1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Running Commentary On Upanayanam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Sep 25, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு உபநயனத்துக்குப் போனேன். மேடை மேல் உபநயனப் பையன் மாலை அணிந்து கொண்டு நான்கு புறமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருக்கும் செயின் போட்டோவில் விழவேண்டுமே என்ற கவலையில் அவனுடைய தாய் அடிக்கடி குனிந்து அதை எடுத்து மாலை மேல் நெளிய விட்டுக் கொண்டிருநதாள்.

    ஸாஸ்திரிகள் புத்தகத்தைப் பார்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். வீடியோக்காரர் அவருக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்தார். வேத மந்திரங்கள் மகா புனிதமானவை, அதைக் காதால் கேட்டாலே புண்ணியம். அதை வாயால் வேறு சொல்வானேன் என்ற எண்ணத்தில் பையனின் தகப்பனார் மந்திரத்தைச் சொல்லாமல் வாசல் பக்கம் பார்ப்பதும் வருவோர்களைக் கை கூப்பி வரவேற்பதுமாக இருந்தார். அவரது ஓவர்சைஸ் தொப்பையும் பஞ்சகச்சமும் பொருந்தாத் திருமணம் புரிந்த தம்பதிகள் போல போராடிக் கொண்டிருந்தன. வேட்டி விவாக ரத்து செய்துவிடப் போகிறதே என்ற பயத்தில் அவர் அடிக்கடி அதைக் கையால் பிடித்தபடி இருந்தார்.

    வடுவிற்கு பசிக்கப் போகிறதே என்ற கரிசனத்தோடு அத்தைகளும் சித்திகளும் அவனுக்கு அடிக்கடி பால், ஜூஸ் முதலானவற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

    என் அருகில் பேண்ட் டீ ஷர்ட் அணிந்த மீசை வைத்த மூத்த குடிமகன் ஒருவர் இருந்தார். (அமெரிக்க) நாடாறு மாதம், (இந்தியக்) காடாறு மாதம் வாழ்பவர் என்று அவர் நெற்றியில் ஒட்டியிருந்தது. அவர் முன் வரிசையில் பிட்ஸ் பிலானி என்று அச்சிட்ட டீ ஷர்ட் அணிந்திருந்த ஒரு பையனிடம் ஸாஸ்திரிகள் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்களுக்கு அவ்வப்போது ரன்னிங் காமெண்ட்டரி கொடுத்துக் கொண்டிருந்தார்.

    ஒரு தடவை என் பக்கம் திரும்பி இதை எல்லாம் நாம தான் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லணும். ஒண்ணுமே தெரியாமல் வளர்றதுகள் என்று சொன்னார். ஆசீர்வதிக்க வந்த மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு குழுவின் பேச்சு பலமாக ஒலித்ததால் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் காதில் விழுந்தது.

    ஏன் மாமி, இந்தப் புடவை பிரசாந்தியா? அதில் தான் நிறைய வெரைட்டி வருகிறது. நன்றாக இருக்கிறது.

    எதுக்கு மாமா கல் மேலே நிக்கறான்? கல்லைப் போல உறுதியா இருக்கணும்னு உபதேசம் பண்றார் குரு, அதாவது அவன் அப்பா. குழந்தாய், இந்தக் கல் மீது நில். அதைப் போல் அசையாமல் இருந்து உன் எதிரிகளை வெற்றி கொள் அப்படின்னு அர்த்தம் இப்போ சொல்ற மந்திரத்துக்கு.

    சென்னை சூபர் கிங்க்ஸ் இந்தத் தடவை ஜெயிக்காதுன்னு முன்னாடியே தெரிஞ்சு போச்சு.

    எதுக்கு மாமா கயறு கட்டறா? கயறு இல்லேடா. அதுக்குப் பேரு மௌஞ்ஜி. முஞ்ஜிங்கிற புல்லினால் செய்யணும். இப்போ தர்ப்பையாலே முறுக்கிப் பண்றா. இந்த மௌஞ்ஜி வீட்டைத் தூய்மைப்படுத்துகிறது. பிராண அபானங்களுக்கு பலம் தருகிறது. ஸத்யத்தைக் காப்பது. பகைவரைக் கொல்வது. இதனால் நாம் நலம் பெறுவோம்னு அந்த மந்திரத்துக்கு அர்த்தம்.

    வாண்டுகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன.

    சுரிதார்கள் ஒரு ஓரமாக நின்று கிளுகிளுத்தன. ஒரு எட்டு வயதுப் பட்டுப் பாவாடை மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தது. குடித்துவிட்டு எல்லோரும் பிளாஸ்டிக் கப்புகளை நாற்காலியின் கீழ் போட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர்.

    தக்ஷிணை எவ்வளவு? இருபதாயிரம். அடேயப்பா. இருந்தாலும் இந்த வைதீகாளுக்கு இவ்வளவு பேராசை ஆகாது. இதெல்லாம் டிமாண்ட் அண்ட சப்ளையை பொறுத்த விஷயம் ஸ்வாமி. நல்ல வைதீகா கிடைக்கிறதில்லே. அதனாலே தான் இந்த டிமாண்ட். இருந்தாலும் வேதத்தை அத்தியயனம் செய்துவிட்டு தர்மத்துக்கு வழி காட்ட வேண்டியவா இப்படி அக்கிரமம் பண்ணினா ஜனங்களுக்கு வைதீக சிரத்தையே போயிடும் ஸ்வாமி.

    குருவே, நான் வேதம் பயிலத் தகுதி அடைந்து விட்டேன். என்னை அருகே அழைத்துக் கொள்ளும்னு பையன் சொல்றதாக அர்த்தம்

    காலம்பர டிபன் நன்னா இருந்தது. யார் கேட்டரிங் அடுத்த தெருவிலே தான் இருக்கார். அவா கிட்ட எப்பவுமே சாப்பாடு ஐட்டம் டேஸ்ட்டாகத் தான் இருக்கும். ரேட்டும் மாடரேட்டா இருக்கும். ஜனவரிலே பொண்ணு கல்யாணம் வெச்சிருக்கேன். இவாளையே சொல்லிடலாம்னு பார்க்கறேன். மத்தியான்னம் லஞ்ச்சையும் சாப்பிட்டுப் பார்த்துட்டுத் தான் சொல்லணும்.

    வேதம் காயத்திரி, பரப்ரும்ம்ம் இவ்றில் எதை நாடுகிறாய் அப்படின்னு குரு கேட்கிறார். பரப்ரும்மமே எனது லட்சியம், மற்றவை சாதனம்னு பையன் சொல்றான். இவா ரெண்டு பேருமே வாயைத் திறக்கல்லே. ஸாஸ்திரிகள் தான் கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லிண்டிருக்கார்.

    மேடையில் ஒரு ஸாஸ்திரிகள் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கோண்ணா. வேன்காரனே கீத்து, கழி, சட்டி, நெய் ஜாடா சாமானும் கொண்டு வந்துடுவான். நான் இன்னும் அரை மணிலே வரேன்.

    இந்த்த் தடவை bye election le ஏடிஎம்கே தான். சொல்லமுடியாது. ஆன்டி- இன்கம்பன்சி பாக்டர் தான் கடுமையா இருக்குன்னு ஒரு பேப்பர்லே எழுதியிருக்கான்.

    எதுக்கு மாமா மரக்கிளையைக் கையிலே வெச்சிண்டிருக்கான்? பொரச மரம்னு ஒரு மரம். அதோட கிளை இது. பலாச தண்டம்னு ஸம்ஸ்கிருதத்திலே சொல்லுவா. பலாச தண்டமே, நீ எப்படி தேவர்களது நிதியைக் காக்கிறாயோ அப்படியே நான் பிராமண நிதியான வேதத்தைக் காக்கணும்னு பையன் சொல்லணும்.

    நாளைக்கு நீர் ப்ரீயா? நான் நாளைக்கு துரோந்தோவிலே டெல்லி போறேன். உபாத்தியாயக்காரா ஆத்திலே கல்யாணம். வர நாலு நாளாகும் லகாரத்தோட திரும்பி வருவீர்? அப்படிப்பட்ட எடம் இல்லே. கொடுத்ததை வாங்கிக்க வேண்டியது தான். நாலு நாளைக்கு ஊரை விட்டுப் போறதுன்னா தக்ஷிணை கணிசமா இல்லாட்டா நீர் போமாட்டீரே. சிஷ்யனை அனுப்பிப் பண்ணி வைக்கச் சொல்லிடுவீரே. எனக்குத் தெரியாதா?

    பாடம்னு சொல்லு, பாடம்னு சொல்லுங்கிறாரே ஸாஸ்திரிகள். எதுக்கு மாமா? குரு சொல்றதுக்கெல்லாம் சரி சரின்னு பையன் சொல்லணும். .நீ பிரம்மசரிய ஆசிரமத்தை அடைஞ்சுட்டாய். நான் சொன்ன பிறகே உணவு சாப்பிடணும். ஆனா தண்ணீர் மட்டும கேட்காமல் பருகலாம் .பணிவிடைகளைச் செய் பகலில் தூங்காதே பிட்சை எடு. ஆசிரியருக்கு அடங்கி இரு இப்படி ஒவ்வொண்ணா குரு சொல்லச் சொல்ல பையன் சரி சரின்னு சொல்றதாக அர்த்தம்.

    இது தான் கடைசி மந்திரம். பையனுக்கு சந்தியாவநதனம் செய்யறதிலே சிரத்தை உண்டாகணுங்கிறதுக்காக சொல்றது. சௌபாக்யம் உண்டாக்கும் சிரத்தா தேவியே, உலகில் இன்பம் தேடும் அனைவருக்கும் இன்பம் தருக. உன்னை நான் மூன்று வேளைகளிலும் அழைக்கிறேன். எனக்கு சிரத்தை உண்டாகும்படி செய்.

    இந்த மந்திரத்தையாவது பையனை ஒழுங்கா சொல்ல வெச்சு அர்த்தம் சொல்லி இருக்கலாம். ஸாஸ்திரிகளுக்கே அர்த்தம் தெரியுமோ தெரியாதோ!

    ஒரு பிளாஸ்டிக் வாளி நிறைய அரிசி வைக்கப்பட்டிருந்தது. பையன் வெள்ளித் தட்டைக் கையில் ஏந்தியபடி, அம்மணி, பிச்சை போடுங்கள் என்று பரிதாபமாக வேண்டிக் கொண்டிருந்தான்.

    வித்யார்த்திகளுக்கு உதவ வேண்டும் என்ற பாரம்பரியம் தவறாத பட்டுப் புடவை மாமிகள் க்யூ வரிசையில் நின்று அந்த ஏழை மாணவனின் பசி தீர்ப்பதற்காக வெள்ளிக் கிண்ணத்தால் அரிசி மொண்டு மிகுந்த பரிவுடனும் சிரத்தையுடனும் தட்டில் போட்டனர். கூடவே ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நாணயங்களையும் போட்டனர்.

    அரிசியையும் காசையும் அவன் வேறு ஒரு வாளியில் கொட்டிக் கொண்டிருந்தான்.

    அவன் எல்லா அரிசியையும் காசையும் தின்று அஜீரணத்துக்கு உள்ளாகிவிடப் போகிறானே என்ற கவலையால் ஸாஸ்திரிகள் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டி வைத்தார். தன் சிஷ்யனைக் கூப்பிட்டு டேய் இதை எடுத்துக்கோடா என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்த தேங்காய்களைத் தன் பையில் போடத் தொடங்கினார்.

    அவர் கிளம்புவதைக் கண்ட பையனின் தகப்பனார், ஸாஸ்திரிகளே, மாத்தியான்னிகம் பண்ணி வைக்கணுமே என்று பவ்யமாகக் கேட்டார். எனக்கு நேரமாகி விட்டது. இன்னிக்கு ஏகப்பட்ட வேலை. உமக்காக வந்தேன். நீங்களே மாத்தியான்னிகம் பண்ணி வெச்சுருங்கோ. நான் வரேன்.

    பையனின் தகப்பனார் எழுந்து பஞ்சகச்சம் விழாமல் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்து ஒவ்வொருவரிடமும் மாத்தியான்னிகம் பண்ணி வெக்கறேளா என்று வேண்டிக் கொண்டிருந்தார். ஒருவரும் சம்மதிக்கவில்லை.

    என் பக்கத்தில் இருந்த அரை அமெரிக்கரிடம் கேட்டபோது அவர் நான் பேண்ட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். மந்திரம் சொல்லணும்னா அதுக்குள்ள வேஷத்தோட இருக்கணும் என்று சொல்லி மறுத்து விட்டார்.

    என்னிடம் வந்தார். நீங்கள் சந்தியா வந்தனம் செய்வதில்லை. உங்கள் பையனும் செய்யப் போவதில்லை. நாளை முதல் நிறுத்துவதை இன்றைக்கே நிறுத்தி விடலாம் என்று சொல்ல நினைத்தேன். அதைத் தான் சொல்வானேன் வாய் தான் நோவானேன் என்று நினைத்து மௌனமாகத் தலையாட்டி மறுத்தேன்.

    பையனின் குடும்பத்தாரின் உறவினர்களும் நண்பர்களும் கியூ வரிசையில் சென்று ஒவ்வொருவராகக் கவரைக் கொடுத்துப் போட்டோ பிடித்துக் கொண்டார்கள். போட்டோ செஷன் ஒரு மணி நேரம் நடந்தது.

    பையனுக்கு வேத அத்தியயனம் செய்யத் தகுதி வந்து விட்டது. வரும் ஆவணி அவிட்டத்து அன்று அவன் வியாச ஹோமம் செய்து வேதத்தைக் கற்கத் தொடங்கி விடுவான் என்ற நம்பிக்கையுடனும், தன் மேல் சுமத்தப்பட்ட வேத ரக்ஷணம் என்ற மிகப் பெரிய பொறுப்பைப் பிராமண சமூகம் இன்று வரை நிறைவேற்றிவிட்டது என்ற திருப்தியுடனும் எல்லோரும் சாப்பிட்டுவிட்டுக் கலைந்தனர். இப்படியாக உபநயனம் சிறப்பாக நடந்தேறியது.
    This has been posted under Interesting Shares also.

    jayasala42
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:It is a date with upanayanam among urbanites. Life style has gone a sea of change yet a community clings to old traditions wherever it is convenient sacrificing rituals a bit here and there. People in such gatherings will have to discuss material world and mundane life.
    All these have been nicely strung in this essay without loss of tamil fragrance of yore. I enjoyed skilfully revealing lines about importance and its meaning certain rituals and manthras chanted in this thread ceremony.
    A superfine thread with knock on the community.

    Thanks.
    Regards.
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you Thyagarajan Sir.
    jayasala42
     
    Thyagarajan likes this.

Share This Page