1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Husband And Wife.

Discussion in 'Stories in Regional Languages' started by ksuji, Sep 6, 2018.

  1. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    சாரதி சரியாக ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விட்டான்.

    ஜெண்பகத்துக்கு ஒரே ஆச்சரியம் .

    “நான் காண்பது கனவா இல்ல நினைவா? நீங்கள் கூட இப்படி சொன்ன மாதிரி ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டீங்களே; இன்னிக்கு மழை தான் போங்கள் “,என்று சொன்னாள் .


    “உனக்காக, கண்ணே உனக்காக இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக” என்று அபிநயத்தோடு பாடி ஆட ஆரம்பித்தான் சாரதி.

    “போதும் , போதும் ,” என்று சிரித்துக் கொண்டே , ஒரு தட்டில் நான்கு பஜ்ஜியையும் சட்னியையும் போட்டுகொண்டு வந்து டைனிங் டேபிள் மேல் வைத்தாள் ஜிம்மு என்கிற ஜெண்பகம்.

    “டேபிள் மேல் உங்களுக்கு பஜ்ஜி வைத்திருக்கிறேன் . அதை எடுத்துக் கொள்ளுங்கள். காபி கலந்து கொண்டு வருகிறேன்”,
    என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் ஜெண்பகம்.

    அப்போது தான் ஜெண்பகத்தின் தகப்பனார் சுந்தரமும் வீட்டுக்குள் வந்தார் .

    செண்பகம் “வாங்கப்பா வாங்க;நீங்களும் உங்க மாப்பிள்ளையோட சேர்ந்து டிபன் சாப்பிடுங்கள் “,என்று உபசரித்தாள்.

    சுந்தரம் , “இல்லம்மா , நான் இப்பதான் வீட்டிலேயே டிபன் சாப்பிட்டு விட்டு வருகிறேன் . உங்க அம்மா உங்க ரெண்டு பேருக்கும் வெல்ல அடை கொடுத்து அனுப்பி இருக்கிறாள்,” என்று கூறி ஒரு பொட்டலத்தை டைனிங் டேபிள் மேல் வைத்தார்.

    "நான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போக வந்திருக்கேன்,” என்றார்.

    ஜெண்பகம் அவசரம் அவசரமாகப்
    பொட்டலத்தைப் பிரித்து வெல்ல அடையை சாப்பிட ஆரம்பித்தாள். என்ன இருந்தாலும் பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து எது வந்தாலும் அது அத்தனை ருசியாக இருக்கும்!. போதும் போதாதற்கு அம்மாவின் கைவண்ணம். அதற்கு ஈடு இணையாக இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை.

    “கொஞ்சம் இருங்கள் அப்பா,” என்று கூறிவிட்டு ஒரு டிபன் பாக்ஸில் அவள் செய்து,இருந்தஆறு பஜ்ஜியையும் போட்டு அப்பாவிடம் கொடுத்தாள்.

    குழந்தைகள் இருவரும் தங்களுடையபுத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு தாத்தாவோடு கிளம்பினர் . சுந்தரம் பெண்ணிடமும் மாப்பிள்ளையிடமும் விடைபெற்றுக்கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.

    _______________________________

    சாரதி, ஆதார் கார்டு பான் கார்டு அவற்றுக்கான xerox copy எல்லாவற்றையும் சரி பார்த்து ஒரு பையில் வைத்துக் கொண்டான்.

    “ஜிம்மு ரெடியா,” என்று கேட்டபடியே பையை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரை நோக்கிச் சென்றான்.

    “ஜிம்மு” என்பது ஜெண்பகத்தை கல்யாணம் ஆன நாளிலிருந்து சாரதி கூப்பிடும் பெயர்.

    ஜெண்பகம் வீட்டைப் பூட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டாள்.

    தன்னுடைய ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை என்று இரண்டு மாதமாகவே சாரதியிடம் புது ஃ போன் வாங்கித் தருமாறு நச்சரித்துக் கொண்டிருந்தாள். அதற்காகத்தான் அவர்கள் இருவரும் போய்க்கொண்டு இருந்தார்கள்.

    போகிற வழியெல்லாம் ஜிம்மு பேசிக்கொண்டே வந்தாள்.
    “என்ன ஃ போன் வாங்க போறீங்க?
    3G யா 4G யா. ?
    விவேகா பூர்விகாவா சரவணாவா ?”
    ......... இப்படி.

    சாரதி அவளை நேராக ஒரு கம்பெனி ஷோரூமுக்கு அழைத்து கொண்டு போனான் .

    15 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு 4ஜி ஃபோனை செலக்ட் செய்தான் .
    “ஏன், இவ்வளவு ரூபாய் கொடுத்து இப்போ ஃபோன் வாங்கணுமா?” என்றாள் ஜிம்மு
    “இரண்டாயிரம் மூவாயிரத்துக்கு வாங்கக் கூடாதா?”
    “ 4G ஃபோன் 2000 அல்லது மூவாயிரத்துக்கு வாங்க வேண்டும் என்றால் நீ இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் “ என்றான் சாரதி .

    கடைசியில் சாரதி செலக்ட் பண்ணின அந்த ஃபோனை 15 ஆயிரம் கொடுத்து வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள் .

    அடுத்தது சிம் கார்டு வாங்க வேண்டும் .

    ஸ்கூட்டரில் போகும் போது மறுபடியும் ஜிம்மு தொணதொணவென்று கேட்டுக்கொண்டே வந்தாள்
    “ வோடாபோன், பிஎஸ்என்எல், jio, ஏர் டெல் எந்த சர்வீஸ் நன்றாக இருக்கும் ,
    எதில் சீக்கிரம் கொடுப்பார்கள் ரொம்ப நேரம் வெயிட் பண்ண வேண்டுமா ?”........ இப்படி.

    சாரதி ஸ்கூட்டரை நேராக ஒரு சிம் கார்டு சர்வீஸ் சென்டர் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான் .
    இருவரும் உள்ளே நுழைந்து டோக்கன் வாங்கி கொண்டார்கள் . PAN கார்டு ஆதார் கார்டு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டான் .

    புது சிம் கார்டுடன் ஒரு இருபது நிமிடத்தில் வெளியே வந்தார்கள் .

    மணி ஏழு ஆகி விட்டது .இனிமேல் வீட்டிற்கு சென்று சமையல் செய்தால் 9 மணிஆகிவிடும். சாப்பிடுவதற்கு நேரமாகிவிடும் என்ன செய்வது என்று தம்பதிகள் இருவரும் யோசனை செய்து கடைசியில் ஹோட்டலிலேயே சாப்பிட்டு விடலாம் என்று தீர்மானம் செய்தார்கள். அங்கிருந்து ஒரு பவனுக்கு அது என்ன என்று தெரியவில்லை அடையார் ஆனந்த பவனா சரவணபவனா அல்லது வேறு ஏதாவதா ?அங்கே போய் சாப்பிட்டுவிட்டு அப்படியே கொஞ்சம் ஸ்வீட் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள் . ‌

    மணி எட்டேகால் ஆகிவிட்டது .

    --------------------------------------------

    .

    பிறகு அவள் அவளது அப்பாவுக்கு ஃபோன் செய்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருமாறு சொன்னாள் .

    சற்று நேரத்தில் சுந்தரம் குழந்தைகளைக் கொண்டு வந்து விட்டு விட்டு போனார்.

    -----------------------------------------------

    வெள்ளிக்கிழமை காலை 4 மணி . ஜிம்மு குளித்து முடித்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் . சமையலை முடித்துவிட்டு ஐந்து மணிக்குள் பூஜை அறைக்குள் நுழைந்தாள். இன்னும் ஒரு மணி நேரத்திற்கு அவள் வெளியே வரமாட்டாள் .

    அன்றைக்கு சாரதி ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விட்டான். “ஜிம்மு, இன்றைக்கு நான் சீக்கிரம் ஆபீசுக்கு போக வேண்டும்,” என்றான்.

    அவள் ,”டைனிங் டேபிள் மேல் உங்களுக்கு சாப்பாடு தயாராக இருக்கிறது நீங்கள் சாப்பிட்டு விட்டு கிளம்புங்க ,”என்றாள்.


    சின்னவனுக்கு இன்னும் ரிக்ஷாவரவில்லை. அவன் சாரதியின் போனில் ஏதோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.
    -_____________________________________
    சாரதி ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் .வாசற்படிவரை போனவன் ஏதோ ஞாபகம் வரவே உள்ளே திரும்பி ,”ஜிம்மு என் ஃபோனை கொண்டு வா, சீக்கிரம் சீக்கிரம் ,” என்றான்.

    ஜிம்மு ,” சந்தியா, அப்பாவுடைய ஃபோனை சீக்கிரம் எடுத்துக் கொண்டு போய்க் கொடு,” என்றாள்.
    குட்டி தம்பி ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
    “ காலங்கார்த்தால உனக்கு என்னடா கேம் வேண்டி கிடக்கு?” என்று சொல்லி தன் தம்பியின் கையிலிருந்து அப்பாவுடைய ஃபோனை பிடுங்கிக்கொண்டு வந்தாள் சந்தியா.

    அதிலிருந்த டிஸ்ப்ளேயை சந்தியா பார்த்தாாள், நிதானமாக பார்த்தாள், பிறகு உற்றுப் பார்த்தாள்.

    ஜிம்மு,”சீக்கிரம் ஃபோன அப்பாகிட்ட கொடுடி,”என்றுஅவசரப்படுத்தினாள்

    அம்மாவைப் பார்த்து நிதானமாக கையமர்த்தினாள் சந்தியா.

    “இங்கே பாரம்மா,” என்று ஃபோனை தன் அம்மாவிடம் காட்டினாள் சந்தியா .

    அதனை உற்றுப் பார்த்த ஜிம்மு ,” ஹா” என்றாள். மயக்கம் அடிக்காத குறைதான்.

    “ எனக்கு நேரம் ஆயிற்று. ஃபோன் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் எல்லாம் என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று சொல்லிக்கொண்டே ஜிம்முவின்கையில் இருந்த ஃபோனை பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு சென்றான் சாரதி.

    “ ஓ , ஓ ……..” என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் ஜிம்மு.

    “அம்மா அழாதேம்மா , அழாதேம்மா ,” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றாள் சந்தியா .

    ஜிம்முவின் அழுகை இன்னும் பெரிதாயிற்று. அவள் பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

    “நாராயணா, பெருமாளே ,பெருமாளே ,கோவிந்தா ! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் ,” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

    சந்தியாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சரி இன்றைக்கு ஸ்கூலுக்கு மட்டம்தான் என்று தீர்மானம் செய்தாள்.

    அவளுடைய அம்மாவின் அழுகை அவளுக்கும் தொற்றிக்கொண்டது.

    அவள் அம்மாவை சமாதானப்படுத்த முயன்றா‌‌ள் , தோற்றுப் போய் அவளும் சேர்ந்து அம்மாவை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

    கால்மணி நேரம் ஆனது. சந்தியா அழுவதை நிறுத்தினாள்.

    மேஜை மேல் டெலிபோன் இருந்தது. நம்பரை சுழற்றி பாட்டியை கூப்பிட்டாள்.

    “பாட்டி நீங்களும் தாத்தாவும் உடனே இங்கே வாருங்கள் மிகவும் அவசரம்”, என்றாள்.

    “ சந்தியா, உங்க மாமா ஊரில் இருந்து வந்து இருக்காண்டி . நான் உங்க தாத்தா உங்க மாமா எல்லாரும் அங்கதான் வந்துண்டு இருக்கோம். இன்னொரு அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்போம் ,”என்று சொன்னாள்.

    சிறிது நேரத்தில் தாத்தா பாட்டி மாமா மூன்று பேரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

    ஹாலுக்கு வந்த உடனேயே பாட்டியை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் சந்தியா.

    அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவுடனேயே நின்றிருந்த ஜிம்முவின் அழுகை மீண்டும் பெரிதாக ஆரம்பித்தது. அம்மாவின் புடவை தலைப்பை பிடித்து கொண்டு விசித்து விசித்து அழுதாள். “ அய்யோ , அம்மா அவர் என்னை மோசம் செய்து விட்டார் அம்மா .நம்மை எல்லோரையும் ஏமாற்றி விட்டார் அம்மா “,என்று அழத்தொடங்கினாள்.

    ஜிம்முவால் பேசவே முடியவில்லை சந்தியா தான் எல்லாவற்றையும் தாத்தா பாட்டி மாமா மூன்று பேருக்கும்கூறினாள்.

    சுந்தரமும் அவர் மனைவியும் ரொம்பவே கஷ்டப்பட்டு ஜிம்முவையும் சந்தியாவையும் சாப்பிட வைத்தார்கள்.

    “ நீ போய் உன் பாடங்களைப் படியம்மா ,” என்று சந்தியாவை study ரூமுக்கு அனுப்பினார்கள்.

    பிறகு கதவை சாத்திக்கொண்டு சுந்தரம் ,அவர் மனைவி, ஜிம்மு ,அவளுடைய தம்பி நான்கு பேரும் குரலைத் தாழ்த்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். நடுநடுவே ஜிம்முஅழுதுகொண்டிருந்தாள்.

    கடைசியில் ஏதோ தீர்மானத்திற்கு வந்தார்கள் .அதன் பிறகு அறை நிசப்தம் ஆகியது.

    ------------------------------------------------


    சாரதியின் பாஸ் ஒரு ஆடிட்டர்.
    சாயங்காலம் ஆறு மணி இருக்கும்.
    சவுகார்பேட்டையில் ஒரு சேட்டிடம் போய் ஒரு ஃபைலைகொடுக்கச் சொல்லி இருந்தார். அந்த ஃ பைலை எடுத்துக்கொண்டு ஆதியப்ப நாயக்கன் தெருவில் நடந்து கொண்டிருந்தான் சாரதி.

    திடும் என்று , அவனை யாரோ பின் தொடர்வது போல உணர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்; யார் என்று தெரியவில்லை ஆனாலும் அவன் உள்ளுணர்வு கூறியது :” கண்டிப்பாகஉன்னை யாரோ பின் தொடர்கிறார்கள் “ என்று.

    சற்று தூரம் வேகமாக நடந்து விட்டு சடக்கென்று நின்றான், திரும்பிப் பார்த்தான்.

    அத்தனை ஜனங்களுக்கும் மத்தியிலே அந்த நீல சட்டைக் காரனை ப்பார்த்தான். நல்ல உயரம். தலையில் ஒரு தொப்பி - தேவை இல்லாமல் -தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்று, தன் முகத்தை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காகவே போட்டு இருந்தான் என்பது அவனக்கு நன்றாக தெரிந்தது. ஒரு 20 அடி தள்ளி நின்றிருந்த சாரதி யைக் கண்டதும் சடாரென திரும்பி கொண்டு அந்த பிளாட்பார்ம் கடைப் பக்கம் திரும்பி முகத்தை காண்பிக்காமல் மறைத்துக் கொண்டான்.

    சாரதி மறுபடியும் ஒரு பத்தடி நடந்து சடாரென்று திரும்பினான். அவனும் அதே 15 அடி தூரத்தில் நின்றிருந்தான். பின்னர் திரும்பி கடைக்காரனை விசாரிப்பது போல பாவ்லா செய்து கொண்டிருந்தான். சாரதிக்குப் புரிந்து விட்டது அந்த நீலச்சட்டைக்காரன்தான் அவனை ஃபாலோ பண்ணி கொண்டு இருக்கிறான்.

    “யார் அவன் , எதற்காக என்னை தொடர்கிறான் ?” ஆனாலும் அவனை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது சாரதிக்கு. யார் என்று சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை . மிகவும் பிரயாசைப்பட்டு பார்த்தான் .

    “ஆனால் அவனை எனக்கு நன்றாகத்தெரியும் ; அவனை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்” என்று சாரதிக்குத்தோன்றியது.

    முதன்முறை போவதால் அவன் சந்திக்க வேண்டிய சேட்டின் வீட்டை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தான்.

    சேட்டை பார்க்க முடியவில்லை. அவர் உடம்பு சரியில்லாமல் டாக்டர் வீட்டுக்குப்போய் இருப்பதாக அவர் மனைவி கூறினாள்.
    அதற்குள் போன் வந்தது.
    “ அவர் தான் இப்பொழுது பேசினார் உங்களை சற்று நேரம் காத்திருக்கச் சொன்னார் “,என்று சொன்னாள்.

    ஆரஞ்சு ஜூஸ் கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். சாப்பிட்டான்.

    சாரதிசற்று நேரம் உட்கார்ந்து இருந்தான்.
    'வீட்டுக்கு கிளம்ப நேரம் ஆயிற்று.
    போதும் போதாதற்கு எவனோ ஒருவன் பின்னாடியே வந்து கொண்டிருக்கிறான் ‘என்ற எண்ணம் அவனை சீக்கிரம் கிளம்பத்தூண்டியது . அதனால், தான் மறுநாள் சேட்டை சந்திப்பதாக சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

    அவள் வாசல் வரை வந்து அவனை வழி அனுப்பினாள்.
    அவன்வாசலில் வந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தான். வலது பக்கம் 15 கடைகள் தள்ளிஎதிர்த்த வாடையில்ஒரு கடையில் அந்த நீல சட்டைக்காரன் நின்று அவனுடைய வரவை பார்த்துக் கொண்டிருந்தான். சாரதிசேட்டு வீட்டின் வாசலில் நின்றிருந்தான்.
    சாரதி அவனைப் பார்த்ததும், அவன் சரேலென்று முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
    “யார் இவன், யார் இவன்” என்ற கேள்வி அவனுக்குள்வெகுவாய் அதிகரித்து இருந்தது. “எங்கேயோ கண்டிப்பாக இவனைப் பார்த்திருக்கிறேன்” என்ற எண்ணம் அவனது மனதில் உறுதியாயிற்று.

    சாரதி, கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் நுழைந்து சரேலென்று ஒரு சந்து வழியாக கோடவுன் தெருவுக்குப் போய் விட்டான்.இப்பொழுது யாரும் தன்னைத்தொடர வில்லை என்பது சாரதிக்கு உறுதியாயிற்று.

    அங்கிருந்து வேகமாக நடந்து பிரகாஷ் பவன் போய் டிபன் சாப்பிட்டான். பிறகு ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு சென்றுவிட்டான்.

    --------------------------------------------------------


    ஃப்ளாட்டிற்குள் நுழைந்தான்.

    இது நம்மஃப்ளாட்தானா என்ற சந்தேகம் வந்து விட்டது அத்தனை அமைதியாக இருந்தது. வெள்ளிக்கிழமை என்றால் சாயங்காலம் சாம்பிராணி, ஊதுவத்தி,பூ இவற்றின் வாசனை கமகமவென்று ஃபிளாட் முழுவதும் நிறைந்திருக்கும் . பக்தி பாடல்கள் கேசட்டில் ஓடிக்கொண்டிருக்கும்.

    “இன்றைக்கு என்ன ஆயிற்று ?
    ஜிம்மு எங்கே ?
    சந்தியா ஏன் என்னை ஒரு மாதிரியாகப்பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ? “

    அப்போதுதான் சுந்தரம் டைனிங் டேபிள் முன் ஒரு சேரில்அமைதியாக உட்கார்ந்து இருப்பதைப்பார்த்தான்.

    “வாங்க மாமா , இதோ,ஒரே நிமிடத்தில் ‌வந்து விடுகிறேன் என்று சொல்லி கைகால்களை கழுவிக்கொண்டு டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தான் சாரதி.

    கிச்சனிலிருந்து அவனுடைய மாமியார் காபி கொண்டு வந்து டேபிள் மீது வைத்தாள் . “ மாப்பிள்ளை காபி எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

    “ஜிம்மு எங்கே ?”என்று கேட்டான் சாரதி.
    “இங்கேதான் கிச்சனில் இருக்கிறாள் “என்றாள்அவனுடைய மாமியார்.

    அங்கே தரையில் உட்கார்ந்து கொண்டு தலையை கால்களுக்கு இடையே புதைத்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள் ஜிம்மு.

    சாரதி சன்னமான குரலில் “ ஜிம்மு “ என்று கூப்பிட்டான்.

    அவள் மெதுவாக எழுந்தாள், சாரதியைப் பார்த்த பார்வையில் மிகுந்த உஷ்ணம்காணப்பட்டது . மறுபடியும் தன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு விசித்து விசித்து அழ ஆரம்பித்து விட்டாள்.
    “ அழாதேம்மா,அப்படி எல்லாம் ஒன்றும் நடந்திருக்காதம்மா ,மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவர்மா ,”என்று அவனுடைய மாமியார் சொல்லி கொண்டு இருந்தாள்.

    அதற்குள் ஹாலில் இருந்து அவனுடைய மாமனார் லேசான குரலில் அவனை அழைத்தார்.

    “ மாப்பிள்ளை என் பெண் உங்கள் மீது உயிரையே வைத்திருக்கிறாள் “என்று ஆரம்பித்தார்.

    ஜிம்மு சமையலறையில் இருந்து பாய்ந்து வந்தாள். “ போதுமப்பா போதும். இனிமேல் இவரிடம் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் . நான் நேரடியாகவே கேட்டு விடுகிறேன் ,”என்று கூறி விட்டு ,

    சாரதியிடம் ,” யார் அந்த சிறுக்கி?
    சொல்லுங்கள் யார் அந்த சிறுக்கி?,”
    என்று கேட்டாள்.

    சாரதிக்கு ஒன்றுமே புரியவில்லை .” யார், எந்த சிறுக்கி ?”
    என்று திருப்பிக் கேட்டான்.

    “ ஆஹா ஹா ஹா ஹா, உங்களுக்கு நன்றாக நடிக்க வருகிறது நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றாள்.
    “ அந்தக் கண்றாவியை என் தம்பி நேருக்கு நேராகவே பார்த்து விட்டான்.எத்தனை நாளாக இது நடக்கிறது?” என்று கேட்டாள். “ விஜி வெளியே வாடா “என்றாள்.

    சாரதியின் மச்சினன் விஜி என்கிற விஜயராகவன் ஸ்டடி ரூமில் இருந்து வெளியே வந்தான்.

    “ என்ன அத்திம்பேர் சௌக்கியமா ?”என்றான்.

    “ அவரிடம் குசலம் விசாரிக்க உனக்கு என்ன மூய்கிறது ?”என்றாள் ஜிம்மு.

    சாரதி விஜியைப் பார்த்தான்.

    அதே நீலச்சட்டை அதே உயரம் அதே வெள்ளைக் குல்லாய்.
    புரிந்து விட்டது.
    சாரதிக்கு தன்னைப் பின்தொடர்ந்து வந்தது விஜிதான் என்பது புரிந்துவிட்டது

    “ சந்தியா இங்கே வா அப்பாவுடைய செல்லை எடுத்துக் காட்டு”, என்றாள் ஜிம்மு.

    “ அப்பா உங்கள் ஃபோனைக் கொடுங்கள் “என்று கேட்டு வாங்கி கொண்டு அதில் contacts பக்கத்தைக் காண்பித்தாள் “

    “ அப்பா இதோ பாருங்கள் :
    WIFE 1 என்றுபோட்டு அம்மாவின் நம்பர் display ஆகிறது. அதற்குப் பிறகு என்ன இருக்கிறது?” என்று கேட்டாள்.

    “ WIFE 2 “ என்று அப்பாவியாய் பதில் அளித்தான் சாரதி.

    ஜிம்மு பாய்ந்து வந்தாள் , “ அது தான், அது தான் கேட்கிறேன் யார் அந்தச் சிறுக்கி என்று ?”, என்று மிக ஆக்ரோஷமாக கேட்டாள் .

    சாரதியின் மாமனாரும் மாமியாரும் அவன் அருகில் வந்து நின்றார்கள்.

    “ ஓ, இதுதான் விஷயமா என்று கேட்டுவிட்டு சாரதி ஓஹோ ஹோ ஹோ ஹோ “,என்று சிரிக்க ஆரம்பித்தான்.

    “விஜி,அந்தஅலமாரியில்வைத்திருக்கும் புது ஃபோனை எடுத்துக்கொண்டு உங்க அக்காவுக்கு பக்கத்தில் வந்து நில்” என்று சொன்னான் சாரதி.

    விஜியும் புது போனை எடுத்து பிரித்து ஆன் செய்துவிட்டு தன் அக்கா ஃபோனைப்பார்க்கும்படியாக அவளுக்குப் பக்கத்தில் நின்று கொண்டான்.

    சந்தியாவிடம் எங்கே அந்த WIFE 2 வுக்கு call பண்ணு “ என்றான் சாரதி.

    சந்தியா பட்டனை அழுத்தியதும்‌ விஜி கையில் இருந்த புதுஃபோன் “ கிணுகிணுகிணு” என்று மிக அழகாகஒலித்தது ..

    எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எல்லோருடைய முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது.

    ஜிம்மு ஓடிவந்து சாரதியின் கால்களில் விழுந்து சேவித்தாள்.
    “ என்னை மன்னித்துவிடுங்கள் என்னை மன்னித்துவிடுங்கள். உண்மையிலேயே நீங்கள் ஸ்ரீராமன் தான்” என்று அழுது கொண்டே கூறினாள் ,” நான் உங்களை தேவை இல்லாமல் தவறாக நினைத்து விட்டேன் சந்தேகப்பட்டு விட்டேன் . தப்புதான் செய்துவிட்டேன் . என்னை, என்னை,.......”, என்று கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தாள்.

    சாரதி அவளை இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கினான். அவள் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கேவிக் கேவி அழுதாள்.

    “ என்னை மன்னிப்பீர்களா, மன்னிப்பீர்களா ?“ என்று திரும்பத்திரும்பக்கேட்டாள்.
    “ இதெல்லாம் ஒரு communication gapதான் . இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது என்றான் சாரதி.

    “ இல்லை இல்லை நான்…………” இன்னும் கேவிக் கொண்டே இருந்தாள் ;அவளால் பேச முடியவில்லை.
    “. அசடு அசடு, கணவன் மனைவிக்குள் ஈகோ ஏது?” என்றான் சாரதி.
    “ அத்திம்பேர் என்னை நீங்க …..,”என்று ஆரம்பித்தான் விஜி.
    அவனைப் பார்த்து கையமர்த்தி முறுவலித்தான் சாரதி.

    சாரதியின் மாமனாரும் மாமியாரும் ஒரே குரலில்,” மாப்பிள்ளை …….
    ,”என்று ஆரம்பித்தனர்.

    “ நீங்களெல்லாம் பெரியவர்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் எல்லாம்எங்கள்நல்லதுக்காகத்தானே சொல்கிறீர்கள்” என்று முடித்து வைத்தான் சாரதி.

    குழந்தைகளும் ,” நாங்களும் உங்கள் கூட அங்கே வருகிறோம் தாத்தா. சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாளும் அங்கே தான் இருப்போம்” என்றார்கள்‌; அவர்களும் பெரியவர்களோடு சேர்ந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள்.

    -***********************************************

    சாரதியின் மேல் சாய்ந்தாள் ஜிம்மு.

    “ அடி என் பூஞ்சிறுக்கி , செல்லச் சிறுக்கி, பட்டுச்சிறுக்கி , ……”என்று அவளை அணைத்துக் கொண்டான் சாரதி. வெட்கம் தாங்காமல் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள் ஜிம்மு.

    சாரதிநினைத்துக்கொண்டான்: ,”வெட்கப்படும்போது தான் இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் ! மூடிய கைகளையும் மீறி கன்னத்தின் குங்குமப்பூ சிவப்பு தெரிகிறதே ,”என்று.

    அப்புறம் என்ன?

    அப்புறம் என்ன, பாயசம் தான்!

    ---------------------------------------------------------


    ----------------------------------------------------------
     
    kaniths and blackbeauty84 like this.
    Loading...

  2. blackbeauty84

    blackbeauty84 IL Hall of Fame

    Messages:
    3,174
    Likes Received:
    3,990
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Nice write up. Enna titleum tamilla potrukkalam
     
  3. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    Thank you very much.
     

Share This Page