1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கூரியரில் வந்த மரணம் - Death by courier

Discussion in 'Stories in Regional Languages' started by crvenkatesh, Jun 24, 2014.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    A Short story written by C.R.Venkatesh

    மென்மையாக ஒலித்த i phone அலாரம் சப்தத்தினால் கண் விழித்த பூங்கொடி, அழகாக சோம்பல் முறித்தாள். அவள் சோம்பல் முறித்த அழகைப் பார்த்திருந்தீர்களானால் செய்துகொண்டிருக்கும் வேலையை ரிசைன் பண்ணிவிட்டு கவிதை எழுத புறப்பட்டு விடுவீர்கள்.

    பூங்கொடிக்கு இன்று பிறந்த நாள்.பதினெட்டு முடிகிறது. கண்டதும் காமுற வைக்கும் அகநானூற்று பெண் ரகம். காலேஜ் முதல் வருடம் படிக்கிறாள்.
    கல்லூரிக் கனவுக் கன்னி. அவளைக் காதலிப்பவர்கள் ஏராளம். ஆனால் அவள் காதலிப்பது முரளியை.

    முரளி என்கிற முரளிதர் சென்னையின் பிரபல நகைக்கடை அதிபர் ராமசாமி செட்டியாரின் ஒரே மகன். பார்க்க ரொம்ப சுமார் என்றாலும் இந்த க்வாலிபிகேஷன் தான் பூங்கொடியை அவன்பால் ஈர்த்தது. அவளுக்கு சுகவாழ்வு வாழும் ஆசை ரொம்ப ஜாஸ்தி. அவள் அப்பாவே நகரின் பணக்காரர்களில் ஒருவர் தான். பஞ்சு மெத்தைகளில் புரண்டு புதுரக ஆடைகள் அணிந்து பெரிய கார்களில் ஊர்சுற்றிப் பழகிய அவளுக்கு முரளி ஏற்றவனாகத் தெரிந்ததில் அதிசயம் இல்லை.

    அவளுடைய இந்த பிறந்த நாளுக்கு கார் பரிசளிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றான். ஆனால் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்னர் இந்த மாதிரி விலை உயர்ந்த பரிசுகள் சரியல்ல என்று பூங்கொடி சொன்னதால் லேட்டஸ்ட் i phone பரிசுடன் நிறுத்திக் கொண்டான். இன்று இரவு நகரின் பிரபல ஹோட்டலில் இவள் சார்பாக டின்னர் ஹோஸ்ட் செய்யப்போவதும் அவன்தான்.

    பூங்கொடி தன் கையிலிருந்த i phoneக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். இது தெரிந்திருந்தால் முரளி சிலிர்த்திருப்பான்.

    மணியைப் பார்த்தாள். ஏழு. நிறைய வேலை இருக்கிறது. சட்டென்று எழுந்தாள். எழுந்தவள் படுக்கை எதிரிலிருந்த ஆளுயர கண்ணாடியில் தலையை சாய்த்து நெஞ்சை சற்றே நிமிர்த்தி நின்று, தன் அழகை ஒருமுறை ரசித்துப் பார்த்தாள். ம்ம்ம்…அழகுதான் என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

    நேராக கிச்சனுக்குள் சென்று அங்கே வேலையாயிருந்த அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.

    “ஹாப்பி பர்த்டே டா செல்லம்! போய் குளிச்சு ரெடியாகி வா! டிபன் ரெடி! காலேஜுக்குக் கிளம்ப வேண்டாமா?” என்றாள் அம்மா.

    “இன்னைக்கு நோ காலேஜ் மம்மி! நானும் பிரெண்ட்சும் ஜாலியா ஊர் சுத்தப் போறோம்! ஸோ, உன் டிபன நீயே சாப்ப்டுக்கோ” என்று சிரித்தாள் பூங்கொடி.

    “உங்க அப்பாவச் சொல்லணும். அவர் கொடுக்கற செல்லம் தான் இப்படி எல்லாம் பேச வெக்கிது உன்ன”

    “என் டாடி டார்லிங்க எதுனாச்சும் சொன்ன, எனக்குக் கேட்ட கோவம் வரும்” என்று சிணுங்கினாள் பூங்கொடி.

    மனைவிக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் இந்த சம்பாஷணையை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவள் அப்பா சதாசிவம் சிரித்திபடியே அவளிடம் வந்தார்.

    “ஹாப்பி பர்த்டேடா என் ராஜாத்தி” என்ற படியே அவள் கையில் ஒரு கார் சாவியைத் திணித்தார்.

    “காரா? புதுசா? எனக்கா? ஹையா!” என்று குதித்தபடியே காரைப் பார்க்க வெளியே ஓடினாள் பூங்கொடி.

    வெளியே ஒரு i 20 கார் நின்றிருந்தது. ரத்தச் சிவப்பு வண்ணம். அவளுக்குப் பிடித்த வண்ணம். அதன் கதவை ரிமோட்டால் திறந்து உள்ள அமர அவள் யத்தநித்தச் சமயத்தில் தான் அந்தக் கூரியர் ஆள் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

    “மேடம்! கூரியர்!”

    “யாருக்கப்பா?”

    “பூங்கொடி”

    “நான் தான். Let me receive it”

    அது ஒரு இரண்டடிக்கு ஓரடி (ரெண்டு இன்ச் திக்னஸ்) பார்சல். பூங்கொடி யார் அனுப்பியது என்று பார்த்தாள். சென்னை என்று மட்டும் தான் இருந்தது. ஆனால் இவள் பெயர் முகவரி எல்லாம் மிகவும் தெளிவாக எழுதியிருந்தது. மணி மணியான கையெழுத்து. இவள் பிரெண்ட்சில் யாருடைய கையெழுத்து மாதிரியும் தெரியவில்லை. அதற்குள் கார் நினைவு வர அந்தப் பார்சலை திறந்திருந்த காரில் பின் சீட்டில் வைத்தாள். பின்னர் டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தாள். விர்ரென்ற சப்தத்துடன் கிளம்பி மெயின் கேட் வழியாக வெளியே சென்றாள்.

    “என்னங்க இந்தப் பொண்ண கண்டிக்க மாட்டீங்களா? லைசென்சு கூட இல்லாம கார எடுத்துக்கிட்டு போயிட்டா! தெய்வமே! எனக்கு பயமா இருக்கு. பொறந்த நாளும் அதுவுமா...” என்று அங்கலாய்த்த மனைவியை பார்த்து சதாசிவம் “ நீ ஒண்ணும் கவலைப்படாதே! அவளுக்கு ஒண்ணும் ஆகாது. லைசென்சு இல்லையே தவிர நல்லா வண்டி ஒட்டுவா. தவிர, அவளுக்குப் பொறுப்பு ஜாஸ்தி. லைசென்சு இருக்கற பிரெண்ட் யாருகிட்டயாவது ஓட்டச் சொல்லி வண்டிய கொடுத்திடுவா. நாம சொல்ல வேண்டியது இல்லை. இருந்தாலும் உன் திருப்திக்காக நான் அவளுக்குப் போன் போட்டு சொல்லறேன்” என்றார்.

    சொன்னபடியே மகளுக்குப் போன் செய்தார். மூன்று ரிங்குக்கு அப்புறம் பூங்கொடி எடுத்தாள்.

    “எஸ்பா...?”

    “கண்ணா! ஒரு வாரத்துல லைசென்சு வாங்கித் தந்திர்றேன். அது வரைல வண்டி வேண்டாம். இன்னைக்கு லைசென்சு இருக்கற பிரெண்ட்கிட்ட டிரைவ் பண்ணச் சொல்லிடு. சரியா?”

    “நீங்க சொல்லவே வேணாம்பா! ராகினி தான் டிரைவ் பண்ணப் போறா. தோ நான் அவ வீட்ட ரீச் பண்ணிட்டேன். டோன்ட் வொர்ரி அப்பா. டேக் கேர். பை” என்று சொல்லி போனை கட் செய்தாள்.

    அதற்கப்புறம் வேறு நண்பர்கள் வீடு, ஹோட்டலில் லஞ்ச் மாலை சினிமா என்று போனது பொழுது. இரவு ஏற்கனவே சொன்ன மாதிரி முரளி ஏற்பாடு செய்திருந்த டின்னர் முடிந்து அவள் வீடு வந்து சேரும் போது மணி ஒன்பதரை. அப்புறம் அப்பா அம்மாவுடன் அரட்டை அடித்துவிட்டு, தன் ரூமுக்குப் போய் முகநூல் பிரெண்ட்சிடம் சாட் செய்துவிட்டு அவள் தூங்கப் போன பதினொரு மணிக்குத் தான் அவளுக்கு அந்தப் பார்சலின் நினைவு வந்தது.

    சரி நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு தூங்குவதற்கு முயற்ச்சித்தாள். ஆனால் திரும்பத் திரும்ப அந்தப் பார்சலே நினைவுக்கு வந்தது. ‘யார் அனுப்பியிருப்பார்கள்? என்ன அனுப்பியிருப்பார்கள்? அவளுக்கு போஸ்டில் கிப்ட் எதவும் அனுப்பும்படி வெளியூர் பிரெண்ட்ஸ் கிடையாது. மனம் தவித்தது. மீண்டும் மீண்டும் அதையே நினைத்தது.

    சரி என்னதான் இருக்கிறது பார்ப்போம் என்று எழுந்தவள், கார் சாவியை எடுத்துக்கொண்டு சப்தம் போடாமல் தன் அறையை விட்டு வந்து, மெதுவாக வீட்டின் மெயின் கதவையும் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

    “என்ன வேணுமம்மா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினால் வாச்மேன்..

    “ஒண்ணுமில்லை. என் வண்டில பின்னால் சீட்டுல ஒரு பார்சல் இருக்கும். அதக் கொஞ்சம் எடுத்துக்கிட்டு வாங்க” என்று சொல்லி சாவியை அவனிடம் கொடுத்தாள்.

    சில நிமிஷங்களில் திரும்பி வந்தவன், பார்சலையும் சாவியையும் அவளிடம் கொடுத்தான். அதோடு ஒரு சிறிய பார்சலையும் கொடுத்தான். சிடி பாக்கெட் போல இருந்தது. இது எப்ப வந்தது? என்று குழம்பியபடியே பூங்கொடி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.

    தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடி விட்டு பெட்டில் உட்கார்ந்து முதலில் அந்த சிறிய பார்சலைப் பிரித்தாள். அவள் நினைத்த மாதிரியே அதற்குள் ஒரு சிடி தான் இருந்தது. அதன் மேல் எதுவும் எழுதப்படவில்லை. சரி என்ன இருக்கிறது என்று அதைத் தன் லாப்டாப்பில் போட்டுப் பார்த்தாள்.

    அந்த சிடிக்குள் Read me first என்று ஒரு வர்ட் டாக்குமென்ட், ஒரு வீடியோ பைல் இரண்டும் இருந்தது. பூங்கொடி அந்த வர்ட் டாக்குமென்ட்டைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள்.

    ‘ பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூங்கொடி’ என்று பரம சாதுவாக ஆரம்பித்த அந்த டாக்குமென்ட் முடியும்போது அவள் ரத்தத்தை உறைய வைக்கப் போகிறது என்பதை அறியாமல் பூங்கொடி மேலும் படிக்கத் தொடங்கினாள்.

    என்னை உன் வாழ்க்கைக்குள் அழைத்துக் கொண்டமைக்கு நன்றி. என்னை உனக்குத் தெரியாது. ஆனால் உன்னை எனக்குத் தெரியும். சொல்லப் போனால் எனக்குத் தெரியாதவர்களே கிடையாது. ஆனால் என் துரதிர்ஷ்டம் என்னைத் தெரிந்தவர்கள் தெரிந்தது போலக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    எனக்கு பெயரில்லை. எதையாவது கூப்பிட வேண்டும் என்றால் குருதிப்பொறை என்று கூப்பிடலாம். என்னடா பெயர் பயங்கரமாயிருக்கிறது என்று நீ நினைத்தால் சரிதான். நானே பயங்கரமானவன்தான். ஆமாம், நான் ஒரு பேய். ரத்தாகக் காட்டேரி இனத்தைச் சார்ந்த ஆனால் அதைவிட பன்மடங்கு வலிமை வாய்ந்த பேய். எனக்கு வயது கிடையாது. ‘மன்னவனும் நீயோ? என்று கேட்ட கம்பனையும் பார்த்திருக்கிறேன். இதோ உன்னையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முடிவும் கிடையாது.

    சரி என் கதை போதும். நான் எதற்கு உன்னிடம் வந்து இருக்கிறேன் என்று இன்னும் சொல்லவில்லையே? அதையும் சொல்லி விடுகிறேன். நான் ரத்தக் காட்டேரி இனம் என்று சொன்னேன் இல்லையா? என் பசி ரத்தத்தினால் மட்டுமே அடங்கும். அதனைப் பசி என்று சொல்வதை விட தாகம் என்று சொல்லலாம். காலங்கள் கடந்த தாகம். எப்போதும் என்னை அரித்துக் கொண்டிருக்கும் தாகம். அந்த தாகம் தீர நான் இப்படி மனிதர்களை நாடுவது வழக்கம்.

    இப்போது அந்த இன்னொரு பார்சலைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அதனைத் திறந்து பார். அதனுள் ஒரு விளையாட்டுப் பலகை இருக்கும். பரமபத சோபானம். சிறு வயதில் நீ விளையாடி இருக்கலாம். இல்லை அதன் வெளிநாட்டு வடிவங்களில் விளையாடி இருக்கலாம். ஆனால் இந்தப் பலகையில் என்னோடு நீ ஆடப் போவது விளையாட்டு போலத் தோன்றினாலும் விளையாட்டு அல்ல. வாழ்வா சாவா போராட்டம்.

    என்னுடன் நீ மூன்று முறை இதனை விளையாட வேண்டும். அதில் நம்மில் எவர் அதிகபட்ச முறைகள் ஜெயிக்கிறார்களோ அவர்களே வென்றவர்கள். நீ வென்றால் நான் உனக்கு என்ன வேண்டுமோ அதைத் தருவேன். நான் வென்றால் உன் குருதி என் தாகத்தை அடக்கும். ஆமாம் நான் உன்னைக் கொன்று உன் ரத்தத்தைக் குடித்து விடுவேன். அந்தப் பலகைக்குப் பின்புறம் ஒரு ஒயிஜாவும் இருக்கிறது.

    இந்த விளையாட்டு முடிந்த பின்னர் நீ ஜெயித்தால் உனக்கு என்ன வேண்டும் என்பதை அந்த ஒயிஜா பலகை மூலம் என்னைத்தொடர்பு கொண்டு சொல்ல வேண்டும். நான் ஜெயித்தால் உன்னை எப்போது கொள்வேன் என்று அதன் மூலம் சொல்வேன். அந்த ஒயிஜாவை எப்படி கையாள வேண்டும் என்பதை இங்கு கடைசியில் கொடுத்து இருக்கிறது.

    என்னை ஏமாற்ற நினைக்காதே. முடியாது. யாரும் உன்னைக் காப்பாற்ற முடியாது. அதனால் விளையாட்டுக்கு தயாராகு. இன்னும் சிறிது நேரத்தில் விளையாடலாம்.

    அதற்குப்பிறகு ஒயிஜாவை கையாளும் முறை தரப்பட்டிருந்தது.

    படித்துப்பார்த்த ஆத்மஜாவுக்கு தலை சுற்றியது. கழுத்துப்பக்கம் வேர்த்தது. சிறிது நேரம் அப்படியே கல் போல உட்கார்ந்திருந்தாள். அப்புறம் ஒரு எண்ணம் வந்தது.

    யாரோ விளையாடியிருக்கிறார்கள். பேயாவது பிசாசாவது. அதுவும் இந்தக் காலத்தில். சரி அவர்களோடு இந்த விளையாட்டை விளையாடித்தான் பார்ப்போமே என்று நினைத்தாள்.

    அப்புறம் அந்த வர்ட் டாக்குமென்ட்டை மூடினாள். அப்பொழுது அவள் கண்களில் அந்த வீடியோ பைல் பட்டது. அதை க்ளிக் செய்தாள். ஓரிரு நிமிடம் மௌனமாயிருந்த லேப்டாப் திரை ஒரு அமானுஷ்ய ஒலியுடன் உயிர்பெற்றது.

    அது ஒரு ரூம். பெட்ரூம் போலத் தான் தெரிந்தது. அந்தப் படுக்கையின் மீது காமிரா ஜூம் ஆனதும் அங்கு விரித்து வைக்கப்பட்டிருந்த பரம பத சோபான பலகை தெரிந்தது. பூங்கொடி சற்று நெளிந்தாள். பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஒரு கை இரண்டு தாயக்கட்டைகளைக் எடுத்துக் குலுக்கி கீழே போட்டது. தாயம். ஒரு வெள்ளை நிற சதுர வடிவ கட்டை ஒன்று முதல் கட்டத்தில் வைக்கப்பட்டது. அப்புறம் தான் திடீரென்று அது நடந்தது.

    அதைக்கண்ட பூங்கொடி கத்தாமல் இருந்ததே வியப்புதான். அந்தக் கைக்குச் சொந்தக்காரர் விளையாடிய பின்னர் கீழே வைக்கப்பட்ட தாயக்கட்டைகள் திடீரென்று தாமாகவே ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொண்டு மேலே எழும்பின. பின்னர் ஏதோ கண்ணுக்குத் தெரியாத கைகளுக்குள் போனது மாதிரி மறைந்தன. பின்னர் அவை குலுக்கப்படும் சப்தம். அப்புறம் திடீரென்று அந்தரத்தில் இருந்து அந்த இரண்டு தாயக்கட்டைகளும் கீழே பெட்டில் விழுந்தன. தாயம். ஒரு சிவப்பு நிற கட்டை பறந்து வந்து முதல் கட்டத்தில் உட்கார்ந்தது.

    பூங்கொடி வியர்த்தாள். பயந்தாள். என்ன இது மாயம்? நிச்சயம் காமிரா ட்ரிக்காக இருக்கும். சரி மேற்கொண்டு பார்க்கலாம் என்று திரையைப் பார்த்தாள்.

    இப்படிப் படிப்படியாக அந்த விளையாட்டு நடந்தது. பதினாறாம் கட்டத்துக்கு அந்தக் கைகள் தன் வெள்ளைக் கட்டையை எடுத்துச் சென்றபோது அந்தக் கட்டத்தில் இருந்த பொம்மை ஏணி உயிர்பெற்றது. அந்த வெள்ளைக்கட்டை அந்த ஏணியின் படிகள் ஏறி 28ஆம் கட்டத்துக்குச் சென்றது. சிறிது நேரத்தில் 43ஆம் கட்டத்தை அடைந்தபோது அங்கிருந்த ஒரு சர்ப்பம் உயிர்த்தது. அந்த கட்டையை கொத்தியது. ஒரு வித ஒலியுடன் அந்தக் கட்டை 21ஆம் கட்டத்துக்கு வந்து விழுந்தது.

    பூங்கொடி பிரமித்தாள். இது காமிரா ட்ரிக்காக இருக்க வாய்ப்பில்லை. ஏதோ அமானுன்ஷ்ய சக்திதான் என்று அவளுள் ஒரு நிச்சயம் ஏற்பட்டது.

    இவ்வாறு நடந்த விளையாட்டின் முடிவில் அந்த ‘பேய்’ தான் வென்றது. அடுத்து நடந்த விளையாட்டிலும் அதுவே வென்றது. பூங்கொடி என்ன நடக்கப் போகிறது என்று மூச்சை நிறுத்திப்பார்த்துக் கொண்டுருக்கும் போதே அந்த பலகை கவிழ்க்கப்பட்டு ஒயிஜா போர்டு தெரிந்தது. நான்கு மூலைகளிலும் நான்கு மெழுகுகள் ஏற்றப்பட்டன. விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் ஒரு காசு அதில் வைக்கப்பட்டது. பின்னர் அந்தக் கைக்குச் சொந்தகாரர் தன் விரல் நுனியை அதில் வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்தக் காசு நகர ஆரம்பித்தது. மிகுந்த நேரம் எடுத்துக்கொண்டு அது நகர்ந்து சென்று அமர்ந்த எழுத்துக்களைக் கூட்டி பார்த்தபொழுது வந்த சொல் I am coming.

    பூங்கொடி பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தப் பலகையிலிருந்து ஒரு பயங்கர கை பிளந்து கொண்டு வெளியே வந்தது. அப்படி வந்த அந்த பயங்கரக் கை மேலே உயர்ந்து சென்று எதிரில் விளையாடியவரின் கழுத்தைப் பிடித்தது. அப்போது ஜூம் ஆன காமிராவில் தெரிந்த முகத்தைப் பார்த்த பூங்கொடி அதிர்ந்தாள். அது ஆள் அல்ல. ஒரு பெண்மணி. சந்திரா. இவளுடைய அக்கா. இவளைவிட ஏழு வயது மூத்தவள்.

    இவள் கண் முன்னரே சந்திராவின் கழுத்தைப் பற்றிய அந்தக் கை அவள் குரல்வளையை இறுக்கியது. சந்திராவின் முகம் விகாரமாகி மூக்கு விடைத்து கண்களில் ஒன்று பட்டென்று ஒலியுடன் வெளியே விழுந்து தொங்கியது.

    பூங்கொடி வீறிட்டாள். வீடியோ முடிந்தது. திரை மீண்டும் மௌனமாகியது.

    பூங்கொடி வியர்வையில் குளித்திருந்தாள். சந்திரா! சந்திராவா? அவள் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கும் போது நடந்த ஒரு விபத்தில் செத்துவிட்டதாக அல்லவா அப்பா சொல்லியிருக்கிறார்? அப்போ அப்பா சொன்னது பொய்யா? பூங்கொடி குழம்பினாள்.

    எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்து இருந்தாளோ தெரியாது, திடுமென அறையின் வெப்பம் குறைந்து சில்லிட்டது போன்ற உணர்வால் தெளிந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது. குருதிப்பொறை!

    சரியென்று அந்த பெரிய பார்சலைப் பிரித்தாள். அந்த பரம பத சோபான பலகையை விரித்தாள். தாயக்கட்டைகளை கையில் எடுத்தாள். குலுக்கிக் கீழே போட்டாள். தாயம் இல்லை.

    பின்னர் வீடியோவில் கண்டது மாதிரியே அந்தப் பேயும் விளையாடியது. சிறிது நேரத்தில் இருவருக்கும் தாயம் விழுந்தது. ஆட்டம் தொடர்ந்தது.

    முதல் ஆட்டம் பூங்கொடி தோற்றாள். அப்புறம் இரண்டாம் ஆட்டமும் துவங்கியது. அந்த ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி வெகு நேரம் தொடர்ந்தது. இறுதியில் பூங்கொடி வென்றாள்.

    மூன்றாவது ஆட்டம் துவங்கியபோது மணி மூன்று. பூங்கொடி களைத்திருந்தாள். இருந்தும் வேறு வழியில்லை. ஆடத் தான் வேண்டும். அயர்வுடன் தாயக்கட்டைகளைக் குலுக்கினாள். முதலிலேயே தாயம். ஒரு புத்துணர்வுடன் தன் தாயக்கட்டைகளை குலுக்கிப் போட்டாள். என்ன மாயம்! சரியாக ஒவ்வொரு ஏணியாக கிடைத்தது. 117ஆவது கட்டத்தை விரைவில் அடைந்தாள். சர்ப்பங்களில் இருந்து தப்பித்து பரம பதத்தை அடைந்தாள்.

    அவள் மனதில் நிம்மதி. ஜெயித்து முடித்தவுடன் பலகையை திருப்பிப்போட்டாள். அலமாரியிலிருந்து மெழுவர்த்திகள் எடுத்து மின்விசிறியை நிறுத்திவிட்டு ஏற்றினாள். ஒரு காசை எடுத்து வைத்தாள். அறையை சுற்றிலும் பார்த்தாள். அது இன்னும் அங்கு இருப்பது ரூம் சில்லென்று இருப்பதிலிருந்து புரிந்தது.

    அறையைப் பார்த்து மையமாக “இருக்கிறாயா?” என்று கேட்டாள். அமைதியாயிருந்த காசு திடீரென்று அவள் விரலையையும் இழுத்துக்கொண்டு மெதுவாக நகர்ந்து YES என்ற இடத்தில் நின்றது.

    “அந்த வீடியோவில் நான் பார்த்தது என் அக்காவா?” “YES”

    “அவளைக் கொன்றது நீயா?” “YES”

    “ஏன்?” “YOUR FATHER LOST THE GAME”
    ”அப்பா தோற்றதற்கும் அவளை நீ கொன்றதற்கும் என்ன சம்பந்தம்?” “YOUR FATHER GAVE HER LIFE FOR HIS LIFE”

    “ என் அப்பா உன்னுடன் விளையாடினாரா?” “YES HE PLAYED TWO TIMES. FIRST LOST. SECOND WIN.”

    “இரண்டாவது தடவையும் தோற்றிருந்தால்...?” “HE WOULD HAVE GIVEN YOUR LIFE”

    “ஏன் அப்படி? அவருக்கு எங்கள் மேல் ஆசை இல்லையா?” “YOU ARE HIS BROTHER’S CHILDREN. YOUR REAL FATHER DIED LONG AGO”

    “இரண்டாவது தடவை ஜெயித்ததால் என்ன கிடைத்தது?” “SECOND TIME I GAVE HIM LOT OF MONEY. TIME OVER. I AM GOING. ASK WHAT YOU WANT.”

    “இந்த பார்சல் அவருக்குப் போக வேண்டும். அவர் உன்னிடம் தோற்க வேண்டும். ஆனால் நீ அவர் உயிருக்கு பதில் வேறு உயிர் எடுத்துக்கொள்ளக் கூடாது. செய்வாயா?” “ SURE. PACK EVERYTHING AND DROP IT IN THE BUSHES OUTSIDE. BYE”

    அறையின் வெப்பம் அதிகரித்தது. குருதிப்பொறை சொன்னது போல செய்துவிட்டு பூங்கொடி எப்போது தூங்கிப் போனாள் என்று அவளுக்கேத் தெரியாது. அவள் கண்விழித்தப் போது பகல் மணி ஒன்று.

    உறக்கம் கலைந்ததும் அவளுக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது. ஆனாலும் ஒரு குழப்பம். இதெல்லாம் உண்மையில் நடந்ததா இல்லை கனவா? அறை மிகவும் சுத்தமாக இருந்தது. நேற்றிரவு நடந்த எந்த ஒரு நிகழ்சியின் தடயமும் இல்லை. கனவு தான் என்று நிச்சயித்து அவள் பெட்டை விட்டு எழுந்து தன் ஸ்லிப்பரை போட கீழே குனிந்தபோது கட்டிலுக்கடியில் ஒரு பாதி எரிந்து போன மெழுகு வர்த்தியைப் பார்த்தாள். அப்படியானால்...?


    குழப்பத்துடன் மாடியில் இருந்த தன் அறையை விட்டு கீழே இறங்கியவள், வாசலில் காலிங் பெல் அடிக்கப்படும் சப்தத்தைக் கேட்டாள்.

    “மாணிக்கம்! யாருன்னு போயி பாரு” என்று அவள் அம்மா சமையல் ரூமிலிருந்து குரல் கொடுத்தாள்.

    மாணிக்கம் என்ற வேலைக்காரன் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனான்.

    போனவன் இரண்டு நிமிடத்தில் ஒரு பெரிய பார்சலுடன் உள்ளே வந்து “ அம்மா! அய்யாவுக்கு ஏதோ ஒரு பார்சல் வந்திருக்கு!” என்றான்.

    கீழே இறங்கி வந்த பூங்கொடி அவன் கையில் இருந்த பார்சலைப் பார்த்தாள்.

    அது ஒரு இரண்டடிக்கு ஓரடி (ரெண்டு இன்ச் திக்னஸ்) பார்சல். அந்தப் பார்சலின் மேல் ஒரு சிடி கவர் ஒட்டப்பட்டிருந்தது.
     
    5 people like this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ரொம்ப பயங்கரமான அழகான கற்பனை :)
     
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மிக்க நன்றி தேவப்ரியா. உங்கள் கனிவான சொற்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. வெங்கடேஷ்.
     
  4. jhema

    jhema Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    25
    Trophy Points:
    48
    Gender:
    Female
    நல்ல விறுவிறுப்பான கதை
     
  5. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மிக்க நன்றி ஹேமா ஜி. உங்கள் அனைவரின் ஆதரவும் பாராட்டும் இப்படியேத் தொடர வேண்டும்.
     
  6. swaran

    swaran IL Hall of Fame

    Messages:
    8,647
    Likes Received:
    4,962
    Trophy Points:
    345
    Gender:
    Female
  7. Vidhyadev

    Vidhyadev Bronze IL'ite

    Messages:
    86
    Likes Received:
    49
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Nice thrilling story.. good imagination
     
  8. bcgowri

    bcgowri New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
    nice imagination. continue and all the best
     
  9. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Awesome!!! I have read all your stories and loved them all! Please write everyday!! :thumbsup
     
  10. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நீங்கள் தரும் உற்சாகமும் ஆதரவும் என்னை மேலும் எழுதத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.- வெங்கடேஷ்
     

Share This Page