1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

யார்க் குற்றம் ?- செய்தித்தாக்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by PavithraS, Oct 24, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    செய்தி
    அதன் தாக்கம்

    எனக்கு ஏதாவது துக்கம் ஏற்பட்டால் இறையிடம் முறையிடுவேன்,அப்போதும் ஆறுதல் அடையாவிட்டால் பிறருடன் பகிர்வேன்.நேற்றிலிருந்து என் மனம் கனத்திருக்கின்றது. விழிகளில் நீர் சுரக்கின்றது. அதற்குக் காரணம் ஓர் சம்பவம். நெல்லையில் நடந்துள்ளது. நான்கு வயதும்,ஒன்றரை வயதுமேயான இரு சிறுதளிர்கள் தீயில் வெந்து உயிர்விட்டிருக்கின்றன. உடன் அவர்களின் தாயும். தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்ட தந்தைக் கவலைக்கிடமான வகையில்
    மருத்துவமனையிலுள்ளார். இதைப் படித்ததும் அந்த மனிதன் பேரில் நமக்குக் கோபமும்,அதிர்ச்சியும் ஏற்படுகின்றதல்லவா ? மேலோட்டமாக ஒரு மனிதனின் தோல்வி மனப்பான்மையில் அவன் குடும்பம் பலியானதில் சமூகத்தின் பங்கென்ன என்ற கேள்வி எழுந்தது. அவனை இந்தக் கொடுமையான முடிவுக்குத் தூண்டியது என்ன தெரியுமா ? கந்து வட்டி.

    ஆம் ! ஒருவரின் அவசரத் தேவைக்கு உடனடியாகப் பணம் கடன் கொடுத்து அதற்கு அதிகமான சதவிகிதம் வட்டி வாங்குவது. கடன் கால் பங்கென்றால்,அதற்கான வட்டியே முக்கால் பங்கு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய 1.45 லட்சம் ரூபாய்க்கு 2.34 லட்சம் ரூபாய் வட்டி கட்டியிருக்கிறார்கள், இந்தக் குடும்பத்தார். இதன் மேலும் வட்டியும் அசலும் திருப்ப முடியாமல் கடன் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6 முறை மனுவும் அளித்திருக்கிறார்கள். கீழிருக்கும் காவலர் கடன் கொடுத்தவர்களிடமிருந்து வழக்கமான (மாமூல்)லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட அந்தக்
    குடும்பத்தையே மிரட்டியிருக்கிறார்களேயன்றி, உதவியெதுவும் செய்யவில்லை. மாவட்ட ஆட்சியர் அக்குடும்பத்தினரின் மனு மீதில் நடவடிக்கையெடுக்கும்படி தனக்குக் கீழிருப்பவர்களுக்கு உத்தரவிட்டு, அது எஸ்.பி.- டி.எஸ்.பி-என்று வந்து மறுபடியும் அதே காவல் துறை ஆய்வாளருக்கே அனுப்பப் படுகின்றது."எங்கள் மீதே புகார் தெரிவிக்கின்றாயா?" என்று மேலும் அந்த மனிதனை அச்சுறுத்துகின்றனர் காவல் பணியினர்.

    இந்தச் சுழலில் சிக்கித் தவித்த அந்த இசக்கிமுத்து என்னும் மனிதன் வேறு நேர்மறை வழிகளேதும் தனக்குத் தோன்றாத படியால் ஓர் முடிவோடு தனது இரு சிறு பெண் குழந்தைகளையும் ,மனைவியையும் அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் குறைதீர் நாளன்று அங்கு சென்று இப்பதிவின் ஆரம்பத்தில் சொன்ன செயலை செய்திருக்கிறான். இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான்.

    அவன் செய்தது கடன் வாங்கியது. தன்னால் முடியாத செலவைக் கடன் வாங்கிச் செய்யவேண்டிய சூழல்/தீர்மானம். அவசரத் தேவைக்கு உடனடியாகப் பணம் பெறும் நோக்கில் கந்து வட்டிக்காரர்களிடம் வாங்கிய கடன். ஏன் ?எதற்கு வாங்கிய கடன்? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. அவசியமா ?ஆடம்பரமா ? என்ற கேள்விகளுக்குளெல்லாம் சென்று இதை விவாதப் பொருளாகும் நேரமும் இதுவென்று. நான்கு நபர்க் குடும்பம் தீக்குளிக்கும் அளவிற்கு அந்தக் கடன் அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது. விளைவு இரு சிறு பிஞ்சுகள், ஒன்றுமறியாதப் பிள்ளைகள் உட்பட மூன்று உயிர்கள் அழிந்துவிட்டன, மற்றொரு உயிர் போராடிக் கொண்டிருக்கின்றது.

    ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகாறு அகலாக் கடை.
    - திருக்குறள் 478

    குறள் விளக்கம்

    "பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை."

    இந்தக் குறளை என் தந்தை எனக்கு சிறுபிராயத்தில் சொல்லித் தந்திருக்கிறார். சிக்கனத்தின் அவசியத்தை,ஆழத்தை எனக்குப் புரியவைத்த அவருக்கு என் நமஸ்காரம் ! சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தைக் குழந்தைகள் உணர்ந்திருத்தலும், அனாவசியச் செலவுகள் செய்யக் கூடாதென்பதில் உறுதியையும் வளர்த்துக் கொண்டு விட்டால், நிம்மதியாக வாழலாம். இன்றைய சூழலில் கடன் அன்பை மட்டுமல்ல, எலும்பையும் முறிக்கும் !

    "ஆற்றில் போட்டாலும்,அளந்து போட வேண்டும்" என்று பெரியவர்கள் சொல்வார்கள். வரவு எட்டணாவாகவும்,செலவு,பத்தணாவாகவும் இருந்தால் அதிகம் இரண்டணாவைக் கடன் வாங்கித்தானே செய்தாக வேண்டும் ? பழைய காலங்களில் மக்கள் அவ்வளவு பேராசைக்காரர்களாகவும், சூதுவாது நிரம்பியவர்களாகவும் இல்லாத போதில் , ஒருவருக்கொருவர் பணமோ,பொருளோ தேவையேற்படின் ' கைமாற்றாக ' வாங்கிக் கொண்டு ஒரு நியாயமான தவணைக்குள் திருப்பியளித்துவிடுவார்கள். அதற்கு ஈடாக
    வட்டியெதுவும் வாங்காமலிருந்தார்கள்.

    அதுவே சிறிது மாற்றம் பெற்று, தான் வழங்கும் பணம்/பொருளுக்கு சிறு விலை வைத்து, வட்டி பெற்று அதையொரு தொழிலாகவும் செய்யத் துவங்கினார்கள். வடஇந்தியாவில் ஒரு சமூகமே அந்த வட்டித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. அவர்களும் தமிழகத்தில் அதிகம் பரவியுள்ளார்கள். இங்கே நான் யாரையும் குறிப்பிட்டுக் குறை கூற வரவில்லை. என் நோக்கம் ஒரு செய்தியைத் தெரிவிப்பது மட்டுமே. இன்றைக்கு வட்டித் தொழில் புரிபவர்கள் ஓர் குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் சார்ந்தவர்களில்லை. பணம் படைத்தவர்கள் - எந்த சமூகத்தைச் சார்ந்தோராயினும்-, சற்றுப் பேராசையோடு அதை மேலும் பெருக்க வேண்டுமென்று எண்ணுபவர்களெல்லாம் இப்படிப்பட்ட அநியாய வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பது இன்று யதார்த்தம்.

    இன்னும் சில மார்க்கங்களில் வட்டி பெறுவதும்,கொடுப்பதும் குற்றமென்று சொல்லப்பட்டிருக்கின்றது. அதற்குள்ளும் நான் நுழைய விரும்பவில்லை. நாம் ஏதாவது சிந்தனையைப் பகிர எண்ணுகையில், சமயப் பூசல்களுக்கு இடம் தந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகயிருக்கிறேன். யாரையும் உயர்த்தியோ,தாழ்த்தியோ,குறை சொல்லியோ இதைப் பதியவில்லையென்பதை மீண்டும் சொல்கிறேன்.

    சிறு இலாபம் வைத்துத் துவங்கிய வட்டிக்குப் பணம் தரும் தொழிலில் இன்றைக்குப் பற்பல வியாபாரங்கள் புகுந்துவிட்டன. கந்து வட்டி, நேர வட்டி, தின வட்டி, மீட்டர் வட்டி என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள். இப்படிக் கடன் வாங்குபவர்களுக்கு அந்தப் பணத்தைத் திருப்பியளிக்க ஏகப்பட்டக் கெடுபிடிகள்,தவணை முறைகள் விதிக்கப்படுகின்றன. அவசியத்திற்கும் (கல்வி,தொழில்,விவசாயம்) ஆத்திர

    அவசரத்திற்கும் (மருத்துவம்) சமூகத்தின் அழுத்தம் காரணமாகக் கௌரவ செலவிற்கும் கூட ( சிறுமியர் மஞ்சள் நீராட்டு, நிச்சயதார்த்தம்,திருமணம், வளைகாப்பு, குழந்தைகளுக்கு ஊரறிய முடியிறக்கிக் காதுகுத்துதல்,தீபாவளி உட்படப்பெரும்பண்டிகைச் செலவுகள் )இப்படிப்பட்ட வட்டி விகிதங்களில் சிலர் கடன் வாங்கி சொல்லொணாதத் துன்பத்தில் மூழ்கிவிடுகின்றனர்.

    அளவிற்கதிகமான சதவிகிதத்தில் வட்டி வசூலிக்கும் நபர்கள், எந்தக் கேள்வியும்,அடைமானமும் இல்லாமல்,வெறும் பத்திரத்தில் (DPN-Demand Promissary Note)கையெழுத்துப் பெற்றுக் கொண்டு, எந்த நேரத்திலும், இப்படிப்பட்டவர்களின் உடனடித் தேவைக்குப் பொருள் கொடுக்கத் தயார் நிலையிலிருப்பதால், பணம் தருவதற்குக் காலை முதல் மாலை வரையென்று குறிப்பிட்ட நேரம் மட்டுமே
    இயங்கக் கூடிய வங்கி உட்பட, அதிகமான கெடுபிடிகளும், விதிமுறைகளும் நிறைந்த எந்த முறையான நிறுவனங்களின் உதவியையும் நாடிப் போகாமல் தனிநபர்களைப் பொதுமக்களும் நாடுகின்றனர்.

    அது மட்டுமன்று - இன்றைக்குத் தனியாரும் புகுந்துவிட்ட வங்கித் துறையிலும் தனித்தேவைக் கடன் (Personal Loan) வட்டி விகிதங்கள் அதிகமே ! சேவைக் கட்டணங்களும் உண்டு.கிரெடிட் கார்டு என்பதெல்லாம் நடுத்தர மக்களே அதிகம் தெரிந்து வைத்திருக்காத போதில், சாதாரண இசக்கிமுத்துக்களுக்கு அவை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவரைப் போன்ற சாதாரணர்களுக்கு இந்தச் சேவையை அளிக்க வங்கிகளும், தனியார் கடன் நிறுவனங்களும் விரும்புவதுமில்லை.இன்னும் படிப்பறிவு முழுதும் எட்டாத
    மக்களுடைய இந்நாட்டில், வங்கிக் கணக்கும், இது போன்ற டிஜிட்டல் முறை பணப் பரிவர்த்தனைகளும் தற்சமயம் யதார்த்தத்திற்கு
    மாறானவை. வழக்கத்தில் கொண்டு வர தீர்க்கமான தொலைநோக்குத் திட்டங்கள் தேவைப்படுபவை. இதற்குள் நுழைவது என் நோக்கமல்ல.

    எந்த உத்திரவாதமும், அடைமானமும் இல்லாமல், குடிசை,சிறு/ குறுந்தொழில் புரிவோர், பெட்டிக்கடை வியாபாரிகள்,காய்கனி வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் போன்ற , வங்கிகளின் கடன் திட்டங்களின் கீழ் பயன் பெறமுடியாத தொழில் முனைவோருக்குப்
    பணத் தேவைக்கு உதவும் வகையில் தீட்டப்பட்டுள்ள , கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ' முத்ரா ' Micro Units Development and Refinance Agency (MUDRA)என்ற கடன் திட்டம் பற்றி எத்தனைப் பேருக்கு அரசாங்கம்/ வங்கித்துறை தெரிவித்துள்ளது ? சாமானியர்களுக்கு அப்படியொன்று இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தால் தானே பயனுறுத்திக் கொள்ள முடியும் ? இதிலும் இவர்களின் அரசியல் ஆட்டங்கள் ! வாசகர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றி செய்தியை சரிபார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். சமீபத்தில் வந்திருக்கிறபடியால், எனக்கு இதைப் பற்றி விவரங்கள் விரிவாகத் தெரியாது

    நானும் ஓர் முன்னாள் வங்கி ஊழியை ஆதலால், இப்படிப் பட்ட சிறு அளவிலான கடன் கொடுக்க வங்கிகள் எவ்வளவு விதிமுறைகளைக் கடைபிடிக்கின்றன என்பது பற்றி நேரடியான அனுபவமுள்ளது. வங்கியில் கணக்கு உள்ளதா, அதில் வரவு செல்வது செவ்வனே நடக்கிறதா?,கடன் பெற்றால் திருப்பித் தருவாரென்பதற்கான உறுதிமொழி யாராவது கொடுப்பார்களா?, அதைத் திருப்பித் தருமளவு
    வருமானம் உள்ளவரா? - என்றெல்லாம் நிறைய விதிமுறைகளுண்டு. அவையாவும் கடைபிடிக்க வேண்டியவையே என்பதில் ஐயமில்லை.

    "அண்டை வீட்டு நெய்யே ,என் பெண்டாட்டிக் கையே " என்று, பொதுமக்களின் வைப்புநிதியாகப் பெற்றப் பணத்தையெடுத்து வங்கிகள் தமது பணமாகக் கடன் கொடுக்க முடியுமா? இல்லை அது வசூலாகாமல் நஷ்டப்பட முடியுமா ?சாதாரணர்களுக்கு இது போன்றக் கடன் வாங்குவது மிகவும் கடினமான செயலே. இதுவே ஒரு அரசியல்வாதியின் தலையீட்டோடு எவ்வளவோ நபர்களுக்குக் கடன் கொடுத்து, அவர்களும் அதற்கான தவணையைத் திருப்பித் தராமல் அவை
    வாராக்கடன்களாகி,வங்கிகளுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதும் எனக்குத் தெரிந்த செய்தியே. உங்களில் பலருக்கும் இது பற்றித் தெரிந்திருக்குமென்றே எண்ணுகிறேன். இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரங்கள், நாம் சொன்னால் வம்பாகிவிடும்.

    எதற்கு இதைச் சொன்னேன் என்றால், நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைப்பு சாராத சிறு தொழில் விவசாயம் கூலிவேலை உட்பட பல தொழில் புரிந்து தான் குடும்பம் பண்ணுகிறார்கள். நமது நாட்டின் மக்கட்தொகையில் வங்கிகள் அல்லது கடன்
    நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகமிருக்கும் பெரிய தொழிலதிபர்கள், வியாபாரிகள் இவர்களோடு மாத வருமானம் பெறக்கூடிய அரசு மற்றும் தனியார்த் துறையில் பணி செய்பவர்களின் சதவிகிதம் குறைவேயாகும். ஆனாலும் அந்தப் பெரும்பான்மை மக்களுக்கும் மாத வருமானம் பெறுபவர்களுக்கிருக்கும் செலவுகளும்,தேவைகளும் இருக்கத் தானே செய்கின்றது ?
    வருவாய்க்குள் செலவு செய்வதற்கு எவ்வளவோ சிக்கனமாக இருந்தும் கூட அவ்வப்போது கடன் வாங்கும்படி நேர்கின்றதே ? அதைத் திருப்பித் தர முடியாமல் பற்பல துன்பங்களுக்கும் ஆளாக நேரிடுகின்றதே ?

    இது நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு மட்டுமல்ல- சில சமயம் மேல்தட்டு மக்களுக்கும் சங்கடம் தரக்கூடிய ஒன்றுதான். இப்பதிவைத்தட்டெழுதும் போதில் கணவரின் செல்லிடப்பேசியில் நாதெள்ளா ஸம்பத்துச் செட்டியின் நகை வியாபாரம் படுத்துப் போய் இழுத்து மூடப்பட்ட செய்தி வந்தது. அந்நிறுவனத்தில் பணம் போட்டவர்களுக்கு அசலாவது திரும்ப வேண்டுமென்றும் அந்நிறுவனமும் தனது பங்குதாரர்களுக்கு, தன்னை நம்பிப் பணம் முதலீடு செய்த பொதுமக்களுக்கும் உரிய தொகையைத் திருப்பும் சக்தியைப் பெறவேண்டுமென்றும் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இந்தப் பதிவில் குறித்த சம்பவத்தைப் போல் பல செய்திகள் வெளியில் தெரியாத வண்ணமுள்ளன. சமூகத்தில் ஒவ்வோர் நிமிடமும் ஏதோவொரு கொடுமைக்கு ஆளாகி அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டு தானிருக்கின்றன. இது போன்ற செய்திகள் ஊடகத்தின் பார்வைக்கு வந்து,அதைப் பற்றிய சிந்தனையை மக்கள் மனத்தில் தூண்டும் போதுதான் கவனத்திற்கு வருகின்றன.மற்ற நேரத்தில் இவையாவும் யதார்த்தமாகவும், யாருக்கோ நடப்பது என்ற ரீதியிலும் தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

    "இசக்கிமுத்து கடன் வாங்கினார், திருப்பியளிக்கமுடியாமல் தற்கொலை முயற்சி செய்தார். இடையில் அவரது குடும்பத்தைக் கொன்றார்" என்று இதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டால், "ஏழு வருடங்களில் 823 பேர் கந்துவட்டிக் கொடுமையால்
    உயிரிழந்திருக்குக்கிறார்கள் ,அவற்றோடு இதுவுமொன்று" என்று புள்ளிவிவரக் கணக்குகளில் மூழ்கிவிட்டால்,மன உறுத்தலில்லாமல் நாம் உண்ணவும் உறங்கவும் செய்யலாம். "தன் குழந்தைகளையும்,மனைவியையும் கொல்லும் உரிமையை அந்த இசக்கிமுத்துவிற்கு யார்கொடுத்தது ?" என்று தொலைக்காட்சிகளில் விவாத மேடையும் போடலாம்.

    மற்ற மூவர் இறந்து, தான் மட்டும் உயிருக்குப் போராடுவோமென்று அந்த மனிதன் எண்ணியிருப்பானென்று எனக்குத் தோன்றவில்லை. இப்படித் தன்னையும் ,தனது குடும்ப நபர்களையும் தீயிட்டுக் கொளுத்திப் பிறருடைய கவனத்தை ஈர்க்கவேண்டுமென்று செய்திருப்பானென்று தோன்றவில்லை. அப்படி ஈர்ப்பதால் அவனுக்கு என்ன இலாபம் ? தன்னால் கடனடைக்க முடியாத போதில், அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனின்றி, வேறு வழி யோசிக்க முடியாமல் உயிரைவிட அவன் முடிவெடுத்திருக்கிறான். தனக்குப் பிறகு தனது குடும்பம் நிர்கதியாய்த் துன்பப்பட வேண்டாமென்று ஒரேயடியாக எரிந்து முடித்துக் கொள்ளலாமென்ற வேதனையான வழியைத் தேர்ந்திருப்பான். கோழையின் முடிவாகத் தோன்றும் இந்தச் செயலைச் செய்து அந்த மனிதன் நீதிதேவதையின் மூடியிருக்கும் விழிகளைத் திறக்க முயன்றிருக்கலாம். கடன் வாங்க வேண்டுமென்ற அவனது சொந்த முடிவின் விளைவாக இப்படிப் பட்ட கதிக்கு ஆளாகிவிட்டான். ஆயினும், அவனது இந்தத் தீ, சமூகத்தின் அவலத்தை, தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக் கொள்ளும் முறைகேட்டினை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாதல்லவா ?

    அரசாங்கம் கந்துவட்டிக்கு எதிரான சட்டத்தைப் போட்டிருக்கிறது. ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதில் தான் எல்லாக் கட்சி அரசாங்கமும் ஊக்கம் காட்டுவதில்லை. "நீ தான் காரணம்,நான் தான் தடை செய்தேனென்று "ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டே மக்களை முட்டாளாக்குவது அரசியல் தந்திரம். இப்படிப்பட்ட வட்டித் தொழிலின் பின்னாலும் அரசியல்வாதிகளின் பங்கிருக்குமென்பது யாருக்கும் தோன்றக்கூடிய ஊகம் தானல்லவா ? பூனைக்கும் தோழன்,பாலுக்கும் காவலென்ற வகையில் சட்டமும்,காவல் துறையும். வேலியேப் பயிரை மேயுமென்கிற வகையில் அரசு நிர்வாகம்.

    இந்தச் சூழலில் என் மனதில் காயமேற்படுத்தும் கேள்வி/சங்கடம்/துக்கம்-இசக்கிமுத்துவின் குழந்தைகளைக் கொன்றது யார் ? கடனாளி இசக்கிமுத்துவா?, அநியாயமாக வட்டி வசூல் செய்த கடன் கொடுத்த நபரா?, உதவி செய்யுங்களென்று முறையிட்டும் கடனாளியையே மிரட்டிய காவல்துறையினரா ? (ஒய்வு பெற்றக் காவல்துறை ஊழியரென்று செய்தி.) ஒரே மனுவைத் திரும்பத் திரும்பக் கொடுத்தும் அதன் தீவிரத்தையுணராமல் அலட்சியம் செய்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகளா ? எந்தத் தவறுமிழைக்காத இரு பிஞ்சுகள் எரிந்து சாம்பலானது யார்க் குற்றம் ?

    இந்தக் கொடுமை அரங்கேறியபின்பும் கூட இந்த வட்டிக்காரர்களின் போக்கில் மாற்றம் வராதிருந்தால் யார்க் குற்றம்? அந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய அரசு நிர்வாகம் விழித்துக் கொள்ளவில்லையென்றால் யார்க் குற்றம் ? நமக்குத் தெரிந்து நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் திராணியின்றி என் போன்றோர் இந்த சமயங்களில், அழுதும் , புலம்பியும், வார்த்தைகளில் பதிந்தும்-பின்னர் அதை மறந்தும் போனால் யார்க் குற்றம் ?

    வழமை போல் இங்கு நான் பதிந்தது என் மனதில் ஏற்பட்டத் துன்பத்திற்கு வடிகால் தேடும் முயற்சியே. அந்தக் குடும்பத்தினரின் துக்கத்தில் ஓர் தார்மீகப் பங்கெடுக்கும் வகையில் ,இதில் கூறிய கருத்துக்கள் என் தனிப்பட்டக் கருத்துக்களே,யாரையும் குறை சொல்லும் நோக்கில் எழுதப் படவில்லை.
     
    Last edited: Oct 24, 2017
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்புள்ள பவித்ரா,
    நானும் இந்த செய்தியைப் படித்தேன்.நெஞ்சு பொருமியது.சமூகத்தின் கண்ணுக்குப் புலப்படாமல் இது மாதிரி எவ்வளவோ பேர் தினமும் மரண வாயிலுக்குள் தள்ளப் படுகின்றனர்
    அகலக் கால் வைப்பது, கௌரவத்துக்காக செலவு செய்வது என்பது ஒரு பெரிய சமூகப் பிரச்சினை.
    கந்து வட்டிக்குப் பணம் வசூலிப்பது குற்றம் தான். ஆனால் இவ்வளவு வட்டி கட்ட வேண்டி வரும் என்று தெரிந்தே அந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளுவது மடத்தனம்.
    இந்தியா மாதிரி உள்ள developing நாடுளில் கந்து வட்டியை ஒழிப்பது கடினம்.
    ஜனங்களுக்கும் awareness தேவை. காது குத்து,முடி காணிக்கை, மஞ்சள் நீராட்டு போன்றவைகளுக்கு சடங்கு, சம்ப்ரதாயம் என்று செலவு செய்வதை கட்டோடு நிறுத்த வேண்டும். இரண்டு மூன்று பேர் நிறுத்தினால் தானாக அவை ஒழிந்து விடும்.

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். பாழும் கிணறு என்று தெரிந்து கொண்டே அதில் விழுபவர்கள் ஏராளம்.
    உடல் நிலை, ஆபரேஷன் என்று அவசரத்துக்கு கடன் வாங்குபவர்கள் ஒரு புறம். சும்மா டாம்பீகத்துக் காக செலவு செய்ய கடன் தொல்லையில் மாட்டிக் கொள்பவர்கள் தான் ஏராளம்.
    வங்கிகளிலேயே கடன் வாங்க ஏகப் பட்ட procedure இருக்குபோது, சும்மா ஒரு முகத்தை நம்பிக் கடன் கொடுப்பவர் ,தான் ஏமாறுவதை இது மாதிரி சில்லறை வாடிக்கையாளரிடம் தான் ஈடுகட்ட முயற்சிப்பார்கள்.அவர்களும் தொழில் தர்மம் பற்றித் தான் பேசுகிறார்கள்.
    சமூகம் தானாகத் திருந்தாவிட்டால், இதுமாதிரி சம்பவங்கள் நிகழ்ந்து கொன்டுதான் இருக்கும்.
    ஜெயசாலா 42
     
    PavithraS likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியீர் !

    தங்களது அழகான பின்னூட்டத்திற்கு நன்றி. அதிலுள்ள அனைத்து வார்த்தைகளும் உண்மை !
    திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான். உலக வழக்கங்களின் மாற்றமெதுவும் முதலில் தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டுமென்பதை ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டும். தத்தமது குடும்பங்களிலும்,சமூகத்திலும்,ஊரிலும்,நாட்டிலுமென அந்த மாற்றத்தைப் படிப்படியாகவே அமல்படுத்த இயலும். பொய்யான கௌரவத்திற்காக ஆடம்பரமாக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பணம் படைத்தப் புலிகளைப் பார்த்து சாமானியப் பூனைகள் சூடு போட்டுக் கொள்ளாமலிருக்கவும் வேண்டும், பொருளாதாரத்தில் வளமோடிருப்பவர்களும் "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே !" என்பதை உணர்ந்திருக்கவும் வேண்டும். இல்லையென்றால் நம்மைப் போன்றவர்கள் வருந்தும்படி இப்படிப்பட்ட அவலங்கள் எங்கேனும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா

    பி.கு. அந்த இசக்கிமுத்துவும் உயிரிழந்துவிட்டாரென்று இதைப் பதிந்த பின்னர் தான் தெரிந்தது . அந்தக் குடும்பத்தினர் ஆன்மசாந்தி அடைய வேண்டுமென்று ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
     
    Last edited: Oct 25, 2017
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS பவித்ரா மிகவும் மனதை பாதித்த செய்தி இது .ஒரு கணத்தில் முடிவு எடுத்து இப்படிப்பட்ட தவறான செய்கைகளை செய்து விடுகிறார்கள் .நான் அந்த மாவட்டத்தை சேர்ந்தவள் என்ற முறையில் சில விஷயங்களை பகிர விரும்புகிறேன் .கந்து வட்டிக்காரர்களை பற்றி தெரிந்து கொண்டே அவர்களிடம் கடன் வாங்குகிறார்கள் .பாமர மக்கள் மட்டும் அல்ல படித்தவர்களும் இந்த தவறை செய்கிறார்கள் .வருவாய்க்கு தகுந்த செலவு இருக்க வேண்டும் .வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்ட வேண்டிய அவசியம் இல்லை .இந்த இசக்கிமுத்து கடன் வாங்கி வீடு கட்டி பின் காலி மனையும் வாங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன.உயிரை விடவா சொத்து பெரிது என்பதை அவர் உணரவில்லையே.பிஞ்சு குழந்தைகளை வதைக்க ஒரு தந்தைக்கு எப்படி மனம் வந்தது ..அவர் மறைந்து விட்டார் அதனால் அவரை பற்றிய விமர்சனத்தை தவிர்க்கிறேன் .

    வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் கொடூரமானவர்கள் .அவர்கள் எதை பற்றியும் கவலைப் படாத ஜன்மங்கள் .காவல்துறையினரிடம் சென்றால் அவர்களிடமும் பதில் இருக்காது .பத்திரிகைகளும் ஒரு நான்கு நாட்கள் இந்த செய்தியை போட்டு விட்டு அதன் பின் மறந்து விடுவார்கள் .ஒரு ஏழைக்கு எங்கேயும் நீதி கிடைக்காது .எத்தனை சட்டங்கள் போட்டாலும் பணமுதலைகளை ஒன்றும் செய்ய முடியாது .கடன் வாங்கியவனை தான் இந்த உலகம் குறை சொல்லுமே தவிர கொடுத்தவனை ஒன்றும் சொல்லாது .அவன் தொழில் அது என்று ரொம்ப சர்வ சாதரணமாக சொல்லும் உலகம் இது .உயிரின் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை .கொடுப்பவனுக்கும் தெரியவில்லை வாங்கியவனுக்கும் தெரியவில்லை .அந்த பிஞ்சு குழந்தைகளின் மரணம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் விடாது

    அந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொள்வதை தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்புள்ள பெரியம்மா,
    தங்கள் கருத்துகளைப் பகிர்ந்ததற்கும், சில உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டியதற்கும் மிக்க நன்றி ! நீங்கள் சொல்வது போல் விளக்கைத் தேடித் தாமே போய் மாட்டிக் கொள்ளும் விட்டில் பூச்சிகளாய்ப் பொதுமக்கள் இந்தக் கந்துவட்டிக் கடனளிப்பவர்களிடம் பணம் பெற்றுப் பின்னர் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு வருகின்றனர். அன்பான, அமைதியான, வெளிக்கடனற்ற நிம்மதியான வாழ்க்கையைக் காட்டிலும், பொய்யான கௌரவத்தையும் ,அளவுக்கதிகமாக சொத்து சேர்ப்பதையும் தன்மானமாகக் கருதி இப்படி அநியாயமாக உயிரை மாய்த்துக் கொள்வதில் என்ன இலாபம் ? இந்த இசக்கிமுத்து என்னும் மனிதனும் பக்குவமும்,அனுபவமும் இல்லாத ஓர் இளம் குடும்பத் தலைவன். தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டுமென்று உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்ததோடல்லாமல் ,தான் பெற்றக் குழந்தைகளையும் நெருப்பிற்கு இரையாக்கி நம்மைப் போல் பலரையும் வேதனையில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டான் ! அந்தக் குழந்தைகளின் மரணம் இது போன்றுக் கடன் வாங்கிக் குடித்தனம் பண்ணுபவர்களுக்கும், அதிக வட்டிக்குப் பணம் கடன் கொடுப்பவர்களுக்கும் மனமாற்றத்தை உண்டுபண்ண வேண்டும். இல்லாவிடில் அந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்தமே இருக்காது.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     

Share This Page