ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

Discussion in 'Astrology Numerology & More!' started by Bhaskaran, Oct 24, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ஜோதிடர் ஜெயம் சரவணன்.
    அனைவருக்கும் அன்பான வணக்கம்.

    ஜோதிடம் என்பது கலை. அந்தக் கலையைப் பயில்வது சுலபம். சுவாரஸ்யம். ஜோதிடம் என்பது கணக்கு. அந்தக் கணக்கை நாமே போட்டு, விடை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடம் என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையை, நம் வாழ்க்கையை நாம் வாழாமல் எப்படி? ஆகவே ஜோதிடம் குறித்து உங்களுடன் பேசுவதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷமே!
    இந்தத் தொடரில், ஜோதிடத்தைப் பற்றியும் ஜோதிடத்தில் உள்ள சில தோஷங்கள் பற்றியும் பேசுவோம்.

    ஜோதிட ரீதியாக உள்ள சில தோஷங்கள் பற்றி சிலர் அறியாமையால் குழப்பங்களை ஏற்படுத்தி வீண்பயத்தை பரப்புகிறார்கள்.அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விரிவான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும், உங்கள் முன் வைக்கப் போகிறேன்.

    இந்தத் தொடர் மூலமாக, உங்கள் குழப்பங்களுக்கு விடை காணவும் தேவையற்ற பயங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜோதிடம் என்பது எத்தனை எளிமையானது, எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்களே உணருவீர்கள். உங்கள் ஜாதகத்தை உங்களுக்கு சாதகமாக மாற்றுவது எப்படி என்று முழுமையாகப் பேசுவோம்!

    குரு வாழ்க! குருவே சகலமும்! குருவே துணை!

    முதலில் எல்லோருக்கும் உள்ள ஆரம்பக் கேள்வி... ஜோதிடம் என்றால் என்ன? ஒருவகையில்... இதுதான் ஆரம்பக் கல்வி!

    வாழ்க்கை என்னும் இருள் சூழ்ந்த பாதைக்கு வழிகாட்டுவது ஜோதி என்னும் ஜோதிடம்! ஜோதி என்றாலே நெருப்பு. இந்த பிரபஞ்சம் இயங்குவது, கிரகங்கள் இயங்குவது, என அனைத்துமே சூரியன் எனும் ஜோதியால்தான்.

    ஒருவருக்கு ஜாதகத்தைக் கணிக்கும்போது, லக்னம் என்னும் புள்ளியிலிருந்தே ஜாதகம் இயங்கும்.

    இந்த லக்னம் என்பது சூரியனின் ஒளிப்புள்ளி. எனவே லக்னம் என்பதை உயிர் என்னும் ஆத்மா என்று சொல்வதே பொருந்தும். அதனால்தான் சூரியனுக்கு ஆத்மகாரகன் என்றே பெயர்.

    இப்படி நம் உயிர் தொடங்கி உலகின் அனைத்து இயக்கங்களும், கிரகங்களும், அந்த கிரகங்கள் பயணிக்கும் நட்சத்திரங்களும், சூரியனின் தலைமையைக் கொண்டே இயங்குகின்றன.

    ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள 12 ராசிகள், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் அமைவைப் வைத்தே ஒரு ஜாதகம் கணிக்கப்படுகிறது.

    இப்படிக் கணிக்கப்படும் ஜாதகங்களில் நம்முடைய எதிர்காலம் முதலான அனைத்து விஷயங்களும் உள்ளன. எந்த நேரத்தில் எந்த பலனைத் தரவேண்டும் என்பதை தசாபுத்திகள் தீர்மானிக்கின்றன. அவற்றை எப்படித் தரவேண்டும் என்பதை கோச்சார கிரகங்கள் நிர்ணயம் செய்கின்றன.

    விதி, மதி, கதி என்ற மூன்று அம்சங்களே ஜோதிடத்தில் பிரதானமானது என்கிறார்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்த வல்லுநர்கள்.

    1. விதி என்பது நமக்கு என்ன விதிக்கப்பட்டது என்பதைக் காட்டுவது.

    2. மதி என்பது இப்படி விதிக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக எப்படி மாற்றியமைத்துக் கொள்வது என்பதைக் காட்டுவது.

    3. கதி என்பது மாற்றியமைக்கப்பட்டதை நமக்குச் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவது என்பதைக் குறிக்கிறது.

    இப்படி கணிக்கப்பட்ட ஜாதகங்களில் தோஷங்கள் என சில அமைப்புகளை ஜோதிடர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

    என்னென்ன தோஷங்கள்?

    · செவ்வாய் தோஷம்.

    · ராகு-கேது தோஷம்.

    · சனி தோஷம்.

    · ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

    நாம் இப்போது பார்க்கப்போவது இந்த தோஷங்கள் என்ன செய்யும்? இந்த தோஷங்கள் உண்மையிலேயே பார்க்கப்படவேண்டியதா? தோஷத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? கவலைப்பட தேவையில்லையா? தோஷத்தை மீறினால் ஏதாவது பாதிப்பு வருமா? பாதிப்பு வரும் என்றால் அதற்குப் பரிகாரம் உண்டா? என பலவிதமாக ஆராய்ந்து எளிமையாகவும், உங்களுக்கு புரியும்படியாகவும் விளக்கிச் சொல்லப்போகிறேன்.

    முதலில் செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம்.

    ஆணோ பெண்ணோ, திருமணத்திற்காக வரன் பார்க்கும்பொழுது முதல் கேள்வியாக எதிர்நோக்குவது செவ்வாய் தோஷம் இருக்கா என்பது தான்.

    அப்படி இந்த செவ்வாய் தோஷம் என்ன தான் செய்யும்?

    உண்மையில்... செவ்வாய் தோஷம், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இல்லை என்பதே உண்மை.

    தோஷம் என்ற ஒன்று இருந்தாலே தோஷ நிவர்த்தி அல்லது தோஷ பரிகாரம் அல்லது தோஷ விமோசனம் கண்டிப்பாக உண்டு. அதனால்தான் அந்தக் காலத்திலேயே அதாவது புராணக் காலத்திலேயே சாபம் கொடுக்கப்பட்டது. சாபவிமோசனமும் அளிக்கப்பட்டது.

    ஒருவர் ஜாதகத்தில், லக்னம் மற்றும் ராசிக்கு 2ம் இடம், 4ம் இடம், 7ம் இடம், 8ம் இடம், 12ம் இடம் ஆகிய இடங்களில் செவ்வாய்க் கிரகம் இருந்தால் அதுவே செவ்வாய் தோஷம்!

    செவ்வாய் தோஷம் மட்டுமே லக்னம் மற்றும் ராசி என்னும் இரண்டுக்குமே பார்க்கப்படுகிறது.

    அதற்கு காரணம், லக்னம் உயிராகவும், ராசி உடலாகவும் இருப்பதால் தான். அதனால் செவ்வாய் தோஷம் உடலையோ உயிரையோ பாதித்து விடும் என்று நம்பப்பட்டு வந்தது.

    உண்மையில், முன்காலத்தில் சுக்கிரனுக்கும், செவ்வாய் தோஷம் பார்க்கப்பட்டு வந்தது. அப்படி சுக்கிரனுக்கும் சேர்த்து பார்க்கப்படும் பட்சத்தில் இங்கு ஒருவருடைய ஜாதகம் கூட, செவ்வாய் தோஷம் இல்லாமல் இருக்கவே முடியாது.

    காலப்போக்கில் சுக்கிரனுக்கு... செவ்வாய் தோஷம் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது லக்னம் மற்றும் ராசிக்கு மட்டுமே செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.

    சாபம் என்றால் சாப விமோசனம் இருப்பது போல், தோஷம் என்றால் தோஷ நிவர்த்தி அல்லது விமோசனம் கண்டிப்பாக உண்டு.

    நாம் ஏற்கனவே கூறியபடி லக்னம் மற்றும் ராசிக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில், செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பொத்தாம்பொதுவாக” சொல்லிவிட முடியாது.

    மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய லக்னம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    மிதுனம், கன்னி லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு மட்டுமே தோஷ வீரியம் உள்ளது. அதற்கும் விதி விலக்குகள் உண்டு.

    இன்னும் தோஷநிவர்த்திகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

    - தெளிவோம்!
    நன்றி :- தி இந்து .
     
    Last edited: Oct 24, 2018
  2. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ஒரே தோஷம்... அது சந்தோஷம்தான்!

    நானும் ஒரு பெண் என்ற திரைப்படம் நினைவிருக்கிறதா. 1963ம் வருடம் வெளிவந்தது. இதில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். அதில் ஒரு பாடலை, வெறும் பாடலாகச் சொல்லிவிட முடியாது. மிகப்பெரிய தாக்கத்தை மனதுக்குள் ஏற்படுத்திய பாடம் என்று சொல்வதே பொருந்தும். கருப்பு நிறத்தையே கெளரவப்படுத்திய பாடல் அது.


    கண்ணா கருமை நிற கண்ணா

    உன்னைக் காணாத கண்ணில்லையே ...


    கருப்பு நிறம் குறித்த நல்லுணர்வை ஏற்படுத்திய அற்புதமான பாடல் அது. அதுபோன்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்தி செவ்வாய் தோஷம் பாதிப்பல்ல,அது எந்த வகையிலும் பாதிப்பைத் தருவதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.

    ஜோதிடம் என்பது உங்களை பயம் காட்டி ஒடுக்குவது அல்ல.

    ஜோதி என்னும் விளக்கின் உதவியோடு உங்களை வழிநடத்துவதாகவே நினைக்கிறேன்.

    இது விழி பிதுங்கச் செய்யும் வழியல்ல. உங்கள் விழியை விசாலப்படுத்தும் வாழ்வை நெறிப்படுத்தும் வழிமுறை!

    தோஷங்கள் குறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தோஷங்கள் என்று சிலதைப் பட்டியலிட்டுச் சொன்னேன். இதை நான் சொல்லவில்லை. நிறையபேர் சொல்லி வந்திருக்கிறார்கள். அதேவேளையில் நான் சொல்ல வருவது இதைத்தான்... எந்த தோஷம் இருந்தாலும் கவலை வேண்டாம்... வாழ்க்கையில் ஒரே தோஷம்தான்... அது சந்தோஷம்!

    · செவ்வாய் தோஷம்.

    · ராகு-கேது தோஷம்.

    · சனி தோஷம்.

    · ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

    இதுமட்டுமல்ல. இன்னும் இன்னும் பல தோஷங்கள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும். அதாவது, புத்திர தோஷம், களத்திர தோஷம், சயன தோஷம் என்று தோஷங்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் எந்த வகையில் அணுகுவது, இவற்றில் இருந்து எப்படியெல்லாம் மீள்வது என்பதை முழுமையாக அறிவதே முதன்மையான விஷயம்.

    அறிவதிலும் உணர்வதிலும்தான் இருக்கிறது புரிதல். தோஷங்களைப் புரிந்து கொண்டால், தோஷங்களில் இருந்து நிவர்த்தியாவதும் மிக மிக எளிதாகிவிடும்.

    இப்போது செவ்வாய் தோஷம் குறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு எனச் சொல்லியிருந்தேன். உண்மையில், இந்த ஐந்து லக்கினம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் வேலையே செய்யாது.

    மிதுனம் கன்னிக்கு மட்டுமே தோஷம் உண்டு. அதற்கும் சில விதிவிலக்குகள், தோஷ நிவர்த்தியாதல் என இருக்கின்றன. அப்படியென்றால், விடுபட்டிருக்கும் மற்றவையான ரிஷபம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு உண்டா என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.

    இங்கே ஒரு விஷயம்... இந்த ஐந்து ராசிக்கும் லக்னத்துக்கும் செவ்வாய், நட்பு கிரகம். எனவே செவ்வாய் தோஷ விலக்கு உண்டு. இதைத்தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

    தோஷம் தருகின்ற செவ்வாயை குரு பார்த்தாலோ சேர்ந்தாலோ, சனி பார்த்தாலோ சேர்ந்தாலோ செவ்வாய் தோஷம் ஒருபோதும் வேலை செய்வதில்லை.

    மேலும், கேதுவோடு இணைந்தாலும், செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை

    அதுமட்டுமா? செவ்வாய் திசை கடந்தவர்கள் அல்லது செவ்வாய் திசையை இனியும் அனுபவிக்க முடியாதவர்களுக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

    அதாவது, செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள், பிறக்கும் போதே செவ்வாய் திசையில்தான் பிறக்கிறார்கள். அதாவது எந்த வருடமோ, எந்த நாளோ, எந்தக் கிழமையோ... இந்த வருஷமோ... அடுத்த வருடமோ... எப்போது பிறந்தாலும் இந்த நட்சத்திரக்காரர்கள், செவ்வாய் திசையில்தான் பிறப்பார்கள், பிறக்கிறார்கள் என்பதே ஜோதிட சாஸ்திரக் கணக்கு!

    ஆக, பிறக்கும்போதே செவ்வாய் திசை இருப்பதால், அவர்கள் செவ்வாய் திசையைப் பார்க்கவே மாட்டார்கள். எனவே அவர்களுக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்யவே செய்யாது.

    அதுமட்டுமல்ல, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், திருமண வயதிற்கு முன்பே செவ்வாய் திசையைக் கடந்து விடுவதால் அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

    ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி, சதயம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்தவர்கள், செவ்வாய் திசையை எதிர்கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

    இவ்வளவு தோஷ நிவர்த்திகள் இருக்கும்போது, செவ்வாய் தோஷத்திற்கு யாரும் முக்கியத்துவம் தரத் தேவையே இல்லை என்பதே உண்மை.

    நான் அறிந்த வகையில், செவ்வாய் தோஷம் என்பது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இருக்கிற தம்பதி, சுமார் ஆயிரம் பேரைப் பார்த்தால் கூட, அதாவது ஒருவருக்கு செவ்வாய் தோஷம், இன்னொருவருக்கு (கணவன் அல்லது மனைவி) இல்லை எனும் வகையில் பார்த்த போது, எந்த பாதிப்பும் இல்லாமல், ஒரு பிரச்சினை கூட இல்லாமல், அந்நியோன்யமாகவும் பேரன், பேத்திகளோடு நீண்ட ஆயுளுடனும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    என் தாத்தா வரதராஜூலு எனக்கு தாத்தா மட்டும் அல்ல. ஜோதிடக் கலையில் எனக்கு குருவும் கூட. சிறுவயதில் இருந்தே அவர் சொல்லித் தந்த ஜோதிடப் பாடங்கள், ஒவ்வொன்றும் வேதங்கள். செவ்வாய் தோஷம் உள்ள பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் அவர்கள் செவ்வாய் தோஷமே இல்லாதவர்களைத் திருமணம் செய்து கொண்டு, மிகப்பெரிய வளர்ச்சியுடனும் கருத்தொருமித்த நிலையிலும் சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்லுவார். அவர்களில் நிறையபேர், எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததற்கு, செவ்வாய் தோஷம் பற்றி நீங்கள் எடுத்துச் சொன்னதே காரணம் என்று சொல்லி, வணங்கி, ஆசி வாங்கிவிட்டுச் செல்வார்கள்.

    செவ்வாய் தோஷம் குறித்துச் சொல்லும்போது, தாத்தா நினைவுக்கு வரவே, இதைச் சொன்னேன். அவ்வளவுதான்.

    சரி... அப்படியானால், செவ்வாய் தோஷத்தால், ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி எவரேனும் கூறும்பட்சத்தில் நிச்சயமாக, உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். அந்த பாதிப்போ வேதனையோ... அது செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்டது அல்ல! கோச்சார கிரகங்களால், குறிப்பாக, ராகு மற்றும் சனி பகவானால் உண்டாகும் சில பாதிப்புகளே காரணம்! மேலும் தசா புத்தியையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஆக, செவ்வாயால் தோஷமில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.

    மிதுனம் மற்றும் கன்னி ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு மட்டுமே, செவ்வாய் தோஷ வீரியத்தை நான் மேலே குறிப்பிட்டபடி விலக்குகள் உண்டா என ஆராய்ந்து, அதிலும் தோஷ நிவர்த்தி ஆகவில்லையென்றால் மட்டுமே, செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய் தோஷக்காரர்களை மணம் புரிந்து கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்கள் ஜாதகத்தில், ராசிக்கட்டத்துக்கு பக்கத்தில் நவாம்சம் என்றொரு கட்டம் உண்டு. அதில், செவ்வாயின் நிலை, குருவின் நிலை, சுக்கிரனின் நிலை ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    நவாம்சக் கட்டத்தில், செவ்வாய், மேற்கூறிய மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தாலும் தோஷத்தின் வீரியம்... அதாவது செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    எனவே, செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவம் தராமல், ஜாதக ரீதியான பொருத்தங்களை (கவனிக்கவும்... இங்கு நான் நட்சத்திர ரீதியான பொருத்தத்தைச் சொல்லவில்லை) கவனித்து திருமணங்களைச் செய்தாலே, மனமொத்த தம்பதியாக நீடூழி வாழ்வார்கள்.

    என்ன நண்பர்களே... செவ்வாய் தோஷம் என்பது தோஷமே இல்லை என்பது புரிகிறதுதானே.

    இன்னும் இன்னும் விளக்கங்கள் இருக்கின்றன. செவ்வாய் என்பவர் யார், செவ்வாய் பற்றி அறிவியல் தரும் உண்மைகள் என பல விஷயங்களை இன்னும் பார்க்கலாம்.

    செவ்வாய் பகவான் என்பவர் யார்?

    பரத்வாஜர் ரிஷிக்கும் தேவகன்னிகைக்கும் நர்மதை ஆற்றங்கரையில் பிறந்தவர் என்றும் ரிஷியாலும் தேவகன்னிகையாலும் அதாவது தாய்தந்தையால் கை விடப்பட்டு, பூமா தேவியால் வளர்க்க பட்டவர் செவ்வாய் பகவான் என்றும் கூறப்படுகிறது.

    அதேசமயம், செவ்வாய் பகவான் பற்றி இன்னொரு கதையும் உள்ளது. அதை அடுத்து பார்ப்போம்.



    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து .
     
    Last edited: Oct 24, 2018
    JananiSridhar likes this.
  3. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    செவ்வாய் தோஷம் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    எந்தவொரு செயலுக்கும் மாற்று ஏற்பாடு வைத்துத் தந்திருக்கிறது சாஸ்திரம். ஆங்கிலத்தில் ‘ஆப்ஷன்’ என்பார்களே! அப்படி சாஸ்திரத்திலும் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்திலும் உண்டு.


    சரி... செவ்வாய் பகவான் என்பவர் யார்?

    பரத்வாஜர் ரிஷிக்கும் தேவகன்னிகைக்கும் நர்மதை ஆற்றங்கரையில் பிறந்தவர் என்றும் ரிஷியாலும், தேவகன்னிகையாலும் கை விடப்பட்டு பூமா தேவியால் வளர்க்க பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

    ஆனால் மற்றுமொரு கதையும் உள்ளது,

    அசுரர்களின் அட்டகாசத்தை ஒடுக்குவதற்காக, சூரியபகவானுக்கு வருகிறது கட்டளை. அசுரக் கூட்டத்தை அழித்து அவர்களின் ராஜகுரு சுக்ராச்சரியரையும் அழிக்க வேண்டும் என்பதே உத்தரவு.

    ஆனால் சூரிய பகவானோ... உயிர்களை உருவாக்கும் நெருப்புத் தன்மை உடையவர். உலக இயக்கத்துக்கேக் காரணமானவர். அப்படிபட்டவர் எப்படி ஒரு உயிரை அழிப்பார்? அழிக்க எப்படி மனம் வரும்?

    அதனால் தன் தலை முடியிலிருந்து ஒன்றை எடுத்து அதற்கு உருவத்தையும் உயிரையும் கொடுத்தார் சூரிய பகவான். ( சிலர், சூரியனின் சேவகர் அகோரர் என்றும் சொல்கிறார்கள்)

    அவரே குஜன், பௌமன், அங்காரகன் என்று அழைக்கப்படும் மங்கலகாரகன் செவ்வாய் பகவான்).

    இவர் தீமைகளை அழிப்பதற்காகப் படைக்கப்பட்டவர், எனவே இவர் அழிக்கும் நெருப்பு. அதாவது,

    சூரியன்— ஆக்கும் நெருப்பு

    செவ்வாய்— அழிக்கும் நெருப்பு

    கேது — தெய்வீக நெருப்பு ( தீபம், கற்பூரம், யாகம், ஹோமம் முதலானவற்றைச் சொல்லலாம்)

    தீய சக்தி எனும் குப்பைகள் எரிக்கபட்டால்தான் நாம் நலமாக இருக்க முடியும், எனவே செவ்வாயைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை, அவர் மங்கலகாரகன், சுபத்தை மட்டுமே செய்வார்.

    இவர் அசுரர்களை அழித்தாரா? சுக்ராச்சார்யரை வதம் செய்தாரா? நவக்கிரகத்தில் எப்படி இடம் பெற்றார்? இதையெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்.

    இப்படி அசுரர்களை அழிக்க சூரியனால் படைக்கப்பட்ட செவ்வாய், அசுரர்களை வதம் செய்த இடம் மகர ராசி. அந்த மகர ராசியில்தான் செவ்வாய் உச்சம் எனும் உயரிய அந்தஸ்தை அடைகிறார்,

    அதாவது ஆட்சி வீட்டில் ( மேஷம், விருச்சிகம் ) 100 சதவிகித பலம், உச்ச வீடான மகரத்தில் 200 சதவிகித பலம் என அடைகிறார்,

    அசுரர்களை அழித்த செவ்வாய், அசுர குருவான சுக்கிராச்சார்யர் என்ற சுக்கிரனை அழிக்க முற்படும் போது சுக்கிரன், செவ்வாயோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.

    அதாவது மனிதர்களின் பாவபுண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களைத் தர நவகிரகங்கள் உருவாக்க பட இருக்கிறார்கள். அதில் உம்மையும் ( செவ்வாயை) ஒரு கிரகமாக நான் அங்கீகரிக்கிறேன். எனவே என்னை ஒன்றும் செய்துவிடாதே என கேட்டுக்கொள்கிறார் சுக்கிர பகவான்.

    அதை ஏற்று செவ்வாய் பகவான், சுக்கிரனை வதம் செய்யாமல் விட்டு விடுகிறார்.

    இதனால் செவ்வாய், சுக்கிரன் வெளிப்பார்வைக்கு ஒருவருக்கொருவர் பகை போல் தெரிந்தாலும் இருவருக்கும் ரகசிய நட்பு உள்ளது.

    இதை நம் ஜாதகத்தில் எப்படி உணர முடியும்?

    ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ, கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு.

    (ஆனால் இதை அறிந்த ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அதிபதியான சூரியன், தான் படைத்த செவ்வாயை நட்பு கிரகமாக ஏற்காமல் சமம் என்ற பத்தோடு ஒன்று, இத்தோடு இதுவும் ஒன்று என சற்று விலகியே இருக்கிறார்.)

    எனவேதான் சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னக் காரர்களுக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    இனி 12 ராசிகளுக்கும் சுருக்கமாக ஒரு வரியில் ஏன் செவ்வாய் தோஷம் பாதிப்பதில்லை எனப் பார்ப்போமா?

    லக்னம்/ராசி

    மேஷம்: விருச்சிகம்:- இது செவ்வாயின் ஆட்சி( சொந்த வீடு). தன் வீட்டுக்கே யாராவது கெடுதல் செய்வார்களா? எனவே தோஷம் இல்லை.

    ரிஷபம்- துலாம்: சுக்கிரனின் சொந்த வீடு. இருவருக்கும் ரகசிய நட்பு இருக்கிறது அல்லவா. எனவே செவ்வாய் தோஷம் இல்லை,

    கடகம்- சிம்மம் : நவக்கிரகங்களின் தலைவன் சூரியன். எனவே சூரியனோடு சேர்ந்த செவ்வாய் ஒருபோதும் தோஷத்தைத் தருவதில்லை.

    மேலும் சந்திரன் தாய் எனும் அந்தஸ்தை உடையதாலும் 12 ராசிகளிலும், ராகு கேது தவிர்த்து மற்ற கிரகங்களை தொடர்பு கொண்டு இருப்பதாலும் தோஷம் இல்லை. மேலும் சந்திரன், செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கல யோகத்தைத் தருமே தவிர, தோஷத்தை தருவதில்லை.

    தனுசு- மீனம்: குருபகவானின் சொந்தவீடு. இவர் தேவகுரு, எனவே குருவோடு சேர்ந்த அல்லது குரு பார்வை பெற்ற செவ்வாய், குரு மங்கல யோகத்தைத்தான் தருவாரே தவிர, தோஷத்தை எப்போதும் தரமாட்டார்,

    மகரம்: சனிபகவானின் ஆட்சி வீடு. எனவே இந்த வீட்டில்தான் செவ்வாய் பகவான் உச்சம் அடைகிறார். ஆகவே இங்கு அமர்ந்த செவ்வாய், தோஷத்தை தருவதில்லை,

    கும்பம்: இதுவும் சனி பகவானின் ஆட்சி வீடு. நாம் ஏற்கெனவே விளக்கியபடி சனிபகவான் தொடர்பு பெற்ற செவ்வாய் பகவான் தோஷத்தைத் தரமாட்டார்.

    நான் ஏன் மிதுனம் , கன்னி ராசியை கடைசியாக எடுத்துக்கொண்டேன் என்றால் இந்த இரண்டு லக்ன மற்றும் ராசிகளுக்கு மட்டுமே செவ்வாய் தோஷத்தின் வீரிய அளவு பார்க்கபட வேண்டும்,

    இந்த ராசிகளுக்கு செவ்வாய் கடுமையான எதிரி.

    எனவே இதற்கு மட்டுமே விதிவிலக்கு என்ன( நாம் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டபடி) என்பதை ஆராய்ந்தால் போதும், 90 சதவிகிதம் செவ்வாய் தோஷ விலக்கு ஏற்படும்.

    எனவே, செவ்வாய் தோஷத்திற்கு இதுவரை தந்த விளக்கங்கள் உங்களுக்குப் பயன் உள்ளதாகவும் இருக்கும்; பயம் போக்குவதாகவும் இருக்கும் என நம்புகிறேன்,

    எனவே, தோஷத்தைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை. ஜாதக ரீதியான பொருத்தங்களை ஆராய்ந்து மணவாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன். மங்கலகரமான வாழ்வு நிச்சயம். மங்காத செல்வமும் பிள்ளைச் செல்வமும் கிடைத்து நல்ல அன்பான வாழ்க்கைத் துணையும் அமைந்து சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்!

    எம்பெருமான் முருகன் துணை இருப்பான். என்னுடைய குரு யோகராம்சங்கர் ஆசியுடன் செவ்வாய் தோஷ விவரங்களை இன்னும் இன்னுமாகப் பார்ப்போம்.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து .
     
    Last edited: Oct 24, 2018
  4. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ஸ்வீட் ஸ்டாலுக்குச் சென்று, ஏதேனும் வாங்கும் போது, அதன் ஒரு துண்டைக் கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டுப் பார்த்து வாங்கினால்தான் நமக்கு நிம்மதி; நிறைவு. இந்த அகண்ட உலகில், எல்லாவற்றுக்கும் ‘சாம்பிள்’ தேவையாய் இருக்கிறது.

    ஆகாயம் போல மனசு, பால் போல் நிறத்தில் சட்டை என்று உதாரணங்களைச் சொல்லியும் பேசியும் பழகிவிட்டோமே!


    இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற செவ்வாய் தோஷ விஷயத்துக்கும் சில உதாரணங்கள் தேவைதான். அவற்றைச் சொன்னால், இந்த செவ்வாய் தோஷம் ‘ஒரு மேட்டரே இல்லை’ என்பது உங்களுக்கு எளிமையாய் புரியும்!

    என்னிடம் வந்த சில செவ்வாய் தோஷ ஜாதகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    அதில் ஒரு ஜாதகம்... ஜாதகத்துக்கு உரியவர் ஒரு பெண். அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்ததால், பல வரன்கள் நிராகரித்த நிலை. இதனால் விரக்தியில் இருந்த பெற்றோர் என்னிடம் வந்தார்கள்.

    அந்தப் பெண்ணின் ஜாதகம் இதில் இணைத்திருக்கிறேன்.

    இந்த ஜாதகம் துலாம் லக்னம், மிதுன ராசி, செவ்வாய் மகரத்தில்!

    எனவே லக்னத்திற்கு 4 ல் செவ்வாய், ராசிக்கு 8 ல் செவ்வாய், இது கடுமையான செவ்வாய் தோஷம் என ஜோதிடர்களால் சொல்லப்பட்டது.

    நான் அவர்கள் கொண்டுவந்த ஜாதகத்தில் சில குறிப்புகள் எழுதித் தந்தேன். இப்போது இந்த ஜாதகத்தை அப்படியே நகல் (xerox) எடுத்து பிள்ளை வீட்டாருக்குக் கொடுங்கள் என்று சொன்னேன்.

    அடுத்த ஒரு மாதத்திற்குள் வரன் தகைந்தது, அந்தக் குடும்பமே நெகிழ்ந்து போனது. வியந்து போனது.

    அப்படி என்ன குறிப்பு அது?

    “ இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என்பது சரிதான், ஆனால் உச்சம் பெற்ற செவ்வாய், எப்போதுமே தோஷம் தருவதில்லை, மற்றும் 7 மற்றும் 8 ம் இடம் சுத்தம் (7- ம் இடமான மேஷம், 8 - ம் இடமான ரிஷபம்) எனவே செவ்வாய் தோஷம் பலவீனமாகிவிட்டது. தோஷமும் நிவர்த்தி ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தேன்.

    மாப்பிள்ளை வீட்டார் ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சென்ற போது, ஜோதிடர்கள் இந்தக் குறிப்பை கவனித்து தோஷ நிவர்த்தி என கூறி ஒப்புதல் தந்தார்கள்.

    தற்போது அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், அவர், தன் கணவருடனும் குழந்தைகளுடனும் கனடா நாட்டில் வசித்து வருகிறார்கள். நல்ல செல்வ வளத்துடன், நலமாக வாழ்கிறார்கள்.

    பெண்ணின் பெற்றோர் இன்னமும் எனக்கு நன்றி கூறி அவ்வப்போது பேசவும், நேரில் வேறு சில ஆலோசனைக்கும் வந்து கொண்டிருக்கின்றனர். நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான். அது... ’ எல்லாம் முருகன் செயல்’!

    இப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகர்கள் என்ன விதமான பரிகாரங்கள் செய்யலாம் என பலரும் கேட்கின்றனர். உண்மையில் நான் பரிகாரம் என பரிந்துரைப்பது முருக வழிபாடு மட்டுமே! அதாவது, கந்தனை வேண்டினால், சகல தோஷங்களும் காணாது போகும். இதில் செவ்வாய் தோஷமெல்லாம் எம்மாத்திரம்?

    அதாவது நான் பரிந்துரைக்கும் பரிகாரங்கள் பஞ்சபூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை,

    மேஷம், சிம்மம், தனுசு:- நெருப்பு ராசிகள்

    ரிஷபம், கன்னி, மகரம்:- நில ராசிகள்

    மிதுனம், துலாம், கும்பம்:- காற்று ராசிகள்

    கடகம், விருச்சிகம், மீனம்:- நீர் ராசிகள்.

    ஆக செவ்வாயானது, நெருப்பு ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால் ஆலயத்தில் விளக்கேற்றி தீப வழிபாடு செய்து வாருங்கள். அது ஒன்றே போதும்...விரைவில் தோஷ நிவர்த்தியாகிவிடும்!

    செவ்வாயானது, நில ராசியில் நின்று தோஷத்தைத் தந்தால், அவரவர் நட்சத்திரங்களுக்கு உண்டான மரம் வளர்த்தல், அல்லது கோயிலில் உள்ள ஸ்தல விருட்சங்களுக்கு தண்ணீர் விட்டு வழிபடுதல் முதலானவை தோஷ நிவர்த்திக்கு வழிவகுக்கும்.

    செவ்வாயானது, காற்று ராசியில் இருந்து, தோஷத்தைத் தந்தால், முருகனின் கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம், துர்கை கவசம், துர்கை அஷ்டோத்ரம் முதலானவற்றைப் படித்து வர, செவ்வாயால் உண்டான தோஷம் நிவர்த்தியாகி விடும் என்பது உறுதி!

    செவ்வாயானது, நீர் ராசியில் இருந்து தோஷத்தைத் தந்தால். இறைவனுக்கு நடத்தப்படும் அபிஷேகப் பொருட்களான பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் அல்லது கோயில்களில் விளக்கேற்ற நல்லெண்ணெய் ஆகியவற்றை வழங்கி பிரார்த்திக்கலாம்.இவற்றாலும் தோஷங்கள் சீக்கிரமே நிவர்த்தியாகும்!

    சரி... செவ்வாய் தோஷம் என்பதே இல்லை என்றீர்கள். இப்போது பார்த்தால், அதற்கு பரிகாரங்களைச் சொல்கிறீர்கள் என்று எவரேனும் கேட்கலாம்.

    தோஷம் என்பது திருமணமே இல்லை என்ற நிலையை ஒருபோதும் எவருக்கும் தருவதில்லை, தாமதம் என்ற நிலையை மட்டுமே தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே

    இந்த பரிகாரங்கள் உங்களுக்கோ, அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ விரைவில் திருமணம் நடந்து இல்லறம் சிறக்க வாழ வேண்டும் என்பதற்காகதான்!

    இன்னும் தோஷங்கள் குறித்த பரிகாரங்கள் பல இருக்கின்றன. அவற்றை அடுத்தடுத்துப் பார்ப்போம்!

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து .
     
    Last edited: Oct 24, 2018
  5. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையிலான பரிகாரங்களை, கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்,

    இப்போது இன்னும் சில பரிகாரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


    முன்னதாக ஒரு விஷயம்...

    இந்தத் தொடரை வாசிக்கும் ஒரு சிலர் “ எனக்கு ஜோதிடத்தில் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை, ஏதோ நீங்கள் சொல்ல வருகிறீர்கள் அதையும் படித்துதான் பார்ப்போமே” என்பவர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் சிந்திக்க வைக்கும்.

    விஞ்ஞானபூர்வமாக 1610 ல் கலிலியோ செவ்வாயைக் கண்டுபிடித்தார். ஆனால் 1659 ல் வானியல் ஆய்வாளர் Drew என்பவர் செவ்வாயைப் பற்றி முழுமையானத் தகவல்களை வெளியிட்டார்.

    அதாவது, செவ்வாய் சிவப்பு நிற கிரகம், பூமியை ஒத்த நில மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு போன்ற தகவல்களை உலகுக்குத் தந்தார்,

    இதை ஜோதிடம் என்னும் வானவியல் கலை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏன் யுகங்களைக் கடந்தும் கூட தங்கள் ஞான திருஷ்டியால் இவை அனைத்தையும் அறிந்து சொல்லியிருந்தது.

    “ செவ்வாய் சிவப்பு நிற கிரகம், அதன் நிலம் காரத்தன்மை கொண்டது, பூமியை ஒத்து இருப்பதால் சக தன்மை என்னும் பொருளில் சகோதர கிரகம் என்று சொல்லலாம். சூரியனிடம் இருந்து வரும் பெரும் பாதிப்புகளை தடுத்து பூமியைக் காப்பதால், எதிர்த்துப் போராடும் குணாதியசத்தை வைத்து, போர் கிரகம் என்ற பெயர் இதற்கு அமைந்தது என சொல்லிக்கொண்டே போகலாம்,

    மீண்டும் பரிகாரத்திற்கு வருவோம்.

    நம் உடலில் உள்ள ரத்தம், செவ்வாயைக் குறிக்கும்.

    திருமணப் பொருத்தத்தின் போது செவ்வாய் தோஷம் ஏன் பார்க்கப்படுகிறது தெரியுமா. அறிவியல் ரீதியாக ஒவ்வொருவரின் ரத்தமும் வேறுபட்ட வகையில் ( Blood group) இருக்கும்.

    இந்த வகை ரத்தம், இந்த வகைக்கு மட்டுமே சேரும் என்பது பொது விதி.

    உதாரணமாக:— ஆணுக்கு A குரூப் என்றால், பெண்ணுக்கு A அல்லது AB யாக இருக்க வேண்டும்,

    ஆணுக்கு B குருப் என்றால், பெண்ணுக்கு B அல்லது AB வகை ரத்தம் இருக்க வேண்டும்.

    மாறாக, ஆணுக்கு A வகை என்றால், பெண்ணுக்கு O - B யாக இருக்கக்கூடாது,

    ஆணுக்கு B வகை என்றால், பெண்ணுக்கு O- A ஆக இருக்கக்கூடும் கூடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது,

    அதாவது இணைய வேண்டிய ரத்தங்கள் இணையும் போது பிறக்கும் குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறக்கும்; வளரும்.

    மாறாக இணையக்கூடாத ரத்தங்கள் இணையும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் போகவும் அல்லது பாதிப்புள்ள குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

    எனவே, ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் உங்களுக்கு வர இருக்கும் ரத்த வகை அறிந்து மணம் முடித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான, மன நிறைவான வாழ்க்கையை அதன் மூலம் அமைத்துக்கொள்ளுங்கள்.

    இன்னும்சிலபரிகாரங்கள்:-

    ஜாதகத்தில் செவ்வாய் பலம் இழந்தவர்கள், முடிந்த அளவு ரத்ததானம் தாருங்கள், அற்புதமான பலன்களைக் காண்பீர்கள்.

    செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் தருவது. உங்கள் கிரகத்துக்கும் அதன் மூலமாக உங்களுக்கும் பலம் கொடுக்கும். பலன் பெறுவீர்கள்!

    உங்கள் சகோதர உறவுகளுக்கு பிரதிபலன் பாராமல் உதவி செய்யுங்கள். சகோதர பந்தத்தை ‘நாம ஒரே ரத்தம்’ என்று சொல்லுகிறோம், இல்லையா. ஆகவே சகோதர உறவுக்குச் செய்யப்படும் உதவி, உங்கள் வாழ்வை இன்னும் வளரச் செய்யும்; மலரச் செய்யும்!

    சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களிலெல்லாம், சிவப்புநிற ஆடைகளை தானம் தாருங்கள்,

    அம்மன் ஆலயங்களில் ( சக்தி வடிவான தெய்வம்)

    குங்கும அர்ச்சனை செய்யுங்கள். முடிந்த அளவு ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் செய்து வாருங்கள், செவ்வாயால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகும்,

    வீட்டு வாசலில் சிவப்பு மிளகாய், எலுமிச்சை பழத்தோடு சேர்த்து கட்டி வையுங்கள். திருஷ்டியும் விலகும். தீயசக்தியும் அண்டாது. தோஷங்களும் விலகும்!

    இவை அனைத்தும் நல்ல நல்ல பலன்களை வாரி வழங்குவது உறுதி!

    இன்னொரு விஷயம்...

    பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாய், எனவே செவ்வாய் பலம் அடைந்தால் கணவன் பலம் அடைவதாக அர்த்தம்.

    அப்படியொரு பலத்தை நான் பெற்று, அதன் மூலம் கணவர் பலம் பெறுவது எவ்விதம்?

    அடுத்துப் பார்ப்போம்!

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து .
     
    Last edited: Oct 24, 2018
  6. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பெண்களுக்கான சில விபரங்களைத் தருவதாகச் சொல்லியிருந்தேன். அதை இப்போது பார்ப்போம்.

    ஆண்களுக்கு மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன்,


    பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாய்.

    எனவே கணவர் நலமாகவும் வளமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ செவ்வாய் சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து செய்தாலே போதும், நீங்கள் நினைத்தது நடக்கும்.

    முதலில் செவ்வாயின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்,

    செவ்வாய்:—

    நிறம் — அடர் சிவப்பு ( மெரூன்)

    குணம் —ராஜஸம்( கோப குணம்)

    மலர்——-செண்பகம்

    ரத்தினம்—- பவளம்

    தானியம்——- துவரை( துவரம் பருப்பு)

    பெண்கள் தங்கள் நெற்றியில் இடும் குங்குமம் -சிவப்பு

    அந்தக் காலத்திலும், தற்போதும் பெண்கள் தாலியில் பவளமணிகளை கோர்த்துக் கொள்வது செவ்வாய் என்னும் கணவருக்காகத்தான்,

    சிவப்பு நிற மலர்கள் சூடிக்கொள்வதும், செவ்வாயின் ஆளுமையே! மல்லிகையைதானே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என கேட்கலாம் மல்லிகையின் மணம் சுக்கிரன் சம்பந்தப்பட்டது,

    துவரை நாம் அதிகமாக உபயோகப்படுத்தும் உணவு என்பது நம் எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள்.

    பொதுவாக நமது உடலில் பஞ்சபூதங்களும் அடக்கம்,

    நவகிரகங்களும் அடக்கம்,

    சூரியன்- உடலில் உள்ள எலும்பு, முதுகெலும்பு, இதயம், வலதுகண் இவற்றைக் குறிக்கும்.

    சந்திரன்- உடலில் உள்ள ரத்த ஓட்டத்தைக் குறிக்கும். இங்கே கவனிக்கவும்... ரத்தம் அல்ல, ரத்த ஓட்டம்.

    மனம், எண்ணம், நீர்ச்சத்து, இடது கண் ஆகியவை ஆகும்.

    புதன்- தோல்( skin), பச்சை நரம்புகள்,( veins)

    குரு— மூளை, வயிறு

    சுக்கிரன்- உடலில் உள்ள சுரப்பிகள், கணையம், விந்து மற்றும் கருப்பை

    சனி- ஜீரண உறுப்புகள், முதுகு, மூட்டுக்கள்

    ராகு- நவ துவாரங்கள், ( பிளந்த அமைப்புகள்)

    கேது- குடல், ஆசனவாய்,

    செவ்வாய் — ரத்தம், ரத்தம் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜை, பற்கள், நகம், புருவம் ...

    இதில் பெண்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன தெரியுமா?

    உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

    நகத்தில் அழுக்கு சேராமலும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

    எக்காரணத்தைக் கொண்டும் புருவத்தை அழகு படுத்துகிறேன் என்று ஐப்ரோ எனும் திரெட்டிங் என்கிற சீர்படுத்துவதைச் செய்யாதீர்கள்.

    நீங்கள் அப்படி செய்பவர் எனில், நன்றாக கவனியுங்கள்... நீங்கள் புருவத்தை சீர் செய்யும் போதெல்லாம் உங்கள் கணவருக்கு ஒன்று உடல்நலம் கெட்டு போகும் அல்லது ஒரு புதிய பிரச்சினை வந்து சேரும்.

    நான் சொல்வது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் இதுவே உண்மை,

    நிதானமாக யோசித்துப்பாருங்கள்... அல்லது சோதித்துப் பாருங்கள், “ஆம் உண்மைதான் எல்லாம்” இல்லை “தவறு “என்றாலும் உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள்,

    நான் பல ஆய்வுகளைச் செய்த பின்னரே இந்தத் தொடர் எழுத ஆயத்தமானேன்.

    இன்று மணவாழ்வில் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பலருக்கும், குறிப்பாக பெண்களுக்கு மேலே சொன்ன ’பல்,நகம்,புருவம்’ இந்த மூன்றையும் சரிசெய்யச் சொன்னேன், நிறைய மாற்றங்களை கண்டதாகச் சொன்னவர்கள் ஏராளம்.

    இந்த பரிகாரமுறைகளைச் செய்யுங்கள்... நல்ல நல்ல மாற்றங்களை உணருவீர்கள். மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

    என்னுடைய ஆசான் யோகராம்சங்கர் அவர்களை வணங்கி,

    எம்பெருமான் முருகனை வணங்கி... அடுத்து மேலும் சில தோஷங்களைச் சொல்கிறேன்.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து .
     
  7. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    இப்போது, ராகு,கேது தோஷம், எனும் சர்ப்ப தோஷம் குறித்துப் பார்ப்போம்.

    இந்த தோஷம் என்ன செய்யும்?

    திருமணத்தடை, சந்தான தோஷம் எனப்படும் புத்திர தோஷம், மன நிறைவான மணவாழ்க்கை அமையாமை முதலான பாதிப்புகளைத் தரும் என்பது ஜோதிடர்களின் கருத்து.

    இது உண்மையா?

    இப்படியான பாதிப்புகளை சர்ப்பங்கள் அதாவது ராகு,கேது தருமா?

    இனி வரும் பதிவுகளில் நாம் விரிவாகப் பார்ப்போம்.

    “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதுபோல், வாழ்க்கையில் ஏற்படும் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஜாதகத்தைப் பார்ப்பதும், தோஷங்களை பற்றிப் பயப்படுவதும் அர்த்தமற்றது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!

    இந்தத் தொடர் ஒரு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் தொடர். இந்தக் குழப்பங்கள் குறித்தும் பயம் குறித்தும் போக்க வேண்டிய அக்கறையுடன் எழுதப்படுகிற தொடர். நீங்கள் இதைக் கவனமாக படித்து வாருங்கள்.

    உங்களுக்கு இந்த தோஷம் உள்ளது, இதற்கு இப்படியான பரிகாரங்கள் செய்ய வேண்டும், என உங்களை அச்சமூட்டி மனத் தடுமாற்றம் தரும் உளைச்சலில் இருந்து விடுபடவேண்டும் என்பதே இந்தத் தொடரின் நோக்கம்.

    உங்கள் ஜாதகத்திலோ அல்லது உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்திலோ தோஷம் இருந்து அதற்கு நீங்கள் பரிகாரம் செய்தால், அந்த தோஷம் நீங்கி, உங்கள் ஜாதகத்தில் தோஷம் தந்த கிரகங்கள் இடம் மாறி விடுமா? மாறாதுதானே!

    நீங்கள் வேறு ஜோதிடரிடம் சென்று ஆலோசனை கேட்டாலும் அவரும் அதே பரிகாரத்தைதான் பரிந்துரைப்பார். அப்போது நீங்கள் ’அய்யா, இந்த பரிகாரத்தை தாங்கள் ஏற்கெனவே செய்து விட்டோம்’ என்று கூறினால், அவர் வேறு வகையான பரிகாரத்தை கூறுவார். அதையும் நீங்கள் செய்வீர்கள் அல்லது செய்ய வேண்டுமா என யோசிப்பீர்கள். அப்படித்தானே!

    எனவே பரிகாரம் என்பது தோஷத்தை நீக்குவதல்ல. அது தோஷத்தின் வீரியத்தைக் குறைப்பது அல்லது ஏற்பட்ட தடைகளை சிறிதளவேனும் தளர்த்துவது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    தோஷம் என்பது நம் முன் வினைப் பயன். அதை நாம் எந்த வகையிலும் அனுபவித்தே தீரவேண்டும். அதை நாம் எந்த வகையிலும் மாற்றவே முடியாது என்பது நூறு சதவிகித உண்மை.

    விதியை மதியால் வெல்லவே முடியாது.

    சில தளர்வுகளை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

    விதியை வெல்ல முடியும் என்றால் மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்வை அமைத்துக்கொள்ள முடியுமே!

    எனவே விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டாலே நாம் விதியை வென்றவர் ஆகிவிடுவோம்.

    ராகு, கேது என்பவர் யார்? அவர்கள் எதற்காக கிரகங்கள் பட்டியலில் வந்தார்கள்? அவர்களின் கடமை என்ன? என்னவிதமான பலன் அல்லது தாக்கத்தை தருவார்கள்?

    அடுத்து, விரிவாக பார்ப்போம்.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  8. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    “விதியை வெல்ல முடியாது, ஆனால் வீரியத்தைக் குறைக்க முடியும்” என்று பார்த்தோம்.

    அப்படியானால் விதி என்பது என்ன?


    அது... முன் ஜென்ம வினை, அந்த வினைகளை அனுபவிக்கவும், இந்தப் பிறப்பில், இனி பாவம் செய்யாமல் புண்ணியங்களைச் செய்வதாலும், பிறப்பற்ற மோட்சம் என்ற நிலையை அடைவது என்பதே நம் பிறப்பின் நோக்கம்.

    இப்படி நாம் பிறக்க , அதாவது நம் பெற்றோருக்கு நாம் பிறக்க, யார் காரணம்?

    சூரியனா? இல்லை அவர் ஆன்மா என்னும் உயிர்ப்புள்ளி.

    சந்திரனா? இல்லை.... அவர் நம் மனம் மற்றும் உடல்.

    செவ்வாயா? இல்லை.... அவர் நம் உடலின் ரத்தம்.

    புதனா? இல்லை.... அவர் நம் அறிவு மற்றும் மேல்தோல்.

    வியாழன் எனும் குரு பகவானா? இல்லை... அவர் புத்திர பாக்கியம் உண்டு என்கிற அருளைப் புரிபவர் மற்றும் நம் மூளை.

    சுக்கிரனா?....அவரும் இல்லை... அவர் உடலின் உள்ளே உள்ள சுரப்பிகள் மற்றும் சுக்கிலம் சுரோணிதம்.

    அப்படியானால் சனிபகவானா? அவரும் இல்லை... அவர் நம் முன் ஜென்ம வினைகளின் அடிப்படையில், இந்த ஜென்மத்தில் நாம் என்ன அனுபவிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நீதிபதி மற்றும் நம் உடலில் உள்ள இயங்கு மூட்டுக்கள்.

    அப்படியானால் நாம் பிறக்க யார்தான் காரணம்,

    சந்தேகமே இல்லை. ராகு கேதுக்கள்தான் காரணம்.

    குழந்தை பிறக்க காதல் மட்டும் போதாது,

    காமமும் வேண்டும், அந்தக் காமத்தின் அடிப்படை ஆண் மற்றும் பெண் ஜனன உறுப்புகள். இந்த உறுப்புகளில் பெண்ணின் உறுப்பு ராகுவாகும்,

    ஆணின் உறுப்பு கேதுவாகும்.

    இந்த இரண்டும் இணையும்போதுதான், உயிர் எனும் ஜனனம் என்கிற பிறப்பு ஏற்படுகிறது.

    இந்த இணைவுக்குப் பின்தான் மேலே குறிப்பிட்ட மற்ற கிரகங்களின் உடல் வடிவம் உண்டாகிறது.

    இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்... பிறப்பு என்பது யாரால் ஏற்படுகிறது என்று!

    இந்த உலகின் அத்தனை ஆசை, பேராசை,இன்பம்

    இந்த இச்சைகளால் உண்டாகும் துன்பம், துயரம், விரக்தி என அனைத்தும் ராகு, கேது எனும் இரண்டு பாம்புகளாலேயே உண்டாகிறது.

    எனவேதான் ’இந்திரியம் அடக்கியவன் இந்திரலோகம் செல்லலாம்’ என்று சொல்லிவைத்தார்கள் முன்னோர்கள்.

    “கற்பொழுக்கம் கடவுளாகவே ஆகலாம்” என்று ஒழுக்கம் குறித்துப் போதித்திருக்கிறார்கள்.

    இப்படி பல சுக சோகங்களுக்குக் காரணமான ராகு கேது உருவான கதையைப் பார்ப்போம்,

    உருவான கதை என்றால்...?

    அவர்கள் பிறக்கும்போது ஒரே உடல், ஒரே உயிராகத்தான் பிறந்தார்கள்,

    பின்னாளில் இரண்டு உடல் இரண்டு உயிர் எனப் பிரிக்கப்பட்டார்கள்,

    சப்தரிஷிகளில் ஒருவரான மரீசியின் புதல்வர் காசியபர் ரிஷி. இவருக்கு 13 மனைவியர். இவர்களில் அதிதிக்குப் பிறந்தவர் சூரியபகவான். (இந்திரன் முதலான தேவர்களுக்கும் இவர்களே பெற்றோர்).

    அதிதியின் சகோதரி திதிக்கும் காசியபருக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள், அந்த அசுரர்களில் ஒருவர்தான் சுபர்பானு. சுவர்பானு என்றும் சொல்கிறது புராணம்.

    இந்த சுபர்பானுதான் ராகு கேது என்றானார். அவர் எப்படி ராகு கேது ஆனார்?

    அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

    - தெளிவோம்

    நன்றி :- தி இந்து
     
  9. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    நாம் சுபர்பானுவை பற்றிப் பார்த்தோம். இப்போது ராகு கேதுவைப் பார்ப்போம்.

    அசுர குருவான சுக்ராச்சார்யர், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வித்தை அறிந்தவர். தேவகுருவுக்கு அந்த ரகசியம் தெரியவில்லை


    எனவே தேவர்கள் திருப்பாற்கடலைக்கடைந்து அழிவைத் தராத அமிர்தத்தை எடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    அதில் சுபர்பானு, தேவர்கள் வரிசையில் நின்று அமுதம் உண்டதும் , மகாவிஷ்ணு அந்த அசுரனை இரு கூறாக்கியதும், இதைக் காட்டிக்கொடுத்தவர்கள் சூரியன்,சந்திரன் என்பதும் நாம் அறிந்ததுதான் இல்லையா?

    அப்படி இரு கூறானவர்களே, இரண்டு கூறுகளாக இருந்தவர்களே ராகு மற்றும் கேது.

    இவர்கள் பரமாத்மாவிடம் கேட்ட வரம் என்ன தெரியுமா?

    சூரியனையும் சந்திரனையும் ஒரு நாழிகை விழுங்கும் அதிகாரம் வேண்டும். மேலும் கிரக அந்தஸ்தும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். வரம் கேட்டனர்.

    பரமாத்மாவும் அப்படியே ஆகட்டும் என்று வரமருளினார்.

    ஆனால் கலியுகம் முதற்கொண்டே உங்கள் ஆதிக்கம் ஆரம்பிக்கும் என்று வரமருளினார்.

    இந்த அரவுகளின் அதாவது ராகு கேதுக்களின் ஆதிக்கத்தினாலேயே இந்தக் கலியுகத்தில் தர்மம் குறைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறது.

    சரி, இதெல்லாம் என்ன கதை? ஆதாரம் உள்ளதா என்ன ஆதாரம் என்றெல்லாம் சிலர் கேட்கலாம்.

    அவர்களுக்காக... அறிவியல் சார்ந்த விளக்கம் பார்ப்போமா?

    பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது

    இந்த இரண்டு சுற்றுப் பாதைகளும் வெட்டிக்கொள்ளும் புள்ளிகளே ராகு கேது ஆகும்.

    இந்த வட்டப் பாதைகள் கண்ணுக்குத் தெரியாது, அதுபோல ராகு கேது கிரகங்களாகத் தெரியாது, ஏனெனில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதைப் பார்த்தோம் இல்லையா?

    ஆனால் அவர்களின் தாக்கம் அபரிமிதமானது. சக்தி வாய்ந்தது.

    ராகு வடபுலத்தையும், கேது தென்புலத்தையும் கொண்டவர்கள். இவர்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்றால் ஒரு பெரிய புத்தகமே எழுத வேண்டிவரும்,

    எனவே நாம் இப்போது தோஷ விபரங்களுக்குப் போகலாம்.

    ராகு பெரியபெரிய ஆசைகள் கொண்ட கிரகம். இதுவே குணம்.

    கேது எதையும் எதிர்பார்க்காத விட்டேத்தியான மனப்பான்மை கொண்ட குணம்.

    நாம் ஏற்கெனவே பார்த்தபடி பிறப்புக்கே காரணமானவர்கள் எப்படித் திருமணத்தை தடுப்பார்கள்? அதாவது நம்முடைய பிறப்புக்கே இவர்கள்தான் காரணம் என்றால், நம்முடைய திருமணத்தை இவர்கள் எப்படித் தடுப்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். லாஜிக்கே இல்லாத விஷயம்தானே இது!

    எனவே ராகு கேது தோஷம் என்பது திருமணத்தடையல்ல, தாமதம் என்பதே சரி.

    அப்படியானால் தாமதம் என்பதும் தோஷம்தானே? என்று பலரும் கேட்கலாம்,

    அப்படியல்ல, சரியான ஜோடி அமையும் வரை காத்திருப்பு என்பதே சரி.

    அதற்குமுன் ஜாதகத்தில் ராகு கேது எங்கிருந்தால் தோஷம் தருகிறது என்பதைப் பார்க்கலாம்.

    இங்கே ஒரு சிறிய தகவலைப் பரிமாறிக் கொள்ளவேண்டும்.

    அதாவது, செவ்வாய் தோஷம் லக்னம் மற்றும் ராசி இரண்டுக்கும் பார்க்கப்படும் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.

    ஆனால் சர்ப்பதோஷம் எனும் ராகு கேது தோஷம் லக்னத்திற்க்கு மட்டுமே பார்க்கப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். லக்னம் என்னும் 1 ஆம் இடம், குடும்ப ஸ்தானம் என்னும் 2ம் இடம், களத்திரம் என்னும் 7ம் இடம், ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்னும் 8ம் இடம், மற்றும் புத்திர ஸ்தானம் என்னும் 5ம் இடம் ஆகிய இடங்களில் ராகுவோ கேதுவோ இருந்தால் அது சர்ப்ப தோஷம் என்னும் ராகுகேது தோஷம் என்று சொல்லப்படுகிறது.

    இன்னும் வரிசையாகவே பார்ப்போம் :-

    லக்னத்தில் ராகு இருந்தால்:- ஜாதகரின் எண்ணம், ஆசை, எதிர்பார்ப்பு , தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் முதலானவை இருக்கும்( இங்கே வாழ்க்கைத் தேவை மட்டுமல்ல, களத்திரம் என்னும் தன் வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்ப்பு. புரிந்திருக்கும் என நம்புகிறேன்)

    2ல் ராகு இருந்தால்:- இந்த இரண்டாமிடம் தனவரவு, வசதி, வாய்ப்புகளைக் காட்டும். எனவே இங்கு ராகு இருந்தால், பொருளாதாரம் சார்ந்த ஆசைகளையும், அந்த ஆசைகள் நிறைவேற எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத மனநிலையை தரும், இந்த மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    7ல் ராகு இருந்தால்:- களத்திர சுகம் மற்றும் கட்டுப்பாடற்ற சுதந்திர மனபோக்கு தரும். எனவே தாம்பத்திய வீரியத்தைக் காட்டும் இடம் என்பதாலும், அதில் ராகு இருக்க வீரியத்தை இன்னும் அதிகமாக்கும் என்பதாலும் இந்த இடம் தோஷமாகிறது.

    8ல் ராகு இருந்தால்:- இது மாங்கல்ய ஸ்தானம் என்றும் ஆயுள் ஸ்தானம் என்றும் பார்க்கப்படுகிறது எனவே தோஷமாக பார்க்கப்படுகிறது.

    5ல் ராகு இருந்தால்:- இது புத்திர ஸ்தானம். எனவே புத்திர பாக்யம் இல்லாமல் செய்துவிடும் என கருதப்படுகிறது.

    மேற்கண்ட இடங்களில் கேது இருந்தால் என்ன பலன்?

    இந்த தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா?

    என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

    அடுத்தடுத்துப் பார்க்கலாமா?

    - தெளிவோம்

    நன்றி :- தி இந்து
     
  10. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ராகு என்ன மாதிரியான தோஷ பலன்களை தருவார் என்று பார்த்தோம். கேது பகவான் என்ன செய்வார் என்று இப்போது பார்ப்போம்.

    பொதுவாக, கேது எதையெல்லாம் வேண்டாம் என ஒதுக்கி விடுகிறாரோ, அதையெல்லாம் ராகு பெற்றுக்கொள்வார்.


    எப்படி? கேதுவுக்கு பணம் பொருட்டல்ல. ஆனால் ராகுவுக்கு அதீதமாக தேவை,

    கேதுவுக்கு சுகபோகங்கள் தேவையில்லை,

    ஆனால் ராகுவுக்கு சுகபோகங்களுக்கு வானமே எல்லை,

    கேது எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்.

    ராகு பகவான், அவர் விரும்பியதை மட்டுமே ஏற்றுக்கொள்வார்.

    சரி... கேது பகவானின் தோஷ பலன்களைப் பார்ப்போம்.

    லக்னத்தில் கேது இருந்தால்:- பெரிய ஆசைகள் இல்லாதவர், இருப்பதை கொண்டு திருப்தி அடைபவர்.

    2ல் கேது இருந்தால்:- பொருளாதார ஆசை இல்லாதவர், விருப்பங்கள் ஏதும் இல்லாதவர்.

    7ல் கேது இருந்தால்:- தாம்பத்ய ஈடுபாடு, நாட்டம் இல்லாதவர்.

    8ல் கேது இருந்தால்:- தன் ஆயுளை தானே எப்படிக் குறைப்பது என்று தேடி குறைத்துக் கொள்பவர்.

    5ல் கேது இருந்தால்:- புத்திர பாக்கியத்தில் தடை ஏற்படுத்துபவர். காரணம்? சுகபோக ஆசையே இல்லாதவர் எப்படி பிள்ளைச் செல்வத்தை ஏற்படுத்துவார்.

    சரி, இப்படி ராகு கேது தோஷம் உள்ளவர்களை, இதே அமைப்பில் உள்ளவர்களைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்பது ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகிறதே... இது சரியா?

    நமது முந்தைய பதிவை மீண்டும் வாசித்துவிடுங்கள்.

    உதாரணமாக, 7 ல் உள்ள ராகு தாம்பத்ய வேட்கை அதிகம் உள்ளவர் என பார்த்தோம்.

    அதே சமயம் 7 ல் உள்ள கேது தாம்பத்ய ஈடுபாடே இல்லாதவர் அல்லது குறைவான ஈடுபாடு உள்ளவர்.

    இப்போது சொல்லுங்கள் இந்த இரண்டு அமைப்பையும் உடையவர்களை இணைந்தால் வாழ்வு சிறக்குமா?

    உண்மையில் இந்த ராகு கேது தோஷத்தை இப்போது சில வருடங்களாகத்தான் பெரிதும் பார்க்கப்படுகிறது அல்லது பார்க்கச் செய்யப்படுகிறது.

    சர்ப்பதோஷம் இருக்கும் ஒருவர், தோஷம் இல்லாதவரைத் திருமணம் செய்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவருபவர்கள் ஏராளம் உண்டு.

    ஏன்... உங்களில் திருமணம் நடந்த பலபேர், குறிப்பாக 40 - 50 வயதுகளில் உள்ளவர்கள் இப்போது உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பாருங்கள். உங்களில் நிறைய பேருக்கு இந்த சர்ப்பதோஷம் என்னும் ராகுகேது தோஷம் இருக்கும். ஆனாலும் நல்ல இனிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருவார்கள்.

    இப்போது இதே ஜோதிடம்தான் வேறொரு விளக்கத்தையும் மாற்றையும் கூறுகிறது.

    அதையும் பார்ப்போம்.

    5ல் ராகுவோ, கேதுவோ உள்ளவர்களுக்கு 5ல் ராகுவோ கேதுவோ இல்லாத ஜாதகத்தைதான் சேர்க்கவேண்டும் என்கிற போது விதி உள்ளது,

    அப்படியானால் 1,2,7,8ல் ராகு கேது உள்ளவர்களை அதே அமைப்பைக் கொண்ட ஜாதகத்தோடு இணைப்பது என்பது எப்படி சரியாகும்?

    பொதுவிதி என்பது அனைத்திற்கும் ஒரே மாதிரிதான் பொருந்த வேண்டும் அல்லவா!

    ஆனால் ஏன் இந்த மாறுபாடு?

    ஒன்றும் இல்லை, பணம்... பணம்... பணம்தான் காரணம்,

    அந்த ராகு கேது தோஷத்தை வைத்து பரிகாரம் என்ற பெயரில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையும், எது சரியான பரிகாரம் என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா?

    -தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     

Share This Page