1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (29) சிற்றம் சிறுகாலே !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 13, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    29) ஆண்டாள் பாடல் (எந்நாளும் பிரியாதிருந்து கண்ணனுக்குக் கைங்கர்யம் என்கிற இறைத்தொண்டு செய்வதற்கு அருள வேண்டுதல் )

    சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
    பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
    பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
    குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பாசுரப் பொருளுரை


    "அதிகாலைப் பொழுதில் , மிக சீக்கிரமே உன்னிடத்திற்கு வந்து உன்னை வணங்கி, தங்கத் தாமரையினையொத்தத் திருவடிகளைப் போற்றிப் பாட நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தை நீ கேட்பாயாக ! மாடுகளை மேய்த்து அவை புல்லுண்டு பசியாறிய பின்னர் உண்ணுகின்ற ஆயர் குலத்தில் பிறப்பெடுத்த நீ, எங்களின் பணிவிடைகளை ஏற்காமல் செல்லுதல் ஆகாது ! உன் அருளை (பறை) பெறுவதற்காக மட்டுமே நாங்கள் வரவில்லை,கோவிந்தனே !என்றென்றும், ஏழேழு பிறப்புகளிலும் உன்னோடு இருக்கின்ற , நெருங்கிய உறவினராக நாங்கள் இருக்க அருள்வாயாக ! உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் ! இவற்றுக்கு மாறுபட்ட எங்களது ஆசைகளை நீக்கி அருள வேண்டும் ! "

    பாசுரக் குறிப்பு

    தன்னை ஒரு ஆயர்பாடிப் பெண்ணாக, கோபிகையாக உருவகப்படுத்திக் கொண்டு ஆண்டாள் சொன்ன கடைசி திருப்பாவைப் பாசுரம் இதுவாகும். அடுத்த பாசுரம், திருப்பாவைக்கான 'பலஸ்ருதி' ஆண்டாள் தன் வாய்மொழியாகவே உரைப்பது. மிகவும் உயர்வான 'கோவிந்த' நாமத்தை மூன்றாவது முறையாக குறிப்பிடும் பாசுரம் இது . மற்ற பாசுரங்களில், கோபிகைகள் இறைவனிடம் பறை தருமாறு வேண்டுகின்றனர், சரணாகதி செய்வதைப் பற்றிப் பேசுகின்றனர். இப்பாசுரத்தில் சரணாகதி செய்து நாம் பெறக்கூடிய பறை என்ன என்பதன் பொருளை, அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டியதைப் பற்றி விரிவாகப் விளக்குகின்றனர். பரமாத்மாவாகிய இறைவனை அடைந்து சீவாத்மாக்கள் பெரும் பலனையும் (கைங்கர்யம்) இறைவன் திருவடியிலேயே அர்ப்பணிக்கின்ற, பலத் தியாகம், பல ஸமர்ப்பணம் - இதுவே இப்பாசுரத்தின் அடிநாதம்.

    முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான்–நாராயணனே தருவான் என்று சொல்கிறாள். இந்தப் பாசுரத்தில் அந்த நாராயணனே பறை என்கிறாள். இறைவனை ஆராதிக்கும் படியாக ஒவ்வோர் பொழுதையும் பிரிக்கின்ற காலபஞ்சகத்தின் பாசுரம் இது. எப்போதும் இறைப்பணியே செய்வது என்ற தங்கள் உள்ளக்கிடக்கையை கோபியர்கள் சொல்லும் பாசுரம் . 'ஸ்ரீமதே நாராயணாய நமஹ' எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்ற பாசுரம். வைணவக் கோயில்களில் 'சாற்றுமறையாக' ஓதப்படும் பாசுரங்கள் 29 மற்றும் 30 ஆவது பாசுரங்கள்.

    15 ஆம் பாசுரத்தில் இறைவனின் அடியார்க்கு அடியாராக இருப்பதன் பாகவத தாஸ்யத்தின் பெருமை பேசப்படுகின்றது. இந்த 29 ஆவது பாசுரத்தில் ஆண்டவனுக்கு அடியாராக, பகவத் தாஸ்யத்தில் ஈடுபடுவதைப் பற்றிக் கூறி சரணாகதி தத்துவத்தின் பலனே இறைவனுக்கு என்றும் பணிசெய்வது தான் என்று முடிக்கப்படுகிறது.28 ஆம் பாசுரத்தில் த்வய மந்திரத்தின் முற்பகுதியான உபாயம் (இறைவனை அடையும் வழி) குறித்து, அதாவது சரணாகதியை உபாயம் என விளங்குகிறாள் ஆண்டாள் . இப்பாசுரத்தில் த்வய மந்திரத்தின் பிற்பகுதியான உபேயம் (அடையும் பேறாகிய இறைப்பணி) குறித்து விளக்குகிறாள். இறைவனைச் சரணம் செய்து அடையும் வீடுபேற்றின் நோக்கமே, என்றும் இறைவனோடு இருந்து நம்மாலான தொண்டினை செய்வதே உண்மையான பேரின்பம் என்ற தன் எண்ணத்தை உறுதியாகக் கூறி முடிக்கிறாள்.

    சரணாகதித் தத்துவக் கோட்பாட்டின் முற்றான வெளிப்பாடாக, பிரகடனமாக ஆண்டாள் இப்பாசுரத்தில் வைக்கும் சொல்லாடல்கள் :

    மற்றை நம் காமங்கள் மாற்று- இறைவனுக்குத் (ஸ்வாமி) தொண்டு செய்வதே சீவர்களின் இயல்பு.(ஸ்வரூபம்) வேறெதிலும் ஈடுபடுவது இயல்பிற்கு எதிரானது. (ஸ்வரூப விரோதி )

    பொற்றாமரை அடியே-இறைவனை அடைவதற்கு ஒரே வழி (உபாயம்) அவன் திருவடிகளில் சரணம் செய்வது தான். வேறெந்த வழியிலும் ஈடுபடுவது பயனற்றது (உபாய விரோதி )

    உன்தன்னோடு உற்றோம்,உனக்கே ஆட்செய்வோம்- இறைவனை சரணடைந்த பின் நாம் அடையக் கூடிய ஒரே இன்பம் (ப்ராப்யம்), அவனுக்குப் பணி செய்வதே (கைங்கர்யம்). வேறெந்தப் பலனும் எதிர்பார்ப்பது தவறு (ப்ராப்ய விரோதி )-
     
    jskls likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம் - சொற்பொருள்

    பொழுதின்னும் புலராத குளிரான காலையே
    தோழிகள் புடைசூழ உன்னில்லம் சேர்ந்துப்
    பழுதற்றத் தங்கத்தாமரை உன் பாதங்கள்
    தொழுதேயாம் பணிவதன் காரணம் கேளாய் !
    செழித்தப் பசுக்கள் மேய்க்கும் ஆய்குலத்தில்
    எழுந்தொளிர் விளக்காகப் பிறந்த கண்ணனே
    இழிந்தோ ரெமக்கேற்றம் அருளுமுனக்கு யாம்
    முழுமனதாய் செய்யும் சிறுதொண்டை- தட்டிக்
    கழிக்காமல் நீயேற்றுக் கொள்ளவே வேண்டும் !
    முழுமுதலாய் விளங்கும் இறைவனே உன்னை,
    அழுது பணிவதெல்லாம் நீயெமக்குத் தருமந்தப்
    பிழையற்றப் பறைக்கென்றா நீ நினைக்கின்றாய் ?
    தொழத்தக்க உன்னுடனே இன்றைக்கும் மற்றுள்ள
    ஏழேழ் பிறவியிலும் இணைந்துறவாய் இருந்து,
    பழுதில்லா உன்னடிக்கீழ் படிந்து பணிசெய்யும்
    அழியாத பேற்றினையே நாங்கள் கேட்கின்றோம் !
    விழையு மெங்களுக்கப் பேற்றினையே அளித்துப்,
    பிழையாம் மற்றவெங்கள் விருப்பங்கள் போக்கிப்,
    பழியற்றப் பெருந்தகையே எம்மைக் காப்பாற்று !
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சிற்றம் சிறுகாலை - குளிரின்னும் நீங்காத விடியல் காலத்திலே -வந்து உன்னை சேவித்து- பொழுது விடிந்துவிட்டால், பசுக்களை மேய்க்கச் சென்று விடுவானேயென்று,பனி பெய்யும் விடியலில் கண்ணனைக் காணும் ஆவலில் வீடு தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் உருகி விடுவனாம். பின் ‘உன்னை சேவித்து’ என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு ஈடாகத் தன்னால் இந்தப் பெண்களுக்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம். அது மட்டுமல்ல, ஆயர்பாடியிலிருந்து கண்ணன் மதுராவுக்குத் திரும்பி விடுவானே, அங்கிருந்து பின்னர் துவாரகைக்கும் புலம் பெயர்ந்து விடுவானே ! ஆகையால் அவன் ஆயர்பாடியிலிருக்கும் சிறிது காலத்திற்குள் சென்று சேவிக்க வேண்டுமே என்று அதி சீக்கிரம் அவர்கள் வருவார்களாம் !

    சிற்றம் என்பதைப் பிரித்து சிற்று + அம் என்று தனித்தனியே பொருள் கண்டால், சின்னஞ்சிறிய, அழகிய என்று பொருள் படும்.
    சிறுகாலை- மிகக் கொஞ்சமே வெளியில் தெரியக்கூடிய கால்; சிற்றம் சிறுகாலை வந்துன்னை சேவித்து= மிகவும் சிறிதாகவே கண்ணுக்குப் புலப்படக்கூடிய ,அழகியதும் சிறியதுமான குட்டிக்கண்ணன் காலைக் காண, அவன் காலடியில் பணிந்து தொழ, இந்த ஆயர்பாடிப் பெண்கள் சிறுகாலைப் பொழுதில், அதாவது விடியல் வேளையிலேயே வந்தனராம் ! முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் குடி கொண்டுள்ள இறைவனது யோக நித்திரை கலையாமல் மெல்லக் கண்விழித்து அரியென்னும் பேரரவம் செய்யும் காலை நேரம்.

    ஆத்திகர்கள், இறையன்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும், இறைவன் சன்னிதானத்தில் ஒரு நாளின் சிறு பொழுதைத்தானே செலவிட முடிகின்றது ? அதனாலும் அது சிறு காலை= சிறிய + காலம்= சிறு பொழுது. இறைவனைப் பற்றி எண்ணுவது கொஞ்ச நேரம் தான். அதிலும் கோயில் வாசலில் விட்டு வந்தக் காலணியைப் பற்றியே சிந்திக்கின்ற சமத்துகளும் உண்டல்லவா ?

    வந்துன்னை சேவித்து- காலமோ, மார்கழி, கடுங்குளிர்ப் பொழுது. பனித்தலை வீழ ஆயர் சிறுமிகள் கண்ணனைக் காண அவன் கோயில் வந்திருக்கின்றனர். கண்ணனுக்குத் தங்கள் மீதுள்ள கருணையை அறிந்தவர்கள் அவர்கள். அதைப் போற்றிப் பணியவே வந்திருக்கின்றனர். உன்னை சேவித்து- அடியவருக்கு அருளும் உன் கருணையை எண்ணித் தொழுது. ஏற்கனவே சொன்னது போல, இவர்கள் மார்கழிக் குளிரில் தன்னைத் காண வந்ததே கண்ணனுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. வந்தவர்கள் மேலும் கண்ணனைக் கரங்கூப்பித் தொழுது (சேவித்து) நிற்பதைக் கண்டு அவன் மனம் பாகாய் உருகிவிடுமாம்.அவன் அவ்வளவு கருணையாளன்.

    சென்று நாம் சேவித்து, வந்துன்னை சேவித்து- என்ற சொல்லாடல்கள் மூலம், இறைவன் நம்மைக் காக்க,நமக்காக ஓடி வருவான் (கஜேந்திர மோக்ஷம் போல்) என்று கருதியிருக்காமல், நாமே இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதை ஆண்டாள் நன்குணர்த்துகிறாள்.

    பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து - பசுக்களை மேய்க்கும் ஆயர்குலத்தில் கண்ணனாகப் பிறந்த இறைவா. பசுக்கள் உணவு உட்கொள்ளாமல் இடையர்கள் உண்ணுவதில்லை. இடையர்களைக் காக்கும் பெரும் இடையனாம் கண்ணனும், அவனது பசுக்களான சீவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கக் கூடாது என்று குறிப்பாகத் தூண்டுகிறாள், ஆண்டாள் !

    உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
    - உன்னைத் தொழுவதன் காரணம்'அடியே' என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல், நாடு, சுற்றம், நட்பு , மனையாள், மக்கள் என்று தன்னுடைய அத்தனையையும் விட்டுவிட்டு , இராமனே கதி என்று வந்த விபீடணனைப் போல உன் திருவடிகளையே நாடி வந்து உன்னை போற்றுகின்றோம், அந்யதா சரணம் நாஸ்தி; த்வமேவ சரணம் மம !! இங்கே 'போற்றும்' என்றால், இறைவனிடம் எதையோ எதிர்பார்த்துப் போற்றுவதல்ல. இறைவனைப் போற்றுவதே நாம் பெரும் பலன்,இப்பிறவி பெற்றதன் பொருள் என்று உணர்ந்து, வேறு பலனெதுவும் எதிர்பாராமல் இறைப்புகழைப் போற்றுவது. 'போவான் போகின்றவராய், இறைவனைப் போற்றுவான், போற்றுதல் !

    பொருள் கேளாய்
    - "நாங்கள் இவ்வளவு முயற்சி செய்து உன்னைக் காண வந்ததைக் கண்டு அப்படியே மகிழ்ச்சியில் மயங்காதே கண்ணா ! நாங்கள் ஏன் இப்படியெல்லாம் முயன்று உன் திருவடிப் பெருமையினைப் போற்றுகின்றோமென்று சொல்கிறோம். அதையும் கேள் !" என்கிறாள் ஆண்டாள்.

    இதுவரை சூடகம் கொடு பாடகம் கொடு, பறை கொடு,கொடியைக் கொடு, சங்கு கொடு, விளக்கு கொடு, அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்ட பொருளெல்லாம் எங்கள் நோக்கமல்ல ! அவையெல்லாம் உன்னைக் காண்பதற்கு நாங்கள் மேற்கொண்ட வழிமுறைகள்,அவ்வளவே ! உண்மையான 'பொருள்' உன்னடிக் கீழிருந்து செய்யும் தொண்டு தானென்று விண்டுரைக்கிறாள்,ஆண்டாள் !

    கேளாய்-பகவத் கீதை கண்ணன் சொல்ல அர்ஜுனன் கேட்டான்.ஆகையால் அவன் கீதாச்சார்யன். இங்கே திருப்பாவையில் கோதை சொல்லக் கண்ணன் கேட்கிறான். இவள் கோதாச்சார்யன் ! ஆகையினாலே திருப்பாவை கோதையின் கீதை ஆகின்றது.

    குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது - எங்களுக்குப் பெருமை தந்த உனக்கு எம்மால் ஆன சிறுதொண்டேனும் நாங்கள் புரிவதை ஏற்க வேண்டும் ."காலால் இட்டதைத் தலையால் செய்வதே குற்றேவல். அப்படிப் பட்டத் தொண்டை உனக்கு நாங்கள் செய்ய வேண்டும் கண்ணா ! அதை நீ மறுக்கக் கூடாது ! இந்தப் பசுக்களைக் காப்பதற்கு நாங்கள் பலர் இருக்கிறோம். ஆனால் எங்கள் எல்லோரையும் சேர்த்துக் காப்பவன் நீ ஒருவன் தானே ! உனக்கு அடி பணிந்து தொண்டு செய்வது எங்களுக்குப் பெருமை. அதை எங்களுக்குக் கட்டாயம் அளிக்காமல் தவிர்க்காதே ! " என்கிறாள்.

    குற்றேவல் என்றால்= குறு + ஏவல்= பணிவிடை . இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற சிறு தொண்டுகள் செய்தல். ஆகாயத்தை வில்லாய் வளைக்கும்படியெல்லாம் ஆண்டவன் சொல்லவில்லை.அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் , இறைவனுக்கு முழுமனதாக செய்யும் தொண்டே சிறந்தது, இறைவனுக்குப் பிடித்தமானது.
    கோவிந்தா- கண்ணா,நாராயணா.

    இற்றைப் பறைகொள்வான் அன்று
    - "நாராயணனே நமக்கே பறை தருவான்––பாவாய் எழுந்திராய் பறை கொண்டு-நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -பறை தருதியாகில்––சாலப் பெரும் பறையே -இன்று இப்பறை கொள்வான் வந்தோம்இறைவா நீ தாராய் பறை -இற்றைப் பறை கொள்வான்" - இப்படி அவ்வப்போது 'பறை' என்ற சொல்லைக் கூறுகின்றோமே ? என்ன என்று பார்க்கிறாயா கண்ணா ? உன்னைப் பணிந்து நாங்கள் தொழுவது நீ தரும் பேறென்னும் பறைக்கல்ல. அது வெறும் காரணம் மட்டுமே. காரியமெல்லாம், உன்னை என்றும் பிரியாமல் பணி செய்வது ஒன்றே நோக்கம்.

    எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே - நீ ஆயர்பாடியிலிருந்தாலும், காட்டிலிருந்தாலும், நாட்டிலிருந்தாலும் எங்கெல்லாம் நீயிருக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னோடே இருந்து உனக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யவே விரும்புகிறோம். உன்னோடான எங்கள் உறவு, இது தானென்று இல்லை. எங்களுக்கு எல்லா உறவும் நீயே ! மற்ற உறவுகளெல்லாம் அந்தந்த பிறவியோடு போகும். ஆனால் சீவாத்மாக்களின் அத்தனை பிறவியிலும் மாறாத ஒரு உறவு பரமாத்மாவுடையது மட்டுமே !

    இராமனைப் பிரிந்த பரதன் அன்னம் நீரின்றி அழுது தவித்தபடி இருந்தாற்போல, இறைவனை அடையும் முன் பிரிவாற்றாமையால் தவித்தும், அடைந்த பின் இலக்குவனைப் போல எல்லாவிதத்திலும் சேவை செய்து கொண்டும் இருக்க வேண்டும். இதுவே இறையடியாருக்குரிய இலக்கணம். நீ பரம்பொருளாக இருக்கும் வைகுந்தமோ, அவதாரம் செய்யும் மண்ணுலகமோ, எங்காகிலும், எப்போதாகிலும்,காலமுள்ளவரை உன்னைப் பிரியாமல் உனக்கே பணி செய்வதே நாங்கள் விழைவது.

    உனக்கேநாம் ஆட்செய்வோம்
    - எங்களைக் காப்பது உன் தொழிலே அன்றோ ? அது போன்றே எங்களால் சேவகம் செய்யப்பெற்ற வேண்டியவனும் நீயன்றோ ? அதை ஏற்காமலிருப்பது உன் இயல்புக்கு அழகில்லையே,என்று சொல்கிறாள்.

    மற்றை நம் காமங்கள் மாற்றே - உனக்குப் பணி செய்யும் ஆசையைத் தவிர நாங்கள் கொள்ளுகின்ற வேறெந்த விருப்பங்களையும் போக்கிவிடு. "நீயோ, எங்களுக்காக எங்களிடையே தோன்றி காப்பாற்றுகிறாய் ! நாங்கள் உனக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இல்லாமல், எப்போதும் எங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு, ஆசை விருப்பம், கோபம் தாபமென்று சிற்றின்பங்களில் உழன்று கொன்டு, ஸம்ஸாரத்திலேயே நினைவை வைத்துக் கொண்டிருப்பது , நீ எங்களுக்குச் செய்யும் உதவிக்கு மாற்றாகச் செய்யத் தகுந்ததில்லையே ! ஆகையினால் உனக்குத் தொண்டாற்றுவதைத் தவிர்த்ததான எங்களது வேறு விருப்பங்களை, கவனச்சிதறல்களை மாற்றி விடு !"

    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
    -இறைவா மறுக்காமல் எங்கள் தொண்டினை நீ ஏற்க வேண்டும்.

    பொற்றாமரை அடியே போற்றும் பொருள்-நாங்கள் உன்னிடம் வந்தது வேறெதுவும் வேண்டியல்ல (பறை, பாஞ்சஜன்யம்,சூடகம், இவையெல்லாம் அல்ல) உனக்குத் தொண்டு செய்வதே எங்கள் நோக்கம்.
    உனக்கே ஆட்செய்வோம்-நீ எங்களின் ஆண்டான் என்றும்,நாங்கள் உந்தன் அடிமைகளே என்றும் இருக்கக்கூடிய நம் உறவில் மாற்றமே வரக்கூடாது.

    உன்தன்னோடு உற்றோமே ஆவோம்
    -இப்படிப்பட்ட உறவு நமக்குள் இருப்பதால் தான், உனக்குத் தொண்டு செய்வதான பேற்றை நாங்கள் விழைகிறோம்.

    மற்றை நம் காமங்கள் மாற்று- மேற்கண்ட இவற்றைத் தவிர,அடியவர்களான எங்கள் மனதில் தோன்றும் மற்ற ஆசைகளை, விருப்பங்களை, எண்ணங்களை மாற்றி,உனக்கே பணி செய்யும் வரத்தை அருள்வாய்.
    மாற்று- இறைவன் தன்னைப் பணிந்த அடியார்களைக் கைவிடுவதில்லை. அவர்கள் வழிமாறி சென்றாலும் கூட, வலியச் சென்று ஆட்கொண்டருள்வான். வன்தொண்டர் சுந்தரருக்கு சிவபெருமான் அருள் செய்த விதம் நோக்கத் தக்கது.
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள்

    கருமத்தின் பயனாலே மண்ணில் பிறந்துழலும்,
    இருள்நிறை சீவர்கள் எம்மீதில் உனக்கிருக்கும்
    கருணை மிகுதியினால் பிறப்பற்ற ஆண்டவனே,
    இரக்கவுணர்வோடு காப்பதற்கு இறங்கி வந்தாய் !
    சராசரங்கள் அனைத்தும் படைத்துக் காப்பவனே ,
    குருவின் துணையாலே ஞானம் வாய்த்துன்னைக்
    கரங்கூப்பிப் பணிந்தெங்கள் கையறு நிலையோடு,
    திருவடிகள் சேர்ந்திடற்கு மிகவெளிய வழியான
    சரணாகத முறையைப் பின்பற்றியுனைப் பணியும்
    காரணம் யாதென்று உரைகின்றோம் கேளையா !
    இருளில் ஒளியாக இகவுலகில் தோன்றுமுந்தன்
    அருளால் வீடென்னும் பேற்றினை பெறுவதற்குன்
    திருவடியில் நாங்கள் பணிந்து தொழுதோமில்லை !
    பெருந்தகை உனக்கெம்மால் செய்ய இயல்கின்ற
    திருச்சேவை எத்துணை சிறிதேனும் செய்தபடிப்
    பரமசுகமென்னும் உன்னடிக்குக் காப்பு செய்துன்
    அருளைப் போற்றிப் பல்லாண்டிசைத்து பெறும்
    பேரின்பப் பேறொன்றே யாமடையும் பலனாகும் !
    கருணை நிறைந்தவனே, எங்கள் ஆண்டவனே,
    விரும்பி வேண்டுமெங்கள் எண்ணம் நிறைவேற,
    அருளைப் பொழிந்துந்தன் கருணை காட்டய்யா !
    பிரியாமல் என்றென்றும் ஒன்றெனவே உன்னோடு
    இருக்கின்ற திருமகளாம் தாயாரவள் போன்றே,
    விரும்பி அவ்வுலகோ, இவ்வுலகோ- நீயெங்கே
    இருக்கின்றாயோ அங்கே யாம் உன்னோடே,
    பொருந்தித் தடையின்றி உனக்குத் தொண்டாற்றும்
    பெருவரமே யாமுன்னை விழைகின்ற பேறாகும் !
    சரணம் செய்துந்தன் பணியைச் செய்வதல்லால்
    தரமற்ற எங்களது வேற்றெண்ணப் போக்குகளை
    கருணையுடன் மாற்றியுன் அடியில் சேர்த்திடையா !
    திருமந்திரம் கொண்டுனை உச்சரித்து இன்புற்று
    திருவடிக்கே தொண்டிழைக்கும் பேறு அருளையா !

    பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
    - பசுக்களான சீவாத்மாக்களைக் காக்கும் பொருட்டு, இறைவன் பரமபதத்திலிருந்து, மண்ணுலகில் அவதாரம் செய்யகிறான். எப்படி ஒரு உழவன் தன்னுடைய பயிர்களை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை கண்ணுங் கருத்துமாய் இருப்பானோ, அது போலவே இறைவனும் தன்னுடைய பயிர்களாம் சீவாத்மாக்களைக் காப்பதற்காக தன்னிடமாகிய பரவுலகை விட்டு இகவுலகாகிய மண்ணுலகிற்கு அவதாரம் செய்வான். இது வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெருந்தகை தன்னுடைய தயாஸதகம் என்னும் தோத்திரத்தில் குறித்துள்ள விளக்கம்.

    கோவிந்தா- கண்ணா, இறைவா,நாராயணா- எங்களைப் படைத்துக் காப்பவனே !

    சிற்றஞ்சிறுகாலே
    - ஆச்சார்யரின் அருளாலே மந்திர உபதேசம் பெற்று, இறைஞானம் கைவரப் பெற்று, மிகவும் சுலபமாக செய்யக்கூடியதான(நொடிப்பொழுதில்-சிற்றஞ்சிறு) பரமாத்மாவின் திருவடிகளில் சரணாகதியைச் செய்யும் நேரமே , ஒரு ஜீவாத்மாவிற்கு விடியல் பொழுதாகும். அப்படி இறைவன் திருவடியில் சரணாகதி செய்தது முதல், அந்த சீவாத்மா தன்னுடைய மண்ணுலக தேகத்தை விட்டு நீங்குகின்ற வரைக்குமான வாழ்நாளே, சிற்றம் சிறு காலை.

    வந்துன்னை சேவித்து
    - பரமனை அடைவதற்கு வேறொன்றும் செய்யத் தெரியாத கையறு நிலைமையில்,அவனுடைய அருளாலேயே சரணம் செய்வது. சேவித்து- என்றால், இரு கைகளையும் கூப்பி இறைவனை வணங்கும் அஞ்சலி நிலை. அது மிகவும் உயர்ந்தது. இறைவனை உருகச் செய்வது. ஆகவே தான் நாம் கோவில்களில் கைகளைத் தலைக்கு மேலே கூப்பி, இறைவா, நீயே எங்களுக்கு கதியென்று வணங்குதல் சிறப்பு. அங்கே ஆணவமில்லை, கையறு நிலை தான் தெரியும். அதுவே இறைவனுக்குப் பிரியமானது.

    இற்றைப் பறைகொள்வான் அன்று -நாங்கள் உன்னைச் சரணம் செய்வது , நீயளிக்கும் வீடுபேற்றினைக் கருதியல்ல
    குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது- எங்களால் உனக்கு செய்யக் கூடியதான சிறு கைங்கர்யத்தை(தொண்டை) நாங்கள் விடாமல் செய்வதற்கு அருள வேண்டும். அதுவே வீடுபேற்றின் பலன்.நாங்களென்றும் உனக்கடி பணிந்தவர்கள் என்ற நிலை மாறாதிருக்க அருள்வாய். அவரவர்களால் செய்யக்கூடிய, ஆண்டவனால் அருளப்பட்டுள்ள, இறைத்தொண்டே 'குற்றேவல்' எனும் கைங்கர்யம்.

    பொற்றா மரைஅடியே போற்றும் - உன் திருவடிகளுக்குக் காப்பிட்டுப் பல்லாண்டு பாடுவதே எங்கள் பேரின்பம்.அடியே என்று ஏகாரமிட்டுச் சொன்னது, இறைவன் திருவடிகளே உபாயம், மார்க்கம், வழி- சரணாகதிக்கு. அவன் திருவடிகளே சரணாகதியால் கிடைக்கக் கூடிய போக்யம் ,இன்பம். அவன் திருவடிகளே சரணாகதி அடைந்து, இறைத்தொண்டு செய்து கிடைக்கும் இன்பப்பயனின் கைங்கர்யமாகிய வீடுபேறு என்பதைச் சொல்லும் விதமாகவே !

    எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் - பரமபதத்திலோ ,தேவருலகிலோ, மண்ணுலகிலோ- நீயெங்கு தோன்றினாலும் தானும் கூடவே தோன்றும் உன்னை என்றும் நீங்காமல் இருக்கும் திருமகள் போல், நாங்களும் உன்னோடே எப்போதும் இருந்து பணி செய்யும் பேறு வேண்டும். ஸ்ரீமதே நாராயணாய நமஹ எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்றது

    உன்தன்னோடு உற்றோமே - திருமந்திரத்தின் பிரணவத்தை குறிக்கும் சொற்றொடர்
    உனக்கே நாம் ஆட்செய்வோம்- உன்னையே சரணம் அடைந்தோம். "மாம் ஏகம் சரணம்" எனக் கண்ணன் சொன்னதற்கிணங்க, பரமன் ஒருவனையேப் பணிதல்.திருமந்திரத்தின் நாராயண ஒலியைக் குறிக்கும் சொற்றொடர்.
    மற்றைநம் காமங்கள் மாற்று -தன்னைச் சரணடைந்த பின்னர், அந்த சீவனை வேறெதிலும் சிக்கவிடாமல், அப்படி வழிமாறிப் போனாலும் தடுத்தாட்கொண்டு அருள் செய்யும் கருணை உடையவன் இறைவன் என்று பொருள். திருமந்திரத்தில், எதுவும் எனதல்ல எல்லாம் பரமனுடையதே என்பதைக் குறிக்கும் 'நமஹ'என்ற ஒலியினைக் குறிக்கும் சொற்றொடர்.

    மற்றைக் காமங்கள் மாற்று- தன்னை அடைந்த அடியவரின் குறைபாடுகளைக் கண்டு வெறுத்து ஒதுக்காதவன் இறைவன். ஆகவே, இறைவன் மீதான பற்றுதலைத் தவிர அடியாருக்கிருக்கக் கூடிய வேறு ஆசைகளை, குறைகளை நீக்கி,எப்போதும் தன்னையே நாடும் குணத்தை அருள்வான். ஆகவே இப்படியொரு கோரிக்கையை வைக்கிறாள்,ஆண்டாள்.

    நமக்கு நம் மனத்தைக் கட்டுப்படுத்துவது என்பதும், அதை எப்போதும் இறைவனது நினைவிலேயே நிலைநிறுத்துவதும், காற்றைக் கையில் பிடிப்பதைப் போலவே கடினம். மனதை ஒருமுகப்படுத்தி தியானத்திலாழ்ந்து, இறைவனைக் காண வேண்டுமானாலும், அதுவும் இறைவன் அருளால் தான் முடியும். ஆகவே தான் ஆசைகளால் அலைப்புறுத்தப் பட்டு அங்குமிங்கும் பாய்கின்ற மனத்தைக் கட்டுப்படுத்த, ஆண்டவனிடமே முறையிடுகிறாள் ஆண்டாள்.

    அர்ஜுனன் கீதையில் கண்ணனிடம் சொன்னதையொட்டியே இவ்வரி

    சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம் I
    தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் II
    (பகவத் கீதை 6-34)

    "கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்."
     
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மார்கழி பிறக்கப்போகிறதே, மழையின் சுவடே காணோமே என்று எஞ்சியிருந்த சென்னை வாசிகளுக்கு ஆழி
    மழை க்கண்ணன் அருளுடன் வாயுதேவனின் உட்கையும் சேர்ந்தது. பலன், இரண்டு நாட்களாக power கட்.இன்று இரவு 10 மணிக்குத் தான் மின் இணைப்பு மீண்டது.28, 29 இரண்டு பாசுரங்களின் விளக்கம் மிக அருமை .
    அறிவொன்றும் இல்லாத--

    ' பகவானைத் தவிர மற்றைய விஷயங்களில் அறிவு ஒன்றும் இல்லாத என்று பொருள்.


    'எவனைத் தெரிந்துகொண்டால் வேறு எதையுமே தெரிந்து கொள்ள வேண்டாமோ,மற்ற எல்லாவற்றையும் தெரிந்துகொண்டால் எவனைத் தெரிந்து கொண்டதாக ஆகாதோ' என்று விளக்கம் அளிக்கிறது உபநிஷத்.


    குறை ஒன்றுமில்லாத கோவிந்தா --

    ராமாவதாரத்தில் மைத்துனன் இல்லையே என்று குறையாம் .லாஜ ஹோமத்தில் பொரி எடுத்துக் கொடுக்க சீதையோடு கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லை என்று வருத்தமாம்.

    கிருஷ்ணாவதாரத்திலும் குறைதான்.பெற்ற தாயாருக்கு மழலை இன்பம் தரவில்லையே எனக் குறை.
    திரௌபதி வஸ்திராபஹரணத்தின் போதும் 'என் கோவிந்த நாமம்தான் அவளை ரக்ஷித்தது'என்கிறான் கிருஷ்ணன்.

    எனவே இந்த கோவிந்த நாமம் இருக்கும் வரை உனக்கு குறையே இல்லை என்கிறாள் ஆண்டாள்.

    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்--
    கறவைகள் என்பது ஆச்சார்யர்களைக் குறிக்கும்.
    கானம் என்பது சாம கான த்தைக் குறிக்கும்.'ஹா வு' என்கிற
    சாம கானம் வைகுண்டத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.அங்கு நித்யஸூரிகள்,முக்தாத்மாக்கள் எல்லோரும் சேர்ந்து பகவானை அனுபவிக்கலாம்.

    பாசுரம் 29
    ------------------குற்றேவல் என்பது பகவத் கைங்கர்யத்தை குறிக்கிறது.ஆனால் ஆண்டாள் வேண்டுவதைப் பார்த்தால் குற்றேவல் மாதிரி தோன்றவில்லை.
    எப்போதும் 'பறை' பற்றியே பேசுகிறாள்.
    முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை
    எட்டாம் பாசுரத்தில் 'எழுந்திராய் பாடி ப் பறை.
    பத்தாவது பாட்டில் 'போற்ற பறை தரும்'
    16 வது பாசுரத்தில் அறை பறை மாயம்
    24 வது பாட்டில் ஏத்திப் பறை.
    25 வது பாசுரத்தில் பறை தருதியாகில்
    26 ல் சாலப் பெரும் பறையே
    27 வது பாட்டில் பாடிப் ப் பறை கொண்டு
    28 வைத்து பாசுரத்தில் நீ தாராய் பறை
    இவ்வாறு ஒன்baது மூரை யாசித்து விட்டாள்

    கடைசியாக 29 வது பாசுரத்தில் 'மற்றை நம் காமங்கள் 'மாற்று என்று அந்த பொறுப்பையும் கண்ணனிடம் தள்ளி விடுகிறாள்.இதுவே பூரண சரணாகதம்.
    'உனக்கு ப்ரீத்தி அளிக்கும் வகையில் எங்கள் இந்திரியங்களை நல்வழிப் படுத்தி வேறு எந்த விஷயத்திலும் ஈடு படாத வகையில் ஈஸ்வர கைங்கர்யத்தில் ஈடுபட வைப்பதும் உன் பொறுப்பு 'என்கிறாள்.

    அவன் ரக்ஷிக்கவில்லை என்றால் அவனுக்குப் பெருமையில்லை. நாம் சேவிக்கவில்லை என்றால் நமக்குத் தகுதி இல்லை.இதுவே ஜல-மத்ஸ்ய நியாயம் எனப் படுவது.ஜலத்திலிருந்து மீனை எடுத்தால் மீனும் மாண்டு போகும்.. ஜலமும் கெட்டப் போகும்.அவனை சரணாகதி அடைந்தால் தான் மீன்களாகிய நமக்கும் வாழ்வு.ஜலமாகிய பரமாத்மாவுக்கும் பெருமை.
    இதுவே பாவை நோன்பின் முக்கிய குறிக்கோள்.

    பவித்ரா, உங்களது புனிதப் பயணம் அதன் destination ஐ நெருங்கிவிட்டது.மங்களம் பாடுவது ஒன்றே பாக்கி. இந்த புனித பயணத்தை நல்லபடி ஆரம்பித்து, மிகப் பாடு பட்டு ஏற்று நடத்தி மிக ஆனந்தமான பிரயாணத்துக்கு வகை செய்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.பல நூல்களையும், பல வேதாந்த கருத்துக் களையும் உட்புகுத்தி பாவை நோன்பை ஏற்கெனவே தீர்மானித்தபடி மார்கழிக்கு முன்னால் முடித்து வைத்தது பற்றி எல்லையில்லா மகிழ்ச்சி.இந்த பயணத்தில் சில சில நிலையங்களில் எங்களுக்கும் இருக்கை அளித்து பயணச் சுவையை நல்கியதற்கு நன்றி பல. சுமை உங்களுக்கு.சுவை எங்களுக்கு..
    தங்கள் ஈடு இணையற்ற உழைப்பும் ,உத்வேகமும் என்னைப் போன்ற 75 வயது மூதாட்டியையும் உத்ஸாகத்தில் ஆழ்த்தி விட்டது .
    பாராட்டும் ஆசிகளுமே எனது பறையும் சம்மானமும் ஆகும். வாழ்க பல்லாண்டு. வளர்க நின் தமிழ்த் தொண்டு.

    'செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    ஜெய்சாலா 42
     
    periamma likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மதிப்பிற்குரியீர்,

    உங்களது மனம் நிறைந்த ஆசிகளை சிரம் தாழ்த்தி ஏற்கிறேன். என் மனம் நெகிழ்ந்திருக்கிறது. என்ன சொல்வதென்று தோன்றவில்லை. என் நமஸ்காரங்கள் !

    என்றும் அன்புடன்,
    பவித்ரா
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கேளாய்-பகவத் கீதை கண்ணன் சொல்ல அர்ஜுனன் கேட்டான்.ஆகையால் அவன் கீதாச்சார்யன். இங்கே திருப்பாவையில் கோதை சொல்லக் கண்ணன் கேட்கிறான். இவள் கோதாச்சார்யன் ! ஆகையினாலே திருப்பாவை கோதையின் கீதை ஆகின்றது.
    கோதையின் கீதை அருமை.
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    எல்லாப் பதிவுகளையும் படித்துப் பின்னூட்டமும் வழங்கியமைக்கு நன்றி, பெரியம்மா !
     

Share This Page