பங்குனி உத்திரமும் - வழிபாடுகளும்

Discussion in 'Religious places & Spiritual people' started by Bhaskaran, Mar 28, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பங்குனி உத்திரம் சிறப்புகள்

    மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது என்றாலும் பங்குனியில் வரும் உத்திரத்திற்கு பெருமை அதிகம் . ஏனென்றால் தெய்வங்களே தேர்வு செய்துகொண்ட நட்சத்திரம் அந்த திருநாள் .

    பார்வதி - சிவன் திருமணம் , முருகன் - தெய்வானை திருமணம் , ஆண்டாள் -ரெங்கமன்னார் திருமணம் , மீனாட்சி -சுந்தரேஸ்வர் திருமணம் என தெய்வீகத்திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தில் தான் நிகழ்ந்தன என்று புராணங்கள் கூறுகின்றன .

    இவை மட்டுமா ? ராமாயண சகோதரர்கள் நால்வருக்கும் மிதிலையில் இத்திருநாளில் தான் திருமணம் நடைபெற்றது . ராமன் -சீதா ,பரதன் -மாண்டவி ,லக்ஷ்மணன் -ஊர்மிளா , சத்ருகன்-சுருதகீர்த்தி என நான்கு இதிகாச ஜோடிகளும் திருமணத்தில் சேர்ந்தது பங்குனி உத்திரத்தில்தான் .

    ஐயப்பன் பந்தள ராஜாவிற்கு மகனாக பிறந்ததும் ,பாண்டவர்களில் அர்ச்சுனன் தோன்றியதும் ,முருகப்பெருமானை தேடிச்சென்று மணந்த வள்ளி அவதாரமும் பங்குனி உத்திரமே .

    பங்குனி உத்திர விரதத்தை சிறப்பாக கடைபிடித்தே மஹாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீமஹாலட்சுமி இடம்பிடித்தாள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .
    சிவபெருமானுக்கு முருகன் பிரணவ உபதேசம் உரைத்து அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக ஆனதும் , நெற்றிக்கண் நெருப்பில் மாண்டுபோன மன்மதனை சிவபெருமான் மீண்டும் எழுப்பித்தந்ததும் , பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்ததுதான்.

    .ஸ்ரீபிரம்மா வே கொண்டாடிய முதல் உற்சவம் பங்குனி உத்திரத்திருவிழா என்கிறது தலபுராணம் .ஸ்ரீ ராமானுஜர் பெருமாளின் திருவடியை அடைய தேர்வு செய்ததும் இந்தப்புண்ணிய நாளைத்தான் . காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்ததும் பங்குனி உத்திரத்தில் தான் .

    தமிழில் 12 வது மாதமான பங்குனியும் ,12 வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம் .சந்திரன் 27 நட்சத்திர கன்னியர்களை மனைவிகளாக ஏற்றுக்கொண்ட தினமும் பங்குனி உத்திர திருநாள் தான் .

    பழனியில் காவடி உற்சவம் , மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம் ,சுவாமி மலையிலும் ,திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம் ,திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம் , காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம் .

    சைவ வழிபாடுகளிலும் ,வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனிஉத்திர திருவிழாதான் . பெருமாளுக்கும் , தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து , பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான் .எனவே , பெருமாளும் , தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில் , பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும் .

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் ,திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகந்தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான் .

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக க் காட்சி தருகின்றனர் . அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி , பகை அகற்றி புண்ணியம் பெறலாம் .

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் .குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும் .

    பலர் தங்களுக்கு விருப்பமான திருப்பதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது வழக்கம் . எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான் . மூலவரை வழிபடாமல் அங்குஇருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல்தான் பிற வழிபாடுகளை செய்வது .
     
    suryakala and joylokhi like this.

Share This Page