1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (6) புள்ளும் சிலம்பின காண் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 5, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    6) ஆண்டாள் பாடல் ----- ( இந்த 6 - 15 பாசுரம் வரை ,மார்கழி நோன்பிருக்கத், தன்னை ஒரு கோபிகையாக உருவாக்கப்படுத்திக் கொண்ட ஆண்டாள், தன்னுடைய தோழியரான ஒவ்வொரு கோபிகையையும் ,உறக்கம் விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியார் கூட்டத்தோடுச் சேருமாறு விண்ணப்பித்தல்)

    புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
    பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    "தோழி,பொழுது விடிந்தது, பறவைகள் ஒலியெழுப்புகின்றன. பெருமாள் கோவில் சங்குகள் முழங்கி நம்மை அழைக்கின்றன. இன்னும் சிறுபிள்ளையைப் போல் உறக்கமென்ன எழுந்திரு. பூதனையைக் கொன்றவனும், சகடாசுரனை வதைத்தவனுமான கண்ணன் தான் அனைத்திற்கும் வித்தான ஆதிமூலமாய்த் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கிறான். அந்தக் கண்ணனைத் தமது இதயத்தில் வைத்திருக்கும் முனிவர்களும் யோகிகளும் , அவனது யோகநித்திரை கலையாதவண்ணம், தாம் மெல்ல எழுந்து 'அரி' என்ற இறைவன் பெயரை இணைந்துச் சொல்லும் ஓசை கேட்கிறது. இவையெல்லாம் பொழுது விடிந்ததன் அடையாளங்கள். எனவே, எங்களோடு இணைந்து கொண்டு மார்கழி நோன்பு நோற்பதற்கு எழுந்து வா !"

    பாசுரக் குறிப்புகள்

    இறைநெறியில் புதிதாகச் சேர்ந்த இளம் அடியாரை எழுப்பும் வகையில் அமைந்த பாடல், 5 X 5 + 5 இல் இரண்டாம் ஐந்தின் தொடக்கம் . இரண்டாம் பகுதி(6-10)- இதில் வரும் ஐந்து பாசுரங்கள் புதிதாக இறைநெறியில் இணைந்தவர்களை எழுப்பும் படி வருகின்றன . ஒவ்வொரு கோபிகையின் வீட்டிலும் சென்று அவர்களை எழுப்புவதில்,அதிகாலை முதல் விடியல் வரையிலான சரியான நேரக்கணக்கோடு கவனமாக அருளிய பாசுரங்கள். 6-15 வரையிலான பாசுரங்களால், ஆண்டாள் தனக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த ஆழ்வார்கள் பதினொருவரையும்(ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொருவர்,ஒரே ஒரு பாசுரத்தில் மட்டும் இரு ஆழ்வார்) எழுப்புவதாகக் கொள்வது, வைணவ இறைநெறியாளர்கள் கடைபிடிக்கும் ஒரு வழக்கம், சம்பிரதாயம். (அந்தந்த ஆழ்வார்கள் பயன்படுத்திய சொல்லாடல், இறைக் குறிப்புகளைக் கொண்டு ஆண்டாளும் மிக நுட்பமாக இந்தப் பத்துப் பாசுரங்களை அமைத்திருக்கிறாள். பிரபந்தங்களை நன்கு அறிந்தவர்கள் இதை விவரமாகப் பின்னூட்டத்தில் அளித்தால் மகிழ்ச்சி.) அதன் அடிப்படையில், இப்பாசுரத்தால் ஆண்டாள் தனது வளர்ப்புத் தந்தையாகிய பெரியாழ்வாரை எழுப்புகிறாள். பட்டர்பிரான் ,பரமனுக்கே மங்களாசாசனம் (திருப்பல்லாண்டு மூலம்) செய்து வாழ்த்தி விட்டார் ! 'பிள்ளாய்' என்ற சொல்லாடலால் அதைக்குட்டிக் காட்டுகிறாள் ஆண்டாள் !

    பிருந்தாவனத்தில் கண்ணனோடு இருந்த 5 லக்ஷம் கோபிகைகளின் பெருமை சொல்லும் விதமாக, உருவகமாக, உபலக்ஷணமாக "லக்ஷ பஞ்சகம்" என்கிற அமைப்பில் இந்தப் பத்துப் பாசுரங்கள் 6- 15 வருகின்றன. மேலும் 6-15 வரையிலான இப்பாசுரங்களில் அர்த்த பஞ்சகத்தின் ஜீவாத்ம நிலை சொல்லப்படுகிறது .

    அவதார பஞ்சகத்தின் அனைத்தையும் இப்பாசுரத்தில் காட்டியுள்ளாள் ஆண்டாள்.

    வித்து- வைகுந்தத்தில் இருக்கும் பர வாசுதேவ நிலை
    வெள்ளத்தரவு துயில்- அவருக்கு அணி செய்யும் படைகளான சங்கு ,சக்கரம்,வில் இவற்றோடு முதலாக இருக்கும் ஆதிசேஷப் படுக்கையில் இருக்கும் வ்யூஹ நிலை
    பேய்முலை நஞ்சுண்டு,சகடம் கலைக்கழிய,-- கிருஷ்ணாவதார விபவ நிலை
    புள்ளரையன் கோயில்- சிலை வடிவில் உள்ள அர்ச்சாவதார நிலை
    உள்ளத்துக் கொண்டு-- அந்தர்யாமி நிலை


    இந்த 6 ஆவது பாசுரம் முதல், பத்துப் பாசுரங்களில் வைணவ குருபரம்பரை என்கிற ஆச்சார்யர்களின் பெருமையைச் சொல்லும் வகையில் அமைகின்றன. குருவின் மூலமே பரமன் திருவடி சேர முடியும் என்ற தத்துவமே உட்பொருள். வைணவ நெறியின் படி, ஆச்சார்யர்கள் மூலம் இறைஞான உபதேசம் பெற்று இறைவனை சரணம் செய்ய வேண்டும் என்ற கொள்கை முன்னிறுத்தப் படுகிறது. ஒவ்வொரு கோபியராக உருவகம் செய்யப்படுவது, இறையடியார்கள். மிகவும் உயர்ந்த பொருளை ஒருவர் தனியாக அனுபவிக்கக் கூடாது என்பது உயர்கொள்கை. அதுபோல் மிகவும் உயர்ந்த இறை அனுபவத்தையும் தனியாக அனுபவிக்கக் கூடாது, அடியவர்கள் ஒன்றாகவே இணைந்து இறைவழிபாடு(கோஷ்டி சேவித்தல்) செய்ய வேண்டும் என்கிற வைணவ நெறியின் அடிப்படையில் அப்பாசுரங்களுக்கு உட்பொருள், தத்வார்த்தம் சொல்லப்படுகின்றன.
     
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்-- சொற்பொருள்

    பறவையினங்கள் தம் கூட்டை நீங்கியுமே
    சிறிய குஞ்சுகளின் உணவைத் தேடுதற்கு,
    சிறகு விரித்தாங்கே வானம் ஏகுமுன்னே,
    சிறப்பாய்ப் பேசுகின்ற ஓசை கேட்டாயோ !
    பறவையின அரசன் மேலே எழுந்தருளும்
    இறைவன் பேராளன் சிலையின் வடிவத்தில்,
    உறையும் விண்ணகரக் கோவில் சன்னிதியில், (விண்ணகரம்- விஷ்ணு க்ருஹம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்)
    நிறத்தில் வெண்மையுடன் காட்சி அளிக்கின்ற
    சிறந்த சங்குகளும் ஓங்கியொலித்து நம்மை,
    இறைத்துதி செய்ய அழைப்பது கேளாயோ !
    அறிந்தும் விழியாது இன்னு முறக்கமென்ன?
    சிறுபிள்ளைத்தனம் விட்டு உடனே எழுவாய் !
    இறக்க வேணுமந்தக் கண்ணக் குழவியென்று,
    உறக்கமிழந்த மாமன் அரக்கன் கஞ்சனுமே,
    வெறுக்கத் தக்கவளாம் அரக்கி பூதனையை,
    மறவக் கண்ணனுக்கு நஞ்சினைப் பாலூட்ட,
    சிறந்தத் தாயுருவில் சென்றிடச் செய்தானே !
    கறவையினங் காக்கும் கண்ணனோ அரக்கி
    இறந்து வீழ்ந்திடவே உயிரைக் குடித்தானே !
    பிறிதுமோர் அரக்கன் வண்டியுரு கொண்டு
    மறைந்து வந்தானே- அவனையும் யாரென்று
    அறிந்த கண்ணனுமே அச்சம் சிறிதுமின்றி,
    சிறிய கால்களினால் எட்டி உதைத்தானே!
    இறந்து வீழ்ந்தானே அரக்கன் சகடனுமே !
    சிறப்பு மிகவான இதுபோல் லீலைகளை
    நிறைந்த திறமோடு புரிந்த கண்ணனுமே,
    உறக்கம் கொள்ளுவது அரவுப் படுக்கையிலே !
    பாற்கடல் துயில் கொள்ளும் ஆதிமூலவனை,
    பிறப்பு இறப்பொன்றும் தனக் கில்லாதவனை,
    துறவறம் ஏற்றோரும், யோகத்தில் வல்லோரும், .
    சிறப்பாய் தம்முடைய இதயக் கோவிலுள்ளே
    உறையக் காண்கிறார், அமைதி கொள்கின்றார் !
    இறைவன் தம்முடைய நெஞ்சில் இருப்பதனால்,
    உறங்கும் ஆண்டவனின் நித்திரை கலையாமல், .
    துறவியர் கவனமுடன் மெதுவாய்க் கண்விழித்து,
    இறைவன் நாமத்தை இணைந்து சொல்கின்றார் !
    துறவியர் அரியென்னும் பெயரொலி எழுப்புவது,
    நிறைந்த மனவமைதி அளித்துக் குளிர்விக்கும்!
    இறைவன் பெயரொலியை நீயும் செவியுற்று,
    உறக்கம் நீங்கியுமே எம்முடன் சேர்ந்திடுவாய் !
     
    knbg and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    புள் - பறவை சிலம்பின - காலை விடியும் வேளையில் பறவையினங்கள் எழுப்புமொலி.
    புள்ளரையன் = பறைவைகளின் அரசன். கழுகு, இவ்விடம் பெருமாள் வாகனமான கருடனைக் குறிக்கும்
    புள்ளரையன் கோயில் = புள் +அரையன் +கோ +இல் = கருடனுக்குக் 'கோ' அரசன் பெருமாள். அவருடைய 'இல்' வீடு. ஆகவே பெருமாள் கோயில்.
    இப்பாசுரத்தால் துயிலெழுப்பப்படும் பெரியாழ்வார், நந்தவனத் தொண்டில் ஈடுபட்டவராதலால், அதிகாலை நேரத்தில் பறவைகள் சிலம்புகின்றன என்ற குறிப்பைப் பயன் படுத்தியுள்ளாள். அவர் பெரிய திருவடியான கருடனின் அம்சமானவராதலால் புள்ளரையன் கோயில் என்ற சொல்லாடல்.

    வெள்ளை விளிசங்கின்= பெருமாள் கோவிலில் உள்ள வெண்ணிறத்து அழைக்கும் சங்கு, பேரரவம்- கோவில் திறப்பதைக் குறிக்கும் சங்கொலி . கோவில் கதவுகளைத் திறக்கும் போது இறையடியவர்களை கோவிலுக்கு வரச்சொல்லி அழைக்கும் விதத்தில் மங்கல ஒலியாக சங்கினை ஊதுவது வழக்கம்.

    பிள்ளாய் எழுந்திராய் - இன்னும் இறைநெறியில் சேராதிருக்கும் சிறியவளே, காலை விடிந்தது, எங்களுடன் நோன்பிருக்க வா.

    பேய்முலை நஞ்சுண்டு,கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி- கண்ணன் ஆயர்பாடியில் புரிந்த லீலைகளுள் பூதனை வதம் (நச்சுப் பாலூட்ட வந்த அரக்கி,முற்பிறவியில் மஹாபலிச் சக்கரவர்த்தியின் மகள், பூதனையின் முலைக்காம்புகளை உறிஞ்சி அவள் உயிரைக் குடித்த லீலை ), சகடாசுர வதம் (வண்டிச்சக்கர உருவில் வந்த அரக்கனை தனது திருவடிகளால் உதைத்து வதைத்த லீலை )இரண்டும் குறிக்கப்படுகின்றன.

    கண்ணனுக்கு ஆபத்து என்று சொன்னால், பதறியடித்துக் கொண்டு விழித்து வருவாளென்று இந்தக் குறிப்பிரண்டையும் கொடுத்தாள் ! கண்ணனுடைய குறும்புகளாலும், சேட்டைகளாலும் கவரப்பெற்றவர்கள் ஒரே போன்ற அனுபவத்தை அடைய மாட்டார்கள். சிலர் நஞ்சினை உண்டு மயக்கமுறுதல் போலும், ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் அங்குமிங்கும் அலைபாய்தல் போலும் உணர்வதைக் குறிக்கும் விதத்தில், இவ்விரு திருவிளையாடல்களை ஆண்டாள் பயன்படுத்துகிறாள் .

    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை - வெள்ளம்- நீர், இவ்விடம் பாற்கடல் ,அரவு- நாகம், இவ்விடம் ஆதிசேஷன்.துயிலமர்ந்த - உறக்கம் கொள்வது போன்ற நிலை. வித்து- அனைத்திற்கும் வித்தாக இருக்கும் இறைவன்,இவ்விடம் நாராயணன். உழுதுண்டு வாழ்வாரைத் தொழுதுண்ணும் உலகம். உலகில் உயிரை வளர்க்கும் உணவளிக்கும் உழவர்கள், தமது விதையினை நீரில் இட்டு வளர்ப்பார்கள். அதே போலத்தான் உலகனைத்திற்கும் ஆதாரமான விதையாம் இறைவனும், தானே நீரின் நடுவில் பள்ளி கொண்டுள்ளான் என்பதைக் குறிக்கவே இச்சொல்லாடல் !

    ஆதிமூலம்-- அண்டங்கள் அனைத்திற்கும் வித்தாக, அடிப்படையாக இருக்கும் இறைவன் நாராயணன், பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் மாயத் துயில் கொள்வதாக ஐதீகம்.ஆதி என்றால் முதலாய் இருக்கின்ற என்று பொருள், சேஷன் என்றால் தொண்டன் என்று பொருள்... இறைவனின் முதல் தொண்டன் ஆதிசேஷன் என்பது தாத்பர்யம்.

    உள்ளத்துக் கொண்ட முனிவர்களும் யோகிகளும்- இறைவனை தம் நெஞ்சில் நிலைநிறுத்தி தவம் புரிபவர்கள்.முனிவர்- மனமொன்றி இறைவனைப் பற்றியே சிந்திப்பவர்கள் யோகியர்- யோகப் பயிற்சியுடன்,இறைத்தொண்டு புரிபவர்கள்.

    மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்- முனிவர், யோகியர் ஆகியோர் வெறும் வாய் வார்த்தையாய் இறைத்துதி செய்யாதவர்கள். எனவே அவர்கள் தம்முடைய இதயத்தில் குடிகொண்டுள்ள இறைவனுடைய யோக நித்திரைக் கலையாத வண்ணம் மிகக் கவனமாக இறைவன் பெயரைக் கூறியபடியே கண்விழிப்பார்கள்.கர்பிணித் தாய்மார்களெப்படி அவர்கள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படாமல் மிக கவனமாக எழுவார்களோ அப்படி எழுவார்களாம், இறைவனை இதயத்தில் சுமக்கும் பெரியோர்கள் !

    பேரரவம்- பேர் (இறைவன் பெயர்) +அரவம்=ஒலி , அனைவரும் ஒன்றுகூடிச் சொல்வதினால் உரத்துக் கேட்கும் இறைவன் பெயரொலி என்று பொருள்.

    உள்ளம் புகுந்து குளிர்ந்தே - இறைவன் பெயரைக் கூறுவதால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி நம் மனதைக் குளிர்விக்கும்.
     
    knbg, periamma and rai like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் ------உட்பொருள்

    திருமந்திரம் என்னும் கோயில் உறைகின்றப்
    பரமன் அனைத்திற்கும் நாயகனாய் உள்ளான் !
    பரமனைத் தொழுதபடி தொண்டில் ஆழ்ந்தபடி,
    இருக்கும் அடியார்கள் இறைவனின் சேவகரே !
    பேருண்மை இதனை அடியவர் அறிந்திடவே,
    நீரினில் கலந்திட்டப் பாலினைத் தனியாகப்
    பிரித்து அறிகின்ற அன்னப் பறவைகளாய்
    இருக்கும் ஆசானும் விளக்கிச் சொல்கின்றார் !
    பரமன் தொண்டிற்கு அடியவர் அனைவருடன்
    பரிந்து ஒன்றாகச் செல்லுதல் வேண்டுமென
    இருண்மை இல்லாத நற்குணம் நிறைந்துள்ள
    குருவாய் இருப்பவர்கள் உபதேசம் செய்தும்
    புரிந்து கொள்ளாமல் தனித்தே மயங்குவதேன்?
    பரமனின் அடியார்க்குத் துயரினைத் தரவல்ல
    இருளாம் அகந்தையுடன் மமதை என்கின்ற
    இரண்டால் விளைகின்ற அறியாமை நஞ்சை
    குருவாய் உள்ளவர்கள் உறிஞ்சி எடுக்கின்றார் !
    இருள்சேர் அறியாமை விலகிடச் செய்கின்றார்!
    பரமனை நாடுதற்குத் தடையாய் இருப்பதுவாம்
    பெரும்புலன்கள் தம்மை அடக்கிட உதவுகிறார் !
    அரவாய் ஆசைகள் நெளிந்து நிறைந்துள்ளப்
    பெரும் சம்சாரமெனும் கடலில் இறங்குதற்கு
    விருப்பம் கொள்ளாமல் இருக்கும் ஆசானும்
    பரமனை நாமடைய உதவிடும் நோக்கினிலே
    சரணாகதி வழியில் நம்மைச் செலுத்துகிறார் !
    அரியெனும் இறைநினைவில் நீங்காமல் இருந்துப்
    பேரின்பம் பெறுவதற்கு விதையைத் தூவுகிறார் !
    பரமன் தொண்டினையும் அடியார் நட்பினையும்
    விரும்பிச் செய்பவர்கள் மேற்கொண்டு செல்லும்
    பேரின்பப் பாதையிலே தடைகள் தோற்றுவிக்கும்
    பெரும்பாவ புண்ணியத்தைப் போக்க வேணுமெனக்
    கோரிக்கை விடுத்தால், ஆசான் செவியுறுவார் !
    கோரும் அடியார்கள் குறைகளைப் போக்கிடுவார் !
    பரமனையடைவதற்கு உதவும் ஆசான் சொல்
    பெரிதும் உளமொன்றிக் கேட்டுக் கொள்வதனால்
    பரமனும் நாமுமொன்றே என்று மயங்காமல்
    பெருங்கருணை இறைவன் அடியார் நாமென்ற
    அரிய கொள்கையினை ஏற்றுக் கொண்டிடலாம்!
    இருளில் விழிமூடி உறங்காதெழுந்திடலாம் - நல்
    சரணாகதம் என்னும் நோன்பைத் தொடர்ந்திடலாம் !
     
    periamma and rai like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    புள்- உட்பொருள் கண் முன்னே இருக்கும் நல்லது தீயது இரண்டையும் நன்கு பிரித்தெடுக்கத் தெரிந்தவர்களாய் , இறைநெறியில் உள்ள பரமஹம்ஸர்களான (அன்னப்பறவைகள்) ஆச்சார்யர்கள் , வைணவ நெறியின் குருபரம்பரையினர்.

    புள்ளும் சிலம்பின-- ஆச்சார்யர்கள் இறைநெறிகளை நமக்கு உபதேசம் செய்தல்
    புள்ளரையன் கோயில்- வைணவ நெறியின் திருமந்திரத்தை, ஒன்றும் அறியாத சீவர்களாகிய நம்மேல் கருணை கொண்டு ஆச்சார்யர்கள் உபதேசிக்கிறார்கள்

    வெள்ளை விளிசங்கு - மிகவும் உயர்ந்த ஸத்வ குணமுடைய ஆசான் , பேரரவம்- உறுதியாக அவர் நமக்கு உரைக்கும் இறைநெறிகள். ஸத்வ குணம் - மனத் தூய்மை, வாய்மை, கருணை, எளிமை போன்ற நற்குணங்கள் நிறைந்திருப்பது புள்ளரையன் கோயில் அஷ்டாக்ஷரத்தையும், அங்குள்ள சங்கு பிரணவத்தையும் குறிப்பதாகவும் உள்ளர்த்தம் உண்டு .

    பேரரவம் கேட்டிலையோ - பரமாத்மாவே அனைத்திற்கும் மூலம், ஜீவாத்மாக்கள் பரமாத்மாவின் சேவையில் ஈடுபட வேண்டியவர்களே என்ற விசிஷ்டாத்வைத நெறியை வைணவ ஆச்சார்யர்கள் உரக்கச் சொல்லுவது

    பிள்ளாய் - வைணவ இறைநெறியில் புதியதாய் இணைந்தவர்கள் எழுந்திராய்- ஆச்சார்யர்கள் சொல்லும் உபதேசத்தை ஏற்றுக் கொண்டு இறைநெறியில் சேருங்கள். பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்றேயெனச் சொல்லும் அத்வைத நெறியைச் சார்ந்திருந்தவர்கள், பரமாத்மாவே அனைத்திற்கும் மூலம், ஜீவாத்மாக்கள் பரமாத்மாவின் சேவையில் ஈடுபட வேண்டியவர்களே என்ற விசிஷ்டாத்வைத நெறியைத் தழுவி விட்டால், அவர்கள் வைணவ நெறியின் இளம் அடியார்கள் எனக் கொள்ளப்படுவார்கள். தாமாகவே இறைத்தொண்டு புரிந்து இறைவனை அடைந்து விடலாம் என்று என்னும் சிறுபிள்ளைத் தனமான அடியார்கள், இறைவனை மற்ற அடியார்கள் எல்லோருடனும் கூடி ஒன்றாகத் துதித்தே அடைய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் உட்கருத்து.

    . பேய் முலை- நான் என்ற அகந்தை (கர்வம்), எனது என்ற மமதை (உலகப்பற்று) , நஞ்சு - இவற்றால் விளையும் அறியாமை.பூதனையாக உருவகம் செய்தது- அறியாமையில் கிடந்துழலும் ஜீவாத்மாக்களை (நம்மை)
    பேய்முலை நஞ்சுண்டு- குருவானவர் நம் அறியாமையாகிய நஞ்சினை உறிஞ்சி வெளித் தள்ளுகிறார்.
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி- சகடாசுரன்- நம்மை இறைநெறியில் ஈடுபட விடாமல் அலைப்புறுத்தும் புலன்கள். குருவானவர் புலன்களை அடக்கி வென்றவர். நமக்கும் புலனடக்கம் ஏற்பட வழி காட்டுபவர்.

    வெள்ளத்தரவு - சம்சாரக் கடலின் ஆசைப் பாம்புகள். கடலாய் உருவகித்தது பிறவிப்பெருங்கடல், அரவெனச் சொன்னது- அலைக்கழிக்கும் ஆசைகளென்னும் நஞ்சை

    துயிலமர்ந்த- சம்சாரக் கடலின் ஆசைகள் என்னும் நச்சிற்கு ஆட்படாமல் புலன்களை வென்று இறை சிந்தனையில் எப்போதும் ஆழ்ந்திருக்கும் அடியவர்களான ஆச்சார்யர்கள்.

    வித்தினை- சீவர்களான அடியார்கள் இறைவனை அடைவதற்குச் செல்ல வேண்டிய சரணாகத வழியினை ஆச்சார்யர்கள் தமது உபதேசங்கள் மூலம் விளக்குகிறார்கள். இறை நெறியை நம் மனதில் விதைக்கிறார்கள்.

    உள்ளத்துக் கொண்டு- இறைஞானம் வழங்கும் ஆச்சார்யர்களை மனதில் நிறுத்தி, வணங்கி .முனிவர்களும் யோகிகளும்- இறைவன் மீதில் பக்தி செய்வோரும், இறைத்தொண்டு புரிவோருமான இரண்டு வித அடியார்கள்.மெள்ள எழுந்து- தாம் செய்யும் பக்தியாலும், இறைத் தொண்டினாலும் இறைவனை அடைந்திட முடியும் என்று எண்ணியிருந்த எண்ணத்தைக் கைவிட்டு .

    அரியென்ற பேரரவம்- சீவர்களான அடியார் ,இறைவன் நாமத்தைச் சொல்லி, தம்முடைய இயலாமையை , இறைவனை அடைவதில் தமக்கிருக்கும் தடைகளை, நீக்கச் சொல்லி ஆச்சார்யரை அணுகி வேண்டுதல்.
    முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்- இறையடியாருக்கு உபதேசம் செய்யும் ஆச்சார்யர்களும் தவ யோகிகளே . இதயத்தில் குடிகொண்டுள்ள இறைவனுடைய யோக நித்திரைக் கலையாத வண்ணம் மிகக் கவனமாக இறைவன் பெயரைக் கூறியபடியே கண்விழிப்பார்கள்.

    உள்ளம் புகுந்து- சீவர்களின் கோரிக்கையை செவியுறும் ஆச்சார்யர்கள்.

    குளிர்ந்து- சீவர்களுக்கு இறைஞானத்தை உபதேசம் செய்து , சரணாகத வழியில் சென்று இறைவன் திருவடியை அடைய உதவுவார்கள்
     
    knbg, periamma and rai like this.
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Pavithra,
    The 6th verse has been wonderfully explained.Congrats on your persistent efforts!
    Of all the nomenclatures Andal uses Hari ,the word means one who
    mitigates the sufferings or destroys inauspicious things.After all the avatharam is for Dushta Nigraha automatically resulting in sishta paripalanam.

    Hari enra peraravam-Hari becomes HARE in Ekaram
    or vocative sense.

    HarI - the primary name of Lord NArAyanA.. addressed as Hari NArAyanA
    HarA - the primary name of Mother Goddess Shakthi..whose love and protection guArds us like a mother loves and ptotects her child
    Hara - the glorious name of Lord Shambhu SankarA - who delivers even the most fallen souls like bhuthAs and tAmasic people by leading them to the platform of Krishna bhakthi gradually
    HarE = HarI + HarA + Hara !!
    'Hari enra peraravam-indicates Narayana the protector, Sankara, the destroyer and HARAA-the primordial SHAKTHI.
    So much is talked about Shanka Naadham.
    Many of us might have heard of Shank or conch. Dakshinavarti Shankh Or( Valampuri Sangu in Tamil ) is the shell of a large sea snail, mostly available in Indian Ocean, Arabian sea or Bay of Bengal in the eastern shore.Dakshinavarti Shankh or Lakshmi Shankh is very rare ,one in one lakh..

    While talking of Shanka Dvani I am reminded of shells or sangu in Tamil.
    There was a village in eastern shore of India by name Shambunathpur.The main occupation of the villagers was to collect sea shells, arrange them category wise,make artistic items out of the shells for sale.There was a cowherd by name Narender. He was not educated. But for fun he used to play flute while the cows were grazing.A sadhu who came that way assessed the real talents of the boy and came forward to give formal tuition.Narender picked up very well. On a full moon day, the sadhu played a raga in his flute, sitting on the banks of sea shore.Normally there will be huge waves on Poornima Day. When the music was being played, the waves were not to be found and the sea became extremely calm and looked like a lake.The villagers and fishermen were crowded.
    Unexpectedly there appeared white flower like layer floating on water.When they gazed at the crowded white objects they recognised the objects to be Dakshinavarti Shankhs.
    As Sadhu was playing,there was an echo of the Shankha nadham from inside the sea.For a few minutes people were lost in the sadhu's music and the special sound of the conches. Within a few minutes all the conches were dashed towards the shore.
    Sadhu said"This raga is called Chandra Kauns which is capable of attracting Dakshinavarti shankhs from out of the sea on Poornima days.Sadhu said to Narender," when you are able to bring out Dakshinavarti Shanks by playing Chandrakauns you will have yoga siddhi'.
    Narender became a famous flautist, yet could not succeed in bringing out the conches.
    His son Dheerendra by name became an expert in playing flute.
    On a Vishaka Poornima day nine year old Dheerendra played the raga Chandrakauns from his flute. Thousands of pure white Dakshinavarti Shanks bloomed and reached the shore to the astonishment and admiration of all the villagers.
    Even today Lakshmi Shanks are got in large numbers only from this village of Shambunathpur.

    The words 'vellai vilich sangin peraravam kettilaiyo'brings to my mind the pure white Dhakshinavarthi shank formed by the influence of Chandra Kaunse Raga.

    Music creating Shanks and later shanks creating Gambeera shanka Dvani are thrilling.
    Though Andal uses Shanka natham as inspiring the Gopis to get up,it kindles my
    thoughts about how music creates shanks and how shanks create music.

    Jayasala 42
     
    knbg, periamma and PavithraS like this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Madam, Thank you very much for an enlightening post. Very happy to know the deep meanings of this Name


    Your views about Shankadhwani is mesmerizing. Thank you for sharing the info about Shambunathpur.

    Thank you for blessings.:)
     
  8. ksuji

    ksuji Gold IL'ite

    Messages:
    238
    Likes Received:
    737
    Trophy Points:
    173
    Gender:
    Male
    கவிதை , தமிழ் , ENGLISH , samskritham , ஆன்மிகம் , சமையல் , போட்டோகிராஃபி, அப்பப்பா ! இன்னும் என்ன என்ன ........?
    ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கீங்க .

    பெரிய கற்பூரமா வாங்கி அம்மாவை சுற்றிப் போடச் சொல்லுங்க .

    சாதனைகள் மேன்மேலும் பல்கிப் பெருகி வளர வாழ்த்துக்கள் .

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் .

    Always keep up your spirit .
    BEST WISHES .
    அன்புடன்
    ksuji.
     
    Last edited: Nov 7, 2016
    knbg and periamma like this.
  9. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இவ்வளவு பெரிய வார்த்தைகளுக்கு நான் தகுதியற்றவள், ஐயா !

    உங்கள் அன்பிற்கும், ஆசிக்கும் மிக்க நன்றி !
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா படித்தேன் .என்ன ஒரு விளக்கம் .மீண்டும் மீண்டும் படித்தால் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது .சீரிய தொண்டு செவ்வென சிறக்கட்டும் .
     

Share This Page