஏன்னா February March ரெண்டு மாசமும் பௌர்ணமி அன்னிக்கி எனக்கு பகல் டுட்டி.. வேற ஒரு வாட்ச்மன் நைட் பார்த்தார்.. அவருக்கும் அப்பிடி தெரிஞ்சதா என்னான்னு நான் கேக்கலே ..அவரும் சொல்லலே..

    ஆமாம் இந்த 2022 ம் வருஷமும் February March மாசத்தில இவர் சொன்ன ஆக்ஷன் ரி.ப்ளேய நான் பார்த்தேன்னு சொல்ல வாயெடுத்தேன்...ஆனா சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்..

    அப்போ நேத்திக்கி அந்த பையன் பொண்ணு ரெண்ட் பேரையும் நான் பார்த்தது.. நான் இழுத்தேன்..

    அது எக்ஸ்ட்ராவா இருந்திருக்கும் உங்களுக்காக.. நல்ல வேளை ..நீங்க தப்பிச்சிங்க.. இன்னொரு விஷயம்.. நீங்க நேத்திக்கி பார்த்தப்ப அந்த பொண்ணு நீலக் கலர் புடவை கட்டியிருன்தாள்ன்னு சொன்னிங்க இல்லையா...

    அந்த 2020 ம் வருஷம் கொலை நடந்த அன்னிக்கி நாங்க எல்லாரும் போய்ப் பார்த்தோம்னு சொன்னேன் இல்லையா.. அப்போ அந்த பொண்ணு ரத்த வெள்ளத்தில கிடந்தா.. அவள் கட்டியிருந்தது ...

    “ நீலக் கலர் புடவை.” ....

    எதுக்கும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்குங்கன்னு எனக்கு வாட்ச்மன் அட்வைஸ்.. சரின்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்த அப்புறம்.. பால்கனி வழியே பக்கத்தில அந்த வீட்ட பாக்கும்போது மனசில கொஞ்சம் கிலிதான்..

    அப்போ ...ஒவ்வொரு வருஷமும் அதே February March மாசத்தில பௌர்ணமி அன்னிக்கி ....நடந்த கடத்தல்.... கொலைகள் எல்லாம் ஆக்க்ஷன் ரி.ப்ளேயா நடக்குதுன்னு புரியுது..

    ம்ம்ம்.....நேத்திக்கி ராத்திரி பத்தரை மணிக்கி நான் பேசிக்கிட்டு இருந்தது... ரெண்டு வருஷத்துக்கு முன்னால கொலை செய்யப்பட்டு செத்துப் போன பையனோடயா.. .. .. ஐயோடா .....நினைச்சாலே அடி வயத்தில புளிய கரைக்கிறது..

    மறுபடியும் அடுத்த வருஷம் 2023 ம் வருஷம் February March மாசத்தில பௌர்ணமி அன்னிக்கி இதே மாதிரி ஆக்க்ஷன் ரி.ப்ளே.. நடக்குமா ..இல்லே அதுக்குள்ள அந்த வீட்ட இடிச்சுடுவாங்களா..

    ம்ம்ம்ம்....பாக்கலாம் .....காத்திருப்போம்..

    டி.வி.கே.















     
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நன்றி. தலைப்பு “திகில் சுழல்” அல்லது “ தவிப்பு சுழல்” “ நீலப்பேயும் நானும்”....
     
  3. krishna46

    krishna46 Silver IL'ite

    Messages:
    161
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    மிக்க நன்றி...
     
    Thyagarajan likes this.

Share This Page