1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (21) ஏற்ற கலங்கள் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 5, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    21) ஆண்டாள் பாடல் (கண்ணனின் அருங்குணங்களைப் போற்றிப் பாடுதல்)

    ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
    ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
    மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
    ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


    பாசுரப் பொருளுரை

    "கறக்கின்ற பாலால் பாத்திரம் நிரம்பி ,அடுத்த பாத்திரத்தை எடுக்கும் முன்னமே, பொங்கிவழியுமளவு , வள்ளலைப் போன்று, பாலைச் சுரக்கும் பெரும்பசுக்கள் ஏராளம் உடைய நந்தகோபனின் திருமகனே! தூக்கத்திலிருந்து விழித்தெழுவாய் ! வலிமையும், கருணையும் ஒருசேரக் கொண்டவனே! மிக்க பெருமை வாய்ந்தவனே! பூமியில் அவதாரமெடுத்த, ஒளிமிக்க வடிவம் கொண்டவனே! எழுந்திருப்பாயாக!
    உன் வலிமையினைக் கண்டவுடன் தங்கள் வலிமையை இழந்து,உன் திருமாளிகை வாசலே கதியென்று வந்து உன் திருவடிகளில் சரணடையும் பகைவர்களைப் போல, உன்னைப் போற்றித் துதி பாடிய வண்ணம் நாங்கள் வந்துள்ளோம்! அருள் புரிவாயாக! "

    பாசுரக் குறிப்பு

    5 X 5 + 5 இல் இறை அடியவர் விரும்புவதைக் கேட்கும் நிலைக்குக் கண்ணணைத் தயார் செய்யும் படியாக அமைந்த ஐந்தாம் 5 இன் தொடக்கம். முந்தைய 3 பாசுரங்களால் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினர் கோபிகைகளான ஆண்டாளும் அவள் தோழியர்களும். இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியரோடு நப்பின்னையும் சேர்ந்து கொள்கிறாள். பரமனை எழுப்பி கோபியரின் கோரிக்கையை அவனிடம் எடுத்துச் சொல்லி பரிந்துரைக்க சரியான சமயம் வேண்டித் தான் காத்திருந்ததை நப்பின்னை கோபியரிடம் தெளிவுபடுத்துகிறாள். அதன் காரணமாக மிகுந்த உற்சாகமுடன் இப்பாசுரத்தால் கண்ணனை எழுப்புகின்றனர்,ஆண்டாள் குழுவினர் !

    ஆச்சார்யனையும், பிராட்டியையும் சரணடைந்து அவர்களின் பரிபூரண அருள் பெற்ற பின்னரும், ஒரு வைணவ அடியவருக்கு பரமன் உள்ளம் வைத்தால் மட்டுமே வீடுபேறு வாய்க்கும். அதை நன்கு உணர்ந்த அடியாரின் சரணாகதித்துவம் இப்பாசுரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இறைவனது அருங்குணநலங்களைப் போற்றிப் பணியும் பாசுரம்.ஒரு நல்ல ஆச்சார்யருக்கும் அவரது சிறந்த சீடருக்குமான உயர்ந்த உறவை இப்பாசுரம் சொல்கின்றது.

    அவதார பஞ்சகத்தின் அனைத்து நிலைகளும் இப்பாசுரத்தில் குறிக்கப்படுகின்றன.

    ஊற்றம் உடையாய் - பரவாசுதேவனாக, அவனது படைக்கும் தொழிலை போற்றும் உட்குறிப்பாம்.
    பெரியாய் - பரமனது 4 வியூகத் தோற்ற நிலைகளை குறிக்கிறது.
    உலகினில் - ஸ்ரீராமன், கிருஷணன் என்று பரமன் எடுத்த விபவ அவதாரங்களைச் சொல்கிறது.
    தோற்றமாய் நின்ற - இப்பூலவுலகில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில்,கோவில்களில் பரமன் அர்ச்சாவதார (சிலை வடிவம்) நாயகனாக அருள் பாலிப்பதைக் குறிக்கிறது.
    சுடரே - பரமன் ஒளி வடிவில் அந்தர்யாமியாக(எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) ஜீவாத்மாக்களில் இருப்பதைக் குறிக்கிறது.

    இப்பாசுரத்திற்கு விளக்கமளிக்கும் வைணவநெறி அறிஞர்கள், உடையவர் எனப்படும் இராமானுஜருக்கு முன்னும் பின்னுமான அவர்களது குருபரம்பரையின் பெருமையை ஏற்றிச் சொல்கிறார்கள். வைணவ குருபரம்பரையின் 4 தலைமுறைகளைக் குறிக்கிறார்கள் . 'ஏற்ற கலங்கள்' முதல் தலைமுறையையும், 'வள்ளல் பெரும்பசுக்கள்' இரண்டாம் தலைமுறையையும், 'ஆற்றப்படைத்தான்' மூன்றாம் தலைமுறையையும், 'மகனே' நான்காம் தலைமுறையையும் குறிப்பில் உணர்த்துவதாம். தம்முடைய ஆசிரியர்களான பூர்வாச்சார்யர்கள் பரமனைப் பற்றிய செய்திகளை, மறைகூறும் உண்மைகளை எவ்வாறு எடுத்துச் சொல்லி விளக்கினார்களோ, அதிலிருந்து சற்றும் மாறாமல், தூய்மையான இறைஞானத்தைத் தமக்கு அடுத்தடுத்து வருகின்ற அடியார்களுக்கு, (பின்னாளில் அவ்வடியாரே ஆச்சார்யர் - இதுவே வைணவ குருபரம்பரை) நல்லச்சார்யரானவர் அறிவுறுத்துகிறார். அப்பேர்ப்பட்ட ஆச்சார்யரைப் பணிந்து இறைவன் திருவடியில் சரணம் செய்யும் அடியார்கள் வீடுபேறு அடைவார்கள் என்பது கருத்து.
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    எடுத்தப் பாத்திரத்தில் கறக்கும் பாலதுவும்
    அடுத்தப் பாத்திரத்தை மாற்றும் முன்னமே
    நொடிக்குள் பொங்கி வழிந்து போமளவும்
    கொடுத்துச் சலிக்காத வள்ளலைப் போன்றே
    கொடைப் பசுச்செல்வம் நிறைந்த நந்தகோபன்
    இடையர் குலத்தரசன் திருமகனே, கண்ணா!
    விடிந்தது பொழுது,உறக்கம் கலைத்திடுவாய் !
    அடி பணிந்தேயுனைச் சேர்வோர் குறைகளைக் ,
    கடிந்து கொள்ளாமல் அவர்களைக் காப்பதில்
    நொடிப் பொழுதும் வழுவாதக் கருத்துடைய
    நெடுங் கருணைப் பொழிப் பெருந்தகையே,
    அடங்கா ஆற்றல் படைத்தோனே,அனைத்தையும்
    படைத்திட்டப் பெருஞ் சுடரே-விழித்திடுவாய் !
    அடுத்துனை எதிர்ப்பவர் தம் பலங்குன்றித்
    தடுமாறிப் படியேறியுன் திருவடி தம்மைப்
    பிடித்திடும் வகையாய் மாறுதல் போல்
    அடியவர் நாங்களுன் திருவடிகள் நன்றேப்
    படிந்து புகழைப் பாடுகிறோம்,அருளிடுவாய் !

    ஏற்ற கலங்கள் மாற்றாதே- கறந்து கொண்டிருக்கிற பாத்திரத்தை மாற்றுவதற்குள் , எதிர் பொங்கி மீதளிப்ப - பாலானது நிரம்பிக் கீழ் வழிகிறது
    வள்ளல் பெரும் பசுக்கள் = பாலை வாரி வழங்கும் பெருமடி ஆவினங்கள்., முல்லைநிலச் செல்வம், ஆற்றப் படைத்தான் மகனே- இவற்றை ஆளும் நந்தகோபன் மகனே !

    பாத்திரத்தை என்னதான் மாற்றி மாற்றி வைத்தாலும், கறப்பவர்களுக்குத் தான் களைப்பேற்படும், பசுக்கள் பால் சொரிவதை நிறுத்தாதாம் ! அவ்வளவு செல்வநிலை,நந்தகோபனுடையது. இராஜகோபாலனுக்குத் தந்தையல்லவா அவன் ? எத்தனையோ பாத்திரங்களில் பாலினைக் கறந்தாலும், அவை எல்லாம் நிரம்பி வழிகின்ற அளவில், கறப்பவர்களுக்கு ஏமாற்றமளிக்காத வகையில், வழிய வழியப் பாலைச் சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள் நிறைய உடையவரான நந்தகோபரின் மகனே ! என்கிறாள்.

    பாலினைக் குறைவின்றிப் பொழிவது பசுவின் குற்றமில்லை. அதை நிரப்பிக் கொள்ளும் வகையில் பாத்திரங்கள் இல்லாமல் போவதே குறை. இறைவனும் அப்படிப்பட்ட வள்ளல் பெரும்பசு தான் ! தனது கருணை என்னும் அருட்பாலினைத் தொடர்ந்து பொழிகின்ற வள்ளல் அவன். ஆயினும் ஆண்டானது அன்பை, அருளை தாங்கிக்கொள்ளும், நிரப்பிக்கொள்ளும் அளவிற்கான சீவாத்மாக்கள் என்னும் பாத்திரங்கள், 'ஏற்றமுடைய கலங்கள்' மிகவும் குறைவாகவே இருக்கின்றன. எல்லோருக்கும் வழங்கும் பேசுவாய் இருக்கும் இறைவனைத் தமது புலன்களை, மனதை ஒருமுகப்படுத்தி அனுபவிக்கத் தவறுதல் நம் துரதிர்ஷ்டமே !

    இறைவனைப் பணிந்து அன்புடன் பக்தி செய்யும் அடியவர்களின் மனமே 'ஏற்ற கலங்கள்' அதாவது இறைவன் எனும் அமுதப்பால் நிறைவதற்கு ஏற்ற கலங்கள் ! நல்லமனத்தில் பக்தியிருந்தால், இறைவன் எந்த வேறுபாடும் கருதாமல் அவ்விடம் நிறைவான. இதில் உயர்வு தாழ்வில்லை. பக்தியிலேது சிறிதும்,பெரிதும் ? எல்லாமே பூரணம் தான். அதிகளவு தான்.

    ஆற்றப் படைத்தான்- "நீயே இறைவனாய் இருந்த போதிலும், ஆயர்குலத்தினரிடையே எங்களால் அனுபவிக்கக் கூடிய வகையில் தோன்றியிருக்கிறாயே கண்ணா, இது உன் நீர்மைத் தன்மைக்கு, எளிமைத் தன்மைக்கு ஆதாரமாகவுள்ளது !" என்கிறாள் ஆண்டாள். சீவர்களின் மேல் மிகுந்த அன்புடைய ஆண்டவா ! அவர்களுக்காகப் பெருந்தன்மையோடு உன்னிலையினின்று கீழிறிங்கி வரக்கூடிய ஆற்றலும் அருங்குணமும் கொண்டவனே ! இது இறைவனுடைய வாத்ஸல்யம்,ஸ்வாமித்வம்,ஸௌலப்யம் ,ஸௌஸீல்யம் என்னும் குணங்களைக் குறிக்கும்.

    அறிவுறாய் - இப்படிப்பட்ட செல்வமிருப்பதால், சோம்பலாக இன்னும் துயிலெழாமலிருக்கிறாயா ? எத்தனை செல்வமிருந்தாலும், அவற்றுக்கு உரியவனாக நீ துயிலெழுந்து அவற்றைக் காக்கவும், பெருக்கவும் செய்யாவிட்டால் அவையாவும் குன்றி அழிந்துபோய்விடுமென்று உனக்குத் தெரியாதா ? அறிவு பெறுவாய் என்று ஆண்டவனுக்கே அறிவுறுத்தும் ஆற்றல் ஆண்டாளுக்குத் தானுண்டு ! இறைவன் படைத்த சீவர்களென்னும் செல்வத்தினைக் காக்கும் பொறுப்பும் இறைவனுக்குத் தானே உண்டு ? அதைச் செய்வாயாக எனச் சொல்கிறாள். "உன்னுடைய அருளென்னும் பாலைப் பெறும் 'ஏற்ற கலங்களாக ' நாங்கள் இல்லாமல் போனாலும், எங்களது குற்றத்தைப் பொறுத்து மன்னிக்கும் சுபாவமுடைய இறைவா, எங்களைப் படைத்த நீதானே எங்களைக் காத்து ஆட்கொள்ள வேண்டும் ? எனவே உன் கருணைப் பார்வையைத் தருவாயாக !" என்கிறாள் ஆண்டாள்.

    ஊற்றம் உடையாய் -காக்கும் கருத்து உடைய பரமன். படைத்தல்,காத்தல்,மறைத்தல்,அருளல்,அழித்தல் என்ற தன்னுடைய மாயங்களைச் செய்வதில் ஊக்கமும்,உற்சாகமும் உடையவன். தன்னைச் சரணடைந்தவரைக் காப்பதில்,எந்தவிதத் தடையையும் புறந்தள்ளி,செயல்படுவதற்கு ஒரு சிறிதும் தயங்காத மனவுறுதி உடையவன்,இறைவன். இவ்விடம் விபீடண சரணாகதியை நினைவு கொள்ளுவது சாலச் சிறந்தது.


    பெரியாய்- தயையும் வலிமையும் ஒரு சேர அமைந்த பரமன். வேதங்கள் மிகப் பெரியவை. காலத்தினால் உணரும் முதலும் முடிவும் அற்றவை. அவற்றைக் காட்டிலும் ஆதியந்தமில்லாத பெரியவன் இறைவன். வேதத்தினைத் தன் சுவாசமாகக் கொண்டவன். எப்படியிருப்பினும்,அவனது அடியவர்களால் அடையக்கூடிய வகையில் எளிமையானவனாக, சௌலப்பியத்துடன் இருக்கக் கூடிய பெரிய அதிசயக்காரன்,மாயன்,இறைவன் !

    உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
    - உலகத் தோற்றத்துக்குக் காரணமாக நின்ற தனிப் பெரும் ஜோதி. எல்லா நிலையிலும் ஆண்டவன் இருந்தாலும், நம் உடலுக்குள் சோதி வடிவில் தங்கி நமது செயல்களையெல்லாம் சாக்ஷிபூதனாய்,மௌனமாய் நோக்கிக் கொண்டிருக்கிறான். நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு,ஒன்று மனசாட்சி,ஒன்று தெய்வத்தின் சாட்சியன்றோ ?

    ஜோதி வடிவானது மாசு,கறைகளற்றது. இறைவனும் அப்படியே. இந்தத் தீய குணங்களும் தன்னிடமில்லாத அப்பழுக்கற்ற தன்மையன். இறைவன் எத்தனையோ விபவ அவதாரங்களையெடுத்தாலும், இகவுலகில் வந்து பிறந்தாலும், பிறப்பிறப்பிலேயே கிடந்து உழலும் சாதாரண சீவாத்மாக்களுக்கு ஏற்படும் குற்றங்குறைகள் , பாவங்கள் எதுவும் அவனைத் தீண்டுவதில்லை. தீய எண்ணங்களுக்கு அவன் தீயானவன் ஆதலால் அவன் சுடராகிறான். எங்குள்ளான் எங்குள்ளான் என்று அவனை எங்கும் தேடத் தேவையில்லை, இறைவன் நம்மெல்லாருள்ளும் இருக்கிறான். அதுவே அந்தர்யாமித்வம்.சுடராக ஒளிர்வது நம் எல்லோருடைய மனதிலும் தான். அருட்பெரும் சோதி,தனிப் பெருங்கருணை. ஆதியந்தமிலா அருட்பெருஞ்சோதி,பரஞ்சோதி !

    மாற்றார்- எதிரிகள், வலி தொலைந்து - தங்கள் வலிமையிழந்து ,ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே- மனமாற்றத்துடன் உன்னிடம் வந்து பணிவர்
    போற்றியாம் வந்தோம்- உன் அடியவர்களான நாங்களும் உன்னையேப் போற்றிப் பணிகின்றோம்.
    மாற்றார் உனக்கு வலி தொலைந்து;ஆற்றாது வந்து உன் அடி போற்றியாம் வந்தோம்- இறைவனை எதிர்ப்பவர்கள் அவன் மறத்தின் முன் தோற்று அவனடிக்கீழ் வந்தடைந்தார்கள் . இறைநெறியாளர்களோ , அவனது அறத்தின் அருமைக்கும் பெருமைக்கும் தோற்று வந்து சேர்ந்தார்கள். இறைவனுக்கு எதிரிகளிருக்க முடியுமா ? அவனது அடியார்களுக்குத் துன்பமிழைப்பவர்களே இறைவனுக்குப் பகையாளர்கள். தன்னை இகழ்வதைப் பொறுத்துக்கொள்ளும் இறைவன்,தன்னுடைய பக்தனை இகழ்வதைப் பொறான், தீங்கிழைத்தவரை நிச்சயம் தண்டிப்பான் என்பது காலங்காலமாய் இருக்கும் நம்பிக்கையல்லவா ? தெய்வம் நின்று கொல்லுமல்லவா ?
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம் - உட்பொருள்

    கருமவினைப் பயனால் பிறவி எடுத்தவர்கள்
    தரும நெறிக்கெதிராய் செய்கைகள் செய்யும்
    கரிய குணங்களை நீக்கிப் புறந்தள்ளிப்
    அருளைப் பொழிந்து ஈடேற்றம் தருகின்ற
    பிரமமது என்றும் ஒன்றேயெனத் தெளிந்து,
    சரணமெனத் தன்னை அடையும் சீவர்களின்
    பெரிய பாவங்களை மன்னித்து ஏற்கின்றக்
    கருணை உடையவனாம் இறைவன் அவனுமே,
    அருளும் நிலைகளோர் உயர்ந்த ஐந்தாகும் !
    பரத்தில் மூலமாய் உறையும் நிலையொன்று,
    கரத்தில் ஆயுதங்களேற்று நான்காம் தன்
    உரிய தொழில்களைச் செய்யும் நிலையொன்று,
    உருவம் கொண்டொரு அவதாரமென நமக்கு
    இரங்கி மண்ணுலகில் இறங்கும் நிலையொன்று,
    வரித்து உருவத்தைக் கற்களில் செதுக்கிவிடின்,
    பரிந்து கோவிலுறைச் சிலையின் நிலையொன்று,
    அருவமாய் மனதில் ஒளிரும் நிலையொன்று,
    அருமையான இந்நிலைகள் ஐந்திலும் -தங்கி
    இருக்கும் ஒன்றேயாம் இறைவன் என்கின்றப்
    பரமனவன் குறித்துப் பலவாய் மறைகளவை
    விரித்துக் கூறுவதை அறிந்துள்ள ஆசன்மார்,
    அரியவாம் அவற்றைத் தமக்கு முன்னிருந்த
    பெரிய ஆசன்மார் விளக்கமாய்ச் சொன்னபடி,
    இருக்கும் உண்மையினைச் சற்றும் மாற்றாமல்,
    கருணை உள்ளத்துடன் தமக்குச நற்சீடரென
    அரிய திறமையுடன் வாய்த்துள்ள அடியவர்க்கு,
    புரியும் வகையிலே எடுத்துச் சொல்கின்றார் !
    பரமனைப் பற்றி நான்மறைகள் சொல்கின்ற
    கருத்தில் வேற்றுமை கொண்ட மாற்றாரை,
    அரும்பெரும் இறைஞான விளக்கங்கள் மூலம்
    உரிய வாதத்தில் எதிர்வென்று புகழ்சூடி
    அருமையாய் இறைநெறியை நிலை நாட்டிச்
    சரண மார்கத்தை நமக்கெலாம் காட்டியருள்
    புரியும் ஆசானைப் பணிந்து போற்றிடுவோம் !
     
    periamma likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மாற்றார் வலி தொலைந்து - பூவுலகில் பிறவியெடுத்த உயிர்கள் தம்முடைய புற அழகுளிலும் ,செல்வத்திலும், மெய்ஞானம் அடையாத் தன்மையினாலும் அகந்தை, உலகப்பற்று, பொறாமை, தீய நட்பு என்று அறநெறிக்குப் புறம்பான செயல்களைச் செய்வதிலிருந்து நீங்கித் தீயகுணங்களைத் துறந்து. அடி பணியுமாப் போலே போற்றி - பரமனுக்குப் பல்லாண்டு பாடிப் பணிந்து சரணம் செய்தல்.

    எல்லா சீவர்களுமே பரமாத்மாவின் தொண்டில் ஈடுபடுவதே இயல்பாக இருக்க, எப்படி இறைவனுக்கும் எதிரிகள் இருக்க முடியும் ? அதுதான் இகவுலகத்தின் மாயை ! அதுவும் இறைவன் திருவிளையாடல் ! தன்னை மறந்து, இறைவனையும் மறந்து அகந்தை,மமதையின் பிடியில் சிக்கிய சீவர்கள், எல்லாமே தம்மால் தான் நடக்கின்றன என்ற பொய்யான நம்பிக்கையில், இறைவனுக்கு எதிராய், வழி மாறி நடப்பதால், அவர்களே எதிரிகளாய் 'மாற்றார்'களாய் ஆகின்றனர். அப்படி வழிதவறிய சீவர்களையும் தண்டிக்காமல்,மனம் திருத்தித் தன்னடிக் கீழ் கொண்டு வருவதே இறைவனின் குணம்.

    இறைநெறியை ஏற்காதவர்கள், இறைநெறிக்குள்ளிருந்தும்,நல்லவர்களைக் குறை சொல்லுபவர்கள்,வேத சாத்திரங்களைத் தவறாகப் பொருளுணர்ந்து நன்னெறியாளர்களை எதிர்க்கும் தர்க்கவாதிகளை,ஆச்சார்யர்கள் உரிய விளக்கங்கள் மூலம் வெல்லுதல் என்று பொருள் சொல்லுகிறார்கள்,வைணவ குருபரம்பரையினர்.மாற்றார் வலி தொலைந்து அடி பணிய - பரந்தாமனே பரமாத்மா என்று ஏற்றுக் கொள்ளாத மற்றவர்களின் அடிப்படை வாதப் பிரமானங்களைத் தகுந்த விளக்கங்கள் மூலம் தகர்த்து, அவரையும் பரமன் அடியாராக மாற்றுவது. ஆக மத மாற்றம்? !

    உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியும் - இறைவனது குணங்களால் கவரப்பட்டுப் பரமனே உபாயமும் (வழி) உபேயமும் (பயன்-பலன்- அதாவது முக்தி- மோக்ஷம்-வீடுபேறு ! ) என்றுணர்ந்து அவன் திருவடிகளில் சரண் புகுதல் .

    சீதையைத் துன்புறுத்திய காகாசுரன், இராமன் விடுத்த பிரம்மாஸ்திரத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அனைத்து உலகத்திற்கும்சென்று பலரிடம் உதவி வேண்டியும் காப்பாற்றுவார் இல்லாமல் போக, இறுதியில் இராமனின் காலடியிலேயே விழுந்து மன்னிப்புப் பெற்றதைக் காண்கிறோமல்லவா ?
    அதுபோலத்தான் இறைவனை எதிர்ப்போர்களும், இறுதியில் அவனது திருவடியிலேயே சரணம் செய்து தமது பாவங்களைப் போக்கிக் கொள்வார்கள். இல்லையேல், இறுதி வரை இறுமாப்புடன் இருந்த இராவணனைப் போல் இறைவனால் மறவருள் செய்யப்படுவார்கள்.

    ஊற்றம் உடையாய் - பர(த்துவ) வாசுதேவனாகப் போற்றுதல் பெரியாய் - பரமனது 4 வியூகத் தோற்ற நிலைகளை குறிக்கிறது. இறைவன் தன்னைச் சரணடைந்தவர்களின் குணக்கேடுகளைப் பொருட்படுத்துவதில்லை, அவற்றையெப்படிக் களையலாம் என்பதில் கவனமாக இருக்கிறான். அச்செயல் புரிவதில் ஊக்கத்தோடு உள்ளான்.அதில் வெற்றியும் பெற்று உற்சாகமும் அடைகிறான்.

    உலகினில் - இராமன், கண்ணன், வாமனன், நரசிம்மன் என்று பரமன் எடுத்த பூவுலக,விபவ அவதாரங்களைச் சொல்கிறது. மண்ணில் பிறந்த எல்லோராலும் பரவுலகப் பரம்பொருளைக் காண முடியுமா ? அவர்கள் மீதில் கருணை கொண்டே அந்தப் பரம்பொருள் தன் நிலைநீங்கி அவதாரம் செய்து, சீவர்களைக் காணத் தானே இகவுலகு வருகின்றது. இது இறைவனின் பெருந்தன்மையைக் காட்டுகின்றது.

    தோற்றமாய் நின்ற - இப்பூலவுலகில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில், பரமன் அர்ச்சாவதார (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) நாயகனாக அருள் பாலிப்பதைக் குறிக்கிறது. விபவ அவதாரங்களாய் வந்த காலத்திலிருந்து நாம் வாழும் காலம் எவ்வளவு தள்ளி வந்து விட்டது. இராமனையும்,கண்ணனையும் கண்ணால் காணும் பேற்றை நாம் பெறவில்லையே ! நமக்காகவே, அந்தக் கூறிய தீர்ப்பதற்குத் தான் கோவில்களும்,கற்றளிகளும் ஆங்காங்கே எழுந்திருக்கின்றனவே ! அவற்றில் கல்லாய் சமைந்து அருள் புரியும் இறைவனைக் கண்ணாரக் கண்டும்,வாயாரப் பாடியும்,மனத்தினால் தொழுதும் இன்பமடையலாமே !

    சுடரே - பரமன் ஒளி வடிவில் அந்தர்யாமியாக(எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) ஜீவாத்மாக்களில் இருப்பதைக் குறிக்கிறது. சரி,வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல முடியவில்லையா ? கவலையில்லை. சற்றே மனதை ஒருநிலைப் படுத்தி உள்ளே ஆழ்ந்தால், மௌனத்தில் அமர்ந்தால், சோதி வடிவில் நமக்கு காட்சி தருகிறதே, அதுவே இறையன்றோ ? இதைவிட எளிமையாய் இறையனுபவம் வாய்க்குமா ? நமக்குள்ளேயே, நாமிருக்கும் இடத்திலேயே,நமக்காகவே நிறைந்திருக்கும் இறைத்தன்மையைக் கொண்டாடலாமே !

    போற்றியாம் வந்தோம் புகழ்ந்து - அடியவர் போற்றிப் புகழக் கூடிய இறைவன் குணநலங்கள்
    ஒருவரது பாவ புண்ணியங்களைக் கருதாமல், நிறை குறைகளைப் பொருட்படுத்தாமல் , இறைவன் தன்னுடைய அடியவர் மீதில் கொண்டுள்ள, சீவர்களின் மீது கொண்டுள்ள, அன்பு- வாத்ஸல்யம்

    அவனே அனைத்திலும் பெரியவன் என்றும்,அனைத்தையும் செய்பவன் என்னும், சீவர்களைக் காப்பதில் வெற்றி பெறுபவன் என்றுமான இறைவனுடைய ஆளுமைத்தன்மை, ஆண்டவத்தன்மை-ஸ்வாமித்வம்

    இப்படிப்பட்ட இறைவன் மீதிலிருந்து கவனத்தை எடுக்க முடியாமல் அடியவர்களைக் கவர்ந்திழுக்கும் அழகுத்தன்மை - ஸௌஸீல்யம்

    எவ்வளவோ பெருங்குணங்கள் இருப்பினும், அடியவர்கள் கண்டு தொழும்படியாக, வழிபாட்டுத் தலங்களில் சிலைவடிவத்திலும், மனத்துள் சுடராகவும் இருக்கும் எளிமைத்தன்மை- ஸௌலப்யம்

    ஏற்ற கலங்கள் - இறைவனது கருணையினைக் குறைவின்றி 'ஏற்றுக் கொண்ட பாத்திரர்களான பூர்வாச்சார்யர்கள், முதல் தலைமுறையினர்,
    வள்ளல் பெரும்பசுக்கள்- முதல் தலைமுறை ஆச்சார்யர்களால் உருவாக்கப்பட்ட, தங்களுடைய ஆச்சர்யர்களை விஞ்சும் படியாக ' எதிர் பொங்கி மீதளிப்ப' இறைஞானத்தைப் பொழியும், இரண்டாம் தலைமுறை ஆச்சார்யர்கள்
    ஆற்றப்படைத்தான்- இறந்தான் தலைமுறை ஆச்சார்யர்களால் மாற்றாமல் இறைஞானம் ஊட்டப்பெற்ற, அதைப் பெற்றுக்கொள்ளும் ஆற்றலுடைய மூன்றாம் தலைமுறை ஆச்சார்யர்கள் , மகனே- அடுத்தடுத்து வரும் வைணவ ஆச்சார்யர்கள். இவர்கள் யாவரும் இறைஞான விளக்கத்தை, மிகவும் தூய்மையாக, எந்தக் கலப்படமுமின்றி, தமக்கு முன்னிருந்த பெரியோர்கள் சொல்லியபடி அடுத்தடுத்தத் தலை முறையினருக்கு எடுத்துச் சொல்கிறார்கள் என்பது குரு பரம்பரையினர் விளக்கம்.

    மாற்றாதே பால் சொரியும்
    - பால் வெண்மைக்கும் தூய்மைக்குமான மேன்மையான அடையாளம். இங்கே பாலாவது, கலப்படமற்ற இறைஞானமே ! சீடர்கள் தங்கள் பகவத் (பரமன்)பாகவத(அடியவர் ) அனுபவங்களையும், ஞானத்தையும் மிகத் தாராளமாக, அதே சமயம் தங்கள் ஆச்சார்ய உபதேசங்களோடு ஒத்துப் போகும் வகையில், தூய்மையாகப் பகிர்ந்து கொள்ளும் தன்மையைக் குறிப்பில் உணர்த்துகிறது.

    உடையவர் இராமானுஜர் தனது ஸ்ரீபாஷ்யத்தின் தொடக்கத்தில்," உரைகள் எழுதும்போது மனம் போன போக்கில் விளக்கங்களைச் சொல்வது தவறானது" என்கிறார். விளக்கம் சொல்கிறேன், வியாக்யானம் சொல்கிறேன் என்கிற பெயரில், தம் தனிப்பட்ட ஆச்சாரங்களை, கொள்கைகளை ஏற்றி, வேத சாரத்தை "மாற்றி" விடக் கூடாது அடுத்தவர்களை "ஏமாற்றி" விடவும் கூடாது என்பதே கருத்து.
     
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பாத்திரம் அறிந்து பிச்சை இடு ;
    கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு" என்பது உலக நியதி.
    'ஏற்ற கலங்கள் '-- என்பது தகுதித் திறன் ( eligibility criteria )
    ஆசார்யன் சொல்லும் விஷயத்தை கிரஹித்து அதில் இருக்கும் விசேஷ அர்த்தத்தைக் கண்டு கொள்ளும் பிரதிபா விசேஷம் சிஷ்யனுக்கு மிக அவசியம்.
    'ஏற்ற கலங்கள் 'என்பதற்கு ஒரு உப கதை உண்டு.இது மஹாபாரதம் ஆதி பர்வத்தில் வரும் கதை.
    உபமன்யு என்பவன் தவும்யர் என்ற முனிவரிடம் சிஷ்யனாக வந்தான்.அவனிடம் 100 எருமை, 100 பசு, 100 ஆடுகளைக் கொடுத்து மேய்க்க அனுப்பினார்.
    " நான் கல்வி கற்க அல்லவா வந்தேன்?"என்று உபமன்யு கேட்கவில்லை.அவனுக்கு யாரும் சாப்பாடும் போடவில்லை.
    போஜனார்தம் கிம் கரிஷ்யசி " ( சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?குரு கேட்டார்.
    " பிச்சை எடுப்பேன்.அரிசி பருப்பு கிடைக்கும்.அதை சமைத்து உண்பேன்."
    'பிச்சை எடுத்ததை குருவிடம் அல்லவா கொடுக்க வேண்டும்?' இது ஆசான்.
    பிச்சை எடுப்பதை ஆச்சாரியனிடம் கொடுத்தான்.
    பிறகு மாட்டின் பாலைக் கறந்து சாப்பிட்டான்.அதற்கும் தடா.
    எ ருக்கு இல்லை தின்றான்.அதன் பால் வயிற்றுக்குள் போனதும் பார்வை போய் விட்டது.பாழும் கிணற்றில் விழுந்து விட்டான்.
    உபமன்யுவைத் தேடித் சென்ற குரு கண்ணீர் விட்டார்.அப்போதும் ஆசார்யன் மீது எந்த குறையும் சொல்லவில்லை உபமன்யு/
    .
    ஆச்சாரியார் அஸ்வினி தேவதைகளை தியானித்தார்.உபமன்யுவின் பார்வை வந்தது.

    பார்வை மட்டுமா வந்தது.இத்தனை மாதம் ஆச்சாரியனிடத்தில் கல்வி கற்றிருந்தால் என்ன ஞானம் வந்திருக்குமோ அதைவிடப் பல மடங்கு மஹா ஞானி ஆனான்.
    ஏற்ற கலத்துக்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

    ஆச்சார்ய வர்க்கமே வள்ளல் பெரும் பசுக்கள்.
    பசுவின் ஒரு காம் பிலிருந்து ப்ரம்ம சூத்திரம், இரண்டாவது காம்பிலிருந்து திருவாய் மொழி,மூன்றாவது காம்பில் கீதை,
    நான்காவது காம்பிலிருந்துஸ்ரீமத் ரஹஸ்ய த்ரயம் எனப்படும் மூல மந்திரம் கிடைக்கிறது.
    பெரியாய் -- பரமாத்மாவைக் காட்டிக் கொடுப்பதால் அவர்கள் பகவானைவிடப் பெரியவர்கள்.
    நம்மாழவாரின் பெரிய திருவந்தாதி நினைவில் நிற்கிறது.

    புவியும் இருவிசும்பும் நின்னகத்த,நீயென்
    செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய் ,-அவிவின்றி
    யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்
    ஊன்பருகு நேமியாய் !உள்ளு
    ( நீ பெரியவனா?நான் பெரியவனா? நீயே சொல். எல்லாவற்றையும் வயிற்றினுள் வைத்துக் காக்கக்கூடியவன் நீ.எல்லாவற்றையும் விழுங்கினவன் நீ.உன்னுடைய ப்ரபாவத்தைக் கேட்டுக் கேட்டு என் செவியின் வழி புகுந்து நீ என்னுள்ளாய் .உன்னை என்னுள் நான் அடக்கி வைத்திருக்கிறேன்.
    இப்போது நான் பெரியவனா? நீ பெரியவனா?)
    ஸ்வாமி வேதாந்த தேசிகன் பாதுகையின் சிறப்பிக்க கூறுகிறார்.
    பகவானைக் காட்டிலும் பெரியது பாதுகை.பகவானையே தங்கள் கூடியது பாதுகை.பாதுகையே நம்மாழவார்.ஆசாரியன் பகவானை விட மேலானவன் என்பதில் ஐயமுண்டோ/

    ஜெயஸாலா 42
     
    periamma likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இந்த உபமன்யு கதையை எனது பாட்டனார் சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் மீண்டும் என்னைக் குழந்தைப் பருவத்துக்கு இட்டுச் சென்று அறிவூட்டும் உங்களது அன்பிற்கு மிக்க நன்றி !
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    "பாலினைக் குறைவின்றிப் பொழிவது பசுவின் குற்றமில்லை. அதை நிரப்பிக் கொள்ளும் வகையில் பாத்திரங்கள் இல்லாமல் போவதே குறை. இறைவனும் அப்படிப்பட்ட வள்ளல் பெரும்பசு தான் ! தனது கருணை என்னும் அருட்பாலினைத் தொடர்ந்து பொழிகின்ற வள்ளல் அவன். ஆயினும் ஆண்டானது அன்பை, அருளை தாங்கிக்கொள்ளும், நிரப்பிக்கொள்ளும் அளவிற்கான சீவாத்மாக்கள் என்னும் பாத்திரங்கள், 'ஏற்றமுடைய கலங்கள்' மிகவும் குறைவாகவே இருக்கின்றன. எல்லோருக்கும் வழங்கும் பேசுவாய் இருக்கும் இறைவனைத் தமது புலன்களை, மனதை ஒருமுகப்படுத்தி அனுபவிக்கத் தவறுதல் நம் துரதிர்ஷ்டமே !

    இறைவனைப் பணிந்து அன்புடன் பக்தி செய்யும் அடியவர்களின் மனமே 'ஏற்ற கலங்கள்' அதாவது இறைவன் எனும் அமுதப்பால் நிறைவதற்கு ஏற்ற கலங்கள் ! நல்லமனத்தில் பக்தியிருந்தால், இறைவன் எந்த வேறுபாடும் கருதாமல் அவ்விடம் நிறைவான. இதில் உயர்வு தாழ்வில்லை. பக்தியிலேது சிறிதும்,பெரிதும் ? எல்லாமே பூரணம் தான். அதிகளவு தான்."

    ஏற்றமுடைய கலங்கள் பாசி படிந்து கிடக்கின்றன.நல்ல குரு கை கிடைத்தால் அவையும் தூய்மை அடையும்
    நல்லதொரு விளக்கம் நயமுடன் கண்டேன்
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நன்று சொன்னீர்கள்,பெரியம்மா ! திருக்குறள் பாணியில் விளையாட்டாகச் சொல்லும் சொலவடை ஒன்று நினைவுக்கு வருகின்றது.
    புளிபோட்டுத் துலக்கிய பாத்திரம்போல் மாணவரைப்
    பளிச்சென்றாக்குவது ஆசிரியர் பண்பு.
     

Share This Page