1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

புத்தாண்டே வருக! புது வாழ்வு தந்திடுக!!

Discussion in 'Regional Poetry' started by Rrg, Jan 1, 2019.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    புத்தாண்டே வருக! புது வாழ்வு தந்திடுக!!

    ‘பட்டாடை கட்டி, பல வண்ண மலர் சூடி, புன்முறுவல் பூத்து, பையவே நடந்து வாயிற்
    படியருகில் வந்து நிற்கும் பெண்ணணங்கே நீ யாரோ?’ (என வினவுங்கால்)
    “புத்தாண்டு நான் தான்; (உலகிற்கு) புதுப் பொலிவு தர வந்தேன்.
    வேண்டியதைக் கேள், விரைந்தளிப்பேன்” எனப் புகன்றாள்.

    அவள் அழகோ தனியழகு; அங்கமெல்லாம் தங்க மழை
    புன் முறுவல் பூக்கையில் பற்களெல்லாம் மல்லிகைப் பூ,
    சிவந்த விரல்களிலோர் சிலிர்க்கவைக்கும் பொற்கூடை
    “அமுதசுரபி இது“ (என) அன்போடு வழி மொழிந்தாள்.

    புத்தாண்டைக் கண்டதுமே புல்லரித்துப் போனேன் நான்.
    “புத்தாண்டே வருக! புது வாழ்வு தந்திடுக.
    உன்னாண்டில் எதிர்பார்ப்போ ஏராளம், ஏராளம்.
    அத்தனையும் தந்திடுமோ உன் அமுதசுரபி?” என்றேன்.
    “கேட்டுத்தான் பாரேன். கொடுப்பவை நானுரைப்பேன்”

    ‘அமைதி நாட்டில்’ என்றேன் நான் - ‘அமைந்து விடும் பார்’ என்றாள்.
    ‘ஆனந்தம்’ என்றேன் - ‘ஆகி வரும்’ எனப் புகன்றாள்.
    ‘இன்பம்’ என்றேன் யான் - ‘இணைந்து வரும்’ என மொழிந்தாள்.
    ‘ஒற்றுமை’ என்றவுடன் ‘ஓங்கி வரும்’ என உரைத்தாள்
    ‘பஞ்சம்’ என்றேன் நான் ‘பறந்துவிடும்’ எனப் பகர்ந்தாள்.
    ‘பயிர் வளர்ச்சி’ என்றேன் ‘பெருகி விடும்’ என புகன்றாள்.
    “சொந்தங்கள் கூடி வரும், சௌ பாக்யம் தேடி வரும்,
    வளமை குடி ஏறி வரும், வறுமை வெளி ஏறிவிடும்
    நோய்கள் நொடித்து விடும், நுண் கலைகள் சிறப்பு பெரும்,
    தொழில்களில் ஏற்றம் வரும், தொழிலாளர் மனம் குளிரும்
    விஞ்ஞானம் வளர்ச்சியுறும், விழிப்புணர்ச்சி பெருகி வரும்,
    பண்பாடு சிறப்படையும், பருவ மழை பொருந்தி வரும்
    இன்னும் வேண்டியது என்ன?” என்றாள்.

    “பொதுவாக நாட்டிற்கு நன்றே சொன்னாய்; நாட்டில் வாழ் மக்கட்கு
    கலையாத கல்வியும், கடவுளின் அருட்பதமும், ஓர் கபடு வராத நட்பும்,
    கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியிலாத உடலும்,
    சலியாத மனமும், அன்பகலாத துணையும், தவறாத சந்தானமும்,
    தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வராத கொடையும்,
    தொலையாத நிதியமும், ஒரு துன்பமில்லாத வாழ்வும்” வேண்டி நின்றேன்.

    “இவையாவும் தன்முயற்சி இல்லாமல் தானே வருவதில்லை.
    இப்புத்தாண்டில் முயலுங்கள்; முடியாததில்லை” என்றாள்.
    ‘நல்லாட்சி நாட்டிலும், நிம்மதி வீட்டிலும்’ வேண்டுமென்றேன்.
    “நல்லாட்சி- இவ்வாண்டில் தேர்தல் வரும் அமைத்துக்கொள்;
    நிம்மதியோ விரைவாயுன் உட் புகுந்து தேடிக்கொள்.
    இவையிரண்டும் உன்கையில்” எனக் கூறி முடித்து விட்டாள்.

    அவளை நன்றி கூறி வரவேற்று, மனமார உபசரித்தேன்.
    “புத்தாண்டே வருக! புது வாழ்வு தந்திடுக. உன்னாண்டில்
    இனியதே காண்போம்; இனியதே கேட்போம்;
    இனியதே இசைப்போம்.
    எங்கும் இனிமை; எதிலும் இனிமை.
    இனிமை நிலைக்கட்டும். இனியதே நடக்கட்டும்.
    அதற்கு உன் அருள் வேண்டுகிறேன்” எனவும்
    ‘அப்படியே ஆகட்டும்’ என அருளாசி வழங்கி நின்றாள்.

    நம்பிக்கை ஒளியூட்டும் புத்தாண்டே வருக வருக!
    நாட்டிலுள்ளோர் அனைவருக்கும் நல்வாழ்வு தருக!!

    அன்புடன்,
    RRG
     
    Loading...

  2. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    அழகிய வரிகள் வரிசையாய் படையெடுத்து பட்டியலிட்டு அனுபவித்து எழுதி பட்டையை கிளப்பி உள்ளீர்கள் நன்று
     

Share This Page