1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Meaning Of 'aththikkaai' Paadal

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Oct 22, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பலே பாண்டியா படத்திற்கு எம் எஸ் வி அவர்கள் இசை. கண்ணதாசன் பாடல்கள். அப்போது கண்ணதாசன் ஒரு நாள் ஒரு பாடல் எழுதி மன்னரிடம் கொடுத்து இந்த பாட்டிற்கு இசையமை என்று பணித்தார்.

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

    இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

    கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

    அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

    கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

    அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்

    மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?

    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

    இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

    இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்

    நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

    இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்

    நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்

    உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?

    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

    ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

    ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்

    சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா

    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

    உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?

    வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

    உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?

    வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?

    கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே

    இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


    பாடலை வாங்கிப் பார்த்த மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. முகத்தை சுளித்து "என்னண்ணே, இந்த பாட்டு ஒன்றுமே நல்லா இல்லைண்ணே. ஒரே காய் காய் என்று ஒண்ணுமே புரியாம இருக்குண்ணே, மக்களுக்குப் போய் சேராது " என்றார். அந்தப் பாடல் தான் அத்திக்காய் பாடல்.

    கவிஞர் "விசு, நீ தைரியமாக இசை அமை. பாட்டு மக்களுக்கு போய் சேரும். உனக்கும் நல்ல பேர் கிடைக்கும். எனக்கும் நல்ல பேர் கிடைக்கும் " என்றார். விசு அரை மனதாக மேட்டருக்கு மீட்டர் போட சம்மதித்தார். அதாவது பாடலுக்கு மெட்டு போட இசைந்தார். இது நாள் வரை கண்ணதாசன் மீட்டருக்கு மேட்டர் எழுதிக் கொடுத்தது போல - அதாவது மெட்டுக்கு பாட்டெழுதிக் கொடுத்தது போல இப்போது அவர் பாட்டுக்கு ட்யூன் போட்டார். இந்த பாடலின் ராகம் :

    யமுனா கல்யாணி !

    இப்போது பதவுரை சிறிது பார்ப்போம்.

    இந்த பாட்டு நிலவைப் பார்த்து தூதாக பாடுவது போலும், நிலவு காய்வதால் காதலர்களின் தாபத்தை அதிகப் படுத்துவதால் அதை தன் மேல் காயாதே என்று கூறுவது போலும் அமைந்தது.

    இதில் வரும் காய்களும் பதவுரையும்:

    அத்திக்காய்: அந்த திக்காய் ( அந்த திசையாய்) திக் என்றால் திசை என்று பொருள் படும் .

    இத்திக்காய்: இந்த திசையாய்

    ஆலங்காய்: ஆலம் என்றால் விஷம்.ஆலங்காய் என்றால் விஷம் போல் காய் என்றும் பொருள் படும். (இன்னொன்று : ஆல மரத்தின் காய் ).

    பாவைக்காய்: பெண்ணைக் காய்

    அவரைக் காய் - என் காதலன் அவரை காய்.

    கோவைக் காய்- கோ என்றால் மன்னன் - என் மன்னனைக் காய்

    மாதுளங்காய் ஆனாலும் - மாது உள்ளம் காய் ஆனாலும்

    உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமா - இது கண்ணதாசனின் குசும்பு வரி ! உருவமே கசந்தாலும் பருவம் கசக்காதாம்!

    வாழ்க்காய் : வாழ்வதற்காக காய்

    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக் காய் - ஜாதிக்காய் பெட்டகத்தில் ஜாதிக்காய் எடுத்த பிறகும் வாசனை நீடிக்கும். அதே போல் இருவரும் ஒருவரை ஒருவர் நீங்கினாலும் அந்த எண்ணங்களே நீடிக்க காய்!

    உள்ளமெல்லா மிளகாயோ - உள்ளம் எல்லாம் இளகாயோ

    ஒவ்வொரு பேச் சுரைக்காயோ - ஒவ்வொரு பேச்சாக உரைக்காயோ

    கொற்றவரங்காய் - என் கொற்றவரைக் காய் - கொற்றவர் - மன்னவர்.

    இப்போது பொழிப்புரை:

    அத்திசையாய் காய் காய் விஷமாக காயும் வெண்ணிலவே

    இத்திசையாய் காயாதே நீ என்னைப் போல் பெண்ணல்லவோ

    என்னுயிரும் நீ யல்லவோ!

    பெண்: கன்னிக்காக ஆசைக்காக காதல் கொண்ட பெண்ணுக்காக அங்கே காய் அவரைக் காய் மங்கை எந்தன் மன்னனைக் காய் .

    ஆண்: பெண் உள்ளம் காயாக மாறினாலும் என் உள்ளம் காய் ஆகாது. எனவே என்னை நீ காயாதே என் உயிரும் நீ அல்லவோ !

    ஆண்: இரவுக்காக உறவுக்காக ஏங்கும் இந்த ஏழைக்காக நீயும் காய் தினமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்.

    உருவமே கசந்தாலும் பருவம் கசக்குமா?

    எனவே என்னை நீ காயாதே என் உயிரும் நீ அல்லவோ

    பெண்: ஏலக்காய் வாசனை இனிப்பது போல் எங்கள் உள்ளம் நீடித்து இனித்து வாழ்வதற்கு காய். ஜாதிக்காய் பெட்டகத்தில் நிலைத்து நிற்கும் வாசனை போல் தனிமையிலேயும் இன்ப எண்ணங்கள் நிலைக்க காய்.

    ஆண்: சொன்னவற்றையெல்லாம் புரிந்து கொண்டாயோ தூது செல்வாய் வெண்ணிலா என்னை நீ காயாதே

    ஆண்: உள்ளம் எல்லாம் இளகாயோ ஒவ்வொரு பேச்சையும் அங்கே உரைக்காயோ பிளந்த வெள்ளரிக்காய் சிரிப்பது போல் நிலவே சிரித்தாயோ

    பெண்: கோதை என்னைக் காயாதே என் கொற்றவனை காய்

    ஆண் : இருவரையும் காயாதே தனிமையிலே ஏங்காய் வெண்ணிலா

    இருவரும் : அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என் உயிரும் நீயல்லவோ!


    இந்த பாடல் வந்த புதிதில் யாருக்கும் முதலில் புரியவில்லை. என்னடா ஒரே காய் காய் என்று ஒன்றும் விளங்காமல் இருக்கிறதே என்று மக்கள் நினைத்தார்கள் . ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தமிழ் பண்டிதரும் இதன் பொருள் ஒவ்வொரு வரியாக உணர்ந்து எழுத ஆரம்பித்தார்கள். இது ஹிட் ஆனது.

    கண்ணதாசனை இலக்கிய உலகம் உச்சாணிக்கு ஏற்றி கவியரசராக மாற்றியது .

    இந்த அத்திக்காய் பாடல் முழுக்க முழுக்க ஒரிஜினல் வரிகள். கண்ணதாசனின் 100% சொந்த கற்பனை கவிதை. வேறு எந்த இலக்கியத்திலிருந்தும் எடுத்தாளப்பட்டவை அல்ல. இது ஒன்றே போதும் அவர் கவிதையின் மாட்சி விளக்க!


    திரைப்படம்: பலே பாண்டியா

    பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: M.S. விஸ்வநாதன், B. டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி


    jayasala42
     
    Rajijb and vidhyalakshmid like this.
    Loading...

  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,776
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Eventhough I heard the song umpteen times, I never tried to get the entire meaning.
    Today you enlightened me with your post.
     

Share This Page