1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செல்ஃபி

Discussion in 'Stories in Regional Languages' started by crvenkatesh1963, Feb 10, 2017.

  1. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    Selfie - செல்ஃபி


    ராசு கையில் இறுக்கமாகப் பிடித்திருந்த கத்தியின் முனை என் குரல்வளையை லேசாக முத்தமிட்டது. உள்ளுக்குள் பயம் பூதாகார ரூபம் எடுத்தது. செல்லம்மாள் எப்படி இருக்கிறாள் என்று கண்ணை மட்டும் வலப்பக்கம் திருப்பிப் பார்த்தேன். அவள் பயத்தில் பாதி செத்திருந்தாள்.

    வழிந்த பய வியர்வையைத் தடுக்க முடியாமல் இமைகள் தோற்றன. நான் ராசுவைப் பார்த்தேன்.

    “ஜமீனு சொன்னபோதே கேட்டுருக்கோணம். இப்ப பயத்துல அரைல களியரதால என்ன ப்ரோசனம்?” கரகரத்தான் ராசு.

    “இவன்ட என்னத்தடி கண்ட? ஜமீனு ஒனக்காக என்னவெல்லாம் செய்யத் தயாரா இருந்தார்? ராணி மாரி வச்சிருந்திருப்பாரே ஒன்னிய? போயும் போயும் இந்த நாயிகிட்ட விசுவாசம் காமிச்சியே, அதுக்கு இதான் கூலி” என்ற ராசுவின் முகத்தில் “த்தூ...” என்று தன் பலம் திரட்டித் துப்பினாள் செல்லம்மாள்.

    எனக்கு ஒரு நிமிஷம் பெருமையா இருந்தது. கண்ண வளச்சி திரும்பவும் பார்த்தேன். கைய தலைக்கு மேல வச்சு கட்டியிருந்ததால கொஞ்சம் நிமிர்ந்தாப் போல படுத்திருந்தா. விண்ணுன்னு வளஞ்ச வில்லு போல. ஜமீனு ஏன் மயங்கினான்னு புரிஞ்சுது.

    “பொறுக்கி! ஒன் அம்மாவக் கூட்டிக் கொடுக்க வேண்டியது தானேடா நாயே! ஊருல இருக்கற பொம்பளைங்கதான் கெடச்சாங்களா ..” செல்லம்மாள் மேல பேசுறதுக்கு முன்னால ராசு அவ மொகத்துல காலால ஒதச்சான். பின்ன தன் கால வச்சு அவ கண்ணு மூக்கு எல்லாம் மிதிச்சுப் பெசஞ்சான். செல்லம்மா வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும், கண்ணிலிருந்தும் ரத்தம்.

    “செல்லம்மா! தாயி! எனக்காக ஒன் உசுர விடுறியே! அவன் சொன்ன மாரி கேட்டுருந்தா உன் உசுரு மிச்சமாயிருக்குமே! இப்படி எனக்காக அநியாயமா சாவுறியே” என்று அரற்றினேன்.

    “நீ அளுவாத சாமீ! ஒனக்குத் தராதிக்கி என் ஒடம்பெதுக்கு உசுரெதுக்கு? வாளத் தான் முடில ஒண்ணா. சேந்தே சாவோம்யா... ஆனா இதுகெல்லாம் நியாயம் கெடைக்காத போவாது” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ராசு தன் இடது காலால் அவள் குரல்வளையை நெறித்தான். ஒரு சிறு புழு துடிப்பதைப் போல செல்லம்மாள் துடித்தாள். அவள் வாயிலிருந்து குபுக்கென்று ரத்தம் கொப்பளித்து வழிந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவள் கண் செருகி உயிர் பிரிந்தது.

    “செல்லம்மா...” என்று கத்திக் கொண்டே நான் கண் விழித்தேன்.

    “வாட் ஹாப்பென்ட் டியர்?” என்று புவனா கேட்டாள். புவனா என் மனைவி.

    நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். கண்கள் செல்லம்மாவைத் தேடின. “கனவா?’ என்றாள் புவனா.

    கனவுதான். ஆனால் கனவு இவ்வளவு விவரமாக வருமா?

    “என்னாச்சு? சொல்லுங்க” என்றவளிடம் எல்லாவற்றையும் சொன்னேன்.

    “இன்ட்ரஸ்டிங்” என்றாள் பொறுமையாகக் கேட்டுவிட்டு. “ஒரு டீ போட்டுத் தர்றேன். குடிச்சிட்டுத் தூங்குங்க. காலைல பாத்துக்கலாம்”

    மறுநாள் தினப்படி வேலைகளில் மூழ்கிய நான் மறந்தே போனேன். அன்று மாலை நானும் புவனாவும் ஒரு திருமண ரிஸப்ஷனுக்குப் போனோம். அந்த ரிஸப்ஷனில் தான் சோமசேகரைப் பார்த்தேன். என் பால்ய நண்பன். மதுரையின் பிரபல வக்கீல். தனியாகத் தான் வந்திருந்தான். ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். பின்னர் வெளியே வந்து நின்று பேசிக்கொண்டிருக்கையில் தான் அவனு மொபைல் ஒலித்தது.

    அதை எடுத்துப் பேசியவன் முகம் இறுகியது. கண் செருகி தடாலென்று மயங்கி விழுந்தான். நான் அவனைத் தாங்கிப் பிடிக்க புவனா அவன் செல்லை வாங்கிப் பேசினாள். அவள் முகமும் மாறியது.

    நான் சேகர் முகத்தில் தண்ணீர் தெளித்து அவன் மயக்கம் தெளிவித்தென். “ அவ போயிட்டாடா! என்ன விட்டுட்டுப் போயிட்டாடா” என்று பலமாகக் கத்தினான். சரி கல்யாண வீட்டில் அமர்க்களம் வேண்டாம் என்று நானும் புவனாவும் அவனை ஆசுவாசப் படுத்தி வெளியே கூட்டி வந்தோம்.

    “ஒரு கார் ஏற்பாடு செஞ்சு கொடு. நான் வரும் போது ட்ரெயினில் தான் வந்தேன். உடனே போயாகணும்”

    “அண்ணா, எங்க கார்லேயே நாங்க கூட்டிட்டுப் போறோம்” என்ற புவனாவை நன்றியுடன் பார்த்தான்.

    அங்கிருந்து புறப்பட்ட நாங்கள் மறுநாள் அதிகாலையில் மதுரை போனோம். கூடவே இருந்து காரியங்களை கவனித்து முடித்தோம். அதில் சேகர் வீட்டு வேலையாள் முனிரத்னம் மிகவும் உதவியாக இருந்தான். அன்றிரவு சேகர் வீட்டிலேயே தங்கியும் விட்டோம்.

    அங்கேயே இரண்டு நாட்கள் தங்கி சேகரை ஒருவாறு நிலைப்படுத்திவிட்டு பின்னர் கிளம்பினோம். கிளம்பும் போது முனிரத்தினம் ஓடி வந்தான். அவன் கையில் ஒரு சிறு கூடை.

    “என்ன ரத்தினம், என்ன இது?”

    “மாம்பழங்க.. அம்மாவுக்குப் பிடிக்குமேன்னு எடுத்து வந்தேன். ஊருக்கு வெளில இருக்கற தோப்புல வெளஞ்சுது.”

    “இந்த சந்தர்பத்துல...” என்று இழுத்த என்னைப் பார்த்து சேகர் “டேய்! பரவாயில்லடா. எல்லாம் விதி. அதுனால என்ன நாம சாப்பிடாமா இருக்கோம்? எடுத்துட்டு போ” என்றான்.

    சென்னை வந்து சேர்ந்து வீட்டுக்குளே நுழையும் போதுதான் எனக்கு அந்த கூடை நினைவு வந்தது. உடனே சென்று காரின் பின்கதவைத் திறந்து அந்தக் கூடையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன்.

    “ஹை! பங்கனப்பள்ளி!” என்று மகிழ்ந்தாள் புவனா. “அவனுக்கு எப்படித் தெரியும் எனக்குப் பிடிக்கும்னு?”
    நம்பினால் நம்புங்கள். அந்தப் பழத்தின் வாசனையை முகர்ந்தபோது எனக்கு மீண்டும் அந்தக் கனவு ஞாபகம் வந்தது. ஏனென்று தெரியவில்லை.

    அன்றிரவு மீண்டும் அந்த கனவு வந்தது. முதலில் வந்த அதே நிகழ்வுகள். சற்றும் மாற்றமில்லாமல். ஒரே ஒரு விஷயம் தவிர. முதல் கனவில் தெரியாத அல்லது நான் கவனிக்காமல் விட்ட, செல்லம்மா அருகில் வைத்திருந்த பங்கனப்பள்ளி மாம்பழக் கூடை! அப்படியென்றால்...

    கண் விழித்ததும் பித்துப் பிடித்தது போல இருந்தது. புவனாவிடம் சொன்னேன். அவள் முகமும் மாறியது. ஒரு வித பயத்துடனேயே அந்த நாள் கழிந்தது.

    அதற்கப்புறம் பல முறை அந்தக் கனவு வந்தது. ஒவ்வொரு முறையும் செல்லம்மாவின் முகம் சிறிது சிறிதாக மாறி கடைசியில் ஒரு கனவில் அவள் புவனாவாகிப் போனாள்.

    அந்தக் கனவும் அது சம்பந்தப்பட்ட விஷயங்களும் எங்களை வெகுவாகப் பாதித்தன. நான் ஒரு மாதம் லீவு போட்டேன். டில்லியிலிருந்த என் மகன் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று.

    காலை ப்ளைட். சுமார் பதினொரு மணிக்கெல்லாம் வசந்த் விஹாரில் உள்ள அவன் வீட்டை அடைந்தோம். அவன் மனைவி ஒரு பஞ்சாபி. அவர்கள் பாணியில் அன்று சமைத்திருந்தாள்.“‘பப்பாஜி மம்மிஜி” என்று எங்களை மிகவும் அன்புடன் உபசரித்தாள். சாப்பாடு முடிந்தபின் ஹாலில் அமர்ந்து பேசினோம்.

    அப்போதுதான் அங்கே டிவி அருகில் வைத்திருந்த அந்த மொபைலைப் பார்த்தேன். நெக்ஸஸ் மொபைல். மிகவும் பெரிதாக அழகாக.

    “என்னப்பா பாக்கறீங்க? நேத்துதான் வாங்கினேன். வாங்க ஒரு selfie எடுத்துக்கலாம். மம்மி, கம் ஹியர். சோனம் தும் பீ ஆவோ” என்றான்.

    எங்களை நடுவில் விட்டு அவர்கள் எங்களுக்கு இடமொருவர் வலமொருவராக நின்று selfie எடுத்துக் கொண்டோம்.

    “காட்டுடா” என்ற என்னிடம் “வெய்ட் டாட்! ஸம்திங் ராங்” என்றான். “என்ன ஆச்சு? என்று கேட்ட என்னிடம் தன் மொபைலைத் தந்தான்.

    அதன் ஸ்க்ரீனில் அவன் லேட்டஸ்டாக எடுத்த selfie. அதில் சோனம், நான், செல்லம்மா மற்றும் ராசு.

    என் கண்கள் அருகே டேபிளில் வைக்கப்பட்டிருந்த கத்தியின் மீது நிலைத்தன.
     
  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Scary one CRV!! In your usual style..
    Ipo thoongina enakum kanavu vandhudumo?!!
     
    crvenkatesh1963 likes this.
  3. crvenkatesh1963

    crvenkatesh1963 Silver IL'ite

    Messages:
    65
    Likes Received:
    126
    Trophy Points:
    83
    Gender:
    Male
    வரலாம்...யாருக்குத் தெரியும்? :)
     

Share This Page