1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தெய்வ மனுஷிகள் - பாவாயி [அவள் விகடனில் வெளியானது - 26/6/2018.]

Discussion in 'Stories in Regional Languages' started by bharatheeyan, Jun 25, 2018.

  1. bharatheeyan

    bharatheeyan New IL'ite

    Messages:
    9
    Likes Received:
    8
    Trophy Points:
    8
    Gender:
    Male
    தன்னம்பிக்கை
    Posted Date : 06:00 (Pub. on 12/06/2018)

    தெய்வ மனுஷிகள் - பாவாயி
    வெ.நீலகண்டன்
    SHYAM SANKAR

    வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம்
    குமாரசாமி ஊர்லயே பெரிய தலை. நிலபுலங்கள் நிறைய. சாதி சனங்களும் நிறைய. ஊருல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் இந்த மனுஷனைக் கேட்டுதான் நடக்கும். சண்டை, சச்சரவு எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற மனுஷன். ஆம்பள பொம்பளன்னு எல்லாரும் குமாரசாமியைக் கண்டா எந்திரிச்சு நிப்பாக. அப்படியொரு பேரு, புகழு, மருவாதி.

    மத்தவங்க மாதிரியில்லை குமாரசாமி. யார் எது கேட்டாலும் இல்லேன்னு சொல்ல மாட்டாரு. தன் தோட்டத்துல வேலை செய்றவங்களுக்கு கைநிறைய கூலி கொடுப்பாரு. அது மட்டுமில்ல. ஊர்ப்பிள்ளைங்க படிக்கிறதுக்கு தன் சொந்தப்பணத்துல ஒரு பள்ளிக்கூடமே கட்டிவிட்டிருக்காரு. யாரும் பசின்னு வந்து நின்னுடக் கூடாது. உடனே வீட்டுக்குள்ளே கூப்பிட்டு, இருக்கிறதைப் போட்டு பசியாத்தி அனுப்புவாரு. தெய்வ பக்தியும் அதிகம்.

    இவ்வளவு பேரும் புகழும் இருந்தாலும் குமாரசாமிக்குக் கல்யாணம் கூடி வரலே. வயசு அம்பது ஆச்சு. குமாரசாமியோட ஆயி அப்பன் இருந்தவரைக்கும் ஊரு உறவெல்லாம் பொண்ணு தேடி ஓஞ்சுபோனாக. பாக்குற பொண்ணையெல்லாம் ஏதோவொரு காரணம் சொல்லி தட்டிக்கழிச்சுக்கிட்டே இருந்தாரு குமாரசாமி. பெத்தவங்களுக்குக் காரணம் புரியலே. கடைசியாதான் தெரிஞ்சுச்சு, அவரு மனசுல மலையாள சாமி கோயிலு பூசாரி மவ மீனாட்சி இருக்கான்னு. அவளையே நெனச்சுக்கிட்டு பாக்குற பொண்ணையெல்லாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்திருக்காரு மனுஷன்.

    [​IMG]

    மீனாட்சியை நெனச்சுக்கிட்டுதான் எல்லாப் பொண்ணையும் வேணாம்னு சொல்றாருன்னு தெரிஞ்சவுடனே ஆத்தாளும் அப்பனும் அதிர்ந்துபோனாக... `நாம இருக்கிற இருப்பென்ன... நம்ம குலம், கோத்திரமென்ன... மானம் மருவாதியென்ன'ன்னு பயங்கர எதிர்ப்பு. ‘கட்டுனா மீனாட்சி, இல்லேன்னா பிரம்மசாரி’ன்னு உறுதியா இருந்தாரு குமாரசாமி.

    உறவுகளைக் கூட்டிக்கிட்டுப் பூசாரி வீட்டுக்குப்போய் ஆயியும் அப்பனும் பொண்ணு கேட்டாக. ஊருல பெரிய தலைக்கட்டு. நம்ம வீட்டுல வந்து பொண்ணு கேட்டு நிக்குறாக. நம்ம பழக்கவழக்கம் வேற. அவுக பழக்க வழக்கம் வேற. நாம, மலையாள சாமி காலடியில கிடந்து கூரைக் குடில்ல வாழுறவுக. அவுக எஜமான வீடு. தரமாட்டோம்னு சொன்னா, பெரிய மனுஷங்களைப் பகைச்சுக்க வேண்டியிருக்கும். அதனால, `யோசிச்சுச் சொல்றோம்'னு சொல்லி அனுப்பிட்டாக. இது நடந்து நாலைஞ்சு நாள்ல மீனாட்சி செத்துப் போனா.

    மீனாட்சியோட சாவு, குமாரசாமியைப் புரட்டிப் போட்டுருச்சு. ரொம்பவே ஒடைஞ்சு போனாரு. வாழ்க்கையே வெறுத்துப்போச்சு. வீட்டைவிட்டு வெளியிலயே வர்றதில்லை. சரியான சாப்பாடு, தண்ணியில்லை. நல்ல உறக்கமில்லை. ரொம்பக்காலம் கழிச்சு பாவாயியைப் பாத்த பின்னாடிதான் மனுஷன் பழைய மாதிரி ஆனாரு.

    பாவாயி, குமாரசாமிக்கு உறவுக்காரப் பொண்ணுதான். அசலூர்க்காரி. ஊர்த் திருவிழாவுக்கு வந்திருந்த நேரத்துலதான் குமாரசாமி அவளைப் பாத்தாரு. மொதப் பார்வையிலயே மீனாட்சியைப் பாத்தமாதிரி இருந்துச்சு. மனசுக்குள்ளாற மண்டிக்கிடந்த இருட்டெல்லாம் விலகுனமாதிரி இருந்துச்சு. மனசுக்குள்ள வந்து உக்காந்திட்டா பாவாயி. கூட இருந்தவங்ககிட்ட யாரு, என்னன்னு விசாரிச்சாரு.

    பாவாயி குடும்பத்துல ரொம்பச் சிரமம். வரிசையா மூணு பொண்ணுங்க. சாப்பாட்டுக்கே சிரமப்படுறவங்க. பாவாயி மூத்தவ. அவளுக்கும் கல்யாண வயசு கடந்துருச்சு. சம்பந்தம் பாத்துக்கிட்டிருந்தாக. ‘குமாரசாமிக்குப் பாவாயியைக் கட்டித் தருவீங்களா’னு உறவுக்காரங்கள்லாம் கேட்டப்ப, உடனே ஒப்புக்கிட்டார் பாவாயியோட அப்பன். வயசு சின்னது பெரிசா இருக்கேன்னு சில பேரு சொன்னப்போ, ‘அதெல்லாம் ஒரு விஷயமில்லை... மனசு ஒப்புக்கிட்டா போதும்’னு சமாதானம் சொல்லிட்டார்.

    சீரும் சிறப்புமா முடிஞ்சிருச்சு கல்யாணம். தெரு முழுக்க பந்தல் போட்டு ஊருக்கே விருந்து வெச்சாரு குமாரசாமி. ஏழுரு பெரியவங்களும் வந்து வாயார வாழ்த்தினாக. இவ்வளவு காலம் கழிச்சு குமாரசாமி வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வந்துட்டாளேன்னு உறவுக்காரங்களுக்கெல்லாம் சந்தோஷம். புருஷனும் பொண்டாட்டியும் எந்தக் குறையுமில்லாம சந்தோஷமா இருந்தாக. வீட்டு நிர்வாகம் எல்லாத்தையும் பாவாயிகிட்ட கொடுத்திட்டாரு குமாரசாமி. புருஷன் பண்ணின மாதிரியே தான தர்மங்கள் பண்ணினா பாவாயி. எல்லாரும் அவளை மகராசின்னு வாய் நிறைய வாழ்த்தினாங்க.

    ஊருல நல்லவன்னு ஒருத்தன் இருந்தா கெட்டவன்னு நாலு பேரு இருப்பான்தானே? குமாரசாமியைப் புடிக்காத ஆளுக நிறைய பேரு இருந்தாக அந்த ஊருல. அங்காளி பங்காளிகள்லயே சில பேரு உண்டு. செல்வச்செழிப்பா, பேரு புகழோடு இருக்கிறது புடிக்கலே. நேருக்கு நேரா நின்னு சண்டை போட்டு அடிக்க முடியாத ஆளுக... ‘எப்படா மனுஷன் அசருவான். அவரு குடும்பத்தைக் கலைச்சு ஆளை நடுத்தெருவுல நிறுத்தலாம்’னு பாத்துக்கிட்டே இருந்தானுக.

    [​IMG]

    அதுக்கு ஒரு காலம் கனிஞ்சுச்சு. குமாரசாமிக்குத் தம்பி ஒருத்தன் இருக்கான். பேரு தங்கவேலு. தங்கமான புள்ள. அண்ணங்காரன் போலவே நல்ல மனசுக்காரன். வீட்டுல இருந்த மாடு கன்னுகளை எல்லாம் அவந்தான் பாத்துக் கிட்டான். வயசுல பெரிய வித்தியாசம் இல்லேன்னாலும், பாவாயி தங்கவேலுவைத் தன் மகன் மாதிரி பாத்துக்கிட்டா. தங்கவேலுவும் ‘அண்ணி, அண்ணி'ன்னு பாவாயிகிட்ட அவ்ளோ அன்பா இருப்பான்.

    தெனமும் விடியக்காத்தால தங்கவேலு பசும்பாலெடுத்து, அண்ணிகாரிகிட்ட கொண்டு போய்க் கொடுப்பான். குமாரசாமியைப் பழிவாங்க நேரம் பாத்துக்கிட்டிருந்த எதிரிகளுக்கு இது ஒரு வாய்ப்பா மாறிச்சு. ஒருக்கா, குமாரசாமி அதிகாலை எழுந்து, தானிய அடிப்புக்குக் களம் பாக்கப் போயிட்டாரு. வழக்கம்போல, பசும்பாலெடுத்துக்கிட்டு அண்ணிகாரிகிட்ட கொடுக்கப் போனான் தங்கவேலு.

    வெளியில காத்துக்கிட்டிருந்த எதிரி ஆளுக, வீட்டுக்கதவைப் பூட்டிட்டு நேரா களத்துக்கு ஓடி, தங்கவேலுவையும் பாவாயியையும் பத்தி தப்புத்தப்பா குமாரசாமிகிட்ட சொல்லிட்டானுவ. எப்பவும் நிதானமா யோசிக்கிற குமாரசாமி, அன்னிக்குப் பாத்து ஆவேசப்பட்டுட்டாரு... ‘அடிப்பாவி மவளே. உனக்கு என்னடி குறை வெச்சேன்? குடிசையில கிடந்தவளை கோபுரத்துல உக்கார வெச்சேனே... இப்படி துரோகம் பண்ணிட்டியே’னு கருவிக்கிட்டே வீட்டுக்கு வந்தாரு. கதவைத் திறந்து உள்ளே போயி பாவாயியைப் போட்டு அடியடின்னு அடிச்சாரு.

    பாவாயி எவ்வளவோ எடுத்துச் சொல்றா... `தங்கவேலு எனக்குப் புள்ளை மாதிரி... ஊரான் சொல்றதை நம்பாதிய. நான் எந்தத் தப்பும் செய்யலே'னு காலைப்புடிச்சுக்கிட்டு கதறி அழுவுறா. குமாரசாமிக்குக் கோவம் குறையலே. பாவாயி பேசுற எந்த வார்த்தையும் அவர் காதுல ஏறலே. மதம் புடிச்ச யானை கணக்கா `கதகத’னு ஆடுறாரு மனுஷன். தடித்தடியா வார்த்தையெடுத்து பொண்டாட்டியை வையறாரு. மாறி மாறி அடிச்சு, அவ தலைமுடியைப் புடிச்சு தெருவுல இழுத்துக்கிட்டு வாராரு. ஊரே கூடி நின்னு பாக்குது. ஆனா, யாருக்கும் எதுத்துக் கேட்க தைரியமில்லை. எதிராளிகள்லாம், நெனச்சது நடந்துபோச்சுன்னு மனசுக்குள்ள சிரிக்குறானுக.

    பாவாயியை இழுத்தாந்து மலையாள சாமி முன்னாடி போட்டாரு குமாரசாமி. `இந்த மலையாள சாமி சத்தியமா சொல்றேன். நான் ஒரு தப்பும் செய்யலேய்யா... என்னை நம்புய்யா’ன்னு குமாரசாமிகிட்ட கெஞ்சிக் கதறுறா. குமாரசாமி மூளைக்குள்ள மிருகம் புகுந்துருச்சு. கண்ணெல்லாம் செவந்து கெடக்கு. புத்தி பேதலிச்சிருச்சு. மலையாள சாமிக்கு முன்னாடி ஊனியிருந்த சூலத்தைப் புடுங்கி பாவாயி வவுத்துல ஒரே குத்து. ரத்தம் பீறிட்டு அடிக்குது. தெருவெல்லாம் ஆறா ஓடுது. எந்தப் பாவமுமே செய்யாத அப்பாவி பாவாயி, கொஞ்சம் கொஞ்சமா அடங்கிப்போனா. வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த மக்களெல்லாம் வாயடைச்சுப் போய் நின்னாக.

    [​IMG]

    எல்லாம் முடிஞ்சுபோச்சு. பாவாயியை அடக்கம் பண்ணிட்டாக. ஆனா, குமார சாமிக்கு நிலைகொள்ளலே. தலைக்குள்ள வண்டு புகுந்தமாதிரி எப்பவும் தலையை உலுக்கிக்கிட்டே உக்காந்திருந்தாரு. யாரு கூடவும் பேச்சில்லை. சாப்பாடில்லை. தண்ணியில்லை. ஒருநா, மலையாள சாமி கோயிலுக்கு முன்னாடியே குமாரசாமியும் செத்துக் கெடந்தாரு. அம்மா மாதிரி தன்னைப் பாத்துக்கிட்ட அண்ணியும். அண்ணனும் தன்னால செத்துப்போனதைப் பொறுக்க மாட்டாத தங்கவேலுவும் ஒருநா தற்கொலை பண்ணிக்கிட்டான்.

    அடுத்தடுத்து மூணு சாவுகளைக் கண்ட ஊரு, அலமந்துபோச்சு. மக்கள் வெளியில நடமாடவே பயந்து கெடந்தாக. அந்த வருஷம் பெய்ய வேண்டிய மழை பெய்யவேயில்லை. காடு கரையெல்லாம் வறண்டுபோச்சு. தாகத்துக்குத் தண்ணி கிடைக்கலே. பனை மரமெல்லாம் தலையொடிஞ்சு கருகுது.

    மூணு ஆன்மாவும் ஊரைச் சுழட்டியடிக்கு துன்னு ஊராளுகளுக்குப் புரிஞ்சுபோச்சு. மூணு பேருக்கும் நடுகல் நட்டு, `நீங்கதான் எங்களைக் காப்பாத்தணும்'னு படைப்புப் போட்டாக... அதுக்கப்புறம்தான் வானத்துல கருமை ஏறுச்சு... செழிப்பா மழை பெய்ய, காய்ஞ்சதெல்லாம் துளிர்த்துச்சு.

    நாமக்கல் மாவட்டத்துல சேளூர்னு ஒரு ஊரிருக்கு... அங்கிருக்கிற மலையாள சாமி கோயில்ல பாவாயியும் குமாரசாமியும் தெய்வ உருவெடுத்து நிக்குறாக. ஊருகாட்டுல மழை இல்லைன்னா, ரெண்டு பேருக்கும் படைப்புப்போட்டுக் கும்பிடுறாக. சடசடன்னு கொட்டித் தீக்குது மழை!

    ==============================================================================

    இதைத்தான் வை மூதாட்டி அன்றே அழகாகச் சொல்லிவிட்டாள்..."ஆத்திரக்காரனுக்கு
    புத்தி மட்டு" என்று.

    "பாரதீயன்"
     
    periamma likes this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அருமையான பகிர்வு.பெண் எனும் தெய்வத்தை பழித்தால் இயற்கை அன்னையின் தண்டனை மிக பெரியதாக இருக்கும் .
     

Share This Page