1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகாய் பூக்குதே

Discussion in 'Stories in Regional Languages' started by Coolsea, Nov 20, 2012.

  1. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    picture of roses flowers-3.jpg அழகாய் பூக்குதே-1


    வானவில்லின் வர்ணங்களாய் தோரணங்கள் தொங்கிக் கொண்டு இருந்தன. வித்யாலயம் பள்ளியின் பத்தாம் ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறப்பு விருந்தினராக "ஷாப்பர்ஸ் பாரடைஸ் " என்ற பிரம்மாண்ட வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த ஹர்ஷவர்தன் அழைக்கப்பட்டு இருக்க விழா குறித்த நேரத்தில் கனகச்சிதமாக துவங்கியது.


    இறை வணக்கத்தை தொடர்ந்து பள்ளியின் துணை முதல்வரும் பத்தாம் வகுப்பு கெமிஸ்ட்ரி டீச்சருமான சம்ருதி வரவேற்புரை நிகழ்த்தினாள். பள்ளியின் தாளாளர் சிறப்பு விருந்தினர் கையில் பூச்செண்டு கொடுக்க அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. குழந்தைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. சிறிது நேர இடைவெளியில் சிறப்பு விருந்தினரை பேச அழைத்தார் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி.



    சிறப்பு விருந்தினர் எப்போதும் போல பள்ளியின் புகழ்மாலை பாடிவிட்டு போவார் என்று நினைத்து இருந்தவர்களுக்கு ஹர்ஷாவின் பேச்சு வெகு சுவாரஸ்யமாக இருந்தது. வெளிநாட்டு பாடத் திட்ட முறைக்கும், நமது நாட்டு பாடத் திட்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி ஒரு குட்டி பிரசங்கமே நடத்தி விட்டான். அவன் பேசிய விதம் தெள்ளத் தெளிவாக எந்த தடங்கலும் இன்றி பிரவாகமாய் கொட்டிக் கொண்டு இருந்தது.



    மிகவும் இழுவையாக இல்லாமல் கன கச்சிதமாக அவன் பேசி முடிக்க அரங்கத்தில் எழுந்த கைதட்டல் ஒலி அடங்க வெகு நேரமானது. மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் , நன்றி உரையும் தேசிய கீதத்தோடு முடிய எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அமைதியாக இறுதி வரை அமர்ந்து பார்த்தான் ஹர்ஷா.



    "சம்ருதி... விழா முடிஞ்சதும் சார் கிட்ட கெஸ்ட் செரிமோனி புக்ல கையெழுத்து வாங்கிட்டு அப்படியே வழியனுப்பிட்டு வாங்க" உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினரை வழி அனுப்பும் பொறுப்பை ஏற்கனவே சம்ருதியிடம் ஒப்படைத்து இருந்தார். விழா முடிந்ததும் அந்த கனத்த புத்தகத்தில் ஹர்ஷாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவனது கார் வரை சென்று வழி அனுப்பினாள் சம்ருதி. உடன் சில மாணவிகளும் சேர்ந்து மலர் கொத்துகள் கொடுத்து அவனை வழி அனுப்ப...



    "யூ ஹாவ் காட் எக்சலன்ட் கம்மான்ட் ஓவர் லேங்குவேஜ் சார். நீங்க பேசுன விதம் ரொம்ப அருமையா இருந்தது. தேங்க்ஸ் எ லாட் சார் " சம்ருதி மனதில் இருந்து பேச "மோஸ்ட் வெல்கம் " என்று அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு தன் இனோவாவில் ஏறினான் ஹர்ஷா.



    டிரைவர் வண்டி எடுக்க மாணவிகளிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்த சம்ருதியின் மேல் ஹர்ஷாவின் பார்வை மீண்டும் ஒரு முறை படிந்து மீண்டது...!!



    ஆண்டு விழா முடிந்து வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி எட்டு. தன் காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு காலிங் பெல் அடித்தாள் சம்ருதி. சரோஜினி கதவைத் திறக்க அப்பாடா என்று ஹேண்ட்பேக்கை தூக்கி எறிந்தவள் அப்படியே சோபாவில் சரிந்தாள்.



    "ரொம்ப லேட் ஆயிடிச்சா பப்பும்மா? ஏதாவது சாப்பிட்டியா இல்லையா? கீரை அடை தயாரா இருக்கு. சாப்பிட வா" சரோஜினி அழைக்க...



    விழா மேடையில் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட நொறுக்குத் தீனியை பெயருக்கு என்னவோ கொறித்து விட்டு வந்திருந்தாள் சம்ருதி. வயிறு கெஞ்சிக் கொண்டு இருந்தது. தனக்கே இப்படி என்றால் அந்தக் குட்டிக் குழந்தைகளுக்கு இன்னும் எவ்வளவு சோர்வாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.



    நைட்டிக்கு மாறி டைனிங் டேபிளுக்கு வந்த போது நெய் அடை வாசனை நாசியைத் துளைத்துக் கொண்டு இருந்தது. டேபிள் மீது இருந்த ஸ்வீட் பாக்ஸ் கவனத்தை இழுக்க...



    "டேபிள்ள ஸ்வீட்ஸ் இருக்கு. யாரும்மா இன்னைக்கு வந்திட்டு போனது?" என்று கேட்டாள் சம்ருதி.



    நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ வந்தால் மட்டுமே இப்படி பெட்டி நிறைய ஸ்வீட்ஸ் இருக்கும். பொதுவாக அவர்கள் வீட்டில் இனிப்பு செய்வதும் இல்லை. அவ்வளவாக வாங்குவதும் இல்லை. சரோஜினி சர்க்கரை நோயாளி என்பதால் இனிப்பு பக்கமே தலை வைக்கக் கூடாது என்று கடுமையாக சட்டம் போட்டிருந்தாள் சம்ருதி.



    "ஹேமா சித்தி வந்துட்டு போனா. நகைக் கடை வரைக்கும் வந்தாளாம். அப்படியே நம்ப வீட்டுக்கும் வந்துட்டு போனா. அவ சொந்தத்துல உனக்கு ஒரு வரன் பார்த்து வெச்சிருக்கா. ஜாதகம் பொருத்தம் பார்த்து சொல்லுங்க. மேற்கொண்டு பேசலாம்ன்னு சொல்றா. நீ என்ன சொல்றே பப்பும்மா?"



    மேலும் ஒரு அடையை தட்டில் வைத்து காரச் சட்னியும் பரிமாறிக் கொண்டே சரோஜினி மகளின் முகத்தைப் பார்க்க அவள் கேட்டதே காதில் விழாதது போல சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் சம்ருதி. திருமணப் பேச்சு எடுக்கும் போதெல்லாம் இவளிடம் இதைத் தவிர வேறு ஒன்றும் எதிர்பார்க்க முடியாது என்று சரோஜினிக்கு நன்றாகத் தெரியும். அதற்காக பெற்றவளின் கடமையை மறக்க முடியுமா...?!



    இரவு உணவை முடித்துக் கொண்டு கட்டிலில் விழுந்தாள் சம்ருதி. விழுந்த வேகத்தில் தூங்கி விட்டாள்...!!



    அங்கே இரவு வெகுநேரம் கழித்து அந்த பிரம்மாண்டமான கேட் திறக்கப்பட ஹர்ஷாவின் இனோவா வண்டி உள்ளே நுழைந்தது.



    "இன்னைக்கும் லேட் தானா. சாப்பிட வா ஹர்ஷா" அமிர்தத்தின் அழைப்பு அவனைத் தடுத்து நிறுத்த ஒரே நிமிடம் என்பது போல் தன் அம்மாவுக்கு சைகை காட்டிவிட்டு நான்கே தாவலில் மாடிப் படிகளை கடந்தான் ஹர்ஷா. ஊருக்கு தான் அவன் பெரிய மனிதன். வளர்ந்து வரும் தொழிலதிபர். வீட்டில் இன்னும் செல்லக் குழந்தையாகத் தான் விளையாடிக் கொண்டிருக்கிறான்.



    " நீங்க சாப்பிட்டாச்சா?" கேட்டுக் கொண்டே இரவு உடையுடன் ஹர்ஷா டேபிளுக்கு வர



    "ம்ம். டைம் என்னாச்சுன்னு பாரு. நீ வர்றதுக்குள்ள ஒரு குட்டி தூக்கமே போட்டு எழுந்துட்டேன் " மகனுக்கு பரிமாறத் தொடங்கினார் அமிர்தம்.



    "காலா காலத்துல கல்யாணம் பண்ணிகிட்டா வர்ற மருமக உன்ன பார்த்துப்பா. எனக்கும் ரெஸ்ட் கிடைக்கும்." எப்போதும் போல் அமிர்தம் ஆரம்பிக்க...



    "கீர்த்தி குட்டி எப்போ வர்றாளாம்? ஏதாவது தகவல் சொன்னாளா? ஏர்போர்டுக்கு வண்டி அனுப்பணும்." திருமண பேச்சில் இருந்து தப்புவதற்காக மகன் வேறு விஷயங்களை பேசுவது அமிர்தாவுக்கு புரியாமல் இல்லை.



    கீர்த்தி ஹர்ஷாவின் ஒரே தங்கை. பல லட்சங்கள் சம்பளம் வாங்கும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். நினைத்த பொழுது போன் செய்து "எனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. வருகிறேன்" என்பாள். அதைத்தான் இப்போது கேட்டுக் கொண்டிருந்தான் ஹர்ஷா...!!



    "இந்த தேதில தான் வரப்போறேன்னு இன்னும் சரியா சொல்லலடா. நாளைக்கு போன் பண்றப்போ மறுபடியும் கேக்கறேன். நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு ஹர்ஷா. பெத்த பிள்ளைங்க குடும்பத்தோட வாழறத கண்குளிர பார்க்கணும்டா. அத விட இந்த வயசுல வேற என்ன ஆசை எனக்கு இருக்கப் போகுது. எப்ப கேட்டாலும் எனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தி வரணும்ன்னு பதில் சொல்றே. உனக்கு பிடிச்ச பொண்ண நீ தேடி கொண்டு வர்றதுக்குள்ள நானும் உங்க அப்பா போன இடத்துக்கே போயிருவேன் போல இருக்கு. அப்பா உயிரோட இருந்திருந்தா இந்த மாதிரி உன் இஷ்டத்துக்கு இருக்க விட்டிருப்பாரா? "



    இரண்டு வருடங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்ட தன் கணவனை நினைத்து அமிர்தாவின் கண்களில் நீர் வழிய முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த போது பாதி சாப்பாட்டில் ஹர்ஷா எழுந்து போயிருந்தான். மகனை நினைத்து அமிர்தாவுக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது.



    "The Way of the Peaceful Warrior" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டே தன் கட்டிலில் சாய்ந்திருந்தான் ஹர்ஷா. அமிர்தாவின் கண்ணீர் அவன் மனதை என்னவோ செய்ய புத்தகத்தில் கவனம் பதிய மறுத்தது. முப்பத்தி ஒரு வயதாகியும் எதற்காக திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று யோசித்தான். பெரிதாக ஒரு காரணமும் தோன்றவில்லை.



    எந்த பந்தத்திலும் சிக்காமல் இருப்பதால் தான் தொழிலில் இந்த அளவு முன்னேற முடிந்ததோ என்று கூட சில சமயம் நினைத்துக் கொள்வான் ஹர்ஷா. நிர்வாகம், வீடு என்று இப்படி இருப்பதே நிம்மதியாகத் தான் இருந்தது.



    அவன் உணர்வுகளைக் கிளறிப் பார்க்கும் வகையில் வாழ்க்கையில் இன்னும் எதுவும் நடந்துவிடவில்லை. !!
     
    1 person likes this.
    Loading...

  2. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
  3. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    4244352-single-tropical-red-lily-isolated-on-white-background.jpg அழகாய் பூக்குதே-2


    மறுநாள் பள்ளி முடிந்த மாலை நேரம். ரிவிஷன் எக்ஸாம் பேப்பர்களை திருத்துவதற்காக கையில் அள்ளிக்கொண்டு வந்து காரில் வைத்தாள் சம்ருதி. இனி பப்ளிக் எக்ஸாம் முடியும் வரை ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் என்று சரியாக இருக்கும். பாதி வழியில் வந்து கொண்டிருந்த போது சரோஜினி போன் செய்ய...


    "வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கேன். என்ன விஷயம்மா?" சம்ருதி கேட்க...



    "நாளைக்கு காலைல வரலஷ்மி பொண்ணு கல்யாணம் பப்பும்மா. பத்திரிகை வந்ததே எனக்கு மறந்து போச்சு. நீ வரும்போது அவளுக்கு ஒரு நல்ல கிப்டா வாங்கிட்டு வர்றியா?"



    "ம்ம்... வீட்டுக்கு வந்த பிறகு சொல்லாம இப்போவே சொன்னியே. வாங்கிட்டு வர்றேன்" சம்ருதி வழியில் எந்த கடையில் நிறுத்தலாம் என்று பார்த்துக் கொண்டே வர "ஷாப்பர்ஸ் பாரடைஸ்" கண்ணில் பட்டது. ஒரே ஒரு முறை ஹேமா சித்தியோடு இங்கு வந்திருக்கிறாள்.



    காரை பார்க்கிங்கில் போட்டுவிட்டு ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு கடைக்குள் நுழைய பிரம்மாண்டமாக வரவேற்றது. முன்பு வந்தபோது இருந்ததை விட இப்போது பல புதிய பிரிவுகள் கண்ணில் பட பரிசுப் பொருள்கள் இருந்த பிரிவைத் தேடிச் சென்றாள் சம்ருதி. அரை மணி நேரம் தேடி ஒரு அருமையான பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு புறப்பட்ட நேரத்தில் ....




    "மேடம். அண்டர் கிரௌண்ட்ல மளிகை பிரிவு புதுசா ஆரம்பிச்சிருக்கோம். பார்த்துட்டு போங்களேன்" பில் போட்ட பணியாள் மிகவும் பணிவாகச் சொன்னான். வியாபாரத் தந்திரம் என்று முதலில் மனதிற்குள் நினைத்தவள் மளிகைப் பொருட்கள் தானே பார்த்துவிட்டு செல்வோம் என்று புதிய பகுதியை தேடிச் சென்றாள் சம்ருதி.


    ட்ராலியை தள்ளிய படி சம்ருதி வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை தேடி எடுத்துக் கொண்டிருந்தாள். பொதுவாக இந்த விஷயங்களில் எல்லாம் அவள் அக்கறை எடுத்துக் கொண்டதே இல்லை. எல்லாம் சரோஜினியே பார்த்து வாங்கி வைத்து விடுவார். தேடி தேடி வீட்டுக்காக வாங்கும் அனுபவமும் நன்றாகத் தான் இருந்தது.



    புதிய பகுதி என்பதால் விற்பனை எப்படி நடக்கிறது என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான் ஹர்ஷா. அந்த வரிசையின் கடைசி ரேக்கில் இருந்த பொருட்களை சம்ருதி பார்த்துக் கொண்டு நிற்க திடீரென்று "வெல்கம் மேடம்" என்ற குரல் கேட்டு திரும்பினாள். புன்னகையுடன் நின்றிருந்தான் ஹர்ஷா.



    "ஹலோ சார். ஹௌ டூ யூ டூ. கிப்ட் ஆர்டிகிள் வாங்கலாம்னு வந்தேன். புது செக்ஷன் ஆரம்பிச்சு இருக்கறதா சொன்னாங்க. வீட்டுக்கு தேவையானத வாங்கிட்டு போலாமேன்னு வந்தேன்"



    "தேங்க்ஸ் மேடம். உங்க பிரெண்ட்ஸ் அண்ட் கொலீக்ஸ் கிட்டயும் இங்க மளிகை பிரிவு இருக்கறதா சொல்லுங்க" ஹர்ஷா சம்ருதியிடம் சொல்லிக் கொண்டிருக்க முதலாளி பேசிக் கொண்டிருப்பதால் மற்ற பணியாளர்கள் மரியாதை கொடுத்து அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.



    "ம்ம்..அவசியம் சொல்றேன் சார். நல்ல வியாபார டெக்னிக்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சம்ருதி.



    "வாட் டு டூ மேடம். சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட் ன்னு உங்கள மாதிரி டீச்சர்ஸ் தான ஸ்கூல்ல சொல்லி தர்றிங்க. இன்னைக்கு காம்படிடிவ் வேர்ல்ட் ல ஷைன் பண்ண இதெல்லாம் செஞ்சு தான் ஆக வேண்டி இருக்கு " ஹர்ஷாவும் அவள் கிண்டலை ரசித்த படியே பதில் சொன்னான்.



    "அப்கோர்ஸ் ட்ரூ. இவ்ளோ சம்பள ஆள் போட்டு கஸ்டமர்ஸ் அட்ராக்ட் பண்ணி வெற்றிகரமா வியாபாரம் நடத்தறது இஸ் நாட் ஈசி ஜோக். ஐ அக்சப்ட் இட் சார் " சம்ருதியின் பதில் ஹர்ஷாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.



    ட்ராலியில் இருந்த பொருட்களின் மீது பார்வையை செலுத்தியவன் "ரொம்ப சின்ன பேமிலியா மேடம். மளிகை எல்லாம் குறைவா வாங்கியிருக்கற மாதிரி இருக்கே." என்று கேட்க...



    "நானும், அம்மாவும் மட்டும் தான் சார் இங்க இருக்கோம். அப்பா க்வாலிட்டி கண்ட்ரோல் ஆபிசரா டெல்லில வொர்க் பண்ணிக்கிட்டு இருக்காரு. அதுவும் இல்லாம இந்த மாதிரி வேலையெல்லாம் அம்மாவோட சேர்ந்தது. எனக்கு ஸ்கூல் வேலையே சரியா இருக்கும். நான் பெருசா அக்கறை எடுத்துக்கிட்டது இல்ல." சம்ருதியின் பேச்சு ஹர்ஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.


    ஷாப்பிங், ஷாப்பிங் என்று அலையும் இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று நினைத்துக் கொண்டான். "வேற ஏதாவது வாங்கணுமா? பில் போட சொல்லவா மேடம்?" அப்போதுதான் அவன் மேடம் என்று அழைப்பது சம்ருதிக்கு உறைத்தது.



    "ஹலோ ஐ ஆம் சம்ருதி. ஸ்டூடண்ட்ஸ் என்ன மேடம் ன்னு சொல்றதே போதும். இங்கயும் அதே கேட்கணுமா. " இதழ்களின் புன்சிரிப்போடு அவள் கண்களும் சேர்ந்து சிரிக்க முதன் முறையாக ஹர்ஷாவுக்குள் அலை ஒன்று உருவானது.



    "நீங்களும் சார் ன்னு தானே சொன்னீங்க " மென்மையான குரலில் சொல்லிவிட்டு தூரத்தில் நின்ற பணியாளை அழைத்து சம்ருதியின் பொருட்களுக்கு பில் போடச் சொன்னான் ஹர்ஷா. பொருட்களை பெற்றுக் கொண்டு சம்ருதி விடை பெற கம்பீரப் புன்னகையுடன் தலை அசைத்தான் ஹர்ஷா.
     
  4. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    daisy_flower.jpg அழகாய் பூக்குதே-3



    காலிங் பெல் ஒலி கேட்டு சரோஜினி கதவு திறக்க கை நிறைய பார்சல்களுடன் நின்றிருந்தாள் சம்ருதி. எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போய் டைனிங் டேபிள் மீது வைத்தவள்...


    "எனக்கு தெரிஞ்ச அளவுக்கு வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்திருக்கேன். சரியா இருக்கான்னு பாரும்மா. கிப்ட் பேக் எடுத்து தனியா வெச்சிக்கோ" சொல்லிக்கொண்டே சம்ருதி தன் அறைக்கு செல்ல என்றும் இல்லாத அதிசயமாக மகள் வாங்கி வந்திருந்த சாமான்களை ஆராய்ந்து கொண்டு இருந்தார் சரோஜினி.



    சம்ருதி உடை மாற்றிக் கொண்டு வர "பரவாயில்லடி. உனக்கு கூட குடும்பத்து மேல பொறுப்பு வந்துடுச்சு" சரோஜினி மகளைப் பாராட்டினார்.



    "அப்படியெல்லாம் பெருசா ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். கிப்ட் வாங்குன கடையில புதுசா க்ராசரி ஸ்டோர் ஆரம்பிச்சிருந்தான். சும்மா சுத்தி பாத்துட்டு எனக்கு தெரிஞ்சா மாதிரி என்னவோ வாங்கிட்டு வந்துட்டேன். இனிமே எப்பவும் போல நீயே வாங்கிக்கோ. அதெல்லாம் உன்னோட டிபார்ட்மென்ட். சீக்கிரம் டிபன் குடும்மா. டெஸ்ட் பேப்பர்ஸ் கரெக்ட் பண்ணணும். நிறைய வேல இருக்கு."



    சப்பாத்தியும், குருமாவும் சூடாக உள்ளே இறங்க மாணவர்களின் பரிட்ஷை தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள் சம்ருதி.



    அடுத்த நாள் கெமிஸ்ட்ரி ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து மாலை பள்ளியை விட்டு கிளம்பும் போது மணி ஆறு. மழை வரும் போல வானம் மேக ஆடை உடுத்தி நின்றது. அவசரமாக காரை ஸ்டார்ட் செய்தாள் சம்ருதி. மூன்று முறை முயன்றும் கிளம்ப மறுத்தது.


    ச்சு ... என்று அலுத்துக் கொண்டே இரண்டு நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்டார்ட் செய்ய நல்ல வேளை... தகராறு செய்யாமல் கிளம்பியது.



    பள்ளியிலிருந்து வீட்டுக்கு அரை மணி நேர பயணம். பாதி வழி கூட செல்லவில்லை. மறுபடியும் வண்டி மக்கர் செய்ய தெருவோரத்தில் நிறுத்தினாள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பள்ளி. புறவழிச்சாலை. லாரிகளும், பஸ்களும் உச்ச கட்ட வேகத்தில் சென்றுகொண்டு இருக்க அந்த நேரத்தில் அங்கே தனியாக நிற்பதும் உசிதமாக படவில்லை.



    வண்டியை லாக் செய்துவிட்டு பஸ்ஸில் சென்றுவிடலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அவளுக்கு வெகு அருகில் சாக்லேட் வண்ண போலேரோ வந்து நின்றது. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள் சம்ருதி.



    "வாட் இஸ் தி ப்ராப்ளம். இந்த நேரத்துல இங்க நின்னுகிட்டு இருக்கீங்க. " ஹர்ஷா தான். போலேரோவில் இருந்தபடியே கேட்டான்.



    "என்ன ப்ராப்ளம்ன்னு தெரியல சார்? திடீர்னு வண்டி ஸ்டாப் ஆயிடுச்சு. லாக் பண்ணிட்டு பஸ்ல போயிடலாம்ன்னு இருக்கேன்"



    "ராஜூ. என்னன்னு பாருங்க." தன் டிரைவரிடம் ஹர்ஷா சொல்ல ராஜூ இறங்கி எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு "மெக்கானிக் வந்துதான் பாக்க வேண்டி இருக்கு சார் " என்றான்.



    உடனே தன் செல்லில் மெகானிக்கை அழைத்து விவரம் சொன்னான் ஹர்ஷா.



    "ராஜூ. இன்னும் பத்து நிமிஷத்துல மெக்கானிக் வருவாப்பிடி. அவன் வந்ததும் வண்டிய சரிபார்த்து மேடம் வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க."



    "சம்ருதி. உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நீங்க என் வண்டில வரலாம். ஐ வில் டிராப் யூ அட் ஹோம். உங்க அட்ரஸ் டிரைவர் கிட்ட குடுத்திடுங்க."



    தன் முகவரியை குறித்துக் கொடுத்தவள் அவசர உதவிதானே என்று ஹர்ஷாவின் வண்டியில் ஏறிக்கொண்டாள் சம்ருதி. வண்டி எதிர் திசையில் கிளம்புவதை அப்போதுதான் கவனித்தாள்.



    "சார்...ஊர் அந்த பக்கம். நீங்க எதிர் திசைல போறீங்க?" சம்ருதி தயக்கமாய் சொல்ல...



    "குழந்தைகள் காப்பகத்துக்கு டொனேட் பண்றதுக்காக போயிட்டு இருந்தேன் மேடம். வழியில நீங்க நிக்கறது பார்த்தவுடனே என் வண்டியும் சடன் ப்ரேக் அடிச்சு நின்னுடுச்சு. ஒரு பைவ் மினிட்ஸ். கொண்டு வந்தது எல்லாம் அந்த பசங்களுக்கு குடுத்துட்டு போயிடலாமே. ப்ளீஸ் டோன்ட் மைன்ட். உங்கள பத்திரமா வீட்ல சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. நம்பி வரலாம் இல்லையா." ஹர்ஷா புன்னகையுடன் சொல்ல



    அப்போதுதான் வண்டியில் பின்னால் வைக்கப்பட்டிருந்த பொருட்களை திரும்பிப் பார்த்தாள் சம்ருதி. அரிசி மூட்டைகளும் , சில அட்டைப்பெட்டிகளும் அடுக்கப்பட்டு இருந்தது.



    "அடிக்கடி இந்த மாதிரி டொனேட் பண்ணுவிங்களா சார்?" சம்ருதி கேட்க எந்த பதிலும் சொல்லாமல் ஹர்ஷா டிரைவிங்கில் கவனம் செலுத்தினான். அவனுடைய திடீர் மௌனம் அவளுக்கு குழப்பமாய் இருக்க இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் சம்ருதி.



    ஆஷ்ரமத்தில் பொருட்களை இறக்கியபின் ஆஷ்ரம நிர்வாகியிடம் போனில் பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு மீண்டும் வண்டியை கிளப்பிய போது அரைமணி நேரம் கடந்து இருந்தது.
     
  5. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    3515246392_dc9faaa4b0.jpg
    அழகாய் பூக்குதே-4



    ஆஷ்ரமத்தை விட்டு திரும்பி வரும்போதும் ஹர்ஷா எதுவும் பேசாமல் இருக்க சம்ருதிக்கு தர்ம சங்கடமாய் இருந்தது. தான் ஏதாவது தவறாக பேசிவிட்டோமோ என்று உறுத்தலாக இருக்க...


    "நான் ஏதாவது உங்க மனசு புண்படும்படி சொல்லிட்டேனா சார். திடீர்னு சைலன்ட் ஆயிட்டீங்க"



    "இப்படி வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசுனா நானும் மேடம் மேடம் ன்னு ஆரம்பிக்க வேண்டியது தான். அதுதான் யோசிச்சுகிட்டு இருந்தேன்" ஹர்ஷா அமுக்கமாய் சொல்ல சலங்கைகளை கீழே உருட்டியது போல் கலீரென்று சிரித்தாள் சம்ருதி.



    "ஐ ஆம் சாரி. இதுக்குத்தானா. நான் தான் எதுவும் தப்பா பேசிட்டேனோன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் ஹர்ஷா. இனிமே சார், மோர் எல்லாம் எதுவும் இல்ல. உங்க வைப் உங்கள எப்படி சமாளிக்கறாங்க? வீட்டுலயும் இதே மாதிரி தான் கலாட்டா பண்ணுவீங்களா? உங்க மனைவி பேர் தெரிஞ்சுக்கலாமா? உங்களுக்கு எத்தன பசங்க? என்ன படிக்கறாங்க? " சம்ருதி சரமாரியாய்க் கேட்க தனக்குள் எழுந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக் கொண்டான் ஹர்ஷவர்தன்.



    அதற்குள் ஹர்ஷாவின் செல் அலறியது. "சொல்லுங்க ராஜு... என்னாச்சு?" சம்ருதியை பார்த்தபடி ஹர்ஷா பேச...



    "வண்டி சரி ஆயிடுச்சு சார். மேடம் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன். தகவல் சொல்ல போன் பண்ணேன் சார்."



    "நான் சொல்லிடறேன் ராஜூ. நீங்க வெச்சிடுங்க"



    "டிரைவர் உங்க வீட்டுக்கு தான் போய்கிட்டு இருக்கான் சம்ருதி. வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா"



    "நீங்க ஆஷ்ரமத்துல இருந்தப்போவே சொல்லிட்டேன் ஹர்ஷா. டிரைவர் கிட்ட ஸ்லிப் குடுத்திருக்கேன். நோ ப்ராப்ளம்"



    "அப்போ ஒண்ணு செய்யலாமே. வீட்டுக்கு வந்து என் பேமிலிய மீட் பண்ணிட்டு போலாமே . அம்மாவும் இருப்பாங்க. ஷி வில் பி மோர் ஹேப்பி" ஹர்ஷா அவள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்க கையில் இருந்த ரிஸ்ட் வாட்சை பார்த்துக் கொண்டு இருந்தாள் சம்ருதி. பசி வேறு வயிற்றை கிள்ளியது.



    "ரொம்ப லேட் ஆயிடுச்சு ஹர்ஷா. இன்னொரு நாள் வர்றனே. ப்ளீஸ். அம்மா காத்துகிட்டு இருப்பாங்க." சம்ருதி கெஞ்சலாய் கேட்க...



    "அஸ் யூ விஷ். ஹேவ் மை கார்ட். நட்பு ரீதியா எப்பவாவது பேசணும்னு தோணுச்சுன்னா இந்த நம்பருக்கு கால் பண்ணலாம். மை பெர்சனல் நம்பர். உங்க வீட்டுக்கு ரூட் சொல்லுங்க" சம்ருதி சொன்ன வழியில் சென்று அவளை வீட்டு வாசலில் இறக்கிவிட்டான்.



    "இவ்ளோ தூரம் வந்தீங்க. வீட்டுக்கு வந்துட்டு போங்களேன். " சம்ருதி கேட்க "ஆன் சம் அதர் டே. பை..." என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்!



    சம்ருதி வீட்டுக்கு வந்து நடந்த கதை எல்லாம் சரோஜினியிடம் சொல்லிவிட்டு இரவு உணவை முடித்தபோது கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது.



    "மெக்கானிக் சார்ஜ் எவ்ளோ ன்னு கேட்டு பணம் கொடுத்தியா சம்ருதி? "சரோஜினி கேள்வி எழுப்ப...



    "ஐயோ. மறந்துட்டனே. ஏதோ பேசிகிட்டு வந்ததுல இது சுத்தமா மறந்தாச்சு. சரி விடும்மா. மறுபடியும் எப்பவாவது பார்க்கறப்ப குடுக்கறேன். அப்பா எப்போ வரேன்னு தகவல் சொன்னாரா. வரும்போது ஆக்ரா பேதா வாங்கிட்டு வர சொல்லும்மா. சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. நான் தூங்கப் போறேன். குட்நைட்." என்று சொல்லிவிட்டு சம்ருதி தன் அறைக்கு சென்றாள்.



    மீண்டும் தன் நிறுவனத்துக்கு சென்று கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு ஹர்ஷா வந்தபோது மணி பனிரெண்டை தொட்டிருந்தது. "வெளியே சாப்பிட்டுக் கொள்கிறேன். காத்திருக்க வேண்டாம் " என்று வீட்டுக்கு தகவல் சொல்லி இருந்ததால் அமிர்தம் தூங்கப் போயிருந்தார்.



    சமையல்கார வடிவு சூடான பால் பிளாஸ்கில் வைத்திருக்க அதை மட்டும் அருந்திவிட்டு ஒரு குளியல் போட்டால் தெம்பாக இருக்கும் என்று தன் அறைக்கு வந்துவிட்டான் ஹர்ஷா. ஷவரில் ஒரு குளியலைப் போட்டு இடுப்பில் கட்டிய துண்டுடன் வெளியே வந்தவன் இரவு உடைக்கு மாறி ஏசி காற்றில் படுக்க சுகமாக இருந்தது. ப்ளேயரை ஆன் செய்தான்.



    ஹேரிஸ் ஜெயராஜின் இசை இதயத்தை வருடிக் கொண்டு இருக்க வாழ்க்கையில் அன்றுதான் முதன் முறையாக வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். விழி மூடினாலும் திறந்தாலும் சம்ருதி கண்முன்னே நிற்க தலையணையை ஓங்கிக் குத்தினான் ஹர்ஷா. இந்த அவஸ்தை எல்லாம் வேண்டாம் என்று தான் பெண்கள், திருமணம் என்று எதைபற்றியும் நினைக்காமல் காலத்தை கடத்திக் கொண்டு இருந்தான்.



    அவன் வைராக்யத்தையும் தாண்டி சம்ருதியின் கலீர் சிரிப்பு காதில் ஒலிப்பது போல் இருந்தது. மோகினிப் பிசாசு. என் உத்தரவின்றி என் மனதில் உட்கார்ந்து விட்டாள். பலவகையான எண்ணங்களின் சங்கமத்துக்கு நடுவே அவன் கண் அயர்ந்த போது மணி இரண்டு என்று எலெக்ட்ரானிக் பச்சை விளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருந்தன.



    மறுநாள் காலை எழுந்த போது கண்கள் நெருப்புத் தணலாய் எரிய அந்த எரிச்சலை குளிர்விப்பது போல் மீண்டும் சம்ருதி அவன் மனதிற்குள் உணர்வுகளை கிளறி விட்டுப் போனாள். எழுந்திருக்க மனமில்லாமல் படுத்துக் கிடந்த போது இண்டர்காம் ஒலித்தது.
     
  6. Revadam

    Revadam New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi
    your story is very interesting. I want to read your story Azhagai pookkuthey episode-5 and need full story. where can i read that. please inform me. thanks a lot for good story.

    Revathy
     
    1 person likes this.
  7. Coolsea

    Coolsea Silver IL'ite

    Messages:
    92
    Likes Received:
    184
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Azhagaai Pookuthe pdf-tamil novel
     
  8. chithirainilavu

    chithirainilavu Gold IL'ite

    Messages:
    724
    Likes Received:
    814
    Trophy Points:
    188
    Gender:
    Female
    lovely story coolsea. a neat romantic story. how did i miss this?

    shara
     
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Coolsea. very interesting story. good to read.
     
  10. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Coolsea,

    Will u post here the remaining parts... can you please?
     

Share This Page