1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (7) கீசுகீசென்றெங்கும் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 9, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    7) ஆண்டாள் பாடல்

    கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
    பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
    காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
    வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
    ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
    நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
    கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
    தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    " பொழுது விடிந்து விட்டது என்பதைத் தெரிவிக்கும் விதமாக ' கீசு கீசு' என்று வலியன் குருவிகள்(செம்போத்துக் குருவிகள்) தங்களுக்குள் பேசும் இனிய ஒலி உன் காதுகளில் விழவில்லையா ? நறுமணம் கமழும் கூந்தலையுடைய இடையர் குலப்பெண்கள் அணிந்திருக்கும் பொன்னில் செய்த அச்சுத்தாலியும், (காசு -அச்சில் வார்த்து மாலையாய் அணிவது) ஆமைத்தாலியும்(பிறப்பு-முளை முளையாய்க் கோர்த்து அணிவது) ஒன்றோடொன்று உராய்ந்து ஒலிக்குமாறு,அவர்கள் தங்கள் இடக்கை வலக்கை அறியாமல் மாற்றி மாற்றி மத்தினால் வேகவேகமாய்த் தயிர் கடையும் ஒலியை நீ கேட்கவில்லையா ? உனது தோழிகளான நமது கோபியர் கூட்டத்திற்குத் தலைவியே! நாராயணனின் அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாமா ? ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளே! எழுந்து கதவைத் திறந்து, பாவை நோன்பை மேற்கொள்ள எங்களோடு இணைய வருவாய்! "

    பாசுரக் குறிப்பு

    இப்பாடல் முன்னமே வைணவ இறைநெறியில் சேர்ந்துவிட்ட அடியவரை இறை நினைவூட்டி எழுப்புவது . இந்தப் பாசுரத்தில் உள்ள உட்பொருள், உபய வேதாந்தத்தை (வடமொழியில் உள்ள வேத ஸ்ருதிகளோடு, தமிழில் ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தங்களையும் வேதத்தின் பகுதியாகவேக் கருதும் வைணவ நெறி) உயர்த்தி, மற்ற சாத்திரமுணர்ந்தவரை உபய வேதாந்திகளாக மாறும்படி கோரிக்கை வைக்கப்படுகிறது. இப்பாசுரத்தில் அர்த்த பஞ்சகத்தின் கேசவன் என்ற (உப)வ்யூஹ நிலை குறிக்கப்பட்டுள்ளது.

    ஆழ்வார்கள் பன்னிருவரில் தனக்கு முன் ஐவரும் பின் ஐவருமாக இருக்க, நடுவில் ஆறாவதாக விளங்கக்கூடிய குலசேகர ஆழ்வாரை இப்பாசுரத்தில் குறித்தாள் என்பது சுவையான விளக்கம். பொய்கையார் பூதத்தார் பேயார் திருமழிசையர்,நம்மாழ்வார்(இவருடனே சேர்ந்தவர் மதுரகவியாழ்வார் ) என முன்னே ஐவர்; பெரியாழ்வார் ,ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,திருமங்கையாழ்வார் எனப் பின்னே ஐவர்; நடுவே குலசேகரர். எனவே நாயகப் பெண்பிள்ளாய்க் குறிப்பு ! இதைப் பல வைணவ நெறியாளர்கள், குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களில் வரும் செய்திகளைக் கொண்டே விவரிக்கிறார்கள்.

    'மெய்யில் வாழ்க்கையை' என்று தொடங்கும் 3 ஆம் பெருமாள் திருமொழிப் பாசுரங்களில், தன்னைப் பேயனென்று அழைத்துக் கொள்கிறார்,குலசேகராழ்வார்.

    பேய ரேயெனக் கியாவரும்,யானுமோர்
    பேய னேயெவர்க் கும்இது பேசியென்,
    'ஆய னே!அரங் கா!'என்ற ழைக்கின்றேன்,
    பேய னாயழிந் தேனெம்பி ரானுக்கே. (நா.தி.பி. 675 ஆம் பாடல், )

    தன்னை இகழும் உலகத்தார்க்கு பதிலுரைப்பது போன்ற பாசுரம்.

    "உலகிலுள்ளோரெல்லாரும் எனக்குப் பேயென்றே தோன்றுகின்றது, நானும் அவர்களுக்கு ஒரு பேயாகவே தெரிகின்றேன். இது பற்றி விரிவாக ஆராய என்னவுள்ளது ? ஸ்ரீகிருஷ்ணனே! ஸ்ரீரங்கநாதனே! என்று இறைவன் நாமங்களை சொல்லி அவன் மேலே தீராக் காதலுடைய பேயனாகயிருக்கிறேன்."

    நமது இலக்கியங்கள் மிகவும் ஆழமானவை. அவற்றைப் படிக்கப் படிக்க,ஏற்படும் அனுபவங்கள் என் போன்ற சிற்றறிவு படைத்தவர்களால் விண்டுரைக்க முடியாது !
     
    knbg, periamma and rai like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்-- சொற்பொருள்

    தோகை பெரிதான வலியன் குருவிகளும்
    வைகறைப் பொழுது விடிந்து விட்டதென
    இராகம் இசைப்பதினை நீயும் கேட்டாயோ?
    மேகக் கருங்கூந்தல் கமழும் வாசத்துடன்
    தேகமதில் தங்கக் காசு, அணிகலன்கள்,
    வாகாய்த் தாலியிலே அணிந்த ஆய்ச்சியர்கள்,
    வேகமிகக் கொண்டு கைகள் இரண்டாலே,
    தாகம் தீர்க்கின்ற தயிரைக் கடைகையிலே,
    இராகம் போலெழும்பும் ஓசை கேட்டாயோ !
    ஆகப் பலவிதத்தில் காலையொலி கேட்டும்,
    போகட்டும் போவென்றுன் கண்கள் திறவாது ,
    பகலில் பேயினைப் போல் உறங்குவதுமென்ன ?
    யோக நித்திரையில் கிடக்கும் பரமனையே .
    ஏகும் சிறப்பான எண்ணம் கொண்டவளே!
    அகத்தில் அன்புடைய தோழியர் எங்களுக்கு
    முகத்தில் ஒளியுடைய தலைவி ஆனவளே!
    வேகமாய்ச் செல்லும் புரவியைப் போலுருவம்
    வாகாய்த் தரித்திட்ட கேசியென்னும் அசுரன்
    தேகமதைப் பிரித்துக் கிழித்து வதைத்திட்ட
    மேகவண்ணன் அவன் பெயரைப் பாடுகிறோம்
    மிகுந்த ஒளியுடைய தேகம் கொண்டவளே
    மகிழ்ந்தே எங்களுடன் நோன்பு நோற்றிடுவாய்!

    ஆனைச்சாத்தன்- சங்க காலப் பறவை , தோகை வால் பெருத்த, காகத்தைப் போல் இருக்கும் வலியன் பறவை. செம்போத்துப் பறவை என்றும் கூறுவார்கள்.பரத்வாஜப் பறவை( பரத்வாஜ முனிவர் இப்பறவையுருவில் பெருமாளைத் தொழுததாக ஐதீகம் ) என்றும் சொல்வார்கள்.
    ஆனைச்சாத்தன் - கிருஷ்ணாவதாரத்தில் கம்சனின் யானையாகிய குவலயாபீடத்தைக் கொன்ற செய்தி. ஆதிமூலமே என்று சரணாகதம் செய்த கஜேந்திரனுக்கு நாராயணன் மோக்ஷம் அளித்த செய்தி.
    சாற்றுதல் என்ற சொல்லுக்கு வதைத்துச் சாய்த்தல் என்றும் பொருள், அருள் செய்தல் என்றும் பொருள். இரண்டு யானைகளில் ஒன்றை வதைத்து அருளினான், ஒன்றைக் காத்து அருளினான், இறைவன் .


    கீசுகீ சென்றெங்கும் கலந்து பேசின பேச்சரவம் -முந்தின பாசுரத்தில் உறக்கம் கலைந்தெழுந்த பறவைகள், இப்பாசுரத்தில் இரைதேடிப் புறப்படும் நேரம் வந்துவிட்டதையறிந்து தமக்குள்ளே பிரிவாற்றாமையால் பேசிக்கொள்வதாகக் குறித்தாள்,ஆண்டாள் ! முந்தின கோபிகையின் வீட்டிலிருந்து அடுத்தவள் வீட்டிற்கு வருவதை நேரத்தின் அளவால் குறித்தாள்.

    பேய்ப்பெண்
    - இரவில் விழித்துப் பகலில் உறங்குவதால் சொன்னது. நாயகப் பெண்பிள்ளாய் - இருப்பினும் அந்தப் பெண் கோபிகைகள் எனும் இரத்தினமாலையில் பெரிதாய் நடுநாயகமாய் , அழகுடன் பொருந்தும் இரத்தினக்கல் போல சிறந்தவள். எனவே நயமாக அழைக்கிறாள் ஆண்டாள்.கண்ணன் மீதில் மிகுந்த பக்தி கொண்டிருக்கும் தோழியை எழுப்பி அவளோடு தாங்களும் சென்றால், இறைவன் அருள் சீக்கிரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முதலில் பேய்ப்பெண்ணே என்று பழித்தும் பின்பு எங்களுக்கெல்லாம் தலைவியைப் போல் இருக்கும் நாயகப் பெண் பிள்ளாய் என்று புகழ்ந்தும் நோன்பிற்கு வருமாறுஅழைப்பது . ஆழ்வார்களுள் குலசேகரர் நடுநாயகமாகவுள்ளவர்.

    காசும், பிறப்பும் - அச்சுத்தாலியும், (காசு -அச்சில் வார்த்து மாலையாய் அணிவது) ஆமைத்தாலியும்(பிறப்பு-முளை முளையாய்க் கோர்த்து அணிவது) கலகலப்பக் கைபேர்த்து- உராய்ந்து ஒலிக்க இடது கை வலது கை இரண்டும் வேகமாக வீசி

    வாச நறுங்குழல் - வாசனைத் தைலம் பூசப்பட்டக் கூந்தல். ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் - கண்ணனைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டும், அவன் பேரைச் சொல்லிக்கொண்டும், அவன் புகழை இராகமிசைத்துப் பாடிக்கொண்டும் அதற்கேற்ற தாளத்தில் மத்தினால் தயிரைக் கடைவார்களாம் ஆய்ச்சியர்.

    கடையவேண்டிய தயிர் அதிகளவில் உள்ளதாலும், ஆய்ச்சியார்களோ மிகவும் மெல்லிய தேகமுடையவர்களாயிருப்பதாலும், கண்ணன் வந்துவிட்டால் தயிரை மோராக்கக் கூடாதென சொல்வானாகையால் அவசரம் அவசரமாகக் கைகளை வீசிக் கடைவதினால், ஆய்ச்சியர் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் ஒன்றோடொன்று உரசி ஒலியெழுப்புவதாகவும், அந்த வேகத்தில் அவர்களுடைய முடியப்பட்டக் கூந்தல் அவிழ்ந்து, தயிரின் வாசத்தை மறைக்குமளவு, அவர்களது கூந்தல் வாசமெழுந்ததாகவும் இக்காட்சி மிகவும் கவித்துவமாகப் புனையப்பட்டுள்ளது.

    கேசவனை - கண்ணனைக் கொல்ல மாமன் கம்சன் அனுப்பிய அரக்கருள் ஒருவன் குதிரை வடிவு கொண்ட கேசி. அவனைக் கொன்றதால் கேசவன் என்று இறைவனுக்குப் பெயர். கேசவன் என்பதற்கு, கேசியைக் கொன்றவன், சிறந்த முடியையுடையவன், கஹ எனும் பிரம்மாவுக்கும், ஈஸ என்ற சிவனுக்கும் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.
    மார்கழி மாதத்தின் அபிமான தேவதையாகப் போற்றப்படுபவன் கேசவன். எனவே மார்கழி நோன்பில் கேசவன் பேரைப் பாடுதல் வழக்கம்.

    கேட்டே கிடத்தியோ -குலசேகராழ்வார் நாடெங்கும் அந்தணர்களைக் கொண்டு இராமாயணத்தைப் பாராயணம் செய்வித்துத் தாம் கேட்டவர்.

    தேசமுடையாய்- ஒளி பொருந்திய அடியார் தேஜஸ் (முகக்காந்தி) என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.குலசேகராழ்வார் பிறப்பால் க்ஷத்ரியர். தேஜஸுடனிருப்பது அரசர்களின் அடையாளமாகையால் இக்குறிப்பு.இறைவனுக்குத் தொண்டாற்றும் பிறப்பே தேசமுடையது. குலசேகராழ்வார் தமது பாசுரங்களில் ஒவ்வொருவிதத்தில் தான் பிறப்பெடுத்துப் பெருமாள் தொண்டாற்ற வேண்டுமென விழைகிறார். (எ-டு -செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே.... படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே !) அதனாலும் தேசமுடையாய் என்ற குறிப்புப் பொருந்தும்.
     
    Last edited: Nov 9, 2016
    knbg, periamma and rai like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள்

    அரக்கன் ஏவிவிட்ட யானையைக் கொன்றருளி,
    வருந்திய யானைக்கு அறவருள் செய்திட்டப்,
    பரமன் தன்னடியவர்க்கு தொல்லை தருமாறு
    வருத்தம் விளைவிக்கும் வலிய யானையொத்தப்
    பெருத்தப் புலன்களையும் அடக்கி அருளிடுவான் !
    சரணாகதி வழியில் மனதைத் திருப்பிடுவான்!
    பேரின்பம் அடைய விரும்பிடும் அடியவர்கள்,
    சரணாகதி செய்தால் நலம் பெறலாமென்றும்,
    சரணம் செய்தவர்கள் சேவை செய்கவென்றும்,,
    கருணைக் கடலானப் பரமனும், திருமகளும்,
    இருவரும் அடியவரின் கடமை என்னவென்று
    அருளிச் செய்தவழி அடியவர் அறிந்துகொள்ள,
    விரிவாய் விளக்குகிறார் வேதம் சொல்லுபவர்!
    புரிந்தவர் அவர்களுமே நமக்குச் சொல்கின்ற
    அரிய விளக்கத்தை உணர்ந்து கொள்வோமே !
    அருமை இறைநெறியில் இணைந்த அடியவர்கள்,
    அருளை அடைவதினால் கிடைக்கப் பெறுகின்ற
    இரண்டு நிலையாகும் விழிப்பும், மயக்கமுமே !
    திரண்ட அருட்கருணை அடைந்து விட்டவர்கள்,
    பரமனை எண்ணுவதே போதுமெனக் கொண்டு,
    மருண்டு மனமயங்கி இறைப்பணி செய்யாமல்,
    இருப்பதும் அழகில்லை, தொண்டு பிழையில்லை !
    பரமன் யாரென்றுக் குழப்பங்கள் எதுவுமின்றித்
    தெரிந்து கொள்வதற்கு மறையும் மற்றவையும்
    அருமை முறையினிலே ஆராய்ந் தறிந்தவர்கள்
    குருவாய் இருப்பவரும் வியாசர் போன்றவரும்,
    அரனையும் பிரம்மனையும் தன்னுள் கொண்டுள்ள
    நாராயணன் என்னும் பெயருடை மூர்த்தியதே,
    சரிநிகர் சமமுமற்ற, மேலொரு தலைமையில்லா,
    பரமாத்மா என்று திறம்படக் கண்டுகொண்டார் !
    குருவாம் ஆசான்மார் தெளிவாய்ச் சொல்லுவதால்
    நாராயணன் தன்னைத் தெரிந்து கொண்டபின்னும்
    பரமன் திருவடியில் இணைந்திடத் தயக்கமென்ன ?
    பரதேவதைத் தொழுகும் செய்கைகள் புறந்தள்ளிப்
    பரமனின் அடியார்கள் பிறருடன் ஒன்றிணைந்து
    குருவுபதேசம் பெற்று சரணாகதி செய்வீர் !



    ஆனைச்சாத்தன் என்று குறிப்பிட்டது - தன்னுடைய அடியவர்களை அலைக்கழிக்கும் புலன்கள் என்னும் வலிமை மிக்க யானையினை அடக்கும் இறைவனையும், அவனது அடியவர்களான ,புலன்களை அடக்கியாளவல்ல ஆச்சார்யர்களையும் ஒன்று போலவே உணர்த்துகின்றது.

    கீசு கீசென்று கலந்து பேசின பேச்சரவம் - முதலில் பரமனும் திருமகளும் அடியார் செய்ய வேண்டிய சரணாகதியைப் பற்றியும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய இறைத்தொண்டு என்பதாகிய வீடுபேற்றைப் பற்றியும் , (ஹம்சப் பறவைகளைப் போல ) தமக்குள் பேசிக் கொள்வதாகக் கொண்டு அவர்கள் என்ன பேசினர் அதாவது இறைவனின் அருளை பெறுவதற்கு ஏனையோர் என்ன செய்ய வேண்டும் என்ற விளக்கத்தைப் பற்றி,ஆச்சார்யர்கள் (அன்னப் பறவைகளைப் போல ) தம்முள் கலந்து பேசி மிகவும் தெளிவாக, சிறிதும் வேறுபாடின்றி ஒன்றேயான உண்மையை ஓங்கி உரைத்தனர் என்று விளக்கம் கொள்ளப்படுகிறது

    இறைவன் அருள் பெற்றவர்கள் சிலர் எப்போதும் அவன் நினைவில் இருப்பர்,இவர்களை ஆண்டாள் ஆனைச்சாத்தன் என்கிறாள்.வேறுசிலர், அந்த அருளில் மிகவும் மூழ்கி, அருள் செய்த இறைவனுக்குத் தாம் செய்ய வேண்டிய தொண்டினைச் செய்யாதே மயங்குவர் இவர்களையே ஆண்டாள் பேய்ப்பெண் என்கிறாள். ஆனைச்சாத்தன் - விழிப்பு நிலை, பேய்ப்பெண்- மயக்க நிலை

    வாச கருங்குழல் ஆய்ச்சியர் கைபேர்த்து
    --உபனிடதங்களையும் சாத்திரங்களையும் கற்றறிந்த வேதவியாசர், ஆச்சார்யர்கள் ,நன்றாக ஆராய்ந்து

    மத்தினால் ஓசைப்படுத்தத் தயிரரவம்---மிகுந்த தேடலுக்குப் பின் ஏற்பட்ட ஞானத்தின் பயனால் ,நாராயணனே பரமன் என்று உறுதியிட்டது.

    நாயகப் பெண்பிள்ளாய்
    - இறைநெறி அனுபவ ஞானத்தினால், தலைமைப் பண்பைப் பெற்ற அடியார்கள். நாராயணனே பரமாத்மா என்பதை உணர்ந்தவர்கள்.முன்னரே இறைவன் மீது பக்தி பூண்டவர் தான், ஆயினும் சற்றே மந்தமாக இருப்பதனால் இடித்துரைத்தும், பின்னர் அவரது உயர்ந்த குணத்தைப் போற்றிச் சொல்லியும் இறைநெறியில் சேரச் சொல்லி அழைப்பது

    நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
    - . கேசவன்= கஹ + ஈசன் = பிரம்மாவையும், சிவனையும் தன்னுள் கொண்டவன். அவனே பரமாத்மா நாராயணன். அவனது பெருமையினைப் போற்றிப் பாடுகின்றோம்.

    நீ கேட்டே கிடத்தியோ? - இவ்வாறு பரமன் பெருமை அறிந்தும், சரணாகதியை மேற்கொள்ளாமல் இருப்பது சரியோ
    காசும் ,பிறப்பும்-கலகலப்பக் --- மறையோதும் வேதியர்,அவர் ஓதும் மறை. வேதியர் என்றால் குறிப்பிட்ட வகுப்பைக் குறிக்காது. சாந்த குணமும், புலன்களை அடக்கும் திறமும் உடையவர்களே வேதியராவர். அவையே சிறந்த அணிகலன்களும் ஆகும்.

    தேசமுடையாய்,நாயகப் பெண்பிள்ளாய் -- சரணாகதத்தின் அவசியமும், ஏற்றமும் மிக நன்றாய்த் தெரிந்த அடியார்கள்
    காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே திருமந்திரம்,த்வயம்,சர்மஸ்லோகம் ஆகிய வைணவ இரஹஸ்யத் த்ரயத்தை உணர்த்துவதாகவும் உள்ளர்த்தம் உண்டு
     
    knbg, periamma and rai like this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    This pasuram teaches us that Veda is the curds that have
    been churned by the Acharyas to get the divine Ashtaksharam
    which is preached.It is said that
    Bhoothathaazhwar is being awakened here.
    From yesterday everyone is being awakened by a real bootham
    in the form of P. M.Modi's announcement of demonetisation and the gopis have lost their sleep and are were waiting in long queues to have darsan of mahalkshmi( to buy gold) in lieu of Rs 500 and Rs 1000 notes they have hoarded in plenty.
    In reality the whole of yesternight was pervaded by'Keech Keech' sounds, all about the mere paper currency in India.
    Perhaps does this reveal that all wealth, currency notes are utter waste and better concentrate on'Keshava Naamam'
    Sorry to have turned materialistic.Sadly that is the situation in Chennai

    Jayasala 42
     
    periamma likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Yes, it is better to concentrate on Kesava Namam , sadly many will not share the view. Thank you for your valuable feedback,as always.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா பிறப்பு-ஆபரணம் பற்றிய சிறு தகவல்.குழந்தை பிறந்ததும் ஐந்து வகை தங்க ஆபரணங்களை கறுப்பு கயிற்றில் கோர்த்து இடுப்பில் கட்டுவார்கள் .அவை நாய் ,காசு ,நீள் குழல் வடிவ மணி ,பூட்டுசாவி, தாயத்து .இன்றும் எங்கள் ஊரில் இந்த பழக்கம் பின் பற்றுகிறோம் .பெண் குழந்தை என்றால் ஆலிலை போன்ற ஆபரணம் ஆண் குழந்தை என்றால் நீள் குழல் மணி .இந்த விளக்கம் பிறப்பு என்ற சொல்லுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை .அரை சலங்கை என்று ஒன்று உண்டு .சிறிய சிறிய தங்கமணிகள் கோர்த்து செய்தது .இதையும் இடுப்பில் கட்டுவார்கள்.

    மீண்டும் அருமையான பதிவு .
     
    knbg likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    குழந்தைகளுக்கு அரைஞாணில் கட்டுவதை நாய்க்காசு என்று சொல்வார்கள், அறிவேன். நீங்கள் அந்த வழக்கம் பற்றித் தந்துள்ள அருமையான தகவல்களுக்கு நன்றி பெரியம்மா !
     

Share This Page