சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#2975

Discussion in 'Religious places & Spiritual people' started by jaisapmm, Mar 14, 2010.

  1. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    Re: சிவஸ்தலம் - புஷ்பவன நாதர் கோவில், திருப்ப&

    சிவஸ்தலம் பெயர் திருப்பூந்துருத்தி
    இறைவன் பெயர் புஷ்பவன நாதர்
    இறைவி பெயர் சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி


    பதிகம் திருநாவுக்கரசர் - 3

    எப்படிப் போவது

    அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.



    ஆலய முகவரி

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
    திருப்பூந்துருத்தி
    திருப்பூந்துருத்தி அஞ்சல்
    (வழி) கண்டியூர்
    திருவையாறு வட்டம்
    தஞ்சை மாவட்டம்
    pin - 613103


    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    இரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.

    கோவில் அமைப்பு: இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. நேரே உள்ள பெரிய நந்தி விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் இத்தலத்தில் தங்கி இருந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கோண்ட அப்ப்ர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ "உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்" என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

    திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் மூன்று பதிகங்களும், பொது பதிகங்கள் 15-ம் இத்தலத்தில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியிலுள்ள இறைவனை தரிசித்து உய்ந்த பேறு பற்றி ஒவ்வொரு பாடலிலும் புறிப்பிடுகிறார். மேலும் அவர் பாடிய அங்கமாலை என்ற பதிகம் மிக அருமையானது. நமது உடல் உறுப்புகளான தலை, காது, கண், மூக்கு, நாக்கு, கால்கள், கைகள், நெஞ்சம் ஆகியவை யாவும் இறைவனை துதிப்பதற்கென்றே ஏற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடியும் காணக் கிடைக்காத எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று மனமுருகி குறிப்பிடுகிறார்.


    தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து
    தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்

    கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
    எண் தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ

    செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம் இறை செம்பவள

    எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ

    மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை
    வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்

    வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப்
    பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்துகண்டாய்


    நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
    மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய்

    கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று
    பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகள் கூப்பித்தொழீர்

    ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து

    பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இல் ஆக்கையால் பயன் என்

    கால்களால் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில்
    கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்

    உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம்பொழுது
    குற்றாலத்து உறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ


    இறுமாந்து இருப்பன்கொலோ - ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
    சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச்சென்று அங்கு இறுமாந்து இருப்பன்கொலோ

    தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந்
    தேடித் தேட ஒணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்
     
  2. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    Thanks for posting about the temples of Pushapavananathar and Brahma Sirakandeeswarar.
     
  3. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    Re: சிவஸ்தலம் -ஸ்ரீ வாஞ்சியம் கோயில் புராணம&#3

    தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
    முல்லைவனம் கூடல் முதுகுன்றம்
    நெல்லை களர்காஞ்சி கழுகுன்றம் மறைக்காடு
    அருணைகாளத்தி வாஞ்சியம் என் முக்தி வரும்'
    என்ற புராணப்பாடல் ஒன்று உள்ளது. இதன் மூலம் இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால், பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு �க்ஷத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள்.ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். இதற்கு "ஆத்ம தர்ப்பணம்' எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிறவர் களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம) கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

    சண்ட ராகு

    மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் வழங்கிய போது, அதை ஸ்வர்பானு என்ற அசுரன் ஒருவன் தேவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டான். இதனால் கோபமடைந்த மகாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் (சட்டுவம்) அவனை வெட்டினார். இருந்தாலும் அமுதம் பருகிய அவர்களது உயிர் பிரியவில்லை. விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்ட அவர்கள் நவக்கிரக மண்டலத்தில் ராகு, கேது என்னும் பெயரில் இடம் பெற்றனர். இந்த கிரகங் களுக்கு தனித்தனி வடிவம் தரப்பட்டது. இத்தலத்தில் இருவரையும் ஒரே வடிவமாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பை "சண்ட ராகு' என்பர். இவருக்கு தனி சன்னதி உள்ளது.


    தல வரலாறு

    எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் �க்ஷத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.


    குப்த கங்கை

    ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப் படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.


    கார்த்திகை ஞாயிறு

    தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப் பெறலாம்.


    இரண்டாம் நாளே தீர்த்தவாரி

    எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப் படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சி நாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.


    இன்று சந்திர கிரகணம்

    கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். கிரகணத்தை ஒட்டி இந்தக் கோயிலை சிறப்பு தரிசனம் செய்வோம்.


    புண்ணியத் துளிகள்...

    * 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான்.
    * ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது.
    * இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.
    * கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
    * எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம்.
    * அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
    * தல விநாயகரை அபயங்கர விநாயகர் என்பர். தல விருட்சம் சந்தன மரம்.
    * மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.
    திறக்கும் நேரம் : காலை 6 - 12 மணி, மாலை 3 - 8 மணி.
    இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்
     
  4. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    Very nice information has been shared by you. Thanks a lot. Surely it gives a pressure to make a visit to this temple.
     
  5. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    Dear jaisapmm

    Why no updates from you for quite sometime?
     
  6. Saisakthi

    Saisakthi IL Hall of Fame

    Messages:
    8,963
    Likes Received:
    12,597
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    OM SAIRAM

    Dear JAISAPMM ji,

    Thanks for sharing these wonderful temple information, Not seen for some time, awaiting for some more valuable informations.

    Thanks in advance

    JAI SAIRAM :Bow
     
  7. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    புஷ்பவன நாதர் கோவில், திருப்பூவனூர்

    புஷ்பவன நாதர் கோவில், திருப்பூவனூர்



    தலம் திருப்பூவனூர்
    இறைவன் புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்
    இறைவி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி
    தல மரம் பலா
    தீர்த்தம் க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம்
    வழிபட்டோர் சுகப்பிரம்மரிஷி
    தேவாரப் பாடல்கள்
    திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1


    எப்படிப் போவது
    மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில் மன்னார்குடியில் இருந்து 8 கி.மி. தொலைவிலும், நீடாமங்கலத்தில் இருந்து 3 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.


    தல வரலாறு

    வசுசேன மன்னனுக்கு மகளாகப் பிறந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அம்பாளை, சதுரங்கத்தில் வென்று, மணந்து கொண்டதால் இறைவன் சதுரங்கவல்லப நாதர் என்னும் திருநாமம் பெற்றார்.

    சிறப்புக்கள்

    சுகப்பிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.

    இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது. ஆனபோதிலும் இவ்விரண்டும் பிணி தீர்க்கும் குளங்களாக உள்ளன.

    இத்தலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. விஷம் தோஷம் நீக்கவல்ல பிரத்யட்ச பிரார்த்தனைச் சந்நிதி, விஷக்கடிக்கு, எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர்.

    இறைவனுக்கு நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
    ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில் 147 அடி அகலம், 304 அடி நீளம் கொண்டதாகும். நீண்டு நெடிதுயர்ந்த மதிற்சுவரும் கருத்தைக் கவரும் கல்மண்டபங்களும் அகன்று விரிந்த உள்-வெளிப் பிரகாரங்களும் கலை நுணுக்கமுள்ள விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோவில் கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் புஷ்பவனநாதர் என்றும் சதுர்ங்கவல்லபநாதர் என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது. அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது.இந்தத் தலத்தில் கோவில் கொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். விஷ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவில் தீர்த்தத்தில் நீராடி சாமுண்டீஸ்வரி அம்மன் சந்நிதியில் வேர்கட்டிக்கொண்டு கடி நோய்களிலிருந்து விடுபடுகின்றனர். தர்மவர்மன் என்னும் அரசன் இக்கோவிலின் தீர்த்தத்தில் நீராடி தனது கரும்குஷ்டநோய் நீங்கபெற்றிருக்கிறான். நந்திதேவர் மற்றும் சித்தர்கள் பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். கருவறை கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, துர்க்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆக்யோரின் சந்நிதிகள் அமையபெற்றுள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

    தல வரலாறு

    இத்தலத்தில் இறைவனுக்கு சதுரங்கவல்லபநாதர் என்ற பெயர் ஏற்பட ஒரு சுவையான வரலாறு உள்ளது. தெண்பாண்டி நாட்டு அரசன் வசுசேனன் அவன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு வெகு காலமாக குழந்தை இல்லை. நீண்ட நாட்களாக அவர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இறைவன் அவர்களுக்கு அருள முன்வந்தார். அரசன் ஒருநாள் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக் கண்டான். இறைவன் திருவருளால் உமாதேவியே அவர்களுக்கு மகளாகப் பிறக்க அங்கு சங்கு ரூபத்தில் தென்பட அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வர ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான். பல அரசகுமாரர்கள் வந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டு, இறைவன் மீது பாரத்தைப் போட்டு தலயாத்திரை மகளுடன் கிளம்பிச் சென்றான். அநேக சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு கவலையுடன் தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல முடியுமா என்று கேட்டார். அரசன் மகளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது. அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள் அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மகளை மண்முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான். உள்ளம் உருக சிவபெருமானை தியானித்தான். கண் சிமிட்டும் நேரத்தில் அங்குள்ள முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியை வென்று அவளுக்கு மாலையிட்டவர் புஷ்பவனநாதரே ஆவார். சதுரங்க ஆட்டத்தில் இறைவியை வென்றதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயரும் பெற்றார்.
     
  8. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    Re: சிவஸ்தலம் - அருள் வள்ளல் நாதர் கோவில், திர

    அருள் வள்ளல் நாதர் கோவில், திருமணஞ்சேரி

    தலம் திருமணஞ்சேரி
    இறைவன் அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்
    இறைவி யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள்
    தல மரம் -
    தீர்த்தம் சப்த சாகர தீர்த்தம்
    வழிபட்டோர் மன்மதன், ஆமை
    தேவாரப் பாடல்கள்
    1. சம்பந்தர் - அயிலாரும் அம்பதனாற்) 2. அப்பர் - பட்ட நெற்றியர் பாய்புலி)


    எப்படிப் போவது
    மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 Km தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.

    ஆலய முகவரி
    அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில் கீழைத்திருமணஞ்சேரி திருமணஞ்சேரி அஞ்சல் குத்தாலம் S.O. மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609813


    தல வரலாறு

    உமாதேவி ஒருமுறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன்பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.
    உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

    தலச் சிறப்பு

    திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமனஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.
    திருமண பிரார்த்தனை விபரம்

    திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால்விரைவில் திருமணம் இனிதே கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் தினமும் காலையில் நீராடி விட்டு ஆலயத்தில் வழங்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை பிழிந்து உப்பு சர்க்கரை சேர்க்காமல் நீரில் கலந்து சாப்பிட்டுவிட்டு ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

    திருமணம் முடிந்தவுடன், ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை தம்பதி சமேதராய் வந்து ஆலயத்தில் செலுத்தி பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ள வேண்டும்.

    நெய்தீபம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், சந்தனம், 2 மாலை, 2 தேங்காய்ஆகிய பூஜை சாமான்கள் அனைத்தும் ஆலயத்தின் உள்ளே ஆலய நிர்வாகத்தால் நியாயாமான விலையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
    கோவில் அமைப்பு

    கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலயம் இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு கட்ட கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.

    கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்து அதனால் அவரது நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். அதனால் மனம் நொந்து திருந்தி மன்மதன் சிவப்பெருமானை துதிக்க சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது.

    சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது. ஆலயத்தின் இராஜ கோபுரம் மல்லப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது.

    இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண சடங்குகள் நடைபெற்றன
     

Share This Page