1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 73

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, May 6, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    பெரியவர் குடும்பத்துக்கு உதவ சென்ற நளந்தன் பம்பரமாய் சுழல, மிதுனாவும் மறைந்த அய்யாவுவின் பாட்டி பாப்பாத்திக்கு துணையாக பகல் வேளைகளை கழித்தாள். இரவில் பொன்னம்மாவால் துணைக்கு வர இயலாது போக, பாட்டி அவளை தன் கூடவே தங்க சொல்லிவிட்டார். நளந்தனும் அவள் பாதுகாப்பு பற்றிய கவலை குறைய அய்யாவுவின் இறுதி சடங்குக்கான வேளைகளில் முழு மூச்சாக உதவினான். அப்படி இப்படி என்று மூன்று நாட்கள் ஓடி விட, பெரியவரின் வீட்டின் முன் கட்டியிருந்த 'ஷாமியானாவை' வேலையாட்கள் கழற்றினர்.

    அமளி துமளி அடங்கி அன்றிரவு மிதுனாவும் நளந்தனும் குடிலுக்கு வந்துவிட்டிருந்தனர். கதவை தாளிட்ட நளந்தன் நிதானமான காலடிகளோடு சித்திர பாவை போல அவனையே விழி மூடாது பார்த்து கொன்டிருந்த மிதுனாவை நெருங்கினான்.
    அவளது தளிர் கரம் பற்றி தன் நெஞ்சின் மேல் வைத்து, "இன்னும் கூட உன் காதலை மறைப்பாயா, ம.. மிதுனா?" என்று குரல் கம்ம கேட்டான்.

    `மது என்று சொல்ல வந்ததை விழுங்கி அவன் மிதுனா என்ற விதம் அவளை தாக்கியது. தன் அன்பை சந்தேகத்திற்கிடமின்றி சொல்லிவிடும் வேகத்தில், "இல்லை" என்று தலையசைத்து அவன் மார் மீதே சாய்ந்து கொண்டாள். மாலை போல அவளது மலர் கரங்கள் அவனை நெஞ்சோடு அணைத்து கொள்ள, மிதுனாவின் முதல் அணைப்பில் மெய் மறந்தான் நளந்தன்.

    அவளாக அணைத்த முதல் அணைப்பல்லவா அது! பயம், அழுகை, அதிர்ச்சி என்று எந்த வகை தார்குச்சியும் இல்லாமல், காதல் ஒன்றே காரணமாக, ஆசையோடு அவள் தந்த முதல் தழுவலில் தேவலோகம் கண்டான் நளந்தன்.

    மார்பு ரோமங்கள் கன்னத்தில் குறுகுறுக்க மிதுனா தன் முகத்தை திருப்பி அவன் நெஞ்சத்தில் அழுத்தமாக தன் பட்டிதழை பதித்தாள். இதமாக வருடி கொன்டிருந்த நளந்தனின் விரல்கள் அவள் முதுகில் நகம் பட அழுந்தின.

    மென் குரலில் மெல்ல சிரித்த நளந்தன், "என்னை ரொம்பவும் சோதிக்கிறாயே, மது.. " என்றான்.

    அவளுக்குமே அவன் குரலும், சிரிப்பும், செய்கையும் சோதனை தானே. இனிய இம்சை! அவன் சிரிப்பில், சொல்லில், செயலில் சட்டென முகம் சிவந்த மிதுனா விலக போனாள்.

    "ம்ஹூம்... வைத்தால் குடுமி, எடுத்தால் மொட்டையா?! இப்படி அருகிலேயே இரு" என்று விலக போனவளை தன் வலிய கரத்தால் தடுத்து கையணைப்பிலேயே இருத்தினான் நளந்தன்.

    இரு கைகளாலும் அவள் முகத்தை ஒரு மலர் போல ஏந்தி மிருதுவான குரலில், "நான் உன்னை என் உயிராக நேசிக்கிறேன், மது." என்றான்.

    அவள் கண் மூடி மோனத்தில் ஆழ, "அன்று ஏன் அப்படி பேசினாய், மது? நான் எப்படி தவித்து போனேன் தெரியுமா?" என்று கேட்டான். அவன் குரலில் அந்த தவிப்பு அப்படியே ஒலித்தது.

    அவன் கையணைப்பில் மெய்மறந்து நிற்கையில், என்றைக்கு அவள் என்ன பேசினாள் என ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. அப்புறம் அல்லவா அது ஏன் என்று ஆராய முடியும்? அவள் யோசிக்க, நளந்தன் எடுத்து கொடுத்தான்.

    "என்னை பிடிக்கவில்லை என்றாயே.. அது ஏன்?" அடிபட்ட குரலில் கேட்டான்.

    ஆமாம்.. சொன்னாளே.. ஏன்? சுபலா! மிதுனாவின் முகம் கலங்கியது. ஆமாம்.. அன்று அவள் அவனை வேண்டாம் என்று மறுத்ததன் காரண காரியங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன..

    அவள் முக வாட்டம் கண்ட நளந்தன், "என்னம்மா? எதுவானாலும் வெளிப்படையாக சொல். இனியும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எனக்கு தாங்காது" கரிசனமும் பரிதவிப்பும் குரலில் இழையோட சொன்னான்.

    அவளுக்கும் தான் இனி அவனை இழக்க தாங்காது. அந்தபுரத்தில் ஆயிரம் ராணிகள் இருந்தாலும் ஷாஜகானின் உள்ளம் தொட்டவள் மும்தாஜ் மட்டும் தானாமே. அந்த நிலை கூட தனக்கு பரிபூரண சம்மதமே என்று மிதுனாவுக்கு தோன்றியது. சுபலாவை பற்றி பேச்செடுக்காமலே ஒதுக்கி விடத்தான் நினைத்தாள். ஆனால் நளந்தன் விட்டால் தானே!

    ஒரு பெருமூச்சுடன் மிதுனா அவன் மோதிரத்தை காட்டி, "இது சுபலா தந்தது தானே?" என்றாள்.

    "ஆமாம்." என்றவன் அவள் முகமாற்றத்தை கூர்ந்து கவனித்து, "சுபலா கொண்டு வந்து தந்தது" என்று நிதானமாக சொன்னான்.

    அவனது கவனமான வார்த்தை பிரயோகம் ஏதோ சேதி சொல்ல, மிதுனா நளந்தனை நேராக நோக்கி, உள்ளம் படபடக்க கேட்டாள். "கொண்டு வந்து தந்தது.. என்றால்? "

    அவள் முகத்தை விட்டு பார்வையை அகற்றாமல், "கொண்டு வந்து தந்தது என்றால், அவள் தந்தையின் நகை கடையில் நான் ஆர்டர் கொடுத்த நகையை அவள் கொண்டு வந்து தந்தது என்று அர்த்தம்" என்றான்.குரலில் சத்தியமாக எரிச்சல் ஓடியது.

    குற்றம் செய்தவள் போல தடுமாறிய மிதுனா, "சுபலா வேறு சொன்னாள்.. காதல் பரிசாக உங்களுக்கு தரப் போவதாக.." என்றாள் அவனது மன்னிப்பு வேண்டுவது போல.

    பாவி சுபலா.. இப்படி இன்னும் எத்தனை பொய்கள் சொன்னாளோ என்று உள்ளம் பதைக்க யோசித்த மிதுனா, "உங்கள் ரிசார்ட்ஸ்-க்கு கூட அவள் பெயர் வைத்திருப்பதாக சொன்னாளே.." என்றாள் தவிப்புடன்.

    இதற்கு என்ன சொல்ல போகிறான்? அவளே விளம்பர அட்டையில் சுபாஸ்தல ரிசார்ட்ஸ் என்று பார்த்தாளே.அதை எப்படி மறுப்பான்?

    "வாட்?!" என்று வெளிப்படையாக தன் நம்பாமையை காட்டினான் நளந்தன். அவள் கலக்கம் பற்றி கவலையற்றவன் போல கடுமையாக, "நீ என்ன நினைத்தாய்? ரிசார்ட்ஸ் பெயர் உனக்கு தெரியாதா?" என்று கேட்டான்.

    "சுபா ஸ்தல ரிசார்ட்ஸ்" என்று அவள் சின்ன குரலில் சொல்ல, "மண்ணாங்கட்டி" என்று வெடித்தவன், அவள் துள்ளி விழுந்தது கண்டு அவளை கட்டியணைத்து கொண்டு, "இப்படி மூளையே இல்லாமல் உன்னையும் வருத்தி என்னையும் வருத்தினால் கோபம் வராதா?" என்று தணிவாக சொன்னவன், "அது சுபா ஸ்தல ரிசார்ட்ஸ் அல்ல. சுப ஸ்தல ரிசார்ட்ஸ்!" என்று திருத்தினான்.

    "ஆனால் நீங்கள் அவளை 'சுபா' என்று அழைத்தீர்களே. நான் வேறு என்ன நினைப்பதாம்?" என்று குரலில் சிறு கோபம் ஒலிக்க கேட்டாள்.

    "பொறாமையை பார்!" என்று குரலில் பெருமிதம் ஓட சொன்னவன், "அது உன் பொறாமையை தூண்ட அப்படி கூப்பிட்டேன். நீ தான் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல, என்னை விட்டு ஓடுவதிலேயே இருந்தாயே.. அது தான் சுபலாவை கண்டால் உனக்கு ஏற்படும் பொறாமையை தூண்டிவிட்டு உன்னை உனக்கு புரிய வைக்க முய்யற்சித்தேன். அது இப்படி 'Backfire' ஆகும் என்று நான் நினைக்கவில்லை" என்று ஒரு பெருமூச்சு விட்டான்.

    "அன்று சுபலா , பத்ரி ஒரு பங்குதாரர் என்ற முறையில் ரிசார்ட்ஸ் திட்டத்தை ஏதாவது ஒரு பொது பெயரிட்டு நடத்த வேண்டும் என்று கேட்க தான் வந்தாள். 'சுபம்' டிராவல்ஸ்-ன் ஒரு பகுதியான இந்த டைம் ஷேர் திட்டத்தை அதே போல 'சுப' என்ற அடைமொழியோடு, 'சுப' ஸ்தலம் என்ற பெயரில் தொடங்குவது தான் என முடிவு என்று அவளிடம் அறுதியிட்டு சொல்லிவிட்டேன். அவள் அதை மறைத்து உன்னிடம் ஏதோ திரித்து சொல்லியிருக்கிறாள்." என்றான்.

    ஒரு பெரும் பாரம் நெஞ்சில் இருந்து அகன்றார் போல இருந்தது மிதுனாவுக்கு.
    "இரு " என்று சொல்லி தன் சூட்கேசை திறந்து எதுவோ எடுத்து வந்தவன், அவள் என்ன ஏது என்று புரிந்துகொள்வதற்கு முன், அவள் கழுத்தில் ஒரு நெக்லேசை அணிவித்தான்.
    சின்ன சின்ன அடர்சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு அழகிய கழுத்தாரம்!

    "கார்னெட் கற்கள். ஜனவரி மாதம் பிறந்தவர்களுக்கு உகந்த ராசி கல்" என்றவன் தன் மோதிரத்தை காட்டி, "இதற்கு ஆர்டர் கொடுத்த போதே உனக்கும் கொடுத்திருந்தேன். " என்று மதுரமாய் முறுவலித்தான்.

    "அப்போதேவா? " என்று அவள் பிரமித்து பார்க்க, "ஆமாம்! அப்போதே தான். எப்போது என்று சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. சுகிர்தன் ஊருக்கு கிளம்பிய அன்று" என்று சொல்லி மேலும் அவளை திகைப்பில் ஆழ்த்தினான்.

    "ஆமாம். இப்போது கண்களை விரித்து பார்! அப்போது எத்தனை 'க்ளூ' கொடுத்தும் ஒன்றையும் பார்க்க காணோம்." என்று அவன் சிரிக்க, "எங்கே சொன்னீர்கள்? எப்போது சொன்னீர்கள்?" என்று அவள் குறைபட்டாள்.

    "காதல் என்று தெரிந்துவிட்டது என்று கூட சொன்னேனே!" என்றான்.

    "ஆனால்.. நீங்கள் 'அவள்' சொல்லி விட்டாள் என்றும் சொன்னீர்களே.. நான் உங்களிடம் எதுவும் சொல்லாத போது, எப்படி அது நான் தான் என்று நினைப்பேன்?" அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை.

    "ம்.. வாயால் சொன்னால் தானா?!" என்று குறும்பாக சிரித்தான் நளந்தன். "என் மனதில் யார் என்று தெரிந்து கொள்ள நீ பட்ட பாடே உன்னை காட்டி கொடுத்ததே. அதற்கு மேலும் வாய் வார்த்தை வேறு வேண்டுமா என்ன?" என்றான் மெத்தனமாக.

    "ஆனால் நீ தான் புரிந்து கொள்ளவே இல்லை" என்று அவன் சொல்ல, "எப்படி புரிந்துகொள்வதாம்? தாத்தா வேறு நான் வருவதற்கு முன்பே உங்களுக்கு யார் மீதோ சலனம் என்று சொல்லியிருந்தார்.. அது சுபலா என்று நினைத்துவிட்டேனா. அப்புறம் அந்த கலர் கண்ணாடியை நானும் கழற்றவில்லை. அவளும் கழற்ற விடவில்லை" ஆதங்கமாக சொன்னாள்.

    "தாத்தா தவறாக புரிந்து கொண்டு உன்னையும் குழப்பிவிட்டார் போலிருக்கிறது, மது. அவள் அளவுமீறி பழகுவாள். அதை நான் அனுமதித்தேன். தவறு தான்.. அப்போது எனக்கு அது தவறாக தெரியவில்லை.. தாத்தா அதை காதல் அல்லது சலனம் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது." என்று சமாதானம் சொன்னான்.

    ஒரு நெடுமூச்சு விட்ட மிதுனா, "நீங்கள் திருவிழாவின் போது உங்கள் காதலை சொல்லிவிடுவதாக சொன்ன போது, அது சுபலாவாக இருக்குமோ என்று நான் உள்ளுக்குள் அப்படி தவித்தேன்" என்றாள்.

    அவன் அவளையே காதலாக பார்த்து, "என்னிடம் கேட்டிருக்கலாமே" என்றான்.

    "எப்படி வெளிப்படையாக கேட்பேன்? சுபலா வருவாளா என்று கேட்டதற்கு அவள் வராமலா? என்றீர்களா.. என் மனம் உடைந்துவிட்டது. அன்று நான் அப்படி அழுதேன்" என்றாள்.

    அவள் தோளை ஆதுரமாய் வருடிய நளந்தன், "அவள் என் தூரத்து சொந்தம்.. இது குடும்ப விழா. அவளோ எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்றிருப்பவள். அதை கொண்டு, அவள் வராமலா? என்றேன் மது.." என்றான்

    "ஆனால்.. சுபலாவிடம் என் காதல் விஷயம் சொல்லாதே.. நானே நேரில் சொல்வது தான் முறை என்றும் சொன்னீர்களே!"

    "அவள் ஏதும் உன்னை குழப்பி விட்டு விடுவாளோ என்று எனக்கு பயம். அதனால் சொல்ல வேண்டாம் என்றேன். அதோடு என் மேல் அவளுக்கு வேறு அபிப்பிராயம். ஒரு மரியாதைக்காக நானே அவளிடம் நம் காதல் பற்றி சொல்வது முறை என்று நினைத்தேன். வாழ்க்கை பாடம் எல்லாம் அப்படி சொன்னாய், சுற்றிவளைக்காமல் கேட்டிருந்தால் இத்தனை சங்கடம் இல்லையே!" என்று கேலி பேசினான்.


    "அங்கே மட்டும் என்னவாம்?! இவ்வளவு தெரிந்தவர், சுற்றி வளைத்து தானே மூக்கை தொட்டீர்கள்?! உன்னை தான் காதலிக்கிறேன் என்று நேரிடையாக சொல்வதற்கென்ன? திருவள்ளுவர் போல தெரிந்தவர்களுக்கு, புரிந்தவர்களுக்கு என்று புதிரல்லவா போட்டீர்கள்?!" என்று அவள் பதிலுக்கு கேலி பேச, "அது.. அது கொஞ்சம் பயம்.." என்றான் தயங்கியபடி.

    "பயமா? உங்களுக்கா?" நம்பாமல் கேட்டாள் மிதுனா.

    "பின்னே! வரையறையற்ற வாழ்வு , ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லாம் ஒரு நாள் வாங்கு வாங்கென்று என்னை புரட்டி எடுத்தாயே.. எங்கே முகத்திலடித்தார் போல மறுத்து விடுவாயோ என்று ஒரு பயம்.. என்னை மறுக்க ஒருத்திக்கு, அந்த ஒருத்தி நீயே என்றாலும்.. இடம் தருவதா என்ற ஒரு தன்னகங்காரம்.. அது நீ ஆணாக இருந்தால் உனக்கு புரியும்.." என்றான் நளந்தன் மெதுவாக.

    பின் அவள் கையை தன் கையோடு இணைத்து கொண்டு,
    "சுபலா உன் மனதை குழப்புகிறாள் என்று கண்டுபிடித்து, இனி இந்த பக்கம் தலை வைக்காதே என்று அவளை விரட்டி விட்டு, காதலர் தினத்தன்று என் காதலை சொல்வதற்காக, உன்னை பட்டு சேலையில் வர சொல்லி, இந்த நெக்லேசையும் எடுத்து கொண்டு அத்தனை ஏற்பாடுகளோடு கோவிலுக்கு வந்தால்.. நீ புரிந்து கொள்வதாகவே தெரியவில்லை...

    முதன் முதலில் உன்னை பார்த்த போதே ஒரு தாக்கம், மது.. அது அன்று நீ உடை மாற்றும் போது.." என்று அவள் காது மடல் சிவப்பதை ரசித்துவிட்டு, "பின்னர் அது ஒரு இனக்கவர்ச்சி என்று ஒதுக்கி தள்ள பார்த்தேன். தாத்தாவை நீ அன்போடு பராமரிப்பது, அப்புறம் பரம்பரா ஷாப்பிங் காம்ப்ளக்சில் நீ நடந்து கொண்ட விதம், உன் கூச்சம், என் பணத்தை மதியாத உன் தன்மானம் என எல்லாம் உன் மேலான ஈர்ப்பை அதிகபடுத்தியது.

    அன்று உன் தாத்தா பற்றி கவலைப்பட்ட போது முதன் முதலாக என்னை 'நளந்தன்' என்று கூப்பிட்டாயே.. அப்போது, எந்த பெண்ணிடமும் நான் காணாத நெருக்கத்தை உன்னில் கண்டேன். நெருக்கம் என்றால்.. உள்ளத்தை சொல்கிறேன்." என்று நிறுத்தினான்.
     
    3 people like this.
    Loading...

  2. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    touching scenes visuala manasula oduthu MST.
     
  3. Bagiya

    Bagiya New IL'ite

    Messages:
    98
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    I also felt the same
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    MST,

    ennikki oru velaiyum odavillai.............
    karanam neenga thaan..
     
  5. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    :rotfl Thanks to you, Folks! I take that as a great compliment. :bowdown
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female

    MST
    vazhga ungal kadhai valam
    valarga neengal kadhai ezhudhuvadhil............:thumbsup
     

Share This Page