1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (27) கூடாரை வெல்லும் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 11, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    27) ஆண்டாள் பாடல் - (மார்கழி நோன்பு முடிந்ததும் தாங்கள் வேண்டும் பரிசுகளை பட்டியலிடுதல் )

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
    கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


    பாசுரப் பொருளுரை

    "உன்னை ஏற்காமல் எதிர்ப்போரையும் வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே ! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து எங்களுக்கு பரிசாக வழங்கும், நாட்டிலுள்ளவர்கள் எல்லாம் புகழும் படியான அழகான சூடகம்,(கைவளை) தோள்வளை (அங்கி), தோடு, காதில் அணியும் மடல், காற் சதங்கைகள் மற்றும் இது போன்ற பல ஆபரணங்களை யாம் அணிந்து மகிழ்வோம் ! நீ கொடுக்கின்ற அழகான புத்தாடைகளை உடுத்துவோம் ! பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேலே நெய்யைக் கொட்டி ஊற்றிச் செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக !"

    பாசுரக் குறிப்பு

    முதலில் மார்கழி நோன்பு பற்றி 1- 5 பாசுரங்கள் மூலம் தெரிவித்த பின்னே, 6- 15 பாசுரங்கள் ஒவ்வொரு கோபியரையும் (இறையடியாரை) நோன்பிற்கழைத்து எழுப்பிய பின்னே,16-20 பாசுரங்கள் நந்தகோபனுடைய இல்லத்திற்கு சென்று, நந்தகோபன், யசோதா, பலதேவன் நப்பின்னை பிராட்டி வரை எழுப்பியபின், 21-25 பாசுரங்கள் கண்ணனையும் எழுப்பியதாக அமைந்தன. 26 ஆம் பாசுரத்தில் நோன்பிற்குரிய பொருட்களை அருளுமாறு கண்ணனை வேண்டிப் பெற்று, அந்நோன்பும் பூர்த்தியாகும் கட்டத்தில் இப்போது 27 ஆம் பாசுரம். இப்பாவை நோன்பை நோற்ற கோபியர்கள் தாங்கள் வேண்டும் பரிசுகளைக் கண்ணனிடம் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பாசுரமிது.

    ஆண்டாள் தன் தந்தையாரைப் போன்றே இப்பாசுரத்தில் பாவை நோன்பிருந்ததற்குக் கண்ணன் இன்னின்ன பரிசுகளைத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுகிறாள்.

    பெரியாழ்வார் தம் பல்லாண்டில் விழைந்த பரிசுகள்

    "நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
    கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
    மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
    பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே !"


    இறைவனை அடைந்த, விடுதலையுற்ற சீவன்களுக்கு, பேரானந்த நிலையான வைகுண்டத்தில் கிடைக்கக் கூடிய அனுபவங்களை விவரிக்கும் பாசுரம். எல்லோரையும் காக்கின்ற இறைவனுடைய கோவிந்த நாமத்தைக் கூறும் பாசுரம் (அடுத்த இரண்டு பாசுரங்களும் இந்த நாமத்தைப் பாடும் பாசுரங்களே !)

    1-26 வரையிலான பாசுரங்கள் மூலமாக, கோபியர்கள் கண்ணனைப் பற்றியே சிந்தித்தும் (ஸாலோக்யம் )கண்ணனை நெருங்கியும் (ஸாமீப்யம் ),கண்ணனை தரிஸித்தும் (ஸாரூப்யம் ) ப்ரபத்தி என்கிற சரணாகதியைச் செய்தனர். இந்தப் பாசுரத்தில் இவை மூன்றையும் தாண்டி, தாம் கண்ணனோடே ஒன்றாய்க் கூடிக் கலந்து மகிழ வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைக்கின்றனர்.(ஸாயுஜ்யம் -கூடிக் குளிர்ந்தே ).

    மேலும், இப்பாசுரத்தில் வீடுபேறு பெற்ற பின் அடியார்கள் வைகுண்டத்தில் பெறுகின்ற இன்பங்களைப் பரிசுகள் என்ற குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறாள். அதில் தலையாயது, இறைவனுக்குப் புரியும் தொண்டு (கைங்கர்யம்) என்று முடிக்கிறாள்.

    அக்கார அடிசிலுக்கு(ஒரு வகைப் பால் பொங்கல்) செய்முறை கூறும் சுவையான பாசுரமும் கூட ! திருப்பாவை ஜீயரான உடையவர் இராமானுஜர் ,ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகருக்குத் தருவதாக வேண்டிக்கொண்ட 100 தடா வெண்ணையும், 100 தடா அக்கார அடிசிலும் , அவள் தந்தாளோ இல்லையோ என்று கவலையுற்று, ஆண்டாள் சார்பாக அவரே நிறைவேற்றினாராம். ஆகவே ஆண்டாள் அவரை "அண்ணா!" என்று அழைத்ததாகச் செவிவழிச் செய்தி.

    கூடாரை வெல்லும் என்று தொடங்கும் இப்பாசுரத்தின் நாளாகிய மார்கழி 27 ஆம் நாள் 'கூடாரைவல்லி' என்று குறிப்பிடப்படுகின்றது. அன்று வீடுகளில் அக்கார அடிசில் படைத்து இறைவனை வழிபடுவது வழக்கம்.

    நாச்சியார் திருமொழிப் பாடல்...…

    நாறு நறும்பொழில்மா
    லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
    நூறு தடாவில்வெண்ணெய்
    வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
    நூறு தடாநிறைந்த
    அக்கார வடிசில்சொன்னேன்,
    ஏறு திருவுடையான்
    இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ
     
    periamma and tamilelavarasi like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    இணங்கி உன்னருகே நெருங்கி வராதவரும்,
    வணங்கி உன்னடியில் இணைந்து கொளும்படிப்
    பணிந்திடச் செய்கின்ற நற்குணம் வாய்த்தவனே !
    அனைத்தையும் காக்கும் தலைவனே, கண்ணனே !
    இணையற்றவுன் பெருமை பாடிப் புகழ்ந்தபடி,
    பணிந்திருந்த மார்கழி நோன்பின் பயனாகக் ,
    கண்ணன் நீயளித்தப் பறையைப் பெற்றிட்டோம் !
    நோன்பிருந்து பறையுற்ற எங்களுக்குப் பரிசாக,
    மண்ணுளார் எல்லோரும் வியந்து போற்றும்படி,
    பெண்டிர் மனமயங்கி விரும்பிச் சூடிக்கொள்ளும்
    அணிகளாம் இந்தக் கைவளை தோள்வளையோடு,
    மின்னி யொளிர்கின்ற காதணியும்- காதோரம்
    சின்னப்பூப் போன்ற வடிவுடைய சிறுதோடும்,
    பெண்டிர் காலணியும் மெல்லிய கொலுசுகளும்,
    அணிகள் பற்பலவும் நீயளித்தால் அணிந்திடுவோம் !
    பெண்டிர் இதன்மேலும் நீயளிக்கும் ஆடையினை,
    மேனியில் நன்றாகக் படர்ந்திட உடுத்திடுவோம் !
    இன்னும் இதன்மேலும் செய்வது என்னவென்றால்,
    நோன்பின் காரணத்தால் உண்ணா திருந்தவர்கள்,
    இன்று அரிசியினைப் பாலிலிட்டு வடித்தெடுத்து,
    உண்பவர்கள் கைவழியே வழிந்து ஓடுமாற்போல்
    அன்னமதை மறைக்கும்படி நிறைந்த நெய்யிட்டு,
    கண்ணா உன்னோடே கூடிக் கலந்துண்பதுடன்,
    துன்பங்கள் ஏதுமின்றி உள்ளங் குளிர்ந்திருக்க,
    வேண்டிக் கேட்கின்றோம் எமக்கு அருள்வாயே !

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா - தன்னை ஏற்றுக் கொள்ளாமல் தூற்றுவோரையும் தன் பக்கமாய் மாற்றும் நற்குணம் கொண்ட இறைவன்.
    இந்திரன் இறுமாப்போடு கொட்டிய பெருமழையிலிருந்து கோவர்தன மலையினைக் குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்பாடியைக் காத்ததின் பின், இந்திரனே வருந்தி, மனந்திருந்தி, கண்ணனுக்கு "கோவிந்தராஜன்" என்று பெயர் சூட்டிப் பட்டம் கட்டினான். இதுவே "கோவிந்தராஜ பட்டாபிஷேகம்" என்று உயர்த்திக் சொல்லப்படுகின்றது. திருப்பதியும், திருச்சிற்றம்பலம் சிதம்பரமும் மட்டுமின்றி,ஆண்டாள் வாழ்ந்த திருவில்லிப்புத்தூரும் 'கோவிந்தன் வாழுமூர்' தான். எங்கள் ஊரில் இரண்டு இராஜாக்கள் என்று பெருமை . ஒருவர் நடராஜா, இன்னொருவர் கோவிந்தராஜா !

    கோவிந்தன்- பசு, அரசன், வேதம்,நீர், தலைவன், துறவி உலகு என்றிவ்வாறு "கோ" என்ற சொல்லுக்குப் பல விளக்கம் உண்டு. ஆகவே அசையும் அசையா பொருட்களனைத்தும் என்று பொருள் , விந்தன்- அனைத்தையும் காப்பவன், இறைவன். அனைத்தையும் காக்கும் இறைவன் என்ற பொருளில் வரும் பெயராக கோவிந்த நாமம் வைணவ நெறியில் தனிச்சிறப்பு வாய்ந்திருக்கிறது. தன்னைப் பணிந்தாலும், பணியாவிட்டாலும் ,எதிர்த்தாலும்,எதிர்க்காவிட்டாலும் எல்லோரையும் காப்பான் கோவிந்தன்.

    கோதையாகிய ஆண்டாள் பூமி தேவியின் அம்சமல்லவா ? வராஹ அவதாரமெடுத்து அரக்கன் ஹிரண்யாக்ஷனால் நீருக்கடியில் ஒளித்து வைக்கப்பட்ட அவளையும் வெளிக்கொணர்ந்து காத்தவன் என்று பொருள்படும் கோவிந்த நாமத்தின் பால் அவளுக்குத் தனி விருப்பமிருப்பதில் ஆச்சர்யமென்ன ? ஆண்டாள் தன்னைத் தானே குறிக்கப் பயன்படுத்தும் கோதை என்ற பெயரை வடமொழியில் 'கோதா' என்றே குறிப்பிடுவர். 'கோவிந்தா' என்ற நாமம் கோதா என்ற தன் பெயருக்குள் குடிகொண்டிருப்பதாலும் அவளுக்கு அதில் விருப்பமதிகம்.

    உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு - கண்ணனைத் தொழுது நோன்பிருந்து பறையினைப் பெற்று. உன் + தன்னை= கண்ணனை மட்டும் பாடவில்லை, அவனைச் சேர்ந்தவர்களான ,அவனது வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலதேவன், நப்பின்னை எல்லோரையும் தானே பாடினார்கள் ?

    பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் - நோன்பிருந்தமைக்காக ,அனைவரும் பார்த்து வியக்கும்படி போற்றும்படி பரிசுகள் வேண்டுகிறோம். "இதென்ன இச்சிறுபெண்கள்? மார்கழியாம், நோன்பாம், இருக்கிறார்களாம், கண்ணன் பறை தருவானாம் ?"என்றிருந்தவர்கள் எல்லோரும் வியக்கும்படியாக நாங்கள் நோன்பிருந்ததென்ன, நீ எங்களுக்குப் பரிசுகள் கொடுத்ததென்ன என்று தர வேண்டும் கண்ணா!"ன்று ஆண்டாள் நயமாக சொல்கிறாள் !

    சூடகமே- கைவளை, தோள் வளையே- வங்கி எனப்படும் தோளில் அணியும் ஆபரணம். தோடே -காதணி. செவிப் பூவே- காதோரம் அணியும் சிறு பூத்தோடு. பாடகமே-பாத கடகம்- காலில் அணியும் மெல்லிய கொலுசு.
    என்றனைய பல்கலனும் -எல்லா அங்கங்களிலும் அணியும் பல்கலனும் நீ தரவேண்டும் எனக் கண்ணனைக் கேட்பதற்கு காதல் சுவையில் பொருள் சொல்கிறார்கள், பெரியோர் .

    ஆயர்குலப் பெண்கள் கண்ணனை நெருங்கிக் கட்டிக்கொள்ளும் போது முதலில் அவனைத் தொடுவது கைகளேயல்லவா ? ஆகவே சூடகம் என்னும் கைவளை அணிந்து அழகு படுத்திக்கொள்கிறார்கள்.. அடுத்து அவனை விட்டுப் பிரிந்ததால் நலிந்த தோள்களை அணைக்க அங்கே தோள்வளை என்ற நகையை அணிகிறார்கள். தோடு என்ற காதில் அணியும் ஆபரணத்தை அவன் தானே வந்து அணிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவனாம். செவிப்பூ என்ற காதணி, அவன் நாசியினால் முகர்ந்து பார்த்து உகப்பனாம். தன்னை அடைவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த ஆயர்குலப் பெண்களின் காலையும் கண்ணன் பிடித்துக் கொள்வானாம் ! ஆகவே அங்கே பாடகம் எனும் கொலுசு அணிந்தார்கள். இப்படி எல்லா வகையிலும் இதை கே கண்ணன் இரசிப்பானே…அதை அவன் உகப்பானே என்று எண்ணி எண்ணி அணிகிறார்கள் .

    ஆடை உடுப்போம்- கண்ணன் உடுத்திக் களைந்திட்ட ஆடையைக் காதலோடு ஆயர்குலப் பெண்கள் உடுத்துவார்களாம் ! அவ்வளவு உரிமை அவன் மேலே !

    பால் சோறு மூட நெய் பெய்து - அன்னம் மறையும் படியாக அதை நிறைத்து நெய்யினைச் சேர்த்து அக்கார அடிசில் எனும் பால் பொங்கல் சமைத்து . 16-25 பாசுரம் வரை கண்ணன் இல்லத்திலுள்ள அனைவரையும் எழுப்பய வகையில் வந்த 10 பாசுரங்கள். அந்தப் 10 பாசுரங்களுக்குப் பின் வருவதனால்,11 ஆம் பாசுரமாகக் கருதப்படும் 26 ஆம் பாசுரம் விரதமிருந்து பெற்ற பறையினைக் கண்ணன் அருள் செய்தல் பற்றியது. அது ஏகாதசியின் உருவகம்.
    இந்த 27 ஆவது பாசுரம் , ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியைக் குறிக்கும். ஏகாதசி விரதமென்றால், துவாதசி பாரணை தானே ? ஆகவே பால் சோறு சமைத்து இறைவனுக்குப் படைக்கின்றனர் !

    கூடி இருந்து குளிர்ந்தே
    - அதை உண்பதோடல்லாமல், உன்னுடன் கூடிக் களித்திருக்கும் இன்பத்தை அடைந்து உள்ளம் குளிர அருள் செய்.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள் 1

    பரமனைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்றவரை ,
    பொருளின்பம் பெரிதென்று பின்னே அலைபவரை,
    பெருமைகள் பலவுற்றும் எளிமையில் அணுகும்படி
    இருக்கின்ற இறையருகே நெருங்கி வராதவரை,
    அருமை நற்குணங்கள் நிறைந்த இறையவனை
    விரும்புதல் இல்லாமல் வெறுப்புடன் மறுப்பவரை,
    நீர்மை,எளிமையுடன் வீர்யசௌர்யமுடன் மேலாம்
    இரக்க குணநலத்தால் பகைவென்று தன்வழிக்குத்
    திருப்பிடும் திறமுடைய இயல்பினன் பரமனவன்,
    விரும்பித் தன்னடியில் பணிந்திடும் அன்பரிடம்,
    கருணை மிகுதியினால் தோற்கவும் செய்வானே !
    பரம்பொருளவனே தான் அண்டங்கள் அத்தனையும்
    அருளால் படைக்கின்றான், காக்கவும் செய்கின்றான் !
    குருவின் திருவருளால் இறைவனை அடைவதற்கு,
    சரணாகதி என்னும் வழிசென்று இறையுடைய,
    திருவடிப் பேரின்பப் பெருநிலைப் பேறுறலாம் !
    பாரெங்கும் உள்ளவர்கள் அனைவரும் வியக்கும்படி,
    பேரானந்தமெனும் நிலையை அடைந்ததன் பின்,
    திருவடியார்கள் பெறும் பரிசுகள் பற்பலவாம் !
    குருவால் கிடைத்திட்ட இறைஞானப் பயிற்சியினால்,
    விரஜை யென்கின்ற நதியொன்று பாய்ந்தோடும்,
    பரமானந்தமெனும் வைகுண்டம் நுழைந்த பின்னே,
    ஒருபோதும் மூப்பில்லை,சாவில்லை ,பசியில்லை,
    வருத்தங்கள் ஏதுமில்லை, தாகம் தூக்கமில்லை,
    விருப்பம் எழுவதில்லை, நேர்மை குறைவதில்லை,
    பரமசுகமான இறைவாசம் நுகர்ந்து கொண்டும் ,
    திருமேனி ஒளியழகைக் கண்டு அனுபவித்தும்,
    பரமன் குணநலப் பெருமை பாடிக்கொண்டும்,
    திருவடிக்கு நாமென்றும் அடியாரே என்பதனை
    ஒருபோதும் மறக்காமல் ஏனைய அடியார்களுடன்,
    கருணைக் கடலான இறைவனுடன் எப்போதும்
    பரமானந்தமெனும் நிலையில் கூடிக் கொண்டும்,
    பேரின்பம் தருகின்ற இறைப்பணியில் ஈடுபட்டு,
    திருவுடன் உறைகின்ற இறைவனைத் தொழுகின்ற,
    அருளாம் அமுதத்தில் மூழ்கித்த திளைத்திடலாம்!
    பரமனை அனுபவித்துக் குளிர்ச்சி அடைந்திடலாம் !

    -கூடார் - இறைவனை அறியாமல் இருப்பவர்கள், இறைவனைத் தவிர்த்த மற்ற பொருளின்பங்களின் பின்னே அலைபவர்கள், இறைவன் மிகப்பெரியவன் என்பதனால் தம்மால் அடைய முடியுமோ என்று தயங்கி , அவனுடைய நீர்மை குணங்கள் அறியாது மயங்குபவர்கள், இறைவனுடைய பெருமைகளை அறிந்தும் அவன் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் - இவரே இறைவனோடு கூடியிராதவர்கள்.
    கூடார் கம்சன், சிசுபாலன் போன்றோர், வெறுப்பவர்கள்.
    (கோகுலத்தில் கடுமழை பொழியச் செய்த)இந்திரன் போன்றோர் உணர்ந்தும்,மயங்குபவர்கள். கண்ணன் பொறுமை காத்துத் தன்னை யாரென இந்திரனுக்கு உணர்த்தினான், கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்து கொண்டான்.

    கூடாரை வெல்லும் சீர் - இப்படிப்பட்டவர்களை இறைவன் மறவருள் செய்தும், அறவருள் செய்தும் தன்னுடன் சேர்த்துக் கொள்கின்ற இயல்புடையவன். எதிரிகளை இப்படி வெல்லுகின்ற இறைவன், அவனோடே கூடியிருப்பவரிடம், தானே விரும்பித் தோற்றுப் போவான், அதாவது, தனக்குப் பழி வந்தாலும் பரவாயில்லையென்று, அவன் அடியார்களுக்கு உதவ எப்படி வேண்டுமானாலும் தாழ்ந்து செல்வான் .

    இராமாவதாரத்தில் தன்னைச் சேர்ந்த சுக்ரீவனைக் காப்பதற்காகவே, தனக்குப் பழி வந்தாலும் பரவாயில்லையென,வாலியை மறைந்து நின்று கொன்றான். கிருஷ்ணாவதாரத்தில், தன்னைச் சரணடைந்த திரௌபதி உட்பட பாண்டவர்களுக்குத், துணையளிக்கும் விதமாகத் தூது போனது முதல், தேரோட்டியது வரை எத்தனையோ செயல் செய்து வெற்றி தேடித் தந்தான். கண்ணன் பழிகாரன் என்றும் பட்டம் வாங்கிக்கொண்டான். (காந்தாரி யதுகுலமழிய சாபமும் கொடுத்தாள்!)

    கோவிந்தா
    - இப்பெயர் மிகவும் உயர்ந்தது என்று வைணவ நெறியாளர்கள் உரைக்கின்றனர். அனைத்தையும் காப்பவன் என்ற பொருள். இறைவன் தன்னை வெறுப்பவர்களை மறவருள் செய்து காக்கின்றான். தன்னைப் பணிந்தவர்களை அறவருள் செய்து காக்கின்றான். சரி. இவையிரண்டும் செய்யாதவர்களை ? அங்கே தான் கோவிந்த நாமம் வருகின்றது. கோ வாகிய பசுக்கள் கண்ணனிடம் தம்மைக் காக்கச் சொல்லிக் கேட்கவில்லை, கண்ணன் அவற்றின் பின் சென்று காத்த போது, அவனைப் புகழவுமில்லை, இகழவுமில்லை.ஆயினும் கண்ணன் அவற்றைக் காத்தானல்லவா ? அது போன்றேத் தன்னை அண்டியவர் அண்டாதவர்,அறிந்தவர்,அறியாதவர், இப்படி அனைவரையும் காப்பவன் என்பதைக் குறிக்கவே கோவிந்த நாமம்.

    கோவிந்த நாமத்திற்குப் பெரியோர் தரும் விளக்கங்கள் பற்பல. அவற்றுள் சிறுசிலவற்றை இங்கே வரிசைப் படுத்த முயன்றிருக்கிறேன். பிழை பொறுக்கவும்.

    கோ என்பதற்கு ஸ்வர்கம் , மோக்ஷம் என்று பொருள் கொண்டு 'விந்தயத்தி' அதைத் தருபவன் என்று பொருள் கொண்டால்- கோவிந்தன்- நல்லவர் நட்பு,வீடுபேறு அருளும் இறைவன் என்று பொருளாகும்.

    கோ என்பதற்கு அரிய அஸ்திரங்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி - அதைப் பெற்றவன் என்று கொண்டால், இராமாவதாரத்தில் விஸ்வாமித்ர முனிவரிடமிருந்து அரிய ஆயுதங்களைப் பெற்றிருப்பவன் என்று பொருள்.

    கோ என்பதற்கு பசுக்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி- பசுக்களாகிய சீவாத்மாக்களை அறிந்தவன், காப்பவன் என்று பொருள் படும்.

    கோ என்பதற்கு வேதம் என்று பொருள் கொண்டால், விந்தயதே - அவற்றின் மூலமே உணரப்படக்கூடியவன் என்று பொருள் கொண்டு, வேதத்தின் சாரமாக, பொருளாக இருப்பவன், இறைவன் என்று பொருள் படும்.

    கோபி- கோபிஹி-கோபியர்கள் என்பதே, நான்மறைகள், அதன் அங்கங்கள் என்ற பொருளில் தான் வரும். அவற்றைக் காப்பவன், கோவிந்தன்.

    கோ என்பதை முக்கண் பார்வை எனப் பொருள் கொண்டால், விந்ததி- என்பது எல்லாவிதத்திலும் பார்வையுடையவன், நடந்தது, நடப்பது,நடக்கப்போவது அனைத்தையும் அறிந்தவன் என்று பொருள் படும்.

    கோ என்பதற்கு என்று ஜ்வாலை, தீப்பிழம்பு, சுடர், ஒளி என்று பொருள் கொண்டால் விந்ததி - ஸூர்யமண்டல மத்யவர்த்தி - ஸூரியனுடைய உட்கருவில், நடுவில் இருக்கின்ற ஒளிபொருந்திய தேவன், இறைவன் என்று பொருள் படும்.

    கோ- என்பதற்கு ஆதார நீர் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றில் தோன்றிய, அவற்றைத் தாங்கிய முதலாவதாரங்களான மத்ஸ்ய,கூர்ம (மீன், ஆமை) அவதாரங்களைக் குறிக்கும்.

    கோ - என்பதற்கு பூமி என்று பொருள் கொண்டால்- விந்ததி-வராஹனாய் பூமிதேவியைக் காத்ததையும், திரிவிக்கிரமனாய் அனைத்துலகங்களையும் அலைந்ததையும்,பரசுராமனாய் பூமியெங்கும் காலால் நடந்து திரிந்ததையும் குறிக்கும்.

    கோ என்பதை மீண்டும் வேதம் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றையெல்லாம் நன்குணர்ந்த, ஹயக்ரீவ அம்சத்தைக் குறிக்கும்.

    கோ என்பதை- இந்திரியங்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றையெல்லாம் நல்வழியில் செலுத்துபவன் என்று பொருள் படும்.

    உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு - இறைவன் பெயரினை அடியாருடன் கூடிப் பாடி, வீடுபேறு எய்துதல்.

    சம்மானம் நாடு புகழும் பரிசினால் - இறைவனைச் சரணடைந்து வீடுபேறு பெற்றபின் அடியார்க்குக் கிடைக்கும் பேரின்பங்கள் அனைவராலும் போற்றத் தக்கவை .

    சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே,பலகலனும் யாம் அணிவோம் இறைவனுடன் எப்போதும் அருகிருந்து அவன் வாசத்தையும், ஒளியையும், குணநலன்களையும் அனுபவித்தல். மூப்பு, பிணி, சாவு,தாகம் பசி தூக்கம் , சிற்றின்பம் இவற்றிலிருந்தெல்லாம் விடுதலை ஆதல். இவையெல்லாம் அடியார்கள் பரமானந்த நிலையாகிய வைகுண்டத்தில் அடையும் அணிகலன்கள்.

    ஆடை உடுப்போம் - இறைவனுடைய தொண்டாகிய ஆடையைப் போர்த்திக் கொள்ளுதல். இறைப்பணி செய்தல்.

    பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் - திருமகளும்,பரமனும் இணைந்து அருள்கின்ற பேரின்பத்தில் மூழ்கித் திளைத்தல்.

    கூடி இருந்து குளிர்ந்தே - இறையின்பத்தில் அனைத்து அடியாருடனும் சேர்ந்து அனுபவித்தலே மேலான குளிர்ச்சியினைத் தரும். அஹமன்ன என்று சீவர்கள் பரந்தாமனுக்கு உணவாகவும், அஹமன்னாத: என்று நமக்கு அவன் உணவாகவும் உண்டு களித்து – வீடுபேற்றை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலந்து என்றென்றும் கூடியிருந்து இன்பத்தை பெறுவோம் என்று ஆண்டாள் முடிக்கிறாள்
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள் 2

    சூடகமே,தோள்வளையே,தோடே,செவிப்பூவே ,பாடகமே,- இவை வைணைவ நெறியில் இணைந்த ஒருவருக்கு ஆச்சாரியார் செய்து வைக்கும் பஞ்சசம்ஸ்காரத்தின் உருவகமாகக் கொள்ளலாம். இதனை கீழ்கண்ட முறையில் வார்த்தைப் படுத்த முயன்றுள்ளேன்.

    சராசரம் அனைத்தையுமே படைத்துக் காக்கின்ற,
    அருளைப் பொழிகின்ற பரமன் பெருமையினைப்,
    பெரிதும் மனமகிழ்ந்து பேர்பாடிப் புகழ்ந்தேத்திக்
    கருமேனி மாலவனின் வெண்சங்கும் சக்கரமும்,
    திருவிலச்சினை என்று தோளில் பொறித்திட்டும்,
    ஊர்த்துவ புண்டரங்கள் மேனியில் தரித்திட்டும்,
    குருவின் தாசனென்று பெயருடன் குறிப்பிட்டும்,
    திருமந்திரத்துடனே த்வயம் எனும் இரத்தினமும்,
    சர்ம ஸ்லோகமென்று கண்ணன் சொன்னதுவும்,
    அரிதாம் இரகசியங்கள் குருவால் உணர்ந்திட்டும்,
    திருவாராதனை தன் செய்முறை அறிந்திட்டும்,
    பரமன் தொண்டிழைக்கும் அடியார் நாமென்றுக்
    கரங்களைக் கூப்பிக்கொண்டு திருவடி சேவித்தும்,
    உரியதோர் முறையாலே பக்குவம் செய்திட்டப் ,
    பிரசாதமென இறைக்குப் படைத்த உணவினையே,
    ஒருபிடி ஆனாலும் அளவுடன் உண்டுகொண்டு,
    பரமனின் அடியாரை ஒன்றாய்க் கூடிக்கொண்டு,
    குரு நற்றுணையோடு திருவடி சரணடைந்தால்,
    உரித்தாம் பேரின்பப் பேற்றினைப் பெற்றிடலாம் !

    தோள் வளையே - —வலக்கையில் ஸுதர்ஸன சக்கரக் குறியீட்டையும், இடக்கையில் பாஞ்சசன்ய சங்கின் குறியீட்டையும், திரு இலச்சினை,பொறித்துக் கொள்ளுதல்

    சூடகமே - மேனியில் பராமனுடைய 12 உப-வ்யூஹங்களைக் குறிக்கும் வகையில் ஊர்த்துவபுண்டரங்கள் எனப்படும் திருமண் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்ளுதல் (திருமண் காப்பு )

    தோடே
    -பிரணவ வடிவைக் கொண்டிருக்கும் செவியினைக் குறிக்கின்றது. இரஹஸ்ய த்ரயத்தில் வைணவ நெறியின் மூலமந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெறுதல்

    செவிப்பூவே
    - திருமகளாகிய தாயாருடன் தொடர்புடைய இரண்டாவது இரஹஸ்யமான த்வய மந்த்ர உபதேசம் பெறுதல்

    பாடகமே- காலில் அணியும் அணிகலன், இறைவன் திருவடியில் சரணம் செய்வதைக் குறிக்கும் விதமாய், சர்மஸ்லோகம் என்கின்ற இறை உறுதிமொழியைக் குறிக்கின்றது.

    ஆடை உடுப்போம் - இறைவனுக்கு என்றும் தொண்டு செய்கின்ற அடியார் என்பதை உணர்த்தும் தாச பாவத்தைக் குறிக்கின்றது . (அடியேன் இராமானுஜ தாசன் என்று குருவின் மூலம் பரமதாச பாவத்தைச் சொல்வது)

    பால்சோறு நெய் மூட - திருவாராதனம் என்கின்ற இறைப்பணியைக் குறிக்கின்றது.
    கூடிக் குளிர்ந்தே - இறையனுபவத்தைத் தனித்துப் பெறலாகாது, அடியார் பிறருடன் கூடியே நுகரவேண்டும் என்கிற வைணவ நெறியினைக் குறிக்கின்றது

    மந்த்ரோபதேஸங்கள்

    இவ்விடம் வாசகர்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த விழைகிறேன். நான் இங்கே பதிவது எழுத்துக்களால் ஆன சொல் வடிவம் மட்டுமே. இவைபோன்ற அரிய இறைவிளக்கங்களை, குருவின் மூலமே ஒருவர் பெற வேண்டும். இதனை வாசகர்களும் உணர்ந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

    மந்த்ர இரஹஸ்யம் மூல மந்திரம் (பிரணவம் + நமோ + நாராயணாய) ,
    மந்த்ர இரத்னம் ,த்வய மந்திரம் (ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே + ஸ்ரீமதே நாராயணாய நமஹ )
    விதி இரஹஸ்யம் , (சர்மஸ்லோகம்) ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,
    அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச
    - கண்ணன், பகவத் கீதை ,அத்தியாயம் 18, ஸ்லோகம் 66.
     
    periamma likes this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நெய் ,பால் வில க்கி, மலர், மை அணியாமல் பாவை விரதம்
    மேற்கொண்ட கோபியர், சூடகம், தோள்வளை ,தோடும் செவிப்பூவும் அணிந்து ,மூட நெய் பெய்து அக்கார அடிசில் நிவேதனம் செய்கிறார்கள்.
    இந்த காலத்தில் 'நெய் என்றாலே cholesterol என்று காத தூரம் ஓடுபவர்கள் அருமைக் கண்ணனுக்கு மட்டும் இப்படிப்பட்ட பொங்கல் படைப்பார்களா, சந்தேகம் தான்.
    அக்கார அடிசில் பற்றி எம்பார் சுவைப்படச் சொல்லும் நிகழ்ச்சி,"

    ' பாவனமான ஆத்மா என்று சொல்லுகிறோம்.நமது சரீரத்துக்கு குள்ளே இருக்கும் ஆத்மா எப்படி உடல் ,மன உபாதைகளால் சம்பந்தப் படாமல் இருக்கிறது?

    உபநிஷத் நம் சரீரத்தை ஒரு மரமாக உருவகப் படுத்துகிறது.அந்த மரத்தில் இரு பறவைகள்.ஒரு பறவைக்கு திடமான இறக்கைகள்.மற்றொன்றுக்கு இறக்கை கிடையாது.இந்த உடம்புக்கு ஏற்படும் சுகம், துக்கம் வியாதி எல்லாம் இறக்கையில்லாத் பறவையிடம் ஒட்டிக்கொள்ளும்.இன்னொரு பறவைக்கு அதெல்லாம் ஒட்டாது என்கிறார் குரு.
    ஒரு சிஷ்யன்" வேதமே சொன்னாலும் இதை நான் நம்பத் தயாராயில்லை.இதற்கு ஆதாரம் என்ன?" என்றான். குரு வாயை மூடிக் கொண்டார்.

    :" நான் கேள்வி கேட்டு ஆச்சாரியனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை'' என்று கர்வப் பட்டான் சிஷ்யன்.

    கார்த்திகை முடிந்து மார்கழி வந்தது. அன்று 27 வது நாள்.27வது பாசுரம் படித்து பாத்திரத்துக்கு மேலே நெய் முழ அளவுக்கு மிதக்கிற மாதிரி சர்க்கரைப் பொங்கல் தயாரானது.
    விதண்டா வாதம் பண்ணின மாணவனுக்கு வயிறு நிறைய சர்க்கரைப் பொங்கல் அளித்தார் குரு.சிஷ்யன் சீயக்காய் பொடி போட்டு நெய்ப் பிசுக்கான கையை அலம்பிக்கொண்டு வந்தான்.குரு அவனைக் கூப்பிட்டு இன்னும் கொஞ்சம் சீயக்காய்ப் போடி கொடுத்தார்.
    " ஸ்வாமி, கைப் பிசுக்கு தான் சுத்த மாகி விட்டதே,இன்னும் எதற்கு சீயக்காய் பொடி ?? " என்றான்.
    "இது கைக்கு அல்ல,உன் நாக்குக்கு' என்கிறார் குரு.

    " நாக்கிலே ஒன்றும் ஒட்டிக்கலையே, சுவாமி' இது மாணவன்.
    ஒரு சின்ன பதார்த்த, நெய், கையிலே ஓட்டுவது போல் நாவில் ஒட்டுவதில்லை.கையும் நாக்கும் ஒரே சரீரத்தில் தானே இருக்கிறது? "
    ஒரு சாதாரண நெய்க்கே இது சாத்தியமென்றால் எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த சக்தி இருக்காதா?பரமாத்மா எனும் பறவை எதிலும் ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதன் சாத்தியத்தை வேதம் சொன்னால் அதை ஏற்கத தான் வேண்டும் "என்கிறார் குரு. சிஷ்யன் உணர்ந்தான்.

    ஸ்ரீரங்கத்தில் எல்லா வைணவ வீடுகளிலும் 'கூடார வல்லி ' என்று சொல்லி பொங்கல் செய்வார்கள்.நாவில் நீர் சொட்ட , பொங்கல் சாப்பிடும்போதெல்லாம் விஜயராகவாச்சாரியார் சொன்ன உபநிஷத் கதை தான் நினைவுக்கு வரும்.
    பவித்ரா, உங்கள் தீவிர முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அக்கார அடிசிலை ஆசை தீர உண்டு களித்தேன்.தூக்கக்கலக்கத்திலும் பவித்ராவின் அஞ்சலுக்கு பதில் அளித்தே தீருவது என்ற நோக்கத்தில் இந்த உபநிஷத் வரலாறைப் பங்கு கொள்கிறேன்.
    இன்னும் இரண்டு பாசுரங்களும், பலஸ்ருதியும் தான் பாக்கி.
    சரன்னகதித் தத்துவத்தை விளக்கும் 28, 29 வது பாசுரங்களுக்காகக் காத்திருக்கும்,
    ஜெய்சாலா 42
     
    periamma likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    எளிமையான முறையில் அருமையான இறைஞானத்தைச் சொல்லியிருக்கும் பெரியோர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
    உங்களது மனப்பூர்வமான ஆசிகளுக்கு மிக்க நன்றி ! உங்கள் சிரமத்தைப் பார்க்காமல் இந்தப் பதிவுகளுக்குத் தாங்கள் தரும் அருமையான பங்களிப்பு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அளிக்கிறது. அடுத்த இரு பாசுரங்களுக்கு என்னால் இயன்ற வரை நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறேன். முற்றும் என் அறியாமையைத் தங்களைப் போன்ற ஆன்றோர்கள் மன்னித்து, வாசகர்களுக்கு ஆழமான பொருட்சுவையை உணர்த்தினால் மனநிறைவுறுவேன்.
     
  7. tamilelavarasi

    tamilelavarasi Bronze IL'ite

    Messages:
    28
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    மிகவும் அருமை சகோ...
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, தமிழ் இளவரசி !
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கோ விந்தன் எத்தனை அர்த்தங்கள் .பஞ்ச பூதங்களையும்உள்ளடக்கியவன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
     
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மார்கழி மாதத்தில் இந்த கோவிந்த நாம ஸங்கீர்த்தனம் பிரசித்தி,இல்லையா ? கண்ணனே கோவிந்த நாமத்தை உயர்வானது என்று பெருமையாகச் சொல்கிறான்.இறைவன் அருளைப் பெறுவதற்கு இந்தக் கலியுகத்தில் நாம், பெரிய தவங்களோ, யாகங்களோ செய்ய வேண்டாம் ! இறைவனது பெயர்களைக் கூறினாலே போதும் என்கிறார்கள் சமயப் பெரியோர் .
     

Share This Page