1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (5) மாயனை மன்னு வடமதுரை !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Nov 2, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    5) ஆண்டாள் பாடல் (மார்கழி நோன்பிருக்க ஏற்படக் கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றிப் பாடுதல்)

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
    தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை

    " யாராலும் புரிந்துகொள்ள முடியாத வகையில் அதிசயமான காரியங்களை நிகழ்த்துபவனும், வட மதுரா தேசத்து அரசனும், பெருமைவாய்ந்த,தூய்மையான யமுனை நதிக்கரையில் வசிப்பவனும், இடையர் குலத்தில் அணையாப் புண்ணியச் சுடர் போல் அவதரித்தவனும், தனது அன்னை தேவகி தேவியின் கருப்பையை ஒளி மிக்கதாக்கி, அவளது திருவயிற்றை விளங்கச் செய்து அவளுக்குக் குன்றாப் புகழ் சேர்த்தவனும் ஆன தாமோதரன் என்ற கண்ணபிரானைத், தூய்மையான உடல் உள்ளத்துடன் வந்து, அவன் திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது நற்குணங்களைப் போற்றிப் பாடி, சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி நாம் தியானித்தோமானால், முன்னர் நாம் அறிந்து செய்த பாவங்களும், இனிமேல் நாம் அறியாமல் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பில் இட்ட தூசு போல தடயமின்றி அழிந்து போய் விடும் ! ஆகவே அம்மாயப்பிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள் ! "

    பாசுரக் குறிப்பு

    பாட்டுடைத் தலைவனைப் பாடுவதற்கு அவனது ஊர், பேர், ஆறு முதலியவை வேண்டுமாகையால், “வடமதுரை மைந்தனை” என்று ஊரும், “தாமோதரனை” என்று பேரும், “யமுனைத்துறைவனை” என்று ஆறுங் கூறப்பட்டன.

    தாமோதரன் உட்பட இறைவன் நாமங்களை வாயால் உச்சரித்து, மலர் கொண்டுத் தூவி , மனதால் எண்ணித் தொழுது பாவை நோன்பு குறைவின்றி நடத்தும் வழி கண்டிப்புடன் கூறுகிற பாசுரம். 5 X 5 + 5 இல் முதல் ஐந்து நிறைவு. அவதார பஞ்சகத்தின் மூன்று நிலைகள் இப்பாசுரத்தில் வருகின்றன. தூயப்பெருநீர்-வைகுண்ட நிலை, தாமோதரன் - கிருஷ்ணாவதார விபவ நிலை, தூமலர் தூவித் தொழுது -கோவிலுறையும் சிலையாக அர்ச்சாவதார நிலை இங்கேக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கண்ணன் இடையர் குலமான யாதவ வம்சத்தில் தோன்றியவன் வட மதுரையின் மன்னன், ஆயர்பாடியில் யமுனையாற்றங்கரையில், பற்பல லீலைகள் புரிந்தவன். அவற்றுள் ஒன்றே தாமோதர லீலை. இந்தத் திருவிளையாடல் இப்பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது. தாமோதரன்- உரலோடு யசோதை கட்டியதனால் வந்த பெயர் தாமம்- கயிறு, உதரம்- வயிறு. கண்ணன் செய்த குறும்பைக் கண்டித்து யசோதை அவனை உரலோடு பிணைத்துக் கயிற்றால் கட்ட, அப்படியே இழுத்துச் சென்று அங்கிருந்த மரங்களிரண்டை சாய்த்து, நலகுபேரன் , மணிகிரீவன் என்ற யட்சர்களுக்கு சாப விமோசனம் அளித்தான். தன் மகனே பரமாத்மா என்று அறியாமால் , அவனை அன்பெனும் கயிற்றால் கட்டிய யசோதைக்குக் கட்டுப்பட்டுப் பெருமை தேடித் தந்தான். எவ்வளவோ மாயங்கள் புரிந்தாலும் , (தானே ஆத்ம மாயையை உருவாக்குவதாக கீதையில் கண்ணன் சொல்லுகிறார்) தனது அடியவர்கள் அன்பிலேக் கட்டுண்டு அவர்கள் அடையும் வண்ணம் மிக எளிமையாக அவர்கள் பிடியில் வருபவன் இறைவன் என்பது உட்பொருள். அடியவர்களின் பக்தி எனும் கயிற்றில் விரும்பிக் கட்டுப் படுபவன் இறைவன் என்ற பொருள்.

    அஜோ'பி ஸந்நவ்யயாத்மா பூதானாமீஸ்வரோ'பி ஸந் I
    ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாமியாத்மமாயயா II
    (பகவத் கீதை 4:6)

    "பிறப்பிறப்பில்லாத நான் (கண்ணன்), எல்லா உயிர்களிலும் உறைகின்ற நான் , விரும்பும்போது இவ்வுலகில் ,என்னுடைய பரம்பொருள் குணங்களில் சிறு மாற்றமும், குறைவுமின்றி, எந்த உருவில் தோன்றும் எண்ணமுண்டோ அந்த உருவில் தோன்றும் மாயையை உருவாக்குகிறேன்."
     
    knbg, periamma and jskls like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம் - சொற்பொருள்

    பூண்ட விரதமிது நலமோடு நிறைவுறவும்,
    வேண்டும் வரமெலாம் நாமும் பெற்றிடவும்,
    நீண்ட நம் பாவங்கள் நீங்கியோடிடவும்,
    யாண்டும் இன்பமே துய்த்திடவும்- செய்ய
    வேண்டிய தெதுவென சொல்லக் கேளுங்கள் !
    எண்ணம் எதுவென்று யாரும் அறியாத
    வண்ணம் மறைத்தே லீலைகள் பற்பலவும் ,
    பண்ணும் மந்திரக்காரன்-அவன் பெயரும்
    கண்ணன் அவன் வடதிசையில் திகழ்கின்ற
    மண்ணாம் மதுராவின் மன்னன்- கருநீல
    வண்ணன் யமுனையெனும் ஆற்றின் கரை
    எண்ணில் அடங்காத விளையாடல் செய்த
    அண்ணலவன் ஆயர்கள் முன்பு செய்திட்டப்
    புண்ணிய பலனாகக் குலமொளிர வந்தான்!
    தாயாம் தேவகியின் கருவறையில் ஒளிர்ந்து,
    வயிற்றை விளங்கச் செய்யுமாறு வந்தான்!
    வெண்ணை திருடி உண்டான் அவனென்று
    கண்ணுற்று கோபியர் குற்றம் சாட்டியதால்,
    தன்னை நன்றாகத் தாயாம் யசோதையவள்
    திண்மைக் கயிற்றாலே உரலோடு கட்டவுமே,
    பண்டை காலத்தில் முனிசாபம் பெற்றாங்கே
    மண்ணில் வேரூன்றி இருமரமாய் நின்றிட்ட
    விண்ணுலக யட்சர் இருவரை விடுவித்தான் !
    கண்ணனை மகனாய்ப் பெற்ற யசோதை
    அன்னைக்குப் பெருமை பலவும் தந்தான் !
    இன்னும் பற்பலவும் லீலைகள் செய்திட்டக்
    கண்ணன் நாமத்தை வாயாலே செப்பிடவும்,
    நன்னீரிலாடி நம்முடல் தூய்மை செய்து
    வண்ணமலரொடு துளஸி தூவி பணிந்திடவும்
    எண்ணற்று செய்திட்டப் பாவங்கள் தன்னோடு
    இன்னும் நாமறியாமல் சேர்கின்ற பிழைகளுமே
    நன்றாக எரிகின்றத் தீப்பிழம்பின் இடைப்பட்டு
    மண்ணோடு மண்ணாகி அழிந்திடும் அறிவீரே !
     
    knbg and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மா + ஆயன் = பெரும் ஆயன் , பசுக்களாகிய சீவாத்மாக்களைக் காக்கும் ஆயன் பரமாத்மா. பசுபதி. மா என்னும் திருமகளைத் தன்னோடு உடையவன். அனைத்திற்கும் ஆதாரமான பரம்பொருள், தான் ஒரு பாலகனாகத் தோன்றி, குறும்புகள் செய்து, பெண்களுடன் விளையாடி, தாயினால் கட்டப்படவும், தண்டிக்கப்படவும் இடங்கொடுத்து, சாதாரணர்களும் மிக எளிதாக அணுகும்படியான பெருஞ்செயல் புரிவதனால் , மாயம் செய்வதனால், மாயன் எனக் குறிக்கப்படுகின்றது.

    மன்னு வட மதுரை- கண்ணனுடைய சம்பந்தம்(அவ்விடம் பிறந்தான்) பெற்றதாலே மிகவும் புகழ்பெற்றதாம் அந்த வடமதுரை. கண்ணன் மட்டுமல்ல, வாமனனாக வந்த போதும் அங்கே சித்தாஸ்ரமத்தில் தவத்திலாழ்ந்தான். ஸுதர்சனத்தின் அம்சமான சத்ருகனன் லவணாசுரனை வதைத்த பின்னர்,மன்னனாக இராமனால் முடிசூட்டி வைக்கப்பட்டதும் இதே மதுராவில் தான். பலவாறும் இறைவனுடன் தொடர்புடையதால் வடமதுரைக்குப் பெரும்புகழுண்டு.

    மைந்தன்- மைந்து (மிடுக்கு) உடையவன், பெற்றோருக்கு மகனென்றாலும், தலைவன், நல்ல கம்பீரமுடையவன், தன் ஆணைக்கிணங்க அனைத்தையும் செயல்பட வைக்கக் கூடியவன்,என்றெல்லாம் பொருளுண்டு. கண்ணன் பிறந்த நொடியில், அவனது பெற்றோரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் கட்டறுப்படச் செய்தான், சிறைக் காவலாளிகளை மயக்கமுறச் செய்தான், சிறைக்கதவுகளைத் திறக்கச் செய்தான். இவ்வாறெல்லாம் தனது ஆளுமையை வெளிப்படுத்திய இடமாதலால், அவன் வடமதுரையின் மைந்தனாகிறான். Kannan is a stylish guy !

    தூயப்பெருநீர் யமுனை- கண்ணனை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லும்போது ஒதுங்கி வழி விட்டதிலிருந்து,அவனது லீலைகளுக்கெல்லாம் இடங்கொடுத்துத் தொண்டாற்றி மகிழ்ந்ததால் , யமுனை நதி பெருமையுறுகிறது. இதுவே இராமாவதாரத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றதைப் பார்த்தும், சீதை "இதை இராமனுக்குச் சொல்வாயாக" என்று தன்னிடம் கூறியும் "மண்ணே கண்டாயா, மரமே கண்டாயா " என்று இராமன் புலம்பியதைக் கேட்டும், கோதாவரி நதியானது ஒன்றுமே செய்யாமல் இருந்து விட்டதால், அதற்கு ஏற்றம் குறைவு என்று பெரியோர்கள் விளக்குவார்கள்.

    யமுனைத் துறைவனை- இறைவன் மண்ணுலகில் கண்ணனாக யாதவர் நகரான மதுராவில் அவதாரம் செய்து. யமுனை நதிக்கரையில் இராஸக்ரீடை உட்பட, பல திருவிளையாடல்கள் புரிந்தான். எனவே அடையாளம் சொல்லும் விதத்தில் கூறப்பட்டது.

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை - ஏதொன்றும் பெரிய அறிவுத்திறனற்ற எளிமையான ஆயர்களின் குலத்தில் , ஞான ஒளியாகத் தோன்றியவன்.ஆயர்குலம் எனப்படுவது, , சம்சாரக்கடலில் சிக்குகின்ற இகவுலகாகிய, மண்ணுலக உயிர்களையே !

    தோன்றும் - கதிரவனைக் கீழைத்திசையில் தோன்றும் ஒளியென்கிறோமல்லவா ? அதைக்காட்டிலும் மேலான கண்ணன், வடமதுரையில் சிறையில் தேவகிக்குப் பிறந்தாலும், அதே இரவில், அங்கிருந்து நீங்கி, ஆயர்பாடியில் இருள் நீக்கும் ஒளியாகக் காணப்பெற்றானல்லவா ? ஆகவே தான் 'தோன்றும்' என்ற சொல்லாடல். பெற்றவள் வடமதுரையிலிருந்தாலும், அவனுக்குப் பாலூட்டி வளர்த்தவள் ஆயர்பாடியில் யசோதையே அல்லவா ? ஆகவேதான் ஆயர்குலத்தின் விளக்காகத் தோன்றினான் என்றாள், ஆண்டாள்.

    தாயைக் குடல்விளக்கம் - தன்னைக் கருவில் சுமந்த அன்னை தேவகியின் வயிற்றை விளங்கச் செய்தான். தன்னை வளர்த்த அன்னை யசோதைக்கும் பெருமை சேர்த்தான் கண்ணன்.

    தூயோம்ஆய் வந்து - நீராடி (உடல் சுத்தம்) தூமலர் தூவித்தொழுது-மலர்களால் அருச்சித்து (தூய்மையான மலர் , நாராயணனாகக் கொள்ளும் இறைவனுக்கு மிகவும் உகந்த இலை வடிவிலான மலர், துளஸி, துழாய்) வாயினால் பாடி- நாம சங்கீர்த்தனம் மனத்தினால் சிந்திக்க- இறைவனையே எண்ணுதல்.
    மனோ,வாக்,காயம், திரிகரண சுத்தி,அதாவது, எண்ணம், சொல் செயல் மூன்றிலும் தூய்மையைக் கடைபிடித்து இறைத்தொண்டில் ஆழ்தல் பற்றி விளக்கப்படுகின்றது.

    போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் - பூர்வாகமெனப்படும் இறைவனைப் பணிவதற்கு முன் செய்த பாவங்களும், உத்தராகமெனப்படும், பின்னர் அறியாமல் செய்யும் பாவங்களும் தொலையும்.எல்லாவற்றையும் சுத்தப்படுத்தும் திறமை தீக்குண்டு. உருவை அழித்திடும் வல்லமை உண்டு. எனவேதான், நம் பாவங்களை அழிக்கும் இறைவன் கருணையை ஒப்பிடுகையில் தீயைக் குறிக்கிறாள் ஆண்டாள்.

    செப்பு-நமது பாவங்கள் பலவிருக்க ,நாம் செய்யும் இந்நோன்பு நன்றாக நிறைவேறுமா ? என்ற ஐயத்திற்கு விடை தரும் வகையில் இதைச் செய்தால் (திரிகரண சுத்தியுடன், இறைத்தொண்டு) இது நடக்குமென (பாவங்கள் தொலைந்து பறை கிடைக்கும்) தீர்க்கமாக உரைப்பதற்காக இச்சொல்லாடல்.
     
    Last edited: Nov 2, 2016
    knbg and periamma like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்----- உட்பொருள்

    பரமானந்தமெனும் மாறா நிலை நீங்கி
    பிரமம் நமக்காகக் கருணை மனத்தோடு
    உருவம் தாங்கி பல திருவிளையாடல்கள்
    புரியும் பெருமை இம்மண்ணுலகம் உறுமே !
    நிரந்தர ஆனந்தம் என்னும் பேரமுதைத்
    தருகிற திருவடியோ வைகுந்தம் உறையும் !
    பொருள்சார் உலகும் ,அருள்சார் அவ்வுலகும்,
    இரண்டும் வேறென்றுக் காட்டும் படியாகப்,
    பிரிக்கும் கோடாக நடுவில் பாய்ந்தோடும்,
    விரஜா நதிக்கரையில் உறையும் பரமனுமே,
    இருளைப் போக்கும் அருளைப் பொழிவானே !
    பெருமையெலாம் வாய்ந்த காயத்ரி மந்திரப்
    பொருளாய் ஒளிர்கின்றப் பரமனவன் தானும்,
    அருமை குணமுடைய அடியார் செய்கின்ற,
    பரம பக்தியெனும் கயிற்றில் கட்டுறுவானே !
    இருமை புரியவல்ல புலன்களோடு, மனதைத் (இருமை-நன்மை தீமை என்கிற இரு வகை செயல்பாடு)
    திருத்தி நாமவற்றை நலமாய் அடக்கியுமே, (ஒருமை -இருமை நீக்கி இறைவனைப் பற்றியே சிந்தித்தல்)
    ஒருமைப் படுத்தி நல்லிறையின் வழியினிலே,
    பெருகும் எண்ணம் சொல் செயலெல்லாமே,
    உருகும் பக்தியினால் தூய்மை செய்திட்டு,
    ஓருயிர்க்கும் கொடுமை ஏதும் நினையாமல்,
    பெரும்சவால் விடுக்கும் புலன்களை அடக்கி,
    பேரன்பு சகிப்புடனே இறைஞானம் வாய்த்து,
    பரமனைச் சிந்தித்துத்,தியானத்தில் ஆழ்ந்து,
    பெருந்தவமும் சத்தியமும் நெறி தவறாதிருந்து,
    அருங்குண மலர்களால் பரமனைத் துதிக்க,
    பெரிதும் வாட்டுகிற முன்னை வினையோடு,
    சரணம் செய்த பின்னே சேருகின்றனவும்,
    பெருந்தீ இடைப்பட்ட பஞ்சினைப் போலே
    கருணை வடிவான இறைவன் பொழிகின்ற
    அருட்தீ வெப்பத்தில் அழிந் தொழிந்திடுமே !

    மாயன் - அனைத்திற்கும் மூலமாக பரவாசுதேவ நிலையில் இருக்கும் இறைவன் அவ்வப்போது இகவுலகில் அவதரித்து லீலைகள் புரிவதைக் குறிக்கும்.

    வடமதுரை -நிலைத்த ஆனந்தமாகிய அமுதத்தின் உறைவிடமான பாற்கடல் இருக்கின்ற வைகுந்தம். (மதுரம்- அமுதம்)

    யமுனை என்று குறித்தது வைகுண்டத்தில் வற்றாது ஓடும் விரஜா நதியை. நாராயணனின் வியர்வையிலிருந்து துளிர்ப்பதாக பத்ம புராண உத்தர காண்டத்தில் உள்ளது . இதுவே இம்மண்ணுலகிற்கும், இறையுறைவதாக வைணவ நெறியுரைக்கும் வைகுண்டத்திற்கும் இடையே ஓடுகிறதென்று தாத்பர்யம்.

    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்-- வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயாக, மிக உயர்ந்ததாகக் கருதப் பெறும் காயத்ரி மந்திரத்தின் பொருளாக ஒளிர்பவன் நாராயணன் (பத்ரிகாஸ்ரமத்தில் நர நாராயணர்களாக அவதாரம் செய்த போது காயத்ரியின் பொருளுபதேசம் செய்ததாக ஐதீகம் )

    தூயோமாய் வருவது- மெய் , வாய், கண், மூக்கு, செவி இவற்றால் தீமை புரியாமல் இருப்பது. தூயோம் ஆய் வந்து நாம் - எண்ணம் சொல் செயலாலே தீங்கெதுவும் புரியாத தூய்மை

    தூமலர் - அடியவர் உள்ளத்தில் மலரும் 1 அகிம்சை 2. புலனடக்கம் 3. எல்லா உயிர்களிடத்திலும் நேசம் 4. சகிப்புத்தன்மை,5.ஞானம் 6. தியானம் 7. ஆன்மீக தவம் 8. சத்தியம் ஆகிய எட்டு மலர்கள்

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க- இறைவன் பெயர்களைப் பாடி, த்யானத்தில் அவனையே எண்ணி வணங்குதல்

    போய பிழையும் புகுதருவான் -முன்னை வினைகள்- தீப்பலனாகிய பாவங்களைப் போக்கிடுவான் , நின்றனவும் -சேருகின்றன - நற்பலனாகிய புண்ணியங்கள்
    தீயினில் தூசாகும் - நமது பாவ, புண்ணிய பலன்கள் தொலைந்து, முக்தி கிடைக்க விழி பிறக்கும் என்று பொருள்.

    இறைவன் திருவடிகளில் சரணம் அடைந்தபின்னே பாவம் செய்கின்ற விதத்தில் மனம் போகாது. ஆயினும் நற்பலனாகிய புண்ணியம் சேரும். வீடு பேறு அடைவதற்குப் பாவம், புண்ணியம் இரண்டும் இல்லாமல் இருக்க வேண்டும். ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று சரணாகதி செய்த பின்னே, நாம் செய்யும் எந்த செயல்களின் பலன்களும் நம்மைச் சேராது, இறைவனையே சேரும் என்பது இறைக்கொள்கை. ஆகையினால், வீடு பேறு உறுதியாகிறது. இதுவே பிழையும் புகு தருவான், நின்றனவும் என்ற வரி உணர்த்தும் உண்மை.
     
    knbg and periamma like this.
  5. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Pavi ji, Tamizh aarvathil I have bookmarked all 5 parts till now, to read when I have more time. Index pathivu ondru erundhal sowgariyam... Just a suggestion. :blush:
     
    jskls and PavithraS like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hey, surprise ! Thanks for showing interest dear. I do not know how much this series will give you 'Thamizh' part. Really appreciate your support, as always ! Thanks for the Index idea too !
     
    kaniths likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவி யமுனை -கோதாவரி நதிகளை பற்றிய செய்தி புதியது .
    கடவுள் அசுரர்களை தண்டிக்கிறானே தவிர அழிப்பதில்லை .ஒன்று சாப விமோசனம் கொடுக்கிறான் .இல்லை வேறு பல உருவங்களை கொடுக்கிறான் .மீண்டும் ஒரு அருமையான விளக்கம் .
    நான் ஒரு வார காலம் வெளிஊர் செல்கிறேன் .அதனால் என் பின்னூட்டங்களை வந்த பின் தருவேன் .
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆம் .அவன் தாயுமானவன் அல்லவா ? பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பெரியம்மா. நல்லபடியாக வெளியூர் சென்று வாருங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்த்துப் பின்னூட்டம் தாருங்கள். :)
     
  9. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நமது பாவங்கள் தீ பற்றிக் கொள்ளும் பஞ்சு போல் எரிந்து விடும் என்கிறாள் ஆண்டாள்
    தூய பெரு நீர் யமுனை -கங்கை விஷ்ணு பாதத்தில் உற்பத்தி ஆனாலும், யமுனா கங்கையைவிட அதிர்ஷ்டம் வாய்ந்தவள்.
    வசுதேவர் கண்ணனை மதுராவிலிருந்து கோகுலம் எடுத்துச் சென்றபோது யமுனைக் கண்ணனின் பிஞ்சுக் கால்களை வருடினாளாம்.எப்பேர்ப் பட்ட பாக்கியம்!
    கண்ணன் மற்ற பிள்ளைகளுடன் யமுனையில் குதித்து விளையாடியபோது கண்ணனின் முழு உடலின் ஸ்பரிசத்தையும் அனுபவித்தவள் யமுனா. எனவே அவள் தூய பெருநீர் ஆகிறாள்.
    ஆயர் குலத்தில் பிறந்தான் என்று சொல்லாமல் தோன்றும் அணி விளக்கு என்ற சொற்களை பயன் படுத்துகிறாள்.எல்லாரையும் போல் கர்ம வினை கொண்டு
    கண்ணன் பிறக்கவில்லை.ஆயர் குலத்தை ஒளிர செய்யும் விளக்காகத் தோன்றினான்.
    யசோதையின் கயிற்றினால் கட்டுண்டான் தாமோதரன்.அடியார்க்கு கட்டுப் படும் எளிமை எனப்படும் சௌலப்யம்' எனப்படும் தன்மையை தாமோதரன் எனும் சொல் வெளிப் படுத்துகிறது.
    பூ கிடைக்காத சமயங்களில்
    AhimsA prathamam pushpam pushpamindriya nigraha: ! sarvabhUta dayA pushpam kshamA pushpam viSeshata: !!
    SAnti: pushpam tapa: pushpam dhyAnam pushpam tathaiva ca ! Satyamashta vidham pushpam vishNo: prItikaram bhavet


    என்று பெரியோர் சொல்லிக் கொடுப்பர்.

    Very nice comments pavitra.Thank you for taking us through this visual journey.

    jayasala 42
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you for sharing the Slokam !

    Madam, I feel blessed. Namaskarams.
     

Share This Page