1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Summary Of Chitra.g Novels

Discussion in 'Books & Authors in Regional Languages' started by storiesdetails, Dec 9, 2019.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உன் தோகை என் தோளில் – (சித்ரா.ஜி)

    தற்போது எல்லா பருவத்திலும் கிடைக்கும், வலுக்கட்டாயமாகக் கனிய வைக்கப்படும் பழங்கள், பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும், நாவிற்கு சுவையாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு முழுக்கேடு. அந்தந்த பருவத்தில், தானாகக் கனியும் பழங்கள், நாவிற்கு ருசியாக இருப்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறது.

    காதலும் இத்தன்மையதே. பலவகையானக் காதல்கள் களிநடனம் புரியும் இன்றைய சமூகத்தில், சரியான பருவத்தில், பக்குவப்பட்ட மனங்களில், தோன்றும் காதல் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்த்தும் கதை.

    ப்ரியதர்ஷினி.. தன் பல வருடக் கனவான IAS தேர்வில் வெற்றி பெற்று, அதற்கான பயிற்சியை முடித்து, தன் ஊரிலேயே சப்-கலெக்டராகப் பதவி கிடைக்க, பொறுப்பேற்கும் நாளுக்காகக் காத்திருக்கிறாள். தாய் யசோதா, தந்தை பாலா தாசில்தார், தம்பி செழியன் இன்ஜினியரிங் மாணவன், இவர்களைக் கொண்ட அழகானக் குடும்பம். இந்த அழகானக் குடும்பத்தைப் பெறுவதற்கு முன் யசோதையின் பாடு...?

    தர்ஷினி படித்த கல்லூரியில், அவளுக்கு பாராட்டு விழா நடைபெறுவதாக இருக்க, பணியில் சேரும் முன்பு அதை முடிக்க எண்ணி, அதற்கான ஆயத்தங்களில் இறங்கினாலும், சரியாக பயிற்சியை முடித்த நேரத்தில் அழைத்து இருக்கிறார்களே, என்ற சந்தேகத்துடன் இருந்தாலும், சந்தோஷமாகவே தயாராகிறாள். ஆனால், அவளுக்குத் தெரியாது, நிழல் போலத் தொடரும் ஒருவன் அவளின் எல்லா அசைவுகளையும் உள்வாங்கி, உயிர் மூச்சாய் சுவாசிக்கிறான் என்று. அந்த ஒருவன் நந்தகுமார்..

    நந்தகுமார்.. படிப்பை முடித்து ஒரு கல்லூரியைப் பொறுப்பேற்று திறம்பட நிர்வகிக்கிறான். தாய் ராஜம், தந்தை சண்முகம் பிரபலத் தொழிலதிபர். அக்கா சுவாதி திருமணமாகி கணவன் ராஜசேகருடனும், இரு குழந்தைகளுடனும் சென்னையில் வசிக்கிறாள். அன்பான புரிதலுள்ள அழகியக் குடும்பம்.

    நந்தா, தற்போது நிர்வகித்துக் கொண்டிருக்கும் கல்லூரியில் தான் தர்ஷினி படித்தாள். அதேக் கல்லூரியில் வேறு துறையில் படித்த நந்தா, அவளுக்கு சீனியர். தர்ஷினியின் தோழி சத்யாவின் உபயத்தால், நந்தா - தர்ஷினி இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. முதல் சந்திப்பு எதிரும் புதிருமாக இருந்தாலும், அதில் தர்ஷினியின் அணுகுமுறையால், கவரப்பட்டு தன் மனதில் அவளை நிரப்புகிறான். நாளடைவில், இருவருக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான நட்பு

    உருவாக, தர்ஷினியின் கனவான IAS படிப்பிற்கு அவன் மறைமுகமான உதவிகள் பல செய்கிறான் தன் நண்பன் மனோவின் மூலம். தர்ஷினியை தன் மன சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து பூஜிக்கிறான் என்பதை வெளியில் சொல்லவில்லை என்றாலும், அவன் உணர்ந்திருந்தான். அவளுடைய விழா நாளுக்காக, ஆர்வத்துடன் காத்திருக்கிறான்.

    கல்லூரியில், தர்ஷினியின் விழா நாளும் இனிதாக முடிய, அங்கு ஆரம்பிக்கிறது தர்ஷினி - நந்தா இருவரின் குழப்பங்களும். நந்தாவின் உதவிகள் தெரியவர, ஏன் என்ற கேள்விகளாலான குழப்பங்கள் தர்ஷினிக்கும்.. தர்ஷினியின் கம்பீரம், ஆளுமை, திறமை இவைகளுக்குத் தன்னால் பொருத்தமாக ஈடுகொடுக்க முடியுமா என்ற சந்தேகங்களாலான குழப்பங்கள் நந்தாவுக்கும் வர, நாட்களும் நகர்ந்து செல்கிறது... எதை நோக்கி..? என்பதை ஆற்றொழுக்கு நடையில் கூறுகிறது.

    அருமையான காதல், பெருந்தன்மையான கதாபாத்திரங்கள், உறவுகளின் பல முகங்கள், இவற்றைக் கொண்ட அழகான கதை.

    காதலுக்கு, காரண காரியங்கள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், கல்யாணம் என்று வரும் போது, பல விஷயங்களையும் ஆராய்ந்து தெளிதல் என்பது மிக முக்கியம்.

    உறவுகளுக்காக உணர்வுகளையும், உணர்வுகளுக்காக உறவுகளையும், சில நேரம் அடக்க வேண்டும். சில நேரம் அடங்க வேண்டும். ஏனெனில், இவையிரண்டும் தான் மனித வாழ்வின் உயிர்நாடிகள்.

    தாய் என்பவள் அன்பின் உருவம் என்பது பொது வழக்கு. யசோதாவின் தாய் அதற்கு விதிவிலக்கு. இப்படியும் ஒரு தாய், ஆனால், அவரும் ஒரு தாய்.
     
    Last edited by a moderator: Dec 11, 2019
    Loading...

  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வனத்தின் தென்றல் நீ – (சித்ரா.ஜி)

    ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பூக்கும் பூக்களைத் தருவது வேரின் பழமை தான் – ஜப்பானிய பழமொழி. அத்தகைய பழமையான வேர்களை அழித்து புதுமையெனும் ஆசைப் பூக்கள், பூப்பது தான் எப்படி.?

    “இயற்கையை அழித்து விட்டு.. இயற்கை மருத்துவமனையா..?” என்ற ஆசிரியரின் ஒற்றைக் கேள்வியே இக்கதையின் மொத்தக்களமும்.

    சமுதாயத்தைக் குறை கூறுவதாலோ, பாதிக்கப்படும் மக்களைப் பார்த்து பரிதாபப்படுவதாலோ, அரசியல் அமைப்பை எள்ளி நகையாடுவதாலோ, அல்லது இங்கு எல்லாமே ஊழல், எதுவுமே சரியில்லை ஒரே நாற்றம் என்று மூக்கை மூடிக் கொண்டு போவதாலோ, இங்கு எதுவும் மாறப்போவதில்லை. மாறாக, நீ என்ன செய்கிறாய்..? உன்னால் என்ன செய்ய முடியுமென்று முயன்று பார்.. என்ற தூண்டுதல் கதையின் மெல்லிய இழையாக இசைக்கிறது..

    ஆதிரை… தாயின் இழப்பின் காரணமாக உருவான வெற்றிடத்திலிருந்தும், வேதனையிலிருந்தும் மீள்வதற்கான ஒரு மாற்றம் வேண்டி, தங்கை மற்றும் தந்தையுடன் ஏற்காட்டிற்கு பயணம் மேற்கொள்கிறாள். அவளது தந்தை சங்கரனுக்கு அங்குள்ள எஸ்டேட்டில் கிடைத்த மேலாளர் பணி அதற்கு உதவி புரிந்தது. இடமாற்றம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் முன் பிரச்சனைகள் தலைகாட்ட ஆரம்பிக்கின்றன.

    பசுமையில் திளைத்திருக்கும் பலரது எஸ்டேட்டின் உரிமைகள் சிலருக்கு மட்டுமே சொந்தமாக வேண்டுமென்று திரை மறைவில் நடக்கும் சில வேலைகளில் சங்கரனுக்கு விபத்து நேர்கிறது. அதிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறான் மகேந்திரன்.

    மகேந்திரன்… பல ஏக்கர் எஸ்டேட்களை அவனது தந்தை அழித்து விட்டு இறந்து விட, மிஞ்சியுள்ளவற்றில் பழத்தோட்டமும், சிறு அளவில் நர்சரியும் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்.

    நாளுக்கு நாள் அங்குள்ள எஸ்டேட்களின் நிலை கவலைக்கிடமாக மாறி வருவதை அவனும் உணர்ந்தே இருக்கிறான். வேலைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் செய்வதற்கு ஆட்கள் இல்லை, என்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் இதுதான் என்று எதையும் அவனால் இனம் காண முடியவில்லை.

    சங்கரனுக்கு நடந்த விபத்து அவனது சிந்தனையில் ஒரு வெளிச்சப் பொறியை பற்ற வைத்து விட்டுச் செல்ல அங்கிருந்து ஆரம்பித்து எல்லாமே தன்னால் தெளிய ஆரம்பிக்கிறது. எஸ்டேட்கள் கான்க்ரீட் காடுகளாக மாறுவதற்கான ஆயத்தங்களே இத்திரை மறைவு வேலைகள் என புரிந்து கொள்கிறான்.

    அதனை ஆதிரையும் அவளது குடும்பமும் உணர்ந்து திகைத்து நிற்கின்றனர். ஆனாலும், ஆதிரை நிதர்சனத்தை உணர்ந்து போராடுவதற்கு துணிந்து நிற்கிறாள். முதலில் அவளது போராட்டத்திற்கு எதிராக நிற்கும் மகேந்திரன், நாளடைவில் அவளைப் புரிந்தவனாக அவளுக்குத் தோள் கொடுக்கிறான்.

    இதற்கிடையே, நேர்மறை எண்ணங்களும், ஒருமித்த சிந்தனையுமுள்ள ஆதிரையும் மகேந்திரனும் ஒன்றுபட்ட உள்ளங்களாக இனிய உறவில் சங்கமித்து போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
     
    Last edited by a moderator: Dec 21, 2019
  3. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    என்னுள் நீ பதித்த சுவடு – (சித்ரா.ஜி)

    எல்லோருடைய வாழ்க்கையும் பொதுவான சில படிநிலைகளால் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், அதில் ஒவ்வொருவருக்குமான பார்வைகளும், உணர்வுகளும், அனுபவங்களும் தனித்தனியான இயல்புகளைக் கொண்டவை. அத்தகைய வாழ்வில் வெகு சிலர் மட்டுமே, விருப்பின் காரணமாகவோ அல்லது வெறுப்பின் காரணமாகவோ ஏதேனும் ஒரு உணர்வை நம்முள் கீறிவிட்டுச் செல்வர். மிகச்சில வேளைகளில் அக்கீறலே, நாளடைவில் தடமாகப் பதிந்து, அடையாளமாக மாறி, மனதில் பதிந்த சுவடாக நிலைத்து நின்று விடும்.

    அப்படியான ஒரு சுவடு, காதல் எனும் படிநிலையாக இருக்கும் பட்சத்தில், அது கொடுக்கும் உணர்வின் நிலைகளை, நேர்மறையாக விரித்துச் செல்லும் கதைக்களம்.

    மென்பொருள் துறையின் பணியில் இருப்பவளான நந்தினி, அதன் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையின் பால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக, தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல எண்ணுகிறாள். அந்நிலையில், அங்கு அறிமுகமாகும் நகுலனின் அறிமுகத்தோடு, அவனது காதலையும் அறிந்து கொள்பவள் அவனை மறுத்துச் செல்கிறாள்.

    கட்டிடப் பொறியாளராக இருப்பவனான நகுலனோ, அவள் மறுத்துச் சென்ற போதும், அவளிடமிருந்து விலகிச் செல்கிறானே தவிர, அவள் மீதான தன் விருப்பத்தையோ உணர்வுகளையோ மாற்றிக் கொள்ளவில்லை.

    இருவரும் அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஓர் சந்திப்பு… இதுவரை தெரியாத விசயங்கள், அறியாத செயல்கள், இயல்பான குணங்கள், புரியாத உணர்வுகள் எனப் பலவாறான நிலைகளால் அலைகழிக்கப்படுபவர்கள், ஒரு நிலையில் மனதாலும் உணர்வாலும் ஒன்றாகின்றனர்.
     
    Last edited by a moderator: Dec 21, 2019
  4. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    வானவில்லாகும் வர்ணங்கள் – (சித்ரா.ஜி)

    சூரிய ஒளிக்கதிர்கள் நீரில் ஊடுருவும் போது, சிதறலடையும் ஒளிக்கதிர்களின் பிம்பமே வானவில்லாக வளைகிறது.

    அதே போல், மனித மனங்களில் அன்பு ஊடுருவும் போது வாழ்க்கை வானவில்லாக சிறக்கிறது. மாறாக, பகையும் பழியும் ஊடுருவும் போது வாழ்க்கை சிதிலமடைந்து இறக்கிறது, என்பதை யதார்த்தமான கதாபாத்திரங்களின் வழியே, இயல்பான நடையில் கூறும் கதை.

    மஞ்சரி, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இள நங்கை. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி என்று குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவள் என்றாலும், அத்தை சிவகாமிக்கு மிகுந்த செல்லம்.

    சிவகாமி… திருமணமாகி குறுகிய காலத்திலேயே, கணவனை இழந்தவர். ஒரு பள்ளியில் ஆசிரியை. அத்தை சிவகாமியின் தத்துப் பிள்ளையாக வளர்ந்த மஞ்சரிக்கு, அத்தையே சகலமும் என்றாக, அவரே அவளது தோழியுமாகிப் போனார். இனிமையாக சென்று கொண்டிருந்த வாழ்வில் சிறு சலசலப்பாக, மஞ்சரி, கிருபாவின் மேல் விருப்பம் கொள்கிறாள்.

    கிருபாகரன்.. மஞ்சரியின் டீம் ஹெட்.. எல்லா வகையிலும் மிக கண்ணியமானவன். அவனின் நடத்தையினால் ஈர்க்கப்பட்ட மஞ்சரி, அவனிடம் தன் விருப்பத்தைக் கூற, கிருபாகரன் மறுத்து விடுகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் மஞ்சரியும் இயல்பாக நடந்து கொள்கிறாள்.

    இந்நிலையில், அதே, நிறுவனத்தில் பணிபுரியும் கௌதம் என்பவன், மஞ்சரியை கிருபாவை விட்டு விலகுமாறு எச்சரிக்கிறான். இதனால் குழப்பம் அடையும் மஞ்சரி அதன் காரணத்தை ஆராய, கிருபாவின் தாய் சாவித்திரியின் கடந்த கால வாழ்க்கையின் அவலம் வெளிவருகிறது.

    அந்த அவலத்தின் மிச்சமும்… கிருபாவின் தந்தையின் தகாத உறவால் வந்த சகோதர சொந்தமுமானவனே கௌதம் என்று அறிகின்றனர். அதன் பிறகு, புரியாத பல முடிச்சுகள் எல்லாம் மெல்ல அவிழ்கிறது. அவிழ்ந்த முடிச்சு கிருபாகரன் - மஞ்சரியை இணைக்க எல்லோர் மனமும் அங்கு ஆனந்தத்தில் துள்ளித் திரிந்தது.
     
    Last edited by a moderator: Dec 21, 2019
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    உனக்காக நான் எழுதும் வரிகள் – (சித்ரா.ஜி)

    புத்தகங்களை வாசித்துக் கொண்டே இரு… ஆனால், புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்.. – மாக்ஸிம் கார்க்கி.

    அப்படி சிந்தித்தலின் நீட்சியைக் கற்றுணரும் போது எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் பற்றிய புரிதலும், நேர்மறையான அணுகுமுறையும் இயல்பாகும். அவ்வியல்பே நாளடைவில், உறவுகளுக்குள்ளான ஆழங்களை அர்த்தப்படுத்தி விடும் என்றுணர்த்தும் கதைக்களம்…

    ட்ராவல்ஸ் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சிவகுமாரும்… புத்தகப்புழுவான கல்யாணியும் ஆதர்ஸ தம்பதிகள். மூத்தவள் வித்யா.. இளையவள் பாலா.. என இரு பிள்ளைகளும், கல்லூரியில் விரிவுரையாளர்கள். வித்யா திருமணமாகி கணவன் செந்திலுடன் கோவையில் வசிக்கிறாள்.

    இந்நிலையில், செந்தில் ஒரு செமினாருக்காக சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய கட்டாயம்… ஐந்து மாத கருவை சுமந்து கொண்டிருக்கும் வித்யாவைத் தனியாக விட்டு விட்டுச் செல்ல மனமில்லாத நிலை.. ஆகவே, தனது அம்மா கல்யாணியைத் தனக்குத் துணையாக அழைக்கிறாள் வித்யா. அவரும் சம்மதிக்கிறார். செந்திலும் நிம்மதியுடன் சிங்கப்பூருக்கு செல்ல ஆயத்தமாகிறான்.

    அச்சமயத்தில் கல்யாணியின் இல்லத்திற்கு வருகை புரிகிறார் நவநீதம் தனது மகன் கார்த்திக்குடன். நவநீதமும் கல்யாணியும் சில வருடங்களுக்கு முன் அண்டை வீட்டுக்காரர்கள். ஒருவருக்கொருவர் நல்ல நட்பும் பிடித்தமும் இருந்தது. கால மாற்றத்தில் சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்கள், மீண்டும் அதே காலத்தின் கோலத்தில் ஊருக்குத் திரும்பி வந்து விட்டனர். அதன் காரணம் கார்த்திக்..

    கார்த்திக்… படிப்பை முடித்தவனுக்கு ஐடியில் வேலையும் கிடைத்து விட, அதில் பாடுபட்டு சம்பாதித்த பணத்தையெல்லாம், வியாபாரத்தில் இறங்கி தொலைத்து விட்டு, விரக்தியின் விளிம்பில் செய்வதறியாமல் குற்ற உணர்ச்சியில் தவித்தவனை, அம்மா அன்புடன் அரவணைத்து அழைத்து வந்திருந்தார்.

    எல்லாவற்றையும் இழந்து திரும்பி வந்தவர்களுக்கு கல்யாணியின் தோட்ட வீடு அடைக்கலம் கொடுத்தது. என்றாலும், இன்னும் கூட கார்த்திக் தன் தோல்வியிலிருந்து மீள முடியாமல் தவித்து கிடந்தான். அவனது அந்நிலை பாலாவுக்கு பரிதாபமாக இருந்தாலும், என்ன இழந்திருந்தாலும் அடுத்தது என்ன என்று போக வேண்டியது தானே, அதே நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறானே என்று சிறிது எரிச்சலும் கூட வந்தது.

    நாட்கள் கடந்து செல்ல.. கார்த்திக் மனமாற்றம் அடைந்து சிவகுமாரின் ட்ராவல்ஸிலேயே தன் சொந்த வண்டியைக் கொண்டு டிரைவராக இணைகிறான். வாழ்க்கை அதன் போக்கில் செல்ல கார்த்திக்-பாலாவின் சிறு வயது நட்பு மேலும் இறுகியதில்.. அடுத்த நிலைக்குக் காத்திருந்தது.

    இதற்கிடையில், செந்திலின் கடந்த காலக் காதல் தெரிந்த வித்யாவின் அணுகுமுறை, அவளை சுற்றியுள்ளவர்களின் அணுகுமுறை.. என எல்லாமும் எல்லோருக்குள்ளும் ஒரு புரிதலை ஏற்படுத்திச் செல்ல… கார்த்திக்கும் பாலாவும் புதிய உறவுக்குள் நுழைந்ததுடன் எல்லோரையும் அதற்குள் இணைத்துக் கொள்ள.. புதிய புதிய உறவுகள் அங்கே அன்புச் சங்கிலியில் இணைகின்றன.
     
    Last edited by a moderator: Dec 21, 2019
  6. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    மறந்திடுமோ நெஞ்சம் – (சித்ரா.ஜி)

    அருண்.. தந்தையின் பணியின் நிமித்தம் விருப்பமேயில்லாமல் பாளையம் என்ற கிராமத்திற்கு வருகிறான். மாறன் – சாந்தா தம்பதியரின் ஒரே புதல்வன். நாளடைவில் அந்த ஊர் பிடித்துப் போக பள்ளி மாணவனாக வந்தவன், கல்லூரிப் படிப்பையும் அங்கேயே தொடர்கிறான். இருப்பினும் அவனது தந்தைக்கு மாற்றல் கிடைத்து, வேறு ஊருக்குப் பயணப்பட வேண்டிய நிலை. அந்த ஊரை விட்டுப் பிரியும் நிலையில் தான் தன் மனதில் பூத்திருந்த, பாவையின் மீதான காதலை உணர்கிறான்..

    பாவை.. அழகர்சாமி – லக்ஷ்மி தம்பதியரின் மகள். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவள். இனியன் என்ற சகோதரன் உண்டு. அவர்களது வீட்டுக்குப் பக்கத்து வீடு அருணின் வீடு என்பதால் இரு குடும்பத்துக்கும் அழகான நட்பு இருந்தது. ஆயினும் பாவையும் அருணும் அவ்வளாகப் பழகியதில்லை. இந்நிலையில் அவளை விட்டுப் பிரியப் போகிறோம் என்ற தவிப்பில் அருண், அவளிடம் சென்று நான் மீண்டும் திரும்பி வருவேன் என்று மட்டுமாகக் கூறிச் செல்கிறான்.

    காலங்கள் கடந்து சென்றது. தந்தையைப் போலவே தானும் வங்கியில் பணிபுரிய விருப்பம் கொண்டிருந்த அருண், அதற்கான முயற்சிகளில் அயராது ஈடுபட்டு வெற்றி பெறுகிறான். பணியின் ஆரம்ப வருடங்களில் சென்னையில் இருந்த பிறகு, மீண்டும் பாளையம் கிராமத்திற்கே மாற்றல் வேண்டி தன் குடும்பத்துடன் பயணப்படுகிறான், தனது பாவையைத் தேடி..

    ஓடிச் சென்றிருந்த காலங்களில், பாளையம் கிராமப் பஞ்சாயத்தின் இளம் தலைவியாக பரிணமித்தாலும், பாவையின் கண்களில் ஒளி குன்றிப் போயிருந்தது. சின்னஞ்சிறு சிட்டுக்குருவியைப் போல் துள்ளித் திரிந்தவளை, நிச்சயித்து நின்று போன அவளது திருமணம் நிதானமாக நடக்கக் கற்றுத் தந்திருந்தது, வலிக்கும்படியான ரணங்களுடன். நாளடைவில் ரணங்கள் ஆறி வந்தாலும், வடுவாக நின்று உறுத்துவதைத் தவிர்க்க இயலாமல் அதனுடனேயே வாழ்ந்தும் வருகிறாள், கூடவே அருணையும் அவன் கூறிச் சென்ற வார்த்தைகளையும் ஆராய்ந்து கொண்டு…

    தன்னுடைய வார்த்தைகளுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்குமா..? இருக்க வேண்டுமே..? என்ற தவிப்புடன் வந்த அருணும், அவனுடைய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்..? அல்லது நான் நினைப்பது தான் அர்த்தமா..? என்ற ஒரு புரியாத குழப்பத்துடன் இருந்த பாவையும் சந்திக்க….. அந்த நேரம் அவர்களது வாழ்வு அவர்களை நாடி வருகிறது.

    காதல் தான் கதைக்களம் என்றாலும், கிராமத்து மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறை, சுய உதவிக்குழுக்கள், சமூகப் பொறுப்பு, மனித மனங்கள், வாழ்வின் மீதான நம்பிக்கை, என்று எல்லாவற்றைப் பற்றியும் இலேசாகத் தொட்டுக் கொண்டே செல்வதால்…. கதை முழுவதும் மின்னல் போல அனைத்து வகை உணர்வுகளும் நம்மை உரசி விட்டு செல்கின்றன.

    “மௌனம் சொல்லாததை வார்த்தைகளோ, வார்த்தைகள் சொல்ல முடியாததை செயல்களோ, செயல்கள் புரிய வைக்காத அன்பை விளக்கங்களோ புரிய வைக்க முடியாது..” என்ற ஆசிரியரின் வார்த்தைகள், இக்கதையின் தன்மைக்கு ஓரு சோற்றுப் பதம்.
     
    Last edited by a moderator: Dec 21, 2019
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    மணம் வீசும் மகிழம் பூக்கள் – (சித்ரா.ஜி)

    கடந்த கால பெருமை பேசவில்லை. எதிர்காலம் பற்றிய பயமுறுத்தலில்லை. நிகழ்காலம் இது தான், இப்படித் தான் இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது போன்ற சிறிய ஆலோசனைகள்.

    பெற்றோரின் வளர்ப்பில் தான் குழந்தைகளின் எதிர்காலம் உள்ளது என்பதை இலைமறை காயாக உணர்த்தியுள்ள பாங்கு சிறப்பு.

    இன்றைய இயந்திர வாழ்க்கையில், நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையில் இருக்கிறோம் என்று சற்றே நின்று திரும்பிப் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.

    இத்தகைய ஆண் கதாபாத்திரங்கள், கற்பனையில் மட்டுமே சாத்தியம் ( எனக்கு ) என்றாலும் இரசிக்க பிடிக்கிறது.

    மதுவைப் போன்ற பெண்கள் தான், இன்றைய வாழ்வின் யதார்த்தங்கள் என்பதால், அவளது உணர்வுகளை இன்னும் விரிவாக்கியிருக்கலாம்.

    இதில் என்னைக் கவர்ந்த வரிகள்...

    அடுப்படியில் இருந்து அடுத்தவன் அந்தரங்கம் வரையிலும், பொதுவுடமை ஆயிடுச்சு.. படம் பிடிக்கிறவனுக்கும் வெட்கமில்லை. அதைப் போடுறவங்களுக்கும், பார்க்குறவங்களுக்கும் கூட வெட்கம் இல்லை. இதுல நமக்கு மட்டும் எதுக்கு வெட்கம்.

    மிக யதார்த்த வரிகள். எப்படிப்பட்ட மனநிலையில் படிக்கிறோமோ அதற்கு தகுந்த பொருளைத் தரும் வகையில் அமைந்த சிலேடை நயத்துடனான வரிகள்.

    அழகான எழுத்து நடை. தெளிவான வார்த்தை பிரயோகங்கள்.

    இன்றைய சூழலில் மிகவும் தேவையான, கதை.
     
    Last edited by a moderator: Dec 20, 2019
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பறப்பதற்கே சிறகுகள் – (சித்ரா.ஜி)

    உணவுச்சங்கிலி, அன்புச்சங்கிலி, மனிதச்சங்கிலி… என மனித வாழ்வில் எல்லாமே நம்மை இணைக்கும் சங்கிலிகளாகவே காணப்பட்டாலும், பெரும்பாலும் அவை பிணைக்கும் சங்கிலிகளாகவே தோற்றம் காட்டுகின்றன. அச்சங்கிலிகள் நம்மைச் சுற்றி அணைக்கும் போது, சமயங்களில் விலங்குகளாக மாறி மிகவும் இறுகி விடுகின்றன. இறுக்கம் தாளாமலோ அல்லது பிடித்தமில்லாமலோ அதை உடைக்க முற்படும் போது, சுற்றியிருக்கும் சங்கிலிகள் மட்டுமில்லாது, அதனை இணைத்திருக்கும் இணைப்புகளும் கூட உடைந்தும் தளர்ந்தும் போய் விடுகிறது…

    ஒரு சங்கிலியில் மற்றவை எல்லாமே, எவ்வளவு பெரிதாகவோ, உறுதியானதாகவோ இருந்தாலும் கூட, அதனுடைய வலிமை என்பது.. அதனுடைய பலவீனமான இணைப்பில் தான் அடங்கியிருக்கிறது… என்ற வரிகளுக்கேற்ப தடுமாறிய மனமொன்று, பலவீனமான தருணத்தில் செய்து விடும் தவறு(அல்லது பாவம்) எத்தகைய கொடும் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டியிருக்கும் கதைக்களம்…

    ஸ்ரீநிதி…. மென்பொருள் நிறுவனத்தில் பணி. நிச்சயித்திருந்த திருமணம் அவளுள் பலவித கனவுகளை துளிர்க்க விட, அவைகளெல்லாம் நிஜமாகும் அந்நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள். ஆனால், காலம் அவளது சகோதரி மூலம், அவளது கனவுகளை மட்டுமில்லாது குடும்பத்தையே நிலைகுலையச் செய்து விட, தங்களை எவரும் அறிந்திராத இடம் ஒன்றிற்கு, குடும்பத்தினரோடு பயணப்படுகிறாள். அங்கேயே தனது பணியினையும் தேடிக் கொள்கிறாள்.

    எவரும் அறியாத இடமென்று வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தவளை, அங்கும் ஒருவன் கண்டு கொள்கிறான்.. அவன் கௌசிக்.

    கௌசிக்… மென்பொருள் நிறுவனத்தில் பணி. ஸ்ரீ முன்பு இருந்த அதே நிறுவனம். பார்த்தால் அறிமுகப்புன்னகை புரியும் அளவிற்கே இருவரது நட்பும். அதற்கு மேல் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. திடீரென்று காணாமல் போன ஸ்ரீயை எதிர்பாராத விதமாக அவன் சந்திக்க.. அது தந்த திகைப்பும் ஆச்சரியமும் இருவருக்குள்ளும் ஒருவரைப் பற்றிய மற்றவரது சிந்தனைக்கும் அலைப்புறுதலுக்கும் மையமாகிப் போனது.

    கௌசிக்கினால், அவளது ரணங்கள் மீண்டும் கிளறப்பட்டு, இனிமேல் என்னவாகும்..? இனி எங்கே போவது..? என்று தடுமாறி தவித்துக் கொண்டிருக்க… காலமும் கௌசிக்கும் அதற்கு அவசியமில்லாமல் செய்து விட… ரணங்கள் மெல்ல மெல்ல வடுவாகி பின், மறைந்தும் போவதற்கான வழியில் தனது வாழ்வை திசை திருப்பிக் கொள்கிறாள், மன நிறைவுடன்.
     
    Last edited by a moderator: Dec 20, 2019
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பிரியத்தின் சொற்கள் – (சித்ரா.ஜி)

    “தனிமரம் தோப்பாகாது” என்பதும், “ தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித்தனி தான் “ என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. ஆனாலும் இரண்டுமே ஒன்றையொன்று பற்றி நிற்கும் அல்லது ஒன்றோடொன்று பிணைந்து நிற்கும் வாழ்வியல் யதார்த்தங்கள். மனித வாழ்வும் அப்படியான ஒன்று தான்.

    கூட்டமாக அலைந்த மனிதர்கள், குழுவாக இணைந்தனர். பின், குடும்பம் எனும் அமைப்பில் நிலை கொண்டனர். நாளடைவில் ஒற்றையாகத் தனித்து நின்று விட்டனர். வளர்ச்சியெனும் நோக்கில் உயர்ந்து கொண்டே சென்ற அடுத்தடுத்த படி நிலைகளின் உச்சத்தில் உருவான உலகமயமாக்கல் எல்லோரையும் தனித் தனித்தனி தீவுகளாக்கி வைத்திருக்கிறது.

    அதன் விளைவு, அன்பான வார்த்தைகளுக்காகவும், அக்கறையான பார்வைகளுக்காகவும் ஏக்கம் கொண்டு தவிக்கும் மனங்கள் விரக்தியின் உச்சியில் வாழ்வை முடித்துக் கொள்வது ஒருபுறம். எனில், “ நான் ” என்ற சொல்லும், அதன் நீட்சியாக எனது, எனக்கு, என்னுடையது போன்ற சொற்களுமே எல்லாவற்றிலும் முன்னிலை வகிக்கும் அளவிற்கு மனித மனங்கள் சிதைந்து கொண்டு வருவது மற்றொரு புறம். ஆக, பொருளாதார வளர்ச்சி, மனிதர்களின் வாழ்க்கையையே பலி கேட்கிறதா? எனும் சிந்தனைக்கு நம்மை தள்ளுகிறது.

    பொறாமையெனும் பெருநெருப்பு ஒரு மனதைப் பற்றிக் கொண்டிருந்தால், அது என்னவெல்லாம் செய்யும்? அன்பின் மீது தீராத நம்பிக்கைக் கொண்டிருக்கும் மனங்கள் அவற்றை எப்படியெல்லாம் எதிர்கொள்ளும்? என்பதை மனங்களின் மோதல்கள் வழி கூற விழைவதே… “ ப்ரியத்தின் சொற்கள் ”.

    தனது வாழ்வே கேள்விக்குறியாக நிற்கும் வேளையிலும், பிறரது வாழ்வையே பிரதானமாக நினைக்கும் சஞ்சனா…

    உறவென்று சொல்லிக் கொள்ள யாருமற்ற நிலையிலும், உலகத்தின் மீதே அன்பைப் பொழியும் விக்டர்...

    ஒருதலை காதலில் வாழ்வை எதிர்நோக்கி நிற்கும் சாகர்...

    இயல்பாகவே மற்றவர் மீது அக்கறை கொள்ளும் மனோகரன், மனதிற்குள்ளேயே வன்மம் சுமந்து கொண்டு அலையும் மேனேஜர் பரமசிவம், குற்ற உணர்வின் பொருட்டு அதனை சரிசெய்ய நினைக்கும் முதலாளி கிருஷ்ண பிரசாத், தனது மருமகளுக்கு மறுமணம் செய்ய நினைக்கும் மாமியார், எந்நிலையிலும் உடனிருக்கும் தோழி ரேஷ்மா… என எண்ணற்ற மனங்கள் இக்களத்தில் சுற்றி வருகின்றன.
     
    Last edited by a moderator: Dec 21, 2019
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காட்டில் விழுந்த மழைத்துளி –
    (சித்ரா.ஜி)

    இப்படியான இடங்களில் மட்டுமே நிகழ வேண்டும் என்ற நியதிகளோ, இவ்வளவு தாக்கத்தை தான் ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற நிர்பந்தங்களோ, இத்தகைய காலம் தான் உனக்கானது என்பதான வரையறைகளோ, இயற்கையின் நிகழ்வுகளுக்கு எப்போதுமே இருந்ததில்லை. அவை சூழலின் பொருட்டும், நிலவி வரும் காலநிலையின் பொருட்டும் தன்னியல்பாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இத்தகைய பண்புகளிலிருந்து எவ்விதத்திலும் மாறுபடாதவையே மழையும் அதன் தாரைகளும்.

    அப்படிப் பொழியும் மழையின் மொத்த நீரும் பூமியை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி பாதியிலேயே நீராவியாகி விட, மீதமாகும் துளிகள் பூமியை வந்தடைகின்றன. அவைகள் மலையின் உயரங்கள், பூமியின் பரப்புகள், கடலின் ஆழங்கள், புல்லின் விளிம்புகள் என எங்கு வேண்டுமானாலும் விழலாம். சில வினாடிகளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ எவ்வித பயனுமின்றி மறைந்தும் போகலாம். ஆனால், காட்டில் விழும் மழையின் துளிகள் அப்படியானவை அல்ல. ஒவ்வொரு துளியும் அதற்கான பயனை அடைந்தே தீரும் என்பதற்கு அழிந்து வரும் அடர் காடுகளே நமது கண்கூடு.

    அப்படித் தன்னலமற்ற மழையின் துளிகளையொத்த மனிதர்கள் உலவும் கதைக் களம்.

    பணிக்கான அழைப்பிற்காகக் காத்திருக்கும் சாஷா, அந்நாட்களை தன் பெற்றோருடன் கழிப்பதற்காக மிகவும் குதூகலத்துடன் மிசோரம் மாநிலத்திற்கு வருகிறாள். அங்கே அவளுடைய தந்தை சந்திரன் இராணுவ அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

    அவ்வூரின் சூழலும் காலநிலையும் சாஷாவின் மனதிற்கு மிகவும் ப்ரியமானவை. அச்சூழலின் சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவ்வூர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் வேலை கிடைக்கிறது. அங்கு அவளுக்கு அறிமுகமாகிறான் ஆர்யன்.

    ஆர்யன்.. அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியன். அவளது தந்தையின் தோழனும் கூட. ஆசிரியப்பணியும் இராணுவ சேவையும் சந்திக்கும் புள்ளி எதுவெனப் புரியாத போதும், ஆர்யனுடனான அவளது உறவு நல்ல நட்புடனேயே தொடர்கிறது.

    பள்ளியின் சூழலும் அதன் பிள்ளைகளும் அவளுக்கு மிகவும் வித்தியாசமானதும் சற்றே அதிர்ச்சியானதுமான அனுபவங்களைக் கொடுத்தாலும் கூட, அதற்குத் தக்க தன்னை தகவமைத்துக் கொள்வதால் பணியிடம் சுவாரஸ்யமானதாகவும் பொறுப்புணர்வு மிக்கதாகவும் ஆகிறது. அதற்கு அங்கு பணிபுரியும் சக ஆசிரியையான காத்தரீனின் நட்பும், ஆர்யனின் தோழமையும் ஒரு வகையில் உறுதுணையாகிறது.

    நாளடைவில், அப்பள்ளியில் அவள் பொருந்திப் போனாலும், பள்ளிப் பிள்ளைகள் சிலரின் தான்தோன்றித்தனம், எதன் பொருட்டோ அடிக்கடி காணாமல் போகும் ஆர்யன், அதற்கான அவசியங்களையும் காரணங்களையும் அறிந்திருக்கும் சந்திரன் என்பனவற்றால் சில குழப்பங்களுக்கும் ஆளாகிறாள்.

    இதற்கிடையில் ஆர்யன் – சாஷா இருவரிடையேயான தோழமையின் உணர்வுகள் மெல்ல மெல்ல நேசத்தின் உணர்வுகளாக பரிமாணம் கொள்கின்றனவே தவிர, பரிமாறிக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஆர்யனின் தலைமறைவு ரகசியங்கள் சாஷாவிற்குத் தெரியவர, அவள் அதிர்ந்து போகிறாள். இருப்பினும் அவனது பணியின் மீது அவனுக்குள்ள ஈடுபாட்டை புரிந்து கொண்டவளாக அவனுக்கு உறுதுணையாக நிற்கிறாள்.

    நாட்கள் செல்ல… தனது முயற்சிகளின் பயனை கிட்டத்தட்ட அடைந்து விட்ட நிலையில், சாஷாவிடமிருந்து விலகுபவன், ஒரு நிலைக்கு மேல் தாள இயலாமல், அவளுடன் கை கோர்க்கிறான்.

    எழுத்தின் நடை, சொல்லின் பொருள், சின்ன சின்ன வாக்கியங்களில் பொதிந்திருக்கும் விசாலம், எளிமையான சொல்லாடல்கள் என.. கதைக்கு கதை முன்னேறிக் கொண்டிருந்த ஆசிரியரின் எழுத்து, இதில் மேலும் மெருகேறியிருக்கிறது.

    மிசோரம் மாநிலத்தின் கவின் மிகு வர்ணனை, நம்மையும் சில நிமிடங்கள் அதனுள் இழுத்துக் கொண்டு, அனுபவ சிலிர்ப்பைத் தருகிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகள் நம்மையும் சில வினாடிகள் தொற்றிக் கொள்கின்றன.

    நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்கள், மிகையில்லாத உணர்வுகள், நட்பில் தொடங்கும் உறவுகள், ஆழமான விசயங்களைக் கூட அனாயசமாகத் தொட்டுச் செல்லும் பாங்கு, என கதை சொல்லும் நேர்த்தியே ஆசிரியரின் சிறப்பு. அதுவே அவரது வழக்கமும் கூட. அது இக்கதையிலும் பிரதிபலிக்கிறது.
     
    Last edited by a moderator: Dec 21, 2019

Share This Page