1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருள் மறைத்த நிழல் - 18

Discussion in 'Stories in Regional Languages' started by mstrue, Apr 29, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    அதன் பின்னரும் நளந்தன் மிதுனாவிடம் இனிமையாகவேப் பழகினான். 'பழகினான்' என்றால் அவளுடன் நிறைய நேரம் செலவிட்டான் என்றில்லை..கண்ணில் படும்போது நட்பாகப் புன்னகைத்தான். உணவு நேரம் சேர்ந்து சாப்பிட நேர்ந்தால், இயல்பாக உரையாடினான். என்றேனும் தோட்டத்தில் சந்திக்க நேர்ந்தால் சேர்ந்து நடந்தான். எல்லாம் ஒரு தோழமையுடன் தான்.

    முன்னிருந்த இறுக்கம் மாறி, வீட்டினள் போல அவளை நடத்தினான். சில சமயம் தோட்டத்தில் உலவுகையில், சின்ன சிரிப்போடு அவன் உரையாடும் போது அவள் மனம் ஜிவ்வென்று பறக்கும். அவனுக்கும் அது போல் இருந்ததா என்று அவளுக்குத் தெரியாது. அவனிடம் எப்போதும் ஒரு நிதானம். அவன் முகத்தில் இருந்து அவளால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சிற்சில சமயங்களில் அவளோடு நடக்கையில், அவன் கண்களில் ஒரு ரசனையைக் கண்டிருக்கிறாள். அதற்குமேல் எதுவும் கிடையாது.

    மிதுனா இயற்கையிலேயே ரொம்பவும் அழகு. எழிலான உடல் வாகு. அவள் அழகை அள்ளிப் பருகத் துடித்த பார்வைகள் அவளுக்கு அறிமுகம் தான். ஆனால் எவர் பார்வையும் அவளை இந்த அளவிற்கு பாதித்ததில்லை. இவன் பார்வையில் ஒரு விகாரமற்ற ரசனை. ஒரு நிதானமான ரசனை. இயற்கையை ஆராதிப்பவன் போன்ற ரசனை..

    ஆராய மனமின்றி, ஆற்று நீர் போல ஓடுகிற பக்கம் ஓடவே மிதுனாவுக்கு பிடித்தது. அதையும் இதையும் ஆராய்ந்து, கிணறு வெட்ட பூதம் கிளம்பி விட்டால்? தாத்தா இல்லாத இந்த தனிமையில், அவன் அருகாமை தென்பளிக்கிறது. தாத்தா திரும்பி வந்தபின்..வந்தபின்னும் நண்பர்களாகத் தொடரலாமே.. இதற்குமேல் யோசிக்க அவளுக்குப் பிரியமில்லை.

    அவளுக்கு மட்டும் தான் சஞ்சலம் என்பது போல, நளந்தன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் 'ஷட்டில்' அடித்துக் கொண்டிருந்தான்! அவனது அலுவல், அவர்களது தொழில் பற்றி அவன் பேச்சில் இருந்தும், தாத்தாவின் வாயிலாகவும் மிதுனாவும் ஓரளவு அறிய முடிந்தது.

    சுந்தரம் தாத்தாவின் காலத்தில் இருந்து அவர்கள் தொழில் 'டிராவல் ஏஜன்சி'. அந்த காலத்திலேயே 'சுபம் டிராவல்ஸ்' என்றால் ரொம்ப பிரசித்தமாம். சுபம் என்பது நளந்தனின் தந்தை 'சுபாங்கனின்' செல்லச் சுருக்கம் என்று பின்னர் அவள் தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

    ஆரம்பத்தில் ஒரு சின்ன அளவில் டிராவல் புக்கிங் தொழிலாகத் தொடங்கி அதை படிப்படியாய் நேர்மையாலும், திறமையாலும் தனியனாய் உழைத்து முன்னேற்றியவர் சுந்தரம்.

    தாத்தாவிற்கு பின் பேரன் - நளந்தன் சில வருடங்களாக முழு பொறுப்பேற்று திறமையாக சென்னை பெங்களூரு முதலான பல முக்கிய நகரங்களில் பல கிளைகள் நிறுவி செவ்வனே செயல்பட்டு வருகிறான். தற்போது ஒரு புது வியாபார விரிவு முயற்சியும் செய்து கொண்டிருக்கிறானாம் - இது அவன் மூலம் அவள் அறிந்து கொண்டது. அது என்ன என்று கேட்க ஆவல் இருந்தாலும், அப்படி கேட்பது முறையாகுமா என்று அவள் தயங்கியதால் அவனாக சொல்லும் போது சொல்லட்டுமே என்று இன்று வரை அது பற்றி அவள் அவனிடம் கேட்டதில்லை.

    ஒருவேளை அந்த புதிய வியாபார முயற்சிக்காகத் தான் இந்த திடீர் வெளியூர் பயணம், அதீத வேலை நேரம் எல்லாமோ என்னவோ..ஆனால் எத்தனை வேலை பளுவிலும், வாரத்தில் இரு நாட்களேனும் பெரியவரோடு பிரத்தியேகமாக செலவிடுவது அவன் வழக்கமாம்! அவளும் அதைக் கடந்த சில தினங்களாகக் கண்ணுற்றாள். தாத்தாவும் பேரனும் தோட்டத்தில், சிட் அவுட்-ல் என்று எங்காவது செஸ், கேரம், ரம்மி என ஏதானும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவரிடம் அவன் காட்டும் அந்த அன்பும், மற்றும்
    அவனது செயல் நிர்வாகம் பற்றி தாத்தா சொல்லக் கேட்டும், நளந்தன் மேல் அவள் மதிப்பு ஏறிக் கொண்டே போனது. ஆனாலும் அவ்வப்போது அவனது சொந்த வாழ்க்கை முறை கொஞ்சம் இடித்தது.

    அவனது நட்பு வட்டாரம் பற்றி தாத்தாவிற்கு எப்படித் தெரியுமோ?! ஆனால் இன்று பார்ட்டிக்கு செல்கிறான், இன்று கிளப்பிற்கு செல்கிறான் என்று வருந்துவார். அவனே ஒருவேளை எதையும் மறைப்பதில்லையோ! அல்லது, அவரது நலம் விரும்பிகள் சொல்வார்களோ?!

    அவளே வந்த புதிதில் ஒருமுறை டிரைவரோடு பாங்கிற்கு சென்றபோது எதிரில் இருந்த நகைக் கடைக்கு, நளந்தனும் ஒரு இளம்பெண்ணும் நெருக்கமாகக் கைக்கோர்த்து செல்வதைப் பார்த்து துணுக்குற்றிருக்கிறாள். அந்தப் பெண் அவனோடு இழைந்த விதம்..கடையை அடைவதற்குள் தோளணைப்பு என்ன? கையணைப்பு என்ன?!

    தாத்தா சொன்ன சலனம் இவள்தான் போலும் என அன்று நினைத்தது போல இன்று அசட்டையாக அந்த நிகழ்வை ஒதுக்க முடியவில்லை!

    அதை நினைவுக் கூர்வது மனதிற்கு எளிதாகவோ, இதமாகவோ இல்லை, என்னவோ இனிய கனவை எதுவோ கலைத்து விட்டது போல ஒரு உணர்வு..


    தாத்தாவின் முகத்தில் தெரியும் நிராசைக்கும் , சோர்விற்கும் காரணம் அவனது வாரக் கடைசிகளும், அவனைச் சுற்றும் வண்ணத்துப் பூச்சி கூட்டங்களும் என்று அவன் எப்போது உணரப் போகிறான்?!


    ஒரு சின்ன தவறைக் கூட பொறுத்துக் கொள்ளமுடியாத 'Perfectionist'.. சிறந்த தொழில் நிர்வாகி..அதே சமயம், என் வாழ்வு என் விருப்பம் என ஆடிக் களிக்கும் வாலிபன்.. இரு மாறுபட்ட நளந்தனைப் பார்த்தாள் மிதுனா!

    அன்று சனிக்கிழமை மதியம் மூன்று மணி. நளந்தன் வீட்டில் இருந்தான். தாத்தாவும் அவனுமாக கேரம் போர்டை விரித்துவிட்டார்கள். இப்படி விளையாடும் நேரம் தொழில் சம்பந்தமான விவாதங்களும் நடக்கும் என்பதால், மிதுனா அங்கிருப்பதை அவர்களறியாமல் எப்படியாவதுத் தவிர்த்துவிடுவாள். அவர்கள் சொந்த விஷயம் பேசுகையில் தான் அங்கிருப்பது சரியில்லை என்று தோன்றும்.

    பெரும்பாலும் அவர்கள் அப்படி விளையாடும் சமயம் டாக்டர் வீட்டிலிருந்து போன் வரும் நேரமாக அமைந்துவிடுவதும் அவளுக்கு அங்கிருந்து விலக ஏதுவாக இருக்கும். தன் தாத்தாவிடம் தனியாகப் பேசவும் முடியும். அன்றும் அப்படித்தான் போன் வந்தது. சந்தானம் தான் பேசினார். ஜூரத்தால் அவர் சற்று துவண்டுபோனார் போல மிதுனாவுக்குக் கலக்கமாக இருந்தது.. குரலில் இருந்த கொஞ்ச நஞ்ச தென்பையும் காணவில்லை. ஒரு நடை அவரைப் போய் பார்க்கத் துடியாய் துடித்தது அவள் உள்ளம். சந்தானம் வழக்கம் போலத் தடுத்துவிட்டார். காசிப் பயணம் கிணற்றில் போட்ட கல் தான்! அவரைப் பயணத்திற்கு துரிதபடுத்தவும் அவளுக்கு மனமில்லை. பயணம் தாமதமானால், தாத்தா திரும்பிவரும் காலமும் நீளுமே என்றும் இருந்தது..இருதலைக் கொல்லி எறும்பாய் தவித்தாள்.

    ஒருதரம் டாக்டர் சுகந்தனிடம் தானே நேரே பேசி, பயண விவரம் கேட்கலாமா என்றும் தோன்றியது..தாத்தா எப்போதும் ஒரு மழுப்பல்..என்ன காரணத்திற்கோ பயணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள்..எதையோ மறைக்கிறார்கள் என்று வேறு ஒரு சந்தேகம்..

    இதே நினைவில் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு ரோஜாச் செடியின் அருகே அவளுக்கு முதுகு காட்டி நின்று, செல்லில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் நளந்தன். விளையாடி முடித்துவிட்டான் போலும். அருகே செல்கையில், "சரி சுகந்தன்.." என்று அவன் சொல்வது கேட்டது.

    'சுகந்தனா..' டாக்டர் சுகந்தனாக இருக்குமோ..நடையை எட்டிப் போட்டு அவனருகே சென்று தயங்கி நிற்க..அவளைப் பார்த்தவாறே, "இருக்கட்டும் சுகந்தன், பிறகு பேசலாம், சுகவனம் மாமாவையும், சந்தானம் சார்-ஐயும் விசாரித்தேன் என்று கூறுங்கள் என்றான்.

    டாக்டர் தான் மறுமுனையில் பேசுவது என்று தெரிந்தவுடன் ஆவலை அடக்க மாட்டாமல் 'நான் பேச வேண்டும்' என்று அவனிடம் சைகையில் கூறி செல்லை வாங்கக் கையை நீட்டினாள் மிதுனா. அவள் எண்ணம் புரிந்தும், நிதானமாக, "ஓகே சுகந்தன்..நானே மறுபடியும் கூப்பிடுகிறேன்" என்று சொல்லிப் பேச்சை முடித்தான் நளந்தன்!

    அவமானத்தில் முகம் கன்றியது மிதுனாவுக்கு. என்ன அலட்சியம்! கோபம் கொப்புளிக்க அவனை உறுத்துப் பார்க்க, அவனோ எதுவுமே நிகழாதது போல, இளநகை புரிந்தான். அவள் கோபம் தணியாதது கண்டு, "டாக்டர் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார்.. இடையில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் தான் என்னை அழைத்தார்" என்று சமாதானம் கூறினான்.

    அவளால் நம்ப முடியவில்லை..அவ்வளவு சாவதானமாக பேசினானே..இவனாகத் தானே அப்புறம் பேசலாம்..நானே கூப்பிடுகிறேன் என்றெல்லாம் கூறினான்! அவளிடம் செல்லைக் கொடுக்கப் பிரியமில்லாமல் பேச்சைத் துண்டித்தமாதிரி தான் அவளுக்குப் பட்டது.

    அப்படியே கிடைத்த கொஞ்ச நேரத்தில் இவனைக் கூப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயமென்றால்..தாத்தாவின் உடம்புக்கு ஏதாவது..பதறிய மிதுனாவை,
    "சே! சே! அதற்குள் எங்கெல்லாம் தாவுகிறாய்! இந்த வெள்ளியன்று காசிக்கு செல்ல நம் டிராவல்ஸ்-சில் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது என்று சொல்லத்தான் சுகந்தன் கூப்பிட்டான். நீ என்னடாவென்றால் இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக் குழப்பிக் கொண்டு.." என்று இலகுவாகக் கூறி கனிவாக அதட்டினான்.

    அதுவும் இடித்தது..தாத்தா ஒன்றுமே சொல்லவில்லையே..இந்த பயணத்தை அவர் உடல் தாங்குமா?

    அவளைக் கூர்ந்து நோக்கியவன், "என்ன ஒன்றையும் காணோமே..பயணம் உறுதிப்பட்டால் உன் மன உளைச்சல் நிற்கும் என்று பார்த்தேன்.." என்றான் யோசனையாக.

    நியாயம் தான்..அவன் சொல்படி அவள் மனம் அலைபாய்வதை நிறுத்தியிருக்க வேண்டும்..ஆனால் என்னவோ குடைந்தது..தாத்தாவின் பக்கத்தில் இருக்க வேண்டும் போல இருந்தது. ஒரு வேளை தானும் அவரோடு காசிக்குப் போக முடிந்தால்...

    "நானும்..அவரோடு காசிக்கு செல்ல முடியாதா?" அவள் கேள்வி அவளுக்கே மடத்தனமாகத் தோன்றியது. வயதுப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய் இரு முதியவர்களால் சுற்ற முடியுமா? தாத்தாவால்தான் நிம்மதியாக காசி நாதரை தரிசிக்க முடியுமா?

    கண்ணில் சிரிப்போடு சுற்று முற்றும் எதையோ தேடியவன் அவள் என்ன என்று கேட்க, "உன் வாக்கிங் ஸ்டிக்கைக் காணோமே என்று பார்த்தேன்" என்றான்.

    அவனது கேலிப் பேச்சில் மனம் ஒரு கணம் லேசானாலும், மறுபடியும் கலங்கி,
    "எனக்கு..எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது நளந்தன்.." அவனது வியந்த பார்வையில் ஒரு வினாடி தயங்கித் தானே தொடர்ந்தாள்.

    "எனக்கு..அவரை தனியே விட்டுவிட்டது போல..நான் தனியே விடப்பட்டது போல.." வாக்கியத்தை முடிக்கமாட்டாமல் இதோ விழப் போகிறேன் என்று பயமுறுத்திய கண்ணீரை இமைகள் கொட்டி அடக்க முயன்று தோற்றாள்.

    ஒரு கணம் ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்த்தவன், அவள் முகம் நோக்கி நீண்ட கைகளை அவளது திடுக்கிடல் கண்டு நிறுத்தி அப்படியே தன் மார்புக்கு குறுக்காகக் கட்டிக் கொண்டுத் தொண்டையை செருமி பேச ஆரம்பித்தான்.

    "உனக்கு உன் தாத்தா என்றால் ரொம்பப் பிரியமா?"

    பிரியமா? உயிரே அவர்தானே!
    "எனக்கு எல்லாம் அவர் தான். அம்மா அப்பா எல்லாம்" அவள் குரல் உடைந்தது.

    "ஹே! இப்போது என்ன? ஜஸ்ட் ஒரு வெளியூருக்கு செல்கிறார் அவ்வளவு தானே? இன்னும் எவ்வளவு நாள் அவர் நிழலிலேயே இருக்க மு..போகிறாய்? தனியே நிற்கப் பழக வேண்டாமா?" அவன் குரலில் லேசான கண்டிப்பும் இருந்தது.

    "தனியே நிற்கத் தெரியாது என்றில்லை. யார் நிழலும் எனக்குத் தேவையில்லை."

    "ரோஷமா?! வெரி குட்!" என்றான் வெற்றிக் குரலில்.

    "அதற்காக..என் தாத்தாவைப் பிரிந்து தான் என் தன்னம்பிக்கையைக் காட்ட வேண்டும் என்றில்லையே? என் தாத்தா என்றால் எனக்கு உயிர் தெரியுமா?" என்றாள் குற்றம் சாட்டுவது போல.

    தோளைக் குலுக்கி "எனக்கும் தான்!" என்றான் அலட்சியமாக.

    சுந்தரம் என்றால் அவனுக்கு உயிரா?! இருக்குமா? சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் அத்தனை முறை அழைத்தானே.. இப்போதும் அத்தனை அலுவலிலும் அவருக்கென தனியாக நேரம் ஒதுக்கி, அவருக்கு இணையாக அமர்ந்து விளையாடி.. ஆனால் அவர் மனம் நோகுமாறும் நடக்கிறான் தான்.. சில சமயம் பார்ட்டி என்று வெளியே சுற்றுவதும்..திருமண விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பதும்..ஏன்..இன்று இரவும் எதோ பார்ட்டி என்று தாத்தா நேற்று வருத்தமாக அவளிடம் கூறினாரே! அவர்பால் உயிரையே வைத்திருப்பவன் என்றால், அவர் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டாமா? எடுத்து இந்த வேண்டாத நட்பை விட்டொழிக்க வேண்டாமா? அவன் கூற்றை அவளால் முழுதும் நம்ப முடியவில்லை.

    அவளது ஒத்துக்கொள்ளாத பாவனையில் எரிச்சலுற்றவன், "இப்போது என்ன?" என்றான்.

    "ஒன்றுமில்லை!"

    "ம்ஹூம்..ஏதோ இருக்கிறது. சொல், அப்படி என்ன நம்ப முடியாததை நான் சொல்லிவிட்டேன்?"

    சொல்லாமல் விடமாட்டான் என்று தெரிந்ததும், உள்ளதைத் தானே சொல்லப் போகிறேன் என்று தைரியமாக நினைத்ததை சொன்னாள் மிதுனா.
     
    3 people like this.
    Loading...

  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    MST
    i didnt get part 17, i dont know y????????
    Part 18 is really fantastic, solli irukira vidham..............
     
  3. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male

Share This Page