1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

Discussion in 'Stories in Regional Languages' started by crvenkatesh1963, Dec 10, 2018.

  1. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
    ***************************************************
    கல்லான காயசித்தி கற்பமொடுரசவாதம்
    அஞ்சான குளிகை கல்லான கெளனமாங்குளிகையோடு
    கனமான சர்வநோய் எல்லாம் மைந்தா
    சொல்லான சூதத்தை விட்டால் வேறு
    சொல்லுக்கும் வல்லவரார் சொல்லக்கேளு
    சொல்லவே சித்தர்கள் தான் பதிநென்பேரும்
    சிவவிந்தை கட்டியல்லோ திறமானாரே
    :- போகர்
    *****************************************************

    சிணுங்கிய செல்ஃபோன் பெயரில்லாத புது நம்பரைக் காட்டியது.

    "எடேண்டி மாலதி" என்று கடுகடுத்தான் ராகவன். அவன் எப்போதுமே இப்படி இருந்ததில்லை. சென்ற ஒரு வருடமாகத்தான் இந்தக் சிடுசிடுப்பு கோவம் எல்லாம். அதுவும் வேலை செய்துகொண்டிருந்த கம்பெனி மூடப்பட்டு ஐம்பது வயதில் திகைத்து நின்ற சமயத்தில் இருந்துதான் இந்த குணங்கள் வெளிப்பட்டன.

    பாவம் அவனும் என்ன செய்வான்? சொத்து என்று பெற்றோர் எதுவும் பெரிதாக விட்டுச் செல்லவில்லை. ஒரு தங்கை. அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்க கையிருப்பு பத்தாமல் சொந்த வீட்டை விற்கும் நிலைமையும் வந்தது. கல்யாணச் செலவு போக இருந்த லட்சங்களில் வங்கியில் மார்ஜின் மணியாகக் காட்டி ஒரு வீட்டு லோன் வாங்கினான். மேடவாக்கம் அடுத்து உள்பக்கமாக சிறிது தள்ளி ஒரு ஃபிளாட் வாங்கினான். வீட்டு லோன் தவணை, மகன் ஸ்கூல் செலவுகள், வீட்டுச் செலவு என்று முழி பிதுங்கும் ஒரு சாதாரணன் ஆனான். மாலதி வேலைக்குப் போகிறேன் என்று சொன்னபோது வேண்டாம் என்று தடுத்துவிட்டது அவன் ஈகோ.

    அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் அவன் வேலை இழந்தான். காலையில் எப்போதும் போல போனவன் தன் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதையும் அதன் வாசலில் மற்ற பணியாளர்கள் கூடி நிற்பதையும் கண்டான். விசாரித்து அறிந்ததில் அவன் கம்பெனி முதலாளி ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட சரிவால் மிகுந்த நஷ்டத்துக்கு உள்ளானதாகவும் அதன் காரணமாக இந்தக் கம்பெனியை விற்று விட்டதாகவும் தெரிந்து கொண்டான்.

    ஆனால் இந்த டீலிங்கை யாரும் அறியா வண்ணம் மிக ரகசியமாக வைத்திருந்து விற்பனைப் பதிவு முடிந்தபின் இன்று எல்லாரும் அறிய விஷயம் கசிந்தது. கம்பெனியை வாங்கியவர் அதை நடத்த விருப்பம் காண்பிக்கவில்லை. அவர் கவனம் அந்த இடத்தின் வேல்யூ மேல். அந்த பில்டிங்கை இடித்துவிட்டு ஒரு கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் கட்டுவதாக இருந்தார். அதனால் அனைவரின் வேலையும் பறிபோனது. இவன் ஸிவில் இஞ்சினியர் என்பதால் இவனுக்கும் இன்னும் சிலருக்கும் அந்த புது காம்ப்ளெக்ஸ் நிர்மாணப் பணியில் வேலை தருவதாகச் சொன்னார் புது முதலாளி. ஆனால் சம்பளம் மிகக் குறைவு. ஆனால் என்ன செய்வது? இந்த வயதில் வேறு வேலையும் கிடைக்கவில்லை.

    "என்னங்க! என் மாமா பேசறார்! இந்தாங்க பேசுங்க" என்று மாலதி மொபைலை அவனிடம் தந்தாள்.

    "ஹலோ நான் ராகவன் பேசறேன் மாமா"

    "ராகவா! நல்லா இருக்கியா? உங்கள எல்லாம் பார்த்து எத்தனை வருஷமாச்சு! இப்போ திருவண்ணாமலைலேர்ந்து சென்னை வந்துக்கிட்டு இருக்கேன். உங்க வீட்டுக்கு வந்து உங்கள எல்லாம் பார்த்துட்டு அப்படியே சாயந்திரம் தில்லி கெளம்பறேன். ரிஷிகேஷ் போகணும்" என்று ஒரே மூச்சில் பேசிவிட்டு கால் கட் செய்துவிட்டார் மாலதியின் மாமா.

    "அந்த சந்யாசிக்கு இப்ப இங்க என்ன வேலை?" என்று மாலதியைக் கேட்டான்.

    "கொஞ்சம் வயசுக்கு மரியாதை தந்தாச்சும் பேசுங்க. அவருக்கு வயசு எழுவது"

    ராகவன் ஒன்று சொல்லாமல் மெளனமாக எழுந்து பாத்ரூம் சென்றான்.

    மணி பத்தடிக்கும் போது காலிங் பெல்லும் அடித்தது. சந்நியாசி மாமா!
    ஆறடி உயரமும் நல்ல கலருமாக இருந்த காவி அணிந்த முத்துக்குமாரசாமி மாமாவைப் பார்த்ததும் ராகவனுக்குள் ஒரு மரியாதை எழுந்தது.

    "வணக்கம் மாமா" என்றவாறே அவர் கால்களில் விழப்போனான்.

    "அடேடே, இதென்ன ராகவா" என்று அவனைத் தடுத்து தன்னோடு அனைத்துக் கொண்டார் மாமா.

    அப்புறம் மாலதியிடமும் குழந்தையிடமும் நலன் விசாரிப்புகள் தொடர்ந்தன. பேச்சு பேச்சிலே மணி பதினொன்று ஆனது.

    பிறகு அனைவரும் லஞ்ச் சாப்பிட உட்கார்ந்தார்கள். மாமா ரசித்து ருசித்துச் சாப்பிட்டார். பால் பாயசத்தை இரண்டு முறை கேட்டு வாங்கி சாப்பிட்டார்.

    சாப்பிட்டப் பிறகு எல்லாரும் திரும்பவும் பேச உட்கார்ந்தார்கள். மாமா ராகவன் வேலை பற்றி, குழந்தை படிப்பு பற்றி என்று விவரங்கள் கேட்டார்.

    ராகவன் ஒருவித அசுவாரசியத்துடன் பதில் சொன்னான்.

    "என்னாச்சு ராகவா? நல்ல வேலைல தானே இருக்கே?"

    ராகவன் மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கு முன்னால் மாலதி உடைந்தாள். பெரிதாக அழுதாள். அழுகையினூடே எல்லா விவரங்களும் சொன்னாள். அவர்கள் குடும்ப சூழலை அறிந்த முத்துக்குமாரசுவாமி மௌனமானார். ஏதோ யோசைனையில் ஆழ்ந்தார்.

    பிறகு சட்டென்று எழுந்து தன் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தார்.

    "இந்தா ராகவா இதைப் பிடி! உன் கஷ்ட காலத்துக்கு ஒரு விடிவு வரும்"

    "என்னது மாமா இது?"

    "நெனச்சத நிறைவேத்தும் காரியசித்தி ரசமணி. திருவண்ணாமலைல இருக்கற என் குருநாதர் தானே கட்டியது. போகர் கட்டு. இதுக்குன்னு ஒரு கை காத்துக்கிட்டு இருக்கும். போயி குடுன்னு சொல்லி கொடுத்தார். "

    ராகவன் சிரித்தான். "மாமா உங்க நல்ல மனசுக்கு ரொம்ப தேங்க்ஸ். ஆனா எனக்கு இதிலெல்லாம் நம்பிக்க இல்ல. உங்க நம்பிக்கை உங்களோடவே வெச்சுக்குங்க"

    மாமாவும் சிரித்தார். " இது மருந்து மாதிரி. உனக்கு நம்பிக்க இல்லாட்டாலும் நோய குணப்படுத்துறது போல உன் பிரச்சனையத் தீர்க்கும். சரி ஒனக்கு வேண்டாட்டா பரவாயில்ல. இந்தாம்மா மாலதி, இத வாங்கிக்க. இத ஒங்க வீட்டுல கொடுக்கச் சொல்லித்தான் குருநாதர் சங்கேதம்"

    மாலதி பயபக்தியோடு வாங்கிக்கொண்டாள். " சாமி ரூமுல வச்சு நல்லா சுத்த பத்தமா குளிச்சு மனசார வேண்டிக்க. நெனச்சது நடக்கும். மூணு முறை உன் வேண்டுதல்கள நிறைவேத்தற சக்தி இதுக்கு உண்டு. நெனவுல வச்சுக்க. "

    அப்புறம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த மாமா மூணு மணி போல கிளம்பி விட்டார்.

    அன்று மாலை மாமா சொன்னது போல குளித்து சுத்தமாக சாமி ரூமுக்குள்ள வெச்சிருந்த மரப்பெட்டியத் திறந்து பார்த்தா. உள்ள ஒரு கண்ணாடி பாட்டில். அதுக்குள்ள பளிச்சுன்னு உருண்டுக்கிட்டு இருந்தது ரசமணி. மாலதி பரவசமாகிட்டா.

    "ஏங்க என்ன வேண்டிக்கணும்? நல்ல வேலை வேண்டிக்கவா?" என்றாள் ஹால் பக்கம் திரும்பி.

    " பத்து லட்சம் வேணுமின்னு வேண்டிக்க" என்றான் ராகவன் எரிச்சலோடு.

    சரியென்று மாலதி அவன் சொன்னது போலவே வேண்டிக்கொண்டாள். பிறகு அந்தப் பெட்டியை மூடி பக்தியோடு சாமி முன்னால வச்சுட்டு ஒரு தடவ விழுந்து கும்பிட்டா.

    இதெல்லாம் அவளோட பையன் சுந்தரேசன் கண்கொட்டாம பார்த்துக்கிட்டு இருந்தான்.

    மறுநாள் காலை வழக்கம் போல விடிந்தது. ராகவன் பில்டிங் சைட்டுக்கும் மகன் ஸ்கூலுக்கும் சென்றார்கள். மாலதி வீட்டு வேலைகளில் பிசியானா.

    சுமார் பனிரெண்டு மணி இருக்கும். வாசலில் ஏதோ வண்டி வந்து நிற்கும் சப்தம் போல கேட்கவே என்னவென்று பார்க்க வெளியே வந்தாள். ஒரு ஆம்புலன்ஸ் அவள் வீட்டு வாசலில் நின்றுகொன்று இருந்தது.

    அவளுக்குள் மெலிதாக ஒரு பதட்டம் பரவத் தொடங்கியது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் பின்னால் ஒரு காரும் வந்து நின்றது. விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார். கதவைத் திறந்து இறங்கியவர் வடநாட்டவர் போல இருந்தார். அவரோடு இன்னொருவரும் இறங்கினார்.

    " நீங்க தான் மிஸஸ் ராகவனா" என்றார் இரண்டாவதாக இறங்கியவர்.

    "ஆமாம் நீங்க யாரு? எதுக்கு இந்த ஆம்புலன்ஸ்?" என்று கேட்கத் துவங்கிய மாலதியை "கொஞ்சம் வீட்டுக்குள்ள போலாமா? எல்லாம் சொல்றேன்" என்றார்.

    அவர் வீட்டுக்குள் வைத்து சொன்ன விஷயம் மாலதியின் உலகத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது. அன்று காலை வேலைக்குச் சென்ற ராகவன் அந்த சைட்டின் ஏழாவது மாடியில் இருந்து இரும்புக் கம்பி இடறி கீழே விழுந்து இறந்து விட்டானாம். அவனது உடலைத் தான் ஆம்புலன்ஸில் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

    மாலதி பெருங்குரலெடுத்து அழுதாள். அக்கம் பக்கத்திலிருந்து மனிதர்கள் சிலர் வந்தார்கள். ராகவன் உடல் குளிர் பெட்டியில் உள்ளே கொண்டுவந்து வைக்கப்பட்டது.

    திடீரென்று அந்த வட நாட்டவர் " இந்தாங்க இந்தப் பணத்தை வச்சுக்கோங்க. காரியம் செய்ய கொள்ள ஹெல்பா இருக்கும்." என்று சொல்லி ஒரு ஐநூறு ரூபாய் கட்டையும் ஒரு கவரையும் தந்தார். பிறகு அவர்கள் சென்று விட்டார்கள்.

    ராகவன் இறுதிக் காரியங்கள் எப்படி யார் உதவியுடன் நடந்தது என்று மாலதிக்கு தெரியவில்லை. சுந்தரேசனை யாரோ ஸ்கூலில் இருந்து கூட்டி வந்தார்கள். அப்பாவின் உடலைப் பார்த்த அவன் முகம் இறுகியது.

    ஒரு மணி நேரத்துக்குள் எல்லா காரியங்களும் நடந்தேறியது. வந்தவர்கள் எல்லாரும் மெதுவாகக் கலைந்துவிட்டார்கள். வீட்டில் மாலதியும் சுந்தரும் மட்டும்தான்.

    மாலதிக்கு திடீரென்று அந்தக் கவர் நினைவுக்கு வந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அதற்குள்ளே ஒரு செக்.

    பத்து லட்சம் ரூபாய்களுக்கு.

    அங்கே சாமி ரூமுக்குள் ரசமணி பெட்டியைப் பார்த்தபடி சுந்தரேசன் நின்றுகொண்டிருந்தான். "இன்னும் ரெண்டு சான்ஸ் பாக்கி இருக்கு" என்று அவன் மனம் சொன்னது. சட்டென்று ஹாலில் சுவரோரமாக வைத்திருந்த ராகவன் போட்டவைப் பார்த்தான்.

    வீயார்
     
    Bhoonzee and lazy like this.
  2. Onesweetlife

    Onesweetlife Gold IL'ite

    Messages:
    555
    Likes Received:
    331
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Monkey's Paw story madiriye iruku sir....
     

Share This Page