1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Summary Of Chitra.g Novels

Discussion in 'Books & Authors in Regional Languages' started by storiesdetails, Dec 9, 2019.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வானம் அருகில் வரும் – (சித்ரா.ஜி)

    மனித மனம் என்பது நல்ல நிலம் போல. அங்கு எதை விதைக்க வேண்டும்..? அல்லது எதை விதைக்கக் கூடாது..? என்பதை அறிந்து செயல்புரிந்தால்… அதன் பலன் நிச்சயம் உண்டு.

    வாழ்வின் நிலைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதுமில்லை. அவை நிலைப்பதுமில்லை. எத்தகைய நேரங்களிலும் உறுதுணையாக இருப்பது சூழ இருக்கும் உறவுகளும், உடனிருக்கும் நட்பு மட்டுமே.

    நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால், நண்பர்கள் தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அத்தகைய உறவுகளும் நட்பும் சூழ்ந்த கதைக்களம்…

    கிரிதரன்… அம்மா - அப்பா, அத்தை - மாமா, அவர்களது மகன் சிவா போன்ற உறவுகள் சூழ் குடும்பத்தின் மையம். ஜவ்வரிசி தயாரிப்பு இவர்களது தொழில். காலமாற்றத்தில் எல்லோரும் வெவ்வேறு தொழில்களுக்கு மாறிவிட, இவர்கள் மட்டும் அதை வளர்ச்சிப் பாதையில் செலுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கிரிக்கு வசுமதி அறிமுகமாகிறாள்.

    வசுமதி… அம்மா, அண்ணன், அண்ணியுடனான அன்பான வாழ்க்கை. சமீபத்தில் தான் தவறிவிட்ட தந்தையின் நினைவுகள் அவ்வபோது அழுத்திய போதும், நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு வாழ்வின் போக்கில் செல்பவள். அவளது தந்தைக்கும் ஜவ்வரிசி தயாரிப்பு தொடர்பான தொழிலே. தந்தைக்குப் பிறகு அண்ணன் ஜெகன் அதை கவனித்துக் கொள்கிறான். ஆனால் எதிர்மறை குணமுடைய நண்பன் கதிரேசனுடன் இணைந்து. கதிரேசனின் மைத்துனனை வசுவிற்கு மணமுடிக்கும் எண்ணமும் நண்பர்கள் இருவருக்கும் உள்ளது. இச்சூழலில் கிரியை சந்திக்கிறாள் வசுமதி.

    முதல் சந்திப்பிலேயே அவளைப் பார்த்த கிரியின் முகம் சுளிக்க, அதன் காரணமாகவே அவள் அவனை கவனிக்கிறாள். வசுவின் தந்தையின் மூலம் இரு குடும்பத்திற்குள்ளும் இலேசாக துளிர் விட்டிருந்த நட்பு, தற்போது மீண்டும் சந்திக்கும் போது மேலும் வளரலாயிற்று.

    கிரியின் கோபம் தொழில்முறையிலானது, அதுவும் தனது அண்ணனின் நண்பன், கதிரேசனின் மேல் என்பது, தொடர்ந்த நாட்களும், அவர்களது நட்பும் அவளுக்கு புரிய வைக்கிறது. மேலும் கடந்து சென்ற காலங்களில் இருவருக்குள்ளும் அன்பு முளைத்து காதலாக வளர்கிறது.

    இதற்கிடையில் கதிரேசன் குடும்பத்தினரால் ஏற்படும் இடையூறுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. தங்கையின் மனதை தெரிந்து கொள்ளும் ஜெகன், கதிரேசனுடனான நட்பில் தடுமாறுகிறான். இதனை அறிந்து கொள்ளும் கதிரேசன் தனது நண்பனுக்காக தனிப்பட்ட விரோதங்களைக் களைந்து நட்பில் நிமிர்ந்து நிற்கிறான்.

    சங்கடங்கள் எல்லாம் தீர்ந்த நிலையில் கிரிதரனும் வசுமதியும் இருமன பந்தத்தில் இணைகின்றனர்.
     
    Last edited by a moderator: Dec 21, 2019
  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தூரிகை சொந்தங்கள் – (சித்ரா.ஜி)

    தனித்தனியாக நிற்கும் பலவித வண்ணங்களை தன்னுள் ஏந்திக் கொண்டு, அதன் தனித்தன்மை மாறாமல் பொருத்தமான கலவைகளில் அழகான ஓவியங்களை உருவாக்கும் இயல்பை தன்னகத்தே கொண்டிருப்பது தூரிகையின் சிறப்பு.

    அதைப் போன்றதொரு சிறப்பும் இயல்பும், அன்பென்னும் தூரிகைக்கும் உரித்தானதே. தனித்து நிற்கும் மனித மனங்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் வாழ்வின் பொருளை வரைந்து செல்வதே…. இத்தூரிகை சொந்தங்கள்.

    ஜீவரிஷி... மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். தாய் மற்றும் ஆறு வயது மகள் அதிதியுடன் வசிக்கிறான். ஜீவாவிற்கு போட்டோகிராபியில் இருந்த ஆர்வத்தினால், மனைவியின் மனநிலையை உணர்ந்து கொள்ள தவறிவிட.. அதன் விளைவு, அவனது மனைவி கணவனையும் மகளையும் விட்டுவிட்டு தனிப்பாதையில் தன் வாழ்க்கைப் பயணத்தை வகுத்து கொள்கிறாள். ஆகவே, மகளுடன் தனித்து நின்றவனை, அவனது தாய் அரவணைத்துக் கொள்கிறார். தொடர்ந்த நாட்கள் வெற்றுத் தாள்களாக பறக்க.. பணியின் நிமித்தம் அவனது அலுவலகத்திற்கு வருகிறாள் கிருஷ்ணவேணி.

    கிருஷ்ணவேணி… மூன்று வயது மகன் கிரணுடனும் சமையல் செய்யும் மாமியோடும் ஜீவாவின் வீடு இருக்கும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவள். அவனது அலுவலகத்திலேயே பணியிலும் இருக்கிறாள். குழந்தையுடன் தனியாக இருக்கும் பெண். சந்திக்கும் சமூகத்தின் அனைத்து வகைக் கணைகளையும் உறுதியுடன் எதிர்கொள்கிறாள். அவளுடைய இத்தகைய பரிமாணமே ஜீவாவை அவள் பால் நட்பின் கயிறாக இழுக்க, அவனது தனிமை அறிந்த கிருஷ்ணாவும் அவனுக்கு தோழமையாக தோள் கொடுக்கிறாள்.

    இருவரும் பரஸ்பரம் நட்பாகப் பழகுவதையும், இருவரது தனித்த நிலையையும் வைத்து, இருவருக்குள்ளான உறவை காதலின் கரங்களாக வரையறை செய்ய முயற்சிக்கும் விக்ரமினால், கிருஷ்ணாவிடமிருந்து விலகி நிற்கிறான் ஜீவா. விக்ரம் ஜீவாவின் நண்பன்.

    ஜீவாவின் விலகலுக்கான காரணம் புரிந்தாலும், அவளுக்குள்ளும் அதன் காரணமான சிந்தனைகள் எழுந்து அவளைக் குழம்ப வைக்கிறது. ஏனெனில், தனது தாய், சகோதரி போன்ற பெண்களின் இல்லற வாழ்க்கை அவளுக்குள், திருமணத்தைப் பற்றிய எதிர்மறை உணர்வுகளை பதிய வைத்திருப்பதே காரணம். நாளடைவில் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் ஜீவா, கிருஷ்ணாவின் தடுமாற்றத்தையும் உணர்ந்து, அவளையும் தன் குடும்பத்தினரையும் பிரிந்து வெளிநாடு செல்கிறான், ஒரு உறுதியான இறுதி முடிவிற்காக..

    உறவின் தன்மைகளான விலகல், உணர்தல், பிரிதல், புரிதல் என்ற அனைத்து நிலைகளிலும் வலம் வரும்… ஜீவரிஷியும் கிருஷ்ணவேணியும் இரு மண உறவான, திருமணத்தில் சங்கமிக்க, அன்பான உறவுகளும் அவர்களுடன் இணைந்து கொள்ள, அங்கே ஆனந்தம் இழைகிறது..

    அழகான, எளிய மொழியிலான எழுத்து நடையில் கதை நகர்ந்து செல்கிறது.

    எதிர்மறை கருத்துக்களையும் எண்ணங்களையும் நேர்மறையில் எதிர்கொள்ளும் பாங்கு ஆசிரியரின் தனிச்சிறப்பு. இக்கதையிலும் அது வெகு சிறப்பு.

    வாழ்வின் பயணங்களில், உடன் பயணிக்க தோழமையான துணை தான் வேண்டுமே தவிர, ஆளுமையோ, அடிமையோ தேவையில்லை, எனும் நோக்கில் கதை பயணிக்கிறது.
     
    Last edited by a moderator: Dec 20, 2019
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    விழுதுகள் தாங்கும் உறவுகள் – (சித்ரா.ஜி)
    காரணமின்றி காரியமில்லை… காரியமின்றி காரணமுமில்லை, என்பது வாழ்வின் சூட்சுமத்தை உரைக்கும் சொலவடை. ஒவ்வொரு காரியத்தின் பின்னால் ஒரு காரணமும்… ஒவ்வொரு காரணத்தின் முன்னால் ஒரு காரியமும்.. கண்டிப்பாக வீற்றிருக்கும். அதனை, அவசியமான நேரத்தில், சரியான முறையில் ஆழ்ந்து புரிந்து கொள்வதிலும், துணை நிற்பதிலும் நீடித்து வாழ்கிறது உறவு.

    தந்தை-மகன் உறவு என்பது கடலும் அலைகளும் போல.. கடலுடனான அலைகளை எப்போதும் பிரித்துப் பார்க்க முடியாது. அலையே, கடலின் தோற்றமாக உருவம் கொள்வது, அழகானது என்றாலும் பொருளற்றதொரு காட்சிப் பிழை. அதன் ஆழத்தில் உள்ள மௌனமே அதன் உண்மையான தோற்றம் என்பது, கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. பிறரால் அறியப்படும், விரும்பப்படும் அலைகள், காற்றினால் கடலில் எழும் சலசலப்பு மட்டுமே. அதைப் போல, தந்தைக்கும் மகனுக்குமான உறவில் ஆயிரம் சலசலப்புகள் அலையலையாக எழுந்து வரலாம். ஆனால், ஆழ்கடலின் தன்மையே அதன் சலசலப்பு என்பதைக் காலம் கடந்தாயினும் உணரும், உணர்த்தும் நேரம் வரும்.

    உறவுகளுக்கிடையேயான இணைப்பில் சில சமயங்களில் வெற்றிடங்கள் ஊடுருவி நிற்கும். அதன் இடைவெளிகளில், நிகழும் நிகழ்வுகளின் காட்சிப் பிழைக்குள் சிக்கிக் கொள்ளாமல்.. அதன் காரணங்களைத் தேடி வரும் மகனது புரிதலை உணர்ந்து கொள்ளும் ஒரு தந்தையின் கதை.
     
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    என் நந்தவனத்துப் பூ – (சித்ரா.ஜி)
    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனாலும், இளமை கடந்து காதின் ஓரம் நரைத்தாலும், காதலித்த காலமெல்லாம் கனவு போல ஆனாலும், உறவாக முடியாமல், உணர்வுகளில் மட்டுமே வாழ்ந்தாலும், ஆத்மாவில் உறைந்திருக்கும் காதல், காலம் கனியும் போது தானே கனிந்து வரும். வருடங்கள் பல கடந்த பின்னும்….

    ராகினி... தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேனேஜர். நாற்பதுகளின் மத்தியில் வயது. ஒரே மகன் ஸ்ரீமன் நாராயணன். அவனுக்கு அவள் யசோதை தான் என்றாலும், கன்னித்தாய். தாயும் மகனுமாகிய சின்னக் கூட்டில், அன்பான வாழ்க்கை. மகனின் பொருட்டு தான் விரும்பிய, தன்னை விரும்பிய வாழ்க்கையைத் தெரிந்தே வில(க்)கியவள்...

    ஸ்ரீயின் பன்னாட்டு நிறுவன வேலையின் காரணமாக, தன் வேலையையும் சென்னைக்கு மாற்றிக் கொண்டு வந்த ராகினி, தன் அலுவலகத்தில், பல வருடங்களுக்கு முன் பிரிந்து வந்த, தன் நெருங்கிய தோழி ஜானகியை சந்திக்கிறாள். அங்கு அவளது புறக்கண்கள் சந்தித்தது அவள் தோழியை என்றாலும், அகக் கண்கள் சிந்தித்ததோ, அவள் விலகி வந்த வாழ்வின் கனமான கணங்களை, பலவருட காலமாகத் தொடர்ந்து வரும், அந்தக் கண(ன)ங்களின் நாயகன் ஜானகியின் சகோதரனான சந்துரு.

    சந்துரு... தன் வீட்டிற்கு வந்து போகும், சகோதரியின் தோழியான ராகினியை விரும்ப, இருவரது காதலும் வளர்ந்தது. இதற்கிடையில், ராகினியின் குடும்பத்தில் சில இறப்புகள் நிகழ, இறுதியில் ராகினியும், அவளது அக்கா மகனுமே எஞ்சியிருக்க, மகனுக்காகக் காதலைத் துறந்து வெளியேறினாள் ராகினி. சந்துருவும் திருமணம் செய்து கொள்ளாமல் இராணுவத்தில் சேர்ந்தார்.

    வாழ்வின் ஓட்டத்தில் காலங்களும் கடக்க, தங்கை மகளான விஷாலியை தன் மகளாக பாவிக்கும் சந்துரு, தற்போது ஐம்பதுகளின் மத்தியில் இருப்பவர்.

    இதற்கிடையில், ஸ்ரீயின் தவறான புரிதல், காதல் என்ற பெயரில், அவனை வீழ்த்தி விட.. அதில் சிறிது, நிலைகுலைந்து மீண்டவன், தொழில் முறை கருத்தரங்கு ஒன்றில் விஷாலியை சந்திக்கிறான். விஷாலி, தன் ஹீரோவான மாமனின் காதலியைத் தேடி வர, பிரிந்தவர் கூடினர்.

    அழகான வார்த்தைக் கோர்வைகள், ஆழமான உணர்வுகள், மிதமான செய்கைகள் என்று யதார்த்தமான ஒரு காதல் கதை.

    கண்களில் தோன்றி, உணர்வுகளில் கலந்து, உள்ளத்தில் வேரூன்றி, உறவாக நிலைக்கும் உன்னத உணர்வே காதல் என்பதை, உணர்த்தியிருக்கும் கதை.

    காதலின் புரிதல்கள், காத்திருப்பின் உச்சத்திலேயே உறுதியாகிறது.

    மனித மனங்களின் உணர்வுகளை, அதனதன் பாத்திரத்திற்கு ஏற்ற வகையில், அளவாகக் கொடுத்திருக்கும் உயிரோட்டமுள்ள கதை.
     
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பனிக்கால மேகங்கள் – (சித்ரா.ஜி)
    ஆசையே துன்பத்திற்குக் காரணம், என்ற ஆழமான தத்துவத்திலிருந்து விலகி விட்ட மனங்கள், அத்தனைக்கும் ஆசைப்படு, என்ற அலைகடலில் விழுந்து பலியாகிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை.. அவர்களது கைகளை இதமாகப் பிடித்து, சரியான பாதையைக் காட்ட வேண்டிய பொறுப்பை சுட்டிக் காட்டும் கதைக்களம்.

    சஞ்சய்.. மருத்துவர். மலைவாழ் மக்களுக்கு சேவை புரிவதற்காக, தனது மனைவியுடன் அங்கேயே வசித்து வருகிறான். அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகளில் நாகரிக சமுதாயம் ஏற்படுத்தி வரும் மாற்றங்களும் விளைவுகளும் அவனை கவலை கொள்ள செய்கின்றன. குறிப்பாக இளைய தலைமுறை அதனால் அதிகம் பாதிக்கப்படுவதைக் கண்கூடாக கண்டவனுக்குள் வருத்தம் மேலிட, ஏதாவது செய்ய வேண்டுமென தவிக்கிறான். அதற்காக தனது தோழி கீர்த்தியின் உதவியை நாடுகிறான்.

    கீர்த்தி… சென்னையில் மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டிருப்பவள். கீர்த்தி-சஞ்சய் இருவரது குடும்பமும் நட்புறவில் இணைந்திருக்க, இருவருக்கிடையேயும் ஆழ்ந்த நட்பு பலப்பட்டிருந்தது. சஞ்சயின் அழைப்பின் காரணமாக அவனிருக்கும் மலைப்பிரதேசத்துக்கு செல்கிறாள். அங்கு தனது வித்தியாசமான செயல்களால் அவளைக் கவனிக்க வைப்பதோடு, தானும் அவளைக் கவனிக்கிறான் ஒருவன். அவன்.. வாசு.

    வாசு.. வாசுதேவன். காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரி. சில கால சிறப்புப் பணிக்காக அந்த மலைப்பிரதேசத்தில் வசிக்கிறான். தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவனுடைய இறுக்கத்தை எப்படியேனும் தகர்த்து விட வேண்டுமென்று முயற்சிக்கும் அவன் தந்தையும் அவனுடன் வசிக்கிறார்.

    கீர்த்தியுடன் தனது நண்பர்களையும் இணைத்து ஒரு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்கிறான் சஞ்சய். அவர்களுடைய சிறு குழு அங்குள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளைக் கூறி மருத்துவமும் செய்கின்றனர். அந்த சமயத்தில் தான், கீர்த்திக்கு சஞ்சய் அவளை அழைத்த காரணம் தெரிய வர, அவள் அதிர்ந்து போகிறாள். காரணம், பாலியல் அறியாமைக்கும் இளமையின் துடிப்புக்கும் ஆசையின் உச்சத்திற்கும் தங்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டிருந்த இரு இளம்பெண்கள்.

    அந்த பசுமை கொஞ்சும் மலைப்பிரதேசத்துக்கு தங்களது விடுமுறையைக் கழிக்க வந்த நகரத்து இளைஞர்கள், அந்த பெண்களோடும் தத்தமது உல்லாசத்தை களித்திருக்க, விளைவு முறையற்ற கர்ப்பம், அதைத் தவிர்க்க சுய மருத்துவம், அதிலும் சரிவராமல் செல்ல உயிருக்கே ஆபத்தாகி மீண்டு வந்திருந்தனர். இவர்களைப் போல் பிறரும் வழிமாறி செல்லாமல் காக்கும் துடிப்பு அவளுள்ளும் எழ, நடைமுறை சாத்தியங்களை சிந்திக்கலானாள்.

    இதற்கிடையில், வாசுவிற்கும் கீர்த்திக்கும் இடையில் ஒரு நல்லுறவு உருவாகி விட்டிருந்தது. கீர்த்தி நட்பு என்ற படியிலிருக்க.. வாசு அவளை காதல் என்ற படிக்கு தனது உணர்வுகளால் அழைத்துக் கொண்டிருந்தான். தனது இறுக்கத்தை அவளுக்காக மட்டுமே தளர்த்தியிருந்தான். அது புரிந்தும் புரியாதவளாக அவனுடன் இணைந்திருந்தாள்.

    இந்நிலையில், வாசு மீண்டும் அங்கு வந்து விட்டிருந்த அவ்விளைஞர்களை மிரட்டி, உருட்டி, பேசி என்று ஒருவாறு அவர்களுடைய தவறுகளையும் அறியாமைகளையும் புரிய வைத்திருந்ததில், அவர்கள் பயம் கொண்டு திரும்பி சென்று விட்டிருந்தனர்.

    ஒருவாறு அந்தப் பெண்களுக்கு கீர்த்தியின் மருத்துவத்தில் உடல் நிலை, பெரும்பாலும் சரியாகி விட்டிருக்க, அவர்களது மனதுக்கும் சிறிது மருத்துவம் செய்திருந்தாள். எது ஒன்றையும் எதிர்கொள்ள அம்மக்களுக்குத் தேவை கல்வியறிவு. அதைத் தன்னால் முடிந்தளவிற்கு அவர்களுக்குத் தருவதற்கு முடிவெடுத்தவள் அதனை செயலாற்றவும் செய்கிறாள். கூடவே வாசுவின் காதலிலும் கூடிக் களிக்க, எதிர்கால வாழ்விற்கான பாதை.. அவர்களது பயணத்திற்காக தன் மேல் விழுந்து கொண்டிருந்த பனிகளை எல்லாம் ஆதவனின் கரம் கொண்டு துடைத்துக் கொண்டிருந்தது…

    ஆசிரியருக்கே உரித்தான பிரத்யேக எழுத்து நடை, தங்கு தடையில்லாத கதை ஓட்டம், பனிச்சாரல் போன்ற காதல் என சமூக அக்கறையுடன் கூடிய நல்ல கதைக்களம்.

    அடித்தட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகள் என்ன..? ஆனால், கிடைத்திருப்பவை என்ன..? என்ற சிந்தனையில், கல்வியும் அலைபேசியும் நம் முன்னின்று உறுத்தத்தான் செய்கிறது.

    யாரை நோக்கியும் குற்றம் சொல்வதில் எவ்வித பயனும் இல்லை. நம்மால் என்ன முடியும் என்று தான் சிந்திக்க வேண்டும். எவ்வளவு பெரிய பயணத்தின் தொடக்கமும் ஒரு ஒற்றை அடியில் தான். அந்த ஒற்றை அடியை எடுத்து வைக்கத் தூண்டும் ஒரு முனைப்பு இக்கதையின் அடிநாதம்.

    பயணங்கள் செல்ல செல்ல பாதைகள் விரியும்… என்ற ஆசிரியரின் வரிகள் எந்தவித மனங்களுக்குமான நம்பிக்கை விதைகள்..
     
  6. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நேசப் பூவின் நறுமணம் – (சித்ரா.ஜி)
    மாறும் உலகில் மாறாதது என்று எதுவும் இல்லை. ஆனால், மாற்றம் எல்லாம் முன்னேற்றம் தானா...? அதுவும் மனமாற்றம்…? என்ற வினாவை எழுப்பி அதற்கான விடையை அலசும், சிந்திக்க வேண்டிய ஒரு அழுத்தமான கதை.

    தமிழரசு.. பன்னாட்டு நிறுவன வேலை. கை நிறைய சம்பளம். வெளிநாட்டு வாசம். ஆடம்பர வாழ்க்கை என இத்தனை நாட்கள் அனுபவித்த எல்லாவற்றையும் , வேண்டாம் என தூக்கிப் போட்டுவிட்டு, விவசாயம் செய்கிறேன் என்று கிராமத்தில் இருக்கும், தன் தாத்தா, பாட்டியுடன் வசிக்க வருகிறான். வந்து சில நாட்களே ஆன நிலையில், அவனின் முடிவை பக்கத்து வீட்டுப்பெண் பரிகசிக்கிறாள். அவள் மலர்மதி..

    மலர்மதி.. அரசுப்பள்ளியில் அறிவியல் ஆசிரியை. நிதானமான சுபாவம் கொண்டவள். தந்தை இல்லை. தாய் தமயந்தியும் ஆசிரியர். தங்கை வானதியும், தம்பி பாரதியும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குள் ஒரு உலகத்தை அமைத்து அதற்குள்ளே வலம் வரும் அழகானக் குடும்பம்.

    தன்னைப் பற்றிய மலரின் விமர்சனத்தினால், பார்க்காமலேயே அவள் மேல் கோபம் கொண்டிருந்த தமிழ், மலரை சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் அவளிடம் தன் கோபத்தை கேள்விகளாக்க, அதனால் கோபம் கொண்ட மலர், தன் கோபத்தையே பதில்களாக்குகிறாள். அவளின் கோபத்தால், தமிழ் தன்னைத்தானே, சுயபரிசோதனை செய்து கொள்கிறான்.

    நாட்கள் நகர…. தமிழ் – மலர் இருவரிடையே உள்ள கோபதாபங்கள் விலகி, நல்லதொரு நட்பு அவர்களுக்குள் முகிழ்த்தது. நாளடைவில் தமிழுக்குக்குள் அது காதலாக மலர, மலருக்குள் அது நட்பாகவே நடைபோட்டது. இதற்கிடையில், தமிழின் முடிவால் அவன் மேல் கோபம் கொண்டிருந்த அவனுடைய தந்தையும் அவனுடன் இசைந்து வர, விவசாயத்தின் அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொள்கிறான்.

    இந்நிலையில், மலரின் தந்தை வழி உறவினர்கள் சொத்துக்காக, அவளின் வீட்டிற்கும் அவளுக்கும் தொல்லைக் கொடுக்க, அது தமிழின் பாட்டியால் தீர்க்கப்படுகிறது. தமிழின் மனதுக்குள் மலர்ந்த காதல், மலரின் மனதில் மணம் வீச, இன்பத்துடன் அதனை சுவாசித்தவள், தன் மூச்சுக்காற்றாக அதனை ஏற்றுக் கொள்கிறாள்.

    ஒரே திசையில் சென்று கொண்டிருக்கும் வாழ்வில் சலிப்பு உண்டாகும் போது, ஏற்படும் மனித மனத்தின் மாற்றத்தையும், அது தொடர்பான பிறரது விமர்சனங்களையும், மதிப்பீடுகளையும் கொண்ட ஒரு கதை.

    மாற்றம் வேண்டித் தவிக்கும் போது எடுக்கும் முடிவு நிலையானதா..? இல்லையா..? என்பது, அது பலவித விமர்சனங்களால் தாக்குதலுக்குள்ளாகும் போது தான் தெரியும்.

    விமர்சனங்களை நல்லவிதமாக எடுத்துக் கொண்டு, தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்பவன் வாழ்க்கை, என்றுமே உயர்வை நோக்கியே செல்லும்.
     
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உன்னைச் சேரும் வரமொன்று வேண்டும் – (சித்ரா.ஜி)
    ஆசிரியர் என்பவர், இரண்டாவது அம்மா. அப்படிப்பட்ட ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், அந்த ஆசிரியர் போதிக்கும் நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், இணையதள மோகத்தின் பாதிப்புகளையும், இலேசாக உரசிச் செல்லும் கதை.

    பவானி… தனியார் பள்ளியின் சிறந்த கணித ஆசிரியை. அம்மா, அப்பா, தங்கை என்ற அன்பான குடும்பத்தின் அங்கத்தினள். அவள் படித்த மானசரோவர் பள்ளியிலேயே, விருப்பத்துடன் பணிபுரிகிறாள். தங்கை விநோதினியும் அதே பள்ளியில் பயில்கிறாள். சிறந்த பள்ளியாகப் புகழப்படும் மானசரோவரின் சிறப்புகள் எல்லாம் சில நாட்களாக சீரற்று போய்க் கொண்டு இருந்தன. அதனோடு கூட அவளுக்குமான சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்வதற்கு வருகிறான் அப்பள்ளியின் தற்போதைய உரிமையாளன், கிருஷ்ணா..

    கிருஷ்ணா.. மானசரோவர் பள்ளியை உருவாக்கிய இராமஜெயத்தின் ஒரே மகன். அவரின் மறைவிற்கு பிறகு, பள்ளியின் நிர்வாகம் உறவினரான அவனது மாமாவின் வசம் சிக்கியதில் பல பிரச்சனைகள் உருவெடுத்தன. இதனால் வெளிநாட்டு படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் இருந்த கிருஷ்ணா, பள்ளியின் காரணமாக தன் ஊருக்கு வருகை தருகிறான், தன் ஒன்று விட்ட சகோதரி வர்ஷாவுடன்..

    மெல்ல மெல்ல பள்ளியின் நிர்வாகத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொள்கிறான் கிருஷ்ணா. பள்ளியின் பிரச்சனைகளைக் களைகிறான். ஆன்லைன் மோகத்தால் படிப்பு பாதிக்கப்பட்ட வர்ஷா, அதிலிருந்து மீண்டு அதே பள்ளியில் தன் படிப்பைத் தொடர்கிறாள். அவளுக்கு பவானியின் தங்கை விநோ, தோழியாகிறாள். அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் பவானியும் அவளுக்கு உதவுகிறாள்.

    இதற்கிடையில், கிருஷ்ணா, தன் மனதில் பவானியின் மேல் இருந்த மெல்லிய ஈர்ப்பு காதலாக மாறியதை அறிந்து கொண்டு, அதனை பவானிக்கும் உணர்த்தி விடுகிறான். சிற்சில சிந்தனைகளுக்கு பிறகு, அவனின் காதலை தனக்குள் அங்கீகரித்துக் கொள்கிறாள் பவானி.

    வழக்கம் போல அழகிய எழுத்து நடை, சின்ன சின்ன செயல்களில் ஆழமான உணர்வுகள், அன்பான அணுகுமுறைகள் எனப் பல தோற்றங்களை உள்ளடக்கிய கதை.

    பாத்திரத்தின் தன்மைக்கேற்ப உருவம் கொள்ளும் நீரைப் போல, கல்வியும், கல்வி நிறுவனங்களும் சேரும் கைகளைப் பொறுத்தே அமைகிறது.

    இணையதள மோகத்தில் சீரழியும் இளைய தலைமுறையினரின் பிரச்சனைகள், அந்த மோகம் ஏற்படுவதற்கான காரணங்கள், என பிரச்சனையின் வேரை இலேசாகக் கோடிட்டு காட்டியிருக்கிறது.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தீட்சண்யா – (சித்ரா.ஜி)
    தன் போக்கில் செல்லும் நதியில் விழும் சிறு கூழாங்கல், அதன் வேகத்தில் சிறு சலனத்தைத் தவிர வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், அக்கூழாங்கல் விழும் இடத்தைப் பொறுத்து, அதன் திசையே சில சமயங்களில் மாறிவிடக்கூடும். அப்படி மாறும் திசையே அதன் சிறப்பை, இன்னும் அதிகரிக்க செய்து விடவும் கூடும். வாழ்வெனும் நதியும் அப்படியானது தான்..

    சுதந்திர வானில் சிறகடித்துக் கொண்டிருந்த பெண்மனமொன்று, விதியின் அம்பினால் சிறகு முறிந்து, மனக்கூட்டுக்குள் சுருங்கிக் கொள்கிறது. சுருங்கிய மனதை விரித்துக் கொள்வதற்கான அகத்தேடலின் முடிவில், விளையும் அனுபவங்களும் வாழ்வியல் சிந்தனைகளுமே… இக்கதை…

    தீட்சண்யா…. மிகவும் சுதந்திரமாகவும், செல்லமாகவும் வளர்க்கப்பட்ட பெண். அதனாலேயே அதன் எல்லைகளுக்குள்ளேயே நிற்பவள். படிப்பை முடித்த பிறகு எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்ற குதூகலக்கனவில் மிதந்து கொண்டிருந்தவளை, நிலைகுலைய வைக்கிறது. எதிர்பாராது நடந்த தந்தையின் மரணம். அதிலிருந்து மீண்டு படிப்பை முடித்துவிட்டு வந்தவளை, புரட்டிப் போடுகிறது, தாயின் மனமாற்றத்துடன் கூடிய இடமாற்றம்..

    கணவரது இறப்பின் பின்னும் கூட மகளுடன் தனியாக வசித்து வந்த சாரதா, திடீரென்று கிராமத்திலிருக்கும் மாமனாரிடம் தன் மகளுடன் அடைக்கலமாகிறார். எதிலும் மகளது விருப்பத்தின்படியே நடந்து கொள்பவர், இம்முடிவை மட்டும் அவளுக்குள் திணித்து விடுகிறார் வேறு வழியில்லாமல்…

    பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட கிராமத்தின் வாழ்க்கைக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாமலும், அதற்கு காரணமான அம்மாவைப் புரிந்து கொள்ள முடியாமலும் தவியாய் தவிக்கிறாள் தீட்சண்யா. இந்நிலையில் அவளது திருமணத்தைப் பற்றிய பேச்சும் வர பதற்றத்திற்கு ஆளாகிறாள். தன்னுடைய முடிவுகளைத் தானே எடுத்துப் பழக்கப்பட்டவள், இப்போது தன் உணர்வுகளில் கூட தனக்கு உரிமையில்லையா..? என மனம் குமைந்து போகிறாள்.

    அடுத்தடுத்து நடந்த மனதிற்கு ஒவ்வாத செயல்களின் காரணங்களைத் தேடித் தேடி கிடைக்காமல் அலுத்தவள், மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறாள். நாளாக நாளாக அச்சூழல் அவளுக்கு மூச்சு விடுவதற்கும் சிரமமாக இருப்பது போல் தோன்ற, மனமாற்றத்திற்கான இடமாற்றத்திற்கு ஏங்குகிறாள். சிந்தனையின் முடிவில், அவளுடைய தோழி வசிக்கும் வடகிழக்கு மாநிலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொள்கிறாள். அறியாத உறவுகளோடும், பிடிக்காத உணர்வுகளோடும், புதிய சூழலைத் தேடிச் செல்பவளுக்கு துணையாகிறான் அரவிந்தன்.

    அரவிந்தன்… தன்மையான குணம் கொண்டவன். ஆளுமையும் சிந்தித்து செயல்படும் திறனும் கொண்டவன். அவனுக்கு மிகப் பிடித்தமான மாமாவின், ப்ரியமான மகளான தீட்சண்யாவை அவளறியாமலேயே உணர்ந்தவன், அவள் மீதான நேசத்தை மனதிற்குள்ளாகவே சுவாசிக்கிறான். அவளது தடுமாற்றத்தை உணர்ந்து, அதைக் களைவதற்கான அவளது முயற்சிக்கு தோள் கொடுக்கிறான். வாழ்க்கைப் பயணத்தில் தன்னுடன் அவள் இணைவாளா..? என்பதையும் இவ்வழிப் பயணத்தின் மூலம் அறிந்து கொள்ள விழைகிறான்.

    அவரவர் எண்ண ஓட்டங்களினூடே அவர்களது பயணமும் செல்கிறது. அவர்கள் சென்ற போது, அங்கு நிலவிய அரசியல் நிலவரங்கள், கலவரங்கள், அதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்களினால், மிகுந்த பதட்டத்திற்கும் பயத்திற்கும் ஆளாவதோடு, தன்னுடன் வந்த உறவுகளையும் இதற்குள் இழுத்து விட்டு விட்டோமோ, என்ற குற்ற உணர்வுக்கும் ஆளாகிறாள். ஆனால், அவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆறுதலுடன் நடந்து கொள்ள, குற்ற உணர்வின் இடத்தை பாசம் ஆட்கொள்கிறது. அரவிந்தனுடன் துளிர்த்த நட்பு.. மெல்ல மெல்ல அதன் எல்லையைத் தாண்டிய நேசத்திற்குள் செல்ல முனைகிறது.

    அம்மாநிலத்தின் காலநிலை.. அவர்களின் வாழ்க்கை முறை, நடை உடை பாவனைகள் என எல்லா வித்தியாசங்களையும் அறிந்து கொள்கின்றனர். அங்கிருந்த சில நாட்களில், அங்குள்ள வாழ்க்கை முறையோடு, தன்னுடைய வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டுப் பார்த்து, சுயபரிசோதனைக்கு தன்னை உட்படுத்துகிறாள். நாட்கள் கழிய, அறியாத உறவுகளின் அருமைகளைப் புரிந்தவளாகவும், புதிதாகப் பூத்த நேசத்தின் பரவசத்தோடும், தாயை நாடிச் செல்கிறாள், தெளிவான எண்ணங்களுடன்.

    தாயிடம் சேர்ந்தவளுக்கு, மன இடமாற்றங்களுக்கான காரணங்கள் தெரியவர, அதிர்ச்சிக்கு ஆட்படுபவள், நிதர்சனத்தை உணர்ந்து தாயின் மனதிற்கு ஆறுதலளிக்கிறாள். குழப்பங்கள் எல்லாம் தெளிவடைந்த நிலையில், வாழ்வும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

    புதிய உறவுகள் என்றாலும் புரிந்த உறவுகளின் மத்தியில், புதிய கூட்டிற்குள் அரவிந்தனும் தீட்சண்யாவும் இணைப்பறவைகளாக சிறகடித்துப் பறக்க, அது ஆனந்தத்தின் இருப்பிடமாகிறது.

    அழகிய தமிழ், நல்ல எழுத்து நடை, எளிய வார்த்தைகள், அன்பான புரிதல்கள், ஆழமான உணர்வுகள், அரவணைக்கும் உறவுகள், என அருமையான கதைக்களம்…

    மாறும் உலகில் மாறாதது எதுவுமில்லை. ஆனால், அம்மாற்றம் எளிதில் கைவரக்கூடியதா..??? அதுவும் மனமாற்றம்..?? என்ற கேள்விக்கான தேடலில்.. கண்முண் விரிகிறது எண்ணற்ற சிந்தனைகள்..

    இன்னல்கள் எதுவெனினும், உற்ற உறவுகளின் மத்தியில் அத்தனையும். இற்று விழுந்து விடும்.

    உறவுகளின் உண்மை முகங்களைப் பற்றிய, நமது மதிப்பு அமைப்பு தெளிவாக இல்லாத போது, நமக்கு வரும் துயரங்களே.. அதைத் தெளிவாக்குகின்றன.

    விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பிய பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் நாம், அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களும் இங்கே தான் இருக்கின்றன, என்பதை அறிந்திருக்கிறோமா..? செவ்வாயில் நீர் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நாம்.. குடிதண்ணீர் இல்லாமல் பறிதவிக்கும் மக்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஏதேனும் செய்தோமா..? அல்லது அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தாவது பார்த்திருக்கிறோமா..? என்ற கேள்விக்கணைகளை நம்மெதிரே தொடுக்கிறது.

    இப்படிப்பட்ட சூழலில் கூட மக்கள் எந்தவித குறைகளும் கூறாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், நல்லதொரு சூழலில் அமைந்தும் கூட குற்றம் குறையிலேயே நமது வாழ்க்கையை வீணாகக் கழித்துக் கொண்டிருக்கிறோமே, என்ற குற்ற உணர்வையும் நம்முள் விதைத்து செல்கிறது.

    நாம் வாழும் இந்த வாழ்க்கை, நம்மை மட்டுமே சார்ந்தது அல்ல. நம்மை சுற்றியுள்ள எல்லோரையும் சார்ந்ததேயாகும். இன்பமோ, துன்பமோ நமக்கென்று அன்பான மனிதர்கள் வேண்டும். அதைத் தவிர வேறு என்ன வேண்டும் இந்த வாழ்வினில்..???
     
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    சிற்றலைகளின் ஒலி – (சித்ரா.ஜி)
    “நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட அனைத்தையும் நாம் மறந்து போன பின் எஞ்சி நிற்பது தான் கல்வி” என்பது மில்லரின் கூற்று.

    அத்தகையக் கல்வியைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் இச்சமூகத்தின் எல்லையற்ற அதிகாரங்கள் கொடுக்கும் அழுத்தங்களும் நிர்பந்தங்களும் ஏராளம். அதன் விளைவு, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள துணை செய்ய வேண்டிய கல்வி, இன்று சிலரது வாழ்க்கையையே முடித்துக் கொள்வதற்கு பெரும் காரணமாக இருக்கிறது.

    அப்படிப்பட்ட ஒரு மரணத்தின் காரணமாக, தன்னுடைய வாழ்வின் அடித்தளத்தையே திசை மாற்றிச் செல்கிறான் அஜித் அய்யனார்.

    அதன் விளைவு, கல்லூரி விரிவுரையாளரான அப்பா இராகவன், மருத்துவரான அம்மா இந்திரா, கல்லூரி மாணவியான தங்கை வர்ஷா ஆகியோரை உள்ளடக்கிய அவனது அன்பான குடும்பத்தினரிடமிருந்து அஜித்தை விலக்கி வைக்கிறது.

    சமூகத்தின் வாழ்வு முறைகளிலிருந்தும் கண்ணோட்டங்களிடமிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டு அதற்கு எதிரான ஒரு மனநிலையோடு தன் வாழ்வைக் கட்டமைக்க முயல்கிறான். அதன்படி, அவன் வாழ்வு முன்னேறிச் சென்று கொண்டிருந்தாலும் கூட அது முழுமையானதாக இல்லை.

    இந்நிலையில், அவனது தந்தை இராகவனை நாடி மும்பை வருகிறாள், தியா. அதுவும் அவன் மிகவும் வெறுக்கும் கல்வியைக் காரணமாகக் கொண்டு. இருவரது சந்திப்பின் தாக்கங்கள் ஏற்படுத்தும் விளைவுகளினால், அவனது எண்ணங்களுக்கான வலிமை கூடுகிறதா? அல்லது அது வலுவிழந்துப் போகிறதா? என்பதை கதையின் ஓட்டம் இயல்பாக விரித்துச் செல்கிறது.
     
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காத்திருத்தலின் கடைசித் தருணம் : சித்ரா. ஜி

    மனம் ஒரு சுவாரசியமான கருவி. எல்லா இன்பங்களும் சரி துன்பங்களும் சரி மனம் புனைந்து கொள்ளும் மாயங்கள் தான்.

    அப்படியென்றால் மனது புனைந்து கொள்ளும் அளவுக்கு வாழக்கை அவ்வளவு சிக்கலானதல்ல அல்லவா… அல்லது சிக்கலானது தானா…? எனும் விடை தெரியாத புதிரை சாய் சரணின் இள மனதில் சுமையாக ஏற்றி விட்டு மறைந்துவிடுகிறார் அவனின் தந்தை பத்மராஜா.

    நினைப்பவை எல்லாமே உண்மை இல்லையே... செயல் இல்லாத எண்ணங்கள் எல்லாம் வெறும் யோசனைகள் மட்டுமே…!

    பிரச்சனைகளின் அடிநுனி புரியாமல் மேலோட்டமாக எப்படியும் அனைத்தையும் சரி செய்து விடலாம் என்று முயற்சியைத் துவங்குகிறான் சாய்.

    சமூக மாற்றம், கால மாற்றம் என அமைந்து வர ஒரு கட்டத்தில் அவனே எதிர்பாராத வகையில் எதிர்ப்பாராத நபர்கள் மூலம் அனைத்து புதிர்களும் ஒவ்வொன்றாக அவிழ்ந்து, விடைகள் சிக்கல்கள் இல்லாமல் அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது.

    நாம் எண்ணங்களே உருவாக அமைத்தவர்கள், நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம், மனம் சிக்கலற்று, தெளிந்து தூய்மையாக இருக்கும்போது மகிழ்ச்சி நிழலாகப் பின் தொடரும்… என்றும் விலகாது என்கிறார் புத்தர்.

    தன் மனதை மட்டுமில்லை அடுத்தவர் மனங்களையும் அவர்களது அனுமதி இல்லாமல் ஆளக்கூடிய, அசுத்தம் செய்யக் கூடிய, துன்புறுத்த கூடியவர்களின் இருப்பிற்கு மத்தியில் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் அப்படியான மனநிலைக்கு எதிரானாவன்.

    ராம்கி இந்தக் கதையின் நாயகன். என்னைப் பொறுத்தவரை அவன் தான் நாயகன். ஏனென்றால், தன் மனதின் மேல் மட்டும் தான் தன்னால் ஆளுமை செலுத்த முடியும் அதற்கு வெளியே நடக்கும் நிகழ்வின் மீதோ அடுத்தவரின் எண்ணங்களின் மீதோ, மற்றவரின் மனதின் மீதோ அல்ல என்பதை உணர்ந்து அதன்படி வாழ்பவன் ராம்கி.

    அது அவ்வளவு சாதாரணம் இல்லையே அது ஒரு தவம் அல்லவா. வரம் வேண்டிய தவமில்லை அது. அவன் அதை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், அவனுக்கு அது கிடைக்கிறது வாழ்க்கையின் கடைசித் தருணத்தில்... அவனது காதலுக்கான அங்கீகாரம்.

    அது ஏன் இப்படியான fantasy கள் எல்லாம் காதலில் மட்டுமே சாத்யமாகிறது. காதல் என்பதைவிட passionate என்று சொல்லலாம். நாம் ஒன்றின் மேல் கொண்டிருக்கும் அழுத்தமான உணர்வுகள் அழுத்தமான நம்பிக்கைகள். எப்படி இருந்தாலும் ராம்கி ஒரு fantasy… காதலை போல்.

    நமக்கான தார்மீக கொள்கைகள், தார்மீக நேர்மையை விட வேறு எதுவும் புனிதமானது இல்லை என்று வாழ்பவர்கள் வாழ தெரிந்த வல்லவர்கள் அல்ல வெறும் நல்லவர்கள் மட்டுமே… அவர்களே நாயகர்கள் ஆகிறார்கள்.

    இந்தக் கதைக்கு, இத்தனை நபர்களுடைய கொந்தளிப்பான வாழ்க்கைக்குக் காரணமான கரிகாலனை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. அவனை ராம்கியின் நாயகியான துர்காவை போல் நாமும் இடது கையால் ஒதுக்கிவிடுவோம்.

    சிந்தனைகளுக்குத் தக்கபடி தான் வாழ்க்கை அமையும். மனிதர்களால் மட்டுமே அதை வேண்டியபடி மாற்றிக்கொள்ள இயலும்.
     

Share This Page