சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#2975

Discussion in 'Religious places & Spiritual people' started by jaisapmm, Mar 14, 2010.

  1. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    சிவஸ்தலம் பெயர் திருநெடுங்களம்
    இறைவன் பெயர் நித்யசுந்தரர்
    இறைவி பெயர் ஒப்பிலா நாயகி


    பதிகம் திருஞானசம்பந்தர் - 1


    எப்படிப் போவது திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மி. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.
    ஆலய முகவரி

    அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
    திருநெடுங்களம்
    திருநெடுங்களம் அஞ்சல்
    திருச்சி வட்டம்
    திருச்சி மாவட்டம்
    pin - 620015

    தினந்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    கோவில் அமைப்பு:கோயில் இரண்டு கோபுரங்களுடனும்,இரண்டு பிரகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நானகு கரங்களுடன்அம்பாள் காட்சி தருகிறாள். வடக்கு வெளிப் பிரகாரத்தில் அகஸ்தியர் சன்னதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும் உள்ளது.

    உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன் திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாஎ ஐதீகம். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

    இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலையில் சூரிய ஒளி சுயம்பு மூர்த்தியாக உள்ள மூலவர் மீது விழுகிறது. இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் ஆகியவை உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து பலருக்கும் வழங்கினால் நோய் தீருமென்பது நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இத்தலத்தில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

    இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். அருணகிரிநாதர் இத்தலத்து முருகர் மேல் திருப்புகழில் ஒரு பாடல் பாடியுள்ளார்.


    சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் "இடர் களையும் திருப்பதிகம்" என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

    மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
    பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
    குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
    நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்

    தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
    மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
    நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
    என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த

    பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
    நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
    அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
    தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்

    நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
    தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்
    தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
    நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.


    விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
    கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
    அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
    நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்

    மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
    ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
    நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
    அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்

    என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
    நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
    சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
    கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்

    நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

    வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
    தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்
    துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
    நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.


    நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்
    சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
    நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
    பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.




    திருநெடுங்களம் நித்யசுந்தரர் ஆலயம் புகைப்படங்கள்

    5 நிலை முதல் கோபுரம்


    சிவன் சந்நிதி விமானம்


    அகத்தீஸ்வரர் சந்நிதி மற்றும் அகத்தியர் தீர்த்தம்
     

    Attached Files:

    • 1.jpg
      1.jpg
      File size:
      11.9 KB
      Views:
      100
    • 2.jpg
      2.jpg
      File size:
      12.5 KB
      Views:
      97
    • 3.jpg
      3.jpg
      File size:
      10.5 KB
      Views:
      97
  2. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    Re: சிவஸ்தலம்

    சிவஸ்தலம் பெயர் தென்குடித்திட்டை
    இறைவன் பெயர் வசிஷ்டேஸ்வரர், பசுபதிநாதர், பசுபதீஸ்வரர்
    இறைவி பெயர் உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, மங்களேஸ்வரி

    பதிகம் திருஞானசம்பந்தர் - 1

    எப்படிப் போவது தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் என்ற ரயில் நிலையத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம்.


    ஆலய முகவரி

    அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
    திட்டை
    பசுபதிகோயில் அஞ்சல்
    தஞ்சை மாவட்டம்
    pin - 614 206

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

    சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

    மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியது. மூலத்திருமேனி சுயம்பு. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.

    குரு ஸ்தலம்: ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.

    கோவில் அமைப்பு: ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.

    இவ்வாலயத்தின் தீர்த்தம் சூல தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ள இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பாவம் போக்கவல்ல சிறப்புடையது. நல்ல படித்துறைகளுடன் இத்தீர்த்தம் அமைந்துள்ளது.
     
  3. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    Re: புஷ்பவன நாதர் கோவில், திருப்பூந்துருத்&#29

    சிவஸ்தலம் பெயர் திருப்பூந்துருத்தி
    இறைவன் பெயர் புஷ்பவன நாதர்
    இறைவி பெயர் சௌந்தர்ய நாயகி, அழகாலமர்ந்த நாயகி

    பதிகம் திருநாவுக்கரசர் - 3

    எப்படிப் போவது அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

    ஆலய முகவரி

    அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
    திருப்பூந்துருத்தி
    திருப்பூந்துருத்தி அஞ்சல்
    (வழி) கண்டியூர்
    திருவையாறு வட்டம்
    தஞ்சை மாவட்டம்
    pin - 613103

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.

    கோவில் அமைப்பு: இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. நேரே உள்ள பெரிய நந்தி விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

    கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் இத்தலத்தில் தங்கி இருந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கோண்ட அப்ப்ர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ "உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்" என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

    திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் மூன்று பதிகங்களும், பொது பதிகங்கள் 15-ம் இத்தலத்தில் தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியிலுள்ள இறைவனை தரிசித்து உய்ந்த பேறு பற்றி ஒவ்வொரு பாடலிலும் புறிப்பிடுகிறார். மேலும் அவர் பாடிய அங்கமாலை என்ற பதிகம் மிக அருமையானது. நமது உடல் உறுப்புகளான தலை, காது, கண், மூக்கு, நாக்கு, கால்கள், கைகள், நெஞ்சம் ஆகியவை யாவும் இறைவனை துதிப்பதற்கென்றே ஏற்பட்டவை என்று குறிப்பிடுகிறார். திருமாலும், நான்முகனும் அடிமுடி தேடியும் காணக் கிடைக்காத எம்பெருமானை தன் செஞ்சத்துள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்று மனமுருகி குறிப்பிடுகிறார்
     
  4. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    Dear Jaisapmm

    Thank you very much for giving the details of about 3 shivan temples. Really informative. Thank you and keep posting. People like me who doesn't know about the temples, can know the details.
     
  5. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    சிவஸ்தலம் : வேதபுரீசர் கோவில், திருவேதிக&#300

    சிவஸ்தலம் பெயர் திருவேதிகுடி
    இறைவன் பெயர் வேதபுரீசர், ஆராவமுது நாதர்
    இறைவி பெயர் மங்கையர்க்கரசி


    பதிகம் திருநாவுக்கரசர் - 1
    திருஞானசம்பந்தர் - 1

    எப்படிப் போவது திருக்கண்டியூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற ஸ்தலமும் அருகில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.

    ஆலய முகவரி

    அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
    திருவேதிகுடி
    கண்டியூர் அஞ்சல்
    திருவையாறு வட்டம்
    தஞ்சை மாவட்டம்
    pin - 613 202

    இவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


    திருவேதிக்குடி தலம் சப்தஸ்தான தலங்களில் நான்காவதாக போற்றப்படுகிறது. பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை பூஜித்துப் பேறு பெற்றதால் இத்தலம் திருவேதிக்குடி என்று பெயர் பெற்றது. மூன்று நிலைகளோடு கூடிய சிறிய ராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. வலமாக வரும் போது 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம். அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வேதபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தான தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.

    பிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் இத்தலம் திருவேதிகுடி என்று பெயர் பெற்றது. பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்கச் சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். இவருக்கு வேதப்பிள்ளையார் என்று பெயர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.

    திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

    இத்தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் இத்தல இறைவனுக்கு உண்டு.

    இத்தலத்திற்கான திருஞானசம்பந்தரின் பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம் என்று தொடங்கும் இப்பதிகத்தின் 7-வது பாடலில் கன்னியரும், ஆடவரும் விரும்பும் மணம் கைவரப் பெறும் தலம் இது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

    உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்
    துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்
    கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக
    மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே.
    காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன். அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.
     
  6. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    Thanks for the update of the 4th temple.
     
  7. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    சிவஸ்தலம் - தொலையாச்செல்வர் கோவில், திரு&#2970

    சிவஸ்தலம் பெயர் திருசோற்றுத்துறை
    இறைவன் பெயர் தொலையாச்செல்வர், ஓதவனேஸ்வரர்
    இறைவி பெயர் அண்ணபூரணி, ஒப்பிலா அம்மை


    பதிகம் திருநாவுக்கரசர் - 4
    திருஞானசம்பந்தர் - 1
    சுந்தரர் - 1


    எப்படிப் போவது

    தஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.


    ஆலய முகவரி

    அருள்மிகு சோற்றுத்துறைநாதர் திருக்கோயில்
    திருச்சோற்றுத்துறை
    திருச்சோற்றுத்துறை அஞ்சல்
    (வழி) கண்டியூர்
    திருவையாறு வட்டம்
    தஞ்சை மாவட்டம்
    pin - 613202


    இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும்.


    கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன.வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால்,

    வறுமையும் பிணியும் விலகி விடும்.

    இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்புதரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார். தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருத்தும் இறைவன் கருவறை பகுதிக்குச் செல்ல வழி உள்ளது.

    தலச் சிறப்பு: இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத்தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என்று அழைக்கப்படும். அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அண்ணபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத் தலமாக கருதப்படுகிறது.

    தல வரலாறு:


    ஒரு முறை திருச்சோற்றுத்துறை இருந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற் சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், "இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா" என்று முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் "அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு"' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது
    .
     
  8. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    Very nice and informative.
     
  9. Muthuraji

    Muthuraji IL Hall of Fame

    Messages:
    8,013
    Likes Received:
    2,063
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Re: சிவஸ்தலம் - நித்யசுந்தரர் கோவில், திருநெ&#

    Please post further temples.
     
  10. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    Re: சிவஸ்தலம் - பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில&#3

    சிவஸ்தலம் பெயர் திருக்கண்டியூர்
    இறைவன் பெயர் பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டானேஸ்வரர்
    இறைவி பெயர் மங்கள நாயகி



    பதிகம் திருநாவுக்கரசர் - 1
    திருஞானசம்பந்தர் - 1

    எப்படிப் போவது

    அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.


    ஆலய முகவரி

    அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில்
    திருக்கண்டியூர்
    திருக்கண்டியூர் அஞ்சல்
    (வழி) திருவையாறு
    தஞ்சை மாவட்டம்
    pin - 613202


    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    5 நிலை இராஜகோபுரம்

    திருக்கண்டியூர் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்த தலம் என்ற பெருமையை உடையது.

    கோவில் அமைப்பு: மேற்கு நோக்கி இக்கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம், நந்தி மற்றும், பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகரும் காட்சி தருகின்றார். வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். பெயருக்கேற்ற மங்களப் பொலிவு. வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் கடந்ததும் இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். அடுத்து மகாலட்சுமி சந்நிதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்) சூரியனும், அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

    உள்வலம் முடித்து, துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால் இடதுபுறம் நவக்கிரகங்கள் உள்ளன. துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. சப்தஸ்தான லிங்கங்கள், பஞ்சபூத லிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்திநாதர் சந்நிதி முதலியவைகள் உள்ளன. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தருகின்றார். மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. கருவறை நுழைவாயிலின் இருபுறமும் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார், இது ஒரு அபூர்வ படைப்பாகும். இத்தலத்தில் பிரம்மதேவருக்கும் சரஸ்வதிதேவிக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி மிகவும் விசேஷமான திருமேனியுடன் காட்சி அளிக்கின்றனர்.


    கொடிமரம், பலிபீடம்

    மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி அழகிய திருமேனியுடன் காட்சி அளிக்கிறாள். பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பயனடைந்ததாக வரலாறு. பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடதுபுறம், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாகச் சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

    இத்தலத்தில் சூரிய பூஜையும் நடைபெறுகின்றது. வருடந்தோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் மாலையில் சூரியனின் கிரணங்கள் வீரட்டேஸ்வரர் திருமேனியின் மீது படுகின்றன.

    இத்தலத்தில் முருகப் பெருமான் வலது கையில் ஜபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு "ஞான சக்தீதராகக்" காட்சி தருகின்றார். இவரை ஞானஸ்கந்தர் என்று அழைக்கின்றனர்.

    தலச் சிறப்பு: சாதாதாப என்ற முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் என்றும் பெயருண்டு. இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. சாதாதாப முனிவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் திருக்கண்டியூர் சொல்லப்படுகிறது. பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது.
     

Share This Page