1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (8) கீழ்வானம் வெள்ளென்று !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 15, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    8) ஆண்டாள் பாடல் (முன்னமே இறைநெறியில் ஆழ்ந்து ஆனந்தம் அடைந்த அடியவரை எழுப்புதல் , கோஷ்டியாக சேவித்தல்.)

    கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
    கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
    பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
    ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

    பாசுரப் பொருளுரை

    " கிழக்குத் திசையில் வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்துள்ளது. எருமைகள் பால் கறக்கப்படுவதற்கு முன்னர், இடையர் வீட்டினருகில் உள்ள, பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதை நீ பார்க்கவில்லையா ? பாவை நோன்பு ஒன்றையே தலையாயக் கடமையாக எண்ணிக் கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வாசலில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறோம். குதூகலம் நிறைந்த பெண்ணே! இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்சனால் ஏவப்பட்ட சாணூரன், முஷ்டிகன் எனும் மல்லர்களை அழித்தவனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனும் ஆன கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி நாம் வணங்கினால், நம்மைக் கண்டவுடன் கண்ணனும் மனமிரங்கிக், கருணையோடு நம் குறைகளை கேட்டறிந்து ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க வருவாய் !"

    பாசுரக் குறிப்பு

    - இறையடியார்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி இறைத் தொண்டு செய்தல் என்கிற வைணவ நெறி பேசப் படுகின்றது. இறைவனின் பெயரைச் சொல்லி அவன் பெருமைகளைப் பாடிப் பணிந்து அவன் அருள் பெறுவதற்கான முயற்சியில், தனி ஒருவராகப் புகாமல், அடியவர்கள் அனைவருடனும் கூட்டாக இறைப்பணி செய்தலே ஆனந்தம். மேலும் அதுவே இறைவனுக்குப் பிடித்தமான செயல், என்கிற வைணவ நெறியை இப்பாசுரம் காட்டுகிறது.இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களைக் குறிப்பில் உணர்த்துகிறது. திருப்பாவை முழுதுமே, இறைவனை விட (பகவத் அனுபவம்), அவனது அடியவர்களான(பாகவத அனுபவம்), ஆச்சார்யர்களின் பெருமையைப் பலவாறு பேசுகிறது. ஆண்டவனைக் காட்டிலும் பெருமை அவன் அடியவருக்கே என்பது கருத்து. குருவின் மூலமே கடவுளை அடைய வேண்டும் என்பது கொள்கை.

    இப்பாசுரத்தால் எழுப்பப் படுபவர் நம்மாழ்வார் மற்றும் அவருடைய அடியவரான மதுரகவி ஆழ்வார் . ஆண்டாள் நோற்பதுபோல நம்மாழ்வாரும் ஒரு திருவாய் மொழியில் நோன்பு நோற்றார்; வீற்றிருந்தேழுலகும் என்ற திருவாய் மொழியில் 'ஏற்ற நோற்றேற்கு' என்று முதலிலும் 'வண்டமிழ் நூற்க நோற்றேன்' என்று முடிவிலும் வரும். அதில் "வான நாயகனே! அடியேன் தொழவந்தருளே" என்று தேவாதி தேவனை அவர் தொழும்படியாகத் தன்னிடம் வர வேண்டுவார். அதை சூசகமாக மாற்றி ஆண்டாள் 'சென்று நாம் சேவித்தால்' என்று நம்மாழ்வாரை அவரை இறைவனிடம் செல்ல அழைக்கிறாள் !
     
    knbg, rai, periamma and 2 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    அருணன் உதித்துவிட்டான் ,இடையர் வீட்டருகே
    எருமைக் கூட்டங்கள் மேய்வதைக் காண்கின்றோம் !
    விரதம் பூண்டொழுகக் களிப்புடன் மற்றவர்கள்
    வருகை புரிந்துவிட்டார் அவர்களை உனக்காக
    இருங்கள் சற்றென்று கையமர்த்தி உன்னையும்
    வருமாறு அழைத்திடவே வாசலில் வந்துள்ளோம் !
    கார்வண்ணன் விரும்புகிற பெருமை உடையவளே!
    பேருவகைக் கொண்டவளே, உறக்கம் நீங்கிடுவாய் !
    விரதத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாகப்
    பரமனைப் பேர்பாடித் துதித்துப் பயனுறுவோம் !
    புரவியரக்கனை வாய் கிழித்துக் கொன்றவனை,
    பெருமல்லர் இருவரையும் அடக்கிச் சாய்த்தவனை,
    பெருந்தேவர் கூட்டத்தின் தலைமை பூண்டவனை
    விரதம் பூண்டவர்கள் அணுகிப் பணிந்திட்டால்,
    கருநிறக் கண்ணனுமே உடனே அரவணைப்பான்!
    விரதமிருப்போரின் நிறைகுறை செவி கேட்டு,
    கருணை மனத்தோடு வேண்டிடும் பலனெல்லாம்
    இரங்கிய குணத்தாலே அருளவும் செய்திடுவான் !
    பெரிதாய் நாங்களிதைக் கூறக் கேட்டிருக்கும்
    அருங்குணம் கொண்டவளே, விரதம் ஏற்றிடுவாய் !

    கீழ்வானம் வெள்ளென்று - கதிரவன் உதிக்குமுன்னர் கிழக்குத் திசையில் தோன்றும் செம்மை நிறம், அருணோதயம் எனப்படும். இகவுலகாகிய இம்மண்ணுலகும், ஆண்டவன் அடியார்க்கு அந்தப் பரவுலகாகிய வைகுந்தமாகும் என நம்மாழ்வார் கூறியிருப்பதனால், கீழ்வானம் (லீலாவிபூதியாகிய இம்மண்ணுலகு) எனும் சொல்லாடல் பொருந்தும்.

    எருமைச் சிறுவீடு மேய்வான் -- இடையர் வீட்டின் அருகிருக்கும் புல்வெளியில்,எருமைகள் காலைச் சிற்றுண்டி கொள்கின்றன ! பறவைகளின் ஒலியை முன்னிரு பாசுரத்தில் குறித்தபின், இப்பாசுரத்தில் , அடுத்த கோபிகையின் வீட்டின் முன் வந்து நிற்கும்போது, எருமைகள், மேய்ச்சலுக்கு வெளிக்கிளம்புமுன், வீட்டருகில் நுனிப்புல் மேய்வதைக் குறித்தாள்.

    போவான் போகின்றாரைப் போகாமல் காத்து- நோன்பிற்கு செல்வோரைத் தடுத்து உன்னைக் கூட்டிச் செல்ல வந்தோம். ஓரிடத்தைச் சென்று சேர்வதைக் காட்டிலும், மேற்கொள்ளும் பயணமே சுகமானதல்லவா ? அப்படி , கண்ணனைக் காண்பதற்குச் செல்லும் அடியவர் குழுவோடு ஒன்றாகப் 'போதலே இன்பம்' என்று எண்ணுபவர்களைத் தான், கண்ணனைக் காணும் ஆவலோடு போகிறவர்களைத் தான் அப்படிக் குறித்தாள் ! The journey is more fascinating than the destination ! அர்ச்சிராதி மார்க்கம் என்று வைணவப் பெரியோர்கள் விளக்கம் . அதாவது ஒளியோடு தொடங்கும் வழி. மண்ணுலகை விட்டுப் போகும் சீவாத்மாவானது, பரமாத்மாவை அடையச் செல்லும் வழி ஒளி பொருந்தியதாக இருக்கும் என்பது கருத்து.

    மிக்குள்ள பிள்ளைகளும் - மற்றமுள்ள எல்லாப் பெண்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்து. நம்மாழ்வாரே அனைவரிலும் உயர்ந்த, தலைமைப் பொறுப்பிலிருக்கும் வைணவ நெறியாளர் என்று ஏற்றப்படுபவர். ஆகவே அவரைத் தொடர்ந்து வழிநடக்கும் அனைவரும் 'மிகுந்திருக்கும் பிள்ளைகளே' !

    உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்
    - உன்னை நோன்பிற்கு அழைக்கும் பொருட்டு உன் வீட்டு வாசலில் வந்து நின்றோம்

    கோதுகலமுடைய பாவாய் - 'கௌதூஹலம்' என்ற வடமொழிச் சொல்லின் தமிழ்த் திரிபு , கண்ணன் பக்தியிலே மிகுந்த ஆவல் உள்ள அடியார்,கண்ணனுக்குப் பிரியமானவர் என்பதால், மகிழ்ச்சியுடைய அடியார்.இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபிகை/அடியார் ஒரு சிறந்த பக்தை, கண்ணனுக்குப் பிடித்தமானவள். ஆகையினால், ஆண்டாள் "கோதுகலமுடைய பாவாய்" என்றழைத்து, "மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம் தடுத்து நிறுத்தி, அந்த ஞானமிக்கவளை தங்களுடன் கூட்டிச் செல்ல விழைகிறாள்.

    கோதுகலமாவது ஆசை. இறைவனிடம் ஆசையுடைய தொண்டர் , அல்லது இறைவன் தன் மீதில் ஆசை கொள்ளும்படியாக இருக்கும் பேறு பெற்ற தொண்டர் என்று இருவகையாகவும் பொருள்படும்.
    . "தேறின பொருளை கைம்மா துன்பொழித்தாயென்று கைதலை பூசலிட்டே, மெய்மால யொழிந்தேன் எம்பிரானுமென்மேலானே "என்ற பாசுரத்தினால் நம்மாழ்வார் தாமே "நானும் எம்பெருமானிடத்துக் குதூகலங் கொண்டேன், அவனும் என்னிடத்துக் குதூகலங் கொண்டான்" என்று கூறுகிறார்.
    'பாவாய்' என்ற விளியும் இவர்க்குப் பொருந்தும். திருவாய் மொழியில் "சூழ்வினை யாட்டியேன் பாவையே" என்றும் "என்பாவை போயினித் தண்பழனத் திருக்கோளுர்க்கே" பல இடங்களில் தம்மைப் பாவையாகச் சொல்லிக்கொண்டவர் இவ்வாழ்வார்.

    எழுந்திராய் - அமர்ந்திருப்பவரைச் சொல்லும் குறிப்பு. நம்மாழ்வாரின் சிலை வடிவம் அமர்ந்த கோலத்திலிருப்பதை ஒப்பு நோக்கலாம்.

    பாடிப் பறைகொண்டு- கண்ணனுடைய குணங்களைப் பாடி அவனிடத்துப் பறைக் கருவியைப் பெற்று

    மாவாய் பிளந்தானை -கண்ணன் கேசி என்ற குதிர அரக்கனை வாயினைப் பிளந்து கொன்றது மல்லரை மாட்டிய -கண்ணன் கம்சனின் படை மல்லர்கள் சாணுரன், முஷ்டிகனைக் கொன்றது

    தேவாதி தேவனை- தேவர்களுக்கெல்லாம் தலைவனை சென்று நாம் சேவித்தால்- அடியார் அனைவரும் ஒன்றாகச் சென்று இறைவனை வணங்குதல்

    ஆவாவென் றாராய்ந் தருளே - கண்ணன் நமது குறைகளைக் கருணையோடு ஆராய்ந்து மனமிரங்கி அருள்வான்."ஆஹா, உங்களுக்கு இப்போதாவது என்னை அடைய வழி தெரிந்ததே!" என்று கண்ணன் கோபியரை அரவணைத்துக் கொள்வானாம் ! விருப்பு வெறுப்பில்லாத இறைவன் ஆராய்வது அடியவர்கள் தன் மீது கொண்டுள்ள அன்பு மிகவான தொண்டுள்ளத்தை தான். விருப்பு வெறுப்பில்லாதவன் என்பதால், நிச்சயம் நமக்கு வேண்டியதை அருள்வான் என்று உறுதி கூறுகிறாள் ஆண்டாள்.
     
    rai and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் -- உட்பொருள்

    அனைத்துப் படைப்பிற்கும் ஆதாரம் என்றே,
    தனித்து நிற்கின்ற ,வெற்றிடத்தில் நிறைந்து
    வானத்தில் மேலென்று குறிப்பிடப் படுகின்ற
    அனைத்தின் மூலமுமாய் இருக்கும் பிரமமுமே,
    குணத்தில் மாசற்று இருக்கும் தன்னடியவரின்
    மனதிலும் வந்து நன்றாய் உறையுமென்கின்ற
    ஞானம் பெற்றவரே உற்றவர் தனக்கென்றும்
    தானும் அவர் தமக்கேயுற்றவன் என்றேயும்,
    தானே அறிவித்தான் கீதையில் கண்ணனுமே!
    அன்றவ னுரைத்திட்ட வாக்கிற்கு ஏற்றபடி
    ஞானத்தை அடைந்தவரே ,நல்ல ஆசான்மார் !
    நானா விதங்களிலும் மனதை அலைக்கின்ற .
    ஊனப் புலன்களினை அடக்கிய ஆசான்மார்,
    ஆனந்தம் அளிக்கும் பேற்றினை அடைவதற்குத்
    தானாய் வழியற்று விலங்குகள் நிலையினிலே,
    ஞானத்தில் ஊமைகளாய் இருக்கும் அடியவரின்
    மௌன நிலைநீக்கி இறைவனின் பெருமைகளைத்
    தானாய்ப் பாடுதற்கும், பேற்றை அடைவதற்கும்,
    முனைந்து உதவிடுவார்- மேலும் அடியவர்க்கு
    ஊனம் விளைக்கின்ற அகந்தை மமதைகளை,
    ஞானத்திறம் கொண்டு அடக்கியருள் செய்வார் !
    தனியாய் ஒருவர் மட்டும் பேரானந்தமதை
    அனுபவம் செய்யாமல் எல்லா அடியவரும்
    தேனொத்த இறைவனது கருணை என்கின்ற
    பானத்தைப் பருகும்படி ஆசானருள் செய்வார் !
    மனதில் பரமனையே எண்ணி யிருந்தாலும்,
    ஞானம் பக்தியுடன் கர்ம யோகங்களில்
    தனக்கு வழியிதென்று அறியா அடியவர்கள்,
    ஞானம்பெறு நோக்கில் நல்லாசான் தம்மை
    ஒன்றாய்த் தாம் சென்று சரணமடைந்தக்கால்,
    வானுறை தேவர்களை விஞ்சிடும் புகழுடைய
    ஞானாசிரியர் நம்மேல் கருணை மிகவோடு,
    என்ன நிலையில் நாம் இருக்கிறோமென்று
    தானே ஆராய்ந்து நம் தகுதிக்கேற்றபடி
    ஊனக்கண் திறந்து ஞானத்தின் வழிகாட்டி
    நன்றாய்ப் பரமனடி சேர்ந்திட அருளிடுவார் !

    கீழ்வானம் வெள்ளென்று-- தஹராகாசம் எனப்படுகின்ற, பிரபஞ்சம் அனைத்தையும் தாங்கியிருக்கின்ற வெற்றிடமானது கீழ் வானம் என்று குறிக்கப்படுகிறது. அதன் மேலே அமர்கின்றப் பரமனே மேல்வானம் ஆகிறான். நமக்கு வெளியில் உள்ள அதே வெற்றிடம் , நமக்கு உள்ளேயும் உண்டு. அது சுத்தமாக இருந்தால் தான் (வெள்ளென்று) அங்கே பரமன் வந்து உறைவான்.

    எருமைச் சிறுவீடு - இறையனுபவத்தில் உள்ள அடியவர்களின் பற்பல நிலையுண்டு. எருமை நிலையாவது, மிகவும் இறை பக்தியிலேயே (சிறுவீடு) மூழ்கி, தாம் அடைய வேண்டிய, வீடு பேற்றை ,அடியாரோடு ஒன்றாய்ச் சேர்ந்து அடையாமல், மயங்கி (எருமை) நிற்கும் நிலையைக் குறிப்பதாகச் சொல்லுவர். அடியார்களுடன் கூடி இறைத்தொண்டு செய்வதிலே விருப்பமுடைய அடியார்கள், இறைவனை அடையும் பேற்றினைப் பெறுவதற்கு அவசரப் படுவதில்லை, மெதுவாக மேயும் எருமையினையைப் போல் நிதானம் கடைபிடிப்பார்கள் என்பதாலும் எருமைக் குறியீடு. இறைவனுடன் ஒன்றறக் கலந்து மயங்கிக் கிடக்கும் 'கைவல்ய' நிலையைக்(சிறுவீடு) குறிக்கும். வீடுபேறு என்பது, 'கைங்கர்ய'நிலை.

    மனமானது குணங்களின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப் படுகிறது.

    சத்வ குணம்-- பொதுநலத்துடன் கூடிய, கருணை, எளிமை, தூய்மை, ஒழுக்கம், சமநோக்கு போன்ற உயர்ந்த நற்பண்புகளைக் கொள்வது
    ரஜஸ் என்கிற ரஜோ குணம்
    - சுயநலத்துடன், கர்வம், ஆசை, மற்றவர் மீதான ஆளுமை, பொறாமை, போன்ற பண்புகளைக் கொள்வது.
    தமஸ் என்கிற தமோ குணம்- அறியாமையுடனான, குழப்பம், சோம்பல்,பேராபத்து விளைவிக்கும் குரூரம், மூடத்தனம் போன்ற பண்புகளைக் கொள்வது. எருமை என்பது தமோ குணக் குறியீடு.

    மேய்வான் பரந்தன காண்
    - அடியார்களுடன் கூடி இறைத்தொண்டில் ஈடுபட , மனதின் தமோ குணங்கள் விலகிச் செல்வதைக் குறிக்கும்.

    கோதுகலமுடைய பாவாய் -இறைவனின் பிரியத்திற்குரியவராதலால், மிக்க மகிழ்ச்சியுடைய ஞானியாகிய பரமனின் அடியார்.அவருக்கு இறைவன் மீதிருக்கும் அன்பும் ,இறைவனுக்கு அவர் மீதிருக்கும் அன்பும் அளவிட முடியாது என்று, கண்ணனே கீதையில் உரைக்கிறான்.

    சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந|
    ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப ||
    (கீதை 7-16)

    தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே|
    ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த II (
    கீதை 7 : 17)

    "பாரத தேசத்தாரில் சிறந்தவனே (அர்ஜுனன்) , துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர் . அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் (கண்ணன்) மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன் "

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்கிற இந்த அறிவை அடைந்தவர்களே , ஞானிகள். அடியவர்க்கு ஆண்டவனை அடையும் வழியைக் காட்டித் தருகின்ற ஆச்சார்யர்களே அந்த ஞானிகள்

    மாவாய் பிளந்தானை - கேசி அரக்கன், புரவி உரு- இறை ஞானம் அற்ற, மிருக நிலையில் இருக்கும் அஞ்ஞானிகள் குறியீடு.ஆச்சார்யர்கள் அப்படிப்பட்ட மிருக நிலையிலிருப்பவரை, இறைஞான இல்லாத ஊமைகளை , தக்க அறிவூட்டி, இறைவன் புகழினைப் பாடச் செய்வார்கள்.

    மல்லரை மாட்டிய - சாணுரன், முஷ்டிகன் இருவரும் அகங்கார, மமகாரக் குறியீடு ஆச்சார்யர்கள் அடியார்களின் புலன்களை அடக்கி, அஹங்காரம், மமகாரம் உள்நுழையாமல் காக்கக் கூடியவர்கள். அகந்தை- நான் என்ற கர்வம். மமதை- எனது என்ற பற்று .இரண்டும் அறியாமையின் ஊற்றுக்கண். ஆச்சார்யரின் உபதேசம் நம் அறியாமையைப் போக்கி ஒளியேற்றும்.

    போவான் போகின்றாரைப் போகாமல்- முன்னரே ஞானம் அடைந்து, சரணாகதி வழியில் செல்கின்ற ஆச்சார்யர்கள், தாம் மட்டும் செல்லாது, அடியவர்களுக்கும் சரணாகத ஞானத்தை ஊட்டி அனைவரும் ஒன்றாக இறைவனைத் தொழுதல், வீடுபேறு உறுதல் .எட்டெழுத்து மந்திரத்தை உடையவர் எனப்படும் இராமானுசர் அனைவருக்கும் எடுத்துரைத்த சம்பவத்தை நினைவு கூறலாம். மேலும் இச்சொல்லாடல் இறைவனையடைதற்கு செல்லும் அர்ச்சிராதி மார்கத்தைக் குறிக்கும். அர்ச்சிஸ் மற்றும் மார்கம் என்ற வடமொழிச் சொற்களுக்கு ஒளி மற்றும் பாதை எனப் பொருள். அர்ச்சிராதி மார்க்கம் என்றால் பரமாத்மாவாகிய இறைவனை அடையச் செல்லும் சீவாத்மாவின் முன் விரியும் ஒளிபொருந்திய பாதை எனப் பொருள்.சென்று சேருமிடத்தைக் காட்டிலும், பயணமே சுகமல்லவா ? அது போல இறைவனையடைவதைக் காட்டிலும், இறையடியாரோடு ஒன்றாகக் கூடி இறைத்துதி செய்வதே இன்பமென்பது உட்பொருள்..

    மிக்குள்ளப் பிள்ளைகள்- பக்தியோகமோ, மற்ற எந்த யோகமோ ஒன்றும் தெரியாதவர்களும் வீடுபேற்றை அடைவதற்குரிய சிறந்த வழி, சரணாகதமே.

    தேவாதி தேவன், ஆராய்ந்தருள- சரணாகதம் செய்த அடியவர், இறைநெறியில் எந்த நிலையில் உள்ளார் என்பதை ஆச்சார்யர்கள் கண்டு கொண்டு, அதற்கேற்றபடி உதவி செய்வார்கள் என்று கருத்து.
     
    knbg, rai and periamma like this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Pavithra,

    My Tamil g-mail takes a long time.Perhaps that also is in deep sleep as the

    gopi.You have exhausted all explanation.i have nothing else but to appreciate.

    The word 'Kesava' does not merely refer to the incidence of Krishna killing the demon Keshi in the horse form.

    The word can be split as 'Kaa+easan

    Kaa refers to brahma who is the creator of all animals like buffaloes and also human beings.

    Even Brahma worships Narayana, his Lord.Why not we

    the Gopis.

    The buffaloes eat light grass to yield more milk.Now a days the cows/buffaloes are given

    harmones to increase the milk yield.

    Kothukalamudaiya--refers to the enthusiasm one should have in worshipping Lord

    This pasuram perhaps refers to group darsan-the Darsan the first Three aazhwars had in Tirukkovilur.

    Group Travel and pilgrimages give more pleasure than the darshan itself.This brings to focus the main philosophy of life .We start the travel of life.We may not reach the destination at all.

    Yet the experience that we derive at every stage of life's journey means lot.Travel is more important than destination teaching valuable experiences.That is the main motto of this pasuram.

    Jayasala 42
     
    periamma likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Ha ..Ha.. Yes sometimes Tamil g-mail does that.

    Thank you for the blessings.

    Very nicely put. Yes. It is true.

    Thank you, Madam for your valuable companionship in this Thiruppavai Travel.:)

    Regards,
    Pavithra
     
    periamma likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா படித்தேன் .இந்த பாசுரத்தை படிக்கும் போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது .மார்கழி மதம் வீட்டு முன் வாசலில் நீர் தெளித்து தூய்மைபடுத்தி கோலம் இட்டு சாண உருண்டைகள் மீது பூக்கள் வைத்து கோலத்தின் மேல் வைப்போம்.இந்த பூக்களை வாங்குவதற்காக சிறுமிகள் அனைவரும் கூட்டமாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் கேட்டு வாங்கி வருவோம் .அதற்கு முன்னால் தூங்கும் தோழிகளை எழுப்பி கூட்டி செல்வோம் .காலை நேரத்தில் கல கலவென சிரித்து செல்வது இன்பமாக இருக்கும் .இதுவும் நோன்பில் சேர்த்தியோ என்று இந்த பாசுரத்தை படிக்கும் போது தோன்றுகிறது
    பவி மீண்டும் ஒரு முத்து உங்கள் மாலையில் கோர்க்கப் பட்டுள்ளது .அழகு ஜொலிக்கிறது
     
    knbg likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நீங்கள் எழுதியதை படித்துப் பரவசமடைந்தேன், பெரியம்மா ! நானும் அந்தச் சிறுமிகளோடு ஒன்றாகச் சேர்ந்து நடந்தாற்போல் தோன்றியது. எவ்வளவு ஆனந்தமாக இருந்திருக்குமென்று என்னால் உணர முடிகின்றது.

    உங்கள் முத்தான பின்னூட்டத்திற்கு நன்றி பெரியம்மா ! :)
     

Share This Page