1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை

Discussion in 'Posts in Regional Languages' started by MULLAI62, Dec 17, 2020.

  1. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை -1


    ஆண்டாள் அருளியது
    பாடல் 1
    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

    பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்
     
    Last edited: Dec 17, 2020
  2. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை – 2
    Dear Bakthas, Today being the second day of Margazhi “ posting on Vaiyaththu vaazhveergaal(வையத்து வாழ்வீர்காள்). . Readers are requested to recite the THIRUPAVAI and be blessed:

    பாடல் 2
    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
    செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத்துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

    பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
     
  3. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    திருப்பாவை பாடல் 3

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்
    (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

    பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்
     
  4. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 4
    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.
    பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
     
  5. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 5
    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
    தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

    விளக்கம்: "உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

    பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்
     
  6. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 6

    புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
    பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
    வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.
    பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.
     
  7. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 7

    கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
    சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
    காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
    வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
    ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
    நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
    தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. "கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள
    மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.
    பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.
     
  8. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 8
    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
    கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
    ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


    விளக்கம்: திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.

    பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.
     
  9. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 9
    தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
    தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
    மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
    ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
    ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
    மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

    பொருள்: பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.
     
  10. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 10
    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
    நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
    தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: யாராவது நன்றாகத் தூங்கினால் "சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன "ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.

    பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.
     

Share This Page