1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (23) மாரி மலைமுழைஞ்சில் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 7, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    23) ஆண்டாள் பாடல் (கண்ணன் என்கிற இளஞ்சிங்கத்தை சிங்காதனத்தில் அமர வேண்டுதல் )

    மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
    மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
    கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


    பாசுரப் பொருளுரை

    "மழைக் காலத்தில் மலைக் குகையை தனது இருப்பிடமாக்கிக் கொண்டு தன் பெட்டையுடன் உறங்கிக் கிடக்கும் பெருமை வாய்ந்த சிங்கமானது, மழைக்காலம் முடிந்ததை அறிந்து,தூக்கம் கலைத்து, தீப்பொறி பறக்க தனது சிவந்த விழிகளை திறந்து பார்த்து, மணமுள்ள தனது பிடறி முடி அலை பாயும் வகையில் உடலை நாற்புறமும் அசைத்து, நெட்டுயிர்த்து, பின் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையை விட்டுக் கிளம்புவது போல காயாம்பூ போன்ற நீல நிறங் கொண்ட மாயக் கண்ணனான நீ, உனது திருமாளிகையை விட்டு இவ்விடம் வந்து, உனக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்ட பெருமை வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, அதன் பின், நாங்கள் உனை நாடி வந்ததன் காரணத்தை ஆராய்ந்து அருள வேண்டுமாய், பாவை நோன்பிருந்து வணங்கிக் கேட்கிறோம்!"

    பாசுரக் குறிப்பு

    பரந்தாமனது நரசிம்ம அவதாரத்தைக் குறிக்கும் பாசுரம். அஹோபிலத்தில் குஹையில் எழுந்தருளியுள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோவில் இப்பாசுரத்தின் சாயலே போலும் ! ஆண்டாள் தன் இந்தப் பாசுரத்தில் மிகவும் உயர்ந்த ந்ருஸிம்ம அவதாரத்தை , இறைவன் எவ்விடமும் நீக்கமற நிறைந்தவன் என்ற தத்துவத்தை அழகாகப் பாடுகிறாள். மிருகசிரம் என்ற ஐந்தாவது நட்சத்திரக் குறிப்பால், ( விலங்கின அரசனைத் தலையாகக் கொண்ட) பரந்தாமனின் ந்ருஸிம்ம அவதாரம் குறிக்கப்படுகின்றது. 2+3 = 5 என்ற அடிப்படையில், இந்த 23 ஆவது பாசுரத்தில் நிருஸிம்ம அவதாரம் பேசப்படுகின்றது.

    முந்தையப் பாசுரத்தால் கண்னுக்குத் தாங்கள் வந்திருப்பதை கோபியர்கள் உணர்த்திய பின் இப்பாசுரத்தில் அவனது சிம்ம நடையைக் காட்டியருள் செய்ய வேண்டுகிறாள், ஆண்டாள் ! இறைவன் அருளைத் தனியாக வேண்டக் கூடாது, அடியார்கள் அனைவரோடும் கூடியே இறையருளைப் பெறுதல் வேண்டுமென உணர்த்தும் பாசுரம் . இலக்கியச் சுவையில் கண் முன்னேயொரு அரிமாவை அழகுறக் காட்சியமைக்கும் பாசுரம். அவதார பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம். விபவ நிலையான ந்ருஸிம்ம அவதாரம் குறிக்கப்படுகிறது.

    ஆத்மஞானியான இறை அடியார், மற்ற அடியார்களுக்கும் இறையருள் கிடைக்குமாறு அவரோடு கூடி, இறைவனைப் பணிந்து வீடுபேறு கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்பது கருத்து. அந்த ஆத்மஞானத்தை அருள்பவன் ஸ்ரீலக்ஷ்மிந்ருசஸிம்ம மூர்த்தியே என்பது உள்ளீடு .

    ந்ருஸிம்ஹ அவதாரக் குறிப்பு
    - மற்ற அவதாரங்களுக்கெல்லாம் சற்று நேரம் எடுத்துக் கொள்ள முடிந்தது பரந்தாமனுக்கு. ஆனால் இந்த ந்ருஸிம்ஹ அவதாரம் நிகழ்த்துவதற்கு கால அவகாசம் நிரம்ப இல்லை. அந்த அவதாரமே 2 மணி நேரத்திற்கும் குறைவான பொழுதில் நிகழ்ந்து காரியம் முடித்த அவதாரம். அவசரகாலத்தில் வந்தாலும், அவசர கோலத்தில் வரவில்லை. யாராலும் கற்பனை செய்திருக்க முடியாத உருவத்தில் வெகு கம்பீரமாக வெளிப்பட்டு, அனாயாசமாக ஓர் ஸ்ம்ஹாரத்தை முடித்துவிட்ட அவரதாரம் இது.

    தன்னுடைய அண்ணன் இரண்யாக்ஷனைக் கொன்ற விஷ்ணுவை பழிவாங்க வேண்டுமென கடுந்தவத்தில் ஈடுபட்ட அரக்கன் இரணியகசிபு, "எந்தவொரு தேவ, மனித, மிருகவினத்தாலும், எந்த ஆயுதத்தாலும்,போர்க்களத்திலும், வீட்டிலும், பகலிலும் , இரவிலும் எப்படியும் மரணம் நிகழக்கூடாதென்று" வரம் பெற்றான். அதன் பலத்தால் அனைத்துலகங்களையும் தன் வசப்படுத்திக் கொடுமைகள் புரிந்தான். தன்னையே இறைவனாகவும் அறிவித்துக் கொண்டான். இறைவன் சித்தத்தால், இந்த அரக்கனுடைய மகன் பிரகலாதன், கருவிலேயே இறைஞானத் திருவை நாரத முனிவரின் உபதேசத்தால் பெற்று, சிறந்த விஷ்ணு பக்தனாக மிளிர்ந்தான். தன்னுடைய மகனே தன்னை மதிக்காததை பொறாத அரக்கன் இரணியன் பாலகனென்றும் பாராமல் அவனைக் கொல்லத் துணிந்தான்.
    எல்லா இக்கட்டிலிருந்தும் தப்பித்த மகனைத் தானே கொல்ல முடிவெடுக்கையில், அவனுடன் கேட்கிறான் "இறைவன் என்று நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறான்?"என்று. அவன் மகன் பிரகலாதன், "எங்கும் நீக்கமற இருக்கிறான்" என்று உரைத்தான். 'இந்தத் தூணில் இருக்கிறானா உன் இறைவன்?" என அரக்கன் கேட்டதும், ஆமென உரைத்தான். கோபத்தில் இரணியன் தூணை எட்டி உதைக்க, அதைப் பிளந்து தன்னுடைய பக்தன் வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம் வெளிப்பட்டான்,இறைவன்.
    அரக்கன் பெற்ற வரத்திற்கேற்றபடியே, மிருகமுமல்லாது, மனிதனுமல்லாது, தேவருமல்லாது, சிங்கத்தலையுடன், மனித உடலுடன், புதுமையான தோற்றத்தில் வெளிவந்து, வீட்டிற்கு உள்ளுமில்லாது புறமுமில்லாது, வாயில் நிலைப்படியில் வைத்து, பகலுமில்லாது,இரவுமில்லாது, சந்தியா காலத்தில், தரையிலுமில்லாது, வானத்தலும் இல்லாது, தன்னுடைய மடியில் கிடத்தி,எந்த ஆயுதங்களும் ஏந்தாது கூரிய நகங்களையே ஆயுதமாகப் கொண்டு கிழித்தே கொன்றருளினான், இறைவன்.தன்னை இரணியன் இழிவுபடுத்திய போதெல்லாம் கோபங்கொள்ளாத பரமன், தன் பக்தனின் வாக்கை மெய்ப்பிக்கத் தூணிலிருந்து நரமும் சீயமுமாய்ப் புறப்பட்டு வந்து அரக்கனை அழித்தான்.
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    கருத்த மேகங்கள் மழையைப் பொழிகின்றப்
    பெருத்தக் கார்காலம் முழுதும் மலைப்பொந்தில்
    பொருந்திப் பெட்டையுடன் கூடி உறங்கியதோர்
    மிருகராசனுமே மாரி தீர்ந்ததனை உணர்ந்து
    நெருப்பையொத்த விழிகளைத் திறந்து தனக்கே
    உரித்தான வாசமுடங்குளை சிலுப்பித் திமிலதனை
    விரித்தே நாற்புறமதிர ஒலித்து வெளிக்கிளம்பி
    வருமாப்போல் காயாம்பூ வண்ணம் ஒத்தத்
    திருமேனி படைத்திட்டக் கண்ணா நீயுந்தன்
    திருமாளிகை நீங்கிப் புறப்பட்டு வெளிவந்து
    சீரியதோர் அழகுற்ற உயர்ந்ததாம் ஆசனத்தில்
    பொருந்தி அமர்ந்திருந்தே எங்கள் எண்ணத்தைக்
    கருணை கூர்ந்து ஆராய்ந்து நிறைவேற்றியருள்
    புரிந்து காத்திடுவாய், சரணம் செய்கின்றோம் !

    மலைமுழைஞ்சு - மலையிலுள்ள குகைப்பொந்து . விலங்கு உறையுமிடம்.
    மன்னிக்கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்- இடத்தோடு நன்கு பொருந்தியிருந்து ( துணையுடன் கூடி) படுத்துறங்கும் சிங்கம். இது ஒரு விலங்கியல் அனுபவம். ஆண்டாள் ஆன்மீகவாதி மட்டுமல்ல, அறிவியலும் தேர்ந்தவள் !

    குளிர் நடுக்குகிற, மழை பெய்து கொண்டிருக்கிற காலத்தில், தன் குகையில் சோம்பலை அள்ளிப் பூசிக்கொண்டு தன் பெட்டையைச் சிறிதும் பிரியாமல் அணைத்தபடிப் படுத்துறங்கும் சிங்கம். மிகவும் கம்பீரமான விலங்கு சிங்கம். அது எதுவும் செய்யாமல் படுத்துக்கிடந்தாலும் அதன் கம்பீரம் கொஞ்சமும் குறைவதில்லை. வேறெந்த விலங்கிற்கும் இல்லாத அரச பட்டம் சிங்கத்திற்கே உரியது. ஆகையால் சீரிய சிங்கம். மழைக்காலத்தில் வெளியில் சென்று வேட்டையாடுவது சாத்தியமில்லை அல்லவா ? ஆகையினால் சிங்கம் சோம்பலுடன் தனது வீடான மலைப்பொந்தில் தனது பெட்டையுடன் கூடி உறங்குகின்றது.

    அரசர்களை, வேந்தர்களை அவர்களது வீரத்தைக் குறித்து சிங்கமென்றும், அரிமா என்றும் சொல்லுவது உண்டு தானே ? மழைக்காலத்தில் வேட்டையாடாமல் வீட்டிலிருக்கும் சிங்கத்தைப் போன்றே, அரசர்களும் தங்களது போர்க்களத்து நடவடிக்கைகளை விடுத்து ஓய்வெடுப்பதுண்டு. இராமாயணத்தில் அப்படியொரு காட்சியுண்டு. சீதையைத் தேடுவதற்கு உதவி செய்வதாகச் சொன்ன சுக்ரீவன், நடுவில் மழைக்காலம் வந்ததால், தன்னுடைய அந்தப்புரத்தில் களித்தபடி,பொழுதைக் கழித்ததையும், இராமன் காத்திருந்ததையும் காட்சிப்படுத்தியிருக்கின்றனரே ,ஆதிகவியும், கம்பனும்.

    மன்னி என்ற சொல்லுக்கு பற்பல பொருளுண்டு. இவ்விடத்தில் உறங்கும் போதில் கூட கம்பீரம் குறையாத என்று பொருள் கொள்ளலாம். யாராவது தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ (உறங்கும் போது) என்று சாதாரண சிங்கம் பயப்படலாம், ஆனால் இந்தக் கண்ணனாகிய சிங்கத்துக்கு அச்சமோ, நடுக்கமோ, கலக்கமோ அறவே கிடையாது. ஆகையினால் இன்னும் கூட சோம்பலை அள்ளிப் பூசினாற்போல, இன்றைய சென்னைச் செந்தமிழில் சொன்னால், தெனாவட்டாகப் படுத்திருக்கிறான்,கண்ணன் !

    மாரி -ஆண்டாள் முன்னமே "பனித்தலை வீழ" என்று சொன்னபடி,பனியே மழைபோல் பெய்யும் மார்கழிக் காலம். குளிர் நடுக்குகிற, பனி மழை போல் பெய்து கொண்டிருக்கிற மார்கழி மாத காலத்தில், மலைப்பொந்தில் உறங்கும் சீரிய சிங்கத்தைப் போன்றே, தனது பள்ளியறையில்,யசோதையின் இளஞ்சிங்கம் கண்ணன், தனது துணையாம் நப்பின்னையுடன் கம்பீரமாகப் படுத்துறங்குகின்றான் என்று அழகான காட்சியமைப்பைச் சொல்கிறாள்,ஆண்டாள் !

    ஆண்டாள் இருந்த காலத்தில் தமிழகத்தில் சிங்கமிருந்திருக்க வாய்ப்பில்லையே, அவளால் எப்படி இப்படியொரு காட்சியியலைக் கற்பனை செய்து கவி பாட முடிந்தது என்று வியப்பதற்கு ஒன்றுமில்லை ! அவள் சாதாரண சிங்கத்தைப் பற்றி மட்டும் அறிந்திருக்கவில்லை ! சிங்கத்துளெல்லாம் சீரிய சிங்கமான நரசிங்கத்தைப் பற்றித் தெரிந்தவள். தன்னை ஏழு தலைமுறையாக நிருஸிம்ம பக்தரென்று சொல்லிக்கொண்டவர் பெரியாழ்வார். அவரின் பெண்ணல்லவா ? ஆகையினால் ஆண்டாளும் நிருஸிம்ம பக்தையாக இப்பாசுரத்தைப் பாடியுள்ளாள் !

    அறிவுற்று
    - மழைக்காலம் முடிந்ததை உணர்ந்து சிங்கம் விழித்தல்.சாதாரணர்கள் துயில் கலைந்து எழுவதற்குத் தாமதமாகலாம். ஆனால் அடியவர்களுக்கு அருள் செய்வதற்கு , மாயத்தூக்கத்தில் இருக்கும் ஆயன் கண்ணன் மிக இலகுவாக உணர்ந்து எழுந்து விடுவான்.

    தீவிழித்து- ஒளியும் சினமும் பொருந்திய விழிகள் திறந்து.சிங்கத்தின் கண்கள் பொன்னிறத்தில், மஞ்சளொளியில் இருக்கும். இருளிலும் பார்க்கக் கூடிய சக்தியைக் கொடுக்கும். தமிழகத்தில் சிங்கமிருந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவே. ஆயினும் இதெல்லாம் ஆண்டாளுக்குத் தெரிந்தே இருந்தது அதிசயம் தான் ! கண்ணனுடைய கண்கள் தன்னை அடியவரின் மனவிருளைப் போக்கும் ஒளியைப் பாய்ச்சும் கண்களல்லவா ? அது தான் தீ விழி என்கிறாள்.தூங்கிக்கொண்டிருப்பவர்கள் கண் விழித்தால் , அவை சற்றே சிவந்திருக்குமல்லவா ? அது போலவே ஆயர்குலப் பெண்கள் தன்னுடைய பள்ளிக்கட்டின் கீழ் நின்று தன்னை எழுப்புவதைக் கேட்ட கண்ணன் கண்விழித்தது தீவிழித்ததாகின்றது !

    வேரிமயிர் - நறுமணங் கமழும் பிடறிமயிர் , முடங்குளை . மூரி நிமிர்ந்து பேர்ந்துஉதறி - சிங்கத்தின் முதுகில் சற்றே மேடிட்ட திமில் பகுதி உடலை வளைத்து சோம்பல் முறித்து. எப்பாடும்- எல்லா திசைகளிலும், முழங்கி- கர்ஜனை செய்து. கண் முன்னே ஓர் அரிமா தெரிகிறதா ? இதெல்லாம், வேட்டையாடுவதற்கு ஆயத்தமாகும் விலங்கின் தோற்றத்தைக் குறிக்கும் வரிகள்.

    மழைக்காலத்தில் சீதையைத் தேடாமல் ஓய்வெடுத்திருந்த சுக்ரீவனைப் பொறுத்த இராமன், மழைக்காலம் முடிந்தும் தனது வாக்கை மெய்ப்பிக்க முனையாத வானர அரசனின் செயலால் மிகவும் கோபமுற்றான். அவனது கோபம் எப்படியிருந்திருக்குமென்று ஆண்டாள் ஒரு சிங்கம் சோம்பலை முறித்து உடலை சிலிர்த்து கர்ஜிக்கின்ற காட்சியைப் பாடுவதில் உணர முடிகின்றது. நரசிங்கமாய் வந்தவன் தானே பின்னர் இராமனாகவும், ஆயர்பாடியில் கண்ணனாகவும் வந்தான்?

    பூவைப்பூ - கருநீல நிறத்து சங்க கால மலர். பெண்கள் நெற்றியில் அணியும் பொட்டைப் போல இருக்கும் அதனால் பூவை (பெண்) + பூ. கண்ணனுடைய கம்பீரத்திற்கு உவமையாக சிங்கத்தைச் சொன்ன ஆண்டாள் கண்ணனுடைய மேனி நிறத்தைக் குறிக்கப் பூவினை உவமையாக்குகிறாள். என்னே அவளது கவித்திறன் !
    கண்ணன் என்ன மறவருள் செய்வதே தொழிலாக உடையவனா ? அவனது அன்பர்களுக்கு அருளைப் பொழிவதில் தேர்ந்தவனல்லவா ? மிருதுவான சுபாவமுடையவனல்லவா ? அது தான் அவனது கம்பீரத்தைப் புகழும் பொது, சிங்கத்தைக் குறித்தாள்.அவனது கருணை மிகுந்த மனதினைக் குறிக்க மலரை உவமைப் படுத்துகிறாள். என்னே அவளது கவித்திறன் ! தீயவற்றின் தீக்குணங்களை அழிக்கும் போது இறைவன் சிங்கத்தைப் போல வலிமையானவான். அதே சமயத்தில் தன் அடியவருக்கு அருளும்போது மலரைப் போல மென்மையானவன் என்பது கருத்து.

    கோயில்நின்று - மாளிகை நீங்கி . இங்கனேப் போந்தருளி - ஆண்டாள் அரங்கர்க்குப் பண்ணிய திருப்பாவையல்லவா ? அது தான் படுத்திருக்கும் பரந்தாமனது அழகைப் பாடினாள். ஆயினும், அவனே எழுந்து நடந்து வந்தால் அந்த அழகு எப்படி இருக்குமென்று காண விரும்பியே, கண்ணனை அவனது மாளிகை நீங்கி, சபைக்கு எழுந்து நடந்து வர வேண்டுகிறாள். காளையின் வீரம் , புலியின் பாய்ச்சல், யானையின் மதிப்பு, சிங்கத்தின் கம்பீரம் இவையெல்லாம் காட்டுகின்ற கண்ணனது நடையைக் கண்டு அனுபவிக்க எண்ணுகிறாள்.

    சீரிய சிங்கா சனத்து இருந்து - அரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்யும் ஆசனம் மீதமர்ந்து. கண்ணனுடைய சிங்காதனம் ஞானம்,அஞ்ஞானம்,தர்மம்,அதர்மம் வைராக்கியம்,அவைராக்கியம், ஐஸ்வர்யம், அனைஸ்வர்யம் ஆகிய எட்டையும் கால்களாக அமைத்து அதன் மீதில் அவன் ஏறி அமர்ந்து, உலகத்தின் சமன்பாட்டை நிலை நிறுத்தும் வண்ணமிருப்பது. இருளிருந்தால் ஒளியுண்டு, தீமையென்றால் நன்மையுண்டு. இப்படி உலகில் எல்லாமே இரண்டிரண்டாக இருப்பதைக் காண்கிறோமல்லவா ? அதையாவும் அழகாய்,செவ்வனே நடத்தும் சூத்திரக்கயிறு இறைவனிடமே உள்ளது. இவற்றையெல்லாம் தான் தன்னுடைசீரிய ஆசனமாக ஆக்கி இறைவன் ஆட்சி செய்கிறான்.

    இருந்து- படுத்திருந்த அழகு, கண்விழித்த அழகு, நடையிட்ட அழகு இவற்றோடு கண்ணனுடைய அமர்ந்த திருக்கோல அழகையும் அனுபவிக்க எண்ணுகிறாள்.
    அததற்கென்று தகுந்த இடம் இருக்கிறதல்லவா ? உறங்குகின்ற பள்ளியறையில் வைத்து,அடியவர் குறைகளைக் கேட்டு அருள் செய்ய முடியுமா ? ஆகவே தான் கண்ணனைத் தன்னுடைய மாளிகை நீங்கி, அரசனுக்குரிய மண்டபத்தில், சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து தங்களது மனக்குறைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள் செய்யக் கோருகிறாள்.

    இராமாவதாரத்தில் விபீடண சரணாகதியின் போது எப்படி கம்பீரமாகக் கடற்கரையில் பொருந்தியிருந்து தனது சரணாகத வத்ஸல குணத்தைக் காட்டியது போலவும், குருக்ஷேத்திரப் போரில்,பார்த்தனுடைய தீர்த்தத்தில் பொருந்தியிருந்து கீதோபதேஸம் செய்தது போல், தங்களுக்கும் பொருத்தமான ஆசனத்தில் அமர்ந்திருந்து ஆராய்ந்து அருள் செய்ய வேண்டும் என்று ஆண்டாள் விரும்புகிறாள்.

    காரியம் ஆராய்ந்து அருளே- கீழே 8 ஆம் பாசுரத்தில் ஒரு கோபிகையிடம் சொன்னாளல்லவா, நாமெல்லோரும் கண்ணன் இருக்குமிடம் சென்று சேவித்தால் , அவன் ஆதரவோடு நமது எண்ணத்தைக் கேட்டு ஆராய்ந்து அருள்வானென்று ? அதற்கேற்றவாறே இப்பாசுரத்தில் கண்ணனனிடம் ஆராய்ந்து அருளுவதான தனது கோரிக்கையை வைக்கிறாள். அரசன் தனது குடிமக்களின் நிறை குறைகளைக் கேட்டறிந்து உதவுதல் போல, கண்ணனாகிய மன்னா, எங்கள் எண்ணமறிந்து உதவு . கேட்டதும் கொடுப்பவன் தான் கண்ணன், என்றாலும் நாம் கேட்பதெல்லாம் கொடுப்பானா ? கேட்கும் நமது உள்ளத்து பக்தியைப் பார்த்தும், நமது குணத்தை சீர் நோக்கியும், இதற்கு ஏற்றவர் தானா என்று உறுதிப் படுத்தித் தான் கொடுப்பான் ! அதுவே ஆராய்ந்து அருளுதல்.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    பிழையிலாத தன் பக்தன் பிரகலாதன்
    தொழுதிடத் தானும் தூணிலே தோன்றி
    வழுவிய அரக்கன் தன்னை மாய்த்திடவே
    விழிகளில் பொங்கும் கோபமோ தீயின்
    கொழுந்தெனத் தோன்றவே தான் வந்து
    இழுத்துமே மடியில் அரக்கனைக் கிடத்திக்
    கிழித்தனன் பரமன் கூர்த்த நகத்தாலே !
    இழித்த போதிலும் பொறுமை காத்தவன்
    பழித்து பக்தனைச் சொன்ன நொடியிலே
    எழுந்து வந்தனன் துயரம் களைந்தனன் !
    அழிவிலாத அருள் பொழியும் நரசிங்க
    அழகு மிளிர்ந்திடும் அன்பு உருவத்தை
    விழியிலே கண்டு கருத்திலே நிறைத்துத்
    தொழுதிட நலங்கள் யாவும் பெருகுமே !
    மழையைப் போல மறையும் மற்றவையும்
    பொழியும் பாவ புண்ணிய இரகசியமாய்
    இழைந்து எங்கெங்கும் நிறைந்து இருக்கின்ற
    அழகுத் திருவுடன் உறையும் சிங்கத்தைத்
    தொழுதுப் பணிந்திட ஞானம் மலருமே !
    பிழையிலாத அந்த ஞானம் மலர்ந்தபின் ,
    வழுவிடாது நமக்கு இருக்கும் கடமைகள்
    முழுதும் திறமாக செய்து கொண்டுமே
    தொழுது இறைவனைப் பாடிப் பரவியும்
    பழுதிலாத நல்லாசான் அருள் செய்த
    வழியிலே சென்று வாழ்க்கை நடத்திடில்
    தொழுத அடியவர் இதயம் உறைகின்ற
    அழகுப் பரமனின் அடியில் சேர்கின்ற
    செழித்த ஆனந்த நிலையும் வாய்க்குமே !
    விழையும் பரமனின் வைகுண்டம் தனியில்
    நுழைந்திடாமல் மற்ற அடியார் தம்மோடு
    வழிந்து பெருகுகின்ற பரமன் கருணையில்
    குழைந்து கூட்டாக பணிந்து பேர்பாடி
    தொழுது வீடெனும் பேற்றை அடையலாம் !

    சீரிய சிங்கம்- நரசிம்ம அவதாரம்.
    இப்போதும் நாம் காணும் காட்சியென்ன ? தீமை செய்பவர்கள் எதற்கும் கட்டுப்படுவதில்லை. தமது மனம் போன போக்கில் நடக்கிறார்கள். அதனை அடக்கித், தீமையை அழித்து நன்மையைச் செய்பவர்களோ, அனைத்து சட்ட திட்டங்களுக்கும், வரையறைகளுக்கு உட்பட்டுத்தானே செயல்பட வேண்டியிருக்கின்றது ? இந்த விதிமுறைகள் நமக்கு மட்டுமல்ல ! நம்மைப் படைத்த ஆண்டவன் தனக்கும் பொருந்தும் என்று நடந்து காட்டியிருக்கிறான்.

    "பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
    தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே"


    "நல்லவர்களை காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் , தர்மங்களை நிலை நிறுத்துவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன்" என்று கண்ணன் உரைத்தானே ! அவன் எப்போதும் செய்து வந்ததையே உரைத்திருக்கிறானல்லவா ? பக்த அனுக்ரஹம் செய்யவும், துஷ்ட நிக்ரஹம் செய்யவும், சபதேமற்றவன் நிருஸிம்ம அவதாரத்தில் ஒரே நேரத்தில் தன்னுடைய பக்தன் பிரகலாதனைக் காப்பதற்காகவும், அரக்கன் இரணியனை அழிப்பதற்காகவும், வேகமாகவும் அவசரமாகவும் வெளிவந்த வேளையிலும், பிரமதேவன் அரக்கன் இரணியனுக்குக் கொடுத்த வரம் பொய்க்காமல், அந்தக் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தே தீமையை அழிக்கும் விதத்தில் எவ்வளவு நூதன முறையில் வெளிப்பட்டு வந்தான் ?

    தனது நகங்களைக் கொண்டு அரக்கன் உடலைக் கிழித்தது கூட அவனைக் கொல்லும் எண்ணத்தோடு இல்லையாம் ! அரக்கனுக்குள் எங்கேனும் ஓரிடத்திலாவது இறைவனாகிய தன்னைக் காண முடிகின்றதா, தன் மீதில் அரக்கனுக்குக் கொஞ்சமேனும் பக்தியிருக்கிறதா என்று தேடிப் பார்த்தானாம். மேலும் மத்ஸ்ய கூர்ம வராஹ அவதாரங்கள் நீங்கலாக மற்ற அவதாரங்களில் ஒரு பெண்ணுடைய வயிற்றில் கர்பவாஸம் செய்த பரந்தாமன், இந்த ந்ருஸிம்ஹ அவதாரத்தில் ஒரு தூணுக்குள் கர்பவாஸம் செய்து அந்தத் தூணையும் பெண்மையாக உயர்த்திய கருணையைப் பார்க்கலாம்.ஆகவே அவன் சீரிய சிங்கம், மிகவும் செம்மையாகச் செயல்படும் சிங்கம்.

    இலக்ஷ்மி ந்ருஸிம்மனாக இருக்கும் அந்த இறைவன் அருளால் தான் , ஒரு சீவாத்மாவிற்கு உயர்வான மறைஞானம் கைவரப்பெற்று, தனது பாவ புண்ணியங்களைப் பற்றிய அறிவுற்று, இந்த மாயப்பிடியிலிருந்து வெளியேறி, வீடுபேறு அடைய வேண்டுமென்ற அறிவு ஏற்படும். அவனுடைய அருளால் உணரப்படக்கூடியவனும் அவனே ! அனைத்து இரகசியங்களின் சாரமாக, சீவர்களின் இதயமாகிய குகையின் உள்ளே தனது துணையாம் தாயார் மஹாலக்ஷ்மியுடன் உறங்கிக் கிடப்பவனும், இந்தச் சீரிய சிங்கமே !

    மாரி - நமது மனதை மூடிக்கிடக்கும் அகந்தை மமதையெனும் இருளை நீக்கும் விதத்தில் மறைகளும் அதன் அங்கமாய் விளங்கும் உபநிடதங்களும், இறைஞான இரகசியங்களை மழை போலப் பொழிகின்றன.

    மலை முழைஞ்சில் - இவ்விடம் அடியார் இதயகமலக் குகை . மன்னிக் கிடந்து உறங்கும் - அந்தர்யாமியாய் எல்லாவற்றிலும் உறையும் இறைவன். அகந்தை மமதை என்ற இருள் சூழ்ந்திருக்கும் நம் இதய குகையில், இறைஞானம் ஏற்படும்போது தெரிகின்ற ஒளியால் அவ்விடம் குடிகொண்டுள்ள இறைவனும் இறைவியும் நம் அகக்கண்களுக்குப் புலப்படுவார்கள்.

    மன்னி என்றால் எங்கும் வியாபித்து இருப்பவன் என்றும் பொருள். இறைவன் ஒருவனே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் அல்லவா ? தூணிலும் துரும்பிலும் இருக்கிறானா என்றதும் அது உண்மைதான் என்னும்படியாக வெளிப்பட்டான் ? ஆகவே அவன் 'மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கமே !' எவ்விடமும் நீக்கமற வியாபித்திருக்கும் பரம்பொருளானது, அடியவர் இதயமாகிய குகையிலும் அந்தர்யாமியாக உறைந்திருக்கிறது.

    அறிவுற்றுத் தீ விழித்து - தனது பக்தனுக்கு உதவும்பொருட்டு நரசிங்கமாக வந்த தருணத்தில், அவனது பிராட்டி கூட அருகில் செல்ல முடியாதபடி வெகு சினத்தோடும், வேகத்தோடும் இருந்தானல்லவா ? ஆகையினால் தீவிழித்து என்ற சொல்லாடல். ஆயினும் அந்தத் தீயானது, அவனது பக்தன் பிரகலாதனுக்கு அச்சத்தை ஊட்டவில்லை, இறை தரிசன விளக்கொளியாகவே தெரிந்தது.

    உட்பொருள்,அந்த இறைவனின் அருளால் ஆத்ம ஞானம் கைவரப் பெறுதல். அடியாரது மனக்குகையில் இருக்கின்ற இறைவனாம் அந்த நரசிம்மனுடைய அருளால் தான் மெய்யான ஆத்ம ஞானம் அடைய முடியும் என்பது வைணவர் நெறி. ஆகவே தான் விசிஷ்டாத்வைத விற்பன்னரும் , திருப்பாவை ஜீயருமான இராமானுசர், 74 வைணவ பீடாதிபதிகளை, ஆச்சார்ய பெருமக்களை நியமித்து, அவர்களுக்கு லக்ஷ்மி நரஸிம்ம முத்திரையைக் கொடுத்து வைணவத்தைப் பரப்பும்படி அறிவுறுத்தினார்.

    பூவைப்பூ வண்ணா
    - இறையருளால் ஆத்மஞானம் என்ற மலர் மனதிலே மலரப் பெற்ற அடியவர். வேரிமயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி - தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் அனுதினக் கடமைகளை செய்து
    இங்ஙனே போந்தருளி - தம்முடைய ஆச்சார்யர்கள் காட்டிய சரணாகதி வழியில் சென்று. உன் கோயில்நின்று - தமக்குள்ளே குடிகொண்ட இறைவனைக் கண்ட அடியவர்

    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு- ஆசான் வழிகாட்டலோடு சரணாகதம் செய்து, இறைத்தொண்டில் நீங்காது வாழ்ந்ததன் பயனாய், இறைவனது திருவடி சேரப் புறப்பட்டு .

    கோப்புடைய சீரிய சிங்கா சனத்துஇருந்து - பேரானந்த நிலையை(வைகுண்டம்) அடைந்து பரமன் பணி செய்யும் பேறுற்று(கைங்கர்யம்). எங்கள் எண்ணத்தைக் கருணை கூர்ந்து ஆராய்ந்து நிறைவேற்றி - சரணாகத மார்க்கத்தால் உயர்வடையும் அடியார், தனியாகச் செய்யாமல், மற்ற அடியார்களுக்கும் தான் பெற்ற இறைப்பேறு கிட்டுமாற்போல, அவரோடு கூட்டாகப் பரமனைப் பணிந்து பாடித் தொழுது, வீடுபேறு அடைய வேண்டும்.

    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போருமா போலேநீ பூவைப்பூ வண்ணா - இலக்ஷ்மி நிருஸிம்மனின் அருளால், இறைஞானம் கைவரப்பெற்ற அடியார், தன்னுடைய கடமைகளை இகவுலகில் செவ்வனே நிறைவேற்றியபின், அது பற்றி எந்த அகந்தையும் கொள்ளாமல், வைணவ அடியார் மங்கள வாத்தியங்களை முழங்க மிகுந்த கம்பீரத்துடன் வைகுண்டத்திற்குச் சென்று, அங்கே இருக்கும் இறைவனது பெருமைகளைப் பணிந்து பாடி இறைத்தொண்டு செய்வார்.
    கோயில்நின்று இங்ஙனே போந்தருளி- தன்னுடைய இதயமென்னும் கோயிலில் இதுவரை ஆண்டவனைக் கண்டு இன்புற்ற அடியார், இனி அவனுடனே என்றும் நிலைத்து இருக்கக்கூடிய ஆனந்த நிலையாம், வைகுண்டத்திற்குச் செல்லப் புறப்படுவார்.

    கோப்புடைய சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருள்
    .- அப்படிச் சேர்ந்த அடியவர், அவ்விடமிருந்தும் கூட்டாக இறைவன் பெயரைப் பாடிப்பணிந்து சரணாகதி செய்கின்ற தன்னுடைய சக அடியவர்களுக்கு அந்த வீடுபேறு கிடைப்பதற்கு அருள் செய்யவேண்டுமென்று இறைவனை வேண்டி பிறருக்கும் உதவுவார், என்பது உட்பொருள்.
     
    periamma likes this.
  4. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நரசிம்ஹ அவதாரம் எதற்கு?ஹிரண்யக சிபுவை வதம்
    செய்யவோ அல்லது ப்ரஹ்லாதனை ரக்ஷிக்கவோ அல்ல.குழந்தையின் வாக்கைக் காக்க,தன சர்வ வ்யாபித்துவத்தை நிலை நாட்டவே இந்த அவதாரம்.
    நரசிம்ம அவதாரத்தில் அநேக புதுமைகள்.
    சங்கையும் சக்கரத்தையும் கையில் ஏந்திக்கொண்டு எவ்வளவு நாள் இருப்பது?அந்த ஆயுதங்களையும் ஐந்து நகங்களாக மாற்றிக் கொண்டார்.

    சர்வ லோகத்துக்கும் பிதாமகர் பிரம்மதேவர்.அவருக்கே ஒரு பாட்டி வந்து விட்டாள் நரசிம்ம அவதாரத்தில்.ப்ரம்மா விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர்.எனவே விஷ்ணுவின் புதல்வர்.நரசிம்மத்தைத் தாங்கிய தூண் விஷ்ணுவைப் பெற்றவள் ப்ரம்மாவின் பாட்டி ஆகிறாள்.

    விஷ்ணு சஹஸ்ர நாமம் கிருஷ்ணனின் எதிரிலேயே வியாசரால் சொல்லப்படுகிறது.முதலில் பேசப் படுவது நரசிம்ம அவதாரமே.'

    நரசிம்ம; வபு;ஸ்ரீமான் கேசவ; புருஷோத்தம;"

    :கோதை வாரணமாயிரத்தில் தான் கனவு கண்டத்தைச் சொல்லும்போது 'கோளரி மாதவன் 'என்றும், பொரி எடுத்து லாஜ ஹோமம் பண்ணும்போது தன காய் பிடித்தவன் அரி முகனான நரசிம்மனே என்கிறாள்.
    அறிமுகம் அச்சுதன் கைமேல் என்கை வைத்து
    பொரி முகந்தட்ட கனா கண்டேன் தோழி நான்'
    ஆண்டாள் கண்ணனை நரசிம்மனாகவே காண்கிறாள்.
    அழகிய சிங்கனாயிற்றே!

    ராமாவதாரம் நிகழ்ந்து 39 வருடம் கழித்து ராவண வதம்.ஆனால் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த அக்கணமே ஹிரண்யக சிபு வதம் நிகழ்கிறது.கலி காலத்தில் கை மேல் பலன் கிடைக்க நரசிம்ம உபாசனை தேவை.
    ஜெயசாலா 42
     
    periamma likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    வேடிக்கை தான் !
    நன்றாகச் சொன்னீர்கள் !
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    "அறிவுற்றுத் தீ விழித்து - தனது பக்தனுக்கு உதவும்பொருட்டு நரசிங்கமாக வந்த தருணத்தில், அவனது பிராட்டி கூட அருகில் செல்ல முடியாதபடி வெகு சினத்தோடும், வேகத்தோடும் இருந்தானல்லவா ? ஆகையினால் தீவிழித்து என்ற சொல்லாடல். ஆயினும் அந்தத் தீயானது, அவனது பக்தன் பிரகலாதனுக்கு அச்சத்தை ஊட்டவில்லை, இறை தரிசன விளக்கொளியாகவே தெரிந்தது."

    தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா
    உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா
    என்ற பாட்டு நினைவுக்கு வந்தது.மற்றவர்களுக்கு அது தீ .பக்தனுக்கு வழி காட்டும் ஒளி
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பாரதியின் வரிகளை இவ்விடம் இணைத்தது அருமையான கோணம், பெரியம்மா ! ஆம் ! பக்த்தனுக்கு இறைவனின் கோபமும் அன்பின் வெளிப்பாடாகவேத் தெரியும் !
     

Share This Page