1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காலத்தின் ஆளுமை

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Aug 15, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: காலத்தின் ஆளுமை :hello:

    முப்பது ஆண்டுகளுக்கு முன்.
    காரைக்குடியில் கம்பர் விழா; என் தலைமையில் கவியரங்கம்.
    இத்தகு சபையினில், சினிமாக்காரர்களை ஏற்ற மாட்டார் திரு. கம்பனடிப் பொடிகள்.
    விதிவிலக்காக-
    கண்ணதாசனைக் கவியரங்கத் தலைமைக்கு அழைத்தார். அடுத்த வருடம் அடியேனுக்கு வந்தது அந்த வாய்ப்பு.
    'வாலியைக் கூப்பிடலாம்; வாலியைக் கூப்பிடலாம்’ என்று கம்பனடிப் பொடிகளுக்கு விடாமல் வேப்பிலை அடித்தவர் - காரைக்குடி மக்கள் கவிஞர் திரு. அரு.நாகப்பன்.
    ஒருவழியாக, என்னை ஏற்றுக்கொண்ட கம்பனடிப் பொடிகள் -
    'கவிதையை, வாலி முன்கூட்டியே அனுப்ப வேண்டும்’ என்று ஒரு கண்டிஷன் போட்டார்.
    அதற்கு நான் 'அது சாத்தியமில்லை’ என்று சொன்ன கையோடு -
    'நான் திருச்சியில் வந்து இறங்குவேன்; அங்கிருந்து என்னைக் காரைக்குடிக்குக் காரில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னேன்.
    ஏனெனில், சென்னையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்வதானால் - அது மெயின் லைன் வழியாகத்தான் போகும்; தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்!

    'இப்படிக் கண்டிஷன் போடுகிறானே!’ என்றெண்ணாமல் -
    கொஞ்சம் வெகுளியோடும் கொஞ்சம் வியப்போடும் -
    என் வேண்டுகோள்களை ஏற்றார், சட்டையைச் சட்டை செய்யாத கம்பனடிப் பொடிகள்; ஆம்; அவர் சட்டை அணியாதவர்!

    மயிலாசனத்தில் நான்;
    ம.வே.பசுபதி, மரியதாஸ், அரு.நாகப்பன், பெரி.சிவனடியான், தமிழவேள், கம்பராமன், பாவலர் மணிசித்தன் முதலிய மகாக்கவிகள் என் தலைமையில்!
    முன் வரிசையில்- ம.பொ.சி; ஏ.என்.சிவ ராமன்; ஜஸ்டிஸ் மகராஜன்; கி.வா.ஜ; அ.ச.ஞானசம்பந்தம், தெ.பொ.மீ; ஜி.கே.சுந்தரம் -

    என முத்தமிழில் துறைபோன மூதறிஞர் பலர்.
    தகவார்ந்த மனிதரும் தருக்கேறி என்னணம் தரைசேர்ந்தார் என்பது பற்றிப் பாடினேன்.
    '
    மனத்தாலே மனிதகுலம்
    மேம்பா டெய்தும்; நல்ல
    மனங்கெட்டால் மானுடம்தான்
    மெல்லச் சாகும்; கொண்ட
    தனத்தாலே கல்வியாலே
    தருக்கு ஏறித் - தலை
    கனத்தாலே கனத்த தலை
    கவிழ்ந்து போகும்!’

    - இப்படிப் பாடிவிட்டு, இதற்கு உதாரணமாய் இலங்கை வேந்தைச் சொன்னேன்.
    'விலங்கு மனம் கொண்டிருந்தான்
    இலங்கை வேந்தன்; அந்த
    விலங்கு இனம் தன்னாலே
    வீழ்ச்சி யுற்றான்; சிறு
    குரங்கு என அதன் வாலில்
    தீ வைத்தானே - அது
    கொளுத்தியதோ அவனாண்ட
    தீவைத்தானே!’
    - இதைக் கேட்டு 'தீவைத்தானே சிலேடை பிரமாதம்’ என வாய்விட்டுக் கூவிக் கை தட்டினார் சிலம்புச் செல்வர்!


    கவியரங்கம் முடிந்த பின், முன் வரிசையில் அமர்ந்திருந்த கி.வா.ஜ மேடைக்கு வந்து, என் முதுகில் தட்டிக் கொடுத்து 'நீர் பாடியபடி - நீர் எந்தக் காலத்திலும் தருக்கில்லாமல் இருக்கக் கடவது!’ என ஆசீர்வதித்தார்.

    நான் - அன்று முதல் 'நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்!
    செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது.

    இதைத்தான் 'விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!

    இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்கவைக்கிறது!
    '
    இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’
    இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!
    எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படிஒரு சிரமம்?

    ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.
    அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவிவிட்டு, ''வாலி! உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!''
    எவ்வளவு பெரிய நடிகர்!

    எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கி யவர்!
    படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?

    என் வீட்டு வாசலில் ஒரு Taxi; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் -

    நான் நூறு சுக்கல்களாய் நொறுங்கிப் போனேன்!

    சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
    இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
    நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன்தான்; இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று

    அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.
    'ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார்.
    அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன் -
    அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!

    காலம் எப்படியெல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை!
    இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!


    என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய *திரு.இளங்கோவன்!*

    என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான *திரு.சந்திரபாபு அவர்கள்!*

    நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் *திருமதி.சாவித்திரி அவர்கள்!*

    எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் -தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - *திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்!*

    இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்:
    *அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!*


    கவிஞர் வாலி ஐயாவின் "நினைவு நாடாக்கள்"
     
    vidhyalakshmid likes this.

Share This Page