1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனதில் தீ...!!! - all parts

Discussion in 'Stories in Regional Languages' started by nithyakarthigan, Dec 17, 2011.

  1. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 18

    பழைய கதை


    புகழேந்தி நிரஞ்சனியின் காதல் தெளிந்த நீரோடையாக சீராக சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினான் புகழேந்தியின் நண்பன் டாக்டர் ஷங்கர்.

    ஒரு நாள் ஷங்கர் திடுமென சோகமாக இருந்தான். அவனுடைய காதலி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக இவனிடம் சொல்லிவிட்டாளாம். அதனால் இவன் கொஞ்சம் அடிவாங்கிவிட்டான். அவளும் நல்லப் பெண்தான். ஆனால் பெற்றோரின் பிடிவாதத்திற்கு பலியாகி சூழ்நிலை கைதியாகிவிட்டாள். அந்த சம்பவம் புகழேந்திக்கு மனதில் உறுத்தலை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே நிரஞ்சனி அவளுடைய வீட்டிற்கு மிகவும் பயப்படுவது அவனுடைய உறுத்தலை அதிகப்படுத்தியது. இனி ஒரு நிமிடம் கூட நிரஞ்சனி இல்லாத வாழ்க்கையை அவனால் வாழ முடியாது என்பது அவனுக்கு நிச்சயம். அதனால் தாமதிக்காமல் நிரஞ்சனியிடம் திருமண பேச்சை ஆரம்பித்தான்.

    "ஜெனி... உங்க வீட்ல நம்ம பேச்சை ஆரம்பித்துவிடலாமே..."

    "என்ன புகழ் திடீர்ன்னு... கொஞ்ச நாள் ஆகட்டுமே..."

    "எப்போ சொன்னாலும் சொல்றதுதானே... இப்போவே பேசிவிடலாம்... நான் நேரடியா அப்பா அம்மாவை கூட்டிகிட்டு வரட்டுமா... இல்ல யாரையாவது வச்சு முதல்ல பேசட்டுமா...?"

    "ஏன் ரொம்ப அவசரப்படறீங்க புகழ்? கொஞ்ச நாள் போகட்டும் பேசலாம் "

    "நாமளா சொல்லாமல் அவங்களுக்கு தெரிஞ்சா... அவங்களோட பிடிவாதம் அதிகமாயிடும் ஜெனி... இப்போவே நம்ம பேசிவிடலாம்... எப்போ பேசினா என்ன..?"

    "எனக்கு பயமா இருக்கு புகழ்..."

    "பயந்து என்ன செய்யப்போற...? என்னை விட்டுட்டு வேற..." அவன் அவனுடைய காதல் ஜெயிக்க வேண்டுமே என்கிற பதைப்பில் அவளை காயப்படுத்த முனைந்தான். ஆனால் அவன் சொல்ல வந்ததை முடிப்பதற்குள்

    "ப்ளீஸ் புகழ்..." என்று கெஞ்சலாக அவனை பார்த்தாள் நிரஞ்சனி..

    உடனே அவனும் கோபத்திலிருந்து தணிந்து "சாரி..." என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி விட்டு

    "என்ன ஜெனி...? இது பயப்படற நேரம் இல்லை... நான் உங்க ஊர் ஆட்களை வச்சே உங்க வீட்ல பேசுறேன்... அதுக்கப்புறம் என்னோட அம்மா அப்பாவோட உங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்க்குறேன்.... எல்லாம் சரியா வரும்..." என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.

    அவளுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவளுடைய அக்காவின் கல்யாணமும் காதல் கல்யாணம் தானே...! அதோடு அக்கா கணவர் படிக்காதவர் என்பது தான் அந்த கல்யாணத்தில் பிரச்சனையாக இருந்தது. ஆனால் புகழுக்கு என்ன குறை... அவங்களே தேடினாலும் இது போல் மாப்பிள்ளையை கண்டுபிடிப்பது கஷ்டம்... அதனால் அவளுக்கும் நம்பிக்கை துளிர்த்துவிட "சரி... வீட்ல நா முதல்ல சொல்லிடறேன்... அப்புறம் நீங்க பேசுங்க... " என்றாள்.

    அவனிடம் "சரி " என்று சொன்னவளுக்கு வீட்டில் பேசுவது அவ்வளவு எளிதாக இல்லை. முதலில் 'அம்மாவிடம் சொல்லிவிடலாம்' என்று நினைத்தாள். ஆனால் அதை பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் ஏதாவது தடை வந்துகொண்டே இருந்தது....

    புகழேந்திக்கு பொறுமை குறைந்து கொண்டே வந்தது. அதற்கு ஏற்றாற் போல் அவனுடைய நண்பர்கள் "வேம்பங்குடி பெண்ணை காதலித்தால் அந்த காதல் கல்யாணத்தில் நிச்சயம் முடியாது" என்று அடிக்கடி சொல்லி அவனை பயமுறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

    இந்த நிலையில் புகழேந்தி, நிரஞ்சனியை மருத்துவமனைக்கு விடுப்பு எடுக்க சொல்லி அவனுடைய அண்ணன் வீட்டிற்கு அழைத்து சென்றான். அன்று அவனுடைய அண்ணன், வீட்டில் இல்லை. அவனுடைய அண்ணி நயந்தியிடம் சொல்லி நிரஞ்சனிக்கு தைரியம் சொல்ல சொன்னான். அதற்கு தான் அவளை அழைத்து சென்றான்.

    புகழ் நிரஞ்சனியை வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டான். நயந்தி நீண்ட நேரம் நிரஞ்சனியுடன் பேசிக் கொண்டிருந்தாள். நிரஞ்சனிக்கு தைரியம் சொல்லிப் பார்த்தாள். புகழேந்தி மத்திய உணவிற்காக வீட்டிற்கு வந்தான்.

    "என்ன அண்ணி சொல்றா...?" அவன் நயந்தியிடம் தனியாகக் கேட்டான்.

    "ரொம்ப பயப்படுது தம்பி... அவங்க ஊர் என்ன அப்படி பட்ட ஊரா...? எதுக்கு இப்படி பயப்படுது...?" என்றாள் நயந்தி.

    நயந்தியின் பேச்சை கேட்ட புகழேந்திக்கு வயிற்றை பிசைந்தது. நிரஞ்சனிக்கும் அவனுக்கும் திருமணம் நடக்குமா என்று பயந்தான். அவள் அவளுடைய காதலில் அழுத்தமாக இருந்தால் அவனால் உலகத்தையே எதிர்க்க முடியும். ஆனால் அவளுடைய பயத்தை நினைத்தால் புகழேந்திக்கு அவள் எந்த அளவு உறுதியாக இருப்பாள் என்று கணிக்க முடியவில்லை.

    ஒவ்வொரு நிலையிலும் அவன் தான் கட்டாயப்படுத்தி அவளை அவனுடன் பேச வைத்தான்... பழக வைத்தான்... பின் காதலை சொல்ல வைத்தான்... நிரஞ்சனி தானாக எதுவும் செய்யவில்லை. அதனால் அவனுக்கு நிரஞ்சனியின் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. கலக்கம் அதிகமானது.

    'ஒரு வேளை அவள் அப்பா அம்மாவிற்கு பயந்து வீட்டில் பார்க்கும் மாப்பிளைக்கு கழுத்தை நீட்டிவிட்டால் என்ன செய்வது...?' என்று பயந்தான். அந்த பயத்தோடு நிரஞ்சனியிடம் தனியாக பேசினான்.

    இன்றைய கதை

    பாபனாசத்தில் தஞ்சாவூர் MLA திரு.கல்யாணசுந்தரம் வீட்டில் புகழேந்தியும் அவனுடைய அண்ணனும் இருந்தார்கள்.

    "நீங்க சொல்றத கேட்டா இது ஒன்னும் பெரிய விஷயமா தெரியல தம்பி. உங்களுக்கு உதவ நான் கடமைப் பட்டிருக்கேன். இதை நான் முடிச்சு தர்றேன்... கவலைப்படாதிங்க " என்றார் கல்யாணசுந்தரம்.

    "எப்படி சார்...?" புகழேந்தி ஆர்வமாக கேட்டான்.

    "நம்ப மயிலாப்பூர் MAL நம்ப கட்சி தான். அவரு சொந்த ஊர் எதுன்னு தெரியுமா உங்களுக்கு? " என்று சிரித்துக் கொண்டே கேட்டவர் "வேம்பங்குடி தான்..." என்றார்.

    புகழேந்தியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "அப்போ இப்பவே பேசுங்க சார்" என்றான்.

    "தம்பி ரொம்ப பதட்டமா இருக்கீங்க. நீங்க பயப்படற அளவு இது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல தம்பி. கொஞ்சம் பொறுங்க... இப்பவே அவருக்கு போன் போடுறேன். நீங்களும் கேளுங்க... ஸ்பீக்கர்ல போடுறேன். அப்பதான் நீங்க தைரியமா இருப்பீங்க " என்று சொல்லிக் கொண்டே மயிலாப்பூர் MAL வுக்கு தொடர்பு கொண்டு போனை ஸ்பீக்கரில் போட்டார்.

    கல்யாணசுந்தரத்துக்கும் மயிலாப்பூர் MLA நாஞ்சியப்பனுக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைத்து பேசிக்கொள்ளும் அளவு நெருக்கமாக இருந்தார்கள்.

    "ஹலோ.... நா கல்யாணசுந்தரம் பாபனசத்துலேருந்து பேசுறேன்."

    "அடடே... சொல்லுப்பா சுந்தரம்... என்ன விஷயம்... திடீர்ன்னு கூப்பிட்டுருக்க... வீட்ல எல்லாரும் சௌக்கியமா?"

    "எல்லாரும் சௌக்கியம்... அங்க எப்படி...?" என்று பதிலுக்கு விசாரித்தார் கல்யாணசுந்தரம்.

    "எல்லாரும் நலம். சொல்லுப்பா என்ன விஷயமா கூப்பிட்ட...?"

    "அட... அது ஒன்னும் இல்லப்பா... இங்க நமக்கு வேண்டிய பையன் காதல் விவகாரத்துல சிக்கிகிட்டான்..." என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தார்.

    முழுமையாக அவர் சொல்வதை குறுக்கிடாமல் கேட்ட நாஞ்சியப்பன்

    "சுந்தரம்... இதை தவிர எது வேணுன்னாலும் கேளு நான் செய்றேன்... ஆனா என்னோட ஊருகாரன எதிர்த்து என்ன எதுவும் செய்ய சொல்லாத. அத நான் உயிரே போனாலும் செய்ய மாட்டேன். அதே சமயம் ஊருக்குள்ளேருந்து அந்த பையனை கண்டிச்சு வைக்க சொல்லி எனக்கு ஏதாவது தகவல் வந்தா, நான் தயங்காம அந்த பையன அடக்க ஏற்பாடு செய்வேன்." என்றார்.

    அதை கேட்டு திகைத்த கல்யாண சுந்தரம்

    "என்னப்பா நீ... உங்க ஆளுங்களுக்கு புத்தி தானே சொல்ல சொன்னேன். எதிர்க்க சொல்லலியே.." என்றார்.

    "அவங்களுக்கு புத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. உன்ன தேடி வந்திருக்க பையனுக்கு நீ புத்தி சொல்லி அனுப்பு. இல்லன்னா நீயும் நானும் மோதிக்கிற மாதிரி ஆகிவிடும். இருவது வருஷ அரசியல் நட்பு முக்கியமா...? புதுசா வந்த அந்த பையன் முக்கியமா...? நீயே முடிவு பண்ணிக்க." என்று சொல்லி போனை அணைத்துவிட்டார் நாஞ்சியப்பன்.

    கல்யாணசுந்தரம் எதுவும் பேச முடியாமல் கையை பிசைந்தார். அவரால் தங்களுக்கு உதவ முடியாது என்பதை புரிந்து கொண்ட புகழேந்தி அவரை தர்மசங்கட படுத்தாமல்

    "பரவால்ல சார்... நாங்க பார்த்துக்குறோம்... " என்று சொல்லிவிட்டு தன் அண்ணனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

    "என்னடா புகழ்... நாம மலை போல நம்பியிருந்தவரே இப்படி கைய விரிச்சிட்டாரே...!" புகழேந்தியின் அண்ணன் கவலையாக பேசினார்.

    அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்த புகழ்
    "அதுவும் நல்லதுக்கு தான் அண்ணா... இது என்னோட காதல்... இதுல நான் அடுத்தவங்களுக்கு பின்னாடி ஒளிந்து கொள்வது சரியில்ல. பிரச்னையை முடிந்த அளவு சுமூகமா முடிக்க முயற்சி செய்தேன். முடியல... இனி நானே நேரடியா இறங்கிப் பார்த்துட வேண்டியது தான்..." என்றான்.

    "என்னடா செய்யப் போற?"

    "வேம்பங்குடிக்கு போகப்போறேன்..."

    "என்ன விளையாடுறியா...? அங்க போனா உன்னோட உயிருக்கு உத்திரவாதம் இல்ல..."

    "ஜெனி இல்லன்னா... நானே இல்ல. வாழ்வோ சாவோ.... அது அவளோட தான். அது எங்கையா இருந்தா என்ன? நான் வேம்பங்குடிக்கு போகத்தான் போறேன்." என்றான் தீர்மானமாக. பின் கைபேசியை எடுத்து பெற்றோருக்கு அழைத்து உடனே தஞ்சாவூருக்கு கிளம்பி வரும்படி சொன்னான்.

    அன்று இரவே அவனுடைய பெற்றோர் தஞ்சாவூர் வந்து விட்டார்கள். அவன் தன் தாய் மடியில் தலை சாய்த்து, தந்தையுடன் கலகலப்பாக பேசி அந்த இரவை கழித்தான். இந்த இரவே அவன் அவனுடைய பெற்றோருடன் கழிக்கும் கடைசி இரவாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தில், அவர்கள் இருவரையும் அன்று முழுவதும் மிக மகிழ்ச்சியாக வைத்திருந்தான். அவர்களும் மகனுக்கு இருக்கும் பிரச்சனை தெரியாததால் குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும் நிம்மதியை அனுபவித்தார்கள்.

    புகழேந்தி அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் காரை எடுத்துக் கொண்டு வேம்பங்குடியை நோக்கி புறப்பட்டான்.

    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-11.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 19

    பழைய கதை


    நிரஞ்சனிக்கு அவளுடைய காதலை பற்றி வீட்டில் பேச தைரியம் இல்லை. அதை புரிந்து கொண்ட புகழ், நிரஞ்சனிக்கு அவனுடைய அண்ணி நயந்தியிடம் சொல்லி தைரியம் சொல்ல சொன்னான்.

    நிரஞ்சனியிடம் பேசிப் பார்த்த நயந்திக்கும் நிரஞ்சனிக்கு போதுமான மன தைரியம் இல்லை என்று தோன்றி விட, அதை மறைக்காமல் புகழேந்தியிடம் சொன்னாள். அதில் பீதி அடைந்த புகழ் நிரஞ்சனியை தனியாக தன்னுடைய அறைக்கு அழைத்து பேசினான்.

    "ஜெனி... உனக்கு என்னை நிஜமாவே பிடிச்சுருக்கா...?"

    "என்ன புகழ் இது... திடீர்ன்னு ஏன் இப்படி கேக்குறீங்க...?"

    "நீ பதில் சொல்லு...."

    "ஆமா... பிடிச்சிருக்கு..."

    "அப்படின்னா நீ வீட்டுல பேச வேண்டியதுதானே... எதுக்கு லேட் பண்ணற...?"

    "ப்ச்... நீங்க எதுக்கு அவசரப்படறீங்க...?"

    "என்னோட தவிப்ப நீ புருஞ்சுக்கவே மாட்டியா...? நா இப்போ நம்ப கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு தெரியாம நெருப்பு மேல நிக்குற மாதிரி இருக்கேன்... புருஞ்சுக்கோ ஜெனி... ப்ளீஸ்... " அவன் வார்த்தையில் தான் ப்ளீஸ் இருந்ததே தவிர, அவனுடைய குரலிலும் முகத்திலும் கண்டிப்பும் கடுகடுப்பும் தான் இருந்தது.

    "பேசு பேசுன்னு சொல்றீங்க... உங்களுக்கு என்ன...? ஈஸியா சொல்லிடுவீங்க... நான் தானே பேசணும்..." என்று படபடத்துவிட்டு "ச்சை... எப்ப பார்த்தாலும் 'தொன தொனன்னு...' சரியான தொல்லையா போச்சு..." என்று முனுமுனுத்தாள்.

    அது அவனுக்கு தெளிவாக கேட்டுவிட்டது.
    "என்ன சொன்ன... என்ன சொன்ன... திரும்ப சொல்லு... என்னால உனக்கு தொல்லையா..?" என்று கோபமாக கேட்டான்.

    "ஆமா தொல்லை தான்... இந்த ஹாஸ்ப்பிட்டளுக்கு வேலைக்கு வந்ததிலே.....ருந்து மாற்றி மாற்றி ஏதாவது பிரச்சனை... என்னோட நிம்மதியே போச்சு..." என்றாள் அவளும் கோபமாக.

    அவள் சொல்லி முடிக்கும் முன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் புகழ், தன்னுடைய கையை முறுக்கி எதிரில் இருந்த ஆள் உயரக் கண்ணாடியில் குத்திவிட்டான். கண்ணாடி உடைந்து சிதறியது. இரத்தம் பீறிட்டது. கையை உதறினான். அறை முழுவதும் இரத்தமாக மாறியது.

    "ஐயோ... என்ன பண்ணிட்டிங்க... " என்று பதறி அவனுடைய கையை பிடிக்க முயன்றாள் நிரஞ்சனி.

    "கைய விடு... நகரு..." அழுத்தமாக சொன்னான்.

    "ஐயோ... ரெத்தம் இப்படி கொட்டுதே... கைய குடுங்க..." என்று பதறி அவன் கையை மீண்டும் பிடிக்க முயன்றாள்.

    "நகரு முதல்ல... " என்று கடுப்புடன் சொல்லி அவளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, கையில் வடியும் இரத்தத்தோடு கார் சாவியை தேடி எடுத்துக் கொண்டு, அங்கே பதறியபடி நிற்கும் நிரஞ்சனியை கண்டுக்காமல் வெளியே சென்றுவிட்டான்.

    "தனியா போகாதிங்க... ப்ளீஸ்... நானும் வர்றேன் ஹாஸ்ப்பிட்டல் போகலாம்..." என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்த நிரஞ்சனியை அவன் பொருட்படுத்தவே இல்லை.

    இது அனைத்தும் அவனுடைய அறையில் நடந்தது. அண்ணி அவர்களுடைய அறையில் இருந்தாள். அவளுக்கு எதுவும் தெரியவில்லை.

    "தனியா போகாதிங்க... தனியா போகாதிங்க..." என்று நிரஞ்சனி அழுது கொண்டே சொல்லவதை கேட்டு அவளுடைய அறையிலிருந்து நயந்தி வெளியே வரும் போது புகழேந்தியின் கார் வெளியே கிளம்பியது...

    "என்ன ஜெனி... தம்பி ஏன் கோவமா போகுது..?"

    "அக்கா... அக்கா.. அவர் கைல அடி பட்டிருக்குக்கா... நிறைய ரெத்தம் போயிக்கிட்டு இருக்கு... அந்த கையோட கார் டிரைவ் பண்ணிக்கிட்டு தனியா போறாரே... மயக்கம் வந்தா என்ன செய்வாருக்கா... பயமா இருக்கு... எங்க போறாருன்னு தெரியலையே..." என்று அழுதாள் நிரஞ்சனி.

    "சரி... சரி... ஒன்னும் இல்ல... மருத்துவமனைக்கு தான் போகும். பெரிய அடியா இருக்காது. நீ கவலைப் படாத... நாமளும் ஆட்டோ பிடிச்சு மருத்துவமனைக்கு போயி பார்க்கலாம்..." என்று சொல்லி நிரஞ்சனியை சமாதானம் செய்த நயந்தி ஆட்டோ வர சொன்னாள். இருவரும் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிரஞ்சனி தானாகவே புகழேந்தியிடம் வந்து "எங்க வீட்டுக்கு யாரையாவது வந்து பேச சொல்லுங்க..." என்று சொன்னாள்.

    ஆனால் புகழ் அதை கண்டுக்காமல் இருந்தான். நிரஞ்சனி அவனிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கூத்தாடி அவனை சமாதானம் செய்து அவளுடைய வீட்டிற்கு சம்மந்தம் பேச வர சொன்னாள்.

    நிரஞ்சனியின் தாய்க்குத் தான் முதலில் விஷயம் தெரிந்தது. புகழேதியின் அண்ணன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் வேம்பங்குடி. அந்தப் பெண்தான் தாமரையிடம் பேசியது. தாமரைக்கும் மாப்பிள்ளை டாக்டர்... நல்ல வசதி... என்றதும் சம்மதம் போல் தோன்றியது.

    நிரஞ்சனியை தனியாக அழைத்து விசாரித்தார். அவளும் தயங்கித்தயங்கி உண்மையை சொல்லி முடித்தாள். தாமரை கணவனிடம் பேசிவிட்டு அவருக்கும் சம்மதம் என்றதும் தன் அண்ணன் கோபாலனிடம் மறுநாள் போய் நின்றாள்.

    "அண்ணா... நம்ப ரஞ்சி வேலைபாக்குற ஆசுபத்திரில ஒரு டாக்டர் ராஞ்சிய பொண்ணு கேட்டு அனுப்பியிருக்காரு. நல்ல பையனாம். நம்ப தனத்து ஓப்படியா சொன்னா... நீங்க போயி ஒரு எட்டு பாத்துட்டு வாங்க... புடிச்சிருந்தா மேல பேசலா(ம்) " என்று சொன்னார்.

    கோபாலன் புகழேந்தியை சென்று அவனுடைய அண்ணன் வீட்டிலேயே பார்த்தார். அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

    "எனக்கு மாப்பிளையையும் உங்க குடும்பத்தையும் ரொம்ப பிடிச்சிருக்கு... நீங்க வந்து ஒரு தரம் பொண்ண பார்த்துடுங்க... மற்றதெல்லாம் பேசி முடிச்சிடலாம்" கோபாலன் மகிழ்ச்சியாக சொன்னார்.

    "பெண் புகழுக்கு தெரிந்த பெண் தானே... அதனால் பெண் பார்க்குற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். ஆனா அம்மா அப்பா நிரஞ்சனிய பார்த்தது இல்ல. அதனால அவங்க மட்டும் ஒரு தரம் வந்து பார்க்கட்டும்...." என்றார் புகழேந்தியின் அண்ணன்.

    "சரிங்க... தாராளமா வரட்டும்..."

    "உங்க சைடுல மற்ற எல்லாருக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் தானே...?"

    "அனேகமா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரிதான். எங்க ஊர் திருவிழா அடுத்த மாசம் வருது. திருவிழா கழிச்சு கல்யாணம் வச்சுக்குற மாதிரி இருக்கலாம்..." என்று அவர் ஆர்வக் கோளாறில் பேசிவிட்டு வந்துவிட்டார். அவர் செய்த ஒரு காரியம் அவனுடைய ஜாதியை கேட்காதது.

    'மாப்பிள்ளை வீட்டில் பெண் கேட்டு அனுப்புகிறார்கள். பெண்ணுடைய தாய் மாப்பிள்ளையை போய் பார்த்துவிட்டு வர சொல்கிறாள். அதற்கு பிறகு ஜாதி என்ன மாற்றமாக இருக்கப் போகிறது...? ஜாதியை தானே முதலில் விசாரிப்பார்கள். அது தெரியாமலா இருவரும் பேச்சு வார்த்தை வரை வந்திருப்பார்கள்...' என்று நினைத்து அவர் ஜாதியை பற்றி பேசாமல் வந்துவிட்டார். ஆனால் அதுவே பின்னாளில் மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.

    அது தெரியாமல் புகழேந்தி நிரஞ்சனியுடைய மாமா கொடுத்த உறுதியை நம்பி வீடெல்லாம் பார்த்து, நிரஞ்சனிக்கும் காட்டி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டான். அதுதான் முதல் பகுதியில் நிரஞ்சனியும் அவனும் வீடு பார்க்க சென்ற சமாச்சாரம்...

    இன்றைய கதை

    புகழேந்தியின் கார் வேம்பங்குடிக்குள் நுழைந்தது. இது தான் அவன் முதல் முறை அந்த ஊருக்குள் வருவது. அவனுடைய கற்பனையில் தோன்றியது போல் அந்த ஊர் பயங்கரமாக இல்லாமல் அமைதியாகவும் அழகாகவும் இருந்தது. அந்த ஊர் வயல் வெளியின் தென்றல் காற்று அவனுடைய வெம்மையான மனதையும் இதமாக வருடி குளிர்வித்தது.

    அமைதியான மனநிலையில் அவன் நிரஞ்சனியின் வீட்டை நோக்கி பயணம் செய்தான். சாலையில் ஜன நடமாட்டம் குறைவாக இருந்தது. எதிரில் தென்பட்ட ஒரு முதியவரிடம் காரை நிறுத்தி

    "தாத்தா... இங்க அரசு என்பவரின் வீடு எங்க இருக்கு...?" என்று கேட்டான்.

    "எந்த அரசு...? நடு வீட்டு அரசா.... மேலத்தெரு அரசா...?" என்று விளக்கம் கேட்டார் அந்த முதியவர்.

    என்ன சொல்வது..? அவனுக்கு என்ன தெரியும் அதை பற்றி...?

    "இராஜசேகரோட மாமனார் அரசு வீடு தாத்தா..." என்று பதில் சொன்னான்.

    "ஓ... மேலத்தெரு அரசு... நீங்க யாரு தம்பி...." என்று மேலும் விபரம் கேட்டார்.

    அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 'சொந்தகாரன் என்று நிச்சயம் சொல்ல முடியாது. அப்படி சொனால் என்ன சொந்தம் என்று விசாரிக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை...' என்று நினைத்தவன்

    "பழக்கப்பட்டவர் தாத்தா... ஒரத்தநாடு வந்தால் வீட்டுக்கு வர சொல்லியிருந்தார்... ஆனா வீடு எங்க இருக்குன்னு எனக்கு தெரியல..." என்று சொல்லி வைத்தான்.

    "அப்படியா தம்பி.... இந்த ரோட்டுல நேர போங்க.. சோத்தாங் கை பக்க(ம்) ஒரு புளிய மரம் வரு(ம்), அதுக்கு பக்கத்துல ஒரு மண் ரோடு போவு(ம்)... அதுல கார விடுங்க... நாலாவது வீடு தான் அரசு வீடு... கொள்ளைக்குள்ள இருக்கு(ம்)... ஓட்டு வீடு... பாத்து போங்க... தெரியலன்னா அந்த பக்க(ம்) சனங்களுகிட்ட கேளுங்க சொல்லுவாங்க..." என்று அவனுக்கு வழி சொல்லி அனுப்பி வைத்தார்.

    அவருடைய ஊர்காரனின் நண்பன் அவருக்கும் நண்பன் என்ற ரீதியில் அன்பாக பேசிய அந்த முதியவரின் மீது அவனுக்கு மரியாதை ஏற்பட்டது.

    அந்த முதியவரிடம் பேசும் போதே அவன் ஒன்றை உணர்ந்து கொண்டான். 'அந்த ஊரில் தனித்தோ இரகசியமாகவோ எதுவும் செய்ய முடியாது. எல்லோருக்கும் எல்லோரை பற்றியும் எல்லாம் தெரிந்திருக்கும் போல... பாவம் ஜெனி... ' என்று நினைத்துக் கொண்டான்.

    அந்த பெரியவர் காட்டிய வழியில் வதவன் நிரஞ்சனியின் வீட்டை நெருங்கிவிட்டான். ஆனால் அங்கு எந்த வீடு நிரஞ்சனியின் வீடு என்பது அவனுக்கு தெரியவில்லை. எல்லா வீடுகளுமே கொல்லைக்குள் தான் இருந்தது. ஒன்றிரண்டு வீட்டை தவிர அனைத்து வீடுகளுமே ஓட்டு வீடு தான். வீடுகள் அனைத்தும் அங்கும் இங்கும் இருந்ததால் எங்கிருந்து எண்ணிக்கையை ஆரம்பித்து நான்காவது வீட்டை கண்டு பிடிப்பது என்பதும் அவனுக்கு தெரியவில்லை.

    சற்று நேரம் குழம்பியபடி சாலை ஓரமாக வண்டியை நிருத்தியிருந்தவன் ஒரு நடுத்தர வயது மனிதர் தன் காரை கடந்து போவதை கவனித்தான். வேகமாக இறங்கி

    "சார்... ஒரு நிமிஷம்..." என்றான்

    அந்த மனிதர் திரும்பி புகழேந்தியை பார்த்தார். இருவருக்குமே ஆச்சர்யம். அந்த மனிதர் அரசு...

    புகழேந்தியை பார்த்ததும் அரசுவின் கண்கள் கோவத்தில் கோவை பழமென சிவந்தன.

    நாடு ரோட்டிலேயே ராசாபமாக போகிறது என்று நினைத்தான் புகழ்.

    "சார்... உங்கள பார்க்கதான் வந்தேன்... உங்களிடம் கொஞ்சம் பேசணும் " புகழ் அமைதியாக சொன்னான். அவன் குரலில் பதட்டமோ பயமோ சிறிதும் இல்லை. அதே சமயம் அலச்சியமும் இல்லை.

    "வாங்க வீட்டுக்கு போயி பேசலாம்... எம் பின்னாடியே கார எடுத்துகிட்டு வாங்க..." என்று அவரும் அமைதியாகவே சொன்னார்.


    வீட்டை அடைந்து தோளில் இருந்த துண்டை எடுத்து திண்ணையை ஒருமுறை தூசு தட்டிவிட்டு அமர்ந்த அரசு புகழேந்தியை எதிரில் இருந்த நாற்காலியில் அமர சொன்னார்.

    "சொல்லுங்க என்ன சேதியா இந்த பக்கம் வந்திங்க...?"

    "உங்க பொண்ணு நிரஞ்சனியும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம்... அவளை பொண்ணு கேட்டு வந்திருக்கேன்." என்று கொஞ்சமும் தயங்காமல் சொன்னான்.

    "............." அரசு எதுவும் பேசாமல் அவனை பார்த்தார்.

    "உங்க பொண்ண எனக்கு கல்யாணம் செய்து குடுத்தீங்கனா அவள கடைசி வரைக்கும் கண் கலங்காம பார்த்துக்குவேன்" என்று உறுதியாக சொன்னான்.

    "ஹா... ஹா... ஹா..." அவன் பேசியதை கேட்டு 'கட கட' வென சிரித்தார் அரசு.

    புகழேந்திக்கு அவர் ஏன் சிரிக்கிறார் என்று புரியவில்லை. சிரிப்பை நிறுத்திவிட்டு அவரே பேச்சை ஆரம்பித்தார்.

    "இது தான் ஆம்பளைக்கு ஆழகு... நாங்கெல்லாம் கலையானத்துக்கு சாதிய ரொம்ப முக்கியமா பார்ப்போம்... ஏன்னு தெரியுமா உங்களுக்கு...?"

    "..........." புகழேந்தி எதுவும் பேசாமல் அவரை பார்த்தான்.

    "நம்ப சாதிக்காரன் தான் நம்பளுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குவான். நம்பளோட பழக்க வழக்கமெல்லாம் அவனுக்கு தான் ஒத்து போகும்... நா சொல்றது புரியுதா இல்லையா...? "

    "ம்ம்... புரியுது சொல்லுங்க... எதுல நான் உங்களோட ஒத்து போகணும் ?"

    "ஹா.. ஹா..." திரும்ப சத்தமாக சிரித்தார்.

    "அதெல்லாம் சொல்லி வரக் கூடாது தம்பி... தானா வரணும்... ஆனா உங்களுக்கு எங்க எங்க சனங்களோட குணம் இருக்கு..." என்றார்.

    புகழேந்திக்கு பளிச்சென்று மனதில் ஒரு மகிழ்ச்சி... 'இவர் என்ன சொல்றார்...'

    "நீங்க என்ன சொல்றீங்க...?"

    "ஆம்பளன்னா என்ன தெரியுமா...?" என்று கேட்டவர், தன் நெஞ்சில் 'தடார் தடார்' என்று இரண்டு முறை அடித்து காண்பித்து

    "வீரம்.... வீரம் தான் ஆம்புள... வீரம் தான் வேணும் ஆம்பளைக்கு... நா சொல்றது புரியுதா இல்லையா...? " என்றார்.

    "ம்ம்... புரியுது... சொல்லுங்க..." என்றான் அமைதியாக

    "வீர்ம்ன்னா என்ன சொல்லுங்க பாப்போம்..." என்றார்.

    "............"அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவரை பார்த்தான்.

    "ஒரு ஊரையே தொணைக்கு அழைச்சுகிட்டு ஒருத்தன எதுக்குறது வீரமா...? சொல்லுங்க பாப்போம்...."

    "................."

    "ஊரையே எதுத்து ஒத்தையாளா வந்து நிக்கிறீங்க பாருங்க... இது வீரம்..."

    ".................."

    "வீரம் மனசுல இருக்கணும்... தைரியம் தான் மொத வீரம்... நா சொல்றது புரியுதா இல்லையா...?"

    "ம்ம்ம்...." அவனுக்கு குழப்பமாக இருந்தது. 'எவ்வளவு சீரியசான மேட்டர் பேச வந்தா இந்த ஆள் 'வீரத்த பத்தி பேசி புரியுதா இல்லையா... புரியுதா இல்லையான்னு' கழுத்த அருக்குறாரே....' என்று நினைத்து நொந்து கொண்டான்.

    "எங்க ஊர பத்தி தெரிஞ்சும் பயம் இல்லாம ஊருக்குள்ள வந்து என்னுகிட்டையே பொண்ணு கேக்குறீங்களே... இது வீரம்...." என்றார்.

    ".................."

    "அச்சம் என்பது மடமையடா....
    அஞ்சாமை திராவிடர் உடமையடா...
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா ... " அவர் பாடலை சத்தமாக பாடினார்.

    இப்போது புகழேந்திக்கு தெளிவாக புரிந்து விட்டது. 'ஐயோ இந்த ஆள் கண்ணு சிவதிருந்தது கோவத்தில் இல்லையா..? குடிச்சிருக்கார்......! போதையில இருக்கவர்கிட்டையா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கேன்.... கடவுளே...' என்று கடவுளை துணைக்கு அழைத்தான்.

    "....................." அவன் குழப்பமாக அவரை பார்த்தான். அவனை பொறுத்தவரை பைத்தியகாரனிடம் பேசுவதும் குடிகாரனிடம் பேசுவதும் ஒன்று தான். இருவருக்குமே சுய நினைவு கிடையாது.

    "என்ன அப்புடி பாக்குறீங்க...? அந்த காலத்துலயே தலைவர் பாடி வச்சுருக்காரு...."

    "......................"

    "அஞ்சாமை திராவிடர் உடமை.... திராவிடர்ன்னா எப்புடி இருப்பாங்க தெரியுமா...?"

    "........................."

    "கருப்பா, குட்டையா, சப்ப மூக்கோட இருக்கவ(ன்) தான் பழங்கால திராவிடர்ன்னு சொல்லுவாங்க... என்ன... என்ன...? என்ன அப்படி பாக்குறீங்க...? இந்த காட்டுப்பயளுக்கு எப்புடி இதெல்லாந் தெரியுமுன்னு சந்தேகப் படுறீங்களா...? புத்தகம் படிச்சாதா(ன்) விவரந் தெரியனுமுன்னு இல்ல... கேள்வி ஞானமு(ம்) போது(ம்)... புரியுதா இல்லையா...?"

    "ம்ம்ம்ம்...."

    "என்ன சொன்னே.... ஆங்... திராவிடர்கள்... நம்மல்லாந் திராவிடர்கள் தா(ன்).... ஆனா நா எப்புடி இருக்கேன்...? உயரமா இருக்கேன். எம் பொண்ணு எப்புடி இருக்கு...? செவப்ப இருக்கு. நீங்க எப்புடி இருக்கீங்க...? செவப்பும் இல்லாம கருப்பும் இல்லாம கூர் மூக்கோட இருக்கீங்க. அப்பா நம்பெல்லாம் திராவிடர் இல்லையா...?"

    "..................."

    "சொல்ல முடியலைல்ல.... பதில் சொல்ல முடியலைல்ல... ஹா... ஹா... கலப்பு நடந்துருச்சு தம்பி.... எப்பையோ... எத்தன ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியோ கலப்பு நடந்துரிச்சு... இப்ப போயி நீ வேற சாதி நா வேற சாதின்னு குருட்டு தனமா நம்புறவ(ன்) நா இல்ல... நா சொல்றது புரியுதா இல்லையா...?"

    "ம்ம்.. சொல்லுங்க...." அவன் விதியே என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

    "ஆனா நம்ப பழகக்க வழக்கமு(ம்) குணமு(ம்) நம்மள சேர்ந்தவங்களுக்கு இருக்குமுங்குறது உமையா இல்லையா...?"

    "ஆமா... உண்மை தான்..."

    "ஆனா... அது உங்களுக்கும் இருக்கு(ம்) போது உங்களுக்கு பொண்ணு குடுக்க நா எதுக்கு தயங்கணும் சொல்லுங்க.....?"

    'இவர் பேச்சை எப்படி நம்புவது....? குடிச்சுட்டு உளறிக்கிட்டு இருக்கார். 'டோட்டலி வெஸ்ட் ஆஃப் டைம்' ' என்று நினைத்தவன் வீட்ல வேற யாரும் இல்லையா...? நான் பேச வந்ததை நாம பேசலாம். உங்க மனைவி அல்லது உங்க மருமகனை கூப்பிடுங்க" என்றான்.

    "ஏன்... என்ன பாத்தா மனுஷனா தெரியலையா...? புரியுது... குடிச்சுட்டு பேசுறேன்னு நெனைக்கிறீங்க... அதுதானே..." என்றார் அரசு

    "ஆமாங்க...' என்றான் அவன் தயங்காமல்

    "குடிக்கிறவனுக்கு தான் ஊர எதுத்து நிக்கிற தைரியம் வரும்... புரியுதா இல்லையா....?"

    "..............." அவன் அவரை விசித்திர பிறவியை பார்ப்பது போல் பார்த்தான்.

    அவர் 'கட கட' வென சிரித்துவிட்டு "அவங்க எல்லாரும் உங்க காதலியோட கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க காலையிலேயே அஞ்சு மணிக்கெல்லாம் திருபுவனத்துக்கு கெளம்பிட்டாங்க. ரஞ்சிய அவங்க மாமா வீட்டுல விட்டுட்டு போயிருக்காங்க.. நீங்க கொஞ்ச நேரம் இங்க உக்காந்துருங்க... புரியுதா இல்லையா...? எதுவும் யோசிக்க கூடாது... புரியுதா இல்லையா...? நா இப்ப வர்றேன்..." என்று சொல்லிவிட்டு திண்ணையிலிருந்து வீட்டிற்குள் சென்றார்.

    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-11.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  3. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 20

    புகழேந்திக்கு தன் நிலையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை. இவரோடு பேசுவது பயனில்லாத ஒன்று தான். ஆனால் இவரிடம் ஆரம்பித்தால் தான் மற்றவர்களை நெருங்க சுலபமாக இருக்கும் என்று நினைத்து அரசுவின் ரம்பத்தை பொறுத்துக் கொண்டான்.

    சிறிது நேரத்தில் குளித்து முடித்து திருநீர் பட்டையுடன் வந்தவர்
    "கெளம்புங்க... ஒரத்தநாடு வரைக்கும் போகணும்... " என்று புகழேந்தியை பார்த்து சொன்னார்.

    அவனும் மறு பேச்சின்றி காரை எடுத்தான்.

    ஒரத்தநாட்டில் ஒரு துணி கடை முன் காரை நிறுத்த சொன்னவர் நிரஞ்சனிக்கும் புகழேந்திக்கும் புது துணி எடுக்க சொன்னார். அவனுக்கு ஒரு இன்பமான குழப்பம். இருந்தாலும் அவர் சொல்வதை தட்டாமல் கேட்டான்.

    நகைக்கடைக்கு அழைத்து சென்று தாலி வாங்க சொன்னார். மற்ற சாமான்களை எல்லாம் அவர் அவருடைய பணத்தில் வாங்கினார்.

    "வரும் போது ஒரு கோயில் காமிச்சேனே... அந்த கோயிலுக்கு காரை விடுங்க..."

    அவன் கோவிலில் கொண்டு போய் காரை நிறுத்தினான்.

    "இன்னிக்கே கல்யாணம் பண்ணி ரஞ்சிய உங்களோட அழைச்சுகிட்டு போறதுல உங்களுக்கு சம்மதம் தானே...?"

    அரசுவின் நடவடிக்கையை வைத்து அவர் திருமணத்திற்கு தான் ஏற்பாடு செய்கிறார் என்பதை புரிந்து கொண்டாலும், அவர் வெளிப்படையாக சொல்வதை கேட்டு நெகிழ்ந்த புகழ் அவர் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டான்.

    அவனுடைய அந்த செய்கையில் அரசுவும் நெகிழ்ந்தார்.
    "இங்கயே இருங்க... இன்னும் ஒரு மணி நேரத்துல திரும்ப நான் இங்க வர்றேன்..." என்று சொல்லிவிட்டு வேக நடையுடன் அவர் அங்கிருந்து சென்றார்.

    மாமன் வீட்டு வாசலில் காய வைக்கப்பட்டிருந்த நெல்லை காக்கையிடமிருந்து பாதுகாக்க வேண்டி, காவலாக மரநிழலில் அமர்ந்திருந்த நிரஞ்சனி, வேர்க்க விருவிருக்க தன் முன் வந்து நிற்கும் தந்தையை ஆச்சர்யமாக பார்த்தாள்.

    "என்ன பாக்குற... கெளம்பு...?"

    "எங்க...?"

    "வீட்டுக்கு தான்...?" மற்றவர்களுக்கு இப்போதைக்கு எந்த விபரமும் தெரிய வேண்டாம் என்று நினைத்தவர் எதையோ சொன்னார்.

    "எதுக்கு...? அவங்க வந்துட்டாங்களா...?" அவள் தாமரையை அம்மா என்று அழைப்பதை தவிர்த்து 'அவங்க' என்று பொதுவாக சொன்னாள்.

    "வரல... வீட்டுல வேலை இருக்கு. நீ இப்ப கெளம்பி வா..."

    "சரி இருங்க... மாமிகிட்ட சொல்லிட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு மாமாவின் வீட்டிற்குள் சென்று மாமியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

    அப்போதே அவளுக்கு ஒரு சந்தேகம். 'இன்னிக்கு வயல்ல வேலை இல்ல... இந்நேரத்துக்கு இவர் குடிச்சுட்டுள்ள இருப்பார். என்ன இன்னிக்கு வெள்ளையும் சொள்ளையுமா விபூதியெல்லாம் தூள் பறக்குது...!' என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் வாய் விட்டு எதுவும் கேட்கவில்லை.

    அரசு கோபாலன் வீட்டிலிருந்து நிரஞ்சனியை சைக்கிலில் அழைத்து சென்றார். அவர்கள் வீடு இருக்கும் தெருவைத் தாண்டி வந்ததும் நிரஞ்சனி கேட்டாள்,

    "வீட்டுக்கு போகாம எங்க போறீங்க....?"

    "வா சொல்றேன்...?"

    அதற்கு மேல் அவளும் எதுவும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை.
    சைக்கிள் அந்த விசாலமான கோவில் ஆளமரத்தை அடைந்ததும் சைக்கிளிலிருந்து கீழே இறங்கிய நிரஞ்சனி, கோவிலை நோக்கி நடந்தாள். அவளுக்கு இங்கு எதற்காக அழைத்து வரப் பட்டிருக்கிறோம் என்ற யோசனையெல்லாம் இல்லை. ஏதோ கால் போன போக்கில் கோவிலை நோக்கி நடந்தவள் நெஞ்சுக்குள் ஒரு மின்னல் பாய்ந்ததை உணர்ந்தாள்.

    'யார் அது கோவிலுக்குள்ள நிக்கிறது....? புகழா... புகழ் தானே...!' முதுகு காட்டி நிற்கும் அந்த மனிதனின் முகத்தை பார்க்கும் ஆவலில் வேக நடை போட்டாள்.

    அதே நேரம் அந்த மனிதனும் வாசல் பக்கம் தன் பார்வையை திருப்ப இருவருக்குள்ளும் இன்னதென்று சொல்ல முடியாத எண்ண அலைகள்....

    மகிழ்சியா.... துக்கமா...!? ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்துவிட்ட மகிழ்ச்சியை தாங்க முடியாத துக்கமா...! அல்லது விதி தங்கள் வாழ்க்கையில் ஆடிய ஆட்டம் முட்டிந்துவிட்டது என்ற மகிழ்சியை நம்ப முடியாத துக்கமா...!

    வேக நடையுடன் வந்த நிரஞ்சனியும் சரி... பார்வையை திருப்பிய புகழேந்தியும் சரி... ஒருவரை ஒருவர் பார்த்த நொடியில் சிலையாக சமைந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் சிலை அல்ல... உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை மெய்பிக்க இவருடைய கண்களிலும் கண்ணீர் ஊற்றெடுத்தது.

    துன்பத்தையும் மகிழ்ச்சியையும் தனித்தனியாக தாங்கிய நிரஞ்சனி, தற்போது தன் மனதில் ஏற்ப்பட்டுள்ள விசித்திரமான... என்னவென்று அவளுக்கே புரியாத உணர்வை தாங்க முடியாமல், கோவில் வாசலில் வெட்டவெளியில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள்.

    அவளுடைய நிலையை புரிந்து கொண்ட புகழ், தன்னை சுதாரித்துக் கொண்டு வேகமாக வெளியே ஓடி வந்தான்.

    "ஜெனி... ஜெனி... என்ன... என்ன ஆச்சு...?"

    "நீ.. நீங்க... நீங்க...!" அவள் பேச முடியாமல் தவித்தாள்.

    "நான் தான்... எந்திரி முதல்ல... உள்ள வா..."

    அவளை கை தாங்களாக எழுப்பி கோவிலுக்குள் அழைத்து சென்றான். காரில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து அவளுக்கு கொடுத்து தண்ணீர் பருக வைத்தான். பின் நிதானமாக நடந்ததை அவளுக்கு விளக்கினான்.

    அதற்குள் நிரஞ்சனியை கோவிலில் விட்டுவிட்டு கோவில் வளாகத்திலேயே இருந்த ஐயர் வீட்டிற்கு சென்ற அரசு, ஐயரை அழைத்து வந்தார்.

    "இது தான் பையனும் பொண்ணுமா...? அம்மாடி இந்தா மணப்பெண் அறை சாவி... இந்தாங்க சார் நீங்களும் பிடிங்க... போயி தயாராயி வாங்க... பன்னிரண்டு மணிக்கு முகூர்த்த நேரம் முடியுது. அதுக்குள்ள நா இங்க தேவையானதை ரெடி பண்ணி வைக்கிறேன்... " ஐயர் பரபரப்பாக பேசினார்.

    சிறிது நேரத்தில் மணப்பெண்ணும் மணமகனும் தயாராகி அம்மன் சந்நிதானத்துக்கு வந்து விட, அதே நேரம் வெளியிலிருந்து பாட்டி பாக்கியத்தம்மாள் கோவிலுக்குள் வந்தார்.

    அவரை பார்த்த நிரஞ்சனிக்கு அதிர்ச்சி. அரசு அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்றாலும்
    'இவங்க எதுக்கு இப்போ இங்க வந்தாங்க...?' என்று நினைத்துக் கொண்டார்.


    கோவில் சாலையில் உள்ள மக்களிடம் வட்டி பணம் வசூல் செய்ய வந்த பாட்டி, அம்மனை தரிசிக்க கோவிலுக்கு வந்தார். கோவிலில் தன் பேத்தியையும் மருமகனையும் எதிர்பாராமல் சந்தித்த பாட்டிக்கு அங்கு என்ன ஏற்ப்பாடு நடந்து கொண்டிருக்கிறது என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடிந்தது.

    பாட்டியை பார்த்த நிரஞ்சனியின் கண்களில் கலக்கம் சூழ்ந்துவிட மீண்டும் அவள் கண் கலங்கினாள்.

    "எதுக்கு இப்ப கலங்குற...? நல்ல காரியம் நடக்க இருக்கையில எதுக்கும் கலங்கப் புடாது... மூச்..." என்று வாயில் ஒரு வரலை வைத்து பேத்தியை எச்சரித்தவர் புகழேந்தியிடம் சென்று

    "அன்னிக்கு ஒரத்தநாட்டுக்கு வந்த பையந்தான நீ... அன்னிக்கே நீ இவள கட்டிக்க நேரடியா கேட்டுருக்க வேண்டியது தானே...?" ஏற்றார்.

    பாட்டி அடித்த அந்தர் பல்ட்டியில் அங்கிருந்த அனைவரும் அசந்துவிட்டார்கள்.
    "ஆத்தா... உனக்கு சம்மதமாத்தா...?" என்று நிரஞ்சனி பாட்டியை கட்டிக் கொண்டாள்.

    "எனக்கு என்னடி கண்ணு சம்மதம் வேண்டிக் கெடக்கு... சாவ போற கட்டைக்கு..." என்று கேட்டவர் பேத்தியை மனதார வாழ்த்தினார்.

    "சரி சரி இப்படி வந்து உக்காருங்கோ..." என்று சொன்ன ஐயர் புகழேந்தி மற்றும் நிரஞ்சனியின் திருமணத்தை பக்கியத்தம்மாள், அரசு மற்றும் அகிலத்தை ஆளும் ஆதிசக்தி மலையேரியம்மன் முன்னிலையில் சிறப்பாக நடத்தி வைத்தார்.

    கழுத்தில் தாலியை வாங்கிய நிரஞ்சனி தந்தையை நன்றியுடன் பார்த்தாள். 'பொறுப்பில்லாத மனிதன் என்று அனைவராலும் முத்திரை குத்தப்பட்ட மனிதன், தன் மகள் திருமணத்தை யாரையும் எதிர் பார்க்காமல் நடத்தி வைத்துவிட்டாரே...! மகள்கள் மீது பாசமே இல்லாதவர் என்று நினைத்தோமே... இவர் தான் சரியான நேரத்தில் மகளுக்காக தைரியமாக ஒரு முடிவை எடுத்துள்ளார். பாசம் இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தை இவரால் செய்ய முடியும்...? ' நிரஞ்சனி ஆச்சர்யப்பட்டாள். தன் தந்தைக்குள் இப்படி ஒரு உறுதியான மனிதன் இருப்பதை இன்று வரை அவள் அறிந்ததில்லை.

    சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனின் சுயரூபத்தை காட்டிக் கொடுக்கிறது. இதுவரை குடும்பத்தை தாமரை நல்லபடியாக பார்த்துக் கொண்டதால் தாமரையின் எந்த செயலிலும் அரசு தலையிடவில்லை. 'அவர் உண்டு அவர் வேலை உண்டு' என்று இருந்தார். ஆனால் தாமரை தவறான ஒரு முடிவை எடுத்திருந்த சமயத்தில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அதிரடியாக அவர் ஒரு மற்று முடிவை எடுத்துவிட்டார்.

    மணமக்கள் பாட்டியிடமும் அரசுவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள்.

    "மாப்ள உங்கள முறைப்படி நா வீட்டுக்கு அழைச்சுகிட்டு போகணும். ஆனா இப்போ என்னால அது முடியாது. எனக்கு ரஞ்சி மட்டும் பொண்ணு இல்ல... நீருவும் இருக்கு..."

    "புரியுது மாமா..."

    "வீட்டுல பேசி எல்லாரோட சம்மதமும் வாங்கி உங்க கல்யாணத்த நடத்த அவகாசம் இல்ல... அங்க நா பேச்ச ஆரம்பிச்சா எம் மூளையையே கலக்கி உங்களுக்கு எதிரா யோசிக்க வச்சிருவா எம் பொண்டாட்டி... அது தான் உங்க கல்யாணத்த உடனே முடிச்சிட்டேன்... " என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

    நிரஞ்சனியும் புகழேந்தியும் ஒரே நாளில் தங்களுடைய வாழ்க்கையில் நடந்தவிட்ட மாயாஜால மாற்றத்தால் இன்பக் கடலில் மிதந்தார்கள். அவர்களுக்கு வேறு எதுவுமே தேவைப்படவில்லை.

    "சீக்கிரமே பெரிய மாப்ளைய சமாதானம் பண்ணி உங்களுக்கு ஊர கூட்டி விருந்து வக்கிறேன்..." என்றார் அரசு.

    "சரி மாமா... நீங்க அடிக்கடி வீட்டுக்கு வாங்க. போன் பண்ணுங்க..." என்றான் புகழ்.

    "ரஞ்சி... புத்தியா நடந்துக்க ஆயி... எல்லாரு(ம்) கொஞ்ச நாளு கழிச்சு கூடிக்கலாம்... இப்ப நிம்மதியா உன்னோட குடும்பத்த நடத்து..." என்று பேத்திக்கு கன்னம் தொட்டு திருஷ்டி வழித்து புத்தி சொன்னார் பாட்டி.

    தனியாக வேம்பங்குடிக்கு வந்த புகழேந்தி தன் துணைவியுடன் தஞ்சைக்கு திரும்பினான்.

    "அடேய்.... சண்டாள பாவி... எம் பொண்ணுங்களோட வாழ்க்கைய கெடுத்துப் புட்டியேடா... நாசமா போறவனே... நா என்ன செய்யப் போறனோ தெரியலையே... ஐயேய்ய... ஐயேய்ய... சாதிகெட்ட பயலுக்கு பொண்ணு குடுத்துட்டானே.... நா என்ன செய்வே(ன்)...." என்று தாமரை அரசுவை காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

    திருபுவனத்திலிருந்து திரும்பியதும் பஸ் நிறுத்தத்திலேயே நிரஞ்சனியின் தீடீர் திருமண விஷயத்தை கேள்விப் பட்ட தாமரை அந்த நொடியிலிருந்து அரசுவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் பாக்கியத்தம்மாளையும் விட்டு வைக்கவில்லை.

    அவர்கள் இருவருமே தாமரையின் கோபத்தை பொறுத்துக் கொண்டார்கள். அரசு எதுவுமே பேசாமல் மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

    "ஏய் கெழவி.... நீ என்னா அந்த ஆளுக்கு கையாலா...? நீயுந்தா கோயில்ல இருந்தியா(ம்)... இப்ப ஒன்னுந் தெரியாத மாரி உக்காந்துருக்க... வயசான காலத்துல உனக்கு எதுக்குடி கெழவி புத்தி இப்புடி போவுது...?"

    "ச்ச ச்சை... நாய ஓடு அந்தண்ட.... நானும் பாத்துக்குட்டே இருக்கே(ன்)... நீயும் வந்து வீட்டுக்குள்ள நொழஞ்சதுலேருந்து பேசுற... பேசுற... நிறுத்தாம பேசிகிட்டே இருக்கியே...! என்னாடி பொம்புள நீ... ஒரு ஆம்புள எவளவு நேரந்தா(ன்) பொருப்பாறு...." என்று பாட்டி குரலை உயர்த்தினார்.

    "என்ன அடக்காத... இப்ப வருவானே வடக்கி தெருவா(ன்). அவனுகிட்ட உன்னோட பேச்சு தெறமைய காமி... பாவிகலா.. எம் பொண்ணுகள என்னுகிட்டேருந்து பிருச்சுபுட்டியளே... நீங்கெல்லாம் நல்ல கெதிக்கு போவியளா...?"

    "இந்தா..... இந்த பேச்செல்லாம் இங்க பேசப்புடாது... எங்களுக்கு விருப்பம்... நாங்க எம் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். உனக்கு புடிக்கலன்ன நீ ஒதுங்கிக..." சட்டமாக சொன்னார் பாட்டி.

    "எம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நீ யாருடி கெழவி...?"

    "உம பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நா ஆளு இல்ல... அதே மாரி எம் மருமொவன் அவரு மவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. அத கேக்க நீ ஆளு இல்ல."

    "இப்புடி மானங்கெட்ட பொழப்பு பொழக்க நாண்டுகிட்டு சாவலாம்... து " என்று தாமரை வெறுப்பை உமிழ

    தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்த மிக சிரமப்பட்டு எழுந்து குச்சியை கையில் எடுத்துக் ஊன்றிக் கொண்டு மெதுவாக நடந்து வாசல் பக்கம் போய் கொட்டகையில் இருந்து ஒரு கயிறை கொண்டு வந்து தாமரைக்கு முன் போட்ட பாட்டி

    "இந்தா கெடக்கு கயிறு... போயி மாமரத்துல தொங்கு.... எங்களுக்கு வெக்கமா இல்ல... நாங்க இருக்குறோம். வெக்க படுற நீ போயி தொங்கு..." என்று சொன்னார்.

    பாட்டியின் அழுத்தமான பேச்சில் விக்கித்த தாமரை


    "அடியே கெழவி... மருமகனுக்காவ மகளை கொல்லப் பாக்குறியே... நீயெல்லாம் ஒரு அம்மாவாடி....?"

    "ஏண்டி...? நீ உம் மருமவனுக்கு ஏத்துகிட்டு உம் மவள சாவ சொல்லலாம்... நா எம் மருமவனுக்கு ஏத்துகிட்டு எம் மவள சாவ சொல்லக் கூடாதா...?"

    "பேசுடி... நல்லா பதிலுக்கு பதிலு பேசு...! அவ தப்பு பண்ணினா... அதுனால சாவ சொன்னேன். அதுக்காவ என்னையும் சாவ சொல்லுவியா...?"

    "அவ பண்ணுனது உனக்கு தப்புன்னா... நீ பண்ணுறது எனக்கு தப்பு..."

    பாட்டி சரியாக தாமரைக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க, பாட்டியை வாயில் மிஞ்ச முடியாத தாமரை வேறுவிதமாக தனது தாக்கலை ஆரம்பித்தாள்.

    "நீ எதுக்கு இங்க உக்காந்துருக்க...? கெளம்பு மொதல்ல உன் வீட்டுக்கு..."

    "நா எதுக்கு போவனும்..? நா போனோன எம் மருமவன பட்டினி போட்டு கொள்ளலாமுன்னு பாக்குறியா? அதுதான் நடக்காது. இது எம் மருமவன் வீடு. நா இங்க தான் இருப்பேன். நீ வேணுமுன்ன கொப்பமுட்டுக்கு(அப்பாவின் வீட்டுக்கு) போ..." என்று சொல்லிவிட்டு நடுவீட்டில் சட்டமாக கால்களை நீட்டி அமர்ந்து கொண்டார்.

    இராஜசேகரின் புல்லெட் சத்தம் வாசலில் கேட்டது. தாமரைக்கு குலை நடுங்கியது. மூத்த மகளின் வாழ்க்கை என்னவாகும் என்று நெஞ்சு படபடத்தது.

    வாசலில் நீரஜா மகனை கையில் வைத்துக் கொண்டு நிற்க, இராஜசேகர் புல்லெட்டை நிறுத்திவிட்டு இறங்கி மரத்தடியில் அமர்ந்திருக்கும் அரசுவை நோக்கி சென்றான். அவனை மற்றவர்கள் தொடர்ந்தார்கள்.

    "ரஞ்சி எங்க...? நா கேள்விப் பட்டதெல்லாம் உண்மையா...?" இறுகிய முகத்துடன் கேட்டான்.

    தாமரைக்கு உடல் நடுங்கியது. நீரஜாவிர்க்கு கண்களில் கண்ணீர் கொட்டியது. பாட்டி அலட்டிக் கொள்ளவில்லை. அரசு லேசாக தடுமாறினார்.

    "மாப்ள... நா சொல்றத கொஞ்சம் கேளுங்க..."

    "கேக்க தானே வந்து நிக்கிறேன்... சொல்லுங்க..."

    "அந்த பையன் வீட்டுக்கு வந்திருந்தாரு. முறையா என்னுகிட்ட பேசினாரு..."

    "நா மட்டும் என்ன முறைகெட்டா நடந்துகிட்டேன். நானும் உங்களுகிட்ட முறையா பேசிட்டு தானே மாப்ள பார்த்தேன். உங்க சம்மதத்தோட தானே கல்யாணத்தை நிச்சியம் பண்ணினேன்..."

    "அது சரி தான் மாப்ள..."

    அவன் கையமர்த்தி அவர் பேச்சை தடை செய்தான்.

    "உங்க பொண்ணு தானா திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டிருந்தாள்ன்னா, இந்நேரம் அவளுக்கும் அவ புருஷனுக்கும் பாட கட்ட ஏற்ப்பாடு பண்ணியிருப்பேன்... ஆனா தப்பு அங்க இல்ல... நீங்க ஏறுமாற இருக்கும் போது அவள சொல்லி தப்பு இல்ல..."

    ".........................."

    "இனி நா உங்களுக்கு மாப்ள இல்ல.. நீங்க எனக்கு மாமனாரு இல்ல... இன்னையோட உங்களுக்கும் எனக்குமான உறவு முரிஞ்சிடுச்சு..." என்று அரசுவிடம் சொன்னவன், நிரஞ்சனியின் பக்கம் திரும்பி

    "ஏய்... உனக்கு அப்பமுடு வேணுமா... நா வேணுமா... இப்பவே முடிவு பண்ணு..." என்றான். அவள் கொஞ்சமும் தயங்காமல்

    "நீங்க தாங்க வேணும்..." என்றாள். அவளை பொறுத்தவரை இந்த கேள்வியையாவது கேட்டானே. அவளிடம் எதுவும் கேட்காமல் அவளை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு செல்லாமல் இருந்தானே. அதுவே போதும் என்று நினைத்துக் கொண்டாள்.

    "அப்பன்னா கெளம்பு... இனி உனக்கு மேலத்தேருவே ஞாபகம் வரக் கூடாது..." என்று சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

    அன்றோடு தாமரையின் இரண்டு மகள்களுக்கும் தாமரைக்கும் இருந்த உறவு முறிந்தது.


    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-11.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  4. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 21

    ஓர் ஆண்டிற்கு பிறகு


    "என்னங்க...." காலையிலேயே ஏதோ வேலையாக தஞ்சாவூர் புறப்பட்டுக் கொண்டிருந்த இராஜசேகரிடம் பேச்சை ஆரம்பித்தாள் நீரஜா.

    "சொல்லு நீரு.... என்ன விஷயம்....?"

    "நா சொல்றத கேட்டு நீங்க கோவப்படக் கூடாது. "

    "அது நீ சொல்ற விஷயத்த பொருத்தது.... சீக்கிரம் சொல்லு வேலையிருக்கு " என்று அவளை அவசரப்படுத்தினான்.

    "அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லையாம். நா ஒரு தடவ போயி பார்த்துட்டு வந்துடறேனே..." அவள் கெஞ்சிக் கேட்டாள்

    "சரி... போயி பாரு. ஆனா திரும்ப வராத" அவன் சாதாரணம் போல் சொன்னான். கடந்த ஆறு மாதமாக அவளும் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவனும் சலிக்காமல் இதே பதிலை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

    நீரஜாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன.

    "ரஞ்சி போயி வருஷம் ஒன்னு ஆச்சு... அப்பா அம்மா தான் அவளோட தொடர்புல இல்லையே. அப்புறம் எதுக்கு அவங்களோட பேசக் கூடாதுன்னு சொல்லி இந்த கெடுபிடி பண்ணுறீங்க...?"

    இராஜசேகர் அவளை முறைத்துப் பார்த்தான்.

    "என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு. நா உன்னை போக வேண்டான்னு தடுக்கல. நீ போ... ஆனா திரும்பி இங்க வரவேண்டாம். நா மானம் ரோஷம் உள்ளவன்...."

    "அப்படின்னா நா என்ன ரோஷம் இல்லாதவளா..? எல்லாம் என் தலையெழுத்து... எங்க அம்மா உடம்பு சரியில்லாம இருக்கு. என்னால போயி பார்க்க முடியல. அம்மா என்ன தப்பு செஞ்சது? அதுக்கு எதுக்கு இப்படி தண்டனை குடுக்குறீங்க...?"

    "அவங்களுக்கு தண்டனை கொடுக்க நான் யாரு? எனக்கு அங்க போக வர பிடிக்கல நான் அவங்களோட தொடர்பு வச்சுக்காம இருக்கேன். நீ என் பொண்டாட்டி... நா இருக்க மாதிரி தானே நீயும் இருக்கணும்? நீ எதுக்கு பிடிவாதம் பிடிக்கிற?"

    "உங்க அம்மாவும் உடம்பு சரியில்லாம படுத்தா அப்ப தெரியும் உங்களுக்கு, நா எதுக்கு பிடிவாதம் பிடிக்கிறேன்னு"

    "என்னடி வாய் நீளுது? எங்க அம்மாவுக்கு முடியாம போகனும்ன்னு நீ ஆசபடுரியா?" என்று நீரஜாவை முறைத்தான்.

    "அந்த மாதிரி ஆசையெல்லாம் உங்களுக்கு தான் வரும். எனக்கு எங்க அம்மாவ பார்க்கணும். ஆறு மாசமா உடம்பு முடியாம இருக்கவங்க பெத்த பிள்ளைகள பார்க்காம எவ்வளவு தவிப்பாங்கன்னு உங்களுக்கு என்ன தெரியும். அதெல்லாம் நீங்க அனுபவிச்சா தான் உங்களுக்கு தெரியும்."

    "ஏய் அதிகமா பேசின... பல்ல தட்டிடுவேன் ஜாக்கிரதை..."

    "ஆமா ஆமா... நீங்க தட்டுறதுக்கு தான் நா காலையிலேயே பல்லு வெளக்கிட்டு உங்களுகிட்ட வந்து நிக்கிறேன். தட்டுங்க... பல்ல தட்டுவாரம் பல்ல... " என்று அவள் கண்ணை கசக்கினாள்.

    "காலையிலேயே ஆரம்பிச்சுட்டா... இவளுக்கு இதே பொழப்பா போச்சு..." என்று அவன் அலுத்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

    ஒரத்தநாடு வந்து கொண்டிருக்கும் போது ஒரு கார் அவனை கடந்து ஒரத்தநாட்டை நோக்கி விரைந்தது.

    'வாடக கார் மாதிரி இருக்கு... இந்த நேரத்துல ஊருக்குள்ளேருது போகுது...!' என்று நினைத்துக் கொண்டே அவனும் ஒரத்தநாட்டை நெருங்கினான்.

    "என்ன ராஜசேகரு... மாமியார பார்க்க போறியா?" என்று ஒரத்தநாட்டிலிருந்து வேம்பங்குடிக்குள் செல்லும் ஒரு பெரியவர் கேட்டார்.

    "இல்லையே... அவங்களுக்கு என்ன...?" என்று கேட்டான்.

    "என்ன தெரியாதது மாதிரி கேக்குற...? காலையிலேயே ரொம்ப சீரியசா இருந்ததுன்னு ஒரத்தநாட்டுக்கு கொண்டு போனாங்க.. டாக்டர் பாத்துட்டு தஞ்சாவூர் கொண்டு போக சொல்லிட்டாராமே... இங்க பாக்க முடியாதுன்னு சொல்லிட்டா பொழைக்கிறது கஷ்டம் தான். ஆனா காரு தஞ்சாவூர் பக்கமா தான் போனுச்சு. "

    என்ன தான் வீம்பு பார்த்தாலும் ஒரு உயிர் ஆபத்தில் இருக்கு என்று தெரிந்ததும் அவனுக்கு மனம் அசைந்தது.

    "எந்த ஆசுபத்திரிக்கு போயிருக்காங்க?"

    "தெரியலப்பா... நீ போயி பாக்க போறியா? "

    "ம்ம்... ஆ..ஆமா... இல்... இப்ச்... அதெல்லாம் இல்லப்பா... சும்மா தான் கேட்டேன்" என்று குழப்பமாக அவருக்கு ஒரு பதிலை சொல்லிவிட்டு அவனுடைய வண்டியை தஞ்சாவூர் நோக்கி விட்டான்.

    ஏதோ ஒரு உந்துதலில் புல்லெட்டை அதி விரைவாக செலுத்தினான். அவன் மனம் முழுக்க நீரஜாவுடன் அவன் காலையில் பேசியது தான் நிறைந்திருந்தது.

    'ஒரு தடவ அவள போயி பார்க்க சொல்லியிருக்கலாமோ... இந்த அம்மாவுக்கு இப்ப ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்றது? அவங்களுக்கு உடம்பு முடியாம போயி இந்த ஆறு மாசத்துல நீரஜா, அவங்கள ஒரு தடவ போயி பார்க்க கிட்டத்தட்ட தினமுமே கேஞ்சுவாளே... தப்பு பண்ணிட்டோமோ...!' என்று பலவிதமாக யோசனை செய்து கொண்டே வண்டி ஓட்டியவன் ஒரத்தநாடு எல்லையை கடந்து தஞ்சாவூர் ரோட்டை அடையும் போது, அதே நேரம் மன்னார்குடி எல்லை முடிந்து தஞ்சாவூர் ரோட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் டாங்கர் லாரியை கவனிக்காததால் வண்டியின் வேகத்தை குறைக்காமலே சென்றான்.

    நொடி பொழுதில் இராஜசேகர் வண்டியும் டாங்கர் லாரியும் மோதியதில் லாரிக்கு எந்த சேதமும் இல்லை. லாரி இடித்த வேகத்திலேயே தஞ்சாவூர் நோக்கி பறந்துவிட்டது.

    ஆனால் இராஜசேகரின் வண்டி அடையாளம் தெரியாமல் நசுங்கிவிட்டது. லாரியில் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இராஜசேகர் சாலையோரம் இருந்த வயலில் விழுந்துகிடந்தான்.

    இராஜசேகர் நினைவிழக்காமல் இருந்தான்.
    "நான் சாகக் கூடாது... சாக மாட்டேன்... நீரு... நீரு... நான் வந்துடுவேன் நீரு... உன்ன பார்க்க வருவேன். நம்ம குழந்தைய பார்க்க வருவேன்.. நீரு... நீரு..." அவன் வாய்விட்டு பேசினான்.

    முதலில் முழுவதுமாக நினைவிழக்காமல் இருந்தவன் சில நிமிடங்களில் பார்வை மங்கலாவதை உணர்ந்தான். அவனுக்கு பயம் வந்தது.

    "ஐயோ கடவுளே... நான் வாழனும்... எனக்காக இல்ல. என் நீருக்காக... என் பையனுக்காக... "

    பார்வை மேலும் மங்கலானது.

    "ஐயோ காலைல நீரு அழுதாளே... காலையில மட்டுமா... இந்த ஆறு மாசமாவே தினமுமே அழுதுகிட்டு இருக்காளே... என்னால தான்... ஆண்டவா நான் செஞ்ச தப்பெல்லாம் மன்னிச்சுடு... இந்த ஒரு தடவ மட்டும் எனக்கு வாய்ப்பு குடு... என்னோட தப்பெல்லாம் சரி பண்ணிடுறேன்... நீரு... நீரு... அழாத நீரு... அழாத..."

    அவன் கண் முன் காட்சிகள் தெளிவில்லாமல் கலங்கலாக தெரிந்தன. சிறிது நேரத்தில் பார்வை சுத்தமாக மறைந்து இருள் சூழ்ந்தது.

    "என் தப்பெல்லாம் சரி பண்ண ஒரே ஒரு வாய்ப்பு குடு ஆண்டவா... அப்புறம் என்னை இந்த உலகத்திலேருந்து அழச்சுக்கோ.... இப்போ நா சாக மாட்டேன். என்ன காப்பாத்து... காப்பாத்து..." என்று முனகலாக பேசினான். பேசிக்கொண்டே முழுமையாக நினைவிழந்தான்.

    ---------------------------------------------------------------------------------------------------------------------

    "என்ன மிஸ்டர் இராஜசேகர்.... இப்போ எப்படி இருக்கு?" இராஜசேகர் மீண்டும் கண் விழித்து பார்க்கும் போது அவன் முன் ஒரு மருத்துவர் நின்று அவனோடு பேசிக் கொண்டிருந்தார்.

    அவனுக்கு ஆச்சர்யம்... "ஓ... நா சா..கலையா..?" முனகலாக வந்தது அவனுடைய வார்த்தைகள்.

    "உங்களுக்கு ஒன்னும் இல்ல.. யு ஆர் ஆல் ரைட்..." என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு போடப்பட்டிருந்த ட்ரிப்சில் ஒரு ஊசியை போட்டார்.

    அவன் கண்களை அந்த அறை முழுக்க சுழலவிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில் நீரஜா கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.

    "ஓகே மிஸ்டர்... ரெஸ்ட் எடுங்க... நா சாய்ங்காலம் வந்து பார்க்குறேன்..." என்று சொல்லிவிட்டு மருத்துவர் அங்கிருந்து அகன்றார்.

    "நீரு..." என்று அழைத்து அவளை கண்களால் சைகை சேந்து அருகில் அழைத்தான்.

    நீரஜா வேகமாக அவன் அருகில் வந்து "என்னங்க... ஏதாவது வேணுமா...? " என்று சொல்லி அவனது கையை பிடித்தாள்.

    "நா எப்படி இங்க...?"

    "ரெண்டு காலேஜ் பசங்க கொண்டுவந்து சேர்த்துட்டு எனக்கு போன் செஞ்சாங்க. உங்க போன்லேருந்து நம்பர் எடுத்தாங்களாம். சரி அது எதுக்கு இப்ப... கண்ண மூடி தூங்குங்க."

    "உங்க அம்மா எப்படி இருக்காங்க...?" அவனால் பேச முடியவில்லை. சிரமப்பட்டு அவளோடு பேசினான்.

    "தெரியலையே..." என்றாள் நீரஜா.

    "சரி நீ மட்டுமா இங்க இருக்க? இல்லங்க காசி பெரியப்பா, சின்னசாமி மாமா எல்லாரும் வெளிய தான் இருக்காங்க. உங்களோட ஒருத்தர் மட்டும் தான் இருக்க முடியும்."

    "ஓ சரி... நீ உங்க சித்திக்கு இல்லன்னா உங்க மாமாவுக்கு போன் போட்டு உங்க அம்மா எப்படி இருக்காங்கன்னு கேளு"

    "என்னங்க திடீர்ன்னு...?"

    "போன்ல பேசிட்டு, வெளிய இருக்க யாரையாவது இங்க என்னோட இருக்க சொல்லிவிட்டு நீ போயி உங்க அம்மாவை பார்த்துட்டு வந்துடு..."

    நீரஜாவுக்கு ஆச்சர்யம் சந்தோஷம் எல்லாம் ஒருசேர தோன்றியது.

    "இல்லங்க... உங்கள விட்டுட்டு நான் போக முடியாது. உங்களுக்கு சரியாகட்டும். நாம போயி பார்க்கலாம்" என்று அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு சித்தி அல்லிக்கு போன் செய்து தாமரை பற்றி விசாரித்தாள்.

    "சித்தி... நா நீரு பேசுறேன் சித்தி... அம்மா எப்படி இருக்கு?"

    "நீரு... நீ எப்படி இருக்க? மாப்ள எப்படி இருக்காரு? என்னடி ஆச்சு?"

    "அவரு நல்ல இருக்காரு சித்தி. இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு போயிடுவோம். கால்ல தான் நல்ல அடி சித்தி. மற்றபடி பயப்பட ஒன்னும் இல்ல."

    "அப்படியா...?"

    "ஆமா சித்தி... வயலுக்குள்ள விழுந்துட்டாரு. சேத்துல விழுந்ததால பெருசா ஒன்னும் இல்ல... ஆனா வண்டி நொறுங்கிட்டு... ஏதோ கடவுள் புன்னியத்துல இவரு தப்பிச்சதே பெரிய விஷயம் சித்தி."

    "சரி சரி... நாங்க வந்து பார்த்தா உனக்கு எதுவும் பிரச்சன வருமா...? உனக்கு துணையா அங்க யாரு இருக்கா?"

    "அதெல்லாம் இங்க ஆளுங்க இருக்காங்க சித்தி... அம்மா எப்படி இருக்கு?"

    "நா இங்க அக்காவோட தான் இருக்கேன் நீரு. ரோகினி மருத்துவமனைல தான் அக்கா இருக்கு... "

    இன்னும் ரெண்டு நாள் போகட்டும் சித்தி. நானும் அவரும் அம்மாவ பார்க்க வருவோம் சித்தி... "

    "அப்படியா... சந்தோஷம்டி... நீ வந்தா அக்காவுக்கு குணமானாலும் ஆயிடும்..." என்றாள் அல்லி மகிழ்ச்சியாக.

    ஆனால் அல்லியில் எதிர்பார்ப்புப்படி நீரஜாவின் வரவால் தாமரையின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை.
    சொன்னது போலவே இரண்டு நாள் கழித்து இராஜசேகரும் நீரஜாவும் தாமரையை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார்கள். இராஜசெகருக்கு முழுவதும் குணமாகவில்லை. அவன் சக்கர நாற்காலியில் தான் வந்தான். ஆனாலும் பிடிவாதமாக மாமியாரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தான்.

    "எப்படி இருக்கீங்க அத்த...?" என்று கிழிந்த நாராக கட்டிலில் படுக்கையில் இருக்கும் தாமரையிடம் கேட்டான்.

    தாமரைக்கு கண்களில் உயிர் இல்லை. நீரஜாவை பார்த்துவிட்ட மழிச்சி சுத்தமாக இல்லை. இராஜசேகருக்கு நடந்த விபத்து தெரிந்த பின்னும் அதை பற்றிய படபடப்பு இல்லை. ஏதோ கடமைக்கு பேசினாள்.

    "இருக்கேன்... நீங்க நல்லா இருக்கீங்களா...?"

    இராஜசேகருக்கு தாமரையின் விரகத்தி விசித்திரமாக இருந்தது.
    'இது என்ன இந்த அம்மா இப்படி இருக்காங்க... பொண்ண பார்த்த சந்தோசத்தையே காணுமே...!' என்று நினைத்துக் கொண்டான்.

    'ஒரு வேளை ரஞ்சிய நெனச்சு ஏங்கிகிட்டு இருக்காங்களோ...!' என்று யோசித்தான்.

    மரண தருவாயில் அவன் தான் செய்த தவறு என்று உணர்ந்தது நீரஜாவை அவள் பெற்றோரிடமிருந்து பிரித்ததை மட்டும் தான். ஆனால் இப்போது அவனுக்கு வேறு ஒன்று தோன்றியது...

    அவன் யோசனையிலேயே இருந்தான். தாமரையை பார்த்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறும் வரை அவன் எதுவும் பேசவில்லை. பலமான யோசனையில் இருந்தான். பின் டிரைவரிடம்

    "மங்களபுரம் போங்க...." என்று சொன்னான். நீரஜா அவனை குழப்பமாக பார்த்தாள். அவளுக்கு அவன் எத பதிலும் சொல்லவில்லை.

    மங்கலபுரத்தில் அந்த பெரிய வீட்டின் முன் கார் நின்றது. நீரஜாவிர்க்கு அது யார் வீடு என்று தெரியவில்லை.

    "ஏங்க... உடம்பு சரியில்லாம இருக்கும் போது எதுக்கு இப்படி அலையிறீங்க... வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடுத்தா தான் சீக்கிரம் குணமாக முடியும் மறந்துடீங்களா?"

    "இல்ல நீரு... மனசு அமைதியா இருந்தா தான் சீக்கிரம் குணமாக முடியும். நீ எதுவும் பேசாம என் பின்னாடி வா..." என்று சொல்லிவிட்டு டிரைவர் உதவியுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து அந்த வீட்டு வாசலுக்கு சென்றான்.

    நீரஜா அழைப்பு மணியை அடித்தாள். கதைவை திறந்த புகழேந்தியை அவள் அங்கு சிறிதும் எதிர் பார்க்காததால் அவளுக்கு ஏன் என்று தெரியாமல் உடல் நடுங்கியது.

    ஆனால் புகழேந்திக்கு அந்த கலக்கம் சிறிதும் இல்லை. அல்லது அதை சாமர்த்தியமாக மறைத்துவிட்டானா என்பதும் நீரஜாவிர்க்கு புரியவில்லை.

    "ஹலோ... வாங்க வாங்க... என்ன ஆச்சு... ஏன் கால்ல, கைல எல்லாம் கட்டு... வாங்க... உள்ள வாங்க... ஜெனி... யார் வந்திருக்காங்க பாரு..." என்று மிக மகிழ்ச்சியாக என்னவோ அவர்கள் வரபோவதை முன்பே அறிந்தவன் போல் பேசினான்.

    புகழேதியின் அந்த செயல் இராஜசேகரை மிகவும் வருத்தியது. புகழேந்தியின் நிலையில் தான் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நினைத்து பார்த்தான்.

    'எங்கடா வந்த... போடா வெளியே...' என்ற வார்த்தைகள் தான் தன்னிடமிருந்து வந்திருக்கும் என்பதை அவன் மனசாட்சிக்கு முன்
    ஏற்றுக் கொண்டான்.

    புகழேந்தியின் குரல் கேட்டு வெளியே ஓடிவந்து பார்த்த நிரஞ்சனிக்கும் நீரஜாவின் நிலை தான். அவளும் கால்கள் நடுங்க கதவை பிடித்துக் கொண்டு நின்றாள்.

    அவளுடைய கண்கள் நீரஜாவில் கையில் இருந்த தன் அக்காவின் குழந்தையின் மீது ஆவலுடன் பதிந்தது.

    "என்ன ரஞ்சி... வாங்கன்னு சொல்ல மாட்டியா...?" என்று இராஜசேகர் கேட்டது தான் தாமதம் , சட்டென பாய்ந்து நீரஜாவின் கையில் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு குழந்தைக்கு முத்தங்களை வாரி வழங்கியவள் அக்காவை கட்டிக் கொண்டாள். கண்களில் சகோதரிகள் இருவருக்கும் மடை திறந்தது.

    பின் உள்ள வாங்க என்று உள்ளே அழைத்து சென்றாள். அவளுக்கு படபடப்பில் எதுவும் புரியவில்லை. என்ன பேசுவது... எப்படி பேசுவது... எதுவுமே புலப்படவில்லை...

    "நா உகளுக்கு எவ்வளவோ கெடுதல் செஞ்சிருக்கேன். ஆனா அதை எல்லாம் ஒரு நொடியில மறந்துட்டு என்ன 'உள்ள வாங்கன்னு ' வீட்டுக்குள்ள கூப்பிடுவிடீங்க. உண்மையிலேயே நீங்க பெரிய மனுஷன்தாங்க... என்ன மன்னிச்சிடுங்க..." என்றான் இராஜசேகர் புகழேந்தியை பார்த்து.

    லேசாக சிரித்த புகழேந்தி " 'மன்னிக்கத் தெருஞ்சவன் மனுஷன்... மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்...' என்று விருமாண்டி படத்துல ஒரு வசனம் வரும். அது நூறு சதவிகிதம் உண்மை... நான் மனுஷன்... நீங்க பெரிய மனுஷன்... " என்றான்.

    இராஜசேகரின் மனதிலிருந்த பாரம் பாதி குறைந்துவிட்டது.

    "கேக்குறேன்னு தப்ப எடுத்துக்காதிங்க... என்ன திடீர்ன்னு ஆளே சுத்தமா மாறிட்டீங்க?"

    "அது ஒன்னும் இல்ல டாக்டர்... "

    "நீங்க புகழ்ன்னே சொல்லுங்க... நீங்களும் எனக்கு ஒரு அண்ணன் தான்."

    "அதுவும் சரிதான்... நூறு வருஷம் வாழ்ந்தாலும் கத்துக்க முடியாத பாடத்த, அடுத்த நொடி சாகப் போறோம் என்கிற மரண பயம் எனக்கு கத்து கொடுத்துடுச்சு."

    " மனுஷனோட வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. அடுத்த நிமிஷம் என்ன ஆவோம் என்று நிலையில்லாத வாழ்க்கை தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதனால வாழற இந்த நிமிஷத்த ஞாயத்தோட வாழனுமுன்னு தோணுது... அதோட நம்பளோட இந்த குறுகிய வாழ்க்கையில, எதுக்கு அவங்களோட பேச மாட்டேன்... இவங்களோட பேச மாட்டேன்னு வெட்டி வீராப்பு பிடிவாதம் எல்லாம்... "

    "வாழற வரைக்கும் யாரோடையும் எந்த மனகசப்பும் இல்லாம வாழ்ந்தா, போகும் போது ஏதோ ஒரு செயல அரை குறையா விட்டுட்டு போறமாதிரி தோணாம நிம்மதியா போக முடியும்..." என்றான்.

    இராஜசெகரின் இந்த மாற்றம் அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை அள்ளி வழங்கியது. அன்று முழுவதும் இராஜசேகர் புகழேதியின் வீட்டில் தான் இருந்தான். நீரகாவும் நிரஞ்சனியும் கடந்த ஒரு வருடத்தில் நடந்த சம்பவங்களை பேசி பேசி மாய்ந்தார்கள்.

    நிரஞ்சனி தாயின் நிலையை அறிந்து புகழேந்தியுடன் சென்று மருத்துவமனையில் தாமரையை பார்த்தாள்.

    ஒளியிழந்து சோர்ந்து காணப்பட்ட தாமரையின் கண்களில் நிரஞ்சனியை பார்த்ததும் ஜீவனும் மீண்டது கண்ணீரும் கோர்த்தது. மகளை தொட்டு தடவி பார்த்து மகிழ்ந்தாள். அன்றிலிருந்து தாமரையின் உடல் நிலையில் மாற்றம் ஏற்ப்பட்டது. சிறிது சிறிதாக முனேற்றம் தெரிந்தது.

    பதினைந்து நாட்களில் எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டாள்.
    அனைவரும் சமாதானம் ஆகிவிட்டது தெரிந்ததும் அரசு ஊரை கூட்டி விருந்து வைத்து நிரஞ்சனியையும் புகழேந்தியையும் வேம்பங்குடிக்கு அழைத்துவர நினைத்தார். அவர் நினைத்ததை இராஜசேகர் செய்து முடித்தான்.

    நிரஞ்சனி, புகழேந்தி, புகழேந்தியின் பெற்றோர் மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தபந்தங்கள் வேம்பங்குடிக்கு அழைத்துவரப்பட்டார்கள். ஊர் மக்கள் அனைவரும் இரஞ்சநியையும் புகழேந்தியையும் வந்து பார்த்துவிட்டு விருந்தில் கலந்து கொண்டார்கள்.

    "இந்த மப்பிளையையா வேண்டாமுன்னு இந்த தாமரைக்கா அந்த ஆட்டம் ஆடுனுச்சு..." என்று விருந்திற்கு வந்த பெண்களின் பேச்சு தாமரையின் காதில் விழுந்தது. தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினாலும் தன் மகளுக்கு அமைந்திருக்கும் வாழ்க்கையை நினைத்து பெருமை படாமல் இருக்க முடியவில்லை தாமரையால்.

    "அண்ணே... இந்த இலைக்கு ரசம் போடுங்க... தாத்தா... உங்களுக்கு என்ன வேணும்...?" என்று கேட்டு பந்தியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சுட்டிப் பையன் சாரதி அடிக்கடி புகழேந்தியின் கவனத்தை ஈர்த்தான்.

    "ஜெனி... அந்த பையன் யாரு...?"

    "எது... ஓ... அவனா... சாரதி... ஏங்க மாமா பையன்... உங்ககிட்ட சொல்லியிருக்கேனே..."

    "ஆமா... ஞாபகம் இருக்கு..." என்று சொன்ன புகழேந்தி மீண்டும் விருந்திற்கு வந்திருபவர்களை கண்களால் அலசினான்.

    அந்த ஊரில் தெரிந்தவர் தெரியாதவர்களை எல்லாம் சந்தித்துவிட்ட புகழேந்திக்கு அந்த விருந்தில் கோபாலனை பார்க்க முடியவில்லை.

    நிரஞ்சனியை அழைத்துக் கொண்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் கோபாலன் வீட்டில் இருந்தான்.

    புகழேந்தியை பார்த்ததும் கோபாலனின் கோபமெல்லாம் பறந்துவிட்டது. குடும்பத்தில் அனைவரும் விருந்திற்கு அழைத்தும் முறுக்கிக் கொண்டு வீட்டில் இருந்துவிட்ட கோபாலன் புகழேந்தி தன்னை தேடிக்கொண்டு தன் வீட்டிற்க்கே வந்துவிட்டதும் மகிழ்ந்து போய் விட்டார்.

    "மன்னிச்சுடுங்க சார்... அன்னைக்கு இருந்த மனநிலைல என்ன பேசுறோம் என்றே தெரியாமல் உங்ககிட்ட தப்ப பேசிட்டேன்..."

    "அத விடுங்க மாப்ள.. இங்க களத்துல நெல்லு கெடக்கு... அது தான் அந்த பக்கம் வரமுடியல... மத்த படி ஒன்னும் இல்ல..."

    "அதெல்லாம் இல்ல சார்... நீங்க விருந்துக்கு இப்போ வரணும்... உங்கள அழைச்சுகிட்டு போகத்தான் நாங்க வந்திருக்கோம்..."

    "ஆமா மாமா... கெளம்பி வாங்க..." என்று நிரஞ்சனியும் அழைத்தாள்.

    "அட என்ன மாப்ள நீங்க... சார்... மோர்ன்னு... உரிமையா சித்தப்பான்னு கூப்பிடுக... "

    "சரி சித்தப்பா... வாங்க..." என்று அவரை அழைத்துக் கொண்டு நிரஞ்சனியின் வீட்டிற்கு வந்தான்.

    "டேய் மாப்ள... என்னடா நீ பந்தி பரிமாரிகிட்டு இருக்க..."

    "ஏன் சுந்தரத்தான்... எங்க அத்தைக்கு நான்தானே பையன்... நாந்தான் எல்லாத்தையும் பார்க்கணும்."

    "அது எப்படி.. நாந்தான் எங்க சித்தப்பாவுக்கு பையன். நீ மருமகன் தானே... நீ விருந்தாளி தான். இங்க வா... இப்படி உக்காரு... நான் பரிமாருறேன்... நீ சாப்பிடு..."

    "என்னத்தா(ன்) நீ... எங்க அத்தைக்கு நா மருமகன் கிடையாது... பையன் தான்... நானெல்லாம் உக்கார மாட்டேன். நீ வேணுன்னா உக்காந்து மூக்க பிடிக்க சாப்பிடு... உனக்கு நானே பரிமருறேன்.

    "என்னாது... நா உக்காரனுமா... வடக்கி தெருவான் இங்க வந்து என்னையே உபச்சாரம் பண்ணுவியா...?" என்று கேட்டு அந்த சிறுவனிடம் சுந்தர் மல்லுக்கு நின்றான்.

    சாரதியும் விடாமல் சரிக்கு சரி பேசினான்.

    "ஆமா... அப்படி தான் நீ போ..."

    "என்னது நா போறதா... வடக்கி தெருவானுக்கு இருக்க உரிமை எனக்கு இல்லையா... இரு உங்க அப்பாவை கூப்பிட்டு ஞாயம் கேட்ப்போம்..."

    சாரதிக்கு பயம் வந்துவிட்டது. அப்பா கோபமாக வராமல் இடத்திற்கு அவன் மட்டும் வந்து உரிமைக்காக போராடிக் கொண்டிருப்பது தெரிந்தால் அவர் இவன் தோலை உரித்தாலும் உரித்துவிடுவார்.

    "என்னது.. அ..அப்பாவா.. அதெல்லாம் வேண்டாம்... இந்தா பிடி... இந்த சாம்பார் வாலி தானே உனக்கு வேணும்... நே வச்சுக்கோ..." என்று சொல்லிவிட்டு லேசாக கண் கலங்க மூக்கை விடைத்துக் கொண்டு விறைப்பாக செல்ல எத்தனித்தான் சாரதி.

    "என்னடா மாப்ள நீ... ம்...ங்குரதுக்குள்ள பொட்ட புள்ள மாதிரி கண்ண கசக்குற..." என்று மீண்டும் சுந்தர் சாரதியை சீண்ட,
    சாரதி சிலிர்த்தெழுந்தான்

    "என்னது... பொட்ட புள்ளையா... நா ஆம்பள சிங்கம்... அதுவும் வேம்பங்குடி சிங்கம் தெரியுமுல்ல... கொண்டா அந்த சாம்பார் வாலிய... நீ போயி எங்க அப்பா... தாத்தா... பாட்டன்... எல்லாரையும் ஞாயம் கேட்டுகிட்டு இரு..." என்று படபடத்துவிட்டு சாம்பார் வாலியை சுந்தரிடமிருந்து பிடுங்கிக் கொண்டான்.

    சிறுவனின் செயலை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள். அப்போதுதான் அங்கு வந்த கோபாலனும் சிரித்தார்.

    "எப்பா... தங்கச்சி வீட்டு விருந்துக்கு வர்ற நேரமா இது... வாப்பா இங்க..." என்றான்.

    "ஆமா மாமா... வந்து இந்த இலையில உக்காருங்க ..." என்று சொல்லி அவருக்கு ஒரு இலையை காட்டினான் சுந்தர்.

    அவர் அருகில் வந்ததும் "எப்பா... எப்பா.... எங்க வந்தோன இலைக்கு போற... இந்த சாம்பார் வாலிய பிடி..." என்று வாலியை அவரிடம் கொடுத்துவிட்டு

    "அத்தாச்சி... மாப்ள... சின்ன அத்த... பெரியத்த... சின்ன மாமா... பெரிய மாமா... ஆத்தா... அம்மா... எல்லாரும் வந்து உக்காருங்க.... விருந்துக்கு வந்தவங்கள்லாம் சாப்பிட்டாச்சு. இனி நம்மதான் பாக்கி.... எல்லாருக்கும் அப்பா பரிமாறட்டும் " என்று சொல்லி அனைவரையும் பந்தியில் அமரவைத்து அவனும் ஒரு இலையில் அமர்ந்து கொண்டான். சுந்தரும் கோபாலும் மற்றவர்களுக்கு பரிமாறினார்கள்.

    "மாப்ள... நீங்க வீட்டுக்கு வந்து கூப்பிடோன விருந்து சாப்பிட தான் கூபிடுரீங்கன்னு நெனச்சு வந்தேன். ஆனா இங்க வந்ததுக்கு பிறகு தான் தெரியுது... நீங்க எதுக்கு அவ்வளவு சிரமப்பட்டு வந்து என்ன அழைச்சுகிட்டு வந்தீங்கன்னு..." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

    "மாமா நா யார வேணுன்னாலும் நம்புவேன்... ஆனா... இத குட்டி சாத்தான மட்டும் நம்ப மாட்டேன். இவ்வளவு நேரம் நான் இவன சாப்பிட சொல்லி பிடிவாதம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்பெல்லாம் சாப்பிட மாட்டேன்னு சொல்லிபுட்டு... இப்போ எல்லாரையும் பந்தில உக்காரவச்சு அவனும் உக்காந்துகிட்டு வெவரமா என்ன மட்டும் கழட்டி விட்டுட்டான்..."

    அனைவரும் அவன் பேசுவதை கேட்டு சிரித்தார்கள். அனைவருடைய மனத்திலும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது... இனி வரும் காலம் அந்த குடும்பத்திற்கு மகிழ்ச்சியை மட்டுமே அள்ளி கொடுக்கும்...

    சுபம்​
    [/JUSTIFY]
     
    4 people like this.
  5. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    அன்பு தோழிகளுக்கு,

    இந்த கதையை பொறுமையாக படித்து கருத்து சொன்ன தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல... :)
     

Share This Page