1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய்மையை போற்றுவோம்! - நான் கண்ட இரு துருவங்கள்.

Discussion in 'Posts in Regional Languages' started by Rrg, Dec 31, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    தாய்மையை போற்றுவோம்! - நான் கண்ட இரு துருவங்கள்.

    சில மாதங்களுக்கு முன்பு என் உயிர் நண்பரின் மகன் வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பர் இப்போது உயிருடன் இல்லை. அவர் மனைவி சென்னையில் அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் தனியாக வசிக்கிறாள். அவர்களின் ஒரே மகன், ரமேஷ், வெளியூரில் ஒரு தனியார் கம்பெனியில் உயர்ந்த பதவி வகிக்கிறான். நான் வேறு வேலையாக அந்த ஊர் சென்றபோது, அவன் மிகவும் வருந்தி கேட்டமையால், அவனுடன் ஒருநாள் தங்கினேன். அன்று ‘அன்னையர் தினம்’. அவர்கள் காலனி லேடீஸ் கிளப்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜானு, ரமேஷின் மனைவிதான் லேடீஸ் கிளப்பின் தலைவி. அன்னையர் தின விழாவிற்கு சிறப்புரை ஆற்ற ரமேஷை அழைத்திருந்தார்கள். நானும் அவர்களுடன் விழாவிற்கு சென்றிருந்தேன்.
    ரமேஷின் உரை சிறப்பாக இருந்தது.
    “தாயிற்சிறந்த கோவிலுமில்லை..... என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை. ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் 'அன்னை' என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு.
    அன்னையர் தினம் என்பதை உள்ளார்த்தமாக உணர்வுபூர்வமாக கடைபிடிக்க வேண்டும். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது.
    அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும். அம்மா... இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொனிகளும் ஆயிரமாயிரம்... அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. என் அன்னை மட்டுமன்றி இங்கு வந்திருக்கும் எல்லா அன்னைகளுக்கும் தலை வணங்குகிறேன். உங்கள் தியாகங்கள் வார்த்தையில் வருணிக்க இயலாதவை. இதைப் புரிந்துணர்ந்து செயல்பட வருங்கால சந்ததிகளையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
    நம் அன்னையினை போற்றுவோம் வாழ்த்தி வணங்குவோம்.”
    உரை முடிந்ததும் பலத்த கைதட்டல்கள்; ஏராளமான பாராட்டுக்கள். எல்லோரும்
    ரமேஷைவிட ஜானுவை வெகுவாக பாராட்டினர். ஜானுவின் முகமோ பூரித்து ஜொலித்தது.
    “அங்கிள், என் பேச்சு எப்படி இருந்தது?”
    “ரொம்ப நன்றாக இருந்தது. ஆயின் ஒரு சந்தேகம். வார்த்தைக்கு வார்த்தை தாய்மை, தாய்மையென்று உரைத்த நீ, எப்போதாவது ‘மை தாய்’ என்று சிந்தித்ததுண்டா? என்று எண்ணத் தோன்றுகிறது” என்றேன்.
    “என்ன அங்கிள் அப்படிச் சொல்லிவிட்டிர்கள்? என் தாய்க்கு என்ன குறைவைத்தேன்? அவர்கள் வாழ்ந்த சொந்த வீட்டிலேயே சென்னையில் வாழ்கிறார்கள். அவருக்கே பென்ஷன் வருகிறது. மேலும் தந்தையின் பென்ஷனும் கிடைக்கிறது. அதைத் தவிர
    மாதாமாதம் செலவுக்கு அவர்களுக்கு தேவைப்பட்டால் பணம் அனுப்புகிறேன். கூடியவரை தினமும் ஒரு முறையாவது போனில் பேசிக்கொண்டு தானிருக்கிறேன். இன்னும் என்ன வேண்டுமாம் அவர்களுக்கு?”
    “தவறாக நினைக்காதே. 80 வயதுக்கு மேல் ஆனவர். உடல் நல மற்றவர். சமீபத்தில் இருமுறை தீவிர விபத்துக்கு ( இடுப்பு எலும்பு முறிதல், பூஜையில் புடவை தீப்பிடித்து 30%க்கு மேல் தீப்புண்) உள்ளானவர். நடக்கக் கூட சிரமப்படுபவர். அவரை தனியாக இருக்கவைத்தல் சரியென்று உனக்கு தோன்றுகிறதா? உன்னுடன் வாழ அவர் ஏங்குகிறார் என்று உனக்குத் தெரியவில்லையா?”
    “அதற்கு நான் என்ன செய்ய? அவருக்கும் ஜானுவுக்கும் துளிக்கூட ஆகவில்லை. தினமும் சண்டை தான். என் நிம்மதியே போய்விட்டது. இருவருக்கும் வீட்டுக் கொடுக்கும் தன்மை சுட்டுப் போட்டாலும் வராது. நானும் பலமுறை என் தாயிடம் சொல்லிவிட்டேன். அவருக்கு காரியம் ஆகவேண்டுமென்றால் அவர் தான் பணிந்து போகவேண்டும். ஜானு சொற்படி நடப்பதென்றால் அவர் இங்கு தாராளமாக வரலாம் என்று. அவர் அதற்கு உடன் படுவதாக சொல்கிறாரே அன்றி, என்றும் அவ்வாறு செயல் பட மாட்டார் என்பதை நானறிவேன். ஜானுவும் அறிவாள். இங்கு வந்தால் அண்டை அயலோரிடம் ஏதாவது சொல்லி எங்கள் மானத்தை வாங்கி விடுவாள். அதனால் தான் அவரை தனியே வைத்திருக்கிறோம்.”
    “அவர் உன்னை வளர்க்க எத்தனை பாடு பட்டிருப்பார் என்று யோசித்துப் பார்த்தாயா?”
    “அவையெல்லாம் யோசிக்காமலா நான் அவரிடம் அன்பு வைத்திருக்கிறேன்? இருப்பினும் அவரை எங்களுடன் வைத்துக் கொள்வது என்பது என் கையில் இல்லை. நானோ மிக உயர்ந்த பதவி வகிப்பவன். ஆபீஸ் வேலைக்கே நேரம் போதவில்லை. இதைப்பற்றி ஜானு தான் முடிவெடுக்க வேண்டும். அவள் தான் வீட்டில் இருப்பவள்.”
    “இதைப் பற்றி நான் எப்படி உன் மனைவியிடம் பேசுவது? நீதான் அவள் மனதை மாற்றவேண்டும்”
    “நானும் பல முறை அவளிடம் கேட்டுவிட்டேன். ‘உங்களுக்கு உங்கள் தாய்தான் முக்கியம் என்றால் அவருடன் வாழுங்கள்; என்னை விட்டுவிடுங்கள்’ என்கிறாள். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள் அங்கிள்?”
    “நீ பேசிய பேச்சிற்கும் உன் நடத்தைக்கும் சிறிதும் சம்பந்தமேயில்லையே ரமேஷ்.”
    “அங்கிள், நீங்கள் இவ்வளவு சொல்வதால் இன்று மறுபடியும் கேட்டுப் பார்க்கிறேன். உங்களிடம் அவளுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. உங்கள் சார்பாகவும் கேட்டுப் பார்க்கிறேன். அவள் சம்மதித்தால் நான் அம்மாவை இங்கு கொண்டுவரப் பார்க்கிறேன்” என்று ரமேஷ் இந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
    நான் சென்னை வந்ததும் அவன் தாயைக் காணச்சென்றேன். என்னைப் பார்த்ததுமே அவர் மிகவும் பதற்றம் அடைந்தார்.
    “நீங்கள் சமீபத்தில் ரமேஷைப் பார்த்து பேசினீர்களா?” என்றார். நான் நடந்ததைச்சொன்னேன்.
    அவர் மிகவும் அமைதியற்று காணப்பட்டதால் ‘என்ன நடந்தது?’ என விசாரித்தேன்.
    நான் கிளம்பிய மறு தினம் ஜானு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாளாம். கண்டபடி ஏசினாளாம்.
    “நீங்கள் ஊரெல்லாம் சென்று உங்கள் மகன் சரியில்லை என்று பேசி இருக்கிறீர்கள். இல்லையெனில் RRG எங்களிடம் இப்படிப் பேசி இருக்க மாட்டார். ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இனிமேல் நான் இருக்கும்வரை என் வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்க முடியுமென கனவுகூட காணாதீர்கள். நீங்கள் கடைசிவரை தனியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். நாங்கள் அறுத்துவிட்ட பிறகு எத்தனை நாட்கள்தான் அந்த RRG உங்களை சப்போர்ட் செய்வார் என்று பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டாளாம்.
    பார்க்கப் போனால் அந்த தாய்க்கு இடுப்பு அறுவை சிகிச்சை நடந்த போது, நானும் என் மனைவியும்தான் அவரை எங்கள் வீட்டில் 3 மாதம் வைத்து சகல சிகிச்சைகளும் அளித்தோம். தீ விபத்து நடந்த போதும் நாங்கள் தான் அவரை மருத்துவ இல்லத்தில் சேர்த்து பார்த்துக்கொண்டோம். இருமுறையும் ரமேஷ் சென்னை வந்து தங்கி தன்னால் இயன்ற உதவிகளை செய்தார் தான். ஆயின் முழுப் பொறுப்பும் எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை இல்லை என்பதால் நாங்களே பொறுப்பு ஏற்றுக்கொண்டோம். இன்று வரை அந்த தாய்க்கு எந்த உதவி தேவைப் பட்டாலும் என்னைத்தான் அணுகுவார். நானும் என்னால் இயன்றதை செய்து வருகிறேன்.
    ஜானுவுக்கும் திருமண வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தனக்கு இவ்வாறு நடக்காது என்னும் ஒரு மூட நம்பிக்கை. படித்தும் பட்டம் பெற்றும் பண்பாடற்ற ஒரு வெறித்தனம். தன் கணவன் தன்னை மீறி ஒன்றும் செயலாற்ற இயலாதவன் என்னும் தைரியம். இன்று பதவி கண்ணை மறைத்து ஆணவம் தலைக்கு ஏறி விட்ட நிலை. நான் என்ன அறிவுரை சொன்னாலும் ஏறாது என அறிவேன்.
    ரமேஷை நான் அவன் பிறந்ததிலிருந்து அறிவேன். சிறுவயதில் தாயின் புடவை தலைப்பு; இன்றோ மனைவியின் துப்பட்டா. அவனை வளர்த்தவிதம் அப்படி என்று கொள்வதா?
    ‘என் மகனை நான் நன்கு அறிவேன். அவன் என்னைக் கைவிட மாட்டான். அவன் மடியில் தலை வைத்துத்தான் என் உயிர் பிரிய வேண்டும்’ என உரைக்கும் ஒரு தாய். இவர்க்கு இடையில் சிக்கிக்கொண்டு வேதனைப் படுகிறேன். அந்த தாய்க்கு, என்னால் இயன்ற உதவியை இன்னும் செய்துகொண்டு தான் இருக்கிறேன்.
    ரமேஷும் அவர் மனைவியும் நன்கு படித்தவர்கள். பணமும் பதவியும் படைத்தவர்கள். ஆயின் ஏட்டுச்சுரைக்காய்கள். வாய்ச்சவடால் பேர்வழிகள். வழி தவறிய படிப்பாளிகள்.
    இது ஒரு துருவம்.

    என் டிரைவர் முருகன். அவர் தாய் சென்ற வாரம் கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. பல மருத்துவ மனைகள் ஏறியிறங்கினார். ஆயினும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் கேட்ட தொகை ( 2 - 2.5 லட்சம்) திரட்ட இயலாத நிலையில் என்னை அணுகினார். என் நண்பர் ஒருவர் மிக சிறந்த இடுப்பு அறுவை சிகிச்சை நிபுணர். அவர் உதவியை நாடினேன். அவர் 80,000 திற்குள் முடித்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் அவர் தாயை அறுவை சிகிச்சைக்காக சேர்த்தனர். முருகன் நகை அடகு வைத்து ஓரளவு பணம் திரட்டினார். அவர் உடன் பிறந்தோர் பணம் கொடுக்க இயலாது என கை விரித்து விட்ட நிலையில், நான் பாக்கி பணம் தருவதாக உறுதி அளித்ததால் அறுவைசிகிச்சை நன்கு நடந்து முடிந்தது. முருகனின் தாயின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருப்பதாகவும், அதனால் குறைந்தது 6 வாரங்கள் அவர் படுக்கையில் இருக்க வேண்டுமென மருத்துவர் வலியுறுத்தினர். அதன்படி அவரை ஒரு ‘போஸ்ட் கேர்’ விடுதியில் சேர்த்திருக்கிறோம். அதைப் பொறுக்கமுடியாமல் முருகன் தவித்துக்கொண்டு இருக்கிறார். ‘என் தாய் எங்களை விட்டு பிரிந்து இருந்ததே இல்லை. எப்படி தனியாக, முன்பின் தெரியாதோர் மத்தியில் இருப்பாரோ? அங்கு கிடைக்கும் உணவு அவருக்கு ஒத்து வருமோ? அவரை ஒரு பாரம் எனக்கருதி நான் ஒதுக்கி விட்டதாக எண்ணிவிடுவாரோ?” என்றெல்லாம் கலங்குகிறார். என் அறிவுரையின் பேரில் தினமும் இரவில் அவரை சென்று பார்த்துவிட்டு, வீட்டு நடப்புகளையும் பேசி விட்டு வருகிறார். வீட்டில் செய்த உணவுப் பண்டங்களை கொண்டு செல்கிறார். ‘என் தாய் எப்போது வீடு திரும்புவாரோ என துடித்துக்கொண்டு இருக்கிறேன் சார்‘ என்று அடிக்கடி சொல்லுவார்.
    முருகனோ அதிக படிப்பும் இல்லை; பணமோ, பதவியோ இல்லை. ஆயின் தாயிடம் உண்மை அன்பு கொண்டவர். தாய்மை என்பதின் பொருள் உணர்ந்தவர். உணர்ந்து செயல்படுபவர்.
    இது மறுதுருவம்.
    இதில் உயர்ந்தவர் யார்; தாழ்ந்தவர் யார்?

    தாயைப் பற்றியே கவலையின்றி முதியோர் இல்லத்தில் விட்டுவிடும் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
    இவைகளுக்கு இடையே பெற்று, பாலூட்டி, சீராட்டி, பண்பு பல போதித்து, நோயகல
    மருந்தளித்து, நோக்காலே அடைகாத்து, நேரத்தில் உணவளித்து, நேர்மையை படிப்பித்து, பார் புகழ நாம் வளர படியாகி நின்ற தாய்மை தள்ளாடுகிறது.

    தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ உண்மைதான்.
    ‘தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா’ என்றான் பாரதி.
    பல தாய்கள் வயதான காலத்தில் நாதியற்று இருக்கும் நிலை காணும்போது, இன்று தாய்க்கே மதிப்பில்லை என்று தெரிகிறது. யார் தாயாக அவள் இருப்பினும் நம் நெஞ்சம் வலிக்கிறது. பல இல்லங்களில் இந்நிலைக்கு ‘கிரியா ஊக்கி’ இன்னொரு பெண்தான் என உணரும் போது ...... .
    இனி வரும் நாட்களிலாவது இந்நிலை மாற வேண்டும்.
    தாய்மையை போற்றுவோம்! தாயை வணங்குவோம்!!
    அன்புடன்,
    RRG
    31/12/2018
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rrg மனம் வலித்தது .முதுமை எல்லோருக்கும் வரும் என்பதை அந்த பெண் உணர தவறி விட்டால் .காலம் பதில் சொல்லும் .அருகிருந்து கவனிக்கவில்லை என்றாலும் அன்பாக நான்கு வார்த்தைகள் பேசினாலே அந்த அன்னையின் மனம் உவகையுறும் .தமிழில் ஒரு பழமொழி உண்டு .நான்கு பிள்ளைகள் பெற்றவளுக்கு நடு சந்தியில் சோறு .ஒரு பிள்ளை பெற்றவளுக்கு வீட்டு மூலையில் சோறு .கடவுள் அன்னையரை ஆசீர்வதிக்க வேண்டும்
     
    Thyagarajan and sindmani like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:நன்றி. உண்மை நிலை இது தான்.
    துருவங்கள் நிலை என்னாளும் மாறாது
    படிப்பு பணம் பதவி சொகுசு சேரச்சேர
    தலையணை மந்திரம் ஏற ஏற
    மயக்கத்தில் கிடக்கும் மகன்கள்
    மாமனாரகமார உணர
    தாய்கள் மருத்துவ இல்லத்தில்
    விண்ணகம் அழைக்க
    பாஸ்போர்ட் கிடைக்க
    ஏங்குவார்கள்.
    கடவுள் நம் பக்கம்.
     

Share This Page