1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (9) தூமணி மாடத்து !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 16, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    9) ஆண்டாள் பாடல்
    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
    தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
    ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    "விலைமதிப்பற்ற நவரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகையில்,, நாற்புறமும் தீபங்கள் ஒளிர, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்தக் கதவினைத் திறப்பாயாக! மாமிமாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ? அவள் என்ன ஊமையோ, செவிடோ , (கர்வத்தால் உண்டான) சோம்பல் மிக்கவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்பட்டுள்ளாளோ? ஏதேனும் மந்திர வயப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பிப் பாவை நோன்பிற்கு கூட்டிச் செல்வதற்கு 'யாரும் புரிந்து கொள்ள முடியாத மாயக்காரன், வைகுண்டத்தில் உறைபவன் , திருமகளின் நாயகன் 'என்றெல்லாம் இறைவனின் நாமங்களை உரக்கச் சொல்வோம்! "

    பாசுரக் குறிப்பு

    இப்பாசுரம் , என்றும் இறைச் சிந்தனையிலும், தொண்டிலுமே ஈடுபட்டவர்கள் இறைவனே தன்னை வந்து ஏற்பான் என்ற அளவில் இறை எண்ணத்திலேயே மூழ்கி,இறுமாந்து, மயங்கியுள்ள நிலையிலிருக்கும் அடியவரை (நித்யஸூரிகள்)எழுப்பும் விதமாய் உள்ளது.மறை ஞானம் அனைத்தும் பெற்று, தினசரிக் கடமைகளை, விருப்பு வெறுப்பின்றி செய்யக்கூடிய நித்யஸூரிகளாய் இருப்பவர்களும், தாமே இறைவனை அடைய முடியாது, இறைவனே தம்மை வந்து ஆட்கொள்ள வேண்டும் என்று கருதாமல், ஆச்சார்யரைப் பணிந்தே, இறையடியாகிய வீடுபேறு பெற வேண்டும் என்பது கருத்து.

    இறைவன் மீது செலுத்தும் பக்தியின் வகையை அடிப்படையாகக் கொண்டு இப்பாசுரம் ஸஹவாஸ யோக்யப் ப்ரதானர் (இறைவனுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தில் இருக்கும் அடியார் அனுகூல பந்து) என்கிற பாகவத ஸ்வரூப பஞ்சகத்தில் வருகிறது.
    இப்பாசுரத்தால் எழுப்பப் படுபவர் திருமழிசை ஆழ்வார். "சாக்கியங் கற்றோஞ் சமணங்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்,” என்று இவ்வாழ்வார் அனைத்து மதங்களிலும் இருந்து இறுதியில் உறுதியாக நாராயணனைத் தவிர "மறந்தும் புறந்தொழா மாந்தர்" என்று ஞான விளக்கம் பெற்றவராதலால் 'சுற்றும் விளக்கெரிதல்' என்ற சொல்லாடல் பொருந்தும்.
     
    rai, vidhyalakshmid, jskls and 2 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    எத்திசையும் புகழோடு விளங்கும் மாளிகையில்
    முத்துச்சுடர் போன்று ஒளிர்கின்ற விளக்கிடையில்
    சுத்தமணம் பரப்புகின்ற தூபங்களின் புகையில்
    இரத்தினத்தில் இழைத்தக் கதவுகளின் பின்னே
    மெத்தணையில் உறங்குமென் மாமன் மகளே,
    மொத்தமாய் வந்துள்ளோம் கதவைத் திறவாய் !
    அத்தையே, எங்களது மாமனுடைய மனைவியே,
    புத்தி சொல்லியெழுப்புங்கள், உங்கள் மகளென்ன
    எத்திறமுமற்ற வாய்பேசா மடந்தையோ- அன்றி
    சத்தமெதுவும் கேட்காத செவித்திறன் குறைபாடோ ?
    இத்தனைக்கும் மேலாகக் கண்பார்வை அற்றவளோ ?
    ஒத்துழைப்புத் தாராமல் உறக்கத்து வயப்பட்டாளோ ?
    பித்துறக்கம் போக்கிடவே இறைவனவன் திருநாமம் .
    சத்தமாகச் சொல்லுகின்றோம் அவளும் எழும்பிடவே!
    எத்தனையோ பெரும்லீலை புரியும் பெருமாயவனைப், .
    பத்தினியாம் திருமகள் இலக்குமியின் நாயகனை,
    நித்தியமும் ஆனந்தப் பாற்கடலுள் உறைபவனை,
    எத்தனையோ பெயர்சொல்லி வணங்கி வழிபடவும்
    தித்திக்கும் பேர்கேட்டுத் துயிலும் கலைவாளே !

    தூமணி மாடத்து -- இரத்தினங்களால் ஆன புகழ் வாய்ந்த மாளிகை
    உள்ளே இருக்கும் நிலையென்னவென்றுத் தெளிவாகக் காட்டும்படியான தூய்மையான மாடக்கதவுகள் கொண்ட மாளிகையாம், இந்தக் கோபிகையின் இல்லம் ! அதனால் தான் உள்ளே விளக்கெரிகின்றது, தூபம் கமழ்கிறது, இவள் உறங்குகிறாள் என்றெல்லாம் மற்றவர்களுக்குத் தெரிகிறதாம்.

    சில காலம் ஸம்ஸாரமென்னும் உலகப்பற்றுகளில் அமிழ்ந்து கிடந்த பின்னர், ஆசைக்கயிற்றின் கட்டறுத்து , இறைஞானமுறுபவர்கள் முக்தர்கள் எனப்படுகிறார். முக்தர்- (பற்றிலிருந்து) விடுதலையானவர்.
    சிறிதும் உலகப்பற்றுகளில் தொடர்பில்லாமல் எப்போதும் இறைவனுடைய பணியிலேயே இருக்கும் பேறுபெற்றவர்கள் நித்யர்கள் (நித்யஸூரிகள்) எனப்படுகிறார். நித்யர்- (இறைத்தொண்டில்) என்றுமிருப்பவர். இப்பாசுரத்தால் துயிலெழுப்பப்படும் கோபிகையும் அது போன்றே தூய்மையான மனத்தோடு என்றும் இறைப்பணியில் ஆழ்ந்தவளென்பதால், தூமணிமாடம் என்ற குறிப்பு.

    ஒருமுறை வேதமோதுகையில் அவ்விடம் வந்தப் பிரம்பர் குலத்தவரான திருமழிசை ஆழ்வாரை மதியாமல் அவமானம் செய்த வேதியரின் கர்வத்தை அடக்க, “சக்கரங் கொள் கையனே, சடங்கர் வாய் அடங்கிட, உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே” என்று திருமழிசையழ்வார் பரந்தாமனை இறைஞ்சினார் அவரது வேண்டுகோளுக்கிணங்கி, வைகுந்தத்தில் ஆதிசேஷன் மீது தான் துயிலமர்ந்த கோலத்தை ஆழ்வாரது திருமேனியில் பரந்தாமன் காட்டினான். வேதியரும் தம் தவறையுணர்ந்து மன்னிப்புக் கோரினர்.
    வேண்டடிக் கொண்டபடியே உள்ளிருந்த திருமால் அப்படியே வெளியிற் காட்சி தந்தமையால் தூமணிமாடம் என்ற சொல்லாடல் !

    சுற்றும் விளக்கு எரிய - நாற்புறமும் விளக்குகள் எரியவும், தூபம் கமழ - அகில் முதலியவற்றின் வாசனைப்புகைகள் மணம் வீசவும். மாடத்தில் இரவுப்பொழுதில் தீபமேற்றி வைப்பார்கள். காலை விடிந்ததும் அதை சமாதானம் செய்து விடுவார்கள். அப்படிச் செய்தால் புகை நாற்றமெழுமல்லவா ? அதைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். பொழுது விடிந்து, விளக்குகளை அணைத்த பின்னரும் உறக்கமா என அந்தக் கோபிகையைத் துயிலெழுப்புவதாகக் கொள்வதும் சுவையே !

    துயில் அணைமேல் கண் வளரும்-பறவைகள் ஒலியெழுப்பிவிட்டன, எருமைகள் மேய்ச்சலுக்குத் தயாராகிவிட்டன, இந்தப் பாசுரத்துக்குரிய கோபிகையோ இன்னும் மென்மையான படுக்கையின் மீது உறங்குகிறாள் என்பதைக் கண்டு ஆண்டாளும் தோழியரும் ஆச்சர்யப்படுகின்றனர். திருமழிசையாழ்வாருக்கு மிகவும் பிடித்தது , நாராயணனின் சயனத்திருக்கோலங்களே !
    கச்சி வெஃகாவிலும் திருக்குடந்தையிலுமே பெரும்பாலும் இவர் காலம் கழித்தது. சயனத்திருப்பதிகளையே ஒரு கோர்வையாகப் பாசுரம் பாடியவர் இவ்வாழ்வார். "நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தணையரங்கம் பேர் அன்பில் - நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத்தனவான்" என்பது இவர் வாக்கு. எனவே இச்சொல்லாடல்.

    மாமான் மகளே என்ற சொல்லாடல் குறிப்பது மஹா மஹானாகிய பெருமானின் மகள் போன்றவர் இவ்வாழ்வார் என்பதையே ! மாமான் என்றது மஹா மஹான் என்ற வடசொல் திரிபே ! அப்படியானால், தந்தை சொல்லை மகள் கேட்பாள், மகள் சொல்லைத் தந்தை கேட்பாரென்பது புலனாகிறது.துயிலணைமேல் கண்வளரும் மாமான் யதோக்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள் ! அப்பெருமாள் இவ்வாழ்வார் சொற்படி கேட்டவர் ."கணிகண்ணன் போகின்றான் - நீயுமுயன்றன் பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்’ என்ற போது அப்படியே சுருட்டிக்கொண்டு புறப்பட்டார்; “உன்றன் பைந்நாகப்பாய் விரித்துக்கொள்” என்ற போதும் அப்படியே. ஆராவமுதப்பெருமாளும் “எழுந்திருந்து பேசுவாழி கேசனே” என்ற இவ்வாழ்வாரது வேண்டுகோளின்படி எழுந்தாரென்பதும் ஒப்பு நோக்கத் தக்கது.. அது மட்டுமின்றி, இந்த சம்பவம் ஆண்டவனுடன் இவருக்கிருக்கும் நெருங்கிய உறவைச் சொல்கிறது. எனவே தான் ஆண்டாள் "மாமான் மகள்!" என்று உறவாடுகிறாள். அதுமட்டுமல்ல, பிருகு குலத்தில் தோன்றினாலும், பிரம்புத் தொழிலாளியால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டவர் இவ்வாழ்வார். தானும் கண்டெடுக்கப்பட்டவளென்பதால், தனக்கு உறவாகச் சொல்கிறாள் போலும் !

    மணிக்கதவம் - இரத்தினக்கல் பதித்த கதவு .

    ஊமையோ? செவிடோ? அனந்தலோ? (குருடோ) - என்ற வினாக்களுக்கு உட்கருத்து - இறையடியார்களாகிய கோபிகைகள் வந்திருப்பதை அறிந்து இரக்கமுற்று ‘ஐயோ !’ என்றொரு வாய்ச்சொல் சொல்வதற்கும் தோன்றவில்லையா ? நோன்பிருக்க அழைக்கும் எங்களுடைய குரல் காதில் விழவில்லையா ? எங்களைத் தவிர்த்து விட்டு அந்தக் கண்ணனைத் தனியாக அனுபவித்துக் களித்து மயங்குகிறாளா என்பது உட்பொருளாம் !

    வேதம் ஓதும் போது அந்தணர்கள் திருமழிசையாழ்வாரைக் கீழாக நினைத்துக் கூறியதைக் காதில் கேட்காதது போல் இருந்ததைக் குறிப்பிட “செவிடோ" என்றாள் . ஆனால் வேதமோதுகையில் அந்தணர்கள் ஓரிடத்தில் மறதியால் இடறி விட, அவர்களால் அவமானப்படுத்தப்பட்டத் திருமழிசையாழ்வார் வாய் பேசாமல், சைகையால் அடுத்த வேத ஸ்ருதியை எடுத்துக் கொடுத்ததைக் குறிப்பிட “ஊமையோ” என்றாள் ஆண்டாள். வேறெதையும் நோக்காமல், எந்நேரமும் இறைவனைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதால்,அனந்தல்.

    ஏமம்- இரவு, இன்பம், களிப்பு, மயக்கம் இப்படிப் பல பொருளுடைய சொல் , ஏமப் பெருந்துயில் - பேருறக்கம் , மந்திரப் பட்டாளோ - மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ. ஹேமம் என்ற வடசொல் திரிபெனக் கொண்டால், பொன்னில் செய்த கட்டிலில் உறங்குகிறாள் என்பது பொருள். பரந்தாமனைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் தொழாதிருப்பதே பெருந்துயில்.

    மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றே - இறைவன் பெயர் சொல்லி அழைக்கிறோம்.
    மாமாயன் - அபலைகளான பெண்களைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் மாய வித்தை தெரிந்தவனாம் ! மாதவன்- இடக்கை வலக்கை அறியாத ஆய்ச்சிகளை மட்டுமல்ல, அந்தத் திருமகளையும் மார்பில் தாங்கியவன் .
    வைகுந்தன்- பெண்களை மட்டும் வசப்படுத்தவில்லை, பாற்கடலுள் அவனடி பணிந்து நிற்கும் , ஆதிசேஷன், கருடன் போன்ற நித்யஸூரிகளையும் தன் வசத்தில் வைத்திருக்கிறான்.
    இவையெல்லாம் திருமழிசைப்பிரான் அதிகம் பயன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் -- உட்பொருள்

    நல்லதாம் நான்மறையும் அவற்றைக் காப்பதற்கு
    வல்லவர்கள் வகுத்திட்டப் பகுதியாறும்- இவைகள்
    சொல்வதாம் நவவழிகள் இறைவனை அடையவென,
    வல்லனவாம் ஞானத்தைக் குறைவின்றி அறிந்துள்ள
    இல்லறமுள்ளோர்- தமக்கென்று சாத்திரம் விதித்துச்
    சொல்லியுள்ள கடமைகள் யாதென்று நன்குணர்ந்து,
    நல்விதமாய்த் தமக்கெந்த விருப்பும் வெறுப்புமின்றி,
    சொல்லியுள்ள வழியிலே மாற்றமின்றி செய்வதோடு,
    நல்லதாம் இறைப்பற்றும் குறைவிலாது வளர்ந்தபடி
    அல்லிருள் போக்கொளியாம் மெய்ஞானம் உற்றவரே,
    நல்லாசான் மனமுவந்து விரும்புகின்ற மாணவராம்!
    நல்லவரிவர் தம்முடைய ஆசானைப் பணிந்துவிடில்,
    வல்லவராம் அவருக்கே மனமிரங்கி மிகமகிழ்வாய் ,
    நல்லாசான் ஆனவரும் மறைத்தொளித்து வைத்திட்ட ,
    மேலாம் இறைஞான இரகசியங்கள் அருள்வாரே !
    நல்ல மாணாக்கரிவர் அதன்மேலும் மிகவுயர்ந்த
    இலக்குமி தேவியின் கருணையையும் பெறுவாரே !
    நல்லஞானமிதை அடைந்தபின்னே,பிறர் தன்னைச்
    சொல்லும் பழியுரைகள் எதையும் பொருட்படுத்தாமல்,
    சொல்லாலே பிறரைத் தாக்கியொன்றும் பேசாமல்,
    நல்லதாம் எட்டெழுத்தின் வயப்பட்டு அமைதியுடன் ,
    வல்லான் இறைவனையே நம்புகின்ற நிலையடைவார்!
    இல்லை வேறுவழி தமக்கென்றும் உணர்ந்திடுவார் !
    நல்லவராமவர் மீதில் கருணை பொழியவெண்ணி,
    சொல்லவினிக்கின்ற இறைநாமம் சொல்ல வைத்து,
    வல்லிரும்பைத் தங்கமென மாற்றும் திறம்படைத்த,
    நல்லமுறைப் பெருந்தவங்கள் புரிபவராம் ஆசானும்,
    அல்லலற்றப் பேரின்பம் அளிக்கின்ற பேறடைந்து,
    நில்லாமல் இறைத்தொண்டு நிகழ்த்தி மகிழ்வடைய,
    மேல்நிலையாம் வைகுண்டம் புகுவதற்கும் அருள்வாரே !

    தூமணிமாடம்- எந்தக் குறையும் கறையுமில்லாத மறைகளைக் குறிக்கின்றது. நான்கு மறைகள் -ரிக்,யஜு,ஸாம ,அதர்வண

    சுற்றும் விளக்கு- வேதத்தின் ஆறு அங்கங்கள் 1) உச்சரிப்பு (சிக்க்ஷை) 2) சந்தம் (சந்தஸ்,கண்டம்), 3)இலக்கணம் (வியாகரணம்),4) சொற்பொருள்,உட்பொருள் (நிருக்தம்) 5) வைதீக செயல்களின் வழிமுறை (கல்பம்) 6) வானவியல் மற்றும் ஜோதிடம் (ஜோதிஷம்).

    மணிமாடம்- இறைநெறியாளர்கள் இறைவனுக்கும் அடியவருக்கும் உள்ள உறவுமுறையாக ஒன்பது வழிகளில் இறைவனை அடையலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
    மணி- நவ இரத்தினங்கள், இவ்விடம் சீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள நவவித ஸம்பந்தம்

    1) தந்தை-மகன் 2) காப்பாற்றும் இரட்சகர்- இரட்சிக்கப்படுபவர் 3) ஆண்டான்- அடிமை, 4) கணவன்- மனைவி, 5)ஆசான்-மாணாக்கன்,6) உரிமையாளர்-உரிமைப்பொருள் 7)தாங்கும் ஆதார நிலை- அதைச் சார்ந்த ஆதேய நிலை 8) ஆத்மா- சரீரம் , 9) அனுபவிக்கும் இறைவன் (பரமாத்மா)- அவன் அனுபவிக்கும் பொருள் (சீவர்கள்)

    விளக்கெரிய- ஞானம் ஒளிர , தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளர்தல் - செய்ய வேண்டிய கடமைகளை, விருப்பு வெறுப்பின்றி செய்தல்.

    தூபம் கமழ - இறைஞானம், தினசரியோ(நித்ய)அல்லது தேவைக்கேற்பவோ(நைமித்திக) செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் அந்தக் கடமைகளை விருப்பு வெறுப்பில்லாமல் செய்தல் (வைராக்கியம்) என்ற (ஞானம், கர்மா ,வைராக்கியம் ) மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக வைணவ அறிஞர் கூறுவர்

    துயிலணை மேல் கண் வளரும் - அடியவர் மனதில் வளர்ந்து கொண்டே இருக்கும் இறைஞான அனுபவத் தன்மையைக் குறிக்கிறது

    மாமான்- மிகவுயர்ந்த ஆச்சார்யர். இவ்விடத்தில் பரந்தாமனையே ஆச்சார்ய ஸ்தானத்தில் வைக்கிறாளென்றும் கொள்ளலாம். , மாமான் மகள்- நல்ல ஆச்சார்யனுக்கு மிகவும் பிடித்தமான நல்ல மாணக்கர், இறையடியவர். மாமீர்- ஆச்சார்யர்களுக்கும் ஆச்சார்யராய்த் திகழும் அன்னை மஹாலக்ஷ்மி.

    மணிக்கதவம் தாழ் திறத்தல்- இறையடி பணிந்த, உரிய மாணாக்கன் ஆச்சார்யரை அணுகி வேண்டிக் கேட்பின், அவர் காட்டித்தரும் உயர்வான, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இரகசிய இறைஞானம்.

    ஊமை, செவிடு,-- தாமும் பிறரை நிந்திக்காது பிறர் தம்மைச் செய்யும் நிந்தனையையும் பொருட்படுத்தா நிலை.

    மந்திர வயப்படுத்தல்- ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வயப்பட்டு இறைநினைவில் மனவமைதி கொள்ளுதல்

    அனந்தல் - அனந்தன் ஒருவனைத் தவிர வேறெதையும், வேறாரையும் பார்க்காத நிலை -தன்னால் ஆவது ஒன்றுமில்லை என்று அறிந்து ஒன்றும் செய்யாமல் இறுமாந்திருத்தல். இறைவனைச் சரணம் செய்வது தவிர தம்மால் ஆவது வேறொன்றில்லை என்ற கையறு நிலையுணர்ந்து (ஆகிஞ்சன்யம்),இறைவனே தன்னைக் காக்க வல்லான் என்று திட நம்பிகையோடு (மஹா விஸ்வாஸம்), இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை (அனன்ய கதித்வம்) என்று இறுமாந்து இருப்பவர்கள். (இந்த இறுமாப்பு ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கர்வமே !)

    வீடுபேற்றினை வழங்கவல்ல இறைவனைச் சரணம் செய்து மற்ற அடியார்களோடு இறைத்தொண்டில் ஈடுபடுவதே, ஒரு சிறந்த அடியாருக்கு அழகு. அதை விடுத்துத் தாம் மட்டும் தனியாக இறைநினைவில் ஒன்றுமே செய்யாமல் இருப்பது சரியல்ல என்பது வைணவ நெறி .

    மா மாயன், மா தவன், வைகுண்டன் - ஒன்றுக்கும் உதவாதவர்களும் ஒரு நல்லாச்சார்யரைப் பணிந்து விட்டால், இரும்பைப் பொன்னாக்கும் மாயத்தைப் போல (மா மாயன்), நல்ல தவ வலிமை உடைய ஆசானும் (மா தவன்) , சரணாகதி அடைந்தவர்கள் என்றும் பேரானந்த நிலையில் (வைகுண்டன்) , இறைவனுடன் இருக்கும் படி செய்திடுவார்கள் என்பது கருத்து.
     
    rai and periamma like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நான் இன்னும் ஆழ்ந்து படித்து விட்டு எழுதுகிறேன் .உள்ளே நுழைய நுழைய பாதைகள் பல தெரிகின்றன
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தாராளமாக,பெரியம்மா ! உங்களால் முடியும் போது படித்துவிட்டுப் பின்னூட்டமிடுங்கள். நமது இலக்கியங்களுள் நுழைந்தால் பல பாதைகள் இருப்பது உண்மையே ! நீங்கள் படிக்க விடுபட்டிருந்தால், ஒரு சிறு நினைவூட்டல். இந்தப் பதிவு கோதையின் கீதை (8) கீழ்வானம் வெள்ளென்று ! இப்பாசுரத்திற்கு முன்னரான 8 ஆம் பாசுரப்பதிவு :)
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவி நான் மறக்கலை மா.அதையும் சேர்த்து படிப்பேன் .சில வலி நிவாரணிகள் என்னை தூக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது அதுவே தாமதத்திற்கு காரணம்
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் உடல்நலத்தைப் பேணுங்கள்,பெரியம்மா ! நன்றாக ஓய்வெடுங்கள். பதிவுகளையெல்லாம் அப்புறம் படிக்கலாம், பின்னூட்டம் தரலாம். நாங்கள்(பதிவும், நானும் !)காத்திருப்போம் ! :relaxed:
     
    periamma likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தத்வார்த்தம் அறிந்தேன் .இது வரை அறியா விளக்கங்கள் .புரிய வைத்ததற்கு நன்றிகள் பல
     
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், பொறுமையாக நேரமும், கவனமும் செலுத்தி இந்தப் பதிவுகளைப் படித்து, ஊக்கமளிக்கும் பின்னூட்டம் வழங்கி வருவதற்கு என்னுடைய வணக்கங்கள் பல !
     
  10. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    The road laid by Kothai is unique.It is brightened by lights on towers.Whoever follows her, is being welcome with incense sticks.
    Jayasala 42
     

Share This Page